• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode உன்னில் எனை வரைவாய் - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,174
Age
26
Location
Sri Lanka
IMG_20231204_165106.jpg

உன்னில் எனை வரைவாய் - 24

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி ஒரு வழியாக தசரதன் மற்றும் தூரிகாவுக்கு திருமணம் நடந்து அன்றோடு மூன்று மாதங்கள் நிறைவு பெற்றிருந்தது.

இந்த மூன்று மாத காலத்தில் தசரதனின் வீட்டில் இருப்போர் யமுனாவின் தூரிகாவுடனான விலகலை பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தாலும், சகாதேவன் மற்றும் நாகராஜன் அதை எப்படியாவது தீர்த்து வைத்து விட வேண்டும் என்று பலவழிகளில் முயற்சி செய்து கொண்டு தான் இருந்தனர்.

ஆனால் அந்த முயற்சிகளுக்கு எல்லாம் பலன் பூச்சியமாகத்தான் இருந்தது.

அதே சமயம் தசரதன் மற்றும் தூரிகாவுக்கு இடையிலான நெருக்கமோ இன்னமும் பலமாகிப் போய் இருந்தது, நாளாக நாளாக அவர்களது காதல் அவர்களது உறவை வண்ணமயமானதாக மாற்றியிருந்தது என்று கூட சொல்லலாம், அதே சமயம் அந்த வண்ணமயமான காதலை ஒருபோதும் தவற விட்டு விடக்கூடாது என்பதில் அவர்கள் இருவருமே மிகவும் உறுதியாக இருந்தனர்.

அதேபோல அவர்கள் இருவரையும் பழி வாங்க காத்திருந்த அந்த எம்.எல்.ஏ வின் கோபமும் அதிகரித்துத்தான் இருந்தது.

தசரதன் ஏற்படுத்திக் கொடுத்த தண்டனை மூலமாக ஒவ்வொரு நாளும் அவமானங்களை சந்திக்கும் போது எல்லாம் அந்த எம்.எல்.ஏ தனது பழிவாங்கும் படலத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற ஒரு பொருத்தமான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

இவ்வாறு ஒவ்வொருவரது மன எண்ணங்களும் ஒவ்வொரு விதமாக தங்கள் இலட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்க, யாருடைய எண்ணம் அதன் இலக்கை அடைய போகிறது என்பதை அந்த இறைவன் ஒருவனே அறிந்திருந்தான்.

***********
அன்று கங்கா தனது இறுதிப் பரீட்சைகளை எல்லாம் முடித்து விட்ட களிப்பில் சந்தோஷமாக தன் நேரத்தை செலவழித்து விட்டு அதே குதூகலமான மனநிலையோடு தங்கள் வீட்டிற்குள் நுழைந்த தருணத்தில் சரியாக அவர்கள் வீட்டின் முன்னால் ஒரு கார் வந்து நின்றது.

இந்த நேரத்தில் தங்கள் வீட்டுக்கு யார் வருவது என்கிற குழப்பத்துடன் எல்லோரும் அந்தக் காரையே பார்த்துக் கொண்டு நிற்க, அதிலிருந்து இறங்கி நின்ற நபர்களைப் பார்த்து நாகராஜனின் முகம் சட்டென்று மாறிப் போனது.

"வெங்கடாச்சலம்! இவன் எதற்காக அவனோட குடும்பத்தோட இப்போ இங்கே வந்திருக்கான்?" நாகராஜன் என்னவோ தனக்கு மாத்திரம் கேட்கும் வகையில் தான் அந்த வசனங்களை சொல்லிக் கொண்டு வாயிலை நோக்கி நடந்து சென்றிருந்தார், ஆனால் வீட்டுக்குள்ளே நடந்து வந்தது கொண்டிருந்த கங்காவுக்கு அவை மிகவும் தெள்ளத்தெளிவாகவே கேட்டிருந்தது.

வெங்கடாச்சலம் என்ற பெயரைக் கேட்டதுமே கங்கா சிறு பதட்டத்துடன் அங்கே நின்று கொண்டிருந்த தூரிகாவின் அருகில் சென்று அவளது கையை இறுகப் பற்றிக் கொள்ள, அவளது கைப்பிடியின் இறுக்கத்தை வைத்தே அவளுக்கு இந்த விடயத்தில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்து கொண்ட தூரிகா ஆறுதலாக அவளது கையை அழுத்திக் கொடுக்க, அப்போதைக்கு கங்காவுக்கும் அந்த ஆறுதல் மிகவும் தேவையான ஒன்றாகவே இருந்தது.

கங்காவுடன் தூரிகா நெருக்கமாக பேசிக்கொண்டு நிற்பதை பார்த்து யமுனாவிற்கு சிறு கோபமாக இருந்தாலும் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் முன்னிலையில் எதுவும் பேசி விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டவர் தன் கோபத்தை ஓரங்கட்டி வைத்து விட்டு நாகராஜனுடன் இணைந்து வந்திருந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றிருந்தார்.

ஆரம்பத்தில் பொதுவான விடயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த வெங்கடாச்சலம் சிறிது நேரம் கழித்து, "நாகராஜா! நீ தப்பாக நினைக்கலேன்னா ஒரு விஷயம் பேசலாமா?" என்று வினவ,

அவரது கேள்வி எதைப்பற்றி இருக்கக்கூடும் என்பதைப் புரிந்து கொண்ட நாகராஜன் தூரிகாவின் புறம் திரும்பி கங்காவை உள்ளே அழைத்துக்கொண்டு செல்லும் படி ஜாடை காட்ட, அவளும் அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவளை அங்கேயிருந்து அழைத்துக் கொண்டு சென்றிருந்தாள். "நீ தப்பாக எடுக்க வேண்டாம் வெங்கடாச்சலம், தேவையில்லாமல் சின்னப் பசங்க மனசில் சஞ்சலத்தை உருவாக்க கூடாது இல்லையா? அதுதான் அவங்களை உள்ளே அனுப்பி வைத்தேன், நீ சொல்லு வெங்கடாச்சலம் என்ன விஷயம்?"

"அட, இதில் என்னடா இருக்கு? நீ எது பண்ணாலும் ஒண்ணுக்கு இரண்டு தடவை யோசிச்சு தான் பண்ணுவ, அதெல்லாம் நான் தப்பாக நினைக்க மாட்டேன், நான் சொல்ல வந்தது என்னன்னா எல்லாம் நம்ம ஏற்கனவே பேசிய விஷயம் தான் நாகராஜா,

கங்காவோட பரீட்சை முடியும் வரைக்கும் நீ டைம் கேட்டிருந்த, அதுதான் இப்போ எல்லாம் முடிஞ்சுடுச்சே, கங்காகிட்ட அவளோட முடிவு என்னன்னு கேட்டியா?" வெங்கடாச்சலத்தின் கேள்வியில் நாகராஜன் தயக்கத்துடன் யமுனாவைத் திரும்பிப் பார்க்க,

அவரோ இயல்பாக புன்னகைத்தபடியே, "அது கங்கா இப்போதான் காலேஜ் போயிட்டு அவளோட எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்தா, நாங்களும் அவகிட்ட இதைப்பற்றி இன்னைக்கு பேசலாம்ன்னு தான் நினைச்சோம், அதற்குள்ள நீங்களும் அதே கேள்வியைக் கேட்டுட்டீங்க.
எனக்கு என்ன தோணுதுன்னா நாங்க இன்னைக்கு வீட்டில் இருக்கும் எல்லோர்கிட்டவும் கலந்து பேசிட்டு நாளைக்கு ஒரு நல்ல முடிவை உங்க கிட்ட சொல்லுறோமே?" என்று கூறியிருக்க, வந்திருந்தவர்களும் அவரது பதிலுக்கு சம்மதம் தெரிவித்தபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

தன் நண்பனது குடும்பத்தை வழியனுப்பி வைத்து விட்டு பலத்த சிந்தனையுடன் நாகராஜன் வீட்டிற்குள் நுழைந்த தருணம், சரியாக தசரதனும், வெங்கட்டும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி செல்லும் அந்த வாகனத்தைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டே அங்கே வந்து சேர்ந்திருந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்ததுமே நாகராஜன் சிறிது நிம்மதியாக பெருமூச்சு விட்டபடியே, "தசரதா, வாடா கண்ணா, நல்ல நேரத்தில்தான் வந்திருக்க" என்று கூறவும்,

தன் தாத்தாவின் முகத்தில் தெரிந்த சோர்வைப் பார்த்து சிறு கவலையுடன் அவர் அருகில் வந்து நின்று கொண்டவன், "என்னாச்சு தாத்தா, உங்க முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு? பிரச்சினை ஒண்ணும் இல்லை தானே?" என்று வினவ, அவரோ அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே மறுப்பாக தலையசைத்தார்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி கங்காவுக்கு ஒரு வரன் வந்திருக்குன்னு சொன்னேன் இல்லையே? என்னோட நண்பன் வெங்கடாச்சலத்தோட பேரனுக்கு கங்காவைப் பொண்ணு கேட்டான்னு சொன்னானே, அவன்தான் அவனோட குடும்பத்தோட வந்துட்டு போறான், இந்த பக்கம் ஏதோ ஒரு பங்ஷனுக்கு வந்தானாம், அதுதான் அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்து பாத்துட்டு போறேன்.
கங்காவோட எக்ஸாம் முடியும் வரைக்கும் நான் அவன்கிட்ட நேரம் கேட்டு இருந்தேன் இல்லையா? அதுதான் கங்கா என்ன பதில் சொன்னான்னு கேட்டுட்டு போறான்"

"ஓஹ்! அதுக்கு நீங்க என்ன தாத்தா சொன்னீங்க?"

"நான் என்ன சொல்ல முடியும்? கங்கா தான் இன்னும் எதுவுமே சொல்லலையே"

"அப்போ இப்போ என்ன சொல்லி அவங்களை அனுப்பி வைத்தீங்க?"

"எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல தசரதா, நல்லவேளை யமுனா தான் இன்னைக்கு வீட்ல எல்லார்கிட்டயும் பேசிட்டு நாளைக்கு ஒரு பதில் சொல்லுறோம்ன்னு சொல்லி நிலைமையை சமாளிச்சுட்டா" என்றவாறே நாகராஜன் யமுனாவின் புறம் கை காண்பிக்க,

தசரதனோ அவரைப் பார்த்து முயன்று புன்னகைத்து விட்டு மறுபடியும் நாகராஜனின் புறம் திரும்பி, "நீங்க எதற்கும் கவலைப்பட வேண்டாம் தாத்தா, எல்லாம் நல்லபடியாக நடக்கும், ஆனா எனக்கு என்னவோ இந்த விஷயத்தில் பையனோட வீட்டு ஆளுங்க ரொம்ப பிரஸர் கொடுக்குறாங்களோன்னு தோணுது" என்று கூற,

அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர், "பையன் வீட்டு ஆளுங்க அப்படித்தான் இது இல்லைன்னா இன்னொரு சம்பந்தம்ன்னு பார்க்கணும் இல்லையா? அதுமட்டுமில்லாம நம்மளும் உண்டா இல்லையான்னு சொல்லிட்டா அவனும் அவனோட வேலையைப் பாத்துட்டு போயிடுவானே?" என்று விட்டு அங்கிருந்து சென்று விட, மறுபுறம் தசரதனும் அவரது கூற்றுக்கு கட்டுப்பட்டாற் போல ஆமோதிப்பாக தலையசைத்தபடியே தன் ஃபோனை எடுத்துப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றிருந்தான்.

ஆனால் எத்தனை நேரம் நடந்து கொண்டிருந்த அந்த உரையாடலில் ஒருவரின் முகம் மாத்திரம் பன்மடங்கு அதிர்ச்சியை சுமந்து கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை, அது வேறு யாரும் இல்லை வெங்கட் தான்.

கங்காவிற்கு திருமணம் என்று செய்தியை கேட்ட கணத்திலிருந்து ஏனோ தெரியவில்லை, அவனது மனதினால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஏதோ ஒன்று அவனது மனதை அழுத்துவது போலவே இருக்க, அந்த இடத்தில் நிற்பது ஏனோ அவனுக்கு கடினமாக இருப்பது போலவே தோன்றியது.

தன் நண்பனின் தங்கைக்கு திருமணம் என்றால் தான் எதற்காக இப்படி எல்லாம் விசித்திரமாக யோசிக்க வேண்டும் என்று யோசித்தபடியே வெங்கட் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடமாடிக்கொண்டிருக்க, மறுபுறம் கங்காவும் அதுபோலவே தன் நகத்தை கடித்தபடியே தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

அந்த அறைக்குள் வந்து அமர்ந்தததில் இருந்தே கங்காவின் அந்த நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த தூரிகா ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் அவளது வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டவள், "நீ இப்படியே நடந்துட்டு இருக்குறதைப் பார்த்து பார்த்து எனக்கு கண்ணெல்லாம் வலிக்குது கங்கா, முதல்ல இப்படி உட்காரு, உனக்கு என்னதான் பிரச்சினை?" என்று வினவ,

அவளோ சிறு பதட்டத்துடன், "ஏன் அண்ணி உங்களுக்கு தெரியாதா? அதுதான் வெளியே ஒரு கும்பல் வந்து உக்காந்துட்டு இருக்கே, அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?" என்றவாறே சோர்வாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

"அட இதில் என்னடா இருக்கு, ஒரு வயசு பொண்ணு இருந்த நாலு பேரு கல்யாணம் பண்ணிக்க கேட்டு வருவாங்க தான், உனக்கு மனசுக்கு புடிச்சிருந்தா புடிச்சிருக்குன்னு சொல்லு, இல்லைன்னா பிடிக்கலேன்னு சொல்லு, அதை விட்டுட்டு எதற்காக இவ்வளவு யோசிக்கிற?"

"ஆக்சுவலா அண்ணி, எனக்கு உண்மையிலேயே என்ன பண்றதுன்னு தெரியல அண்ணி, அதுதான் டென்ஷனா இருக்கு,
ஒரு சில சமயம் இது எல்லாம் சரிதான்னு தோணுது, சில சமயம் இது சரியில்லைன்னு தோணுது, எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல" என்றவாறே கங்கா தூரிகாவைப் பார்த்து அமைதியாக அமர்ந்திருக்க,

ஒரு சில நிமிடங்கள் அவளது கண்களையே உற்றுப் பார்த்தவள், "நீ யாரையாவது விரும்புறியா கங்கா?" என்று கேட்க, அவளோ தூரிகாவின் அந்தக் கேள்வியில் விழிகள் இரண்டும் விரிய அதிர்ச்சியாக அமர்ந்திருந்தாள்.

"அண்ணி, ஏன் நீங்க இப்படி கேட்குறீங்க?"

"இந்த ஏன், எதற்காக எல்லாம் அப்புறம் சொல்றேன், முதல்ல நான் கேட்டதற்கு பதில் சொல்லு?"

'டொக், டொக், டொக்' அவர்கள் இருவரும் வெகு மும்முரமாக பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் பேச்சை இடைநிறுத்துவது போல அந்த அறையின் கதவு தட்டப்பட, கங்காவை அங்கேயே இருக்கும் படி சொல்லி விட்டு எழுந்த சென்ற தூரிகா கதவைத் திறக்க, அங்கே தசரதன் நின்று கொண்டிருந்தான்.

"ஹேய் தசரதன்! நீங்க எப்போ வந்தீங்க?" தசரதனை அந்த நேரத்தில் பார்த்த ஆச்சரியத்தில் தூரிகா அவனைப் பார்த்து வினவ,

சிறு புன்னகையுடன் அவளது கன்னத்தில் தட்டிக் கொடுத்தவன், "ஒரு முக்கியமான ஃபைலை வைச்சுட்டு போயிட்டேன், அதை எடுத்துட்டு போகலாம்ன்னு தான் நானும் வெங்கட்டும் வந்தோம், கொஞ்ச நேரம் வரைக்கும் அவன் இங்கே தான் நின்னுட்டு இருந்தான், இப்போ திரும்பி வந்து பார்த்தால் ஆளையே காணோம், அதுதான் யாராவது அவனைப் பார்த்தீங்களான்னு கேட்கலாம்ன்னு வந்தேன்" என்று கூற,

அவளோ மறுப்பாக தலையசைத்தபடியே, "இல்லைங்க, நாங்க பார்க்கல" என்று கூறியிருந்தாள்.

"அதற்கிடையில் இந்த வெட்டி ஆபிசர் எங்கே போனான்? சரி, நான் வெளியே போய் பார்க்கிறேன், ஈவ்னிங் பார்க்கலாம்" என்று விட்டு தசரதன் அங்கிருந்து சென்று விட, தன் கணவனைப் பார்த்த அந்த இரண்டு நொடிகளை நினைத்து சந்தோஷம் கொண்டபடியே கங்காவை நோக்கி வந்த தூரிகா சற்று நேரத்திற்கு முன்னர் அவளது முகத்தில் தெரிந்த பதட்டம் முற்றிலும் மறைந்து ஒருவிதமான வெட்கம் கலந்த புன்னகை குடியிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டுத்தான் போனாள்.

'திடீர்னு இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?' என்றவாறே தூரிகா தன் கையை கங்காவின் முகத்தின் முன்னால் அசைக்க, அவளது கை அசைவில் கனவில் இருந்து விழிப்பதைப் போல அவளைப் பார்த்துக் கொண்டவள் தன் வெட்கத்தை மறைக்க பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டு நின்றாள்.

கங்காவின் முகபாவனைகளை வைத்தே அவளது மனதிற்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட தூரிகா அவளை அவர்கள் வீட்டின் தோட்டப் புறமாக அழைத்துச் சென்று ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டு, அவளது கரங்களை தனது கரங்களுக்குள் வைத்து ஆதரவாக அழுத்திக் கொடுத்தாள்.

"இப்போ இந்த இடத்தில் உன்னையும், என்னையும் தவிர வேறு யாரும் இல்லை, உன்னோட மனதில் என்ன விஷயம் இருக்கோ அதை தாராளமாக இப்போ நீ சொல்லலாம்.
உன்னோட மனதில் என்ன விஷயம் இருந்தாலும் தைரியமாக சொல்லு, உனக்கு ஆறுதலாகவும், பக்கபலமாகவும் எப்போதும் இந்த தூரிகா இருப்பா" என்று கூறிய தூரிகாவின் தோள்களில் சாய்ந்து கொண்ட கங்கா, "ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் அண்ணி, ஆரம்பத்தில் இருந்து நீங்க எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்குறீங்க, அதற்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்,
அப்புறம் ரொம்ப ரொம்ப சாரி, நீங்க எனக்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு பேசும் போது நான் எதுவும் பேசாமல் இருக்கேனே, அண்ணி நீங்க என்கிட்ட இரண்டு தடவை நீங்க ஒரு விஷயம் பற்றி கேட்டீங்க, அதை நீங்க எதனால கேட்டீங்கன்னு எனக்கு தெரியல, ஆனா இதுக்கு மேலேயும் அந்த விஷயத்தை சொல்லாம இருக்கிறது சரின்னு எனக்கு தோணல. ஆமா அண்ணி நான் ஒருத்தரை விரும்புறேன்" என்று கூற, தூரிகா அவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்துக்கொண்டாள்.

"அட கிறுக்கு பொண்ணு! இதை நீ அப்போவே சொல்லி இருக்கலாமே, தேவையில்லாமல் எல்லோரும் இந்த விஷயத்தை இவ்வளவு தூரம் பேசியிருக்க தேவையில்லை தானே?"

"அண்ணி, அண்ணி! ஒரு நிமிஷம், பொறுமை" என்று அவளை ஆசுவாசப்படுத்தியவள்,

"நான் ஒரு பையனைக் காதலிக்கிறேன்னு தான் சொன்னேன், ஆனா அந்தப் பையன் என்னை காதலிக்கிறாரா இல்லையான்னு எனக்கு தெரியல" என்று கூற, தூரிகாவோ இது என்ன புது குழப்பம் என்பது போல அவளை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

"ஐயோ! நீ என்ன சொல்ல வர்றேன்னு சத்தியமாக எனக்குப் புரியலை"

"இதனால் தான் இதை யார்கிட்டேயும் சொல்லல அண்ணி, ஏன்னா நான் என்னோட காதலை இன்னும் அந்தப் பையன் கிட்டயே சொல்லல. ஆனா இதற்கு மேலேயும் அதை சொல்லாமல் இருக்கிறது சரின்னு தோணல,
எப்போ வேறு ஒரு பையன் என்னோட வாழ்க்கையில் வரக்கூடாதுன்னு எனக்கு தோணுச்சோ அப்போவே அந்தப் பையனை என்னால மறக்க முடியும்ன்னு தோணல, எனக்கு என்னவோ என் மனசில் இருக்கிற அந்த பையனே என்னோட வாழ்க்கைத்துணையாக அமையனும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கு.
அந்த பையன் எனக்கு கிடைச்சா என்னோட வாழ்க்கையில் எல்லாமே எனக்கு கிடைச்ச மாதிரி இருக்கும்ன்னு தோணுது, அதோடு அவரை இந்த வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் ரொம்ப நல்லாவே தெரியும், அவரை எல்லோருக்கும் ரொம்பவும் பிடிக்கும், அவரோட குறும்புத்தனமும், வெகுளித்தனமும் எல்லோருக்குமே பிடிக்கும் தெரியுமா? எனக்கு கூட அதுதான் அவர்கிட்ட பிடிச்ச விஷயமே!" என காதல் ததும்ப பேசிக் கொண்டிருந்த கங்காவின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்த தூரிகா,

"உன்னோட இந்த பேச்சிலேயே அந்தப் பையனை உனக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு தெரியுது, அதே மட்டுமில்லாமல் நீ ரொம்ப நல்ல பொண்ணு, நிச்சயமாக அந்தப் பையனும் நல்ல பையனாகத்தான் இருப்பான்னு என் மனசு சொல்லுது, அதோடு அந்தப் பையனும் உன்னை நல்லபடியா பார்த்துப்பான், நீயும் அந்தப் பையனை நல்லபடியாக பார்த்துப்ப, ஆனா இது எல்லாம் நடக்கணும்னா முதல்ல அந்தப் பையன் யாருன்னு நீ சொல்லணும்" என்று கூற,

அவளோ சிறு தயக்கத்துடன் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்துவிட்டு, "எல்லாம் நம்ம தாத்தாவோட பெஸ்டி வெங்கட் தான்" என்று கூறி இருந்தாள்.

ஆரம்பத்தில், 'தாத்தாவோட பெஸ்டி வெங்கட்டா? அது யார்?' என்பது போல அமர்ந்திருந்த தூரிகா சிறிது நேரம் கழித்தே அவள் யாரைச் சொல்லுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டு,

"ஏது வெங்கட் அண்ணாவா?" என்று அதிர்ச்சியில் தன்னை மறந்து சத்தம் போட்டு கத்தியிருந்தாள்.......

 
Advertisements

Latest Episodes

Advertisements

Top