• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழு பெரு வள்ளல்கள் ___பேகன்___2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணிக் கொண்டிராமல்,கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதைக் கொடை மடம் என்று சொல்வார்கள். மடம் என்பதற்கு அறியாமை என்று பொருள். இது சரியா, தவறா என்று ஆராயும் அறிவுக்கு இடம் கொடாமல், உள்ளத்தில் கொடுக்கத் தோன்றியபோதே கொடை மடம் உடையவர்கள் கொடுத்துவிடுவார்கள். பேகன் மயிலின் இயல்பை அப்போது சிந்தித்துப் பார்க்கவில்லை;போர்வையை வழங்கிவிட்டான். இந்தக் கொடை மடத்தைப் பரணர் பாராட்டினர். "தண்ணீரே இல்லாமல் போன குளத்திலும் மழை பெய்கிறது; அகன்ற வயலிலும் பொழிகிறது; சிறிதும் பயன்படாத உப்பு நிலத்திலும் பெய்கிறது. இங்கேதான் பெய்ய வேண்டும், இங்கே பெய்யக் கூடாது என்று அது யோசிப்பதில்லை. மதம் பொருந்திய யானையையும் வீர கண்டையை அணிந்த காலையும் உடைய பேகன் அந்த மாரியைப் போன்றவன். வரம்பு இல்லாமல், ஆராய்ச்சி இல்லாமல் கொடையைப் பொழிகிற மழை அவன். இப்படிக் கொடை மடம் உடையவனாக இருக்கிறான் என்பதனால், வீரச் செயல்களிலும் அறியாமை உடையவன் என்று எண்ணக்கூடாது. படையைக் கொண்டு போரிடும் திறத்தில், நன்றாகச் சூழ்ந்து, இடத்துக்கும் காலத்துக்கும் தன் வலிமைக்கும் மாற்றான் வலிமைக்கும் ஏற்றபடி செயலை வகுப்பதில் வல்லவன். கொடை மடம் படுவானே அல்லாமல் படை மடம் படமாட்டான்" என்று அந்தப் பெரும் புலவர் பாடினர். அவன் கொடையைப் புகழ்ந்ததோடு நில்லாமல் வீரத்தையும் எடுத்துக் காட்டினர்.

அது முதல் தமிழ் மக்கள் பேகனை மயிலுக்குப் போர்வை வழங்கிய வள்ளல் என்று பாராட்டத் தொடங்கினார்கள்.
*

இவ்வாறு புகழ்பெற்ற பேகனுக்குக் கண்ணகி என்ற மனைவி இருந்தாள். ஆடல் கலையில் வல்ல ஒரு விறலியின் ஆட்டத்திலும் பாடலிலும் அவன் ஈடுபட்டான். அதனால் மற்றக் காரியங்களைக்கூட மறந்திருந்தான். அந்த விறலியும் சில காலம் ஆவிநன்குடியில் தங்கியிருந்தாள். இது சம்பந்தமாகக் கண்ணகிக்குத் தன் கணவன்மேல் ஐயம் உண்டாயிற்று. அதனால் சிறிது கோபமும் எழுந்தது. அதை ஊடல் என்பார்கள். எப்படியோ அந்தச் சிறிய ஊடல் பெரிதாக வளர்ந்துவிட்டது. பேகன் தன் மனைவியை ஒரு மாளிகைக்கு அனுப்பி அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டான். அவள் உணவு உடை முதலியவற்றைப் பெற ஏற்பாடுகள் செய்தான். ஆனால் அவளைப் போய்ப் பார்க்கவில்லை. இந்தச் செய்தி முதலில் யாருக்கும் தெரியாது. பிறகு மெல்ல மெல்லப் பேகனுடைய உறவினருக்குத் தெரிந்தது.

கண்ணகி தன் கணவனுடைய சினத்துக்கு ஆளாகித் தவித்தாள். அவளுக்குப் பேகனுடைய அன்பு இனிக் கிடைக்குமோ என்ற ஏக்கம் வந்து விட்டது. வாழ்க்கையே குலைந்துவிட்டதாக எண்ணி மறுகினாள்.

பேகனிடம் கூறி அவன் சினத்தை மாற்ற வேண்டும் என்று அவனுடன் பழகுகிறவர்கள் யாவரும் நினைத்தார்கள். ஆனால் அவனுக்கு நல்லுரை கூறும் துணிவு யாருக்கும் உண்டாகவில்லை. பேகனுடன் நெருங்கிப் பழகும் புலவர்களைக் கொண்டு தான் இந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று சில அன்பர்கள் எண்ணினார்கள்.

ஒரு சமயம் பரணர் வந்தார்; அவருடன் கபிலரும் வேறு சில புலவர்களும் வந்தார்கள். பரனரை நன்கு அறிந்திருந்தவரும் பேகனுடைய நண்பருமாகிய ஒருவர் அப்புலவரைத் தனியே சந்தித்து நிகழ்ந்ததைச் சொன்னர்; எப்படியாவது கண்ணகியை மீட்டும் பேகனோடு வாழும்படி வகை செய்யவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

பரணர் அதைப் பற்றி மேலும் விசாரித்துத் தெரிந்துகொண்டார். தாம் ஒருவராக நின்று பேகன் மனத்தை மாற்றுவதைவிடக் கபிலர் முதலிய மற்றப் புலவர்களையும் துணையாகக் கொண்டு அவனை இரங்க வைக்கலாம் என்று எண்ணினார். அந்தப் புலவர்களிடம் தம் கருத்தைச் சொன்னர். இன்னது செய்வதென்று அவர்கள் தங்களுக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்கள்.

ஒரு நாள் காலை கபிலர் தனியே சென்று பேகனைக் கண்டார். இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது முதல் என் உள்ளம் அங்கேயே இருக்கிறது" என்றார் புலவர்.

“என்ன அது?" என்று கேட்டான் வள்ளல். "நானும் என்னைச் சேர்ந்தவர்களும் உன்னையும் உன் மலையையும் பாராட்டும் பாடல்களை ஓரிடத்திலே பாடிக்கொண்டிருந்தோம். அப்போது யாரோ விம்மி விம்மி அழும் குரல் கேட்டது."

"அழுகையா? யார் அழுதார்கள்?"

"அதுதான் தெரியவில்லை. அழுதவள் ஒரு பெண். அவள் சில வார்த்தைகளைச் சொல்லிப் புலம்பினாள். அந்தக் குரல்தான் எத்தனை மென்மையாக இருந்தது. புல்லாங்குழல் அழுவதாக இருந்தால் எப்படி இருக்கும்! அதுபோல இருந்தது. அவள் யாரோ, அவளுக்கு என்ன துயரமோ, தெரியவில்லை. உன் பேரைச் சொன்னபோது அவள் அழக் காரணம் என்ன?எனக்கு அதை நினைக்க நினைக்க மனம் உருகுகிறது" என்று நிறுத்தினார் புலவர்.

பேகன் ஒன்றும் பேசவில்லை. கபிலர் இன்னாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். புலவர் தம் கருத்தை ஒரு பாட்டாகவே பாடிவிட்டார். பேகன் சிந்தனையுள் ஆழ்ந்தான். "சரி, நான் போய் வருகிறேன்" என்று சொல்லி அவர் விடை பெற்றுக்கொண்டார். சிறிது நேரம் சென்றது. பரணர் வந்தார். "இன்று ஒரு புதிய பாடல் பாடி வந்திருக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே வந்தார். பேகன் சிறிதே தெளிவு பெற்று, "வாருங்கள், வாருங்கள்" என்றான். அவர் அமர்ந்தார். "அந்தப் பாடலை ஒரு பாணன் பாடியதாகப் பாடியிருக்கிறேன்" என்றார்.

"எங்கே சொல்லுங்கள், கேட்கலாம்."

பாட்டை அவர் சொன்னார். அதுவும் கண்ணகியின் துயரத்தைச் சொல்வதாகவே இருந்தது.

"நீ இரங்காமல் இருப்பது கொடுமை. நாங்கள் யாழைச் சரிப்படுத்திக்கொண்டு செவ்வழிப் பண்ணிலே உன் காட்டின் பெருமையைப் பாடினோம். அப்போது நெய்தற் பூப்போன்ற கண்ணிலிருந்து நீரை வார விட்டுக்கொண்டு ஒருத்தி வந்தாள். நாங்கள் அப்பெருமாட்டியை வணங்கி, எங்கள் பெருமானுக்கு உறவினளோ?" என்று கேட்டோம். அவள் தன் மெல்லிய விரலால் கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள்; 'நான் அவனுடைய உறவினள் அல்லள். அவனுக்கு என்னைப்போல வேறு ஒருத்தி உறவினளாகி விட்டாள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்'என்று சொன்னாள்." இவ்வாறு அந்தப் பாடல் கூறியது. அதைக் கேட்டுப் பேகன் தலையைத் தாழ்த்திக்கொண்டான்.

மறுபடியும் ஒரு பாட்டைப் பரணர் கூறினார். அதுவும் பாணன் பாடுவதாகவே இருந்தது. "மயில் நடுங்கு மென்று உள்ளம் இரங்கி மேலாடையை உதவிய பேகனே, நாங்கள் இப்போது உன்னை அணுகியதற்குக் காரணத்தைக் கேள். எங்களுக்குப் பசி இல்லை; தாங்க வேண்டிய குடும்பப் பாரமும் இல்லை. இங்கே வந்து இசை பாடிப் பெற விரும்பிய பரிசில் ஒன்று உண்டு. அந்தப் பரிசிலை நீ அருளவேண்டும். நீ இப்போதே உன் தேரில் ஏறி, வருத்தத்தோடு உறையும் அப் பெருமாட்டியின் துன்பத்தைக் களையவேண்டும்”என்று பாடினார்.

பேகன் காதில் அதுவும் விழுந்தது. அவன் முகம் நிமிர்ந்து பார்க்கவில்லை. சிறிது நேரம் பேசாமல் அமர்ந்திருந்த பரணர், "நான் போய் வருகிறேன்" என்று விடைபெற்றுக் கொண்டார்.

அன்று பிற்பகலிலும் பேகனை வேறு புலவர்கள் அணுகினார்கள். அரிசில் கிழார் சென்றார். அவரும்: பாணன் கூற்றாகவே பாடினார்; "நின் நல்ல நாட்டைப் பாடிய பாணனாகிய என்பால் அன்பு வைத்துப் பரிசில் தர வேண்டுமென்று நீ எண்ணினாயானால் இந்தப் பரிசில் தரவேண்டும் : நின்னைப் பிரிந்து வாடும் அரிவை மீண்டும் தன் கூந்தலை வாரிப் பின்னிப் பூவைச் சூட்டிக் கொள்ளும்படி நீ இப்போதே தேரில் குதிரையைப் பூட்டவேண்டும்" என்று கவி பாடினர். அவர் போனபிறகு பெருங்குன்றுார் கிழார் வந்தார். அவரும் அதே போக்கில் பாடினார்.

பெரும் புலவர்கள் சொல்வதைக் கேட்டும். மனம் இரங்காமல் இருப்பானா பேகன்? அவன் தான் செய்த செயலுக்காக மிகவும் வருந்தினான். அன்றே தன் மனைவியைத் தானே சென்று அழைத்து வந்தான். மறுநாள் புலவர்கள் நால்வரையும் அரண்மனைக்கு வரச் செய்தான். தன் மனைவியையும் உடன் வைத்துக்கொண்டு அந்த நால்வரையும். வரவேற்று உபசரித்தான். கண்ணகி அப் புலவர்கள் காலில் விழுந்து வணங்கினாள். அப்போதும் அவள் கண்ணில் நீர் வழிந்தது. நன்றியறிவினாலும் மகிழ்ச்சியினாலும் வந்த கண்ணீர் அது.

 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top