கடற்கரை

Jaalan

Author
Author
SM Exclusive Author
#1
கதிரவன் கடலில் கால் நனைக்க எத்தனிக்கும் அம்மாலைப் பொழுது, அலைகள் கரையுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. கொளுத்த நாய்களால் இழுத்து செல்லப்படும் வாக்கிங் பெருசுகள், அந்த நாய்கள் குதறியது போன்று ஆடையணிந்திருக்கும் மாடர்ன் இளசுகள், சுண்டல், ஜோசியம் மற்றும் கேளிக்கைகள் என பெசன்ட் நகர் பீச்சின் எந்த அடையாளமும் இல்லாத கடற்கரையில் அமர்ந்திருந்தான் மித்ரன். இதுவும் பெசன்ட் நகர் தான் கல்யாண வீட்டின் சமையலறை போல அலங்காரமில்லாத ஒரிஜினல் பெசன்ட்நகர். இதமான கடல்காற்று அவன் தலைமுடியை கலைக்க, ஒரு கையால் அதனை சரிசெய்தவாறு, பாக்கெட்டில் துளவி ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான். லைட்டரின் மண்டையை திருகி அதன் கோபக் கனலில் சிகரெட்டை பற்ற வைத்தான்.
நிக்கோட்டின் உடலெங்கும் பரவ சிகரெட்டை சுண்டி இழுத்து காற்றெங்கும் புகையை பரப்பினான். அடுத்த முறை சிகரெட்டை முத்தமிடும் முன் அவன் செல்போன் சிணுசிணுத்தது அதை காதில் திணித்து,

"சொல்லுங்க சார்" என்றான்.

" இப்ப நீ முடிவா என்ன சொல்ற.. ? " என்றது மறுமுனை.

"நான் ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டேன் சார், முடிவ நீங்க தான் சொல்லனும்"

"நீ எங்க இருக்கனு சொல்லு நான் நேர்லயே வரேன்"

"உங்களால் கண்டுபிடிக்க முடியாத இடத்துல இருக்கேன், நான் ஒன்னும் அவ்ளோ முட்டாள் இல்லை சார். நான் கேட்ட 20 பர்சண்ட் கொடுத்துருங்க . பேசறதுக்கு வேற எதுவுமில்லை"

சில நொடி மௌனத்திற்கு பின்னர், "ம்ம்.. நான் எல்லார்ட்டையும் கேட்டு தான் டிசைட் பண்ண முடியும்....., டைம் வேணும் "

"தாராளமா எடுத்துக்கோங்க சார், பட் நான் கேட்டத மட்டும் கொடுத்திருங்க .. "

பதில் கூறாமல் கட் செய்தது மறுமுனை. உதடுகள் மெல்லிய புன்னகைக்காக நெளிய அந்த செல்போனை பிரித்து சிம்கார்டை வெளியே எடுத்தான். அதற்குள் அவனது மற்றொறு போனும் கனைத்தது. எரிச்சலுடன் அதை காதில் வைத்தான்.

"கேப் ட்ரைவர் பேசரேன் , பீச்சுக்கு வந்துட்டேன் சார்"

"இப்போ வந்துடறேன், டூ மினிட்ஸ்"


"ட்ராப் எங்க சார்"


"கே.ஜி. அப்பார்ட்மெண்ட்ஸ், ஆதம்பாக்கம்."

தொடரும்.
 
Top