• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழு பெரு வள்ளல்கள்------ அதியமான்--1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
தருமபுரி என்று கேட்டிருக்கிறீர்களா? சேலம் மாவட்டத்தில் உள்ள ஊர் அது. அந்தப் பேர் பிற்காலத்தில் வந்தது. அந்தக் காலத்தில் அதற்குத் தகடூர் என்று பேர் வழங்கியது. இப்போது தருமபுரிக்கருகில் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. அது முன் காலத்தில் தகடூரைச் சேர்ந்ததாக இருந்தது. அந்தக் கோட்டையை நடுவிலே பெற்று, நாற்புறமும் விரிவாகவும் அழகாகவும் அமைந்திருந்தது பழைய காலத்துத் தகடூர்.

அதைத் தன் அரசாட்சிக்குரிய தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்தவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன். அதிகர் என்றும் அதியர் என்றும் அவலுடைய குலத்தோரை அறிஞர்கள் குறிப்பார்கள். அந்தக் குலத்தில் உதித்தவன் நெடுமான் அஞ்சி. அதில் தோன்றிய பலருக்குள்ளே அவனே இணையில்லாத புகழ் பெற்றவ தைலின், அதிகமான் என்றால் அவனையே குறிக்கும்படி ஆகிவிட்டது.

அதிகர் குலத்தின் முதல்வன் சேரர் குலத்தில் உதித்தவன். மிகப் பழங்காலத்திலேயே அதிகமானுடைய முன்னோர்கள் அக்குலத்திலிருந்து தனிக் கிளையாகப் பிரிந்து தனியே நாடாளும் உரிமையை மேற்கொண்டிருந்தார்கள். சேரர்களைப் போல முடியுடை மன்னர்களாக விளங்காவிட்டாலும் அவர்களுக்குரிய பனைமாலையை அணிந்து கொண் டார்கள். சேரர்களுக்கும் அதியர் குலத்தினருக்கும் அடிக்கடி பூசல் நிகழ்வது உண்டு.

அதிகமான் சிறந்த வள்ளல்; பெரு வீரன். புலவர்களிடையே இருந்து இனிதே பொழுது போக்குபவன். எதைச் செய்தாலும் அதில் ஈடுபட்டு ஒருமை மனத்தோடு செயல் செய்யும் இயல்புடையவன். போர் பற்றிய ஆலோசனையில் ஆழ்ந்திருந்தால் வேறு எதையும் கவனிக்காமல் தன் அமைச்சர்களுடனும் படைத் தலைவர்களுடனும் அதுபற்றிய பேச்சிலே ஈடுபட்டிருப்பான்.

அவனை நாடிப் பல புலவர்கள் வந்தார்கள்; பாடினார்கள்; பரிசு பெற்றார்கள். தமிழ்ப் புலமையிலே சிறந்த மூதாட்டியாகிய ஒளவையார் அவனிடம் வந்தார். அப்போது அதிகமான் ஏதோ இன்றியமையாத ஆலோசனையில் ஈடுபட்டிருந்தான். அத்தகைய சமயங்களில் யாரும் அவனை அணுக அஞ்சுவார்கள். அரசியல் அதிகாரி ஒருவர் ஒளவையாரை வரவேற்றுத் தாகத்திற்கு நீர் கொடுத்து அமரச் சொன்னார். ஒளவையார் அமர்ந்தார். "மன்னர் மிகவும் முக்கியமான ஆலோசனையில் இருக்கிறார். இதோ வந்துவிடுவார். சற்றுப் பொறுக்க வேண்டும்” என்று அதிகாரி பணிவாகச் சொன்னார். சிறிது நேரம் ஆயிற்று. அதிகமான் வரவில்லை.

ஒளவையார் பொறுமையை இழந்தார். 'எவ்வளவு நேரம் பிச்சைக்காரியைப் போலக் காத்திருப்பது?'என்று கோபம் மூண்டது. உடனே ஒரு பாட்டைப் பாடினர். அங்கே இருந்த வாயில் காவலனைப் பார்த்து அந்தப் பாடலைச் சொல்லத் தொடங்கினார். "வாற்காரா, வாசற்காரா,கொடையாளிகளின் காதுகளில் தம்முடைய சொற்களை விதைத்து, தம் காரியங்களை முடித்துக் கொள்கிறவர்கள் புலவர்கள். அவர் களுக்குப் பரிசு பெரிதன்று; தரம் அறிந்து பாராட்டும் வரிசைதான் பெரிது. அதற்காகவே அவர்கள் ஏங்கிக் கிடப்பார்கள். அத்தகைய பரிசிலர்களுக்கு அடையாமல் திறந்து வைத்திருக்கிற வாசலைக் காப்பவனே! உன்னுடைய அரசனாகிய நெடுமான் அஞ்சி தன் பெருமையைத் தான் அறியவில்லையோ?வந்தவர்களைக் காக்க வைப்பது அவன் பெருமைக்கு இழுக்கு என்பதைத் தெரிந்துகொள்ள வில்லையோ? அது கிடக்கட்டும். என்னையும் அவன் அறிந்துகொள்ள வில்லையோ? பிச்சைக்காரியைப் போலக் காத்திருக்கும் பேர்வழி நான் அல்லள் என்பதை அவன் உணர வில்லையே! அறிவுடையோரும் புகழுடையோரும் இந்த உலகத்தில் தோன்றுகிறார்கள்; மறைகிறார்கள். பிறகு யாரும் தோன்றாத சூனிய உலகம் அன்றே? எத்தனையோ பேர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கையில் கோடரியை யுடைய தச்சன் பெரிய காட்டில் மரத்தைத் தேடி அலையவா வேண்டும்? உபகாரியைத் தேடி நான் அலைய வேண்டியதில்லை. எந்தத் திக்கிலே சென்றாலும் அந்தத் திக்கிலே சோறு கிடைக்கும்" என்று பாடினார்.

பாட்டு முடிவதற்கும் அதிகாரி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ஒளவையார் பாடிக்கொண்டிருந்த போது அங்கே வந்த அதிகாரி அப் பெருமாட்டியின் கோபத்தை உணர்ந்து ஓடிச் சென்று அதிகமானிடம் தெரிவித்தார். உடனே அதிகமான் வந்து விட்டான்.

"நான் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும். மிகவும் இன்றியமையாத கடமை இருந்தது. அதனால் கவனிக்காமல் இருந்துவிட்டேன். நான் செய்தது எவ்வளவு பெரிய பிழை என்பதை இப்போது நன்றாக உணர்கிறேன். தாங்கள் வந்திருப்பது எனக்குத் தெளிவாகத் தெரியாது. தெரிந்திருந்தால் அப்போதே வந்திருப்பேன்." - அவன் உண்மையில் மனம் குழைந்து மன்னிப்பு வேண்டினான் , அழாத குறைதான்.

ஒளவையார் உண்மையை உணர்ந்தார். அவர் வந்திருப்பதை யாரும் தெரிவிக்காத போது அவனைக் குறை கூறிப் பயன் என்ன? அவர் சினம் தணிந்தார். அதிகமான் அவரை உள்ளே அழைத்துச் சென்றான். சிறந்த இடத்தில் இருக்கச் செய்து அன்புடன் உரையாடினான்.

ஒளவையார் சினம் மாறியதோடு அதிகமானுடைய பண்பையும் உணரத் தொடங்கினர். இரண்டு நாட்கள் தங்கி விடை பெற்றுக்கொண்டார். "அடிக்கடி வந்து தமிழின்பத்தை நான் நுகரும்படி செய்ய வேண்டும்" என்று வேண்டிக்கொண்டான் அதிகமான்.
*
நெடுமான் அஞ்சியின் நாட்டில் கஞ்சமலை என்ற மலை ஒன்று உண்டு. பல மருந்துச் செடிகள் உள்ளது அது; முனிவரும் சித்தரும் நாடி மருந்துக்குரிய மூலிகைகளைத் தேடிப் பெறும் சிறப்புடையது. அங்கே ஓரிடத்தில் நெல்லி மரம் ஒன்று இருந்தது. அது எங்கும் காணுவதற்கரிய சிறப்பை உடையது; பல ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்க்கும் தன்மை பெற்றது. மருத்துவர்கள் அதன் பெருமையை உணர்ந்து அதிகமானிடம் சொல்லியிருந்தார்கள். "அந்த மரம் காய்த்துப் பழுப்பது அரிது. காய்கள் பிஞ்சிலே உதிர்ந்துவிடும். ஒன்று இரண்டு காய்கள் முற்றி விளைந்தால் அவற்றை அமுதம்போலப் பாதுகாக்க வேண்டும். அந்த நெல்லிக்கனியை உண்டால் நெடுநாளைக்கு வாழலாம்" என்று சொன்னார்கள். "அத்தகைய மரத்தை நாம் பாதுகாப்பது நல்லது" என்று எண்ணி அதிகமான் அதற்குக் காவலாளரை அமைத்தான். பல காலமாகியும் அது காய்ப்பதாகவே தெரியவில்லை.

அந்த மரத்தில் இப்போது பிஞ்சுகள் தோன்றின. அதிகமான் அதைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தான். ஆனால் மருத்துவர்கள் சொன்னது போல் பிஞ்சுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வந்தன. "ஒரு காயாவது கனிந்தால் அரசருக்குப் பயன்படும். அவர் ஒருவர் நீடுழி வாழ்ந்தால் எத்தனையோ பேருக்கு நலம் உண்டாகும்" என்று சான்றோர் கூறினர்.

காலம் போய்க்கொண்டிருந்தது; பிஞ்சுகளும் உதிர்ந்து கொண்டே இருந்தன; சில, பெரிய பிஞ்சுகளாக முதிர்ந்தன; அவற்றிலும் சில உதிர்ந்தன. கடைசியில் சொல்லி வைத்தாற்போல ஒரே ஒரு காய் தான் மிஞ்சியது; பருத்தது; நன்றாகக் கனிந்தது.

ஒன்றாவது கிடைத்ததே என்று பெருமக்கள் உவகை அடைந்தனர். அந்தக் கனி அதிகமானுக்குத்தான் உரியது என்பதில் யாருக்கும் ஐயம் உண்டாகவில்லை. ஒரு நல்ல நாளில் அதைப் பறித்து இறைவன் திருமுன் வைத்து வணங்கி உண்ண வேண்டும் என்று ஏற்பாடு ஆகியிருந்தது.

அந்த நாள் வந்தது. கனியைப் பறித்து வந்து இறைவன் முன் வைத்து வழிபட்டார்கள். அதிகமான் இறைவனை வணங்கி ஓர் இருக்கையில் சென்று அமர்ந்தான். நெல்லிக் கனியை ஒரு பொற்றட்டில் ஒரு மங்கை ஏந்தி அவனிடம் கொண்டு வந்தாள்.

அந்தச் சமயத்தில் ஒளவையார் அங்கே வந்து சேர்ந்தார். அவரை வரவேற்றான் அதிகமான். அந்த இளம் பெண் நெல்லிக் கனியை ஏந்திக்கொண்டு அருகில் நின்றாள். ஒளவையார் நல்ல வெயிலில் நடந்து வந்திருந்தார். "என்ன கடுமையான வெயில்!" என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தார். உடனே ஒருவர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். அதை அருந்திய அவர் அந்த இளம் பெண் கையில் பொன் தட்டை ஏந்திக் கொண்டு நிற்பதைக் கண்டார். "என்ன அது?" என்று கேட்டார் ஒளவையார்.

"நெல்லிக் கனி" என்று அதிகமான் கூறினான்.

"நெல்லிக் கணியா? இந்த வெயில் காலத்தில் தாகம் தீர்க்க உதவுவதல்லவா அது? நான் வரும் வழியில் ஒரு நெல்லிக்காயாவது கிடைக்காதா என்று ஏங்கினேன். நாக்கு அப்படி வறட்டியது."

"அப்படியா? இந்த நெல்லிக் கனியை உண்ணலாமே!” என்றான் அதிகன்.

அருகில் இருந்தவர்கள் துணுக்குற்றார்கள். ஒளவையார் அதைக் கவனிக்கவில்லை. அதிகமான் கூறியதற்கு, "உண்ணலாம்'"என்று விடை கூறினார். அதிகமான் மறு பேச்சுப் பேசவில்லை. தட்டில் இருந்த நெல்லிக்கனியை எடுத்தான். ஒளவையாரின் கையிலே கொடுத்தான். அவர் அதை வாயிலிட்டுத் தின்னத் தொடங்கினார்.

அங்கே இருந்தவர்களுடைய உள்ளத்தில் எத்தனையோ விதமான எண்ணங்கள் எழுந்தன.'இவள் எங்கேயடா இப்போது வந்து சேர்ந்தாள்!'என்று சிலர் பல்லைக் கடித்தார்கள். 'இவன் இதன் அருமையைச் சொல்லாமல் இப்படிச் செய்யலாமா?' என்று அவன் மீது சினம் கொண்டார்கள்.

"நெல்லிக் கனி ஒரு புதிய சுவையுடன் இருக்கிறதே! இது போன்றதொன்றை நான் கண்டதே இல்லை” என்று ஒளவையார் மென்று கொண்டே சொன்னர்.

"ஆமாம்; இது புதிய கணிதான்" என்றான் அதிகமான்.

அதற்குள் அங்கே அமர்ந்திருந்த பெரியவர் ஒருவருக்கு ஆத்திரம் பொறுக்கவில்லை. "நம் அரசனுக் காகத் தவஞ் செய்து பெற்ற கனி அது" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டார்.

"இதில் ஏதோ சிறப்பிருக்கிறது போலிருக்கிறதே!" என்று ஒளவையார் அங்கே இருந்தவர்கள் முகத்தைப் பார்த்தார். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டதென்ற செய்தியை அவர்கள் முகங்கள் தெரிவித்தன. ஒளவையார், "ஏதோ ஒரு புதுமை இக்கனியில் இருக்கிறது. நீ உண்ண வேண்டியதை நான் உண்டுவிட்டேன் என்று தெரிகிறது. உண்மையை ஒளிக்காமல் சொல்லவேண்டும்" என்று அதிகமானைக் கேட்டார்.

"நான் சொல்கிறேன்" என்று பெரியவர் முன் வந்தார்; கதையை யெல்லாம் சொல்லி முடித்தார்.

அப்போதுதான் ஒளவையார், அவசரப்பட்டுத் தாம் செய்த செயலின் விளைவை உணர்ந்து இரங்கினார். "அப்படியா? நான் என்ன காரியம் செய்து விட்டேன்! பல காலம் வாழவேண்டிய உனக்குக் கிடைக்க வேண்டியதை நான் இடையிலே தட்டிப் பறிப்பதற்காகவா வந்தேன்?" என்று துயரம் விம்மும் குரலோடு கேட்டார்.

அதிகமான் புன்முறுவல் பூத்தான்; "தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. இறைவன் திருவுள்ளத்தின் படியே யாவும் நடக்கும். நான் எத்தனை காலம் வாழ்ந்தால் என்ன? சில போர்களைச் செய்வேன்; பலரை மடியச் செய்வேன். உலகம் அரசர்களால் வாழ்வதில்லை;அறிவு சிறந்த சான்றோர்களால் வாழ்கிறது. தங்களைப் போன்ற பெரும் புலவர்கள் வாழ்ந்தால் உலகம் நன்மையை உணரும்;நேர்மை வழியை உணரும்; கவிதை விருந்தை நுகரும். இந்த அரிய கனி எங்கே போய்ச் சேரவேண்டுமோ, அங்கேதான் போய்ச் சேர்ந்திருக்கிறது" என்றான்.

ஒளவையாருக்கு அதிகமானிடம் உண்டான மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது. ‘இவன் தெய்வப் பிறவி' என்று மனம் குளிர்ந்து வாழ்த்தத் தொடங்கினார்.

"அதியர் குலத்தில் வந்த கோமானே, நீ வாழ்க! போரில் பகைவரை அழித்து வெல்லும் வீரத் திருவையுடைய நெடுமான் அஞ்சியே, நீ வாழ்க! வாழ்க! பால் போன்ற வெண்பிறையைத் திருமுடியிலே சூடும் நீல கண்டப் பெருமானைப்போல நீ என்றும் நிலைபெற்று வாழ்வாயாக! நீ எத்தனை அரிய ஈகையைச் செய்தாய்! மலையிலே விளைந்த அரிய நெல்லிக்கனியை, நாம் உண்டால் நல்லதென்று எண்ணாமல் எனக்குக் கொடுத்தாயே! இதனால் உண்டாகும் அரிய பயன் இன்னதென்று எனக்குச் சொல்லாமல் அடக்கி, சாவு நீங்கும்படி எனக்குத் தந்துவிட்டாயே! உன் பெருமையை என்னவென்று சொல்வேன்! வாழ்க, வாழ்க, வாழ்க!" என்று பாடி வாழ்த்தினார்.

"அந்தக் கனியைவிட இந்தப் பாடல் இனிமையாக இருக்கிறது. அதை உண்டால் இந்த நாற்ற உடம்பு ஒருகால் நெடிது வாழலாம், ஆனால் இந்தப் பாடலைப் பெற்றமையால் என் புகழுடம்பு சாவாமல் வாழும்" என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினான், அதிகமான் நெடுமான் அஞ்சி.

அதுமுதல் ஒளவையார் உள்ளத்தில் ஏறிக் கொண்டான் அதிகமான். அவர்களிடையே இருந்த நட்பு வலிமை பெற்றது."நான் உங்கள் தம்பி போன்றவன். எனக்குத் தமக்கை யாரும் இல்லை. உங்களையே அவ்வாறு கொள்கிறேன்" என்று பணிந் தான் அதிகமான். ஒளவையாரும் உடன்பிறந்தானை விட மிக்க அன்போடு அவனிடம் பழகலாயினர்.

நீண்ட காலம் வாழச்செய்யும் நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல் ஒளவைக்கு ஈந்தான் அதிகன் என்ற செய்தி தமிழ்நாடு எங்கனும் பரவியது. புலவர்கள் அவனைப் பாராட்டும்போது நெல்லிக்கனி வழங்கிய பெருஞ் செயலைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top