உனக்கென ஓர் வாழ்வு - அத்தியாயம் 6

Kathambari

Author
Author
#1
சூரியனின் வரவிற்கு முன்பே அந்தச் கிராமத்து சாலையில் முகிலனுக்காக திவ்யா காத்திருந்தாள்.


முகிலனும் வந்தான் மெல்லிய ஒரு புன்னகையோடு.


“இப்பவாது சொல்லு .. நீ ஏன் என்ன தேடி வரல… “ எப்பவும் போல் நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.


அவன் சிரித்தான்.


“பதில் சொல்லு… சிரிக்காத”


“அடுத்த நாள் பேசலாம்னு இருந்தேன்” என ஆரம்பித்தான்.


“அதுக்குள்ள ஊருக்கு வர வேண்டியதா இருந்திச்சு.. எங்க அத்தம்மா பத்தி சொல்லியிருக்கேன்ல.. அவங்க பொண்ணு மல்லிகாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல… மூனு நாள் ஹாஸ்பிடல்ல இருந்தோம் திவ்யா… யாருக்கும் போன் பண்ணி பேச நேரமில்லை.. அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ண உடனே கோயம்புத்தூருக்கு வந்தேன்… உன்ன தேடி உங்க காலேஜ்க்கு வந்தேன்.. அந்த நர்சரி…அப்பறம் பார்க்னு… நாம போன இடத்திலெல்லாம் தேடினேன்… அடிக்கடி போன் பண்ணிப் பாப்பேன்… ஆனா உன்னோட வீட்டு அட்ரஸ் கூட எனக்கு தெரியாது இல்லையா. “


அவள் ஆரம்பித்தாள் …


“நீ என்ன பார்க்க வருவேனு நானும் நினைச்சேன். உனக்கு போன் பண்ணனும்னு தோனல.. கோபம் கொஞ்சம் இருந்துச்சு.. அடுத்த நாள் நீயே வருவனு நெனச்சேன்… ஆனா நீ வரல… அப்பாகிட்ட சொல்லி அழுதேன்… அப்பாதான் நிரைய ஆறுதலும், நம்பிக்கையும் சொல்லி என்னை தேத்தினாரு… இரண்டாவது நாளே போபால் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்ல ஸீட் கிடைச்சிருக்கினு மெயில் வந்திச்சு …அதனால அப்பா சொன்னாருனு அங்கே போயாச்சு…நம்பரும் மாத்திட்டேன்… . “


அவளே தொடர்ந்தாள்.


“அப்புறம் நானே முடிவு பண்ணிக்கிட்டேன். இந்த மாதிரி திங்கிங் இருக்குற பொண்ணு செட் ஆகாதுனு நினச்சிட்டனு”


இருவருக்கும் இடையே சிறிய அமைதி நிலவியதை அவனுடைய செல்லின் குரல் கலைத்தது.


“சொல்லுங்க மணி”


“புவி ஸ்கூலுக்கு கிளம்பிடுச்சு தம்பி… அதான் உங்களை கூட்டிட்டு போகச் சொல்லுது.. நீங்க எப்ப வர்றீங்க ”


“மறந்திட்டேன் மணி … நீங்க அவள கூட்டிட்டு நம்ம தேவிக்கா தோட்டம் இருக்ல… அந்த வழியா வாங்க… நா அங்கதான் நிக்கறேன் ”


“சரி தம்பி “


அவன் போனை கட் செய்து தன் சட்டைப் பையில் வைத்தான்.


“அப்புறம் சொல்லு” என்றாள்.


“சரின்னு சர்வீஸ்க்கு போனேன்.. ரெண்டு மாசத்துக்கு மேல அங்க இருக்க முடியல திவ்யா.. உன்ன பத்தி தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்.. அதனால பாதியிலேயே விட்டுட்டு வந்துட்டேன்.. திரும்பி வந்தும் தேடினேன்.. ஒரு யூசும் இல்லை.”என்றான் சற்றே அலுத்துப் போய் ...


அதற்குள் காரின் சத்தம் கேட்டது. கார் நின்றவுடன் அருகே சென்று கார் கதவை திறந்தான்.


அதிலிருந்து ஒரு குட்டிப் பெண் இறங்கினாள்.


“புவிக்குட்டிய இன்னைக்கு அப்பா கூட்டிட்டு போக முடியாதாம்.. நீ இன்னிக்கு மணி மாமா கூடப்போ.. நாளைக்கு அப்பா கூட்டிட்டு போறேன்”


“நாளைக்கு மறக்கமாட்டீங்களா” என்றாள் சிறியதாய் கோபம் கொண்ட முகத்துடன்.


கண்டிப்பா மாட்டேன் என்பது போல் தலையை இருபுறமும் அசைத்தான். அவனை ஒருமுறை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு “பை” என்று சொல்லி காரில் ஏறி அமர்ந்தாள்.


“மணி பத்திரமா கூட்டிட்டு போங்க “ என்றான் காரின் கதவை அடைத்தபடி.


“சரி தம்பி”


கார் மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றான்.


“ சோ.. கல்யாணம் ஆயிருச்சா. குழந்தைகூட இருக்குதா… சூப்பர்.. இதுக்குதான் எல்லார் முன்னாடியும் பேச வேண்டாம்னு சொன்னியா… அப்புறம் எதுக்கு இங்க அங்கனு தேடி அலைஞ்ச “என்று மூச்சுவாங்க கேள்வியை அடுக்கினாள்.


“சொல்லு முகில்.. பேசாம நிக்காத “ என்றாள்.


“சொன்னேன்ல என்னால சர்வீஸை கண்டினியு பண்ண முடியல.. பாதியில விட்டுட்டு வந்தேன்.. எனக்கு என்ன செய்யனே தெரியாம இருந்துச்சு.. சரி திரும்பி வந்து அத்தம்மாவ பார்த்து இந்த விஷயத்தை சொல்லலாம்னு தோணுச்சு… “


“ஆனா ஊருக்கு வந்தா நிலைமை ரொம்ப மோசமா இருந்துச்சு.. அப்ப மல்லிகாவுக்கு டெலிவரி டைம்… ஹாஸ்பிட்ல்ல அட்மிட் பண்ணி இருந்தாங்க… நான் என்ன செய்ய சொல்லு… அவங்க கூட இருந்து ஹெல்ப் பண்ணேன்…


என்னால என் மனசுல இருக்குறத எதையும் அந்த டைம்ல அத்தம்மா கிட்ட சொல்ல முடியல…. ஏன்னா டெலிவரி ரொம்ப கஷ்டமாயிட்டு… கடைசில புவி பொறந்தா… புவிய நான் தான் ஃபர்ஸ்ட் வாங்கினேன்…. ஏதோ ஒரு ஆறுதலா இருந்திச்சு…


அன்னைக்கு நான் இருந்த மனநிலைக்கு அது ரொம்ப தேவையாவும் இருந்துச்சு…


மல்லிகாவுக்கு திரும்பவும் உடம்பு முடியல…பத்து நாளா ஹாஸ்பிடல் தான் வச்சிருந்தாங்க… அவளாள புவியெல்லாம் கவனிக்க முடியல… அத்தம்மாக்கு, தன் பொண்ணு இப்படி இருக்கேன்னு கவல… எவ்வளவோ டிரை பண்ணியும் மல்லிகாவ காப்பாத்த முடியல… அப்புறம் நான் தான் புவிய முழுசா பார்க்க வேண்டிய நிலைமை…புவிக்கு மூனு வயசா இருக்கும் போது அவ அப்பாவும் இறந்திட்டாரு.. ஆனா அதெல்லாம் புவிக்கு தெரியாது.. இப்ப வர தெரியாம பார்த்திட்டு இருக்கிறேன் திவ்யா”


திவ்யாவிற்கு அழுகையே வந்துவிட்டது. நாம எவ்வளவு தப்பா நினைச்சு இருக்கிறோம் என்று. அப்பா சொல்ற மாதிரி நாம கொஞ்சம் பொறுமையா தான் பேசணும் அப்படின்னு மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டாள்.


அவள் முக மாற்றத்தை கண்டு “இதுல வருத்தப்பட எல்லாம் ஒன்னும் இல்ல திவ்யா…அப்படியே வயலப் பார்த்துக்கிட்டு இங்கயே இருந்திட்டேன்… கொஞ்சம் கொஞ்சமா இதுல லாபமும் வந்திச்சு… எல்லா அந்த ரெண்டு வாரத்ல நீ சொன்னதுதான் “


அவள் ஏதோ புரிந்த மாதிரியும்… புரியாத மாதிரி தலையை மட்டும் ஆட்டினாள் நன்றாக சிரித்தபடியே.


“சரி முகில் எனக்கு பானு கூட கொஞ்சம் வேல இருக்கு.. நான் கிளம்புறேன்… நாளைக்கு பார்க்கலாம்.. “


“திவ்யா கொய்யா மரத்துக்கு எதுவுமே சொல்லாமப் போற”


“அதெல்லாம் நானே பாத்துக்கிறேன்” என்று பூடகமாக சொல்லிச் சென்றாள்.
 

Latest Episodes

Sponsored Links

Top