• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழு பெரு வள்ளல்கள்------- அதியமான்---2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
திருக்கோவலூரில் காரி என்ற வள்ளல் இருந்தான். அவன் முடியுடை மன்னர்களுக்குப் போரில் துணையாகச் சென்று போரிட்டு வெற்றிபெற வைக்கிறவன். அக்காலத்தில் சேர நாட்டை ஆண்டிருந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேரன். அவனுக்குக் கொல்லிமலையைத் தன் ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற அவா இருந்தது.



கொல்லிமலையைச் சார்ந்த ஒரு பகுதியை ஓரியென்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அவன்மேல் போர் தொடுக்க விரும்பிய சேரன், காரியைத் தன் படைக்குத் துணையாக வரும்படி ஆள் விட்டு அழைத்தான். காரி சேரமானைப் போய்ப் பார்த்துப் பேசினான். "ஓரி சிறிய நாட்டுக்குத் தலைவன். அவனோடு போரிட நீங்கள் போகவேண்டியதில்லை. நான் என்னுடன் இருக்கும் வீரர்களுடன் சென்று அவனை வென்று வருகிறேன்" என்றான். பெருஞ்சேரல் இரும்பொறை அப்படியே செய்யலாம் என்று ஒப்புக்கொண்டான்.

உடனே காரி ஒரியின்மேல் போர் தொடுத்தான். அப்போரில் ஓரி உயிர் இழந்தான். அவனுடைய கொல்லிக் கூற்றத்தைக் காரி சேரமானுக்கு வழங்கினான். அதிகமானுக்கும் ஓரிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு காரணமும் இல்லாமல் ஓரியின்மேல் படையெடுத்து அவனைக் கொன்ற காரியினிடம் அதிகமானுக்குக் கோபம் மூண்டது.




சேரமானுக்குக் கையாளாக இருந்தே இப்படிக் காரி செய்திருக்கிறான் என்பதை உணர்ந்தபோது அதிகமானுக்குச் சினம் முறுகியது. சேரமானுக்கும் அவனுக்கும் வழிவழியே பகைமை இருந்து வருகிறதல்லவா?

அதிகமான் காரியைத் தொலைக்க வேண்டுமென்று கருதி அவன் வாழ்ந்த திருக்கோவலூரின்மேற் படையெடுத்தான். போர் நிகழ்ந்தது. காரி பெரிய வீரன்; அவனிடம் வீரம் மிக்க பல வீரர்கள் இருந்தார்கள். என்றாலும் அதிகமானுடைய படைவலிக்கு முன் காரியின் படை நிற்க முடியவில்லை; தோல்வியையே கண்டது.




தான் எதிர்சென்று நின்று போர்செய்தால் அதிகமான் தன்னைக் கொன்றுவிடுவான் என்று அஞ்சிய காரி போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான். நேரே வஞ்சி மாநகர் சென்று தனக்கு நேர்ந்த கதியைச் சொன்னான்.


பெருஞ்சேரலிரும்பொறை காரிக்கு ஆறுதல் கூறினான். "இதுவும் நல்லதாகப் போயிற்று. அதிகமானைப் பூண்டோடு அழிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவனை அழித்து உனக்கு மீட்டும் திருக்கோவலூரை உரிமையாக்குகிறேன்" என்றான் சேரமான்.



அன்று முதலே போருக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். காரியும் தன்னுடன் ஓடிவந்த வீரர்களைத் தொகுத்து ஒரு சிறிய படையாக அமைத்துக்கொண்டான். தக்க படைப் பலம் இருக்கிறது என்ற நம்பிக்கை தோன்றியவுடன் போர் முரசு கொட்டினான் சேரன்.



அதிகமான் அதற்கு அஞ்சவில்லை. சிங்கக் குட்டியைப் போலத் துள்ளிக் குதித்தான். அவனுடைய கோட்டை மிகவும் வலிமையுள்ளது. பகைவர்களால் அழிப்பதற்கரியது. கோட்டைக் குள்ளிருந்து புறத்தே செல்வதற்கு இரகசியமான சுரங்க வழி ஒன்று இருந்தது. பகைவர்கள் நெருங்கும்போது அதன் வழியே யாரும் அறியாமல் வெளியிலே சென்றுவிடலாம்.



அதிகமான் வெளியே வந்து போர் செய்வதை விரும்பவில்லை. கோட்டையைத் தக்கபடி பாதுகாத்து வாயில்களை இறுக மூடி உள்ளே இருந்தாலே போதும் என்று எண்ணினான். கோட்டைக்குள்ளே புக இயலாமல் சலித்துப்போய்ப் பகைவர்கள் போய்விடுவார்கள் என்று அவன் எதிர்பார்த்தான்.



சேரன் படை அதிகமான் கோட்டையை முற்றுகையிட்டது. அதிகமான் வெளியே வரவில்லை; கோட்டையை மூடிவிட்டு உள்ளே இருந்தான். சில நாட்கள் சென்றன. உள்ளே இருப்பவர்களுக்கு உணவு குறைந்துவிட்டால் தானே கோட்டைக் கதவுகளைத் திறந்து வெளியே வந்துவிடுவான் என்று சேரமான் எதிர்பார்த்தான்.



அதிகமானோ கோட்டைக்குள் இருந்த சுருங்கை வழியாகச் சிலரை அனுப்பி உணவுப் பண்டங்களைக் கொண்டுவரச் செய்தான். அதனால் எத்தனை காலமானலும் உணவுக் குறை இன்றிக் கோட்டைக்குள் அதிகமானும் அவனைச் சேர்ந்தவர்களும் இருக்கமுடியும். இந்த இரகசியம் சேரமானுக்குத் தெரியாது. 'இவ்வளவு காலத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களை எப்படி அவன் இந்தக் கோட்டைக்குள் சேமித்து வைத்திருக்கிருன்!' என்றே வியப்படைந்தான்.




அதிகமானுடைய ஊழ்வினை பொல்லாததாக இருந்தது. அவன் அரண்மனை அந்தப்புரத்தில் துணி வெளுத்துவந்த ஒரு வண்ணாத்திப் பெண்ணுக்கு அரண்மனையைச் சேர்ந்த யாரோ தீங்கு இழைக்க முற்பட்டார்கள்.



அதை அவள் அதிகமானிடம் முறையிட்டுக் கொண்டாள். அவன் அவள் முறையீட்டைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதனால் அவளுக்கு அதிகமானிடம் வெறுப்பு உண்டாயிற்று. அவளுக்கு அரண்மனை இரகசியம் எல்லாம் தெரியும்.



அந்தப் பெண் இப்போது கோட்டைக்கு வெளியே ஊருக்குள் இருந்தாள். அதிகமானிடம் இருந்த வெறுப்பு இப்போது வேலை செய்யத் தொடங்கியது. அவள் சேரமான் படைத் தலைவன் ஒருவனிடம் சுரங்க வழியைப்பற்றிச் சொன்னாள்.



அதனைத் தெரிந்துகொண்ட அவன் முதல் வேலையாக அந்த வழியை அடைத்து விட்டான். அதிகமான் குகையுள் அகப்பட்ட சிங்கம்போல ஆயினான். வேறு வழியில்லாமல் கோட்டைக் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியிலே போர்க்களத்தில் குதிக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது.



போர் கடுமையாக மூண்டது. வைரமேறிய தோளும் உரமேறிய உடம்பும் உறுதியேறிய உள்ளமும் படைத்தவர்கள் அதிகமானுடைய படைவீரர்கள். அவர்களை எளிதில் அடக்க முடியும் என்றிருந்தான் சேரமான். அது நடவாது என்பதை இப்போது உணர்ந்து கொண்டான்.



தன் படைத் தலைவர்களுக்கு ஊக்கமூட்டினான் பெருஞ்சேரலிரும்பொறை. யானையும் யானையும் மோதின. குதிரையும் குதிரையும் பொருதன. வில்லிலிருந்து அம்புகள் சோனாமாரியாகப் பொழிந்தன. வாளைப் பலர் வீசினர்; வேலை ஓச்சினர்.


யாருக்கு வெற்றி,யாருக்குத் தோல்வி என்று தெளிய முடியாமல் பல நாட்கள் போர் நிகழ்ந்தது. கடைசியில் அளவிலே மிகுதியாக இருந்த சேரன்படை முன்னேறியது. காரி மானத்துடன் போர் புரிந்தான். இறுதியில் அதிகமான் படை தோற்றது. ஒரு வீரன் எறிந்த வேல் மார்பிலே பாய அதிகமான் வீழ்ந்தான்.



அவன் வீழ்ச்சியைக் கண்டு சேரன் படையினர் ஆரவாரித்தார்கள். பெருஞ்சேரல் இரும்பொறை, போர்க்களத்தில் மாண்டு கிடந்த அதிகமானக் கண்டான். அவன் நெஞ்சு நடுங்கியது. அதிகமான் புகழைப் புலவர்கள் பாடிய பாடல்களினால் உணர்ந்தவனாதலின் அவனுக்கே அவன் உயிரற்ற உடலைப் பார்க்கப் பொறுக்கவில்லை.


புலவர்கள் பாட்டால் அழுது புலம்பினர்கள். அதிகமானை எரித்து அங்கே நடுகல்லை நட்டு வீரர்கள் வழிபட்டார்கள். அந்த நடுகல்லைத் தெய்வமாகப் பின் வந்தவர்கள் கும்பிட்டு வணங்கினார்கள்.


ஈகையினாலும் வீரத்தாலும் சிறந்து நின்ற அதிகமான் இன்றும் பழம் பாடல்களில் மாயாமல் நிலைத்து நிற்கிறான்.




 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top