என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா 03

#1
சுட்டெரிக்கும் மதிய வேளையில் அதற்கு சற்றும் சளிக்காமல் நெஞ்சு நிறைய சுட்டெரிக்கும் கோபத்தோடு அவர் வீட்டினுள் நுழைந்தார் குமாரசிவம்.

பைத்தியக்காரன், அறிவில்லாதவன், இன்னும் ஏட்டில் வடிக்கமுடியாத வசவுகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தார் குமாரசிவம். அவரது மனைவி கனகவல்லி தந்த தண்ணீரை வாங்கிக் குடித்தவரின் கோபம் இன்னும் தணிந்த பாடில்லை மேலும் தொடர்ந்தார் அவனவன் கடன உடன வாங்கி கல்யாணம் பண்ணா எவ்ளோ அசால்டா நிறுத்த சொல்றான் அவன் பொண்ணுனா இப்படியா பேசியிருப்பான் குடிகாரப் பய என்ன தெரியும் இவனுக்கெல்லாம்.

என்னங்க வந்ததும் வராததுமா யாரைப் திட்டிட்டு இருக்கீங்க இப்படி. அப்புறம் பேசிக்கலாம் முதல்ல சாப்பிட வாங்க
மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அவர் பின்னே சென்றார். பசி வயிற்றைக் கிள்ளியது. நடந்த கலேபரத்தில் சாப்பிடவே மறந்து வந்துவிட்டார்.

வர்ஷினியின் வீட்டில் தனது தாய் ராஜம்மா எடுத்து வந்த தண்ணீர்ச் செம்பை தட்டிவிட்டார் ராஜேந்திரன் .அதிர்ச்சியில் அவர் ராஜேந்திரன் முகம் பார்க்க அவரின் கோபத்தை உணரமுடிந்தது.

யார் மேலேயோ இருக்கிற கோவத்த என் மேல காட்றான் பாரு என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே என்னடா ஆச்சு என்றார். எதற்கும் பதில் சொல்லாமல் அறிவு கெட்டவன், காசுக்காக கண்ட வேலையும் செய்வான் கமிஷன்னா வாய அப்படியே வாயப் பொளந்துடுவான் ச்சைக் என்ன ஜென்மமோ
இதே இவ அப்பனுக்கு இப்படி நடந்திருந்தா பொறுமையா வந்து இருப்பானா? ஒருவேளை வந்திருந்தாலும் இருப்பான். அவனுக்கு காசுதான முக்கியம். அந்த நிகழ்வை யோசிக்க யோசிக்க வெறுப்பு அதிகமாகியது.

இடையில் அவரது தாய் என்னடா என்னதான் ஆச்சு எதுக்கு வந்ததும் வராததுமாய் இப்படி கொதிக்கிற நிச்சயதார்த்தத்துக்கு போறேன்னு தான சொல்லிட்டு போன? அங்க போய் யார்கிட்ட வம்பிழுத்த

ஆமா வம்பிழுக்கிறாங்க அங்க என்ன நடந்தது தெரியுமா என்று வெறுப்பு மாறாமல் கூற ஆரம்பித்தார் நடந்தது என்னவென்றால் குமார சிவம் ராஜேந்திரன் இருவருக்கும் பொதுவான உறவினர் தனது பெண்ணின் நிச்சயதார்த்தத்த விழாவிற்கு இருவரையும் அழைக்க இவர்களும் மகிழ்ந்துதான் சென்றனர் .

விழாக்கோலம் பூண்டு அந்த மண்டபடம்
பார்க்கவே அழகாய் இருந்தது. பொருத்தமான ஜோடிதான் என்று பலரும் மெச்சி கொள்ளுமளவு பெண்ணும் மாப்பிள்ளையும் இருந்ததால் குமாரசிவத்திற்கு பெருமையாய் இருந்தது.
அவர்தான் வரன் பார்த்து அவர்களை சேர்த்து வைத்தார்.

எல்லாம் நல்லபடியாய் தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால்..
சபையில் நிச்சயர்தார்த்த தட்டு மாற்றுக் கொள்வதற்கு மாப்பிள்ளை வீட்டு சார்பாக ஒரு முதியவர் அமரவைக்கப்பட்டார். பெண்ணின் வீட்டார் சார்பில் சதாசிவம் ஐயாவை அமரவைத்தார் குமாரசிவம்.சதாசிவம் அந்த ஊரில் பிரபலமான நேர்மையான அரசியல்வாதி.படித்தவரும் கூட. எளிமையான மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்பவர். ஊரில் நல்ல பெயரும் மதிப்பும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக ராஜேந்திரனுக்கு தந்தை மாதிரி.

தட்டு மாற்றிக் கொள்ளும் பொழுது முதலில் சதாசிவம் மலர்ந்த முகத்துடன் தட்டை எடுத்து மாப்பிள்ளை வீட்டு சார்பாக அமரவைக்கப்பட்ட முதியவரிடம் கொடுக்க அவர் சற்றே கோபமாக யோவ் படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்ல தட்டை மாத்தும் போது எழுந்து நின்னு கொடுக்கணும்னு தெரியாது என்றார். அவருக்கு சதாசிவத்தை பற்றியும் ஊர் மக்களிடம் அவருக்கு இருக்கும் மதிப்பும் தெரியாது. சும்மா மாப்பிள்ளை வீட்டின் கெத்தை காண்பிக்கத்தான் அவ்வாறு சொன்னார்.

சொல்லி முடித்ததுதான் தாமதம் பெண் வீட்டார் வகையில் இருந்த உறவினர் அந்த முதியவரை கண்டபடி திட்ட தொடங்கினால் இராஜேந்திரன் ஒருபடி மேலே சென்று அந்த முதியவரை அடிக்கவே பாய்ந்துவிட்டார். சதாசிவம் ஐயா தடுக்காவிட்டால் அது நிகழ்ந்திருக்கும். பின்னே தனது தந்தை ஸ்தானத்தில் இத்தனை பேர் கூடியிருக்கும் சபையில் ஒருவர் அவமானப்படுத்தினால் சும்மா விட்டுவிட முடியுமா என்ன?

மாப்பிள்ளை வீட்டிலும் சிலர் அந்த பெரியவரை வசைபாடினர்.
சிறிது நேரத்தில் நடந்த குழப்பத்தில் பெண்ணின் பெற்றோர் என்ன செய்வதென தெரியாது குழம்பி இருந்தனர்.
இராஜேந்திரன் பெண்ணின் தகப்பனிடம் போயும் போயும் நம்ம ஐயாவை மதிக்காத வீட்டுலயா பொண்ண கட்டிக் கொடுக்கப்போற வேணாம் பங்காளி இந்த கல்யாணமும் வேண்டாம் இவனுங்க சகவாகசமும் வேணாம் நிறுத்திடு என்றவுடன் அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

மாப்பிள்ளையும் சரி அவரது தாய் தந்தையும் சரி நல்லவர்களாக தான் இருக்கின்றனர். அந்த பெரியவர் செய்த குற்றத்திற்காக தன் பெண்ணிற்கு அமைந்த நல்வாழ்வைக் கெடுக்க மனம் வரவில்லை.
அதே நேரம் விழாவை தொடர்ந்தால் சதாசிவம் ஐயாவை மதிக்காதது போலாகிவிடும். சங்கடமாய் குமாரசிவத்தை பாரத்தார் பெண்ணின் அப்பா.

இப்படி இருக்க ஒரு பக்கம் சதாசிவம் ஐயா ராஜேந்திரனிடம் என்னடா பேசுறா இது நம்ம பொண்ணோட வாழ்க்கை டா. நீ கொஞ்ச நேரம் சும்மா இரு என்றவர் மற்றவர்களிடம் திரும்பி நீங்களும் தான் என அவர்களை அமைதிப்படுத்த முயற்சிக்க மற்றொரு பக்கம் குமாரசிவம் பொறுமையாக மாப்பிள்ளை வீட்டில் முறையிட்டு அந்த பெரியவரை மன்னிப்பு கேட்கவைக்க என இருவரும் சூழ்நிலையை சரி செய்ய முயற்சித்தனர். அந்த பெரியவர் மன்னிப்பு கேட்டவுடன் சத்தம் குறைந்தது.மாப்பிள்ளை வீட்டின் சார்பாக வேறு ஒருவர் அமரவைக்கப்பட்டு நிச்சயம் சுபமாய் முடிந்தபின்தான் மூச்சு விட முடிந்தது பெண் வீட்டினரால்.

ராஜம்மாவிற்கு புரிந்தது சதாசிவம் ஐயா பெண்ணின் வாழ்வைக் காக்க பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார் என்பதும் குமாரசிவத்தின் மீது தவறில்லை என்பதும். ஆனால் அதை மகனிடம் இப்போது விளக்கினால் மகன் ஏற்றுக் கொள்ளமாட்டான் மேலும் வானத்துக்கும் பூமிக்கும் தையாதக்க தையாதக்க என குதிப்பான் என்றறிந்து அமைதி காத்தார்.குமாரசிவத்திற்கும் ராஜந்திரனுக்கும் முன்பிருந்தே ஆகாது. இப்போது இது வேறவா என்றிருந்தது அவர்க்கு.

குமாரசிவமும் ராஜேந்திரனும் ஒருவகையில் மாமன் மச்சான் உறவினர்கள்தான். நேரிடையாய் சட்டையை பிடித்து சண்டை போடுமளவு பகையில்லை என்றாலும் இருவருக்குள்ளும் அடு்த்தவர் பற்றி நல்லெண்ணம் இல்லை.

ராஜேந்திரன் மனைவி செல்வி 5 வருடங்கள் முன்பு விஷக்காய்ச்சல் தாங்கி சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்தார். செய்தி ஊரில் அனைவருக்கும் தெரிய குமாரசிவம் ஊரில் "எல்லாம் இந்த குடிகார பைய குடிச்சிட்டு பண்ற அழும்புல மனம் கெட்டுதான் அந்த பொம்பளை இவ்ளோ சீக்கிரம் போய்டுச்சு" என்று பேசியதாய் ராஜேந்திரன் கேள்விப்பட்டார். மனைவி இறந்த துக்கத்திலும் அழுது கரையும் மூன்று குழந்தைகளை எப்படி தேற்றுவதென வேதனையில் இருந்தவர் அப்போது அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. என் பொண்டாட்டிக்கு தெரியும் என்ன பத்தி கண்டவன்கிட்டலாம் நான் ஏன் அதை விளக்கிட்டு இருக்கணும் என்று நினைத்து அலட்சியம் செய்தார்.

அதே போல் குமாரசிவம் கமிஷன் பணத்திற்காக திருமண ஜாதகத்தில் கோல்மால் செய்து மணமக்களை ஜோடி சேர்ப்பதாய் ராஜேந்திரன் ஊருக்குள் பேசியதாக கேள்விப்பட்டார். குமாரசிவமும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஏனென்றால் இருவரும் ஒருவரை ஒருவர் அவதூறு பேசியதாய் கேள்வித்தான் பட்டனர். கேள்விப்பட்ட விஷயத்தின் உண்மைத்தன்மை என்ன என்பது இருவருக்கும் தெரியாது. ஆனால் உள்ளூர வன்மம் புகைந்து கொண்டுதான் இருந்தது.

சாப்பிட வாடா பேச்சை திசை திருப்பும் பொருட்டு ராஜம்மா கூற நான் வெளிய கெளம்புறேன் என்றவர் நித்யா(வர்ஷினியின் தமக்கை) எங்க என்று வினவினார்.

தையல் கிளாஸ்ல இருந்து வரல இன்னும். எனும் போதுதான் வர்ஷினி வீட்டினுள் நுழைந்தாள். இதோ சின்ன பாப்பா வந்துட்டா பாரு சாப்பாடு போடும்மா நான் வெளிய போய்ட்டு வரேன் என்று சென்றுவிட்டார்.

தந்தை ஏதோ கோபத்தில் இருக்கிறாரென புரிந்தது வர்ஷினிக்கு. என்னவாயிருக்கும் என யோசித்தவள் கண்ணில் தந்தை மறந்து வைத்துவிட்டு சென்ற மொபைல்போன் சிக்கியது. அத்தனை ஆனந்தம் முகத்தில். தந்தையின் கோபம் மெதுவாகவே தீர்ந்து பொறுமையாகவே வீட்டுக்கு வரட்டும் என தனக்குத் தானே கூறிக் கொண்டு மொபைலை எடுத்து வாசுவின் எண்ணிற்கு வாட்ஸ் சப் செய்தாள்.( இந்த தலைப்பு யாருக்கு பொருந்துதோ இல்லையோ உனக்கு தான்மா அப்டியே பொருந்தும் என்னம்மா இப்படீ பண்றீயேமா)

வாசுவும் ஆன்லைனில் இருக்கவும் அரட்டை ஒரு மணி நேரத்திற்கு மேலும் தொடர்ந்தது. என்னதான் பேசுவாங்களோ அப்படி. சரி காதலர்கள் பேச விஷயமாக இருக்காது. அது நமக்கு மொக்கையாக தெரிந்தாலும் காதலிப்பவர்களுக்கு சுவாரஸ்ய உரையாடல் தான் போலும்.

- இன்னும்பண்ணுவோம்.
 
#10
ஆரம்பத்திலேயே இப்படி அப்பாக்களை மோத விட்டு வேடிக்கை பார்கரயேமா நியாயமா🤔🤔 என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா😜😜😜
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top