• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உள்ளம் விழித்தது மெல்ல 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
1

(அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ‘உள்ளம் விழித்தது மெல்ல’ என் இரண்டாவது நாவல். என் முதல் நாவல் ‘என் மனது தாமரைப் பூ’ விற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை நம்பி இந்தக் கதையை ஆரம்பிக்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கதையில் மற்றும் எழுத்தில் தென்படும் குற்றம் குறைகளை தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள். அது என்னை திருத்திக் கொள்ள உதவும். நன்றி டியர்ஸ்)

இரண்டாயிரத்துப் பத்தாம் வருடம்.
திருநெல்வேலியில் அந்த அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஓரமாக இருந்த பூவரச மரங்களில் பெரிதாக இருந்த ஒன்றில் ஏறிக் கொண்டு இருந்தாள் காந்திமதி. அவளை ஏறவிட்டு மரத்தின் கீழே நின்று அவள் ஏறுவதை அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருந்தனர் அவள் தோழிகள் கோமதி , மற்றும் செல்வம்;. மூவரும் இந்த வருடம்தான் ஆறாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.
அதற்குள் அவர்களுக்குச் செல்லப் பெயர்கள் வேறு வைத்தாயிற்று. காந்திமதி சுருக்கமாக மதி. கோமதியை கோமா என்பார்கள்.செல்வம் பெயரைக் கேட்டால் எல்லோரும் அது ஆண் பெயர் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அது பொதுப்படையான பெயர் என்று அவள் தந்தை அவளுக்கு வைத்தப் பெயரை இவர்கள் ஜெல்லு என மாற்றி இருந்தனர்.
இப்போது காந்திமதிக்கு மரம் ஏற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கீழே நின்றவர்கள் அதில் தேர்ச்சி பெற்று விட்டபடியினால் காந்திமதிக்கு கற்றுத் தந்து கொண்டு இருந்தார்கள். மதிய உணவு இடைவேளையின் போது சோற்றை அவசரமாக சாப்பிட்டு விட்டு அவர்களின் ஆப்பரேஷனை ஆரம்பித்து இருந்தார்கள்.

“அந்தக் கிளையை பிடி மதி”
“அந்த இடத்துல கால வைக்காத புள்ள. வழுக்கிறப் போவுது.”
“ஆ… கையை விட்றாத”
“காலை நிதானமா வச்சிப் போ”
நானும் மேல வரட்டா” என்ற கூக்குரல்களுக்கிடையே வெற்றிகரமாக மரத்தில் ஏறிவிட்டாள் காந்திமதி.
மரத்தில் ஏறியவள் வாகான ஒரு கிளையில் தன் புத்திசாலித்தனத்தை எல்லாம் திரட்டி உட்கார்ந்தும் விட்டாள். கீழே நின்றவர்களுக்கு அவர்களே மரத்தில் ஏறிவிட்ட பெருமிதம் உண்டானது.
“மேல இருந்து பார்த்தா எப்டி புள்ள இருக்கு?” என்று ஆர்வமாகக் கேட்டாள் கோமதி. மரத்தில் ஏறி அவள் பார்த்த காட்சிகளை தன் தோழியும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதில் தெளிவாகத் தெரிந்தது.
“ம்…” என்று தன் பிடியை இறுக்கிக் கொண்டு தன் மான் விழிகளை மட்டும் முடிந்த மட்டும் சுழற்றினாள் காந்திமதி.
பின் அவள் குரலில் துள்ளலுடன் தான் பார்க்கும் காட்சிகளை கீழே நின்றவர்களுக்கு விவரிக்கலானாள்.
“ஹை நம்ம ஸ்கூல் காம்பவுண்ட் குள்ளமா தெரியுது புள்ள. பெரிய கிளாஸ் அண்ணன்மார்லாம் கும்பலா நடந்து வர்றாங்க. எல்லாரும் குட்டியா தெரியறாங்கடி. ஆஷா டீச்சர் ஸ்டாஃப் ரூம்ல இருந்து வர்றாங்கடி அய்யய்யோ திட்டித் தொலைக்கப் போறாங்க. போச்சு போச்சு. ஏய் என்னை இறக்கி விடுங்கடி “என்று காந்திமதி பதறிக் கொண்டு இருக்கும் போதே அள குறிப்பிட்ட ஆஷா டீச்சர் அருக்கில் வந்து விட கீழே நின்ற தோழிகள் மாயமாய் மறைந்தனர்.
“அங்கயே இருடி. சத்தம் போட்றாதே. டீச்சர் போனதும் வந்து ஹெல்ப் பண்றோம்” என்று அவசரமாகக் கூறி விட்டு தெறித்தார்கள்.
சிறுமிகள் ஏதோ கோல்மால் செய்வது மட்டும் அறிந்த அந்த ஆசிரியைக்கு அது என்ன என்று சட்டெனப் புரியாததாலும் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டிய காரணத்தாலும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு நடையைக் கட்டினாள் அந்த இளம் ஆசிரியை. அவள் அடுத்து எட்டாவது வகுப்பு ஆ பிரிவிற்கு வரலாறு பாடம் எடுக்க வேண்டும். இன்னும் ஐந்து நிமிடங்களில் மதிய உணவு இடைவேளை முடிந்து வகுப்புகளை ஆரம்பிக்க மணி அடித்து விடுவார்கள்.
அவள் கஷ்டம் அவளுக்கு. மதிய உணவு சாப்பிட்டப் பின் கொஞ்சம் கண்ணைக் கட்டும். அந்த நேரத்தில் வரலாறு பாடத்தை எடுக்கச் சொன்னால் எப்படி? என்று அவர் ஸ்டாஃப் மீட்டிங்கில் சொல்லிப் பார்த்தும் ஒரு புண்ணியமும் இல்லை. தலைமை ஆசிரியர் வேறு சில முக்கியப் பிரச்சனைகளில் முழ்கி இருந்ததால் இது அவருக்கு கொசு மாதிரி தெரிந்து விட்டது போலும் என்று தன் விதியை நொந்தவாறு தன் கடமையை ஆற்றச் சென்று கொண்டு இருந்தாள் அவள்.
ஆசிரியரின் முழுப் பெயர் ஆஷா கண்மணி. வயது இருபத்து ஐந்து. இரண்டாயித்து பத்தாம் வருடத்தில் அவளுக்கு மணமாகி இருக்கவில்லை. முக்கியமாக அவளது பதினேழு வயதுத் தங்கை ப்ரியா இதே பள்ளியில்தான் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கிறாள்.
நல்ல அழகும் நிறமும் கொண்ட இருவரும் பெரிய இடத்துப் பெண்கள் என்பதால் வழி விட்டு நின்ற இள வட்டங்கள் அதில் பெரியவளுக்கு ஆசிரியை உத்தியோகமும் கிடைத்து விட்டபடியினால் இவர்களைக் கண்டால் காத தூரம் ஓடுகிறார்கள்.
இப்போது அவளைக் கண்டு ஓட்டம் பிடித்த ஆறாம் வகுப்பு மாணவியரை மனதினுள் செல்லமாகத் திட்டியவாறு அடுத்த அடியை எடுத்து வைத்தாள் ஆஷா கண்மணி.
டீச்சர் அந்த பூவரச மரத்தைக் கடக்கும் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு பொறுமையாக இருந்தவளுக்கு அவர் அதைக் கடந்ததும் மைதானத்தில் நிகழ்ந்த பரபரப்பு இன்னும் சற்று நேரத்தில் மதிய வகுப்புகள் தொடங்க மணி அடிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்த்த வெலவெலத்துப் போனாள்.
அப்படி என்றால் அவள் தோழியரும் வகுப்பிற்குச் சென்று விடுவார்களே? யார் அவளை இறக்குவது? மதிய வகுப்பில் முதலில் வருகை பதிவு செய்வார்கள். அதில் மாட்டிக் கொண்டால் அவளால் எப்படி தப்பிக்க முடியும்? கீழே குதித்தாலும் கை கால் உடையாவிட்டாலும் சிராய்ப்பாவது ஏற்படும். மதியம் முதல் பீரியட் ஆங்கிலம்.
சும்மாவே அவள் அதில் தமிழரசி டீச்சரிடம் மாட்டி விழி பிதுங்கிக் கொண்டு இருக்கிறாள். “இங்கிலீசு டீச்சர் பேரைப் பாரு தமிழரசி” என்று அவள் நையாண்டி செய்து கொண்டு இருந்ததை அந்த டீச்சர் காதார கேட்டு இவளை கண்ணாரக் கண்டு முறைத்தவர் தனது வகுப்புகளில் இவளை ஆங்கிலக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்து , இவள் திருதிருப்பதைப் பார்த்து மற்ற மாணவச் செல்வங்களை சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தார்.
இத்தனை சிக்கல்களையும் அவள் எப்படி சமாளிப்பாள்? காந்திமதிக்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. கை கால்கள் நடுங்கத் தொடங்கின. வியர்வை குப்பென பெருகி அவள் போட்டிருந்த வெள்ளைச் சட்டையை நனைத்து உள்ளே போட்டிருந்த மஞ்சள் நிற பெட்டிக்கோட்டை கொஞ்சமாக வெளியே காட்டியது.
‘மரத்தடியில வச்சி சாப்பிட்டதோட நிக்காம அந்த மரத்துல ஏற ட்ரை பண்ணதுக்கு கடவுள் பயங்கரமா தண்டனை தர்றாரே! தெய்வமே என்னை மன்னிச்சிரு. இனி மரத்துல ஏறவே மாட்டேன் . என்னை எப்டியவாது இத்தனைப்; பிரச்சனையிலயும் இருந்து காப்பாத்திட்டினா அம்மா சொன்ன மாதிரி தினமும் சாயங்காலம் நானே விளக்கேத்தறேன்’ என்று வேண்டிக் கொண்டாள்.
அவள் அம்மா ராஜேஸ்வரி ‘ பொம்பளப் புள்ளைங்க சாயங்காலம் மூஞ்சி கை கால் கழுவி பொட்டு வச்சி விளக்கைப் பொருத்தனும்’ என்று அடிக்கடி இவளுக்கு போதித்தாலும் இவள் அதைக் கண்டு கொள்ளாமல் தெருவில் விளையாடப் போய் விடுவாள்.

ஆஷா டீச்சர் எட்டாம் வகுப்பிற்குள் நுழையப் போகும் போது மணி அடித்தது! காந்திமதி உறைந்து நின்றாள்.
அவள் உறைந்து நின்றது ஒரு நொடிப் பொழுதுதான்.அதன்பின் என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற மரத்தில் இருந்து குதிக்க ஆயத்தமானாள்.
“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறiவா போற்றி
ஹரஹர மஹாதேவா”
என்று இறைவனை வணங்கியவாறு மரத்தில் இருந்து குதிக்க ஆரம்பித்தாள். எந்த முக்கியமான செயலை செய்யும் போதும் இந்த பாடலைப் பாட அவள் அம்மா சொல்லித் தந்திருந்தார்.
ஆனால் அவளால் குதிக்க முடியவில்லை . அவள் கால்களை பயத்தில் அசைக்கக் கூட முடியவில்லை. அவள் கால் விரல்கள் கூட அவள் பேச்சை மதிக்கவில்லை. குதித்தால் கை கால் உடைந்துவிடும் என்ற பயத்தில் இவள் குதிக்கச் சொன்னதைக் கேட்காமல் இவள் கால்கள் சண்டித்தனம் செய்தன.
கால்களை பெரும் பலத்துடன் இழுத்து குதிக்க முயன்ற பொழுது பயத்தில் ஊறிய வியர்வையால் கால் வழுக்கி விழப் போனாள். இப்போது குதிக்கப் பயந்து ஒரு கிளையை பற்றிக் கொண்டாள்.
“நீ குதிப்பியா? குதிக்க மாட்டியா?” என்ற நக்கலான குரல் வந்த திசை தெரியாமல் விழித்தாள்.
“கீழப் பாரு குட்டி” என்றவாறு சிரித்தவனைப் பார்த்து நொந்தே போனாள். அது ஆஷா டீச்சரின் தங்கை வகுப்பில் படிக்கும் சார்லஸ்.
போச்சு. இந்த ஒல்லிப்பிச்சான் இதை அப்படியே ப்ரியா அக்காவிடம் போய் சொல்லி விடுவான். அவள் அதை தன் அக்காவிடம் போய் சொல்லி விடுவாள். காந்திமதியின் வகுப்பு ஆசிரியையான ஆஷா டீச்சர் இந்த வருடம் அவளை ஃபெயில் ஆக்கி விடுவார்.
இவளுடன் படிப்பவர்கள் எல்லாம் இவளை விட பெரிய கிளாசுக்குப் போய் விடுவார்கள். அப்புறம் அவர்களை எல்லாம் இவள் அக்கா, அண்ணா என்று அழைக்க வேண்டும். எத்தனை எத்தனை துன்பங்கள்தான் அவளுக்காகத் தொடர்ச்சியாக் காத்திருக்கின்றன?
இதற்குப் பேசாமல் செத்தி…..சீ இல்லை. அப்படி நினைக்கக் கூடாது. பேசாமல் வேறு பள்ளிக் கூடத்திற்குப் போய் விடலாம். ஆனால் எந்தப் பள்ளிக் கூடத்திற்குப் போவது? அங்கே அவளை ஏழாவதில் சேர்ப்பார்களா? இல்லை அங்கேயும் ஆறாவதில் போட்டு விடுவார்களோ?
ஏன்தான் இத்தனை குழப்பங்களும் ஒன்றாக வந்து தொலைகிறதோ தெரியவில்லை. அம்மா அடிக்கடி “மதி உனக்கு மதி இல்லை” என்று கூறி சிரிப்பாள். அவர்களை யார் மதி என்ற பெயர் வைக்கச் சொன்னது? ரதி என்று வைக்க வேண்டியதுதானே?
கீழே நிற்கிறதே ஒரு நெட்டைக் கொக்கு, அது அவளை ‘மதி ரதி அதோகதி ‘என்று கிண்டலடிக்கும். கேட்க நாராசமாக இருந்தாலும் அவன் ரதி என்று சொன்னது கொஞ்சம் நன்றாகத்தான் இருந்தது. ரதி என்றால் அழகி என்பது வரை அவளுக்குத் தெரியும்.
செய்வது அறியாமல் தன்னிச்சையாக அவள் கைகளைப் பிசைந்தாள். அதில் அவள் பிடித்தரம் அற்றுப் போய் கீழே விழுந்தாள்!
அவள் தரையில் விழுவதற்குள் அந்த நெட்டைக் கொக்கின் நீள ஒல்லிக் கைகள் அவளைப் பற்றி நிறுத்தின.
தடுமாறியவள் அவனைப் பற்றிக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு பின் அவனை விட்டு தள்ளி நின்றாள். ஒரு நொடிதான். பின் “அய்யய்யோ” என்ற அலறிக் கொண்டு தன் வகுப்பறையைப் பார்த்து ஓடலானாள்.
வகுப்பில் ஆங்கில ஆசிரியர் தமிழரசி அரைநாள் விடுப்பு என்ற கேட்டதும். சொத் என்று ஆனது. ஆறாம் வகுப்பு அ பிரிவில் இருந்து வந்த ஆசிரியரின் வலதுகை மாணவி ஒருத்தி இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து கணிதம் எடுக்கப்படப் போவதாக அறிவித்துவிட்டுப் போனாள்.
காந்திமதி தன் கணிதப் புத்தகம் நோட்டு ஜியாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொண்டிருந்த போது கோமதியும் செல்வமும் அவளை நெருக்கினர். “ஸாரி புள்ள . டீச்சர் உன்னை விட்டு நகரவும் அந்த ஒல்லிப்பாச்சா நீ நின்ன மரத்துகிட்ட வந்துச்சு. அது போகட்டும்னு பார்த்தோம். அதுக்குள்ள மணி அடிச்சிருச்சு. அப்புறம் என்ன புள்ள ஆச்சு?” என்று ஆர்வமாகக் கேட்டதும், தோழிகள் செய்த நம்பிக்கை துரோகம் மறந்து போக கதையை சொல்லலானாள் காந்திமதி.

“ஆக உன்னை மரதது மேல பார்ததுட்டு வம்ப வளக்கறதுக்குன்னே வந்திருக்கு அந்த ஒல்லிப்பாச்சா! “ என்று பொருமினார்கள்.
“காந்திமதி கோமதி செல்வம் அமைதி அமைதி” என்ற டீச்சரின் கணீர்க்கரலில் அவர்கள் அமைதியைக் கைக்கொண்டு பாடத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.
பாடத்தில் கண்ணும் கருத்துமாக இருந்த மூவரும் அந்த சம்பவத்தை அடியோடு தற்சமயத்திற்கு மறந்து போனார்கள்.
ஆனால்…
பனிரெண்டாம் வகுப்பில் காமர்ஸ் பிரிவில் ஆண்கள் பகுதியில் நான்காவது பெஞ்சில் நடுவில் அமர்ந்திருந்த சார்லஸ் அந்தச் சிறுமியின் பதட்டத்தையும் பயத்தையும் மரத்தில் ஏறும் போது அவள் முகத்தில் தெரிந்த குறுகுறுப்பையும் நினைத்து மென்னகை புரிந்து கொண்டு இருந்தான். அந்த சம்பவத்தையும் அந்தச் சிறுமியையும் நினைக்கும் போது சின்ன நாய்க்குட்டி ஒன்று அவன் மனக் கண்ணில் தோன்றியது.
மாலை நான்கு மணி பதினைந்து நிமிடங்கள் ஆன போது தண்டவாளத் துணடில் இரும்புக் கம்பியால் கணகண என அடிக்கவும் பள்ளிக் கூடம் கல் எறிந்த தேனீக் கூடாக கலைந்தது. மாணவ மணிகள் அப்படியும் இப்படியுமாக பறந்தார்கள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் கூட்டம் சீராகியது. சாரி சாரியாக மாணவ மாணவியர் தங்கள் இல்லம் நோக்கி பீடு நடை போட்டனர்.
பள்ளி இருந்த வீதி சற்று அகலமாக இருந்தது. மாணவர்களும் மாணவிகளும் தனித்தனி சிறு கும்பலாகப் பிரிந்து சென்று கொண்டு இருக்க மாணவியர் தங்களுக்குள் கலகலத்தபடி இருந்தனர். பலர் சைக்கிளில் செல்ல நடந்து சென்ற சிலருள் காந்திமதி அன் கோவும் உண்டு.
“நாம எப்படி சைக்கிள்ல வர்றது?” என்று ஏக்கமாக கேட்டாள் கோமதி.
கோமதி வீட்டில் குழந்தைகள் இவளும் இவள் சின்னத் தங்கையும்தான். தங்கை பாரதியை இப்போதுதான் முதல் வகுப்பில் சேர்த்திருக்கிறார்கள் இவள் பெற்றோர்;. ஆக இவள் பதினொன்று படிக்கும் போதுதான் இவள் தங்கை இந்தப் பள்ளியில் அடி எடுத்து வைப்பாள். அதுவரை அவள் தனிக்காட்டு ராணி. தங்கையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு கிடையாது.
கோமதியின் தாய் லட்சுமி இல்லத்தரசி. அப்பா சீனிவாசன் மளிகைக் கடை வைததிருக்கிறார்.
“சைக்கிளை கையில குடுத்தா நான் ஊரையே வித்திருவேனாம்! எங்க பாட்டி சொல்லுதுடி! அதுக்கு நான் எத்தனை தடைவ வெத்தலைப் பாக்கு வாங்கிக் குடுத்திருப்பேன்? கொஞ்சமாச்சும் நன்றி இருக்கா பாரு?!” என்று அங்கலாய்த்தாள் செல்வம்.
செல்வம் வீட்டிற்கு ஒரே பெண். தவமிருந்து பெற்ற பெண். அதனால்தான் அவரின் செல்வம் என்று பெயர் வைத்தார் அவளது அப்பா ஜார்ஜ். தமிழில் பற்று கொண்ட அவர் வேறு எந்தப் பெரையும் மகளுக்கு வைக்கக் கூடாது செல்வம் என்ற பெயரைத் தவிர என்று கிட்டத்தட்ட போராட்டமே நடத்தி அவளுக்கு பெயர் வைத்திருந்தார். அவர் மளிகைக் கடையை விட சற்று சிறிய அளவில் பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். செல்வத்திற்கு தாயார் இல்லை. அப்பாவைப் பெற்ற பாட்டி அந்தோணியம்மாள் அவளைப் பராமரித்து வருகிறார். வளர்வதெல்லாம் அவளே வளர்ந்து கொள்கிறாள்.
“எங்க வீட்லயும் அதாண்டி சொல்றாங்க” என்று கூறி பெருமூச்சு விட்டாள் காந்திமதி.
காந்திமதியும் வீட்டிற்கு ஒரே பெண்தான். அண்ணன் ஒருவன் உண்டு. (பொண்ணுதான் ஒன்னு) . இந்த வருடம்தான் கல்லூரியில் பி.ஈ சேர்ந்திருக்கிறான். பெயர் சிவலிங்கம். நெல்லையில் காந்திமதி அம்மனை வேண்டிக் கொண்டு பிறந்தவள் காந்திமதி. அதனால் இந்தப் பெயர். காந்திமதியின் வீடும் கோமதியின் வீடும் அடுத்தடுத்து அமைந்தவை.
மாணவியர் கூட்டம் மாணவர்கள் தவிர தங்களை சைட் அடிக்க வந்த ஏனைய இளைஞர் கூட்டத்தைக் கவனிக்காமல் கடக்க அதைக் கண்டு கொண்டு மிதப்பாக நடந்து தங்கள் காரை அடைந்தாள் ப்ரியா.
சில பல பிரச்சனைகளால் வேறு தனியார் பள்ளிகளில் சீட் கிடைக்காமல் போக வள்ளலான அரசுப்பள்ளியில் வேறு வழியின்றி சேர்ந்தவள் அவள். ஆனால் பணக்காரி அல்லவா? அவளது தந்தை அவளை பள்ளிக்கு கூட்டிச் செல்லவும் அழைத்து வரவும் தினமும் கார் அனுப்புவார்.
ஆஷா கண்மணியும் அவளும் அதில் வருவார்கள். இப்போது தனது கடைசி வகுப்பை சற்று தாமதமாக முடித்துவிட்டு ஸ்டாஃப் ரூம் போய் தனது ஹேன்ட் பேக்கை எடுத்து வரத் தாமதமாகும் தன் அக்காவிற்காக அந்தக் காரில் பாடம் படிப்பதாக புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள்.
தன்னைச்சுற்றி வட்டமிடும் இளவட்டங்களைப் பற்றி அவள் அறிந்தே இருந்தாள். அவர்களை ஒரு கண்ணசைவால் அலட்சியமாகத் தூக்கி எறிவாள்.
அவள் அக்காவிடம் பம்முபவர்கள் அவளிடம் விழிகள் பளிச்சிட முகம் மலர்வதை தன் ஒற்றைப்பார்வையால் வெட்டி விடுவாள். ஆனால் அவள் தங்கள் பார்வையைக் கண்டு கொண்டதையே பெரிதாகக் கருதும் இளவட்டங்கள் பூரித்துப் போவார்கள்.
பருவ வயது ஒரு கண்ணாடிப் பாத்திரம். சின்னக்கீறல் விழுந்தாலும் மதிப்பற்றுப் போகும். பெரிதான கீறல் என்றால் பயனற்றுப் போகும்.
இதை யாரும் அவளுக்குச் சொல்லாததால் அவள் அதை அனுபவித்துத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "உள்ளம் விழித்தது
மெல்ல"-ங்கிற அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரமா லக்ஷ்மி டியர்
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,126
Reaction score
4,628
Location
Coimbatore
:D :p :D
உங்களுடைய "உள்ளம் விழித்தது
மெல்ல"-ங்கிற அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரமா லக்ஷ்மி டியர்
Thank you banuma?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top