• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஊர்மிளையின் உன்னதம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
"நான் உன்னைத் தவறாகப்
புரிந்து கொண்டிருக்கிறேன் என்கிறாயா ஊர்மிளை?"
ராமன் கேட்டதும்தான் தாமதம்...
ஊர்மிளை ஒரு கேலிப் புன்னகையை இதழோரம் தவழ விட்டாள்.
"அனைத்தும் அறிந்தவர் நீர்! உள்ளும் புறமும் ஒவ்வொருவரையும் உணர்ந்தவர் நீர்! ஆனாலும், ஒன்றும் அறியாதவராய் நடிக்கிறீர்..."
"என்னைப் பற்றி, என் வாயாலேயே, தாம் அறிய விழைகிறீர் போலும்..."
"நான் உண்மையைப் பேசுகிறேனா இல்லை பொய்யான புகழ்ச்சியை ஏற்றுக் கொள்கிறேனா என்று என்னை சோதிப்பதாய் தெரிகிறது..."
"அதனால் என்ன?” நானே சொல்கிறேன் ப்ரபு... அனைத்தையும் கேட்டுவிட்டு, தமது தீர்ப்பைச் சொல்லுங்கள்..."
"சொல் ஊர்மிளை... உன் மனதில் இருப்பதை எல்லாம் என்னிடத்தில் கொட்டிவிடு... உனக்கும் அது ஆறுதலாய் அமையும்..."
ராமனின் வார்த்தைகள் ஊர்மிளையை உளம் திறக்கச் செய்தது.
"ப்ரபு... நான் தியாகம் செய்தேன் என்று தாமும் சொல்வதுதான் எனக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது..."
"நீங்கள் மூவரும், இந்த பதினான்கு வருஷமாய் வனத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்!
ஆனால் நான்? மனத்தளவில் கூட கஷ்டப்படத் தயாராக இருக்கவில்லை!"
"என்னைத் தமது சகோதரரது பிரிவு, உண்மையில் மிகவும் பாதித்தது ப்ரபோ..."
"வனவாசம் செய்வதற்கு அவர் முடிவு செய்த போது, அவர் மீது எந்த அளவுக்கு எனக்கு வருத்தம் இருந்ததோ, அந்த அளவுக்குக் கோபமும் இருந்தது...
அதனால்தான், அப்பொழுது, அவர் மனம் காயப்படும்படி பேசினேன்..."
"அந்த நேரம் அவர் மீது தோன்றிய வெறுப்பில்தான், அவர் வனவாசமே செய்து கொள்ளட்டும் என்று ஒதுங்கிக் கொண்டேன்...
ஆனால் அவர் சென்ற பிறகு, என்னை அவரது பிரிவு மிகவும் வாட்டி வதைத்தது..."
"அப்பொழுதுதான், எனது குருநாதர் அஷ்டவக்கிரர் எனக்கு உபதேசித்த மந்திரம் எனக்கு ஞாபகம் வந்தது...
அதைக்கொண்டு, எனது துன்பத்துக்கு ஆறுதல் தேடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்..."
"ஆனால், என் நல்லநேரம்... அப்போது, "நித்ராதேவி" எனக்கு தரிசனம் தந்து, சௌமித்ரர், உமது கைங்கர்யத்துக்காக இரவும் விழித்திருக்க விரும்புவதாகவும், அவர் உறக்கத்தை நான் வாங்கிக் கொள்வதானால், அவரது எண்ணம் நிறைவேறும் என்றும் கூறி, எனது சம்மதத்தைக் கேட்டார்..."
"தேவி என்னை சம்மதம் கேட்டது, எனக்குப் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆயிற்று..."
"எல்லாவற்றையும் மறந்து உறக்கத்தின் பிடியில் ஆட்பட, என்னை நானே வலிந்து தந்தேன்... சொல்லுங்கள்... இதில் எங்கிருந்து "தியாகம்" வருகிறது?
இதை தமக்குச் செய்கின்ற கைங்கர்யமாகவும் நான் எண்ணிச் செய்யவில்லை...
தமது சகோதரருக்குச் செய்கின்ற சகாயமாகவும் நான் உணர்ந்து செய்யவில்லை..."
"மொத்தமும், என் நலத்துக்காகவே, நான் இதை விரும்பி ஏற்றேன்...
அது உங்களுக்கெல்லாம் ஏதோ
ஒரு வகையில் பயன்பட்டதோ என்னவோ, நானறியேன்... ஆனால் ப்ரபு... இந்த உறக்கத்தின் பிண்ணனியில் எனது சுயநலமே புதைந்திருக்கிறது..."
"ஒருவேளை... நித்ராதேவி எனக்கு இந்த வரத்தை வழங்கியிருக்கவில்லை என்றாலும், நான் அன்று
அஷ்டவக்கிரர் உபதேசித்த மந்திரத்தைப் பயன்படுத்தி இருப்பேன்..."
"இப்பொழுது முடிவுக்கு வாருங்கள்... தமது புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு நான் ஏற்றவளா?
தன்னலமே ப்ரதானமான செயலைத் தாம் எப்படி, "த்யாகம்" என்று போற்றலாம்? என்மனம் ஒப்பவில்லையே ப்ரபு..."
வேகவேகமாக பேசிக் கொண்டு வந்தவளின் கண்கள், கழிவிரக்கத்தினால், கண்ணீர் சிந்தின...
ஒரு கணம் மலைத்தான் ராமன்!
"ஜனகனின் வாரிசு அல்லவா? வேறெப்படி இருக்க முடியும்? ஸத்யத்தைத் தவிர வேறொன்று பேசாதே..." என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றி மறைந்தது.
"ஊர்மிளை! உண்மையாகவே, பண்பிலே நீ மிக உயர்ந்து நிற்கிறாய்!
எத்தனை உன்னதமானவள் நீ! இந்த உலகமே உன்னைக் கொண்டாடக் காத்திருக்கும்போது,
"எந்தப் பாராட்டுகளுக்கும் நான் தகுதியானவள் இல்லை.." என்று நீயே வலிய முந்திக் கொண்டு விலகப் பார்க்கிறாய்!.."
"இதுவே, உன்னிடத்தில் வேறோருவர் இருந்திருந்தால் இப்படி நடந்து கொள்வரோ என்பது சந்தேகத்துக்கு உரியதே...
நீ ராஜரிஷி ஜனகரின் வார்ப்படம் என்பதை நிரூபித்திருக்கிறாய்!"

"உன் தரப்பு வாதங்களும் சரியாகவே தோன்றுகிறது.
ஆனாலும், உனது மேம்பட்ட குணநலன்களுக்கு நானே இப்போது தோற்றுப்போய் நிற்கிறேன் ஊர்மிளை...
உனக்கு ஏதேனும் நன்மை செய்ய, எனது மனம் மிகவும் விழைகிறது... என்ன செய்யலாம்? நீயே சொல்லேன்..."
பதிலாக ஊர்மிளை கேட்டது, ராமனை ஒருகணம் ஸ்தம்பிக்க வைத்தது...
*******************************************

"சீதாபதே... தாம் உண்மையிலேயே எனக்கு ஏதேனும் நன்மை செய்ய விழைந்தால், நான் விரும்புகின்ற ஒருவரத்தை எனக்குத் தந்தருள வேண்டும்..."
"சொல் ஊர்மிளை... உன் மனம் விரும்புவதைக் கேள்..."
"பின்னாளில், இந்த உலகம் தமது ராமகாதையைப் பேசும்போது, அதில், எனது பாத்திரத்துக்கு எந்த விதமான முக்கியத்துவமும் இருக்கக்கூடாது..."
"எந்தத் தியாகமும் செய்யாத என்னை இந்த உலகம் புகழுவதை, நான் விரும்பவில்லை ப்ரபோ..."

வியப்பின் எல்லைக்கே சென்றான் ராமன்...
"உன்னதம்! அதிஉன்னதம்! ஊர்மிளை, இப்படி உத்தம குணமே உருவாக, நீ இருப்பது, எனது ஆனந்தத்தை மிகவும் அதிகரிக்கிறது..."
"வேறு எதற்காக நீ கொண்டாடப்படாமல் போனாலும், இந்த உலகம், நமக்குள் இப்பொழுது நடந்த இந்த சம்பாஷனையை அறிந்து கொண்டு, அதற்காக வேனும், உன்னைக் கொண்டாட வேண்டும்! இது என் விருப்பம்!"
"சீதாபதே... என்னை மன்னியுங்கள்... நான் அறிந்த வரையில், இதில் கொண்டாடுவதற்கான விஷயமே எதுவும் இல்லையே...
என்னை இந்த உலகம் தவறாகப் புரிந்து கொண்டு விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்... அவ்வளவுதானே? அதற்கு மேல், இதைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?"
வாயடைந்து நின்றான் ஶ்ரீராமன்!
"சரி... ஊர்மிளை... உன் விருப்பம் போலவே ஆகட்டும்...
நீ இப்பொழுது என்னோடுவா... வெளியே, சுமித்திரைமாதா, "நீ எழுந்து வந்து விடுவாய்" என்ற நம்பிக்கையோடு, வெகுநேரமாய் காத்திருக்கிறார்கள்..
அவர்கள் உன்னைக் கண்டு மகிழட்டும்..."

ராமனைத் தொடர்ந்து வெளியே வந்த ஊர்மிளையைப் பார்த்து, சுமித்திரை கொஞ்சமும் வியப்படையவில்லை.
ஆனால், அகமகிழ்ந்து போனாள்...
ஊர்மிளையை ஆரத்தழுவி, தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியவள், ராமனைப் பார்த்து ஒற்றைவரியில் சொன்னாள்..
"ராமா... இந்தக் காரியம் ஒன்னால முடியாம போயிருந்தா தான், நான் ஆச்சர்யப்பட்டிருப்பேன்.."
"சுமித்திரைமாதே... தமது ஆசையும், ஆசியும் தான் காரியம் செய்தது... என்னால ஆனது ஒன்னுமில்ல..."
"ராமா... ஒனக்கு ஒன்னு தெரியுமா?.. ஒன்னப் பத்துமாசம் வயித்தில சொமக்கலயேன்னு நான் நெறையநாள் ஏங்கி இருக்கேன்... இப்போ அப்படி ஒன்னச் சுமக்காதது, எனக்குத் தீராத கொறயாவே போயுடுத்துப்பா..."
"ஒங்க வயத்தில பொறந்தா தானா மாதே? நா என்னிக்கும் ஒங்களுக்கும் பிள்ள தானே?"
ஆனந்தத்தில் சுமித்திரையின் விழிகளில் நீர் துளிர்த்தது.
அத்தனைப் பெரிய திரளில் இருந்தவர்களில், ராமனோடு வருகின்ற ஊர்மிளையை, முதலில் பார்த்தது லக்ஷ்மணன்தான்!
மனதுக்குள் அவளைப் பார்த்தது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், தான் அவளுக்கு, இத்தனைக் காலமும் துரோகம் செய்து விட்டோமோ என்ற குற்றஉணர்வு, அவளை நேருக்குநேர் பார்ப்பதை, தவிர்க்க வைத்தது.
தொலைவிலிருந்தே லக்ஷ்மணனை அடையாளம் கண்டு கொண்டாள் ஊர்மிளை.
வனம் செல்வதற்கு முன், தான் அவனிடம் நடந்து கொண்ட விதம் நினைவில் வரவும்,
தன்னை அறியாமல், அவள் விழிகளில் நீர்திரண்டது...
"எந்த முகத்தைக் கொண்டு, இப்போது அவரிடம் பேசுவது? அன்று எத்தனை துடிக்கத் துடிக்கப் பேசினேன்! என்னை மன்னிப்பாரா?"
இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஆசையும், அன்பும் இருந்தாலும், இடையே இரும்புத் திரையாய் விழுந்த அவரவர் குற்ற உணர்வு, இருவரையுமே நெருங்க விடாமல் தடுத்தது...
இந்த இடைவெளியை, இராமனும் கவனித்தான்.
"என்னால் ஏற்பட்ட இந்த ப்ரச்சனையை, நானே தீர்த்து வைப்பேன்..."
மனதுள் ஸங்கல்பம் செய்து கொண்டான் ஶ்ரீராமன்!
வாஸ்தவத்தில், எவர் ஒருவருடைய வாழ்க்கையும் இடர் நீங்கி, சுடர் விட்டு ப்ரகாசிக்கவும், இன்னல் ஒழிந்து இன்பம் நிறைந்து மிளிரவும் வேண்டுமென்றால், அது இறைவனின் ஸங்கல்ப மாத்திரத்தாலேயே நிகழும்!

இத்தனை காலத்திற்குப் பிறகு, ஊர்மிளையின் இடர் களைய, இராமன் எண்ணம் கொண்டுவிட்டான்...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
யோசனையில் ஆழ்ந்திருந்த ராமனை, குலகுரு வசிஷ்டரின் குரல், யதார்த்த நிலைக்குக் கொண்டுவந்தது..
"ராமா... இங்கயா இருக்க? ஒன்ன எங்கெல்லாம் தேடிண்டிருக்கேன்.."
சட்டென்று அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான் ராமன்...
"சொல்லுங்கோ குருநாதா... அடியேன் ஏதாது செய்யணுமா?"
"இல்ல ராமா... ஒன்கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்...
நாள மறுநாள் ஒனக்குப் பட்டாபிஷேகம்...
நீயும் சீதையும், நாளைக்கு விடிகாலைல ஸ்நானத்தை எல்லாம் முடிச்சுண்டு, தயாரா இருங்கோ...
நீங்க ரெண்டுபேரும் செய்ய வேண்டிய க்ரியைகள் எல்லாம் நெறய இருக்கு..."
"இந்த முறையாவது, இந்தக் காரியம் தடை இல்லாம நடைபெறணும்..."
கவலைரேகை படர, பேசுகின்ற குருநாதரை ஏறிட்டான் ராமன்...
"ஆனா... குருநாதா... அதுக்குள்ளவா?.. இப்பதானே வனத்திலேந்து திரும்பி இருக்கேன்... பரதனே இன்னும் கொஞ்சநாளைக்கு ராஜாவா இருக்கட்டுமே..."
அவனை தீர்க்கமாக ஒருமுறைப் பார்த்தார் வசிஷ்டர். வேறு எதுவும் சொல்லாமல்,
"ராமா... கொஞ்சம் என் பின்னாடிவா..." என்றார்.
குருவைப் பின் தொடர்ந்தான் ராமன்...
ஆச்சரியமூட்டும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு மாபெரும் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார் வசிஷ்டர்.
மண்டபத்தின் ப்ரம்மாண்டத்துக்கு ஏற்றாற்போல், முகப்பில் இருந்த பெரிய "ஸ்வாகதம்", கண்களைக் கூச வைக்கின்ற ஒளியோடு ப்ரகாசித்தது.
தொவைவிலிருந்து வெறும், "ஸ்வாகதம்" மட்டுமே தெரிந்த கண்களுக்கு, அருகில் வந்ததும், அந்த எழுத்துக்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட "ராம"நாமங்கள் ஒளிந்திருப்பது புலப்பட்டது.
"ராமா... இந்த மாளிகையில் செய்யப்பட்டிருக்கின்ற அலங்காரங்கள் ஒவ்வொன்றையும் கொஞ்சம் நிதானமாக உற்றுப்பார்... அதன் பிறகு, உனது கோரிக்கைக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை நீயே நிர்ணயம்செய்!"
அவ்வளவு நேர்த்தியுடன் அந்த மண்டபம் எதற்காக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான வினாவை எழுப்பாமலேயே, ராமன் குருநாதரின் கட்டளைப்படி, ஒவ்வொரு இடத்தையும் நன்றாக ஆராய்ந்தான்.
எத்தனையோ நாட்களின் உற்சாகத்தோடு கூடியஉழைப்பு, ஒவ்வொரு மூலையிலும் பளிச்சிட்டது.
தொங்குகின்ற தோரணங்கள்எல்லாம் "ராம" நாமத்தோடு, அசைந்தசைந்து ஆடிக் கொண்டிருந்தன.
"ராம, ராம" என்று மின்னுகிற வண்ணம் மணிகளைக் கோர்த்து, தூண்களை வடிவமைத்திருந்தார்கள்.
ஒவ்வொரு "ராம" நாமமும் ஒருமொழியில் இருந்தது!.
அயோத்தியைத் தாண்டி, அடுத்த தேசங்களிலிருந்தும், வேலைப்பாடுகளோடு கூடிய அந்தத் தூண்கள் வந்திறங்கியிருந்ததை, ராமன் புரிந்து கொண்டான்.
சுற்றுச் சுவர்களிலெல்லாம் ராமனைக் குழந்தையாக பார்த்ததிலிருந்து தொடங்கி, அவனின் எல்லா பருவங்களையும் வரிசைப்படுத்தியிருந்தார்கள்.
அவன் அரண்மனையின் பரந்த தரையில், தனது முழங்கால்கள் தேயத் தவழ்ந்தது...
தசரதர், முன்னழகையும், பின்னழகையும் மாறிமாறிக் காண்பதற்கு ஏதுவாக, வந்தும் போயும் அவன் நடையழகைக் காட்டியது...
வசிஷ்டரிடம் குருகுலவாசம் செய்தது... வில்லேந்திய வீரனாய், எழில்மேவ நின்றிருந்தது... விஸ்வாமித்ரரின் பின்னால் லக்ஷ்மண சகிதமாய் வனம்ஏகியது... மிதிலையின் இளவரசி ஜானகியோடு, அயோத்திக்குத் திரும்பி வந்தது...
அயோத்தியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ராமன் அந்தப் பெருந்திரளில் இருந்த ஒவ்வொருவரிடமும், சீதையோடு சென்று, நேரில் ஆசிகளைப் பெற்றது.
"ராமன் நாடாளப் போகிறான்" என்ற செய்தி கேட்டு, அயோத்தியின் ப்ரஜைகள், அவனைத் தோளில் சுமந்து கொண்டு, ஆரவாரம் செய்தது.
அடுத்ததாக, "அரியாசனம் இல்லை, ஆரண்யம் தான்" எனத் தெரிந்து, மரவுரிதரித்து, அயோத்தி நீங்கியது...
கடைசியாக... நேற்றுஅயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்ப வந்து இறங்கியது..
அந்தச் சித்திரம் மட்டும், அப்போதுதான் முடித்ததற்கு சாட்சியாய், ஈரம் கூடக் காயாமல் இருந்தது..
ப்ரமித்தே போனான் ஶ்ரீராமன்!
அடுத்ததாக விழாமேடை... இருபுறமும், முகப்பில் எழில்மங்கையரின் உருவங்கள் நிற்க வைக்கப்பட்டிருந்தன...

அவர்களின் கரங்களில், "ஜெய்ஶ்ரீராம்" என்ற வேலைப்பாடுகளுடன் கூடிய பதாகைகள் பொலிந்தன!
விலையுயுர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த இரண்டு கவின்மிகு அரியாசனங்கள்...
உற்று நோக்கினால், அந்த அலங்காரங்களிலும் பல இடங்களில், "ராம, ராம" என்ற எழுத்துக்களாய், வைர வைடூரியங்கள் மின்னின...
அந்த அரியாசனங்களில், தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மன்னனுக்கும் மகாராணிக்குமான பேரெழில் மிகுந்த இரண்டு க்ரீடங்கள்...
விழாமேடைக்கு அருகே, பல புண்ணிய நதிகளிலிருந்தும் கொண்டு வந்திருந்த நீரை ஏந்திய நூற்றி எட்டுப் பொற்குடங்கள்...
யாகத்தீயை வளர்ப்பதற்காக, அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள்...
பட்டாபிஷேகத்துக்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த த்ரவியங்களின் விதம் விதமான நறுமணம்...
இப்படி தெய்வீக எழிலோடு கூடிய சூழல், ஒரு இன்ப மயக்கத்தைத் தருவதாய் அமைந்திருந்தது...
இதைத் தவிரவும், பார்வையாளர்கள் அமர்வதற்கான பலத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

ஸ்தம்பித்துவிட்டான் ராமன்!
"கு...ரு...நாதா... அடியேன் நேற்றுதானே அயோத்திக்கே வந்தேன்! அதற்குள் எப்படி இத்தனை ஏற்பாடுகளும் ஸாத்யமாயிற்று?"
வசிஷ்டர், அர்த்தபுஷ்டியோடு, ராமனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
"ராமா... நீ என்னிக்குமே, "ஜெயராமன்"பா... உனக்குத் தோல்வி என்பதே கிடையாதே...
வனம் சென்ற நீ, வெற்றி வீரனாத் தான் திரும்புவாய்னு எல்லாருக்கும் உறுதியா தெரியும்... அதோட விளைவுதான்பா இது..."
"இன்னிக்கு நேத்திக்கு இல்ல... இங்க இருக்கற ஒவ்வொருத்தரோட கனவும், ஒன்ன அரியாசனத்தில ஒக்கார வெச்சுப் பாக்கறதுதான்..."
"நீ என்ன, ஒன்னோட பரதன் மட்டும்தான் இதுக்கு ஆசைப்பட்டான்னு நெனக்கறயா?
இந்த பாரதமே, நீ அரியாசனம் ஏறுகிற அழகைப் பாக்கத்தான் காத்துண்டிருந்தது..."
"மத்த விஷயங்கள்ல ஒனக்கு "ஜெயம்" நிரந்தரமா இருக்கலாம்...
ஆனா, இத்தனப் பேரோட அன்புக்கும், நீ தோத்துப் போய் தான் ஆகணும்!
ஒனக்கு வேற வழியே இல்ல... அதனால, ஆகவேண்டிய காரியத்தப்பாரு..."
******************************************

வசிஷ்டர் அறிவுறுத்தியபடியே, ராமனும் சீதையும் ஸ்நானாதிகளை முடித்துவிட்டு, விடிகாலையில் தயாராக இருந்தார்கள்...
வசிஷ்டரைப் பின்தொடர்ந்து, இருவரும் யாகசாலைக்குள் நுழைந்தனர்...
வேதம் ஓதுகின்ற அந்தணர்கள், அங்கே குழுமி இருந்தனர்.. வசிஷ்டரது இசைவின் பேரில், வேதமந்திரங்களை அவர்கள் ஓதத் துவங்கினர்...
ராகத்தோடு, சாமவேத பாராயணமும் தொடர்ந்தது. நண்பகலைத் தாண்டியும், க்ரியைகள் தொடர்ந்த வண்ணமிருந்தன.
பயபக்தியோடு, ராமனும் மந்திரங்களை உச்சாடனம் செய்தான். நிறைய தானங்களை சீதையைக் கொண்டு, ராமன் வேதம் ஓதியவர்களுக்கு த்ருப்தியாக வழங்கினான்.
வயிராற அவர்களுக்கு அன்னமிட்டு, தக்ஷிணை, தாம்பூலங்களும் கொடுத்து மரியாதையும் செய்தான்.
இதற்குள் அந்தி சாய்ந்து விட்டிருந்தது. முதல் நாளைப் போலவே, விடிகாலையிலேயே, அடுத்தநாளும், ராமனும் சீதையும் தயாராக இருந்தார்கள்..
குலதெய்வ ஆராதனைக்குப் பிறகு, வசிஷ்டர், அவர்களை ரத்தினங்களால் இழைக்கப்பட்டிருந்த அரியாசனத்தில் அமரவைத்தார்.
இந்த வைபவத்தை நேரில் கண்டு மகிழ, ஈசன், அயன், தேவ, கந்தர்வ, கின்னரர்கள் அனைவரும் தத்தமது குடும்பத்துடன் வருகை தந்திருந்தனர்.
அத்தனைப் பேருமே, "திவ்ய தம்பதிகள் தத்தமது அரியாசனத்தோடு, விண்ணுலகம் விட்டு, மண்ணுலகம் வந்தனரோ!" என்று வியந்து நின்றனர்.
சுபமுஹூர்த்த நேரம் நெருங்கியது. துந்துபி முழங்கியது... பேரிகை கொட்டியது... ஜெயகோஷம் விண்ணையும் பிளந்தது..
முதன் முதலில் குலகுரு வசிஷ்டர், சுகந்தம் வீசுகின்ற புண்ய தீர்த்தத்தால், தமது திருக்கரங்களால் அபிஷேகம் செய்தார்.
அவரைத் தொடர்ந்து வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், காத்யாயனர், கௌதமர் போன்ற மகரிஷிகளும், ராமனுக்கு அபிஷேகம் செய்தனர்.
அதன் பின்னர், ரித்விக்குகளும், அந்தணர்களும், வேதமந்திரங்களோடு, அபிஷேகம் செய்தனர்.
இப்படியாக, அபிஷேகங்கள் ஒரு முடிவுக்கு வந்ததும், வம்சாவளியாக வந்த, "மனு, திலீபன்" போன்ற அரசர்கள் அணிந்த மகுடத்தை முதலில் ராமனுக்குச் சூட்டினார் வசிஷ்டர்.
அதன்பிறகு, ப்ரத்யேகமாக இந்த வைபவத்திற்கென்றே தயார் செய்து வைத்திருந்த விலையுயுர்ந்த ரத்தினங்களால் ஆன க்ரீடத்தை, வசிஷ்டர் ராமனுக்கு அணிவித்தார்.
வசிஷ்டர் ஆசீர்வதித்துக் கொடுத்த மற்றொரு க்ரீடத்தை, ராமன் சீதைக்கு அணிவித்தான்.
மகிழ்ச்சிக்கடலில் அத்தனை பேரும் ஆழ்ந்திருந்தார்கள். கந்தர்வர்கள் தேவகானம் இசைக்க, அப்ஸரஸ்கள் ஆடிப்பாடினார்கள்.
பரத சத்ருக்னர்கள், வெண்கொற்றக் குடையைப் பிடித்திருக்க, அனுமனும், விபீஷணனும் வெண்சாமரம்வீசினர்.
நூறு தங்க புஷ்பங்களால் கோர்க்கப்பட்ட ஒரு ஜ்வலிக்கின்ற மாலையையும், விஷேஸமாக விலையுயர்ந்த ரத்னங்களால் உண்டாக்கப்பட்டிருந்த ஒரு ஹாரத்தையும் தேவேந்திரன் ராமனுக்குத் தனது காணிக்கையாகச் சமர்ப்பித்து மகிழ்ந்தான்.
பட்டாபிஷேக வைபவத்தை ஒட்டி, ஆயிரக்கணக்கான கன்றோடு கூடிய பசுக்களையும், காளைகளையும், குதிரைகளையும், சத்பாத்திரங்களுக்கு, ராமன் தானமாக வழங்கினான்.
வந்திருந்தவர்க்கெல்லாம், கணக்கில்லாத அளவில், தங்க நாணயங்களையும், ஏராளமாகத் தானம் செய்தான் ராமன்...
விலையுயர்ந்த ரத்தினங்கள், வஸ்திரங்கள், பலவிதமான ஆபரணங்கள் இவற்றோடு, மணிகளால் கோர்க்கப்பட்டு, கோடிசூர்ய ஒளியோடு ப்ரகாசித்த ஒரு தங்க மாலையையும், ராமன் சுக்ரீவனுக்கு ஆசையாகக் கொடுத்தான்.
வாலிமைந்தன் அங்கதனுக்கு இரண்டு தங்கக்கடயங்களைக் கொடுத்தான்..
விபீஷணனுக்கு, தனது குலதெய்வமாகக் கொண்டாடப்பட்டு வந்த, அனந்த ஸயனனான, ரங்கநாதனையே தூக்கிக் கொடுத்தான் ராமன்..
தனது பத்னி சீதைக்கு, மணிகள் கோர்த்து உத்தமமாக இருந்த ஒருமுத்துமாலையை, ராமன் ஆசையோடு அளித்தான்.
வந்திருந்த வானரர்கள் அத்தனைப் பேருக்கும், அவரவர்கள் விரும்பிய ஆபரணங்கள் வழங்கப்பட்டன...
வைத்த கண் வாங்காமல், ராமனையும் சீதையையும் பார்த்துக் கொண்டிருந்தான் அனுமன்.
அவனுக்கு எந்தப் பரிசும் அளிக்கப்படவில்லையே என்று சீதையின் மனது துடித்தது.
ராமனிடம் வாய் விட்டுக் கூறவும் கூறினாள்.
"அனுமனுக்கு எந்தப் பரிசும் வேண்டாம்" என்றான் ஶ்ரீராமன்!
ஆனால், சீதைக்கு மனது தாங்கவில்லை. அவள் வருத்தத்தைக் காணச் சகியாத ராமன்,
"உனக்கு என்ன கொடுக்க வேண்டுமெனத் தோன்றுகிறதோ, அதையே கொடு சீதே..." என்றான்.
அனுமனை அருகில் அழைத்தவள், சட்டென்று, சற்றுமுன், ராமன் தனக்களித்திருந்த முத்து மாலையைக் கழற்றிக் கொடுத்தாள்.
ஒரேகணம்தான்... அனுமனின் கரங்களில் அந்தமாலை இருந்தது... அடுத்த கணம், அதை பிய்த்தெறிந்து விட்டான். சீதைக்கு ஆறவே இல்லை மனசு!
"என்ன ஆஞ்சனேயா? ஏன் இப்படி நடந்துண்டே?"
என்று சற்றுக் கோபத்தோடே வினவவும், ராமன் அவளைப் பார்த்து சிரித்தான்.
அது அவள் சினத்தை மேலும் அதிகரிப்பதை உணர்ந்த அனுமன், சட்டென்று அவளுக்குப் பதில் அளித்தான்.
"மன்னியுங்கள் மாதா... அந்த மாலைகளில் என்ராமனை என்னால் காண முடியவில்லை... அதனால் எறிந்து விட்டேன்..."
"உன் ராமனை, நீ அவ்வளவு ஆராதிக்கிறாயோ?"
"ஆம் மாதா... சந்தேகமே வேண்டாம்..."
"இதோ... இங்கே பாருங்கள்... தங்களோடு, எனது இதயசிம்மாசனத்தில் ராமன் வீற்றிருப்பதை..."
தனது யோகசக்தியால், தன் நெஞ்சிலிருக்கும் ராமனை சீதைக்குக் காட்டிக் கொடுத்தான் அனுமன்!
அகமகிழ்ந்து போன சீதை, மனப்பூர்வமாய் அவனை ஆசீர்வதித்தாள்.
லக்ஷ்மணன் மறுத்து விட்ட படியால், "யுவராஜனாய்" பரதனுக்குப் பட்டம் சூட்டி கௌரவித்தான் ராமன்.
மாண்டவி, சத்ருக்னன், ச்ருதகீர்த்தி ஆகியோரையும் தகுந்தபடி, பரிசுகளைத் தந்து கௌரவித்தான் ராமன்.
மொத்தத்தில் பட்டாபிஷேகத்திற்கு வருகை தந்திருந்த அனைவருமே, திரும்பி அவரவர் இடம் செல்லும்போது, செல்வந்தர்களாகத் திரும்பிச் சென்றனர்!
சுக்ரீவன், தனது படைசூழ, கிஷ்கிந்தைக்கும், விபீஷணன் லங்கைக்கும், மற்றவர் அனைவரும் தத்தமது இருப்பிடமும் புறப்பட்டுச் சென்றுவிட,
எஞ்சியிருந்தது, லக்ஷ்மணனும், ஊர்மிளையும் மட்டுமே...
*********************************

"லக்ஷ்மணா... நான் "ராஜா"ராமனாகணும்னு நீ எப்பவோ ஆசப்பட்டே.. அது இப்போதான் நிறைவேறி இருக்கு... உனக்கு சந்தோஷம்தானே?"
ராமனின் கேள்விக்கு, முகமெல்லாம் பூரிப்போடு, லக்ஷ்மணன் பதிலளித்தான்.
"ராமண்ணா... இதவிட என் வாழ்க்கையில ஒரு சந்தோஷநாள் இருக்கவே முடியாதுண்ணா..."
"ஆனா லக்ஷ்மணா... வெறும் "ராஜா" ஆயி்ட்டா மட்டும் போறுமா? ப்ரஜைகள் சந்தோஷப்படற மாதிரியான ராஜாவா நான் இருக்கணுமேன்னு கவலயா இருக்கு..."
"அண்ணா... நீங்க வேணா பாத்துண்டே இருங்கோ... "ராம" ராஜ்யத்துல ப்ரஜைகளுக்கு ஒருகுறையும் இருக்கப் போறதில்ல..."
"அதெல்லாம் இருக்கட்டும் லக்ஷ்மணா... இப்போ நான் கேக்கற சந்தேகத்துக்கெல்லாம், நீ பதில் சொல்லிண்டே வா...
அப்போதான் நான் ராஜாவா எப்படி நடந்துக்கணும்னு எனக்கு ஒரு தெளிவு கெடைக்கும்..."
"அ...ண்...ணா... ஒங்க சந்தேகத்த தீர்த்து வெக்கற அளவுக்கு எனக்கு ஞானமும் இருக்கா? என்ன போய் கேக்கறேளே..."
"ஒன்ன பத்தி நன்னா தெரிஞ்சுண்டு தான் கேக்கறேன் லக்ஷ்மணா... குறுக்க எதுவும் பேசாம, நான் கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு..."
ஒரு பக்கத்தில், சீதையும், ஊர்மிளையும், பழைய கதைகளை எல்லாம் பேசிக் கொண்டு, தம்மை மறந்திருந்தார்கள்.
ராமன் அவர்களையும் அழைத்தான்.
"சீதே... ஊர்மிளை... நீங்க ரெண்டு பேரும் இங்க வந்து கொஞ்சநாழி ஒக்காருங்கோ... நான் லக்ஷ்மணன்கிட்ட சில சந்தேகம் எல்லாம் கேக்கப் போறேன்... அவன் அதுக்கெல்லாம் பதில் சொல்லப் போறான்...
தேவைப்பட்டா, ஒங்களையும் கேள்வி கேப்பேன்... நீங்களும் பதில் சொல்லும்படி இருக்கலாம்..."
ராமனை, ஆழமாக, ஊடுருவிப் பார்த்தவாறே சீதை வந்தமர்ந்தாள். ஒன்றுமே புரியாமல், ஊர்மிளையும் வந்து அமர்ந்து கொண்டாள்.
"சொல்லுங்கோண்ணா... எனக்கு பதில் தெரிஞ்சா சொல்றேன்..."
"லக்ஷ்மணா... என்னோட மொதல் கேள்வி... ஒருராஜாவோட முக்யமான கடமை என்ன?"
"அண்ணா... ப்ரஜைகளை நல்லபடியா பாதுகாக்கறது... அதுதான் ரொம்ப ரொம்ப முக்யம் அண்ணா... ஒருராஜாவோட ஆட்சியில, அந்த ராஜாவால, எந்த ப்ரஜைக்கும், துக்கமோ, வருத்தமோ, வரவே கூடாதுண்ணா..."
“சரி... அடுத்தபடியா, ஒரு ப்ரஜையோட கடமைஎன்ன?..
"அண்ணா... ராஜாவுக்கு கீழ்படிந்து நடக்கறது தான், ஒவ்வொரு ப்ரஜைக்கும் இருக்கற பெரிய கடமை அண்ணா..."
"உத்தமமான ராஜா, ப்ரஜைகள உத்தமமான வழியிலதான் கூட்டிண்டு போவான்... அதனால, அப்படிப்பட்ட ராஜாவ மதிச்சு நடக்கறதுதான், ஒரு ப்ரஜையோட கடமைண்ணா..."
"இப்போ, சீதே... நீ சொல்லு... ஒரு குடும்பம் எப்படி இருக்கணும்?"
"ரகுவீரரே... ஒரு குடும்பத்தில, குடும்பத் தலைவர்தான் ராஜா... அவர் சொல்றத, குடும்பத்தில இருக்கற மொத்தப் பேரும் கேட்டு நடக்கணும்... அப்ப தான், அந்தக் குடும்பம் நாலுபேர் மெச்சறா மாதிரி இருக்கும்..."
"ரொம்பசரி... சீதே... ராஜரிஷியோட பொண்ணு இல்லயா?..
ஒன்னோட பதில் வேற எப்படி இருக்கும்?
அதுசரி... இதுக்குப் பதில் சொல்லு..
ஒருகுடும்பத்தில இருக்கற பதி, பத்னி இவாளோட ஒறவு எப்படி இருக்கணும்?"
"ரகுவீரரே... இதுக்குப் பதில் ஒரேவரியில சொல்லணும்னா,
"விட்டுக் கொடுத்துப் போகறதுதான் தம்பதிகளோட ஒறவை மேம்படுத்தும்"னு சொல்லிடலாம்..."
இப்பொழுது ராமன் குறுக்கிட்டான்.
"சீதே... பதியா? பத்னியா? யார் விட்டுக் கொடுத்துப் போகணும்?"
"ரகுவீரரே... இது என்ன கேள்வி? ரெண்டு பேருக்கும் பரஸ்பரம் இருக்க வேண்டிய குணம்தானே இது!"
"பத்னிகிட்டே ஆசையிருந்து, அவ "முக்யம்"னு நெனச்சா, பதி விட்டுக்கொடுத்துப் போகணும்..."

"அதே மாதிரி, பதி மேல காதல் இருந்தா, பத்னி விட்டுக் கொடுத்துப் போகணும்..."
"சரிசீதே... பத்னிய பாதுகாக்க வேண்டிய ஒரு பதி, அவள கவனிக்காம விட்டுட்டானா, அவனுக்குத் தண்டனை உண்டா?"
சரேலென்று ஒரே நேரத்தில், லக்ஷ்மணன், ஊர்மிளை இருவரும் ராமனை நிமிர்ந்து பார்த்தார்கள்.
"சொல்லு சீதே... அந்த "பதி"க்கு தண்டனை உண்டா?"
"ரகுவீரரே... நிச்சயம் தண்டனை உண்டுதான்... அக்னி சாட்சியாய், கரம்பிடித்தவள, கண்டு கொள்ளாம கைவிட்டான்னா, அவன் தண்டிக்கத் தகுந்தவனே..."
"ஆனா, அந்த தண்டனைய அவனுக்குத் தரதுக்கு, அவனோட "பத்னி"க்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கு... இந்த விஷயத்தில, அவதான் முடிவு எடுக்க வேண்டியவ..."
ஜானகியின் இந்தப் பதிலைக் கேட்ட லக்ஷ்மணன் முகம் இருண்டது. ஊர்மிளைக்கோ, தர்மசங்கடமாய் இருந்தது.
ராமன் இப்பொழுது, ஊர்மிளையின் பக்கம் திரும்பினான்.
"சரி... ஊர்மிளை... இப்ப நீ சொல்லு... தன்னை சரியாக நடத்தாத பதிக்கு, பத்னி என்ன தண்டன தரலாம்?"
ஊர்மிளை வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை.மாறாக, அவள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் பெருகியது.
"ஹேய் ஊர்மிளை... அதுக்கேன் நீ அழற?" பதைபதைத்துக்கேட்டாள்சீதை...
தன்னைச் சுதாரித்துக் கொண்ட ஊர்மிளை பதில் சொன்னாள்.
"சீதே... ஒன்னோட பதி, என்ன தண்டன தரவாம்னு கேக்கறார்! தன்ன சரியா நடத்தாத பதியால, அந்தப் பொண்ணோட வாழ்க்கையே சூன்யமாயிடறத!
அதுக்குமேல அந்த "பதி"க்கு தண்டன கொடுத்தா என்ன, கொடுக்காட்டாதான் என்ன?"
பேசிக்கொண்டே வந்தவள், கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.
ஒருகணம் சீதைக்கு ஒன்றும் புரியாமல் போனாலும், ஒரு பெண்ணாய், அவளால் ஊர்மிளையின் நிலையை ஊகிக்க முடிந்தது. சட்டென்று சீதை பேசினாள்.
"ரகுவீரரே... எந்த ஒரு ப்ரச்சனைக்கும் தீர்வு உண்டு. சிலசமயத்தில தண்டனயெல்லாம் தேவைப்படாமயே, வெறும் அறிவுரையாலேயே, ஒருநல்ல முடிவைக் கொண்டு வரலாம்..."
ராமன் புரிந்து கொண்டான்.
"லக்ஷ்மணா... நான் இந்த அயோத்திக்கு ராஜா... இப்போ சொல்லு... இந்த அயோத்தியில, நீ யார்?"
"அ...ண்...ணா... நான் இந்த அயோத்தியோட ப்ரஜை..."
"ஒரு உத்தமமான ராஜா, ப்ரஜைகள உத்தமமான வழியிலதான் கூட்டிண்டு போவான்... அப்படிப்பட்ட ராஜாவ, மதிச்சு நடக்கறதுதானே, ஒருப்ரஜையோட கடமை?"
"ஆ...மாண்...ணா..."
"அப்போ... இதோ இருக்காளே ஊர்மிளை.. இவளுக்கு ஒன்பதில் என்ன?"
வாய்மூடி மௌனமாய் இருந்தான் லக்ஷ்மணன்.
"லக்ஷ்மணா... மொதல்ல ஒனக்கு அண்ணனா பேசறேன்... கேட்டுக்கோ... ஊர்மிளை உத்தமி! உன்னதமான மனசு படைச்சவ! அவளுக்குத் துரோகம் செய்யாதே... அது மஹாபாவம்... அதுக்குப் பரிகாரமே கெடையாது.."
"அடுத்ததா, இந்த அயோத்தியோட மன்னனா பேசறேன்... அதையும் கேட்டுக்கோ...
காரணமே இல்லாம, ஒரு அபலைப்பெண், என்ராஜ்யத்துல, கண்ணீர் விட்டு அழும்படி ஆச்சுன்னா, அது என் தேசத்தோட நலனையே பாதிக்கும்... அதுக்கு காரணமானவன் யாரோ, அவன் எனக்கு பதில் சொல்லியே ஆகணும்..."
"இப்போ சொல்லு... நீ என்ன செய்யப் போற?"
"அ...ண்...ணா... நீங்க என்ன சொன்னாலும், அது எனக்கு வேதவாக்குண்ணா... ஒங்க பேச்ச நான் என்னிக்கு மீறிருக்கேன்?"
லக்ஷ்மணன் கண்களில் நீர் துளிர்த்தது.
"அப்படியானால் லக்ஷ்மணா... இனிமே, ஊர்மிளை கண்ணுலேந்து விழற ஒவ்வொரு சொட்டு நீரும், ஆனந்தக் கண்ணீராவே இருக்கணும்... இது இனிமே ஒன்பொறுப்பு..."
"ஆகட்டும்ணா... ஒங்க மனசு கோணாம நடந்துக்கறேண்ணா..."
கதறிக் கொண்டு, ஓடி வந்து ராமனின் கால்களில், விழுந்தாள் ஊர்மிளை!
புதுவாழ்வைத் துவங்க இருக்கின்ற லக்ஷ்மணனும், ஊர்மிளையோடு சேர்ந்து அண்ணனின் கால்களில், விழிநீர் மல்க விழுந்தான்.
லக்ஷ்மணன் புதிதாக "ஜனனம்"" எடுத்திருக்கிறான் என்பது ஜானகிராமனுக்கு புரிந்து விட்டது.
இனி ஊர்மிளையும், ஒரு உல்லாசப் பறவையே...

நிறைந்தது
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
Nalladha share panniruka sri ma.. Urmila ooda vazhkai sarithiram padika koduthuvachirukanum... Thanks for sharing..
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
Aana vidhi urmilaiyooda vazhkaila innume muzhu sandhooshatha kodukala ma.. Ramar ennavoo sethu dhan vachaar.. Aana sollikoduthavan vaaku verum pathunaalungra kadhaiya ava vazhkai marubadiyum adhe thanimaiku thirumbidum ngradhu vidhiyoo ennavoo..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top