• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழு பெரு வள்ளல்கள்___ ஆய்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
எழு பெரு வள்ளல்கள்

ஆய்


பொதியில் மலை தமிழ்நாட்டுக்குச் சிறப்பைத் தருவது. தென்றல் அங்கிருந்து வீசுகிறது. சந்தனம் அதில் விளைகிறது. அதனைச் சார்ந்து திருக்குற்றாலம், பாவநாசம் என்னும் அழகிய இடங்கள் இருக்கின்றன. அங்கே ஆய் குடி என்பது ஓரூர். அதை ஆய்க்குடி என்று இப்போது சொல்கிறார்கள். ஆய் என்ற வள்ளல் வாழ்ந்திருந்த இடம் அது. ஆய் அண்டிரன் என்றும் அவனைப் புலவர் பாடியிருக்கிறார்கள்.

அவனுடைய ஆட்சிக்குட்பட்டது பொதிய மலை. அக் காலத்தில் அம் மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன. ஆதலின் ஆய் பல யானைகளைப் பிடித்து வந்து பழக்கினான். ஆண் யானைகளைப் போருக்கு ஏற்றபடியும், பெண் யானைகளை வாகனமாகப் பயன் படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் பழக்கச் செய்தான். அவனுடைய ஆனைப் பந்தியில் நூறு யானைகளுக்குக் குறைவாக என்றும் இருந்ததில்லை.

அவனிடம் அடிக்கடி பாணர்களும் புலவர்களும் வருவார்கள். அவர்களுக்கு மற்றவர்கள் கொடுப்பது போலப் பொன்னும் மணியும் கொடுப்பான்; அவற்றோடு யானையையும் பரிசிலாக வழங்குவான். யானைப் பரிசில் தருபவன் என்று அவனைத் தமிழ் மக்கள் குறிப்பிடுவார்கள்.

அக்காலத்தில் உறையூரில் மோசியார் என்ற புலவர் வாழ்ந்து வந்தார். அந்நகரில் ஊரையெல்லாம் காணும் வகையில் ஓர் உயர்ந்த கட்டிடம் இருந்தது. அதற்கு ஊர் காண் ஏணி என்று பெயர். அந்த ஏணியிருந்த தெருவுக்கு ஏணிச் சேரி என்ற பெயர் அமைந்தது. அவ்விடத்தில் இருந்தமையால் அப்புலவரை ஏணிச் சேரி முடமோசியார் என்று ஆடையாளத்தோடு சொன்னார்கள். அவர் முடவர்; அதையும் அந்தப் பெயர் குறிப்பித்தது. முடவராக இருந்தாலும் தமிழ்ப் புலமையில் அவர் நிரம்பியிருந்தார். அவருடைய உறுப்புக் குறைவு காரணமாக யாரும் அவரை அவமதிப்பதில்லை. அக்காலத்தில் தமிழ் மக்கள் யாரையும் உறுப்புக் குறைவுக்காக இழிவு படுத்திச் சொல்வது இல்லை. இயற்கையாக அமைந்த குறையைக் குறையாகவே கருதுவது இல்லை. குணத்தினால் குறைவிருந்தால் அதைத்தான் இழிவாக எண்ணுவார்கள். உறுப்புக் குறை உள்ள புலவர்களை அந்த அடையாளத்தோடு பெயர் வைத்து வழங்கியதனாலே, இந்த இயல்பு தெரிகிறது. இழிவாகக் கருதினால் அப்படி வழங்குவார்களா?

ஏணிச்சேரி முடமோசியார் ஆய்குடிக்கு ஒருமுறை சென்றிருந்தார். ஆய் அவரிடம் பேரன்பு பாராட்டினான்; அவருடைய அறிவுச் சிறப்பையும் கவிபாடும் ஆற்றலையும் அறிந்து வியந்தான்; மகிழ்ந்தான். இருவரிடையேயும் நெருங்கிய கேண்மை உண்டாயிற்று. மோசியார் அங்கே தங்கினார். இன்றியமையாத காலங்களில் உறையூருக்கு வருவார்; சில நாட்கள் இருந்து மறுபடியும் ஆய்குடிக்குச் செல்வார்.

வண்டு மலரில் புகுந்துவிட்டால் இன்னிசை எழுப்பிக்கொண்டே இருக்கும். அப்படியே வள்ளலை அணுகி வாழ்ந்த மோசியாரிடம் பாடல்கள் பல எழுந்தன. அவனுடைய பண்புகளை அறிந்து நயமாக விளக்கிப் பாடினார். ஒரு பாட்டில், "வடக்கே இமயம் இருக்கிறது. அதனோடு ஒத்த பெருமை உடையதாகத் தெற்கே ஆய்குடி இருக்கிறது. அது இல்லையானால் இந்த உலகம் பிறழ்ந்து விடும்" என்று பாடினார்.

ஒருநாள் அவரைத் தன் தேரில் அழைத்துச் சென்றான் ஆய். காட்டு வழியே அந்தத் தேர் சென்றது. அங்கே பழக்கப்பட்ட பல யானைகள் இருந்தன. அவற்றைப் பார்த்த புலவர் ஒரு பாட்டைப் பாடினர். "இந்தக் காட்டில் இத்தனை களிறுகள் இருக்கின்றனவே! இந்தக் காடு, மேகக் கூட்டங்கள் தங்கும் மலையையும் சுரபுன்னை மலரால் தொடுத்த கண்ணியையும் உடைய ஆய் அண்டிரனுடைய குன்றத்தைப் பாடிற்றே?" என்று பாடினார். அவனுடைய யானைக் கொடையையே அப்பாடலில் சிறப்பித்தார்.

ஒருநாள் சில அன்பர்களுடன் தனியே பேசிக் கொண்டிருந்தார் மோசியார். அப்போது ஆயினுடைய ஈகைச் சிறப்பைப் பற்றிய பேச்சு வந்தது. "பொருளைச் சேமித்து வைப்பதனால் பயன் என்ன? அது எப்படியும் அழிந்து போவது. அதை அறிந்து தன்னிடம் வருபவர்களுக்கு வாரி வழங்குகிறான் ஆய்” என்றார் ஒருவர். "இந்த உலக வாழ்வு ஒன்றையே எண்ணித் தமக்கு வேண்டிய இன்பங்களைத் துய்த்து வாழும் செல்வர்கள் பலர் இருக்கிறார்கள். பிறருக்கு ஒன்றையும் அவர்கள் ஈவதில்லை. ஆய் இங்கே நன்கு வாழ்வதோடு மறுமையிலும் நல்ல இன்பம் கிடைக்க வேண்டுமென்று அறம் செய்கிறான்;வருங்கால வாழ்வை நினைக்கும் அறிவாளன் அவன்" என்று வேறு ஒருவர் கூறினர். அருகில் இருந்த மோசியார் உடனே, "நீங்கள் சொன்ன இரண்டு கருத்தும் பிழை" என்றார்.

"என்ன அப்படிச் சொல்கிறீர்கள்?" என்று இருவரும் கேட்டார்கள்.

"இது செய்தால் இது கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஒன்றைச் செய்தால் அது வாணிகத்தைப் போல ஆகிவிடும். இம்மையிலே செய்வது மறுமைக்கு வந்து உதவும் என்று, தான் செய்யும் அறத்துக்குப் பயனை எதிர்நோக்கும் அறவிலை வாணிகன் அல்லன் ஆய். சான்றோர்கள் போன வழி இது என்ற ஒரே நினைவோடு இந்த வள்ளன்மையை மேற்கொண்டிருக்கிறான்" என்று விடை கூறினார் புலவர். பிறகு அந்தக் கருத்தையே பாடலாகப் பாடினர்:
ஆய் அண்டிரனுடைய நாடு வளம் படைத்த நாடு. கொங்கு நாட்டில் இருந்த சில வேளிர் அந்நாட்டின் ஒரு பகுதியையாவது தங்கள் உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணினர். அவர்களிடம் வேற்படையை உடைய வீரர் பலர் இருந்தனர். அவர்களோடு ஒருமுறை சேரநாட்டு வழியே வந்து படையெடுத்தனர். சேர மன்னன் அவர்களுக்கு இணக்கமாக இருந்தான்.

அண்டிரன் அஞ்சவில்லை. அவனிடம் யானைப் படை பெரிதாக இருந்தது. யானையை வேலால் கொல்வது எளிது. வேற்படை கொங்கர்களிடம் சிறப்புடையதாக இருந்தது. யானைப் படைக்கு எதிர் வேல் வீரர் படை என்பதை உணர்ந்தே அவர்கள் படையெடுத்து வந்தார்கள். ஆய் அண்டிரன் தக்க படை வகுப்புடன் எதிர்த்தான். கடும் போராகத் தோன்றிய அது பிறகு எளிய போராகிவிட்டது. வேலை ஓச்ச முடியாமல் அதனைப் பிடித்த வீரர்களை ஆயின் படை வீரர்கள் கொன்றனர். எதிர் நிற்கமாட்டாமல் புறங் கொடுக்கத் தொடங்கினர் கொங்கர். ஆய் அவர்களை விடாமல் துரத்தினான். மேற்குக் கடற்கரை வரைக்கும் அவர்களே விரட்டி அடித்தான். இறுமாந்து ஆரவாரம் செய்துவந்த வேல் பிடித்த வீரர்கள் யாவரும் அப்படியப்படியே போர்க்களத்தில் வேல்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அந்த வேல்களை யெல்லாம் பொறுக்கித் தன் ஊரில் ஓரிடத்தில் குவிக்கச் செய்திருந்தான் ஆய்; அவை மலைபோலக் குவிந்திருந்தன.

இந்த வீரச் செயலையும் ஆயின் கொடையையும் இணைத்து ஒரு பாட்டுப் பாடினர், மோசியார்.

“மணிகளைப் பதித்த அணிகலன்களை அணிந்த ஆய் வள்ளலே, நீ வருகிறவர்களுக் கெல்லாம் யானைகளை அளிக்கிறாயே! இப்படிக் கொடுத்துக்கொண்டே இருந்தால் இங்கே யானைக்குப் பஞ்சம் வந்து விடாதோ? அல்லது உன் நாட்டில் மட்டும் ஒரு பெண் யானை கருவுற்றால் ஓர் ஈற்றுக்குப் பத்துக் கன்றுகளைப் போடுமோ! வருகிற புலவர்களுக்கும் பாணர்களுக்கும் இனிய முகத்தோடு நீ வழங்குகிற யானைகளைக் கனக்குப்பண்ண முடியுமா? நீ கொங்கர்களை வென்று மேல் கடலுக்கு ஒட்டினபோது அவர்கள் களத்திலே போட்டுச் சென்ற வேல்களைத்தான் எண்ண முடியாதென்று நினைத்தேன். அவற்றையாவது எண்ணி விடலாம் என்று தோன்றுகிறது. நீ கொடுக்கும் யானையைக் கணக்குப்பண்ண முடியாது போல் இருக்கிறதே!' என்று சுவைபடப் பாடினார்.

ஒரு சமயம் யாரோ முனிவர் ஆயினிடம் வந்தார். அவர் ஒரு நீல ஆடையை ஆயினிடம் கொடுத்து, "இது மிகவும் புனிதமானது; கடவுள் தன்மையை உடையது. இதை வைத்திருப்பவர்களுக்கு எல்லா வளங்களும் நிறைய உண்டாகும்" என்று சொன்னார்.

"தங்களுக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட் டான் வள்ளல்.

"நான் காட்டில் தவம் செய்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு நாகங்கள் அங்கே சேர்ந்திருந்தன. அவற்றின்மேல் இந்த நீல ஆடை இருந்தது. சிறிது நேரத்தில் அவை போய்விட்டன. அவ்வாறு கிடைக்கும் ஆடை மிகச் சிறந்ததென்று நான் கேட்டிருக்கிறேன்."

"இதை நீங்களே வைத்திருக்கலாமே!"

"துறவியாகிய எனக்கு இது எதற்கு? பலருக்கு நலம் செய்யும் உன்னிடம் இருந்தால் சிறந்த பயனை நீயும் அடைவாய்; உன்னால் பிறரும் அடைவார்கள் என்று எண்ணி உனக்கு வழங்குகிறேன்."

அதை ஆய் பணிவுடன் வாங்கிக்கொண்டான். தக்க இடத்தில் அதைச் சேர்த்து விட்டோம் என்ற உவகையுடன் முனிவர் விடை பெற்றுச் சென்றார்,பிறருக்குக் கொடுப்பது ஆயின் வழக்கமேயன்றி ஒருவரிடமிருந்து ஒன்றைப் பெறும் வழக்கம் அவன்பால் இல்லை. ஆதலின் முனிவர் கொடுத்த ஆடையை வாங்கிக் கொண்டாலும் அவன் உள்ளம் உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தப் புனித ஆடையை வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. யாருக்கு அளிப்பது என்று ஆராய்ந்தான். கடைசியில் அவனுடைய குலதெய்வமாகிய சிவபிரானுக்கு வழங்க முடிவு செய் தான். மலைமேல் உள்ள கோயிலில் எழுந்தருளியிருந்த சிவபெருமானுக்கே ஆகுக என்று அளித்துவிட்டான். தவம் செய்து கிடைப்பதாகிய அந்த நீல ஆடையை வழங்கி இறைவனையும் தன்னிடம் கொடை பெற்றவகை ஆக்கிவிட்டான் ஆய்.

இவ்வாறு விளங்கிய ஆய் அண்டிரன் பல காலம் புவவர் பாராட்டவும் மக்கள் மதிக்கவும் வாழ்ந்து இறைவன் திருவடிநிழலை அடைந்தான். அவனுடைய மனைவியரும் அவனுடன் தீப்பாய்ந்து உலக வாழ்வை நீத்தனரென்று தெரியவருகிறது.

அவனது பிரிவைத் தாங்காமல் புலவர்கள் துயரத்தால் வாடினார்கள். “பாடும் புலவர்களுக்குக் குதிரையும் களிறும் தேரும் நாடும் ஊரும் வழங்குவதில் சிறிதும் சளையாத ஆய் இன்று தன் மனைவியரோடு, காலனென்னும் கண்ணில்லாத கொடியவன் செலுத்த, மேலோருலகத்தை அடைந்தான். அவன் உடல் மறைந்தது. அவனால் நலம் பெற்ற புலவர்கள் தம் சுற்றத்தோடு பசியினால் வாடிப் பிறருடைய நாடுகளை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்கள்" என்று குட்டுவன் கீரனார் என்ற புலவர் பாடினார்.

முடமோசியார் இப்போது அழவில்லை. துயரம் எல்லைக்கு மிஞ்சிப் போய்விட்டது அவருக்கு. ஆதலின் பித்துப் பிடித்தவர்போல் ஆனார்; "அதோ கேளுங்கள். உங்கள் காதில் அந்த ஒலி விழவில்லையா? இந்திரனுடைய அரண்மனையில் முரசு முழங்குகிறதே! ஆய் அண்டிரன் வருகிறான் என்று வச்சிரப் படையையுடைய இந்திரன் வாழும் நகரத்தில் அவனை வரவேற்க ஏற்பாடு நடைபெறுகிறது. வானத்திலே அந்த ஒலிதான் கேட்கிறது" என்று பாடினார்.

 




Last edited:

Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
??????...
Podhigai malai uchiyile purappadum thendral....info staringa lines padikumbodhu indha song mindla vanduruchu ka..???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
??????...
Podhigai malai uchiyile purappadum thendral....info staringa lines padikumbodhu indha song mindla vanduruchu ka..???
???Pattu upload pannalamnu ninaichen but adhu Vera feel varumnu vittuten???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top