• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிர் தேடல் நீயடி 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
16,048
Reaction score
35,743
Location
Vellore
IMG-20200213-WA0032 (1).jpg

உயிர் தேடல் நீயடி

அத்தியாயம் 23

அந்த பங்களாவின் வெளித்தோற்றம் பிரம்மாண்டமாக காட்சி தந்து அவளை வரவேற்றது.

வழக்கம் போல காவ்யதர்ஷினியை தன் வீட்டிற்கு வம்படியாக இழுத்து வந்திருந்தான் விபீஸ்வர்.

காரிலிருந்து இறங்கியுடன் அவன் அவள் கையை பிடித்துக் கொள்ள, “முதல்ல கையை விடுங்க, நான் எங்கேயும் ஓடி போக மாட்டேன்” என்று தன் கையை உருவிக்கொண்டு அவனுடன் நடந்தாள். அவனும் தோளை குலுக்கி விட்டு தன்னவளை முதல் முதலாக தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான்.

பங்களாவின் உள் தோற்றத்தின் பிரம்மாண்டமும் பேரழகும் அலங்கார நேர்த்தியும் அவர்கள் செல்வ செழிப்பை பறைசாற்றி, இவளை மிரள வைத்தது.

கூடுதலாக லலிதாம்பிகை முகமும் கடுமையையும் இறுக்கத்தையும் வெளிப்படையாகவே காட்டியது.

“மாம், உங்க மருமகளை இழுத்துட்டு வந்திருக்கேன் பாருங்க” விபீஸ்வர் சொல்ல நிமிர்ந்தவரின் பார்வையில், மகனின் முதுகுக்கு பின்னால் இருந்து தயங்கி தயங்கி வந்து நின்றாள் அப்பெண்.

அவளின் எளிமையான உடையும், பிரத்யேக ஒப்பனையற்ற முகத்தோற்றமும், சற்று மிரட்சியான பார்வையும் எதுவுமே லலிதாவிற்கு பிடித்தத்தை உண்டாக்கவில்லை.

‘போயும் போயும் இவளா தன் மகனுக்கு ஜோடியாக வாய்க்கப்பெற்றவள்’ அவரின் மனம் முரண்டியது.

லலிதாம்பிகையின் முகபாவத்தை வைத்தே தன்மீது அவருக்கு பிடித்தம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவள், வேறுவழியின்றி தன் அம்மா நூறு முறை சொல்லி அனுப்பியபடி தயக்கமாக அவர் பாதம் பணிந்தாள்.

அமர்ந்த வாக்கிலிருந்து எழாமலேயே, “ம்ம்... நல்லாயிரு பொண்ணு” என்று தன் வருங்கால மருமகளுக்கு வேண்டா வெறுப்பாக ஆசி வழங்கினார் லலிதாம்பிகை.

“மாம், அப்படியே எனக்கும்” என்று விபியும் காவ்யாவை தொடர்ந்து, முதல் முதலாக தன் அம்மாவின் பாதம் தொட்டு வணங்க, லலிதா நெகிழ்ந்து போனவராய் எழுந்து நின்று தன் செல்லமகனின் முகம் வருடி, “என்னோட ஆசிர்வாதம் எப்பவும் உனக்கு இருக்கும் விபி, எந்த குறையும் இல்லாம ராஜா மாதிரி நீ வாழணும் டா” என்றார்.

“அதான் எனக்கான ராணி வந்துட்டா இல்ல மாம், இனி ராஜபோகம் தான்” என்று காவ்யாவை தன் அருகிழுத்து, தோளைணைத்து சொன்னான்.

“சரிதான் கண்ணா. எப்ப உன் விருப்பத்துக்கு நான் தடையா இருந்து இருக்கேன் சொல்லு” அவர் சம்மதம் சொல்லி விட, விபீஸ்வர் அம்மாவின் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு, “தேங்க் யூ மாம்” என்று காவ்யாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றிருந்தான்.

தன் கன்னத்தை துடைத்து விட்ட லலிதாம்பிகைக்கு தன் மகனின் திருமணத்தை எண்ணி ஆயாச பெருமூச்சு தான் விட முடிந்தது.

தன் வருங்கால மனைவியை தன் அறைக்குள் அழைத்து வந்திருந்தான் விபீஸ்வர். அவன் அறையின் நேர்த்தியும் அழகும் காவ்யாவின் கவனத்தை ஈர்க்கத்தான் செய்தன. அவனின் அற்புத ரசனையை மனதிற்குள் மெச்சிக் கொண்டாள் அந்த நேரத்திலும்.

அந்த அறையின் விசாலத்தோடு தங்கள் வீட்டை ஒப்பிட்டவளுக்கு தங்கள் வீடு மிகச் சிறியதாகவே தோன்றியது.

“உனக்கு நம்ம ரூம் பிடிச்சு இருக்கா? ஏதாவது சேஞ்சஸ் செய்யணுமா சொல்லு செய்திடலாம்” விபி உற்சாகமாய் கேட்க,

“அவசியம் இல்ல சர், உங்க ரூம் பர்ஃபெக்டா ரொம்ப அழகா இருக்கு” காவ்யா மனதில் பட்டதை சொன்னாள்.

அவளின் இடைவளைத்து அருகே இழுத்துக் கொண்டவன், “இன்னும் நான் உனக்கு சர் தானா கவி?” என தவிப்பாக வினவ, இவள் சங்கடமாக நெளிந்தாள்.

“உங்க அம்மாவுக்கு என்னை சுத்தமா பிடிக்கல” என்று இவள் பேச்சை மாற்ற, “ம்ம், தெரியும். உன்ன பத்தி அவங்களுக்கு எதுவும் தெரியாதில்ல அதான். போக போக உன்ன புரிஞ்சிக்குவாங்க, யூ டோண்ட் வொர்ரி அபௌட் தட்” என்றான்.

“யாருக்கும் விருப்பம் இல்லாத, ஒத்துவராத இந்த கல்யாணம் அவசியம் தானா? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.” அவள் இப்போதும் அரை மனதாக கேட்க,

“அவசியம் தான். இப்படி என்னோட நீ ஏட்டிக்குப் போட்டியா வம்பளக்க, உன்ன நான் திகட்ட திகட்ட காதல் செய்ய, அப்புறம்…” என்று அவள் முகம் நோக்கி நெருங்க, அவள் தலை தாழ்த்தி இடவலமாக மறுத்து தலையசைத்தாள்.

‘உன் மறுப்பை அவன் எப்போது ஏற்று இருக்கிறான், இப்போது ஏற்றுக்கொள்ள?’ என்று அவளின் உள்மனம் பதைபதைக்க, “நீங்க எல்லாத்துலயும் ரொம்ப அவசரப்படுறீங்க” அவள் மென்குரல் தழுதழுத்தது.

“ம்ஹும்! நான் அப்படி தான்” என்றவன் அவள் பூமுகம் நிமிர்த்தி அவளின் தேனிதழ்களைச் சிறைக் கொண்டான்.

ஒற்றை இதழணைப்பில் தன் பிடிவாத காதலின் வேகம் கூட்டி, மெல்லியலாளை துவளச் செய்தான்.

* * *

அன்று மாலை வேலை முடிந்து வீடு நோக்கி வந்தவளின் முகத்தில் சோர்வே விஞ்சி தெரிந்தது.

வரும்போது மருத்துவமனை சென்று சிவாவிடம் பேசிவிட்டு தான் வந்திருந்தாள். அவர்கள் திருமண பேச்சு பற்றி கேள்விப்பட்டு அவன் எழுந்து குதிக்காத குறை தான். விபீஸ்வரை போதும் போதும் என்னும் அளவிற்கு புகழ்ந்து தள்ளி இருந்தான். அதே யோசனையில் வீட்டிற்குள் வர, அந்த வீடே தடம்மாறி இருந்தது.

“என்ன நடக்குது இங்க?” காவ்யா புரியாமல் கேட்க,

“இன்டீரியல் வொர்க் நடந்திட்டு இருக்கு மேம், விபி சாரோட ஆர்டர். டூ, திரீ டேஸ்ல ஃபினிஷ் பண்ணிடுவோம், அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க மேம்” அங்கிருந்தவர்களில் நாகரிகமான உடை அணிந்திருந்தவன் அவளிடம் தகவல் சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்கலானான்.

பார்கவியும் மஞ்சரியும் அங்கே சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

காவ்யா உடனே விபீஸ்வர் எண்ணுக்கு அழைத்து, “எங்க வீடு எப்பவும் போல இருந்தாலே போதும், வீண் ஆடம்பரம் எல்லாம் எங்களுக்கு தேவையில்ல. இவங்களை இப்பவே போக சொல்லுங்க” என்று கத்திவிட்டாள்.

“ஓய் பேபி, செம ஹாட்டா இருக்க போல, போய் ஐஸ் வாட்டர் குடி” விபீஸ்வர் அவளை சீண்டினான்.

“விளையாடாதீங்க சர், இதெல்லாம் எதுவும் வேணாம். புரிஞ்சிக்கங்க” அவள் இன்னும் அழுத்தமாக மறுத்துச் சொன்னாள்.

“நெக்ஸ்ட் வீக், மாம், ரிலேட்டிவ்ஸ் எல்லாம் உன்ன பொண்ணு பார்க்க அங்க வராங்க, வீடு பெருசா இல்லைன்னாலும் கொஞ்சம் கிராண்டா இருந்தா தான் நல்லாயிருக்கும் கவி. பியூட்டிஷனுக்கு சொல்லி இருக்கேன் அவங்களும் வருவாங்க, நீ கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணு பேபி. லவ் யூ, பை”

மறுமுனையில் அவன் பேசிவிட்டு வைத்து விட, தன் கை மீறி போகும் எதையும் தடுக்கவியலாமல் காவ்யாவிற்கு சலிப்பாக இருந்தது.

இருள் கவிழும் நேரம், காவ்யா ஏதேதோ சிந்தனையில் உழன்றபடி, பால்கனி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள்.

இன்று அலுவலகத்தில், “சின்ன புள்ளப்பூச்சி ஒன்னு, பெரிய சிங்கத்தை சாய்ச்சிடுச்சாம் கேள்விப்பட்டியா?”

“என்ன? ஓஹ், விபி சர் காவ்யா கிட்ட கவுந்ததை சொல்றீயா?”

“ஆமாம்பா நான் கூட ஷாக்காயிட்டேன். என்னயா நடக்குது இங்க மோமண்ட் தான்.”

“போயும் போயும் இவகிட்ட எப்படி விபி சர் மடங்கினாருன்னு தெரியலையே, ரூட் தெரிஞ்சு இருந்தா நானும் ட்ரை பண்ணி இருக்கலாம்.”

“அதுக்கெல்லாம் ஒரு சூட்சுமம் தெரியணும், அது அவளுக்கு தெரிஞ்சு இருக்கு. வேலைக்கு வந்தவ கொஞ்ச நாள்லயே முதலாளிய வளைச்சு போட்டிருக்கான்னா பெரிய கைகாரிதான்...”

அதற்கு மேல் அவர்கள் பேசுவதை அவளால் கேட்க முடியவில்லை. காவ்யாவின் காதுபடவே அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசியதைக் கேட்டு கத்தி மேல் நிற்பது போன்ற உணர்வு அவளை இம்சித்தது. ‘நான் அப்படி இல்ல...’ என்று அவர்களிடம் கத்த வேண்டும் போல் இருந்தது காவ்யாவிற்கு.

சக பணியாளர்கள் அவளுக்கு வாழ்த்தினை தெரிவித்துக் கொண்ட போதும் குதர்க்கமான கேள்விகளை கேட்டு அவள் மனதை காயப்படுத்தவும் தவறவில்லை.

வேறுவழியின்றி தன் மனக்குழப்பத்தை சிவாவிடம் கூற, அவனோ, “இதுல என்னக்கா குழப்பம்? அன்னைக்கு நீ காணோம்னு தெரிஞ்ச உடனே விபி மாமா எப்படி தவிச்சு போனார் தெரியுமா?” என்றான்.

“என்னது... விபி மாமாவா?” காவ்யா திகைத்துக் கேட்க,

“அக்கா அவர் உன்ன ரொம்ப லவ் பண்றாரு. அவர் கண்ணுல உனக்கான தவிப்பையும் துடிப்பையும் காதலையும் பக்கத்துல இருந்து நான் பார்த்திருக்கேன். சும்மா கண்டதை நினச்சு குழப்பிக்காம கல்யாணத்துக்கு ரெடி ஆகுற வழிய பாருக்கா.”

“என்னடா நீ கூட அவர் பக்கம் பேசுற.”

“நீ இன்னும் விபி மாமா லவ்வ சரியா புரிஞ்சிக்கலன்னு நினைக்கிறேன். அதான் இப்படி யோசிக்கிற. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு க்கா, விபி மாமா உன்ன ரொம்ப சந்தோஷமா பார்த்துப்பாரு...” சிவா பேசிக்கொண்டு போக காவ்யா அரை மனதாக தலையாட்டிவிட்டு வந்திருந்தாள்.

இதற்கிடையே பார்கவி வேறு தலை கால் புரியாமல் மகளை கொண்டாடித் தீர்த்தார். “எவ்வளோ பெரிய இடம் என் பொண்ணுக்கு அமைஞ்சிருக்குன்னு ஊரு கண்ணே உன்மேல தான் பட்டிருக்கு” என்று காவ்யாவை அமரவைத்து திருஷ்டி வேறு கழித்து விட்டார்.

“அம்மா, அவர் கல்யாணத்துக்கு இவ்வளோ அவசரப்படுறாரே, உனக்கு எதுவும் தப்பா தோனலையா?” காவ்யா சந்தேகமாக கேட்டு வைக்க,

“இதுல என்ன தப்பிருக்குன்னு சொல்ல வர காவ்யா, பெரிய இடத்து புள்ள, உன்மேல வச்ச ஆசைக்காக இவ்வளோ இறங்கி வந்து பேசறதே பெரிசு” என்று சிலாகித்தார்.

“பணக்காரங்க பத்தி அவங்க குணம் பத்தி தெரியாம வெகுளியா இருக்கீங்க ம்மா, அதை புரிஞ்சிக்கும் போது நீங்க கஷ்டப்படுவீங்க. எந்த ஆதாயமும் இல்லாம அவங்க எதையும் செய்ய மாட்டாங்க, ஒருவேளை நாளைக்கு நான் உங்ககூட இல்லாம போனாலும் சிவா, மஞ்சரியை நல்லபடியா பார்த்துக்கங்க. உடைஞ்சு போய் மூலையில உக்கார்ந்துட்டு அவங்களையும் கலங்க விட்டுடாதீங்க... எப்பவும் தைரியமா இருங்க ம்மா’ காவ்யா ஏனோ தன் வருங்காலம் பற்றி சிறிதும் நம்பிக்கை இன்றி அப்படி பேசி இருந்தாள்.

“அடி போடி, எதையாவது புரியாம உளறிகிட்டு... நீ பொறந்தப்பவே கொடத்தூரு ஜோசியரு நீ பெரிய இடத்தில வாக்கப்பட போறவன்னு ஜாதகம் கணிச்சதா உங்க அப்பா வந்து சொன்னாரு. அது நெசமாகிடுச்சு பாரேன்!” என்று அவர் தன் பங்கிற்கு கதை அளக்க, இவள் பதில் பேசாமல் வந்துவிட்டிருந்தாள்.

இவற்றை எல்லாம் யோசித்து, இருண்டு வந்த வானத்தில் பார்வையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் காவ்யா.

விபியின் பிடிவாதத்தையும் தன்னை சுற்றி இருப்பவர்களின் ஆர்ப்பாட்டத்தையும் தாண்டி, காவ்யாவிற்குள் தனிப்பட்ட அலைபுறுதலும் துன்புறுத்தியது.

விபியின் தடாலடி திருமணத்தை தான்னால் ஏதேனும் ஒரு வகையில் தடுக்க இயலும் தான்! எனினும் தான் இப்படி அமைதியாக இருப்பதன் காரணம் அவளுக்குமே விளங்கவில்லை. ஒருவேளை தன் மானத்தையும், தன் தம்பியின் உயிரையும் காப்பாற்றியதால் அவன்மீது வந்த நன்றியுணர்வா? அல்லது அவன் காதலை தன் மனமும் ஏற்றுக் கொண்டதா? அப்படி ஏற்றுக் கொண்டால் என் மனதில் ஏன் நெருடல் ஏற்பட வேண்டும்? தன்நிலை விளங்காமல் குழம்பி தவித்திருந்தாள் அவள்.

“என்னாச்சு க்கா, இங்க வந்து உக்காந்திருக்க?” மஞ்சரி கேள்வியில் காவ்யா திரும்பினாள்.

“ஒன்னுமில்ல மஞ்சு, சும்மா தான்.”

“உனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்லையா?”

“ஏன் அப்படி கேக்குற மஞ்சு?”

“உன் முகத்துல கல்யாண சந்தோஷமே இல்லையே க்கா!” மஞ்சரி கேட்டதும் எழுந்து வந்த காவ்யா தங்கையை அணைத்துக் கொண்டாள். அவளின் கண்ணோரம் கண்ணீர் கசிந்தது.

இந்த சிறு பெண் கவனத்தில் வந்தது கூட பெரியவர்கள் கண்ணில் படவில்லையே என்று அவளின் பேதை மனம் வருந்தியது.

“உனக்கு அவரை பிடிக்கலையா க்கா?” அணைப்பினூடே மஞ்சரி கேள்வி தொடுக்க, “தெரியல மஞ்சு...” என்று விலகி நின்றாள் காவ்யா.

“இதுவரைக்கும் அவர் உன்கிட்ட பேசினதை, பழகினதை யோசிச்சு பாரு, நல்லவிதமா தெரிஞ்சா உனக்கு அவரை பிடிச்சிருக்கு. தப்பா தெரிஞ்சா உனக்கு அவரை பிடிக்கல, சிம்பிள்” சின்னவள் தனக்கு தெரிந்த யோசனை சொல்ல, பெரியவள் தங்களுக்குள் நடந்தவைகளை ஒருமுறை புரட்டி பார்த்தாள்.

“அவர் சில சமயத்தில என்கிட்ட ரொம்ப மோசமா நடந்திட்டு இருக்காரு... அதேநேரம் எனக்காக நிறைய உதவியும் செஞ்சிருக்காரு... அவரை எந்த லிஸ்ட்ல‌ சேர்க்கிறதுன்னு புரியல மஞ்சு...” வெறுமையாக இயம்பினாள்.

“எனக்கு தெளிவா புரியுதுக்கா, நீ ரொம்ப குழம்பி போய் இருக்க, அதான் உன்னால எதையும் சரியா எடுத்துக்க முடியல. நடக்குறதெல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுட்டு வந்து சாப்பிடு, வாக்கா” என்று மஞ்சரி அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

தங்கை சொல்வது சரியெனவே காவ்யாவிற்கும் பட்டது. நடப்பது நடக்கட்டும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.

* * *
(நன்றி ஃபிரண்ட்ஸ்... அடுத்த பதிவு நாளை...)
 
CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
206
Reaction score
837
Location
Ullagaram
ஏன் இந்த காவ்யாவுக்குள் இத்தனை அலைப்புறுதல்...? இன்னர் இன்ஸ்டின்க்ட் தப்பான சிம்டமை காட்டாது. அப்படின்னா, அவளோட உள்ளுணர்வு சரியான
அறிகுறியைத்தான் காட்டுதா...?

ஆனா, விபீ மூச்சுக்கு பேச்சு இது காதல்ன்னு தானே சொல்றான்.
ஏன், அவன் மேல இவளுக்கு நம்பிக்கை வரலை...? ஒருவேளை, முன்னாடி அவன் ப்ளேபாயா இருந்ததாலயா...?
புரியலையே...?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
16,048
Reaction score
35,743
Location
Vellore
ஏன் இந்த காவ்யாவுக்குள் இத்தனை அலைப்புறுதல்...? இன்னர் இன்ஸ்டின்க்ட் தப்பான சிம்டமை காட்டாது. அப்படின்னா, அவளோட உள்ளுணர்வு சரியான
அறிகுறியைத்தான் காட்டுதா...?

ஆனா, விபீ மூச்சுக்கு பேச்சு இது காதல்ன்னு தானே சொல்றான்.
ஏன், அவன் மேல இவளுக்கு நம்பிக்கை வரலை...? ஒருவேளை, முன்னாடி அவன் ப்ளேபாயா இருந்ததாலயா...?
புரியலையே...?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
நன்றி டியர் 😍 😍 😍
 
saideepalakshmi

மண்டலாதிபதி
Joined
Nov 11, 2023
Messages
151
Reaction score
238
Location
Salem
அன்பை அவன் அதிரடியாக காட்டுவது அவளுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது.அவன் எப்போழுதும் அதிரடி அவசரம் தான் ஆனாலும் அவன் அதில் நிலையாகக் தான் இருக்கிறான்.
அவளோ எப்போதும் நிதானம், பொறுப்பு, நிலையான முடிவு. எனவே அவள் அவன் அன்பை உணர கால அவகாசம் தேவை.கண்டிப்பாக அவன் காதலை உணர்ந்து கொள்வாள் அது உறுதி.
அழகான பதிவு.
 
Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
16,048
Reaction score
35,743
Location
Vellore
அன்பை அவன் அதிரடியாக காட்டுவது அவளுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது.அவன் எப்போழுதும் அதிரடி அவசரம் தான் ஆனாலும் அவன் அதில் நிலையாகக் தான் இருக்கிறான்.
அவளோ எப்போதும் நிதானம், பொறுப்பு, நிலையான முடிவு. எனவே அவள் அவன் அன்பை உணர கால அவகாசம் தேவை.கண்டிப்பாக அவன் காதலை உணர்ந்து கொள்வாள் அது உறுதி.
அழகான பதிவு.
நன்றி டியர் 😍 😍 😍
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top