• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கடாரம் கொண்டான்-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
6,019
Reaction score
12,517
Location
Gobichettipalayam
அத்தியாயம்-13

ஒரு மாதம் கடந்திருந்தது.

கட்சியின் பொதுக்கூட்டம்!!!

ராமநாதன் இறந்தபின்பு நடக்கும் முதல் பொதுக்கூட்டம்.

சட்டசபையின் நிகழ்வுக்கு பிறகு இந்திரஜித் தன் முகத்தை வெளி உலகத்திற்கு காட்டுகிறான்.

தைரியமாகவும், தெளிவாகவும் வந்திருந்தான்.

இன்பாவும் இருந்தான். நெடுஞ்செழியன் அரைமணி நேரம் தாமதமாக வர, பொதுக்கூட்டம் ஆரம்பித்தது.

முதலில் கட்சியை பற்றி ஒருவர் புகழாரம் பாடிவிட்டுச் செல்ல, அடுத்து இரு மந்திரிகள் பேச, அடுத்து இந்திரஜித் எழுந்து சென்றான்.

அனைவரின் முகத்திலும் சட்டசபையின் நிகழ்வு ஒரு நொடி வந்து போனது.

அதரங்களில் ஒருவித எள்ளல்!!!

பத்திரிக்கையாளர்களும் தயாராக இருந்தன.

இந்திரஜித்தும் அதை மிகச் சரியாக அறிவானே.

மனதுக்குள் அவன் பட்ட அவமானம், கௌரவ அங்கீகாரத்தை தேடி ஆழ்கடலுக்குள் எழும் பூகம்பத்தினை போன்று வெடிக்க, பழையது மொத்தத்தையும் ஒதுக்கி வைத்தவன் தன்னுடைய பேச்சைத் துவங்கினான்.

எதிர்க்கட்சியின் ஊழல், செயல்திறன், மக்கள் பணி என்று அவன் எதையும் பேசவில்லை.

தங்களின் கட்சியை பற்றியே பேசினான். தொடக்கத்தை பற்றி பேசினான்.

விஸ்வேஷ்வரரை பற்றி பேசினான். கட்சியின் மூத்த மந்திரிகள் ஐவரை பற்றி பேசினான்.

தங்களின் எழுச்சியைப் பற்றி பேசியவன், தங்களின் சின்னத்தை அனைவரின் மனதிலும் பதிக்கும் வகையில், ஒரு திட்டத்தைக் கூற, அனைவரின் வாயும் பிளந்தது.

'இது சாத்தியமா?' என்று கட்சி உறுப்பினர்கள் நினைக்க, நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, 'இது என்ன புது கதையாக இருக்கிறது என்றே இருந்தது'.

நெடுஞ்செழியனோ யாரை கேட்டு இங்கு இவன் அறிவிக்கிறான் என்று கடுங்கோபம் கொண்டாலும், வெளியே காட்ட முடியாத நிலையில், கையைத் தட்ட வேண்டிய நிலை!

இன்பாவோ சகோதரனை மனதினில் மெச்ச, வீட்டில் இருந்தபடி நேரலையில் அனைத்தையும் யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த விஸ்வேஷ்வரரின் இதழ்கள் மெலிதாய் விரிய, தன் கட்டை நரை மீசையை அதே கம்பீரத்துடன் நீவினார் அவர்.

பார்வதியும் காய்கரிகளை வெட்டியபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர், பொதுக்கூட்டம் முடிந்த பின்பு எழுந்து திரும்ப, தன் அறையின் வாயிலில் தொலைக்காட்சியை வெறித்தபடி நின்றிருந்த ரதி அவரின் கண்களில் விழுந்தாள்.

கீழுதட்டை கடித்தபடி நின்றிருந்தவளின் நிலை அவருக்கு எதையோ சொல்ல, சட்டென திரும்பி டிவி ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றியவர், "வா ரதி.." என்றழைத்தார்.

அவளோ இல்லை என்பது போல 'உம்'மென்று தலையாட்டிவிட்டு அறைக்குள்ளேயே நுழைந்து கொண்டாள்.

படுக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு அன்றைய தினமே மீண்டும் மீண்டும் மனக் கண்ணில் வந்தது.

எவ்வளவு கெஞ்சல்!

எவ்வளவு வேதனை!

எத்தனை வலி!

எத்தனை கண்ணீர்!

அதைவிட தன் கணவனுக்கு என்று அவள் வைத்திருந்த ஒன்றை யாரோ, ஒருவனிடம் இழந்தது இன்னுமே அவளைக் கொன்றது.

மனதளவில் சுத்தமாக இருக்கிறோம் என்று தனக்குத் தானே அவள் கோடி முறையாவது சொல்லியிருப்பாள். அது அப்போது ஆறுதல் அளித்தாலும், அவளின் மேனியில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்று அவனால் ஏற்பட்டிருந்த காயங்கள் மறைந்தாலும், அந்த இடங்கள் இன்னும் வலியை கொடுப்பது போல இருந்தது அவளுக்கு.

குளிக்கும் போதெல்லாம் தன் மேனியை தொடவே அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது என்பது தான் உண்மை.

மறந்துவிடு என்று அனைவரும் கூறினாலும், அவளால் அதை மறக்க முடியுமா?

எவ்வளவு சுலபமாக அனைவரும் கூறினாலும், வலியை அனுபவித்தவர்களுக்கு தானே தெரியும், அந்த நொடி எவ்வளவு கொடுமையானது என்று.

அவளால் சாப்பிட முடிவதில்லை. சாப்பிடும் போதெல்லாம் வயிறு இழுத்துப் பிடிப்பது போல இருக்கும். இரவு மாத்திரைகளின் உதவியிலேயே அவளுக்கு உறக்கமும் வருகிறது.

மற்றபடி காலை வேளைகளில் நடைபிணம் போன்று தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

அவளை யாராவது சிரிக்க வைத்தால், அந்த நொடி கடுகளவு இதழ்களை மட்டும் அசைப்பவளை, அடுத்த நொடி மீண்டும் அந்த நினைவுகள் ஆட்கொண்டுவிடும்.

மிகவும் கஷ்டப்பட்டாள் என்பதே உண்மை.

தினமும் காலையில் கண் விழிக்கும் போதும், இரவு உறங்கும் போதும் மனதளவில் உண்டாகும் வலியை அவளால் தடுக்கவே முடியவில்லை.

அப்படியொரு வலியும், வேதனையும் அவளுக்கு.

உடலால் உண்டாகும் வேதைனையை விட, மனதால் உண்டாகும் வேதனைக்கு வலிமை அதிகம் தான்.

மனதளவில் ஏற்படும் எதுவும் உடலிலும் அதைக் காட்டிவிடும்.

உடல் இளைத்தாள்.

கறுத்துக் கூட போய்விட்டாள்.

அன்று அவள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆறுமுகமும், வள்ளியம்மையும் ஊரில் இருந்து வந்தார்கள்.

வந்தவர்கள் பேத்தியை பார்த்து அதிர்ந்து தான் போனார்கள்.

ஏனெனில் பரீட்சைக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த பேத்தியை பார்த்தவர்கள் ஆயிற்றே.

தன் பொலிவு, புன்னகை மொத்தத்தையும் இழந்து காணப்பட்ட பேத்தியை பார்த்த இருவரும் பதறிப் போனார்கள்.

இருவரையும் அமர வைத்து பார்வதி இருதய அறுவை சிகிச்சை பற்றி கூற இருவரும் நெஞ்சில் கரம் வைத்துக் கொண்டார்கள்.

விழிகள் எல்லாம் கண்ணீரில் குளமாகத் தேங்கியது.

வள்ளியம்மையின் கண்ணீரை பார்வதி துடைக்க, ஆறுமுகத்தின் கண்ணீரை தன் கரம் கொண்டு துடைத்தாள் ரதிவர்தினி.

"எனக்கு எதுவும் இல்ல.. நல்லாதான் இருக்கேன் தாத்தா.." சொல்லும் போதே பெண்ணவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோட, மூவரும் இணைந்து அவளை தேற்றினார்கள்.

"பார்வதி! அவங்களை சாப்பிட வை" அங்கு வந்த விஸ்வேஷ்வரர் சொல்லிவிட்டுச் செல்ல, வள்ளியம்மை ஆறுமுகத்தை அனைவரும் நன்றாகவே கவனித்துக் கொண்டனர்.

ரதிவர்தினியும் வள்ளியம்மையின் மடியிலேயே தலை சாய்த்திருந்தவள், அவ்வப்போது தன் கண்ணீரை வள்ளியம்மையின் புடவையில் மறைத்துக் கொண்டிருந்தாள்.

அவரிடம் உண்மையை சொல்ல அவளுக்கு மனமில்லை.

அவர்கள் வருகிறார்கள் என்ற போதே பார்வதியிடம், "அந்த விஷயத்தை மட்டும் அவங்ககிட்ட சொல்லாதீங்க.." என்று கேட்க, பார்வதி, "அது ரொம்ப பெரிய தப்பு ரதி.. நான் வள்ளிக்கு பண்ற துரோகம்.. உனக்கே பெரிய பாவம் பண்ணிட்டேன்.." என்றார் தழுதழுத்த குரலில்.

"வேணாம்.. சொல்லிடாதீங்க.. உடஞ்சுடுவாங்க.. நானே சொல்லிக்கறேன்" என்றவள் அவரிடம் சத்தியம் வேறு வாங்கிவிட்டாள்.

அதனால் பார்வதியும் வாய் திறக்கவில்லை. ஆனாலும் அவரின் மனம் குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருந்தது.

அவரும் வள்ளியம்மையும் பேசிக் கொண்டிருக்க, "வள்ளி! நான் ஒண்ணு கேப்பேன்.. தப்பா நினைக்க மாட்ட இல்ல?" என்று அவர் துவங்க, "சொல்லு.. நான் ஏன் நினைக்க போறேன்" என்றார் அவரும்.

சிறு தயக்கத்துடன், "உன் பேத்தியை என் மூத்த பேரன் இந்திரஜித்துக்கு குடுக்கறியா?" என்ற பார்வதியின் கேள்வியில் வள்ளியம்மையின் முகம் எந்த உணர்வை காட்டியது என்றே தெரியவில்லை.

"என்ன வள்ளி யோசிக்கிற?" பார்வதி அவரின் கரம் மேல் கரம் வைக்க,

"ஏதாவது காதலிக்கறாங்களா என்ன?" வள்ளி பயத்துடன் வினவ, "அதெல்லாம் இல்ல வள்ளி" என்ற பார்வதியால் தோழியிடம் உண்மையை மறைக்க முடியவில்லை.

அவரின் தோளில் முகம் புதைத்தவர் அவரிடம் அழுதபடியே அனைத்தையும் கூறி முடிக்க, வள்ளியம்மை உள்ளுக்குள் சுக்குநூறாக உடைந்து போனார்.

தன் பேத்தி எவ்வளவு துன்பத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறாள் என்பதை நினைக்க நினைக்க அவரின் விழிகள் ஈரமானது.

பிறந்ததில் இருந்து அவளுக்கு கஷ்டம் தானே.

எதையும் எதிர்பார்த்திடாத, யாரையும் நோகடிக்காத மென் பெண் அவள்.

அவளுக்கு ஏன் இப்படி என்று நினைத்தவருக்கு மனம் அடித்தது.

அவரை பார்த்த பார்வதி, "அவகிட்ட எதுவும் கேக்காத வள்ளி.. நொறுங்கி போயிருக்கா.. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தர்றனும்" என்றிட வள்ளியம்மையால் என்ன சொல்லிட முடியும்.

அந்த காலத்தில் பிறந்தவர்கள் அதைத்தானே எண்ணுவார்கள்.

அன்று மாலை போல இந்திரஜித் வீட்டிற்கு வர, பேரனை பார்த்த பார்வதியோ, "ரதியோட தாத்தா, பாட்டி வந்திருக்காங்க" என்றார்.

வரவேற்பறையில் இருந்தவர்களை பார்த்தவன், அவர்களுக்கு, 'வாங்க' என்பது போல் ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டுச் சென்றான்.

முதலில் இருந்த இந்திரஜித்தாக இருந்திருந்தால் மதித்திருக்க கூட மாட்டான்.

ஆனால், இப்போது அப்படியில்லையே!!!

அவர்களை, அந்த வயதானவர்களை எதிர்கொள்ள அவனுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை.

எதுவும் பேசாது தலையை மட்டும் விருந்தோம்பலாக அசைத்துவிட்டு சென்றவனுக்கு, மனதில் குற்ற உணர்வு ஏறிக் கொண்டே சென்றது.

விஸ்வேஷ்வரரின் அறையினுள் நுழைந்தவன், ஏற்கனவே அங்கிருந்த இன்பாவின் அருகே சென்றமர்ந்தான்.

விஸ்வேஷ்வரரோ, "தேர்தலுக்கு அப்புறம்னு தானே சொன்னேன்.." என்று பேரனிடம் சற்று காட்டமாக கேட்டார்.

"எப்பவுமே ஒரு நம்பிக்கையை வாங்கணும்.. அப்பதான் நம்புவாங்க.. வாயால சொல்றதை நம்பிதான் நமக்கு கடைசி முறையே ஓட்டு போட்டாங்க.. ஆனா இப்ப செய்யணும்.. செஞ்சா தான் நடக்கும் எல்லாம்" என்று விஸ்வேஷ்வரகிடம் சொல்ல, அவரோ பேரனை அதற்கும் முறைத்தார் தான்.

"சென்ட்ரல்ல பேசணும் இந்தர்.. சாதாரணமான விஷயம் இல்ல.. உன் அப்பன் சம்பாரிச்ச பணத்துல எடுத்து கொடுத்தா கூட எல்லாம் மாட்டும் பரவாயில்லையா?" என்று கேட்டார்.

அதில் இந்திரஜித்தின் முகம் கறுத்தாலும், "நீங்கதான் பெரிய ஆள் ஆச்சே.. சென்ட்ரல்ல பேசுங்க.. ஆனா இதை பண்ணீங்கனா.. நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்கறேன்" என்றான்.

ஒன்றுமில்லை!

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கை விட்டிருந்தான்.

அது என்ன அவ்வளவு சுலபமா?

அடுத்த மாநிலங்களில் கூட இந்திரஜித்தின் செய்தி தான் ஓடிக் கொண்டிருந்தது.

எப்படி சாத்தியம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

சிலர், "இது அனைத்தும் வெறும் வாய் சொல்.. இது சாத்தியமே இல்லை" என்று கூட கூறினர்.

ஆனால், அவன் வெறும் வாய்ச்சொல்ல வீரன் அல்லவே. இப்போதும் சரி அப்போதும் சரி.

முடியாததை முடித்துக் காட்டினால், அவர்களின் பக்கம் தான் அடுத்த தேர்தலில் வெற்றி நிச்சயம் என்று அறிந்து தான் அவன் சொன்னதே.

சிலர், "இவனுக ஜெயிக்கணும்னா எந்த அளவுக்கும் இறங்குவானுக.." என்று வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.

ஏனெனில் தள்ளுபடி செய்வது எல்லாம் அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.

நிறைய நிறைய கேள்விகள் எழும்.

அனைத்திற்கும் பதில்களை இவர்கள் சரியாக, ம்கூம் கச்சிதமாக வைத்திருக்க வேண்டும்.

அந்தளவு சரியான திட்டங்களை தீட்டிவிட்டே இந்திரஜித் அறிக்கையை விட்டிருக்க வேண்டும்.

ஆனால் விட்டுவிட்டான்.

இனி அதற்கான வேலைகளை எடுத்துத் தான் ஆக வேண்டும்.

வெறுமனே ஓரிரு நாட்களில் செய்து முடித்துவிடும் வேலையும் இல்லை.

விஸ்வேஷ்வரரோ, "என்ன செய்யலாம்னு பாக்கறேன்" என்றிட, சரியென்று தலையசைத்த இந்திரஜித் எழுந்து கொண்டான்.

இன்பாவுடன் பேசியபடி வெளியே வந்தவனின் விழிகள், வரவேற்பறையில் வள்ளியம்மையின் மடியில் தலைசாய்த்து படுத்திருந்த ரதியின் மீது விழுந்தது.

கண்களை சுற்றி கருவளையம் சூழ்ந்திருக்க, இளைத்துப் போயிருந்தவளின் கழுத்தெலும்புகள் எல்லாம் துருத்திக் கொண்டிருந்தது.

எப்போதுமே மின்னும் அவளின் கன்னம் கூட, இப்போது வற்றி போயிருந்தது.

மொத்தத்தில் வாடிய கொடியாய் சுருண்டு கிடந்தாள்.

அவளை பார்க்க பார்க்க அவனின் ரணம் மேலும் பச்சையாய் மாறிக் கொண்டிருந்தது. ரணத்தை மேலும் மேலும் குற்ற உணர்வு கிழித்துவிடுவது போன்று இருந்தது.

அவளை அணைத்து ஆறுதல் படுத்த மனம் துடித்தாலும், அவனுக்கு இது சரியான நேரம் இல்லையென்று தெரியும்.

கடந்தும் செல்ல முடியவில்லை.

கல் நெஞ்சக்காரனாக மனிதத்தன்மை இல்லாது, சுற்றித் திரிந்து கொண்டிருந்தவனை, ஒற்றை வார்த்தை, ஒற்றை பார்வை உதிர்க்காமல் ஆட்டி படைத்துக் கொண்டிருந்தாள்.

அனைவரும் அவனை, 'கல் நெஞ்சக்காரன், மனிதாபிமானம் இல்லாதவன்' என்று திட்டிக் கொண்டிருந்தாலும், அவன் தன்னவளுக்கு இழைத்த அநியாயத்தை எண்ணி உள்ளுக்குள் வலியில் உழன்று கொண்டிருந்தான்.

ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்பியவன், நேராக சென்றது நெடுஞ்செழியனை பார்க்கத் தான்.

தன் முன் வந்தமர்ந்த மகனை பார்த்தவர், "என்னடா? என்னோட பதவிக்கு வர்ற எண்ணமா?" என்று கேட்டார்.

அவர் நாவில் இருந்த விஷத்தை அறியாது போவானா அவரின் புதல்வன்?

அதற்கு இதழ்களின் ஓரத்தை மட்டும் மெல்லியதாக விரித்த இந்திரஜித், "நீங்க தாத்தா இடத்துக்கு வர்ற ஆசைப்பட்ட மாதிரி" என்றான் சளைக்காது.

அதே விஷம் அவன் நாவிலும் இருந்தது. என்னதான் இருந்தாலும் அவரின் உதிரத்தில் இருந்து வந்தவன் தானே.

என்னதான் ரதியின் விஷயத்தில், முன் ஜென்மத்தின் ஞாபகத்தில் அவனின் மனம் இளகியிருந்தாலும், பிறப்பின் பழக்கம் என்று ஒன்று இருக்கும் தானே.

அதுவும் ஒன்றை அடையத் துடிக்கும் போது.

"என்னை கொன்னுட்டு இந்த இடத்தை எடுத்துக்க" நெடுஞ்செழியன் எங்கோ பார்த்தபடி கூற,

"அப்படிதான் நடக்கணும்னு இருந்தா.. தயங்க மாட்டேன்" என்றவனை உள்ளுக்குள் எழுந்த அதிர்வோடு தான் பார்த்தார் அவர்.

அதில் விழிகளில் கொடிய புன்னகை குடியேற, தந்தையை பார்த்தவன், "ராமநாதன் தாத்தாவை வச்சு கட்சிக்கு அனுதாப ஓட்டு சேக்க பாத்தீங்க தானே" என்று அவன் நேரிடையாகவே கேட்க, ஆடிப் போய்விட்டார் நெடுஞ்செழியன்.

அதில் ஒருவித நக்கல் சிரிப்புடன் அவரை பார்த்த இந்திரஜித், "கிட்டத்தட்ட உங்களுக்கு அரசியல்ல பக்கபலமா நின்னவர்.. அவரை போய்.." புன்னகையுடன் ஆரம்பித்தவன் பற்களை கடித்தபடி முடிக்க, நெடுஞ்செழியன் மகனை அசையாது பார்த்துக் கொண்டிருந்தார்.

'எப்படி தெரிந்திருக்கும்? யார் மூலமாக தெரிந்திருக்கும்? எப்படி கண்டுபிடித்தான்?' அவரின் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓட, அவரால் கேட்க முடியவில்லை.

மகனையே பார்த்திருந்தவர், "நம்ம நிலைச்சு நிக்கணும்னா ஏதாவது பண்ணிதான் ஆகணும்" என்றவரை விழிகளை மட்டும் சுருக்கி பார்த்தவன், "அப்ப உங்களை நான் முடிச்சிட்டு இந்த சீட்டை எடுத்துக்கிட்டா" என்றிட, கொதித்தெழுந்துவிட்டார் நெடுஞ்செழியன்.

"இங்க பார் பையன்னு பாக்கறேன்.. இல்லை.." என்று விரலை நீட்டி எச்சரித்த தந்தையின் முன் அசராது இருந்தவன், "நீங்க என்ன பண்ணவும் தயங்காத ஆளுன்னு தெரியும்.." என்று ஒரு கரத்தை மேசையின் மீது கனீரென்று தட்டி, "நானும் உங்க இரத்தத்துல இருந்து வந்தவன் தான்" என்று அழுத்தமான குரலுடனும், தீர்க்கமான பார்வையுடனும் முடித்திருந்தான்.

"அப்ப எல்லாத்துக்கும் தயாரா இரு.." என்று நெடுஞ்செழியன் தன் சுயத்தை விஷமாய் காட்டும் விதமாய் தன் தொணியை மாற்றி பேச, "நீங்களும்" என்றவன் தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்றான்.

மகனையே பார்த்திருந்த நெடுஞ்செழியனின் மனதில் கொடூரமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, இதழோரங்கள் மட்டும் அசைய புன்னகையை வெட்டியவன், "இப்படி எதிர்த்து நிப்பேன்னு தெரிஞ்சிருந்தா கருவுலையே கொன்னு இருப்பீங்க இல்ல? அதைத்தானே யோசிச்சுட்டு இருப்பீங்க?" என்று கேட்க, சரிதானே.

ஆம் என்று அழுத்தமாகவும் குரூரமாகவும் மகனிடம் தலையாட்டினார் நெடுஞ்செழியன்.

அதற்கு மேல் அங்கு இந்திரஜித் நிற்கவில்லை.

அங்கிருந்து கிளம்பியவன் நேராக வந்தது கடற்கரைக்கு தான்.

இரவானதால் காவல் துறையின் ரோந்து அங்கு எப்போதுமே இருக்க, இந்திரஜித்தை பார்த்தவர்கள் அங்கு விரைய, அனைவரையும் அனுப்பி வைத்தவன் கடற்கரையில் சென்று அமர்ந்தான்.

இரவு வேளையில் கடல் அலைகள் தங்களின் ஆக்ரோஷத்தை காட்டிக் கொண்டிருக்க, அதை பார்த்தபடி அமர்ந்திருந்தவனுக்குள் பலவேறு எண்ணங்கள்.

"அமரன்!!!" என்று உச்சரித்தது அவனின் இதழ்கள்.

நிலா அண்ணனிடம் இருந்து தப்பித்துக் கொண்டதாய் நினைத்துக் கொண்டிருக்க, இத்தனை வருடங்களில் எங்கெங்கு எப்போதெல்லாம் தங்கையும், அமரனும் சந்தித்து இருக்கிறார்கள் என்பதை எடுத்துவிட்டான். அனைத்தையும் யூகித்தும்விட்டான்.

அண்ணனாக தங்கையிடம் எதுவும் கேட்க முடியவில்லை.

ரதி! அமரன்! நிலா!

முக்கியமாக இன்பா!

அனைவரையும் நினைக்க நினைக்க மனம் ரணமாய் வலித்தது.

முன் ஜென்ம நினைவுகள் வந்ததை நினைத்து அவனால் மகிழவும் முடியவில்லை! அழவும் முடியவில்லை!

தன்னவளிடம் செய்த சத்தியம் மட்டும் அவனின் ஒவ்வொரு அணுவிலும் ஓடிக்கொண்டே இருந்தது.

உள்ளுக்குள் ஏதோ ஒன்று பெரிய பிரளயத்தை சந்திக்கப் போகிறோம் என்று மட்டும் அவனின் மனம் உறுதியாக கூறிக் கொண்டிருந்தது.

ஆனால் அந்த பெண் மட்டும் இன்னமும் யாரென்று அவனுக்கு தெரியவில்லை.

யோசித்து யோசித்து பார்க்கிறான்.

அந்த முகம் தெளிவாக இல்லை.

அனைத்தையும் நினைவெடுத்த அவனின் மூளை அணுக்கள் அந்த வதனத்தை மட்டும் காட்ட மறந்துவிட்டது.

சிந்தித்தால் தலையெல்லாம் வலியெடுப்பதை போன்று இருக்கின்றது.

தெரிய வரும்பொழுது தெரியும் என்று விட்டவன், அதை பற்றி யோசிப்பதையே குறைத்துக் கொண்டான்.

அலைகளை வெறித்தபடி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்திருந்தவனை அவனின் அலைபேசி நிகழ்காலத்திற்கு கொண்டு வர, அலைபேசியின் திரையை பார்த்தான்.

"இன்பா!"

மணியை பார்த்தான். நள்ளிரவு தாண்டி இருந்தது.

அலைபேசியை ஏற்று காதில் வைத்த இந்திரஜித், "சொல்.." முடிக்கவில்லை.

"இந்தர்!!! ரதியை காணோம்" என்று இன்பா கூற, லட்சம் கோடி மின்சாரம் தாக்கியது போல எழுந்த இந்திரஜித்தை சூழ்ந்திருந்த இருளை கிழித்துக் கொண்டு இறங்கியது இடியின் ஒளியும், முழக்கமும்.
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,772
Reaction score
7,900
Location
Coimbatore
நெடுஞ்செழியன் சரியான
விஷம் தான்

யார் கடத்துனது
அப்பனா
 




saideepalakshmi

மண்டலாதிபதி
Joined
Nov 11, 2023
Messages
202
Reaction score
250
Location
Salem
இப்போது என்ன செய்ய போகிறான் இந்தர்.பழைய நினைவுகளில் இன்னும் புதிதாக இருக்கும் அந்த நபர் யார்?
கவலையான கஷ்டமான பதிவு.
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top