• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கடாரம் கொண்டான்-6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
6,019
Reaction score
12,517
Location
Gobichettipalayam
அத்தியாயம்-6

தோழிகளோடு கார் நிறுத்தும் இடம் வரை வந்த நிலா, "எப்படியும் வாட்ச் மேன் பூட்டிருக்கானு செக் பண்ண போகும் போது கதவை திறந்திடுவாரு.." என்று சிரித்துக் கொண்டே காரில் ஏற, அவளின் மற்ற தோழிகளும் கிளம்பிவிட்டனர்.

கல்லூரியில் இருந்து நேராக பள்ளியில் படித்த தோழிகளை பார்க்கச் சென்ற நிலாவுக்கோ, ரதியின் நினைவு எங்கு இருக்கப் போகிறது.

ஆனால், நேரம் செல்ல செல்ல பார்வதி பயந்து போய் பேரனுக்கு அழைத்தார்.

இன்பாவின் அலைபேசிக்கு அவர் அழைக்க, இந்திரஜித் தான் அலைபேசியை எடுத்தது.

"ஹலோ இன்பா எங்க இருக்க?" பார்வதியின் குரலிலேயே இருந்த பதற்றத்தை உணர்ந்த இந்திரஜித், "என்னாச்சு பாட்டி?" என்றான் தன் அடர் புருவங்கள் இடுங்க.

"இந்தர்!" என்றவரின் குரல் அறியா வயதுப் பெண்ணவளை நினைத்து கலங்கியது.

நண்பர்களுடன் வெளியே இருந்த இந்திரஜித், "என்னாச்சு சொல்லுங்க" என்று கூர் அம்பின் வேகத்தினில் எழ, இன்பாவும், "என்னடா?" என்று அவனுடன் எழுந்து கொண்டான்.

"இந்தர்! ரதியை காணோம்.. காலேஜ்ல ஃபோன் பண்ணி கேட்டா எல்லாரும் கிளம்பிட்டதா சொல்றாங்க.. என்னனு பாரு" என்றிட, அடுத்த நொடி இரட்டை சிம்மங்கள் தங்களின் லம்போர்கினி அவென்டடோரில் கிளம்பியது.

இருவரும் கல்லூரியினுள் நுழைய, கல்லூரி வளாகமே வெறிச்சோடி இருந்தது.

இருவரும் இறங்க, ஆங்காங்கே விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் மட்டும் இருந்தனர்.

இந்திரஜித் அங்கு சென்று கொண்டிருந்த ஒரு மாணவனை சொடக்கிட்டு அழைக்க, கல்லூரியில் மாணவர்களின் சேர்மன் என்பதால் அவனும் ஓடி வந்தான்.

வந்தவனிடம் அவன் எந்த பிரிவு என்று விசாரித்தவன், "ரதி உன்னோட கிளாஸா?" என்று கேட்டான்.

அவனும், 'ஆமாம்' என்று தலையாட்ட இன்பா, "கிளாஸ் முடிஞ்சு எப்ப கிளம்புனா?" என்று கேட்டான்.

"முடிஞ்ச உடனே அவ பிரண்ட்ஸோட கிளம்பிட்டா ஸார்" என்றனர் இருவர்.

வாட்ச் மேனிடம் அடுத்து பேசியவர்கள், சிசிடிவியை அடுத்து பரிசோதிக்க, அதில் மாட்டியது நிலா ரதியை அழைத்ததும், ரதி நிலாவை நோக்கி சென்றது அனைத்தும்.

முழுதாக அதை பார்த்தனர். அடுத்து ரதி எங்கு செல்கிறாள் என்றும் பார்த்தனர்.

மேசையின் மேல் கரம் ஊன்றி சரிந்து நின்றிருந்த இந்திரஜித்தின் மூளைக்கு சட்டென தங்கையின் விளையாட்டு புரிந்துவிட, "இன்பா! காரை ரெடியா வை" என்று ஆடிட்டோரியம் நோக்கி ஓடினான்.

அவனின் பின்னேயே சிலர் ஓட காவலாளி வருவதற்குள், தன் நீண்ட வலிய காலால் ஆடிட்டோரியத்தின் கதவை ஒரே உதையில் உடைத்துத் தள்ளியிருந்தான் இந்திரஜித் பிரபஞ்சன்.

அடுத்த நொடி உள்ளே புயலென நுழைந்து சுற்றியும் முற்றியும் பார்த்தவனின் வாள் விழிகள், அரங்கத்தின் ஓரத்தில் சுருண்டு விழுந்திருத்த ரதிவர்தினியை கண்டெடுத்தது.

நொடிப் பொழுது தாமதிக்காது அவளிடம் விரைந்து, அவன் அவளை தன் பலம் வாய்ந்த கரங்களால் அள்ளியெடுக்க, சட்டென்று மிரண்டு விழித்தவளின் விழிகளில் தெரிந்தது என்ன பரிதவிப்பா இல்லை அவனை கண்ட ஆனந்தமா?

ஒரு கரத்தால் அவன் புஜத்தை பற்றிக் கொண்டவள், "வந்துவிடுவீர்கள் என்று அறிவேன்" முத்து முத்தாய் வியர்த்திருந்த வதனத்தோடு முனகியபடியே, அவனின் அகன்ற தோளிலேயே மீண்டும் மயங்கினாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் அவளை மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்க, பார்வதியும் விரைவாகவே வந்து சேர்ந்தார்.

இந்திரஜித் தங்கைக்கு அழைத்து விஷயத்தை தெரிவிக்க, "அண்ணா!!!" என்று தோழிகளுடன் அமர்ந்திருந்தவள் விருட்டென்று பயந்து எழுந்துவிட்டாள்.

ரதியை பயபடுத்த எண்ணினாள் தான். ஆனால், யாரும் பார்க்காமல் காவலாளி பூட்டி, மயங்கி விழும் நிலைக்குச் செல்வாள் என்று நினைக்கவில்லை.

இந்திரஜித், "நீ இங்க வர வேணாம்.. வீட்டுக்கு போ" என்று அறிவுறுத்தியும் மனம் கேட்காது ஓடி வந்தவளுக்கு விழுந்தது தான் பார்வதியின் அறை.

அனைத்தையும் கேட்டு முடித்த ஐஸ்வர்யா, "ரொம்ப ரப்பிஷா இருக்கு நிலா.. இப்படியா பண்ணுவாங்க.. அவ ரொம்ப வீக்கா இருக்கா.." என்று நிலாவை திட்டியேவிட்டாள்.

யாரும் அவளை இதுவரை ஒரு வார்த்தை சொல்லியதில்லை. ஆனால் இப்போது அறையும் வாங்கிவிட்டாள். ஐஸ்வர்யாவிடம் ஏச்சும் விழுந்தது.

இன்பாவோ நிலாவை பார்வையாலேயே கொன்று கொண்டிருக்க, "அண்ணா விளையாட்டுக்கு தான்.." என்று துவங்கியவளின் பேச்சை, 'போதும்' என்பது போல கரம் உயர்த்தி தடுத்தவன், "விளையாட்டுக்கு பண்றதுக்கும் குரூரமா இருக்கிற நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு" என்று முகத்தில் அடித்தாற் போன்று கர்ஜித்துவிட்டான்.

பார்வதி, "நீ இங்க நிக்காத கிளம்பு.. உன்னை யார் கூப்பிட்டது" என்று கோபத்தை கடித்துத் துப்ப, சின்னவளால் அங்கு இருக்கவே முடியவில்லை.

யாரிடமும் பேசாது அவள் அங்கிருந்து கிளம்பிவிட, "எல்லாம் அவன் குடுக்கிற இடம்" என்று இந்திரஜித்தையும் சேர்த்தி திட்டித் தீர்த்தார் பார்வதி.

அவரின் தோளில் ஆறுதலாக கரம் வைத்த ஐஸ்வர்யா, "நீங்க ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க.. பர்ஸ்ட் சாப்பிடலாம் வாங்க.. இன்பா இருக்காருல அவரு ரதியை பாத்துப்பாரு" என்று பார்வதியை அழைத்துச் செல்ல, இன்பாவோ ரதி அனுமதிக்கப்பட்டிருந்த அறையினுள் நுழைந்தான்.

உள்ளே மயக்கத்தில் இருந்தவளுக்கு அப்போது தான் இலேசாக விழிப்புத் தட்டியிருந்தது. இன்பாவை பார்த்ததும் மிரண்டவளின் கரத்தை சட்டென எட்டிப் பிடித்து தட்டிக் கொடுத்தவன், "நான்தான்" என்றான்.

இன்பாவின் குரலை வைத்து இந்திரஜித் இல்லை என்று கண்டு கொண்டவள் ஆசுவாசமடைய, அவளின் கரத்தை தட்டிக் கொடுத்தவன், "எனக்கு ஃபோன் பண்ணி இருக்கலாம்ல" என்றான்.

அவளிடம் பதிலில்லை.

சிறிது நேரத்தில் பார்வதியும் வர, ஐஸ்வர்யா, "இப்பவே டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம்.. பட் ரொம்ப வீக்கா இருக்க.. நல்லா சாப்பிடு" என்று நிறைய அறிவுரை கூறி அனுப்பி வைத்தாள்.

"இங்க பாரு ரதி.. இந்த இடம் உனக்கு புதுசா இருக்கலாம்.. மனுஷங்க புதுசா இருக்கலாம்.. பயமா தான் இருக்கும்.. ஆனா உன் பயத்தை காமிக்க காமிக்க நீதான் பலவீனமனவளா இருப்ப.. தைரியமா இருக்க முடியலைனாலும் உன் பயத்தை காட்டாத" என்ற ஐஸ்வர்யாவிடம் தலையை மட்டும்தான் அசைக்க முடிந்தது. அவளிடம் பேச கூட சக்தியில்லை.

இன்பா வந்து காரை எடுக்க, பார்வதியும், ரதியும் நடந்து வந்து பின்னே ஏறிக் கொண்டனர்.

மணி பத்தை தாண்டியிருந்தது.

இன்பா காரை மருத்துவமனையில் இருந்து எடுக்க, கருமேகங்கள் ஒன்றுகூடி, இடி வலுவாய் விண்ணில் இருந்து மண்ணில் சீற்றத்துடன் விழுந்தது.

இடியின் ஒளியில் ரதியின் விழிகள் அடித்துக் கொள்ள, சிறு படபடப்புடன் மூச்சை யாருமறியாது இழுத்தவளுக்கு மயங்கும் முன், தன் முன் தோன்றிய திரையே ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது சரியாக தெரிந்த உருவம், இப்போது மங்கலாய்த் தெரிந்தது. என்ன ஏது என்று அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை.

வானையே வெறித்தபடி வரும் சின்னவளை பார்த்த பார்வதி அவளை மெதுவாக தன் தோளில் சாய்த்துக் கொள்ள, அவளும் மறுபேச்சின்றி சாய்ந்து கொண்டாள்.

அதை கண்ணாடி வழியே பார்த்த இன்பாவும் ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டான்.

அதே சமயம் மருத்துவமனைக்கு வந்த இந்திரஜித், ஐஸ்வர்யாவிடம், "இஸ் எவ்ரிதிங் ஓகே?" என்று வினவ, இந்திரஜித் ரதியை அனுமதித்துவிட்டு இன்பாவை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சென்ற பின்பு நடந்த அனைத்தையும் ஐஸ்வர்யா கூறினாள்.

"வாட் நிலாவை அடிச்சாங்களா?" என்று தன் அக்னி குரலில் சீறியவன், உடனே வீட்டிற்கு கிளம்ப பார்க்க, அவனை சட்டென இழுத்துப் பிடித்த ஐஸ்வர்யா, "இந்தர் கூல்.. நிலா மேல தப்பு.. ரதிக்கு உயிருக்கே ஆபத்து ஆகியிருந்தா எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகியிருக்கும்.. இங்க பாருங்க.." என்றவள் இந்திரஜித்தை அணைத்துப் பிடித்து நெஞ்சில் சாய்ந்தாள்.

அதில் இந்திரஜித் அப்படியே நின்றுவிட அவனின் நெஞ்சினில் சாய்ந்திருந்தவள், அவனின் பெருமூச்சை உணர்ந்த பின்பு தலையை மட்டும் உயர்த்தி மயக்கும் புன்னகையுடன் அவனை பார்த்தாள்.

இந்திரஜித்தோ இரு புருவத்தையும் உயர்த்தி என்னவென்று கேட்க, 'ஒன்றுமில்லை' என்பது போல தலையாட்டியவள், மீண்டும் அவனின் விழிகளை பார்த்து புன்னகைத்தாள்.

மகாதேவனின் ஒரே மகள்!

கிட்டத்தட்ட இந்திரஜித்தின் வயதும் அவளின் வயதும் ஒன்றுதான்.

பதின் வயதிலேயே இவனை பைத்தியமாக காதலிக்கத் தொடங்கிவிட்டாள்.

அனைவருக்கும் அது தெரியும்.

இந்திரஜித்திடம் விஸ்வேஷ்வரர் மூலம் மகாதேவன் சில வருடங்களுக்கு முன்பு பேசியிருக்க, இந்திரஜித் வேண்டும் என்றும் சொல்லவில்லை வேண்டாம் என்றும் சொல்லவில்லை.

அதனாலேயே ஐஸ்வர்யாவிற்கு ஒரு நம்பிக்கை.

அவனின் பழக்கவழக்கங்கள் மற்றும் செய்கைகள் எதுவும் ஐஸ்வர்யாவிற்கு தெரியாது பார்த்து வருகிறார் மகாதேவன்.

ஒருமுறை யாரோ சொல்லி மகள் அவரிடம் கேட்டபோது கூட, "பெரிய இடம்.. அரசியல் வாரிசு.. இந்த மாதிரி தப்பு தப்பா பேச்சு எல்லாம் பொறாமைல பரவதான் செய்யும்.." என்று மழுப்பிவிட்டார்.

இதற்காக இந்திரஜித்திடம் சென்று இந்த பழக்கங்களை விட்டுவிடு என்றும் அவரால் சொல்லிட முடியாதே.

அதுவும் அடுத்த முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமரப் போகிறவன்.

மருமகன் முதலமைச்சர் என்றால் கேட்கவா வேண்டும்!

ஆனால் இந்திரஜித் இதுவரை ஐஸ்வர்யாவிடம் எல்லை மீறியது இல்லை.

அவனுக்கு தோன்றியதும் இல்லை.

அவள் கேட்டு நான்கைந்து முறை வெளியே அழைத்துச் சென்றிருக்கிறான்.

அப்போது அவள் தான் அவனின் கரத்தை பிடித்திருந்தாளே தவிர, அவன் அவள் கரம் பற்றவில்லை.

இப்போதும் அப்படித்தான் அவள் அணைத்தபடி அவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தாள். அவனது கரம் அவளை அணைக்கவில்லை.

"ஐஸ்வர்யா! நான் கிளம்பணும்" என்று இந்திரஜித் கூற, "ஓகே" என்று புன்னகைத்தபடியே பெண்ணவள் விலக, "சரி பாத்து.. நான் வர்றேன்" என்று கிளம்பிவிட்டான்.

வெளியே மழை வலுத்துக் கொண்டிருக்க, தன்னுடைய லம்போர்கினி அவென்டடோரை நெருப்புப் பொறிகள் பறக்க எடுத்த இந்திரஜித்தின் புருவங்கள் யோசனையிலேயே இருந்தது.

ரதி அவனை பார்த்து கூறிய வார்த்தைகள்!

அதுவும் மிகவும் உரிமையுடனும், பரிதவிப்புடனும் அவள் சொன்ன வார்த்தைகள்!

யோசனையுடனேயே காரை ஓட்டியவனுக்கு திடீரென செவியில் ஏதேதோ சப்தங்கள் கேட்கத் துவங்கியது.

செவி நெருப்பின் சூட்டை உணர, இருதயம் அதுவரை இல்லாத வலியை அனுபவிக்க, "இந்திரஜித் ராஜன்" என்ற கணீர்க் குரலில் இந்திரஜித்தின் கரத்தில் இருந்த ஸ்டியரீங் புரண்டது.

கார் ஒரு பக்கம் இழுக்க, சக்கரங்கள் மழையில் வழுக்க, அவ்வளவு தான்.

கார் கவிழும் நிலை.

திடீரென்று சுதாரித்து காரை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவன், கீறிச்சிடலுடன் காரை நிறுத்தினான்.

வேகாமாக மூச்சிறைக்க, தன் இதயத்தின் மேல் கரம் வைத்தவனுக்கு அதன் துடிப்பை உணர முடிந்தது. ஏன் கேட்கக் கூட முடிந்தது.

உயிர் பயம் என்றில்லை அவனுக்கு.

திடீரென வந்த சிந்தனையினாலும், உணர்வாலும் வந்த அவன் வாழ்வில் கண்டிடாத தடுமாற்றம்.

நெற்றிப் பொட்டில் அழுந்தத் தேய்த்துக் கொண்டவன், காரை எடுத்தான்.

வீட்டினுள் வந்து காரை நிறுத்தியவன், உள்ளே செல்ல பார்க்க இன்பா இந்திரஜித்திற்காக காத்திருந்தான்.

இன்பாவை பார்த்ததும் நின்றவன், "தூங்கல?" என்றவன் அவன் பதிலை கூட எதிர்பாராது, "பாட்டி தூங்கியாச்சா? நிலா எங்க?" என்று கேள்விகளை அடுக்கினான்.

தன் பாதியவனையே கூர்ந்து கவனித்தவன், "அந்த பொண்ணை பத்தி கேளேன் இந்தர்" என்றான் இடையில் இரு பக்கமும் கை கொடுத்து.

"ஐஸ்வர்யா சொல்லிட்டா" என்றவன் நிலாவின் அறைக்குச் சென்று பார்த்தான்.

தூங்கியிருந்தாள். அழுதழுது தூங்கியிருப்பது புரிந்தது.

எதுவும் பேசாது வந்தவன் இன்பாவின் அருகே வந்தமர, இன்பா தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.

ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றை வைத்தவர்கள் இருவரும் பேச ஆரம்பித்தனர்.

"அப்பா என்னதான் பண்ணலாம்னு இருக்கார். கட்சி இப்படியே போயிட்டு இருந்தா இழுத்து தான் மூடணும் இந்தர்.. என்னால அவருகிட்ட எதுவும் பேச முடியாது.. நீ பேசு" என்றிட, தொலைக்காட்சியில் விழியை மட்டும் வைத்திருந்தாலும் இந்திரஜித்தின் மூளை யோசித்துக் கொண்டே இருந்தது.

நேராகவே பார்வையை வைத்திருந்தவன், "இழுத்து மூடற நிலை தான் இன்பா.. ஆனா நடக்க கூடாது.. என்னனு பாப்போம்.. மூணு தலைமுறையா வந்தது இழுத்து மூடறதுக்கு இல்லையே" என்றிட, இன்பாவும் அவனுக்கு சளைத்தவன் இல்லையே.

"மூணு தலைமுறையா வந்தது மூழ்கிட கூடாதுன்னு தான் பேசறேன்" என்றான்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே நெடுஞ்செழியனின் கார் வந்து சேர, இருவருமே அவருக்காக தானே காத்திருந்தது.

அவர் உள்ளே வரும்போதே சற்று தள்ளாட்டத்துடன் தான் வந்தது. அவரை விட மகாதேவன் வேறு உடன் வந்திருந்தார்.

மகன்களை தவிர்த்துவிட்டு மேலே செல்ல பார்த்தவரை, "அப்பா" என்று தடுத்தது இரட்டை சிம்மங்களின் குரல்.

மகாதேவனோ புரிந்தவராய், "இப்ப வேணாம்" என்று துவங்க, இன்பா அவரை கண்டு கொள்ளவே இல்லை என்றால், இந்திரஜித்தின் ஒற்றை பார்வையில் அவர் கப்சிப் என்று ஆகிவிட்டார்.

நெடுஞ்செழியன் என்னவென்று மகன்களை பார்க்க, "என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?" என்று கேட்டான் இன்பா.

"என்ன முடிவுனா?" நெடுஞ்செழியன் திமிராய் கேட்க, "கட்சியை பத்தி" என்றான் இன்பா.

உடனே அவருக்கு சுர்ரென்று கோபம் எகிறியது.

தன்னை விட சிறியவன் தன்னை கேள்வி கேட்பதா என்று.

உடனே தாம்தூம் என்பது போன்ற நடையுடன் வந்தவர், "இந்த கேள்வி எல்லாம் என்கிட்ட கேக்காத" என்று இரைய, அதுவரை அமைதியாக இருந்த இந்திரஜித் உள்ளே வந்தான்.

"அவன் கேட்டதுல என்ன தப்பு.. நீங்க பண்றது அப்படிதான் இருக்கு.. எதுவும் சரியா இல்ல இங்க.. அடுத்த தேர்தல்ல என்ன ஆகுமோன்னு இருக்கு.. பிசினஸ் மேன்கிட்டையே பிரச்சினை வேற.. அவன் இப்ப நம்மள பிடிக்க ஏதாவது ஒரு விஷயத்துக்கு கழுகு மாதிரி காத்திருப்பான்.. எலக்ஷன் வச்சிட்டு பணத்துக்கு என்ன பண்ண போறோம்.." என்று இந்திரஜித் சீற, நெடுஞ்செழியன் மகனை கை ஓங்க செல்ல, இன்பா தந்தையின் கரத்தை இரும்பென பற்றினான்.

அவர் அதிர்ச்சியுடன் மகனை "அவன் மேல கை வைக்கிறது எல்லாம் வேணாம்.." என்றிட, அவருக்கோ ஆத்திரம்.

ஆங்காரம்!

ஆக்ரோஷம்!

அதுவும் மகாதேவன் முன்பு...

அவரின் இரத்தம் கோபத்தில் கொதித்தது.

"இங்க பாருங்க.. எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிட்டேன்.. உங்களை விட நான் அதிகம் பாத்தவன் கட்சில.. உங்க வயசு தான் என்னோட அனுபவம்.. உள்ள வந்து என்னை அதிகாரம் பண்ண பாத்தீங்க.. யாரு என்னனு எதுவும் பாக்க மாட்டேன்.. கொன்னு புதைச்சிடுவேன்" என்று அந்த இடமே கிடுகிடுக்கும் வண்ணம் கத்திவிட்டு செல்ல, இந்திரஜித்தும், இன்பாவும் அசையவில்லை.

மகாதேவனும் எதுவும் பேசாது கிளம்பிவிட, இன்பாவும் இந்திரஜித்தும் கூட எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

அவரவர் அறைக்குள் புகுந்து கொண்டனர்.

தனது அறைக்குள் நுழைந்த இந்திரஜித், தன்னுடைய சட்டையை அகற்ற கீழே ஏதோ விழும் சப்தம் கேட்டு குனிந்து பார்த்தான்.

சிவப்பு கல் பளபளக்க கீழே விழுந்திருந்தது ரதியின் தங்க சங்கிலி.

அவளை அவன் தூக்கும் போது அவன் சட்டையினுள் சென்று மாட்டியது. உள்பக்கமாக சிக்கியிருந்ததை அவனும் கவனிக்கவில்லை.

உணரவும் இல்லை.

கீழே குனிந்து அதை எடுத்தவனுக்கு அதை ரதியுடையது என்று தெரியும். அந்த கல்லை பார்க்க பார்க்க அவனுள் ஏதோ மாயை உருவாவதை அவனால் உணர முடிந்தது.

சட்டென்று தலையை சிலுப்பியவன் அதை தன்னுடைய ட்ராவில் போட்டு மூடிவிட்டு வந்து படுத்துவிட்டான்.

ஏதோ தலை வலிப்பதை போன்று இருந்தது அவனுக்கு.

இந்த மாதிரி எல்லாம் அவனுக்கு இருந்ததே இல்லை.

ரதியின் நினைவே அவனுக்கு அடிக்கடி வந்தது.

அதற்கு பெயர் என்ன என்று யாராவது சந்தேகமாக கேட்டால், எள்ளலாக தான் சிரிப்பான்.

'அவள் என்ன சொன்னாள்?' என்றே அவன் மனம் யோசித்துக் கொண்டிருந்தது.

திரும்பித் திரும்பிப் படுத்தவன் தூக்கம் வராது போக, சலாரென போர்வையை விலகிக் கொண்டு பால்கனிக்கு வந்துவிட்டான்.

மூச்சடைப்பது போன்று இருந்தது.

சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன் ரதி தங்கியிருக்கும் அந்த சிறிய வீட்டை பார்த்தான்.

மழை விட்டு ஈரம் சொட்டிக் கொண்டிருக்க, நிலவொளி இல்லாத இருளை மின்னல்கள் அவ்வப்போது விலக்கிக் கொண்டிருந்தது.

'இந்தர்! அவ எல்லாம் உன் கால் தூசிக்கு கூட இல்ல.. மயக்கம் போட்டு விழுந்தா காப்பாத்துன.. அவ்வளவு தான்.. டோன்ட் திங்க் ஆஃப் ஹர்' என்று அவனின் ராட்சத மூளை அறிவுரை கூற, சிகரெட்டை கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் தூக்கிப் போட்டவன் படுக்கையில் வந்து விழுந்தான்.

ஐந்து நிமிடங்களில் உறங்கிவிட்டான்.

ரதியும் பார்வதியின் அருகில் உறங்கியிருந்தாள். அவளின் உடல் நிலை கருதி அவளை தன் அருகிலேயே வைத்துக் கொண்டார் பார்வதி.

அனைவரும் உறங்கிய சமயம், கானகத்தில் இருந்த வேங்கையின் உறுமல் காடெங்கும் அதிர, இந்திரஜித்தால் மூடப்பட்ட ரத்தினக்கல் உள்ளிருந்து தன் பெரும் ஒளியை வீச, அவனவளை அறிந்து கொள்ளாத அவனை அது ஆட்கொள்ளச் செய்ய, அவன் பெற்ற சாபம் அவனை நீங்கிடுமா என்ன?

அவன் சாபத்திற்கு அவன் மட்டுமே அல்லவா விமோட்சனம் தேட முடியும்!!!!

அதுவும்...

அவன் மட்டுமா சாபத்தை பெற்றிருந்தான்?

அவனவளும் அல்லவா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்த இரு இருதயங்களின் காத்திருப்புக்கு இந்த ஜென்மம் தானே பலனை கொடுக்கப் போகிறது.

மறுபிறவிக்கே ஆயிரம் ஆண்டு காத்திருக்க வைத்த சாபம், அவர்களை அவ்வளவு எளிதில் ஒன்றாக்கிவிடுமா?

காலங்கள் அதன் போக்கில் கடந்தது.

யாருக்காகவும் அது காத்திருக்கவில்லை.

ஆயிரம் தசாப்தங்கள் காத்திருக்க வைத்திருந்த விதிக்கு சில வருடங்கள் பெரியதாகி விடுமா?

ஐந்து வருடங்கள் கடந்திருக்க, நிலா தன்னுடைய பிஎம்டபுள்யூ-வில் அவளவனின் அருகே அமர்ந்திருந்தாள்.

ஆம் இந்த கதையை மாற்றப் போகிறவன்.

இந்த கதை ஆயிரம் தசாப்தங்களுக்கு முன்பே துவங்க காரணமானவன்.

அமரன்!!!

அடுத்த அத்தியாயத்திற்கு👇🏽

 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,886
Reaction score
6,788
Location
Germany
அமரனா 🧐🧐🧐 யாரிந்த புது பீஸ் 🤔🤔🤔

முன் ஜென்மக்கதையா 😳😳😳
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top