• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிர் தேடல் நீயடி 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
16,032
Reaction score
35,717
Location
Vellore
IMG-20200213-WA0032 (1).jpg

உயிர் தேடல் நீயடி

அத்தியாயம் 24
காவ்யதர்ஷினியின் மனக்குழப்பத்தையும் அலைப்புறுதலையும் கண்டுகொள்ளாமல், பெண் பார்க்கும் சடங்கு முடிந்த கையோடு அடுத்த ஒருவாரத்தில் தங்களின் நிச்சயத்தையும், அடுத்த இருபது நாட்களில் திருமணத்தையும் முடிவு செய்திருந்தான் விபீஸ்வர்.

அதன்படி காவ்யதர்ஷினி - விபீஸ்வர் சக்கரவர்த்தி திருமணம் கோலாகலமாய் பிரம்மாண்டமாக நடந்தேறியது. உற்றார், சுற்றார் முன்னிலையில், பஞ்ச பூதங்கள் சாட்சியாக பெண்ணவள் பொன் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தன்னவளாக ஏற்றுக் கொண்டான்.

மங்கையவள் காதலுக்கும் உறவிற்கும் ஏக உரிமை பெற்றவனாக, அரிவையின் சுக, துக்கங்களின் பங்காளனாக, எந்த சூழ்நிலையிலும் மனையாளைக் காத்து நிற்கும் காவலனாக தன்னை ஆக்கிக் கொண்டான்.

***

மணப்பெண்ணாய் காவ்யதர்ஷினி தலை தாழ்ந்திருக்க, அவளின் மணி கழுத்தில் விபீஸ்வர் திருமாங்கல்யம் பூட்ட, அவர்கள் மேல் அட்சதை வாழ்த்து மழை தூவ, அந்த மங்கல காட்சி உறைந்திருந்த வண்ண நிழற்படத்தை வாஞ்சையாக வருடித் தந்தான் விபீஸ்வர்.

“என்னோட விருப்பம், என்னோட ஆசைன்னு உன்ன ரொம்ப படுத்தி எடுத்துட்டேன் போல, நான் தந்த டார்ச்சர்ல நீ ரொம்ப தவிச்சு போயிருப்ப இல்ல... சாரிடி, அதுக்கெல்லாம் சேர்த்து தான் என்னை இப்படி தவிக்க விடுறியா கவி, முடியலடி... என்கிட்ட வந்திடு பேபி...!” என்று பிதற்றியபடி அந்த புகைப்படத்தை அணைத்தவாறே உறங்கிப் போனான்.

காலையில் வழக்கம் போல ஜனனி விபியை தேடிவர, அதற்குள் விபீஸ்வர், ரவியுடன் வெளியே கிளம்பிவிட்டு இருந்தான்.

‘இவ்வளவு சீக்கிரம் விபி எங்க போனான்? யாரிந்த புது ஃபிரண்ட் ரவி?’ ஜனனி யோசித்து யோசித்து தன்னைத் தானே குழப்பிக் கொண்டாள்.

அங்கே காசிநாதனும் அவர்கள் இருவரையும் குழப்பத்துடனே தான் பார்த்திருந்தார்.

சந்தடி நிறைந்த சாலையின் ஓரத்தில் அவர்கள் கார் நிற்க வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் மூவரும் தீவிர விவாதத்தில் இருந்தனர்.

“சொல்லுங்க மிஸ்டர் விபீஸ்வர், நான் என்ன செய்யணும்னு எதிர் பார்க்கிறீங்க?” காசிநாதன் நேராக கேட்க,

“நீங்க தான் சொல்லணும் இன்ஸ்பெக்டர்!” விபீஸ்வர் கேள்வியை அவரிடம் திருப்பிவிட, இவர் முகம் கடுப்பைக் காட்டியது.

“ம்ம், உங்க வக்கீல் மூலமா, உங்களுக்கு எதிரா நீங்களே கேஸ் ஃபைல் பண்ணுவீங்க. அதையும் நான் தான் விசாரிக்கணும்னு மேலிடத்தில ரிக்வஸ்ட் பண்ணுவீங்க. இதுக்கும் மேல சீக்கிரம் கேஸை முடிக்கணும்னு டார்ச்சர் வேற. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க விபீஸ்வர் என்னை பத்தி?” காசிநாதன் கோபமாகவே கேட்டார்.

“ஏன் இன்ஸ்பெக்டர், ஒன்னரை மாசமா இதைத்தான் கண்டு பிடிச்சீங்களா?” ரவி சலிப்பைக் காட்ட, “யூ ஸட்அப் மேன்” காசிநாதன் அவனிடம் அதட்டல் விடுத்தார்.

“இன்ஸ்பெக்டர், இந்த கேஸ்ல என்னை சேர்ந்தவங்க சம்பந்தப்பட்டு இருப்பாங்கன்னு எங்களுக்கு சந்தேகம் இருந்தது. அதால தான் கேஸை எனக்கு எதிரா பைல் பண்ணோம், வேற எந்த ரீசனும் இல்ல” விபி பொறுமையாகவே பதில் தந்தான்.

“உங்களை குற்றவாளியா காட்டினா, தப்பு செஞ்சவங்க தானா வந்து உங்ககிட்ட சிக்குவாங்கன்னு பிளான் பண்ணி இருக்கீங்க, பட் அப்படி எதுவும் நடக்கல‌ போல” காசிநாதன் சொல்லி லேசாக சிரித்து வைத்தார்.

“அப்படி வந்து தானா சிக்கியிருந்தா உங்களுக்கு வேலை இல்லாம போயிருக்குமே” ரவி தன் பங்கிற்கு அவர் காலை வாரலானான்.

அவனுக்கு ஒரு முறைப்பை தந்துவிட்டு, “விபத்து நடந்த இடத்தை அலசி பார்த்தாச்சு, எதுவும் கிடைக்கல. அந்த இடம் சிட்டி விட்டு வெளியே இருந்ததால, சிசிடிவி கேமராவில எதுவும் பதிவாகல. அக்கம் பக்கம் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாத ஏரியா, யாரையும் விசாரிக்கவும் வழியில்ல” காசிநாதன் ஒவ்வொன்றாக பட்டியல் இட்டார்.

“இதெல்லாம் எங்களுக்கே தெரியும் புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்க” ரவி மறுபடி அவர் பேச்சை இடை வெட்டினான்.

அவன் பேச்சை கண்டு கொள்ளாமல் காசிநாதன் தொடர்ந்தார். “அந்த விபத்து நடக்கும்போது அங்க இருந்தது மூணு பேர், ஒன்னு காவ்யதர்ஷினி, ரெண்டு நீங்க, மூணு உங்களை மோதின காரோட டிரைவர்! உங்களுக்கு காரோட அடையாளம் தெரியல, காவ்யாவால இப்ப வந்து பதில் சொல்ல முடியாது. பட் உங்க ரெண்டு பேரையும் பத்தி அந்த மூனாவது ஆளுக்கு நல்லாவே தெரியும்.” என விளக்கினார்.

“ஆனா, இதுவரைக்கும் அந்த மூனாவது ஆள் கேள்விக்குறியா தானே இருக்கான்! நம்மால அவனை நெருங்க முடியலையே” ரவி சொல்ல,

“அவனே குற்றத்தை ஒத்துக்கிற மாதிரி சூழ்நிலையை நாம உருவாக்கணும்” காசிநாதன் தன் யோசனையைச் சொன்னார்.

“அவனை பத்தி ஒன்னுமே தெரியாம எப்படி டார்கெட் பண்றது?” விபீஸ்வர் கேள்வி எழுப்ப,

“அது உங்க கைல தான் இருக்கு விபீஸ்வர், உங்களுக்கு விபத்து நடந்த நேரத்திற்கு அரைமணிநேரம் முன்னையும் பின்னையும் அந்த ரூட் செக்போஸ்ட் வழியா கிராஸ்‌ பண்ணி போன வாகனங்களோட சிசிடிவி கேமரா வீடியோஸ் இது. இதை கவனமா பாருங்க, உங்களுக்கு சின்ன சந்தேகம் வந்தா கூட சொல்லுங்க” என்று தன் மடிக்கணினியை திறந்து விபீஸ்வரிடம் தந்தார்.

“இதை நாங்க முதல்லயே முயற்சி பண்ணிட்டோம், விபி சர் அந்த காரை பார்க்கவே இல்ல, இன்பேக்ட் அது கார்தானான்னு அவருக்கே சரியா தெரியல” ரவி நொட்டம் சொன்னான்.

“பரவால்ல, மறுபடி இதை ட்ரை பண்றது தப்பில்ல. முன்ன தோணாத ஏதாவது அவருக்கு இப்ப தெரிய வாய்ப்பு இருக்கும்” காசிநாதன் அழுத்தமாக பதில் தந்தார்.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் விபீஸ்வர் திரையில் கவனத்தை பதித்து‌ இருந்தான். எதை தேடுகிறோம் என்பது புரியாமல் அவன் கருமணிகள் அப்படியும் இப்படியும் விரைந்த வாகனங்களில் ஏதோ ஒன்றை கண்டெடுக்க முயன்றன.

ரவி பொறுமை இழந்து முன் இருக்கையில் சாய்ந்து உறங்கி போயிருந்தான். இதனை முன்னமே பார்த்துப் பார்த்து சலித்து இருந்தான் அவன்.

தன் பங்கிற்கு காசிநாதனும் திரையை கவனித்தபடி இருந்தார். விபீஸ்வர் சோர்ந்து போய் தலையை இடவலமாக அசைக்க, காசிநாதன் அவன் தோளை தட்டிக் கொடுத்தார். அதே நேரம் திரையில் ஒரு வாகனம் விபீஸ்வர் நெற்றியை சுருங்க செய்தது.

அதை காசிநாதனுக்கு அடையாளம் காட்டி, “இது ஜெனியோட கார்!” விபி சொன்னதும், ரவி துள்ளி எழுந்து எட்டிப் பார்த்தான்.

“குட், ஜனனி காருக்கு அந்த ரூட்ல என்ன வேலைன்னு முதல்ல விசாரிக்கணும். பட், இதால மட்டும் அவங்க தான் குற்றவாளின்னு முடிவு செய்ய முடியாது. சரியான ஆதாரம் வேணும்” காசிநாதன் விளக்க, இருவரும் ஆமோதிப்பாக தலையசைத்தனர். மேலும் சில விசயங்களை அலசி விட்டு மூவரும் கலைந்தனர்.

* * *

ஜனனியின் சோர்ந்த முகமும் ஒளியிழந்த கண்களும் வளர்மதியை தவிக்கச் செய்தது. தன் செல்ல மகளின் பிடிவாதத்தால் அவரும் சோர்ந்து போயிருந்தார்.

“உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சா பாப்பா. விபி, விபின்னு உனக்கு அவன்மேல பைத்தியம் முத்தி போச்சு போல. அவனை இன்னைக்கு ஒரு நாள் பார்க்க முடியலன்னு காலையில இருந்து சாப்பிடாம ஏன் இப்படி அடம்பிடிக்கிற?” வளர்மதி கோபமாக மகளை கண்டிக்க, மாணிக்கசுந்தரம் ஆற்றாமையோடு மகளை பார்த்திருந்தார்.

“என்னோட கவலை உங்களுக்கு விளையாட்டா இருக்கா? இப்ப இருக்க விபிய என்னால சுத்தமா புரிஞ்சிக்கவே முடியல! என்னை சுத்தமா கண்டுக்கவே மாட்டேங்கிறான். எப்பவும் ஏதோ அழுத்தத்தோடவே சுத்திட்டு இருக்கான்” ஜனனி புலம்ப,

“அதுக்கு என்னடி பண்ண சொல்ற எங்களை?”

“லல்லி ஆன்ட்டி கிட்ட பேசி விபிக்கும் எனக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணுங்க” ஜனனி தன் முடிவிலேயே நின்றாள்.

“இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்னு அப்பா தான் சொன்னாரில்ல பாப்பா” சற்றும் புரிதலற்ற பெண்ணின் பிடிவாதத்தை உடைக்க முடியாமல் வளர்மதியும் சலித்துத்தான் போனார்.

“இன்னும் எத்தனை நாள் மம்மி, திடீர்னு வர்ஷினின்னு ஒருத்தி வந்து விபி கிட்ட‌ உரிமையா சண்டை போட்டுட்டு போறா! அந்த காவ்யாவோட தம்பி வேற விபியை வந்து தனியா மீட் பண்ணி பேசிட்டு போறான்! இதுக்கு நடுவுல காவ்யா கேஸ் வேற இழுத்துட்டு இருக்கு!” ஜனனி படபடக்க,

“இத்தனை பிரச்சனைக்கு நடுவுல எப்படி கல்யாணம் பேச?” என்ற வளர்மதியின் கேள்வியை புறந்தள்ளிவிட்டு, தன் தந்தையிடம் திரும்பினாள்.

“டேட், ஒருமுறை விபிய இழந்துட்டு நான் தவிச்சது போதும். இப்பவும் நான் அவனை இழக்க விரும்புல. எனக்கு அவன் வேணும்‌ டேட், இல்ல, நான்... நான் செத்து போயிடுவேன்” என்று கலங்கி நின்ற மகளை அவரின் பார்வை ஆற்றாமையாகப் பார்த்தது.

“ரொம்ப நல்லது பாப்பா, உனக்கு பெத்து வளர்த்த எங்களை விட, உன்ன கைகழுவி விட்டு போன அவன் பெருசா போயிட்டான் இல்ல!” அவர் குரலில் அதிகபட்ச விரக்தி தொனித்தது.

“ப்ளீஸ் டேட்... விபிய விட்டு என்னால வாழ முடியாது” ஜனனி கண்கள் கலங்க மொழிய,

“பெத்த கடன்னு ஒன்னு இருக்கு இல்ல, அதுக்காக போறேன். உனக்காக அந்த கேடுகெட்டவன் கிட்ட போய் நின்னு தொலைக்கிறேன்” என்று வெறுப்பாகவே சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

வளர்மதியின் மனமும் வெறுக்க தான் செய்தது. “உன் வீண் பிடிவாதத்தால எங்களை ஏன் தான் இப்படி படுத்தி எடுக்கிறீயோ போ” என்று வருந்தி சொன்னாலும் மகளுக்கு உணவு தர மறக்கவில்லை அவர்.

தேம்பலுடனே அம்மா கையால் உணவை ஊட்டிக் கொண்டவளின் விரல்கள் விபீஸ்வருக்கு அழைப்பு விடுத்தபடியே இருந்தது.

மறுபுறம் அவளின் அழைப்பை ஏற்க மனமின்றி தவிர்த்தபடி இருந்தான் விபி. எப்போதும் வெகுளித்தனமாக பழகும் ஜனனியை கொலை செய்யும் அளவு துணிவு கொண்டவளாக இவனால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

தெளிவற்ற இந்த மனநிலை அவனை ஒரு முடிவிற்கு வர முடியாமல் அலைகழித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் விபீஸ்வரின் கால் கட்டு பிரிக்கப்பட்டது. காலின் எலும்பு முறிவு குணமாகி இருப்பதாக மருத்துவர் சொன்னார்.

“அடிப்பட்ட காலை நீங்க ரொம்ப ஸ்டெயின் பண்ணி இருக்கீங்க. அதானால தான் காயத்தோட பாதிப்பு அதிகமாகியிருக்கு” மருத்துவர் மேலும் சொல்ல,

“என்னால நார்மலா நடக்க முடியும் தானே டாக்டர்?” விபீஸ்வர் தயக்கமாக கேட்டான்.

“இப்போதைக்கு ஸ்டிக் சப்போட்டோட நடக்க பழகுங்க விபி, தொடர்ந்து பிஸியோதெரபி எடுத்தா சீக்கிரம் முன்னமாதிரி நடக்கலாம்” என்று நம்பிக்கை கூறினார்.

மருத்துவரின் அறிவுரைப்படி, ஒரு பக்க ஊன்றுகோலை ஊன்றி, மெதுவாக எழுந்து நடக்க தொடங்கினான் விபீஸ்வர். வலியைப் பொறுத்தபடி நடை பழகினான். வெகு நாட்களுக்கு பிறகு நடப்பது அவன் மனதின் தெம்பை கூட்ட தான் செய்தது.

அதேநேரம் மாணிக்கசுந்தரம் அவனை காண வந்திருப்பதாக வேலையாள் வந்து பணிவாக சொல்ல, விபீஸ்வர் யோசனையோடு அவரை சந்திக்க வந்தான்.

அங்கே அவர் குடும்பத்துடன் வருகை தந்திருக்க, லலிதாம்பிகை நிறைந்த புன்னகையோடு அவர்களை உபசரித்துக் கொண்டிருந்தார்.

விபி ஊன்றுகோலை ஊன்றியபடி நடந்து வந்து, வரவேற்கும் முகமாக சிறு புன்னகையை தந்துவிட்டு அவர்கள் எதிரில்‌ அமர்ந்தான்.

“சொல்லுங்க அங்கிள், ஏதாவது முக்கியமான விசயமா?” அவன் நேராக மாணிக்கசுந்தரத்திடம் கேட்க, அவர் சங்கடமாக அமர்ந்திருந்தார்.

வியாபாரமுறை நட்புக்கள் என்பது வேறு. ஆனால் தனிப்பட்ட முறையில் ஏனோ விபீஸ்வர் மீது அவருக்கு நல்லெண்ணம் ஏற்பட்டதில்லை. இப்போது அவன் முன்பே மகளுக்காக வந்து நிற்பது அவமானமாக கூட தோன்றியது.

“விபி, உனக்கும் நம்ம ஜனனிக்கும் கல்யாண விசயம் பேச வந்திருக்காங்க” லலிதாம்பிகை சொல்ல, அவன் பார்வை சட்டென ஜனனி இடம் திரும்பியது.

“என்ன இதெல்லாம் ஜெனி? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு! இப்ப காவ்யா என்னோட இல்லைன்னாலும் அவ மட்டும் தான் என்னோட மனைவி. இந்த மறுகல்யாணம் பேச்சுக்கு இங்க இடமில்ல. உன் மனசுல இன்னும் அப்படியொரு எண்ணம்‌ இருந்தா அழிச்சிடு ஜெனி” விபி உறுதியாகச் சொல்ல, ஜனனி மறுத்து சொல்லும் முன்னர் மாணிக்கசுந்தரம் எழுந்து விட்டார்.

“பெருசா ஏகபத்தினி விரதன் மாதிரி பேசுறீங்க! நீங்க முன்ன அடிச்ச கூத்தெல்லாம் உங்களுக்கு மறந்து‌ போச்சா?” அவர் கசப்பாகவே கேட்டார்.

“இல்லைன்னு சொல்லல அங்கிள், காவ்யா என் வாழ்க்கைல வந்த பிறகு அவளை தாண்டி நான் போகல, இனி போகவும் மாட்டேன்” விபீஸ்வர் பதிலும் நிதானமாக உறுதியாக வந்தது.

“செய்ய கூடாததை எல்லாம் செஞ்சுட்டு திருந்திட்டேன்னு சொல்றது தான் இப்ப இருக்க டிரண்டிங் இல்ல” என்றவர் பேச்சில் கேலி தொனிக்க கசப்பாக புன்னகைத்தவர், “வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பின என் பொண்ணை குத்துயிரா இங்க கூட்டிட்டு வந்தேன் தெரியுமா? உங்க கல்யாணம் முடிஞ்ச சேதி தெரிஞ்சதும் உயிரை மாய்ச்சிக்க பாத்திருக்கா, அங்க இருக்கிறவங்க காப்பாத்தி எனக்கு தகவல் சொன்னாங்க. இவளை அங்க போய் பார்க்கிறவரைக்கும் நாங்க பட்ட வேதனை...” அந்த நாளை எண்ணி இப்போதும் அவரின் உள்ளம் பதறியது.

விபீஸ்வருக்கு இந்த செய்தி அதிர்ச்சியைத் தந்தது. “சூசைட் அட்டர்ன் செஞ்சியா ஜெனி, ஏன்?” அவன் அதிர்ச்சி விலகாமல் கேட்க,

“மத்தவங்க மாதிரி நான் டைம்பாஸ்க்கு உன்னோட பழகல. நான் உன்ன உயிரா லவ் பண்றேன் விபி, நீ இல்லாத எதுவும் எனக்கு தேவையில்ல” ஜனனி வார்த்தைகளில் வலியை ஏந்தி உதிர்த்தாள்.

விபீஸ்வர் கண்களை அழுத்த மூடி திறந்தான். “அதுக்கு இப்படியொரு முட்டாள்தனமான வேலைய செஞ்சு வைப்பியா? உயிரை விடுறது அவ்வளவு சுலபமா போச்சா? அறிவில்ல உனக்கு? ச்சே, நான் சொன்னேனா உன்ன லவ் பண்றேன் மேரேஜ் பண்ணிப்பேன்னு! நான் இப்படித்தான்னு தெரிஞ்சு தான பழகின ஷிட்!” அவன் வார்த்தைகளை வேகமாக வீசினான்.

“உன்மேல நான் வச்சிருக்க காதலை விட என் உயிர் எனக்கு பெருசா தெரியல. ஆனா, நீ என்னை எவ்வளவு சுலபமா மறந்துட்ட விபி? உனக்கு நான் பிடிக்காம போயிட்டேனா? எப்படி நீ வேறொருத்திய கல்யாணம் பண்ணிக்கலாம்?” இத்தனை நாள் அவள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்பட, கண்களில் ஏந்திய கண்ணீரோடு உதடுகள் பிதுங்க அவன் முன் தன் காதலுக்கு நியாயம் கேட்டு நின்றாள்.

விபீஸ்வர் பதிலற்று அவளை திகைத்துப் பார்த்திருந்தான். அங்கே சங்கடமான அமைதி நிலவியது.

“பொண்ணை வளர்க்க தெரியாம வளர்த்துட்டு வேற வழி தெரியாம இங்க வந்து நிக்கிறோம். நீங்க இல்லனா செத்து போவேனு சொல்றவளை என்ன செய்ய, நீங்களே சொல்லுங்க விபீஸ்வர்” வளர்மதி தளர்ந்த குரலில் கேட்க, அவன் பார்வை தாழ்ந்தது.

“சம்மதம் சொல்லு விபி, போனவ கூட மட்டும் நீ என்ன நிறைவான வாழ்க்கையா வாழ்ந்த?” லலிதாவும் தன் கருத்தை வலியுறுத்தினார்.

அவன் இதயத்தில் சுருக்கென வலி தெறிக்க, அவனின் மன அழுத்தம் மேலும் கூடியது.

‘நாம தெரிஞ்சோ தெரியாமையோ செய்ற ஒவ்வொரு தவறுக்கும் தப்புக்கும் இங்க தண்டனை இருக்குங்க. காலம் தாழ்ந்தாலும் யாராலும் அதிலிருந்து தப்பிக்க முடியறதில்ல. வாழ்க்கை இங்க யாருக்கும் பாவம் பார்க்கிறதில்ல!’ முன்பு காவ்யா சொல்லியிருக்க,

‘இப்படி தத்துவம் பேசி கொல்லாதடி’ விபீஸ்வர் அலுத்துக் கொண்டான்.

‘நிதர்சனம் உப்புசப்பில்லாம தான் சர் தெரியும், ஆனா அதோட தாக்கம் ரொம்ப வலிமையா நம்மை பாதிக்கும்’ கவி விடாமல் பதில் தர, மனைவியின் ‘சார்’ என்ற அழைப்பில் இவன் பார்வை மாறியிருந்தது.

இப்போது விபீஸ்வர் நிமிர்ந்து ஜனனியை பார்த்தான். தான் விளையாட்டாய் செய்த தவறுகளின் மிச்சங்கள் அனைத்தும் தண்டனையாய் ஜனனி உருவில் தன் முன் நிற்பது போன்ற பிரமை தோன்றியது அவனுக்கு.

“இந்த கல்யாணம் நம்மோட எந்த பிரச்சனையும் தீர்க்காது ஜெனி” அவன் வெறுமையாக சொல்ல,

“ஏதாவது காரணம் சொல்லி இப்பவும் தப்பிக்க பார்க்காத விபி என்னால தாங்க முடியாது” அவள் தேம்பலானாள்.

“என் பொண்ணோட வாழ்க்கை எங்களுக்கு முக்கியம் விபீஸ்வர்” அவர்களிடையே மாணிக்கசுந்தரத்தின் குரல் அழுத்தமாக ஒலிக்க,

“பொண்ணோட பாவம் நமக்கு வேணாம் விபி, சம்மதம் சொல்லுடா” லலிதாம்பிகை மகனிடம் கெஞ்சலானார்.

‘வாழ்க்கை இங்க யாருக்கும் பாவம் பார்க்கிறதில்ல விபி சார்!’ காவ்யாவின் குரல் மறுபடி அவன் மனதில் ஓங்கி ஒலிக்க, சட்டென எழுந்து கொண்டவன், “சம்மதிக்கிறேன் நடத்துங்க!” உணர்ச்சி துடைத்த குரலில் சொல்லிவிட்டு அகன்று விட்டான்.

* * *
(நன்றி ஃபிரண்ட்ஸ்... அடுத்த பதிவு நாளை மறுநாள் வரும்...)
 
CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
202
Reaction score
827
Location
Ullagaram
விபீ, இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்னா.... வேறெதோ முக்கியமான காரணம் இருக்குமோ..? இவ இத்தனை தீவிரமா இருக்கிறதுலேயே அந்த ஆக்சிடன்ட்டுக்க காரணகர்த்தா ஜெனியாத்தான் இருக்கணும்.
அன்னைக்கு அந்த காருல டிரைவர்
இடத்துல இருந்ததும் ஜெனியாத்தான் இருக்கணும்.
அது சரி, இவ எந்த தைரியத்துல திரும்பவும் கல்யாணம் பண்ணச் சொல்லி போர்ஸ் பண்றா. ஏற்கனவே, காவ்யா ஆவி சுத்தறதா
உளறிட்டு இப்ப மட்டும் கல்யாணத்துக்கு எப்படி சம்மதிச்சா..? ஒருவேளை, பயம் போயிடுச்சோ..?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
saideepalakshmi

மண்டலாதிபதி
Joined
Nov 11, 2023
Messages
147
Reaction score
234
Location
Salem
என்ன சட்டுனு கல்யாணத்துக்கு ஒ.கே.சொல்லீட்டான்.சீக்கிரமா அந்த கார் யாரோடது என கண்டுபிடிங்க.
சோகமான பதிவு.
 
Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
16,032
Reaction score
35,717
Location
Vellore
என்ன சட்டுனு கல்யாணத்துக்கு ஒ.கே.சொல்லீட்டான்.சீக்கிரமா அந்த கார் யாரோடது என கண்டுபிடிங்க.
சோகமான பதிவு.
நன்றி டியர் 💖 💖 💖
 
Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
16,032
Reaction score
35,717
Location
Vellore
விபீ, இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்னா.... வேறெதோ முக்கியமான காரணம் இருக்குமோ..? இவ இத்தனை தீவிரமா இருக்கிறதுலேயே அந்த ஆக்சிடன்ட்டுக்க காரணகர்த்தா ஜெனியாத்தான் இருக்கணும்.
அன்னைக்கு அந்த காருல டிரைவர்
இடத்துல இருந்ததும் ஜெனியாத்தான் இருக்கணும்.
அது சரி, இவ எந்த தைரியத்துல திரும்பவும் கல்யாணம் பண்ணச் சொல்லி போர்ஸ் பண்றா. ஏற்கனவே, காவ்யா ஆவி சுத்தறதா
உளறிட்டு இப்ப மட்டும் கல்யாணத்துக்கு எப்படி சம்மதிச்சா..? ஒருவேளை, பயம் போயிடுச்சோ..?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
நன்றி டியர் 😍 😍 😍
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top