• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிர் தேடல் நீயடி 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
16,048
Reaction score
35,743
Location
Vellore
IMG-20200213-WA0032 (1).jpg

உயிர் தேடல் நீயடி

அத்தியாயம் 22
அந்த உயர்ரக கார், ஓட்டுநரின் கைவண்ணத்தில் சாலையில் வேகமெடுத்து பறந்து சென்றது.

பின்னிருக்கையில் விழிகளில் ஈரம் தாங்கியவளாய் காவ்யதர்ஷினி அமர்ந்திருந்திருக்க, அவளருகே தன் கைப்பேசியில் மின்னல் வேக உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான் விபீஸ்வர்.

“நீங்க சீக்கிரம் டிரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணுங்க டாக்டர், ஃபியூ மினிட்ஸ்ல நாங்க அங்க இருப்போம். சிவாக்கு எதுவும் ஆக கூடாது டாக்டர்” விபீஸ்வரின் அழுத்தமான உத்தரவில் காவ்யா அவன் பக்கம் திரும்பினாள். சற்றுமுன் கைப்பேசியில் ஒலித்த சேதி மீண்டும் அவளை மிரள வைத்தது.

‘காவ்யாக்கா... நான் சிவா ஃப்ரண்ட் பேசுறேன். சிவாக்கு பைக் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு! ஆம்புலன்ஸ் சொல்லி இருக்கோம். இன்னும் வரல, ரொம்ப இரத்தம் வெளியே போகுது. எங்களுக்கு என்ன செய்யறது ஒன்னும் புரியல... சீக்கிரம் வாங்க க்கா” அவன் பதற்றமான குரலில் இவளுக்கும் பதறியது. ஏதோ சொல்ல முயன்றவள் கண்கள் இருண்டு நினைவிழந்து கீழே சரிந்தாள்.

வாயில் காவலர்கள் அவள் விழுந்ததைப் பார்த்து ஓடிவர, அவர்களை கவனித்த விபீஸ்வரும் காரிலிருந்து இறங்கி விரைந்து ஓடிவந்து அவளை தூக்கி கன்னம் தட்டி விழிக்க வைக்க முயன்றான். அவளருகில் இருந்த கைப்பேசியை எடுத்து தன் காதில் ஒற்றியவன் மறுமுனை சொன்ன சேதி கேட்டு, “நீ முதல்ல ஸ்பாட் எங்கன்னு சொல்லு” என்றான் வேகமாய்.

இடத்தை அவன் சொன்னதும், காவ்யாவை ஒரு கையால் பிடித்தபடி பிரபல மருத்துவமனைக்கு அவசர தகவல் தந்துவிட்டு, காவ்யாவை தூக்கி காரில் கிடத்தினான்.

அவள், “சிவா” என்று அலறி விழிக்க, “சிவாக்கு எதுவும் ஆகாது நீ பயப்படாம இரு” என்ற அவனின் நம்பிக்கை மொழிகளுக்கும் இவள்‌ மனதின் பதைபதைப்பு அடங்குவதாக இல்லை.

மாநிலத்தின் முதல் தர மருத்துவமனை முன்பு அவன் கார் நிற்க, இருவரும் வேகமும் பதற்றமுமாக உள்ளே சென்றனர். சிவாவை அந்த நிலையில் பார்த்து காவ்யா முழுவதுமாக உடைந்து போனாள்.

அறுவை சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகள் உடனுக்குடன் நடைப்பெற்றன. சிவாவின் சிகிச்சைக்கான முழு பொறுப்பையும் விபீஸ்வர் நேரடியாகவே கவனித்துக் கொண்டான். தன் தம்பி நல்ல முறையில் மீண்டு வந்தால் போதுமென்ற வேண்டுதல் தவிர, மற்றவை எதுவும் காவ்யா நினைவில் பதியவில்லை.

அவள் முன்பு சிவாவின் தோழர்கள் மூவரும் படபடப்போடு நின்றிருந்தனர். அவர்களிடம் வந்த விபீஸ்வர், அதிலொருவன் கன்னத்தில் ஓங்கி அறை விட்டு மறுபடி கையோங்க, ஏதும் புரியாமல் அவன் கையை பிடித்து தடுத்தவள், “சர், அவங்க சிவாவோட ஃபிரண்ட்ஸ், அவங்கள ஏன் அடிக்கிறீங்க?” பதறி கேட்டாள்.

தன் கையை அவளின் பிடியிலிருந்து உதறிக் கொண்டவன், “பொல்லாத ஃப்ரண்ஸ். சிவாக்கு ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு இவனுங்க தான் காரணம்” எனக் கோபமாக அவர்களை கைக்காட்டினான்.

காவ்யா விளங்காமல் அவர்களை பார்க்க, அனைவரும் தலையைத் தொங்க போட்டு கொண்டனர்.

“எல்லாரும் சேர்ந்து பைக் ரேஸ் வச்சிருக்கானுங்க, அதுவும் மெயின் ஏரியால. அறிவில்லடா உங்களுக்கெல்லாம்” விபி கோபமாக பேச, காவ்யாவின் மனமும் நொந்து போனது.

அவர்கள் மூவரும், “சாரி சார், ஏதோ ஜாலிக்காக டிரை பண்ணோம், அது தப்பா போயிடுச்சு” தயங்கியபடி மன்னிப்பு கேட்க, அவன் வெறுப்பாக தலையசைத்தான்.

“ஏன்டா இப்படி எல்லாம்? ஜாலிக்காக உங்க உயிரோடவா விளையாடுவீங்க!” காவ்யா வேதனையாக கேட்டாள்.

“சாரி க்கா, இனிமே இப்படி எல்லாம் பண்ணமாட்டோம்” அவர்களும் கண்ணெதிரே நண்பனுக்கு நேர்ந்த விபத்தை பார்த்து பயந்து இருந்தனர். எனவே அவளிடம் உறுதி கூறிக் கொண்டு கிளம்பி விட்டனர்.

காவ்யாவின் பார்வை அறுவை சிகிச்சை அறையின் மூடிய கதவில் பதிய, தன் தைரியத்தை மொத்தமாக இழந்து தேம்பலோடு கண்ணீர் வடித்தாள் அவள்.

“ஹேய் ரிலாக்ஸ் காவ்யா, சிவாக்கு ஒன்னும் ஆகாது” விபீஸ்வர் தைரியம் சொல்ல, முந்தி வந்த அழுகையை கட்டுப்படுத்தி, ஆமோதிப்பாக தலையாட்டினாள்.

அடுத்த ஒரு மணி நேர இடைவெளியில் சிவாவின் சிகிச்சை முடிந்திருந்தது. வயிறு, வலது தோள்பட்டையில் பலமான காயம், வலது கையில் எலும்பு முறிவு, முகத்திலும் உடலின் மற்ற பாகங்களிலும் ஆழமற்ற காயங்கள் ஏற்பட்டிருந்தது. தலைக்கவசம் அணிந்திருந்தமையால் அவன் தலை தப்பி இருந்தது.

மருத்துவர் அவன் உடல்நிலை பற்றி விளக்கிச் சொல்ல, சிவாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதே காவ்யாவிற்கு போதுமானதாக இருந்தது. தகவல் அறிந்து பார்கவியும் மஞ்சரியும் வந்ததும், விபீஸ்வர் அவர்களுக்கு தைரியம் கூறி விடைபெற்று கிளம்பினான்.

தூர சென்றவனின் முதுகையே வெறித்து நின்ற காவ்யாவிற்குள்‌ இனங்காண இயலாத வெறுமை வந்து போனது. எத்தனை இக்கட்டான சூழ்நிலையில் அவன் தனக்கு உதவி இருக்கிறான் என்று எண்ணும்போதே அவளுக்குள் நன்றியுணர்வு பெருகியது.

அவள் உறுதி இழந்த நேரத்தில் அவன் மட்டும் துணையாக இல்லையென்றால், தான் மட்டுமே அலைந்து திரிந்து திண்டாடி அல்லாடி இருக்க கூடும். அத்தோடு விபீஸ்வரால் தான் சிவாவிற்கு தாமதமின்றி உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதையும் அவள் உணர்ந்தே இருந்தாள்.

இரவில் நோயாளி உடன் ஒருவர் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட, அழுது புலம்பிய தாயையும் தங்கையையும் ஆறுதல்படுத்தி அனுப்பி வைத்தவள், சிவா கண்விழிக்கும் தருணத்திற்காக காத்துக் கிடந்தாள். விடியற்காலை பொழுதில் அவனுக்கு நினைவு வந்து, சிறிது நேரத்திலேயே தப்பியது.

‘ஹேஹே... எனக்கு வேலை கிடைச்சிடுச்சு பார்த்துக்க... பார்த்துக்க’ கையில் வேலைக்கான உத்தரவு கடிதத்தத்துடன் ஆட்டம் போட்ட சிவா அவளின் நினைவில் வந்து போனான்.

‘டேய் அண்ணா, வெறும் பதினஞ்சாயிரம் சம்பளத்துக்கு நீ போடுற ஆட்டம் ஓவரா இல்ல’ மஞ்சரி அவனை கேலி பேச, ‘முதல்ல குறைவாதான் கிடைக்கும். போக போக ஏறும் பாரேன், நான் வேலை செய்ய போற கார் கம்பெனி அப்படி தெரியுமா!’ என்று தங்கைக்கு நாக்கை துருத்தி அழகு காட்டிவிட்டு, பார்கவி இடம் துள்ளியோடி வந்தவன், ‘அம்மா சீக்கிரம் காவ்யாக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பீங்க, நான் நடத்துவேன் என் அக்கா கல்யாணத்தை ஜாம் ஜாம்னு’ என்று கெத்து காட்டினான்.

‘வேலை கிடச்சதும் பெரிய மனுசன் போல பேச்ச பாரு’ காவ்யா சிரித்தபடியே தம்பியின் தலையில் தட்டி விட்டிருந்தாள் அன்று.

இன்று உடல் முழுவதும் கட்டுகளோடு வலியில் முணங்கும் தம்பியை பார்க்க, அவளால் தாங்க முடியவில்லை. அறைக்கு வெளியே வந்து வரிசையாக அமைந்திருந்த இருக்கையில் அமர்ந்து அழுது விட்டாள்.

இரவோடு விடியல் கைக்கோர்க்கும் இந்நேரத்தில், வேதனையில் கண்ணோரம் நீர் கோர்க்க, இதயம் உள்ள இடத்தில் அழுத்தம் கூட, கலங்கி அமர்ந்திருந்தாள். சட்டென அவளைச் சுற்றி இதமாய் பரவியது அவன் வாசம்!

கண் கண்ணாடியை கழற்றி நனைந்திருந்த கண்களை துடைத்துவிட்டு மறுபடி அணிந்து கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவள், “நீங்க எப்ப வந்தீங்க சர்?” தனக்கு முன்பே அங்கு அமர்ந்திருந்த விபீஸ்வரை கவனித்து திகைப்பாக கேட்டாள்.

“உனக்கு என் காதல் மேல நம்பிக்கை வராம இருக்கலாம் கவி... ஆனா, இந்த நிலைமையில உன்ன தனியா விட்டு என்னால நிம்மதியா தூங்க முடியல, அதான் போன வேகத்துல திரும்பி வந்துட்டேன்” என்று பதில் சொன்னவனை இன்னும் வியந்து‌ பார்த்தாள் அவள். அவளுக்கு அவனிடம் என்ன பதில் உரைப்பது என்று தெரியவில்லை.

“அது... சிவாவுக்கு நினைவு வந்திடுச்சு, இன்னைக்கு அவன்கூட பேசலாம்னு டாக்டர் சொன்னாரு, இனி நான் இங்க பார்த்துக்கிறேன், ரொம்ப நேரமாயிடுச்சு நீங்க போய் தூங்குங்க சர்” காவ்யா தயக்கமாக சொல்ல, விபி தலையசைத்து விட்டு எழுந்து நடந்தான்.

“விபி சர்...” அவள் அழைப்பில் அவன் நின்று திரும்ப,

“ரொம்ப நன்றி சர்... சரியான நேரத்தில பெரிய உதவி செஞ்சிருக்கீங்க. நீங்க இல்லனா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்” அவள் நன்றி உரைத்தாள்.

அதில் அவன் முகத்தில் கடுமை பரவியது. “உன் நன்றிய நீயே வச்சுக்க, அது எனக்கு தேவையில்ல” விபீஸ்வர் காட்டமாய் சொல்லிவிட்டு சென்றான்.

அவன் கோபத்தின் காரணம் விளங்காமல் இவள் திருதிருத்து விழித்து நின்றிருந்தாள்.

அடுத்த நாள் சிவா அவசரபிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டான். அந்த அறை அனைத்து வசதிகளுடன், துணையாக வசிப்பவருக்கும் சகல ஏற்பாடுகளுடன் அமைந்திருந்தது. சிவாவை கவனிக்க உடன் ஒரு செவிலியும் அமர்த்தப்பட்டிருந்தார். இதுவும் விபீஸ்வர் ஏற்பாடு தான்.

அந்த அறையின் ஒரு நாள் வாடகையை விசாரித்தவளுக்கு அடிதொண்டை காய்ந்து போனது. இப்போதுதான் அவளுக்கு வேறு சந்தேகமும் தோன்ற, வேகமாய் சென்று சிவாவின் சிகிச்சைக்கு இதுவரை செலவான தொகை பற்றி விவரம் கேட்டறிந்தவளுக்கு, தலை கிறுகிறுக்க தொடங்கியது.

அவளின் கையிருப்பு இந்த தொகையில் பாதியளவு கூட தேறாது. அங்கே இங்கே என்று புரட்டினாலும் தொடர்ந்து சிகிச்சைக்கு இன்னும் அதிகமாக செலவாகுமே என்று கணக்கிட்டவள், மலைத்து தான் போனாள்.

இப்படி காசை நீராக விபீஸ்வர் செலவிட்டதால் தான் சிவா எந்த அதிக சேதாரமும் இன்றி மீண்டிருக்கிறான் என்ற உண்மையையும் அவள் உணர்ந்தே இருந்தாள்.

இனி என்ன செய்வது என்று யோசித்து ஓரளவு முடிவிற்கு வந்திருந்தாள். அடுத்த நாளில் இருந்து சிவா ஓரளவு பேச தொடங்கி இருந்தான். அவன் உடல்நலமும் சிறிது சிறிதாக தேறி வந்தது. மாறி மாறி அம்மா, அக்கா, தங்கையிடம் மன்னிப்பு கேட்டு ஓய்ந்து போனான்.

* * *

ஒரு வாரம் கழித்து, அனுமதியுடன் விபீஸ்வர் கேபினுக்குள் வந்து நின்றாள் காவ்யா. அவளை பார்த்ததும் விபியின் முகம் மென்மையாய் மலர, அவளை அமரும்படி முன் இருக்கையை கண்காட்டினான்.

அவள் அமர்ந்ததும், “சிவா இப்ப எப்படி இருக்கான் கவி?” விபீஸ்வர் விசாரிக்க,

“முன்ன விட பரவால்ல சர். உங்களை பார்க்கணும், உங்களுக்கு நன்றி சொல்லணும்னு சொல்லிட்டிருக்கான்” காவ்யா பதில் நிறைவாக வந்தது.

“ஈவ்னிங் நானும் வரணும்னு நினச்சிருந்தேன்.” விபியும் இயல்பாய் கூற,

“உங்க உதவியால தான் சிவா இப்ப எங்களுக்கு திரும்ப கிடைச்சிருக்கான், ரொம்ப நன்றி சர்” என்றவள் உணர்ச்சிவசத்தோடு அவன் முன்பு கைகள் கூப்பினாள்.

“ப்ச், இப்படி சில்லியா நடந்துக்காத காவ்யா, உனக்கும் உன் ஃபேமிலிக்கும் ஏதாவதுன்னா நான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சியா?” அவன் பதில் உரிமையின் பிரதிபலிப்பாக வந்தது. அவன் தன்னால் எடுத்துக்கொள்ளும் இந்த உரிமைக்கு அவள் என்னவென்று பதில் தருவது?

எனவே, அதை விடுத்து, “அது சர்... நீங்க ஹாஸ்பிடல்ல நிறைய செலவு பண்ணி இருக்கீங்க. இப்ப என்னால முழுசா அடைக்க முடியல. கொஞ்சம் டைம் கொடுங்க நான் சீக்கிரமே அடைச்சிடுவேன்” என்றவள் ஓரளவு பணத்தொகை கோடிட்ட காசோலையை அவனிடம் தயக்கமாக நீட்டினாள், “இப்போதைக்கு என்னால முடிஞ்சது இது” என்று.

அதுவரை அமைதியாக இருந்த விபீஸ்வரின் முகத்தில் ஏகத்துக்கும் கடுமை ஏறியது. அவள் நீட்டிய காசோலையை பிடிங்கி கிழித்தெறிந்தவன், அதே வேகத்தில் அவளருகே வந்து அவளின் மேல் கையை பிடித்து எழுப்பி நிறுத்தினான்.

“என்ன தான்டீ நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? அன்னிக்கு என்னனா என் காதல் மேல நம்பிக்கை இல்லன்னு சொல்லிட்டு போன, இப்ப என்னவோ எனக்கு செக் எடுத்துட்டு வந்து நீட்டுற... என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?” ஆக்ரோஷமாக அவளை பிடித்து உலுக்கினான்.

அவன் கோபப்படுவான், மறுப்பான் என்று காவ்யா எண்ணினாள் தான், ஆனால் அவன் தனது வேலை இடத்தில் இத்தனை ஆவேசமாக நடந்து கொள்வான் என்று காவ்யா நினைத்திருக்கவில்லை. எப்படியும் அவனிடம் கடங்காரியாய் இருக்கவும் இவளின் தன்மானம் இடங்கொடுப்பதாக இல்லை.

“சர் விடுங்க பிளீஸ்... கை வலிக்குது” காவ்யா வலியில் முகம் சுருங்கி சொல்ல, “என்னால உன்ன விடமுடியாது கவி. உனக்கு என் காதல் மேல தான நம்பிக்கை இல்லாம போச்சு... சரி வா, நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” அதே கோபத்தோடே சொன்னான்.

“உங்களுக்கு எல்லாமே விளையாட்டா போச்சா? கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க சர், ஆத்திரத்தில கண்டதையும் உளறாதீங்க” அவன் தந்த அதிர்ச்சியில் காவ்யாவும் கண்டித்து பேசினாள்.

அவளின் கண்டிப்பில் இவன் முகத்தில் யோசனை பரவியது. அவளை விட்டு நகர்ந்து நெற்றியை தேய்த்து ஏதோ யோசித்தவன் அவளிடம் திருப்பி, “நான் உறுதியா தான் சொல்றேன். உனக்கு என் காதல் மேல தான நம்பிக்கை இல்லாம போச்சு. நம்ம கல்யாணம் நடந்தா என் காதல் மேல உனக்கு நம்பிக்கை வரும் இல்ல! அதோட உன்ன விட்டு விலகி இருக்க என்னாலயும் முடியாது, நீ என்னைவிட்டு விலகி போறதையும் ஏத்துக்க முடியாது” அவன் தீவிரமாக பேசிக்கொண்டு போக, இவள் அவன் பேசும் மொழி புரியாதது போல விழி பிதுங்க நின்றிருந்தாள்.

அவன் அதே தீவிரத்தோடு, “சிவாக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும் எவ்வளவு துடிச்சு போன, உன் அம்மா வந்ததும் அவங்க தோள்ல சாய்ஞ்சு கதறி அழற. அவ்வளவு நேரமும் நான் உன் பக்கத்துல தானடீ இருந்தேன்! என்கிட்ட ஆறுதல் தேட தோனல இல்ல உனக்கு! உன் வேதனைக்காக நான் துடிச்சது தெரியாம போச்சுல்ல உனக்கு?” அவளுக்கு எல்லாமுமாக தான் மட்டுமேயாக வேண்டும் என்ற தன் பிடிவாத காதலின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் அவன்.

“நான்...நான் அப்படி நினைக்கல. நீ...நீங்க தான் ஏதேதோ நினைச்சு குழப்பிக்கிறீங்க!” அவன் பிடிவாத நேசம் அவளை திணற, பதற வைத்தது.

விபீஸ்வர் அசட்டையாக கைகளை உயர்த்தி சோம்பல் முறித்து, “பேபி, இப்ப செம்ம ஹேப்பி மூட்ல இருக்கேன்... நம்ம மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு. நீயும் பிக்ஸ் பண்ணிக்கோ” விபி ஒற்றை கண் சிமிட்டி கொண்டாட்டமாக சொல்ல, இவளுக்கு மூச்சடைத்தது.

“சர்... கல்யாணம் எல்லாம் சின்ன விசயம் இல்ல. அதெல்லாம் வீ...வீட்டு பெரியவங்க பார்த்து தான் முடிவு பண்ணணும். நான் எப்படி உங்களை? அதெல்லாம் நடக்காது சர்!” அவன் தெளிவாக உறுதியாக பேச, இவள் திக்கித் திணறினாள். அவனது அதிரடி வேகத்தில் இவள் இதயம் நூறு மடங்கு வேகத்தில் துடிப்பது போலிருந்தது.

“அட ஆமா இல்ல, சரி வா போலாம்” என்று விபீஸ்வர் அவள் கைப்பற்றி வெளியே இழுத்து வர,

“சர்... எங்க போகணும்?” அவள் பதறி கேட்டு அவன் இழுப்புக்கு வர, “நம்ம கல்யாணம் பத்தி நம்ம வீட்டு பெரியவங்க கிட்ட பேசணும் இல்ல” அவன் சாதாரணமாக சொன்னபடி நடந்தான். அவளுக்கோ உலகமே கிறுகிறுத்தது.

விபீஸ்வரும், காவ்யதர்ஷினியும் கைகள் கோர்த்து நடந்து போவதை அலுவலகத்தில் உள்ள அனைத்து கண்களும் அதிசயமாக பார்க்க, அவர்கள் தங்களுக்குள் சுவாரஸ்யமாக கிசுகிசுத்துக் கொண்டனர்.

“எல்லாரும் நம்மையே பார்க்கிறாங்க, தயவு செஞ்சு கையை விடுங்க சர்” காவ்யா சங்கடமாய் கிட்டத்தட்ட அவனிடம் கெஞ்சினாள்.

தன் பிடியை விடாமல் அப்படியே நின்று திரும்பியவன், “ஹாய் கெய்ஸ், நான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்... சீக்கிரமே மிஸ் காவ்யதர்ஷினி, மிஸஸ் விபீஸ்வர் ஆக போறாங்க ஹூ!” உற்சாகமாய் சத்தமிட்டு அவள் கையை தன் நெஞ்சோடு சேர்த்து, அங்குள்ள அனைவருக்கும் தங்கள் திருமணச் செய்தியை அறிவித்தான் விபீஸ்வர்.

ஒரு நொடி திகைத்த அனைவரும் சட்டென வாழ்த்துடன் கரகோஷம் எழுப்பினர். “ஹே ஹே கங்கிராட்ஸ் விபி சர், கங்கிராட்ஸ் காவ்யா மேம்” என்ற வாழ்த்து குரல்கள் ஒன்றாக ஒலித்தன.

“தேங்க் யூ கைய்ஸ்” விபீஸ்வர் போகிற போக்கில் நன்றி சொல்லிவிட்டு, அதிர்ந்து நின்றிருந்தவளை இழுத்துக்கொண்டு வெளியேறினான்.

விபீஸ்வர் கைகளின் லாவகத்தில் அவன் கார் சாலையில் வேகமெடுத்து சீறி பாய்ந்து கொண்டிருந்தது.

“உங்களுக்கு என்ன புத்தி மழுங்கி போச்சா சர். நீங்க என்ன செய்றீங்க, என்ன பேசறீங்கன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா? ஆஃபிஸ்ல எல்லார் முன்னையும் இப்படி சொல்லி வச்சிருக்கீங்களே, அச்சோ! எல்லாமே போச்சு” காவ்யா அவனருகில் தலையை பிடித்தபடி படபடத்தாள்.

“ஹே பேப் கூல் யா, எப்படி இருந்தாலும் எல்லாருக்கும் நம்ம மேரேஜ் அனோன்ஸ் பண்ணி தான ஆகணும், அதை இப்பவே சொல்லிட்டேன், அவ்வளோ தான” விபீஸ்வர் வெகு இயல்பாக பதில் தர,

“அச்சோ! உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது? நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது சர்” அவள் மறுத்துப் பேச,

“அதை எப்படி நடத்திக் காட்டணும்னு எனக்கு தெரியும் ஸ்வீட் ஹார்ட், இறங்கி வா” என்று அவன் காரை நிறுத்திவிட்டு இறங்க, அவளும் இறங்கினாள்.

அந்த இடம், அவளின் அடுக்குமாடி குடியிருப்பு! காவ்யாவின் பதற்றம் கூடியது.

“அய்யோ சர், இங்க எதுக்கு வந்திருக்கீங்க?” என்றவளின் கைப்பிடித்து மறுபடி இழுத்துச் சென்றான்.

எதையும் யோசிக்கவும் இயலாமல், அவனை தடுக்கவும் முடியாமல், நொந்தபடி அவன் இழுப்பிற்கு இவளும் நடந்தாள்.

அழைப்பு மணி ஒலி கேட்டு கதவை திறந்த பார்கவி, “வந்துட்டியா காவ்யா, நீ வர தாமதமாகும் போல நானே ஆட்டோ பிடிச்சு ஹாஸ்பிடல் போகலாம்னு...” மகளுடன் விபீஸ்வரை பார்த்தவரின் பேச்சு அப்படியே பாதியில் நின்றது.

அவர்களின் இணைந்திருந்த கைகளை சந்தேகமாக பார்த்தவர், “உள்ளே வாங்க” சற்று தயக்கமாக வரவேற்றார்.

காவ்யா சங்கடத்துடன் அவன் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொள்ள முயல, அவன் பிடி மேலும் இறுகியது தான் மிச்சம்.

“ஆன்ட்டி, உங்ககிட்ட முக்கியமா ஒரு விசயம் கேட்க வந்திருக்கேன்” விபீஸ்வர் நேராக பேச்சை தொடங்கினான்.

“பிளீஸ் சர் எதுவும் சொல்லிடாதீங்க...” காவ்யா இறங்கிய குரலில் அவனிடம் கெஞ்சி கொண்டிருக்க, “நான் காவ்யாவ ரொம்ப லவ் பண்றேன். எங்க கல்யாணத்துக்கு உங்க சம்மதம் வேணும் ஆன்ட்டி” விபீஸ்வர் பட்டென உடைத்து கேட்டு, பார்கவியையும் அதிர செய்தான்.

தன் காதுகளையும் கண்களையும் நம்ப‌ முடியாமல் பிரமித்து போனார் பார்கவி. விபீஸ்வரின் செல்வ செழிப்பையும் ஆளுமையையும் காவ்யா, சிவா முன்பு சொல்லிருக்க, அதை எண்ணி பார்த்தவருக்கு கால்கள் தரையில் படாமல் மிதப்பது போலிருந்தது.

“எம்மாடியோவ்! நிசமாவா சொல்றீங்க? எங்க வீட்டு பொண்ணை நீங்க கல்யாணம் செஞ்சிக்க போறீங்களா!” ஆனந்த அதிர்ச்சியில் அவருக்கு தன்னிலை மறந்து போனது.

“அச்சோ அம்மா! இதெல்லாம் உண்மை இல்ல! இவர் தான் ஏதோ நினைச்சிட்டு...” காவ்யா சங்கடமாக மறுக்க,

“எது உண்மை இல்ல, இப்படி திடுதிப்புனு அவரோட கைக்கோர்த்துட்டு வந்து நிக்கிறதை பார்த்தும் ஒண்ணுமில்லன்னு நம்ப சொல்றீயா?” பார்கவி அவர்களின் கோர்த்திருந்த கைகளை சுட்டி காட்டி பேசினார்.

காவ்யா, விபீஸ்வரை ஏகத்துக்கும் முறைத்து விட்டு தன் கையை உதறி விடுவித்துக் கொள்ள, அவன் அசராமல் கண்ணடித்து சில்லென்ற சிரிப்பை சிதற விட்டான்.

பார்கவி வெளி உலக அறிவை வளர்த்துக் கொள்ளாத சாதாரண பெண்மணியாக இருந்தார். முன்பு கணவனின் நிழலிலும், பின்பு மகளின் நிழலிலுமே அரவணைப்பாக வாழ்ந்து பழகி விட்டிருந்தார். அதனாலேயே விபீஸ்வர் போல சர்வ லட்சணமான கணவன் தன் செல்ல மகளுக்கு வாய்க்கப்பெற்றதில் சாதக பாதகங்களை ஆராயாது பூரித்து போனார்.

இன்ப பரபரப்புடன் சமையலறைக்குள் சென்றவர் சிறு கிண்ணத்தில் சர்க்கரையை எடுத்து வந்து, “எனக்கு கையும் ஓடல காலும் ஓடல... எவ்வளவு சந்தோசமான விசயம் சொல்லி இருக்கீங்க, இந்தாங்க முதல்ல சீனி எடுத்துக்கோங்க” என்று அவர்கள் முன் நீட்டினார்.

விபீஸ்வர் அதை விளங்காமல் பார்த்து நிற்க, ஆர்வ மிகுதியில் அவரே ஒரு தேக்கரண்டி சக்கரையை அள்ளி அவன் வாயில் திணித்தார். அதே வேகத்தில் காவ்யாவின் வாயிலும் சக்கரையை திணித்து வைத்தார்.

காவ்யாவின் தவிப்பினை ரசித்து பார்த்தவன், தன் வாய் இனிப்பை மென்று விழுங்கி இருந்தான். அதன் தித்திப்பும் இந்த சந்தோசமும் அவனுக்கு புதிதாக இருந்தது. பிடித்தும் இருந்தது.

“நீங்க சொல்லிட்டீங்க சரி, ஆனா... உங்க வீட்டு ஆளுங்க ஒத்துக்கணும் இல்ல. எங்களால உங்க அளவுக்கு எதுவும் செய்ய முடியாதே, அதோட இப்ப சிவா வேற அடிப்பட்டு கிடக்கான்” பார்கவிக்கு இப்போது தான் நிதர்சனம் புரிய, தவிப்பாக கேட்டார்.

“என்னோட முடிவுக்கு என் அம்மா எப்பவும் மறுத்து சொல்ல மாட்டாங்க. சிவா பத்தி நீங்க கவலைப்படாதீங்க ஆன்ட்டி, அவனுக்கான முழு பொறுப்பையும் நான் ஏத்துக்கிறேன். அதோட நீங்களும் இனி என்னோட குடும்பம், நீங்க எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா மட்டும் போதும்” விபீஸ்வர் தன்மையாக அவரிடம் பேசினான்.

“எங்க காவ்யா சந்தோசம் தான் எங்களோட சந்தோசம், எதுக்கும் உங்க அம்மாவுக்கும் சம்மதம்னு காதால கேட்டுட்டேன்னா, எங்க மனசுக்கும் ஆறுதலா இருக்கும்” என்று தன் தவிப்பை பார்கவி கூற, விபீஸ்வரும் சரியென்று சம்மதமாக தலையசைத்தான்.

தன் முன்னே தனது கல்யாண பேச்சு நடந்தேறிக் கொண்டிருக்க, தன் வாயில் கரையும் சர்க்கரையை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திக்பிரமையாக நின்றிருந்தாள் காவ்யா.

* * *

(அடுத்த பதிவு நாளை... படித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் நன்றிகள் ஃபிரண்ட்ஸ்...)
 
CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
206
Reaction score
837
Location
Ullagaram
இவனோட நடவடிக்கையெல்லாம்
அதிரடியா இருந்தாலும், ஆனா உண்மையைத் தான் சொல்றான்னு புரியுது. தவிர, அவன் மெய்யாலுமே காவ்யாவையும் காதலிக்கிறான்னு தெரியுது. ஆனா, அவனோட அந்த உண்மை காதலை ஏத்துக்க காவ்யா ஏன் தயங்குறான்னு தான் தெரியலை. அந்தஸ்து பேதம் இருந்தாலும், இந்தளவுக்கு தயங்க வேண்டிய காரணம் என்ன..?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
16,048
Reaction score
35,743
Location
Vellore
இவனோட நடவடிக்கையெல்லாம்
அதிரடியா இருந்தாலும், ஆனா உண்மையைத் தான் சொல்றான்னு புரியுது. தவிர, அவன் மெய்யாலுமே காவ்யாவையும் காதலிக்கிறான்னு தெரியுது. ஆனா, அவனோட அந்த உண்மை காதலை ஏத்துக்க காவ்யா ஏன் தயங்குறான்னு தான் தெரியலை. அந்தஸ்து பேதம் இருந்தாலும், இந்தளவுக்கு தயங்க வேண்டிய காரணம் என்ன..?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
நன்றி டியர் 😍 😍 😍
 
saideepalakshmi

மண்டலாதிபதி
Joined
Nov 11, 2023
Messages
151
Reaction score
238
Location
Salem
ஸ் அப்பா!கவிக்கு இப்பவே கண்ணைக் கட்டுதே! அடுத்து என்னவோ?
ரொம்ப ரொம்ப பரபரப்பான திடீர் திருப்பங்கள் நிறைந்த பதிவு.
 
Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
16,048
Reaction score
35,743
Location
Vellore
ஸ் அப்பா!கவிக்கு இப்பவே கண்ணைக் கட்டுதே! அடுத்து என்னவோ?
ரொம்ப ரொம்ப பரபரப்பான திடீர் திருப்பங்கள் நிறைந்த பதிவு.
நன்றி டியர் 😍 😍 😍
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top