உனக்கென ஓர் வாழ்வு - அத்தியாயம் 2

Kathambari

Author
Author
#1
“முகில் நீயா” என அவள் கேட்கவில்லை… உண்மையில் கத்தினாள்…. அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம்….அந்த சத்தத்திற்கு தான் வயலில் வேலை பார்த்த அனைவரும் அவளை வித்தியாசமாகப் பார்த்தனர்….


மற்றவர்களை விட ஒரு நொடி முன்னதாக ஆச்சரியத்தில் இருந்து வெளியேறியவன்… “இது என்னோட ஊரு திவ்யா.. நீ எப்படி இருக்க… “


“நான்.. “ என திவ்யா ஏதோ ஆரம்பித்தாள்…


அதற்குள் பானு “திவ்யா அக்கா முகிலன் அண்ணாவ உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா…. “


“தெரியும் பானு நாங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூர்ல காலேஜ் படிக்கும் போது பழக்கம் ” என்றாள் திவ்யா .


“முகில் நீ பேச மாட்டியா.. “என்ற திவ்யாவின் விழிகள் அவனை விட்டு அகலவில்லை..


“ பேசலாம் திவ்யா…. ம்ம்ம் நாளைக்கு காலைல அந்த பக்கம் வாக்கிங் வருவேன்…..அப்போ பேசலாம்” என்றான் அங்கே தெரிந்த சாலையை கை நீட்டி காட்டியபடி….


அவனுக்கு இப்போது எல்லோர் முன்னாடியும் பேசுவதில் விருப்பம் இல்லை என்று அவளுக்குத் புரிந்தது. தனியாக பேச வேண்டும் என்று நினைக்கிறான் என்றும் புரிந்தது.


சரி என்று பேச்சை வேறு திசை நோக்கி மாற்றினாள்.


“இவங்க நிலத்துல என்ன பிரச்சனை பானு “ என பானுவையும் பேச்சுக்கு இழுத்தாள்….


“அது ஒன்னுமில்லை அக்கா இங்க கொஞ்சம் கொய்யா மரத்தில் புழு பூச்சி இருக்கு அதைப் பாக்கணும்”


“முகில் அத எப்படி சரி பண்ணனும் நாளைக்கு நானே சொல்றேன்” என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள்.


“சரிண்ணா…. திவ்யாக்கா இதைப் பத்தி சொல்லுவாங்க…. உங்களுக்கு ஓகே வா… ஏன்னா இவங்களுக்கு இதெல்லாம் ரொம்ப இன்ட்ரஸ்ட்”


“தெரியும் “ என்றான் ஒற்றை வரியில்.


“சரிண்ணா நாங்க கிளம்பறோம்.. திவ்யாக்கா வாங்க ஆபீஸ் போலாம் “


“முகில் நாளைக்கு காலைல… “


“திவ்யா இப்ப நீ போ… நாளைக்கு பார்க்கலாம்”


திவ்யா திரும்பி நடக்கத் தொடங்கினாள். அவளை யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.


இருவரும் வயல்வெளிகளின் குறுக்கே நடந்து ஆபீஸ் வந்தனர்.


அங்கு சிறிது நேரம் பானுவுடன் அந்த ஊரின் நிலங்கள் தோப்புகள் மற்றும் நீராதாரங்கள் பற்றியும் பேசினாள்.


“சரிக்கா நாளைக்கு குட்டம் போடறது பத்தி இங்க இருக்க நிலத்துக்காரங்க கிட்ட பேசனும்…. “


முகிலன் பற்றி பானுவிடம் கேட்க திவ்யாவிற்கு விருப்பம் இல்லை. நாளைக்கு அவனிடமே பேசித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.


திடிரென “நான் வீட்டுக்கு போகனும் பானு … “ என்ற கூறிய அவளின் அவசரத்தை பானு வியப்புடன் பார்த்தாள்…


“இல்ல பானு அப்பாவுக்கு டயர்டா இருக்கும்... அப்படியே அனுப்பிட்டேன் அதான்… போய் ஒரு டீயாச்சும் போட்டு கொடுக்கணும்…. நீ எப்ப வருவ”


“சரிக்கா நீங்க போங்க ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு நான் முடிச்சிட்டு வரேன்….. ஆனா சமைக்கிறதுக்கு ஆளு இருப்பாங்க… அதனால நீங்க என்ன வேணுமோ சொல்லுங்க… சமைச்சு தருவாங்க“


“சரி பானு நான் கிளம்புறேன்”, என்றாள் காலில் வெந்நீர் ஊற்றாத குறையாக…


திவ்யாவிற்கு உடனடியாக அவள் அப்பாவை பார்க்கவேண்டும்… முகிலனை பார்த்த விஷயத்தைக் கூற வேண்டும்… .

படபடவென்று ஆபிஸை விட்டு வெளியே கிளம்பினாள்…


“ஐயோ அக்கா வீட்டுக்கு எப்படி போவீங்க… வெயிட் பண்ணுங்க நான் வேணா யாரையாவது கூட அனுப்புறேன்… “


“அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ வழி மட்டும் சொல்லு”


“ அக்கா அங்கே ஒரு கோயில் தெரியுது இல்லையா அது பக்கத்துல இருக்கிற தெரு வழியே போன மூணாவது வீடு “ என ஆபிஸை விட்டு வெளியே வந்து வழி சொன்னாள்.


“ஓகே பானு வீட்ல பார்க்கலாம்”என கடகடவென வீட்டை நோக்கி நடந்தாள்.அங்கே அவள் அப்பா பயணக்களைப்பில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்.


அவசரத்துடன் அவள் அப்பாவின் தோளை பற்றி உலுக்கி எழுப்பினாள்.


மெதுவாக எழுந்து அமர்ந்து“ என்னம்மா, பானுவ பாத்தாச்சா…. “ என்றார் சோம்பல் முறித்தபடியே…


“அதெல்லாம் பார்த்தாச்சு இப்ப உங்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ் சொல்றேன்…”


“என்னம்மா விஷயம் சொல்லு..”


“அப்பா நான் முகிலென இங்க பார்த்தேன்”


“என்னம்மா சொல்ற… அவன் எப்படி இங்க”


“அத பத்தி எல்லாம் எதுவும் சரியா கேக்கல.. ஆனா இது அவனோட ஊர்ன்னு சொன்னான்”


“சரி மா சரி”


“சரி மட்டும்தானாப்பா”


“என்னமா செய்யணும்”


“அப்பா நீங்க பேசுங்க அவன்கிட்ட…”


“எத பத்தி மா”


“ எங்க கல்யாணம் பத்திதான்,.. “ என்றாள் முகத்தில் சொல்லொன்னா மகிழ்ச்சியுடன்….


தன் அப்பாவிடம் முகிலனை பற்றிக் கூறிக் கல்யாணத்தை பற்றி கூறியவள்… அமைதியாக இருந்த தந்தையைப் பார்த்து என்னவென்று கேட்டாள்..


“இந்த தடவையாவது கொஞ்சம் பொறுமையாயிருமா… இத அப்பா ஹேண்டில் பண்ணிக்கிறேன்”என்றார் அந்த வயதிற்கே உரிய அமைதியுடன்.


“சரிப்பா” என அந்த அறையின் ஓரத்தில் இருந்து மற்றொரு படுக்கையில் படுத்தாள்.


கண்கள் மூடியவுடன் எந்த ஒரு தடையுமின்றி அவளது விழிகளில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னான காட்சிகள் வந்தன.


கோயமுத்தூர் தமிழகத்தின் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். முகிலன் அங்கே இருந்த ஒரு கல்லூரியில் மரைன் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு பயின்று வந்தான்.


அவனைப் பொறுத்தவரை அவனுடைய இலட்சியம் கனவு ஆசை என எல்லாமே மரைன் இன்ஜினியரிங் தான். இன்னும் ஆறு மாதத்தில் கடலில் சர்வீஸ் முடித்தபின் எம். இ. ஓ தேர்வு எழுதி கப்பலில் சீப் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பது அவனுடைய எதிர்கால திட்டம்.


அதே கோவை மாநகரத்தில் இருந்த ஒரு விவசாய கல்லூரியில் தான் திவ்யா இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பொருத்தவரை விவசாயம் அவளோடு ஒன்றிப் போய்விட்ட ஒன்று. அவளின் லட்சியம் கனவு ஆசை எல்லாமே விவசாயம் தான். எதிர்காலத்தில் ஒவ்வொரு கிராமமாக சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என தீர்மானம் கொண்டிருந்தாள். மரம் செடி கொடிகள் மீது அதீத பிரியம் உண்டு.


இரு துருவங்களாக ஆசைகள் கொண்டிருக்கும் இவர்களிடமும் காதல் தன் வேலையை காட்டியது.
 

Latest Episodes

Sponsored Links

Top