ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 6

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 6

ஆத்மிகாவைக் கண்ட மாத்திரத்தில் அனைத்தையும் மறந்து சிட்டாகப் பறந்தாள் ராதா. குழந்தையும் இவளிடம் தாவிக் கொண்டது.

இவள் கழுத்தை இறுக்கி அணைத்துக் கன்னத்தை எச்சில் பண்ணியது. ஒரு புன்னகையோடே அதைத் திருப்பிக் கொடுத்தாள் ராதா.

"ஆன்ட்டி! உங்களுக்கு ஹங்க்ரியா?" உதட்டைக் குவித்து அழகாக மழலை பேசினாள் இளையவள்.

"இல்லையே செல்லம். ஏன் கேக்குறீங்க?"

"இல்லை... நீங்க அழுதிருக்கீங்க. அதான் கேட்டேன். நீங்க தானே அன்னிக்கு சொன்னீங்க. உங்களுக்கு ஹங்க்ரி வந்தா அழுவீங்கன்னு."

குழந்தையின் பேச்சில் பிடிபட்டாற் போல உணர்ந்தாள் ராதா. அழுதழுது அவள் முகம் கொஞ்சம் வீங்கினாற் போலத்தான் இருந்தது. ஆனால், அதைக் குழந்தை கண்டு கொள்வாள் என அவள் எதிர் பார்க்கவில்லை.

முகத்தைக் கூடக் கழுவாமல் ஓடி வந்திருந்தாள். அப்போதுதான் சுற்றுப்புறம் ஞாபகத்தில் வரத் திரும்பிப் பார்த்தாள். அந்த ப்ளாக் ஆடியில் சாய்ந்த படி இவளையே பார்த்திருந்தான் அபராஜிதன்.‌

அந்தப் பார்வை அவள் உயிரின் ஆழம் வரை சென்றது. ஆன்ட்டியின் பார்வை அப்பாவைக் கண்டு கொண்டதை பார்த்தவுடன் ஆத்மிகா உற்சாகமானாள்.

"ஆன்ட்டி...‌ அப்பா தான் இன்னைக்கு... ராதா ஆன்ட்டியைப் பார்க்கப் போகலாமான்னு கேட்டாங்க." ராதாவின் காதில் ரகசியம் பேசியது குழந்தை.

குழந்தைக்காக முகத்தைத் திருப்பியிருந்த ராதா விலுக்கென்று அபராஜிதனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் உணர்வுகளை அப்பட்டமாகக் காட்டும் அந்தக் கண்களை இப்போது சன் கிளாஸிற்குள் மறைத்திருந்தான்.

"பேபி... கிளம்பலாமா?" அந்த மாயக் குரல் அவளை அசைத்துப் பார்த்தது. அப்பாவின் கேள்வியில் ராதாவைப் பார்த்தாள் ஆத்மிகா.

"ஆன்ட்டி... நீங்களும் வர்றீங்களா? நாம கொஞ்ச நேரம் விளையாடலாம்." ஆசையாகக் கேட்டாள் ஆத்மிகா. இருந்தாலும், அந்தக் காரில் ஏற ராதா விரும்பவில்லை.

"ஆத்மி குட்டி... நம்ம ரெண்டு பேரும் ஆன்ட்டியோட ஸ்கூட்டியில போவோமா?"

"இல்லையில்லை, அது சேஃப் இல்லை. பேபி... உங்க ஆன்ட்டியை பத்திரமா கொண்டு போய் சேர்த்திருவேன். பயப்படாம ஏறச் சொல்லுங்க." அவள் பேச்சை முடிக்கு முன் அபராஜிதனிடமிருந்து பதில் வந்தது.

"ப்ளீஸ் ஆன்ட்டி." கெஞ்சலாக ஒலித்த அந்த மழலைக் குரலை மறுக்கும் திடம் ராதாவிற்கு இல்லை. எதுவும் பேசாமல் குழந்தையோடு பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கார் ஆத்மிகாவின் வீட்டை அடைந்த போது சுஜாதா வாசலுக்கே வந்து வரவேற்றார். இன்று அவர் முகம் சற்றே பளபளத்தாற் போல தோன்றியது ராதாவிற்கு.

"வாம்மா ராதா." ஆசையாக வரவேற்றவர் அவளை அழைத்துச் சென்று சோஃபாவில் அமர வைத்தார். உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தவர் வேலை செய்பவர்களுக்குக் காஃபி கொண்டு வருமாறு பணித்தார்.

"ஆன்ட்டி, அதெல்லாம் வேணாம். நான் ஆத்மியோட கொஞ்ச நேரம் ரூம்ல விளையாடுறேனே."

"ஓ... அப்படியா? அப்போ நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குப் போங்க. நான் காஃபியை அங்கேயே கொண்டு வர்றேன்." இதைச் சொல்லும் போதும் அவர் முகத்தில் வாய்கொள்ளாப் புன்னகையே இருந்தது.

"ம்... சரி ஆன்ட்டி." குழம்பிய படியே சொன்னவள் விட்டால் போதும் என்பது போல மாடி ஏறினாள். குழந்தையும் இவளோடு கை கோர்த்துக் கொண்டது.

மாடியிலிருந்த சோஃபாவில் காலாட்டியபடி விச்ராந்தியாக அமர்ந்திருந்த அபராஜிதன் இவளையே பார்த்திருந்தான். அவள் இருதயத்தில் நங்கூரம் பாய்ச்ச முனைந்த அந்தப் பார்வையை ஒதுக்கித் தள்ளியவள் குழந்தையின் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

கலரிங்கில் மும்முரமாக இருந்த இருவரையும் கலைத்தபடி வந்து சேர்ந்தார் சுஜாதா. கையில் பெரிய ட்ரே இருந்தது. வந்ததும் வராததுமாக ராதாவின் வாயில் ஸ்வீட்டைத் திணித்தவர் திகைத்த அவள் முகம் பார்த்து வாய் விட்டுச் சிரித்தார். குழந்தையும் பாட்டியைப் பின்பற்றியது.

"ராதா! எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ சொல்லலைன்னா என்ன? எனக்கு அபி எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான்." சுஜாதாவின் பூரிப்பில் திணறிப் போனாள் ராதா.

"ஆன்ட்டி... நீங்க... நீங்க என்ன சொல்றீங்க?"

"அடடடடா! நாலு சுவருக்குள்ள இருக்கிற இந்த மங்குணி ஆன்ட்டிக்கு அப்படி என்ன தெரியப் போகுதுன்னு நீயும் மறைச்சிட்ட இல்லை ராதா?"

"ஆன்ட்டி..."

"ஆனா அபி எல்லாத்தையும் சொல்லிட்டான்." அதையே திரும்பத் திரும்பச் சொன்னாரே தவிர, அபி அப்படி எதைச் சொன்னான் என்று மட்டும் சொல்லவில்லை அவர்.

"நீ இந்த வீட்டுக்கு முதல் முதலா வந்தப்போ நான் என்ன நினைச்சேன் தெரியுமா? இந்தப் பொண்ணு மாதிரி ஒரு பொண்ணை ஏன் ஆண்டவன் இந்த வீட்டுக்கு மருமகளாக் குடுக்கலைன்னு வருத்தப்பட்டேன். ஆனா, இப்போ அந்தப் பொண்ணே இந்த வீட்டுக்கு மருமகளா வரப்போறாளே. அப்போ என் பிரார்த்தனை கடவுள் காதுல விழுந்திருக்குன்னு தானே அர்த்தம்?"

துள்ளிக் குதிக்காத குறையாக பேசிக் கொண்டிருந்தார் சுஜாதா. ராதாவின் புலன்கள் சட்டென்று இயக்கத்தை நிறுத்தின.
'என்ன பேசுகிறார் இந்த அம்மா? அபராஜிதன் அப்படி என்ன சொன்னான் இவர்களிடம்?' மண்டைக்குள் வண்டின் ரீங்காரம் கேட்டது ராதாவிற்கு.

"ஆன்ட்டி... அப்படி..." அவளை முழுதாகப் பேசவிடாமல் பாதியில் நிறுத்தினார் சுஜாதா.

"இனி ஆன்ட்டி இல்லை. அத்தை... அத்தைன்னு கூப்பிடு ராதா." ஆசையாக சுஜாதா சொல்ல சுவாசிக்க மறந்தாள் ராதா. பொங்கும் பிரவாகமாக ஆர்ப்பரித்தவரைப் பேசவிட்டவள் அந்த நேரத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

"உங்க பையன் என்ன சொன்னாங்க?" இப்போது நிதானமாக வந்தது ராதாவின் குரல்.

"இந்த ராதாவை அவனுக்குப் பிடிச்சிருக்காம். இந்தக் குடும்பத்துக்கு ராதாவை விட நல்ல மருமகள் கிடைக்க மாட்டாளாம். அவன் எதிர்பார்க்கிற எல்லா விஷயமும் இந்த ராதாக்கிட்ட இருக்குதாம்." பட்டியல் போல வரிசைப்படுத்திக் கேலியாகச் சொன்னவர் வாய்விட்டுச் சிரித்தார்.

அந்த ஆனந்தமான சிரிப்பைக் குலைக்க மனமில்லாமல் அமைதியாக இருந்தாள் ராதா. இன்று காலையில் நடந்தது என்ன? இப்போது நடப்பது என்ன?

"ராதா!" இப்போது கலவரமாக அழைத்தார் சுஜாதா. நிமிர்ந்து பார்த்தாள் இளையவள்.

"உங்க வீட்டுல இதுக்குச் சம்மதிப்பாங்களா?" கூர்மையாக வந்தது கேள்வி.

"அம்மா!" அந்தக் குரலில் இரு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள். ஆத்மிகாவின் ரூமிற்குள் அபராஜிதன் வந்து கொண்டிருந்தான்.

இதுநாள் வரை அந்த ரூமில் அபராஜிதனை ராதா பார்த்ததில்லை. ஒரு தந்தையாக ஆத்மிகாவின் எந்த இயக்கத்திலும் அவன் பங்களிப்பு இருந்ததில்லை.

"அப்பா உங்களைக் கூப்பிடுறாங்க." சொன்னவன் ஆத்மிகாவிற்கு எதிரே தரையில் அமர்ந்து கொண்டான். குழந்தை கூட விசித்திரமாகத் தன் தந்தையின் முகம் பார்த்தது.

"காஃபியைக் குடிம்மா. இதோ வந்தர்றேன்." சொல்லிவிட்டு நகர்ந்தார் சுஜாதா. ராதா வண்ணம் தீட்டிப் பாதியில் இருந்த படத்தைத் தொடர்ந்தான் அபி.

"ஐயோ! அது ஆன்ட்டியோட பேப்பர்." பரிதவித்த குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்தான் அபி.

"பரவாயில்லை பேபி... ஆன்ட்டி ஆரம்பிச்சு வச்சதை அப்பா முடிக்கலாம்." இரு பொருள்பட வந்தது பதில். ஆத்மிகா திகைப்பாக ராதாவைப் பார்த்தாள்.

"ஆன்ட்டி! உங்க கலரிங்கை அப்பா கன்ட்டினியூ பண்ணுறாங்களாம். உங்களுக்கு ஓகே வா?" சின்னவளின் கேள்விக்கு இடம் வலமாகத் தலை அசைத்தாள் ராதா. அந்த மறுப்பில் பல அர்த்தங்கள் இருந்தன.

"ம்ஹூம்... டோன்ட் டச் பா." தன் பிரியத்திற்குரிய ஆன்ட்டியின் பேப்பரைப் பத்திரம் பண்ணியது குழந்தை.

"பேபி... பாட்டிக்கிட்ட போய் அப்பாக்குக் காஃபி வேணும்னு சொல்லுறீங்களா?"

"ஓ..." அப்பா தன்னோடு அத்தனை தூரம் பேசியதில் குதித்துக் கொண்டு ஓடினாள் ஆத்மிகா.

"ஆத்மி கவனம்." பெறாமலே தாயானாள் ராதா. கால்கள் இரண்டையும் நீட்டி சுவரில் வாகாகச் சாய்ந்து கொண்டான் அபராஜிதன். அவன் கண்கள் ராதாவை ஆராய்ச்சியாகப் பார்த்தது.

"என்னாச்சு?"

"பிடிக்கலை." சட்டென்று வந்தது பதில்.

"அதுதான் ஏன்?"

"பிடிக்கலை." இப்போது இன்னும் கொஞ்சம் உறுதியாக வந்தது பதில்.

"அப்போ காலையில அத்தனை சிரத்தை எடுத்து பார்த்துப் பார்த்து உடுத்திக்கிட்டு வந்தது எல்லாம் பொய்யா?" அவன் கேள்வியில் முகம் சிவந்து போனது ராதாவிற்கு. ஆனாலும் பதில் கொடுக்கத் தயங்கவில்லை.

"பொய் எங்கிட்ட இருக்கலை. என் எதிரில நின்னுச்சு." அந்த விளக்கத்தில் புன்னகைத்தான் அபராஜிதன்
.
"ராதா! அந்தப் புள்ளியைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு நான் வந்துட்டேன். இனி நான் திரும்பிப் பார்க்க மாட்டேன்." நறுக்குத் தெறித்தாற்ப் போல வார்த்தைகள் வந்து வீழ்ந்தன.

என்னோடு நீயும் கை கோர்த்து விடு என்ற மறைமுகமான ஆணை அவன் தொனியில் தெரிந்தது.

உனக்கு நான் சளைத்தவர் அல்ல என்று இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று தாங்கி நின்றது.
 
#8
ஹா... ஹா... ஹா.............
நம்மளோட பாட்டு அபராஜிதனின்
காதில் விழுந்திட்டுதா,
ஜைனப் டியர்

அவனோட பருவத்தின் கேள்விக்கு
ராதாவிடம் பதிலைக் கேட்கிறானே
ஜைனப் டியர்?
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top