• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கபாடபுரம் (சரித்திர நாவல்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
9. முதியவர் முன்னிலையில்



அந்த நேரத்தில் பெரிய பாண்டியரை அங்கே எதிர்பாராத காரணத்தால் முடிநாகனும், இளையபாண்டியனும் சிறிது திகைத்தனர். ஆனாலும் பெரியவர் அப்படிக் கவலைப்பட்டுக் கண் விழித்திருப்பதை முடிநாகன் வியக்கவில்லை. அவரெதிரில் இருவரும் அடக்க ஒடுக்கமாகச் சென்று நின்றார்கள். பெரியவர் இருவரையும் நன்றாக ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார்.

"நகர் பரிசோதனையை மிகவும் சுறுசுறுப்பாகச் செய்து வருவதாகத் தெரிகிறது."

"இளையபாண்டியர் விரும்பினார்! அழைத்துச் சென்றேன்."

"எங்கெங்கே சென்றிருந்தீர்கள்? என்னென்ன நிகழ்ந்தது? என்பதையெல்லாம் நான் அறிந்து கொள்ளலாமா முடிநாகா! இந்தக் கிழவனுக்கு இன்றென்னவோ உறக்கம் வரவே மறுக்கிறது" என்றார் பெரியவர். அப்போது இளையபாண்டியரின் விழிகள், 'தயைசெய்து கடற்கரைப் புன்னைத் தோட்டத்து நிகழ்ச்சியை மட்டும் சொல்லி விடாதே' - என்பது போல் முடிநாகனைக் கெஞ்சின.

முடிநாகனும் அந்தக் குறிப்பை ஏற்றுக் கொண்டான். பெரியவரிடம் அவன் மற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் கூறினாலும் இளையபாண்டியனுடைய விருப்பத்தை மீறாமல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கம் சென்றதைப் பற்றி மட்டும் கூறாமல் மறைத்து விட்டான். பெரியவரோ முடிநாகன் கூறியவற்றை எல்லாம் கேட்டுவிட்டுப் புன்முறுவல் பூத்தார். அடர்ந்த மீசையினிடையே தெரிந்த அந்தத் தளர்ந்த பற்களின் சிரிப்பு வழக்கத்தை மீறியதாகவும் புதுமையாகவும் இருந்தது. "முடிநாகா! உங்கள் இருவரிடமும் நான் ஒன்று கேட்க வேண்டும்? ஏன் கோட்டை மதிற்பக்கத்தோடு நகர் பரிசோதனையை முடித்துக் கொண்டு திரும்பி விட்டீர்கள்? கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கமும் போயிருக்கலாமே?"

"இன்றென்னவோ அங்கே போக நேரிடவில்லை... பெரியபாண்டியர் கட்டளையிட்டால் நாளை அவசியம் அங்கே சென்று வருவோம்..."

"ஆம்! ஆம்! அவசியம் சென்று வர வேண்டும். ஏனென்றால் அந்தப் புன்னைத் தோட்டத்துப் பகுதிகளில் தங்கியிருக்கும் பாணரும், பொருநரும், விறலியரும், இரவில் நெடுநேரம் இசையும் கூத்துமாகப் பொழுது கழிக்கின்றார்களென்று கேள்வி. நகர் பரிசோதனை செய்து அலைந்து திரிந்து களைத்த பின் அங்கே போய்வருவது உங்களுக்கும் ஆறுதலாக இருக்குமல்லவா?"

பெரியவரின் இந்தச் சொற்களைக் கேட்டு முடிநாகனுக்கு உள்ளே குறுகுறுத்தது. பொதுவாகத்தான் இவர் இப்படிக் கேட்கிறாரா அல்லது ஏதாவது உட்பொருள் வைத்துக் கேட்கிறாரா என்று புரிந்து கொள்வது அரிதாயிருந்தது. பெரியவரோ அவர்களிருவரின் முகபாவங்களையும் இமையாமல் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். தங்கள் முகங்களில் ஏற்படும் சிறுமாறுதல் கூட அப்போது அவர் பார்வையிலிருந்து தப்ப முடியாதென்று தோன்றியதனால் இருவரும் ஆடாது அசையாது சிலைகளாய் சபிக்கப் பட்டாற்போல் நின்றனர்.

எதிராளியின் தீர்க்கமான கண்பார்வைக்கு முன்னால் உணர்வுகள் மாறி முகத்தில் சலனம் தோன்றினால் கூட அகப்பட்டுக் கொள்ள நேரிடும். இப்படி நிலைமை உடைமைக்குரியவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் பொருளைத் திருடத் துணிவதைப் போன்றது. அரச தந்திரத் துறையில் பயிற்சியும் பழக்கமும் மிகுந்தவர்களின் கண்களே மாபெரும் படைகளுக்குச் சமமானவை. தங்களின் கண்பார்வையிலேயே பல வெற்றி தோல்விகலை நிர்ணயிக்க அப்படிப்பட்டவர்களால் முடியும். பெரியபாண்டியருடைய கண்களுக்கே அவருடைய வெற்றிகளை நிர்ணயிக்கும் ஆற்றல் உண்டு என்பதை முடிநாகன் அறிவான். எதிரி பலவீனமாயிருக்கும் நேரத்தை அறிந்து கொண்டே மேலும் பலவீனப்படுத்துவது போல் பெரியவர் தொடர்ந்தார்.

"நான் சொல்வதெல்லாம் உங்கள் நன்மைக்குத்தான் முடிநாகா! ஏனென்றால் புன்னைத்தோட்டத்தில் தங்கியிருக்கும் கலைஞர்கள் தங்களுக்குள் பொழுது போக்குவதற்காக ஒரு நோக்கமும், பயனும் இன்றி நிகழ்த்துகிற கலைகள் அதிக அழகுடனிருக்க முடியும். 'சொந்த மனத்தின் திருப்தியையே ஒரு சித்தியாக எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டே படைக்கும்போது அந்தக் கலைத்திறனுக்கு இணை சொல்லமுடியாமல் அது உயர்ந்துவிடும்!' இல்லையா?"

முடிநாகன் வாய்திறக்கவில்லை. பெரியவர் வகையாகப் பிடித்துக் கொண்டு விட்டார். அவரிடம் பொய் கூறியதை எண்ணி அவன் மனம் தவித்து மெய் நடுநடுங்கி நின்றான். அந்தச் சமயத்தில் அவருக்கு இவையெல்லாம் எப்படித் தெரியவந்தன என்பதும் அவன் மனத்தில் குழப்பமாயிருந்தன. அவரோ சொற்களாலும், பார்வையாலும் அவர்களை ஊடுருவினார். உறுத்தும் பார்த்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
10. பெரியவர் கட்டளை


பெரிய பாண்டியருடைய சாதுரியமான பேச்சுக்கு முன் குமாரபாண்டியனும் முடிநாகனும் திறனிழந்து நிற்க நேர்ந்தது. அவரோ மேலும் தொடர்ந்தார்.

"அழகை நிரூபிப்பதற்காக ஒரு காப்புக் கட்டிக் கொண்டது போல் கடவுள் சில பெண்களைப் படைப்பதும் உண்டு அல்லவா?"

முடிநாகனும், இளையபாண்டியனும் இதைச் செவியுற்றுத் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டாற்போலத் தலைகுனிந்தார்கள்.

"ஏன் இருவரும் தலை குனிகிறீர்கள்? உங்களைப் போன்றவர்கள் உருக்குலைவதற்காகப் பெண்களையும் உருவாக்கியிருக்கிறானே இறைவன்?" என்று மேலும் அவர் வினவியபோது தான் இதே சொற்களை இதே கடுமையான குரலில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் கேட்டது நினைவு வந்தது இளையபாண்டியனுக்கு.

பெரியவர் மாறுவேடத்தில் அங்கு வந்ததோடு அமையாமல் தனக்கும் முடிநாகனுக்கும் மிக அருகிலே நின்று இருவர் பேச்சையும் ஒட்டுக் கேட்டிருப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. விருப்பமானது, அறியும் திறனை மங்கச் செய்து விடுகிறது என்பதை இப்போது நன்றாக உணர்ந்தான் இளையபாண்டியன். கண்ணுக்கினியாளின் ஆடல் பாடல்களில் திளைத்த தனது விருப்பம் தனது அருகில் வந்து நின்ற முதியவரை உணரும் ஆற்றலை இழக்கச் செய்திருக்க வேண்டுமென்று இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் மேலும் தலைகுனிந்தான்.

"அரசகுமாரர்கள் தெருவில் திரியும் பொதுமக்கள் போல் தங்கள் விருப்பு வெறுப்புக்களைத் தெரிவிப்பதும் பேசித் திரிவதும் விந்தைதான். 'எதை விரும்புகிறோம், எதை வெறுக்கிறோம்' என்பதை அருகிருக்கும் அமைச்சர்கள் கூட உணர்வதற்கோ கண்டுபிடிப்பதற்கோ அரிதாக வைத்துக் கொள்ளவேண்டுமென்று அரச இலட்சணம் பற்றி அரசியல் நூல்கள் கூறுகின்றன. நீயோ பரிசுக்குப் பாடும் பாண்மகளைப் படைத்த இறைவனை வியந்து உருகுகிறாய்."

"தவறு என்னுடையதுதான். இளையபாண்டியரை அரண்மனைக்கு அழைத்து வராமல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துக்குப் போவதற்குத் துணை நின்றிருக்கக் கூடாது" என்று முடிநாகன் வார்த்தைகளை ஒவ்வொன்றாகப் பயந்தபடி வெளியிடலானான். அதைக் கேட்டு அவன் மேற் சீறினார் பெரியவர்.

"நீ என்னிடம் கூறிய கூற்றுப்படி நீங்களிருவரும்தான் புன்னைத் தோட்டத்திற்கே போகவில்லையே? முதலில் பொய் கூறிவிட்டு அப்புறம் ஏன் தடுமாறுகிறாய்? சாதித்த பொய்க்கு ஏற்பப் பேசத்தெரிய வேண்டும். அல்லது பேசியதற்கு ஏற்பச் சாதிக்கத் தெரியவேண்டும். உங்களுக்கோ இரண்டு வகையிலுமே தேர்ச்சியில்லை" என்று வஞ்சப் புகழ்ச்சியில் இறங்கினார் பெரியவர். முடிநாகன் அவருக்கு மறுமொழி கூறும் சக்தி இழந்தான்.

"கடமையும், ஆண்மையுமே, அரச குடும்பத்தின் பெருநிதிகள். அவற்றை மறந்தோ, இழந்தோ உருகுவதும், நெகிழ்வதும் தலைமேலுள்ள பொறுப்புக்களைப் பாழாக்கிவிடும். இதை நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். நகரத்தைப் பரிசோதிக்க நீங்கள் புறப்பட்டுச் சென்றால் உங்களைப் பரிசோதிக்க நான் பின் தொடர்ந்ததில் தவறென்ன?" - என்று பெரியவர் சிறிது கடுமை குறைந்து ஆறுதலாகப் பேசத் தொடங்கிய பின்பே இருவரும் தலை நிமிர்ந்தனர்.

"தவறு உன்னுடையதில்லை குழந்தாய்! அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அளவு மீறிய கலை உணர்வு ஆகாது! உன் தாய் வழிவந்த இசை ஞானமும், நம் புலவர் பெருமக்கள் கடமையைக் கற்பிப்பதை விட கலையை உனக்கு அதிகமாகக் கற்பித்திருப்பதுமே இதற்குக் காரணம். இசையும் கூத்தும் காமத்தின் இரு கதவுகள். அவற்றைக் கேட்கலாம். காணலாம். கதவுகளை உடைத்துக் கொண்டு புக முயலாதார் மிகவும் குறைவு. உன்னைக் காண நான் நாணப்படுகிறேன். இனி நீ இலக்கண இலக்கியங்களைக் கற்றதை விட அதிகமாக அரச தந்திரங்களையும், போர்த்துறை நுணுக்கங்களையும் கற்க வேண்டும். உன்னுடைய கல்வியில் விரைவாக ஒரு மாறுதல் வேண்டும். இல்லாவிட்டால் நீ ஆட்சிக்குப் பயன்படாதவனாகி விடுவாய்" என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார் பெரியவர். முடிநாகன் ஏதோ பதில் கூறுவதற்கு முயன்றான். அவர் அவனைப் பேச விடவில்லை.

"இசையினால் விருப்பம் மிகுகிறது. விருப்பம் மிகுந்தால் கடமையுணர்வு குன்றுகிறது. கடமையுணர்வு குன்றினால் ஆசை பிறக்கும். ஆசையின் முடிவில் பொறுப்புக்கள் மறந்து போகும். அரச குடும்பத்துப் பிள்ளைகள் நல்ல விதை நெல்லைப் போன்றவர்கள். அவர்களிலிருந்து எவ்வளவோ கடமைகள் பயிராகி வளர வேண்டும். அவர்கள் சரிதத்தில் நிற்கக் கூடியவர்கள். சரிதம் அவர்களை ஒரு மூலையில் நிறுத்திவிட்டுப் போய்விடும்படி ஆகிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு மேலே ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார் பெரியவர். அவர்களிருவரும் தயங்கித் தயங்கி நடந்தபடியே சிந்தனையோடு பள்ளிமாடத்திற்குள் நுழைந்தனர். இருவருமே அன்றிரவு உறங்கவில்லை.

மறுநாள் காலையிலும் விடிந்ததும் விடியாததுமாக பெரியபாண்டியரே அவர்களை எதிர்கொண்டு முதல் நாளிரவு அரைகுறையாக விட்ட உரையாடலைத் தொடரத் தொடங்கிவிட்டார்.

"நேற்றிரவு புன்னைத் தோட்டத்திற்குச் செல்லுமுன் நீங்களிருவரும் ஏதோ அவுணர் வீதி முரசமேடைப் பக்கம் போயிருந்ததாகக் கூறினீர்களே. அந்த நிகழ்ச்சியைப் பற்றி எனக்குச் சிறிது தெளிவாகத் தெரிய வேண்டும்."

இந்தக் கேள்விக்கு இளையபாண்டியனான சாரகுமாரன் மறுமொழி கூறத் தயங்கினான். அருகிலிருந்து முடிநாகன் சற்றே துணிவோடு விரிவாக மறுமொழி கூறலானான்.

"முரசமேடைக்குக் கீழே அவுணர்களின் இரகசிய படைக்கலச்சாலை ஒன்றிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது" - என்பதாக ஏதோ பெரிய அந்தரங்கத்தைக் கண்டுபிடித்துச் சொல்பவன் போல முடிநாகன் கூறியும் பெரியவர் அதைக் கேட்டுச் சிறிதும் அயரவில்லை.

"இருக்கலாம்; அப்புறம்?"

"அதன் மூலம்தான் இடையிடையே அவுணர்கள் கொலை, கொள்ளை, கலகங்களில், ஈடுபடவும் மறையவும், மீண்டும் வெளிவரவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றுகின்றன."

"ஒற்றன் வேறு; அரச குடும்பத்தினன் வேறு. ஒற்றன் அறிந்து கூறுவதைப் போன்ற சாதாரணப் புறச் செய்திகளை அறிவதற்கே அரச குடும்பத்து மதி நுட்பமும் பயன்பட்டால் அப்புறம் அந்த மதிநுட்பத்திற்கு ஒரு பயனுமில்லை. தோற்றம், அதன் பின்னுள்ள கருத்து, கருத்தின் பின் மறைந்திருப்பதாகத் தோன்றும் உட்கருத்து - இறுதியாக அவை பற்றிய நம் அநுமானங்கள் - என்று எல்லாவற்றையும் தொகுத்துணரும் ஞானம் நமக்கு வேண்டும். உண்மையிலேயே உங்களுடைய தொகுத்துணரும் அறிவை நான் சோதனை செய்வதற்கு ஆசைப்படுகிறேன். இப்போது பரிசோதனைக்காக நான் சொல்லப் போகும் காரியத்தை நீங்கள் எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள், எவ்வாறு அநுமானங்களைத் தொகுக்கப் போகிறீர்கள் என்பவற்றை எல்லாம் பார்த்த பின்பே உங்களுடைய அரசதந்திரத் திறமைப்பற்றி நான் கூறமுடியும்."

"முரசமேடைப் பற்றியோ, அதிலுள்ள இரகசியங்களைப் பற்றியோ முதல்முதலாக இன்றுதான் நான் கேள்விப்படுகிறேன் என்று நீங்கள் நினைப்பதாயிருந்தால் உங்கள் பேதமையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அந்த முரசமேடையில் தொடங்கும் சுருங்கை வழி எங்கே போகிறது எங்கே முடிகிறதென்று நீங்கள் அறிந்துகொண்டால் என்னைவிட ஒரு வேளை உங்களுக்கு அதிக வியப்பு ஏற்படலாம்."

"நான் வியக்கவில்லை என்பது பொருளல்ல. என்னுடைய வியப்புக்கும் காரணமிருக்கும். வியப்பின்மைக்கும் காரணமிருக்கும். அதைப் பின்னால் சொல்லுகிறேன். இன்றிரவே அவுணர்வீதி முரசமேடை பற்றி நீங்களே உங்கள் சொந்த அறிவுத்திறன் கொண்டும், சாம, தான, பேத, தண்ட, முயற்சிகள் கொண்டும் என்னென்ன தெரிந்துவர முடியுமோ, அவற்றைத் தெரிந்துவர உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறேன். இந்த முயற்சியில் உயிர்ப் பயம், பகை, குரோதம் எல்லாமே உண்டு. கரணம் தப்பினால் மரணம்தான்! ஆயினும் அரச தந்திரமுள்ளவனுக்குத் தூசு மாத்திரமே ஆகும் இது."

"நாங்களிருவரும் இந்தக் கட்டளையைச் சிரமேற் கொண்டு இன்றிரவே முயல்கிறோம். பெரியபாண்டியர் இந்தக் காரியத்தில் எங்களை ஈடுபடுத்துவதற்கு முழுமையாக நம்பலாம்" என்று முடிநாகனும் குமாரபாண்டியனும் ஒரே சுருதியில் இணைந்து ஒலிக்கும் குரலில் பெரிய பாண்டியருக்கு உறுதிமொழி கூறியும் அவர் அதற்காகப் பெரிதாக முகமலர்ந்து மகிழ்ச்சி காண்பித்து விடவில்லை.

"இதில் நீங்கள் காட்டும் தைரியத்தையும், ஆர்வத்தையும் பார்த்தே நான் அவசரப்பட்டு வியப்படைந்து விடுவேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. விளைவைக் கொண்டே என் முடிவுகள் எனக்குள் உருவாகும்..." என்று அழுத்தமாகக் கூறினார் பெரியபாண்டியர். அன்று பகலில் புலவர் பெருமக்களான அவிநயனாரும், சிகண்டியாரும் பெரியபாண்டியரைச் சந்திக்க வந்தபோது கூடச் சாரகுமாரனும், முடிநாகனும் உடனிருந்தனர். அப்போதும் பெரியவர் காலையிலிருந்த அதே மனநிலையில்தான் பேசினார்.

"புலவர்களே! பேரப்பிள்ளையாண்டானுக்கு அறிவிலும், கலையிலும், இலக்கியம், இலக்கணங்களிலும் ஞானமுண்டாக்குவதற்கு நீங்கள் படுகிற பாட்டைவிட அரசதந்திர ஞானத்தை மட்டும் உண்டாக்குவதற்கே நான் அதிகமாகப் பாடுபட வேண்டும் போலிருக்கிறதே? உங்களுக்காவது ஏடுகளும், சுவடிகளும், இலக்கண இலக்கிய நூல்களும் இருக்கின்றன. அவற்றை விவரித்துக் கற்பித்துவிடலாம். அரச தந்திரமோ நூல்கள் எவ்வளவு கூறினாலும் அதற்கப்புறமும், நிறைவடையாது மீதமிருக்கும் ஒரு துறை. மனிதனின் அறிவிலுள்ள நேரிய மாறுபட்ட எல்லா நுனிகளுக்குமேற்ற அத்தனை பேதங்களும் அரசதந்திரத்தில் உண்டு."

"மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுவதில்லை. தங்கள் பேரப் பிள்ளையாண்டானுக்கு இவையெல்லாம் தானாகவே வரும்."

"பழமொழி நன்றாக இருக்கிறது" என்று மட்டும் சுருக்கமாக மறுமொழி கூறிச் சிரித்தார் முதியபாண்டியர் வெண்தேர்ச்செழியர். பெரியவரின் இந்தப் பேச்சுக்களையும், செயல்களையும் பார்க்கப் பார்க்க இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும், இரவு எப்போது வரப்போகிறதென்று இருந்தது. இரவு வந்தால் நகர் பரிசோதனைக்குப் புறப்படலாம். நகர் பரிசோதனைக்குப் புறப்பட்டால் முரசமேடை இரகசியங்களை அறிந்து பெரியவரிடம் விவரித்தபின் அவர் வாயால் பாராட்டப்படலாம் என்ற ஆர்வமே அவர்களுக்கு அப்போது இருந்த விருப்பமாகும்.

பெரியவருடைய கட்டளையை ஒப்புக்கொண்ட போதும், அதை நிறைவேற்றி நல்ல பெயரெடுக்க இரவை எதிர்பார்த்துக் காத்திருந்தபோதும் இந்த ஆவலே அவர்கள் இருவர் உள்ளத்தில் இருந்தது. தங்கள் திறமையிலும் ஒற்றறிதல் சூழ்ச்சியிலும் அவர்களுக்குப் பெரிதும் தன்னம்பிக்கை விளைந்திருந்தது. மிகக் குறைந்த வியப்புக்களையே அவர்கள் எதிர்பார்த்தனர். அவுணர்வீதி முரசமேடையைப் பொறுத்த மட்டும் தங்களுடைய முந்தையநாள் அநுமானங்களுக்கு மேல் புதிய உண்மைகள் எவற்றையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவேதான் அதைப்பற்றி எளிதாகவும், கவலையற்றும், அவர்கள் எண்ணமுடிந்தது. முடிநாகன் மட்டும் உள்ளூரச் சிறிது தயங்கினான். பெரியவர் காரணமின்றி ஒரு கட்டளையை இடமாட்டார் என்பது பலமுறை அவன் அனுபவத்தில் கண்ட உண்மையாகும். பிறர் எளிதாக நினைப்பதை அவர் மறுக்காமல் விடுவதில் கூட ஒரு சாமர்த்தியம் உண்டு. அவுணர்வீதி முரசமேடை பற்றி அவர் எளிதாக எண்ணித் தங்களுக்குக் கட்டளை இடுவதாகமட்டும் அவனுக்குத் தோன்றவில்லை. எனவேதான் அந்தரங்கமாக அவன் தயங்கினான். அந்தரங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இளையபாண்டியர் போல் அவனும் திடமாகவே புறத்தோற்றத்தில் அப்போது விளங்கினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
11. முரசமேடை முடிவுகள்


அன்றிரவு நடுயாமத்திற்குச் சற்று முன்பாக இளைய பாண்டியனான சாரகுமாரனும், தேர்ப்பாகன் முடிநாகனும் மாறுவேடத்தில் முரசமேடைக்குப் புறப்பட்டார்கள். "போய் வருக! வெற்றி உங்கள் பக்கமாவதற்கு இப்போதே நான் நல்வாழ்த்துக் கூறுகிறேன்" என்று சிரித்துக் கொண்டே அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார் முதிய பாண்டியர்.

அவருடைய வாழ்த்தினால் முடிநாகன் பெருமையடைந்து விடவில்லை என்றாலும், தங்களை முழுமையாக உறைத்துப் பார்ப்பதற்கு அவர் துணிந்துவிட்டார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தச் சோதனையில் வெற்றி பெறவேண்டுமென்பதற்காக அவன் கபாடபுரத்தின் காவல் தெய்வங்களையும், வழிபடு கடவுளர்களையும் மனமார வேண்டிக் கொண்டிருந்தான். செய்ய வேண்டிய சோதனைகளையும், ஒற்றறிதல் வேலைகளையும் அவுணர் வீதியைச் சார்ந்த இடங்களிலும் சுரங்கப் பகுதியிலுமே நிகழ்த்த வேண்டியிருந்ததனால் அவுணர்கள் போன்றதொரு கோலத்தையே அவர்களிருவரும் மாறுவேடமாகப் புனைந்து கொண்டிருந்தனர். கோட்டைப் புறமதில்களைக் கடந்து அவுணர்வீதியை அடைந்தபோது வீதி பேய் அமைதியில் மூழ்கியிருந்தது. வானில் மேகம் கவிந்திருந்ததனால் இருட்டும் அதிகமாக இருந்தது. முரசமேடையைச் சுற்றி யாரும் தென்படவில்லை. சூனியமானதொரு பயங்கர நிலை நிலவியது அங்கே.

முடிநாகன் வலது புறமும், இளையபாண்டியன் இடது புறமுமாக முரசமேடையைச் சூழ்ந்து கீழே இறங்குவதற்கான சுரங்க வழி இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்கள் மேடையும் பக்கச் சுவர்களும், மேலே மலையைக் கவிழ்த்து நிறுத்தி வைத்தாற் போன்ற மாபெரும் முரசமுமாக இருந்த அந்த இடத்தில் முந்திய இரவு மனிதர்கள் திடீர் திடீர் என்று அங்கு வந்ததுமே முரசடியில் மறைவதைக் கண்ணுக்கெதிரில் கண்டிருந்தும் இன்று அந்த ரகசிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள் அவர்கள்.

அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது பாட்டனார் சிரித்த சிரிப்பும், வாழ்த்திய வாழ்த்தும் நினைவு வந்தன. எதையும் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினால் அதைப் போல் பெரிய தோல்வி வேறெதுவும் இருக்க முடியாது. நீண்ட நேரம் முரசமேடையைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாலும் வேற்றவர் எவரேனும் சந்தேகக் கண்ணோடு காண நேரிட்டும் விடும். இந்த மனவேதனையில் இருள் வேறு அவர்களுக்கு எதிரியாகி இருந்தது. ஒரு விதத்தில் அந்த இருளே துணையாகவும் இருந்தது. இறுதியில் முடிநாகன் தான் அந்த அதிசயத்தைக் கண்டுபிடித்தான்.

முரசமேடையின் பக்கச் சுவர்களிலே அவர்கள் தேடிய வழி அகப்படவில்லை. கீழே தரையில் வெண்கலத்தை மிதிப்பது போலத் திமுதிமு வென்று ஒலி அதிரவே முடிநாகன் கையால் கீழே தொட்டுத் தடவிப் பார்த்தபோது மணலுக்கு அடியில் கனமான மரப்பலகை தளமாக இருந்தது. அந்தப் பலகையை ஒவ்வொரு நுனியாகத் தொட்டுப் பார்த்தபோது நடுவில் ஐந்தாறு விரற்கடை இடைவெளியோடு பக்கத்துக்கு ஒன்றாய் இரண்டிடங்களில் மேலே தூக்குவதற்கு வாய்ப்பாக இரும்பு வளையங்கள் இடப்பட்டிருந்தன. பக்கத்தில் மேடையருகே மணற் குவியலொன்றும் நிரந்தரமாக இருந்தது. ஒவ்வொரு முறை திறந்து மூடியபின்பும் அந்த இடம் தரைபோல் தெரிய வேண்டுமென்பதற்காக மேலே மணலை இட்டு நிரப்பிவிடுவார்கள் போலும் என்று அநுமானம் செய்ய முடிந்தது. மணலை இட்டு நிரப்பினாலும் தரைமேல் நடக்கும் போது இருக்கும் ஓசைக்கும் இந்த மரப்பலகைக்கு மேல் மணல் மூடிய இடத்தில் நடக்கும்போது இருக்கும் ஓசைக்கும் வேறுபாடு இருந்தது. இதில் நடக்கும்போது ஓசை அதிர்ந்தது.

"வழி தெரிந்துவிட்டது" - என்ற முடிநாகனுடைய காதருகில் உற்சாகமாகக் குரல் கொடுத்தான் சாரகுமாரன்.

"இருளில் மெல்லப் பேச வேண்டும். முடியுமானால் பேசாமலே காரியங்களைத் தொடர்வதும் நல்லது. இந்த விதமான வேளைகளில் மௌனமும் குறிப்பறிதலுமே பெரிய துணைகள். இருளுக்குள் ஆயிரம் செவிகள் இருக்கலாம். பதினாயிரம் கண்கள் இருக்கலாம். எனவே கவனமும் விழிப்புமாகக் காரியத்தை நிறைவேற்ற வேண்டும்" - என்று இளையபாண்டியனிடம் மிக மெல்லிய குரலில் காதருகே கூறி எச்சரித்து விட்டு இரும்பு வளையத்தைப் பற்றிப் பலகையைத் தூக்கத் தொடங்கினான். மற்றொரு பக்க வளையத்தைக் குறிப்பறிந்து சாரகுமாரன் மேலே தூக்கலானான். கீழே இருளில் படிகளைப் போல் மங்கலாகத் தெரிந்தன.

இருவரும் ஆவலோடு கீழிறங்கினர். பத்துப் படிகள் வரை வழி கீழே இறங்கியது. பதினோறாவது படியே இல்லை. கீழே பாறை இடறியது. பக்கவாட்டில் சுவர்போல் பெரிய கல் வழி மறித்தது. இருள் வேறு செறிந்திருந்தது. எனவே இருவரும் திகிலுடனும், பரபரப்புடனும் மேலே ஏறிவந்து அவசர அவசரமாகப் பலகையிட்டு அந்த வழியை மூடி மணலும் இட்டு நிரப்பினர். அது வழியாக இருக்க முடியாதென்று அவர்கள் இருவருக்கும் தோன்றியது. சுரங்கங்களிலும், இரகசிய வழிகளிலும் - மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமலிருப்பதற்கென்று உண்மையான வழியை மறைப்பதற்காக, வழிகள் போன்று தெரியும் ஆனால் வழிகளாகாத பல போலி வழிகளை உண்டாக்கியிருப்பார்கள் என்பதை முடிநாகன் அறிவான்.

முரசமேடையின் நான்கு பக்கச் சுவர்களில் எந்தச் சுவர் அருகிலும் வழி இருக்கலாம். எந்தச் சுவர் அருகில் - எந்தச் சுவருக்கு கீழேயிருந்து வழி தொடங்குகிறதென்று காண மருளும்படியும் மயங்கும்படியும் - ஒவ்வொரு சுவரருகிலிருந்துமே உண்மையான வழி தொடங்குவது போல் பாவனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஒரு நாழிகைப் போதுக்கு மேல் சோதித்துப் பார்த்த பின்பே உண்மைச் சுரங்க வழி தொடங்குமிடம் தெரிந்தது. தெற்குப் பக்கத்துச் சுவரையொட்டி முரசமேடையின் கீழே உண்மையான படி வழிகள் தொடங்கின. பலகையைத் தூக்கியதும், இரண்டு மூன்று வௌவால்கள் சிறகடித்து மேலே வந்தன. கீழேயும் படிகள் பெரிதாக நீண்டு கிடந்தன.

"மற்ற எல்லாப் பக்கமும் மயக்கு வழிகளாயிருந்து விட்டதனால் இதுவே உண்மை வழியாயிருக்க வேண்டும் இளையபாண்டியரே! அடிக்கடி திறந்து மூடுவதால்தான் இதில் வௌவாலாவது உயிர் வாழ்கிறது. மற்ற வழிகளில் இவை கூடப் பறக்கவில்லையே?" என்று கூறிக்கொண்டே படிகளில் இறங்கினான் முடிநாகன். சாரகுமாரனும் அவனைப் பின் தொடர்ந்தான். சிறிது தொலைவு சென்றதும் உண்மை வழி அதுவே என்பது முடிவாயிற்று.

"மேலே போய் - உட்புறம் நின்றபடியே பலகையை மூடிவிட வேண்டும். இல்லாவிட்டால் திறந்த வழியைப் பார்த்தே சந்தேகப்பட்டு யாராவது நம்மைப் பின் தொடரக்கூடும்" - என்று கூறிய முடிநாகன் மேலே வந்து உட்புறத்தில் நின்றபடியே பலகையை இழுத்துப் பொருத்தினான். பலகை மேற்புறமும் நன்றாகப் பொருத்திக் கொண்டதற்கு அடையாளமாக உள்ளே இருள் மேலும் கனத்துச் செறிந்தது. தடுக்கி விழாமல் கீழே இறங்கப் படிகளில் கவனமாக அடி பெயர்த்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது உள்ளே வௌவால் நாற்றமும், காற்றுப் புகாத இறுக்கமுமாக இருந்தன.

"இந்த முரசமேடையிலிருந்து நகரில் எந்தெந்த பகுதிகளுக்குப் போவதற்கெல்லாம் சுரங்க வழிகள் குடைந்திருக்கிறார்களோ? இந்த அரக்கர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்?" என்று சாரகுமாரன் கூறியபோது, "செய்தால் என்ன? அவர்கள் இரகசியம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அவர்களுக்கு முன்பாகவே உங்கள் பாட்டனார் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பார். எதிராளி 'நாம் அவனைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறோம்' - என்பதை உணரவோ, புரிந்து கொள்ளவோ விடாமல் - அவனைப் பற்றி நிறைய அறிந்து கொண்டு அமைதியாயிருப்பது தான் மிகப் பெரிய அரச தந்திரம். அதில் தங்கள் பாட்டனார் வல்லவராயிருக்கும் போது யார் எது செய்தால் தான் என்ன" என்று திடமாக மறுமொழி கூறினான் முடிநாகன்.

அந்தச் சுரங்க வழியில் வழிபோகும் திக்கையே குறியாக வைத்துக் கொண்டு அவர்கள் முன்னேறியபோது சில இடங்களில் கீழே பாறை போலிருந்தது. இன்னும் சில இடங்களில் மணற்பாங்காயிருந்தது. மேலும் சில பகுதிகளில் கற்படிகளே செதுக்கப்பட்டிருந்தன. 'வழி எங்கே போய் மேலே ஏறுகிறது? எங்கே போய் முடிகிறது?' என்று தெரிந்து கொள்வதும் அவ்வளவு எளிய காரியமாயில்லை. எப்படியும் பொழுது புலர்வதற்குள் அந்த இருட்குகைக்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணமும் அவசரமும் அவர்களுக்கு இருந்தன.

அயலவர்களோ, பிறரோ ஒற்றறியும் எண்ணத்துடனோ, இரகசியங்களை அறிந்து சென்று வெளிப்படுத்தும் எண்ணத்துடனோ - இந்தச் சுரங்கங்களுக்குள் வந்தால் தெளிவாக எதையும் வெளிபடுத்த முடியாது குழப்பமடைய வேண்டும் என்பதற்காகவே, முடிவது போலவும் வெளியேறுவதற்கான வாயில் இருப்பது போலவும் தோன்றுமாறு, முடியாததும் வெளியேறுவதற்கான வாயில் இல்லாததுமான குழப்ப வழிகள் பல அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தன. மிகவும் ஆவலோடும், பரபரப்போடும் அருகில் போய் நிற்கும்போதுதான் அதற்கு மேல் அந்த வழி தொடரவில்லை என்பது தெரியவரும். இருளும், காற்று அதிகமின்மையும் இடர் தந்த சூழ்நிலையில் குழப்பம் விளைவிக்கும் போலி வழிகளை ஒவ்வொன்றாகத் தவிர்த்து முன்னேறினார்கள் அவர்கள்.

"புறநகரிலே எங்காவதொரு பகுதியில் போய் இந்த வழியின் மற்றொரு நுனி முடியுமென்று தோன்றுகிறது!" என்பதாக முடிநாகன் தெரிவித்தான்.

"நிச்சயமாக எனக்குத் தோன்றுகிறது - இங்கிருந்து வெளியேறிச் செல்லுகிற வழிகள் இரண்டாக இருக்கும். பல காரணங்களை உத்தேசித்து இத்தகைய அந்தரங்கச் சுரங்கங்களில் வெளியேறுகிற வழிகளை மட்டும் இரண்டாக அமைத்திருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது. ஆகையால் இத்தகைய பொய்வழிகளுக்கும் நடுவே எங்கோ இரண்டு உண்மையான வழிகளும் இருக்க வேண்டுமென்பது என் அநுமானம். இந்த இரவு விடிவதற்குள்ளேயே அந்த இரண்டு வழிகளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியுமா, முடியாதா என்பதை மட்டுமே நாம் சிந்தித்தாக வேண்டும்" என்று சாரகுமாரன் உறுதியாகத் தெரிவித்தான். இன்றே இறுதிவரை முயன்று முடிவு தெரிந்து கொண்டு போவதா, அல்லது நாளை மறுபடியும் மேலே தொடர்வதா? என்பதுபற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு சிறிய விவாதம் மூண்டது.

"இப்போது திரும்ப எண்ணினாலும் மீண்டும் வழி தொடங்கிய இடத்தை அடைந்து மேலே முரசமேடைக்குக் கொண்டு போய்விடும் உண்மை வழியைக் கண்டுபிடிக்கச் சில நாழிகைகள் ஆகும். இவ்வளவு நேரம் முயன்ற முயற்சியும் வீண். வந்த வழியே திரும்புவதால் ஒரு பயனுமில்லை. மறுபடியும் நாளைக்குத் தேடத் தொடங்கும்போது - புதிதாகத் தேடுகிறவர்களைப் போலவே முதலிலிருந்து தேட வேண்டும்."

"எல்லாவற்றையும் சிந்திக்கும்போது வந்த வழியில் திரும்பி வெளியேறுவதைவிட இன்னும் சில நாழிகைகள் செலவழித்தாலும் எதிர் வருகிற புதுவழியில் திரும்புவதுதான் நல்லது. வந்த வழியே திரும்பி வெளியேறுகிற நேரத்தில் நாம் எதிர்பாராதபடி இருள் பிரிந்து விடிகிற வேளையாயிருந்துவிட்டாலோ அவுணர் வீதி நடுவில் முரசமேடைக்கருகே யாரிடமாவது நாம் அகப்பட்டுக் கொள்ள நேரிடும். இந்த இருட்குகைக்குள் இரவும் தெரியவில்லை. பகல் வந்துவிட்டதா இல்லையா, என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. உறுதியாக எதிரிகளின் கேந்திரத்திலிருக்கிறதென்று நமக்கே தெரிந்த அவுணர்வீதியைத் திரும்ப வெளியேறுமிடமாகத் தேர்ந்தெடுப்பதைவிட, எங்கிருக்கிறதென்று நமக்கே தெரியாத புதிய வெளியேறும் வழியைக் குறிக்கோளாகக் கொண்டு நாம் முன்னேறுவது நல்லது" என்று சாரகுமாரன் பிடிவாதமாகக் கூறவே முடிநாகனும் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று.

தேடிக்கொண்டிருந்த பகுதியில் வெளியேறுகிற மறுவழி மிக அருகிலிருப்பது போல இருவர் மனத்திலும் ஒரு நம்பிக்கை உணர்வு வேறு தோன்றத் தொடங்கியது. பெரும்பாலும் இத்தகைய நம்பிக்கைகள் பொய்த்துப் போவதில்லை. துன்பங்களின் நீண்ட வரிசைக்குப் பின்னால் நம்பிக்கை மயமாக எண்ணம் வருகிறபோதே வெற்றியும் வருகிறதென்று ஒப்புக் கொள்ளலாம். அவர்களுடைய நம்பிக்கைக்குக் காரணமுமிருந்தது. அதுவரை காற்றே நுழையக் காணாத சுரங்கப் பகுதியில் இலேசாக ஒரு நூலிழை காற்றுச் சிலுசிலுத்தது. அந்தப் புதிய காற்று நுழைந்த வழியை ஆவலோடு தேடினார்கள் அவர்கள். அப்படித் தேடியபோது வெற்றியின் மற்றொரு நல்வரவாக ஒரு நூலிழை ஒளிக்கதிரும் எதிரே திசை தெரியாத எங்கோ ஒரு பகுதியிலிருந்து அவர்களை நோக்கி நீண்டது. இருவருக்கும் நம்பிக்கை வந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
12. அந்த ஒளிக்கீற்று


இருளில் எங்கிருந்தோ எதிர்வந்த அந்த ஒற்றை ஒளிக்கீற்றே கரைகாணாப் பேரிருளுக்குப் பின் விடிந்து விட்டாற் போன்ற பிரமையை உண்டாக்கிற்று அவர்களுக்கு.

"மற்றொருவருடைய ஆட்சிக்குட்பட்ட கோ நகரத்தில் இப்படியொரு இருட்குகை வழியைப் படைக்கும் துணிவு வர வேண்டுமானால் இந்த அவுணர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்க வேண்டும்!" என்று வினாவிய இளையபாண்டியனுக்கு முடிநாகனிடமிருந்து விளக்கமான மறுமொழி கிடைத்தது.

"தங்கள் பாட்டனார் இந்த அழகிய புதுக் கோ நகரத்தைப் படைக்கும் போது - கட்டிடங்களைக் கட்டுவதற்கும், வானளாவிய மதிற்சுவர்களை மேலெழுப்புவதற்கும், அகழிகளைத் தோன்றுவதற்கும் - உடல் வலிமைமிக்க பணியாட்களாகக் கிடைத்தவர்கள் இந்த முரட்டு அவுணர்களும், குறும்பர்களும், கடம்பர்களுமாகத்தான் இருந்தனர். அந்த நிலையில் இவர்களை நம்பியும் ஆக வேண்டியிருந்தது. முழுமையாக நம்பவும் முடியவில்லை. உடனிருப்பவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாகத் தோன்றவில்லை. என்றாலும் மற்றவர்கள் எல்லாரும் அறிய அவர்களை விரோதிகளாகக் கருதுவதோ, பகைவர்களாக நிரூபித்து முடிவு கற்பிப்பதோ அரச தந்திரமாகாது."

"'நம்மை எதிர்க்கும் ஒரு விரோதிக்கு நம்முடைய - மற்ற விரோதிகள் எல்லாம் யார் யாராக இருப்பார்கள் என்று அநுமானம் செய்யும் வாய்ப்பைக் கூடக் கொடுக்கலாகாது' என்றெண்ணும் இயல்புடையவர் தங்கள் பாட்டனார். அதனால் தான் கோ நகரத்தை அமைக்கும் பணியை இவர்களிடம் விட்டிருந்தார். ஆனால் இவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு - இப்படி இரகசிய வழிகளையும் கரந்து படைகளையும் சுருங்கை மார்க்கங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எங்கெங்கே என்னென்ன செய்திருப்பார்கள் என்பதெல்லாம் அவருக்கு மிக நன்றாகத் தெரியும்."

பேசிக் கொண்டே அவர்களிருவரும் அந்த ஒளிக் கீற்றுப் புறப்பட்ட இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்கிப் பார்த்ததும் தான் அந்த இடத்தில் அவர்கள் அடைந்த வழியின் மற்றொரு நுனி தேர்க்கோட்டத்தின் உள்ளே மரங்களடர்ந்த புதர் ஒன்றினருகே கொண்டு போய்விடுகிறது என்பது தெரிந்தது. சிலுசிலுவென்று உள்ளே நுழைந்துவந்த காற்றும் அந்த இடத்திலிருந்து புறப்பட்டதுதான் என்று தெரிந்தது. வழியின் முடிவில் தேர்க்கோட்டத்துப் புதரருகே மதிற்சுவரை ஒட்டினாற்போல - மேலே ஏறி நின்றபோது இன்னும் பொழுது புலரவில்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

'வழியைக் கண்டுபிடித்து முடிப்பதற்குள் விடிந்துவிடுமோ' - என்று உள்ளே இருள்வழியில் தோன்றிய பரபரப்பும் பயமும் வீண் பிரமையே என்பதனை இப்போது அவர்கள் இருவரும் உணர்ந்தனர். உள்ளே இறங்கி, அந்தச் சுரங்கவழி போய் முடிகிற மற்றோர் இடத்தையும் கண்டுபிடிக்கப் போதுமான காலமும் வாய்ப்பும் இருக்குமென்று தோன்றியது. எஞ்சியுள்ள காலத்தை வீணாக்காமல் செயல்படலாமென்று இளையபாண்டியனும் முடிநாகனும் எண்ணினர்.

"எதற்கும் இந்தப் புதரருகே இந்தப் பகுதி எங்கிருக்கிறதென்று அடையாளம் தெரிகிறார் போல எதிர்புறமுள்ள மதிற்சுவரில் ஒரு குறியீடு செய்து வைப்பது நல்லது. முரசமேடை வழியிலிருந்து இங்கே புறப்பட்டு வராமல் - இங்கிருந்து முரசமேடைப் பகுதிக்குப் போக வேண்டிய அவசியம் என்றாவது வருமானால், இங்கு இந்த மதிற்சுவரில் உள்ள குறியீட்டைப் பார்த்து வழி தொடங்குமிடத்தை அறிய முடியும்" என்று முடிநாகன் கூறிய யோசனையை அப்படியே ஏற்றுச் செயல்புரிந்தான் இளையபாண்டியன்.

அந்தப் புதருக்கு நேர் எதிரே மதிற்சுவரில் 'வழி இங்கே விளங்கும்' - என்பதை மிகவும் குறிப்பாக உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற முறையில் விளக்குப் போல் உருத்தோன்றக் கோடுகள் கீறிவைத்தான். பெரும் பரப்பாக விரிந்துகிடந்த தேர்க்கோட்டப் பகுதியில் அது எந்த இடம் என்பதையும் நன்றாகச் சுற்றிப் பார்த்துத் தெளிவாக நினைவு வைத்துக் கொண்டார்கள் அவர்கள்.

முரசமேடை வழியின் மற்றோர் நுனியைக் காண்பதற்காக அவர்கள் மீண்டும் அந்த வழியே உள்ளே இறங்கிய போது, "எனக்கொரு சந்தேகம் முடிநாகா! இருளோ இன்னும் புலரவில்லை. வழி முடிகிற இந்த இடத்திலோ செடியும், கொடியும், புதருமாயிருக்கிறது. அப்படியிருக்கையில் நாம் உள்ளே கண்ட ஒளிக்கீற்று எங்கிருந்து வந்திருக்க முடியும்? அவ்வளவு தெளிவான ஒளி இந்த இருளில் எங்கிருந்தும், எப்படியும் வருவதற்குச் சாத்தியமில்லையே?" - என்று ஒரு ஐயப்பாட்டைத் தெரிவித்தான் இளையபாண்டியன். இது நியாயமான சந்தேகமென்றே முடிநாகனுக்கும் தோன்றியது.

விளக்காகவோ, சுரங்கத்தின் மேற்புறத்தில் எங்கிருந்தாவது வருகிற ஒளியாகவோ அது இருந்திருக்க முடியாது என்று அவர்களுக்குள் ஓர் உறுதி ஏற்பட்ட பின், முன்பு நம்பிக்கை ஒளியாகத் தோன்றியிருந்த அதே ஒளியைப் பற்றி இப்போது சிந்தனையும், சந்தேகமும், கற்பனைகளும் எழுந்தன. இப்படி அந்த ஒளியைப் பற்றிய சந்தேகத்தோடும் சிந்தனைக் கலவரங்களுடனும் - கீழே இறங்கிச் சென்றதும், மறுபடி திரும்பிச் செல்லுகிற வழியில் ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை போய் நின்று கொண்டு திரும்பிப் பார்த்தார்கள் அவர்கள். மீண்டும் அந்த ஒளி சுடரிட்டது. இருவரும் உடனே விரைந்து திரும்பி அந்த ஒளி வந்த இலக்கைக் குறிவைத்து நடந்தார்கள். முரசமேடையிலிருந்து தேர்க்கோட்டத்துக்குப் போய் மேலேறுகிற வழியில் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைவரைதான் அந்த ஒளி தெரிந்தது. அதற்குப் பின் அந்த ஒளியைப் பற்றி நினைக்கவே வழியின்றி மேலேறிச் செல்லும் படிகளைக் கால்கள் நன்றாக உணர முடிந்தது.

'சுரங்க வழி முடிந்து மேலே ஏறிச் செல்லும் வழி இந்தப் பகுதியில்தான் இருக்கிறது' - என்பதை உள்ளே நடந்து வருகிறவர்கள் இருளிலும் தடுமாறாமல் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த ஏற்பாடு என்பதாக நன்றாக உய்த்துணர முடிந்தது. முடிநாகனும் இளையபாண்டியனும் அந்த ஒளிக்கீற்று எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக விரைந்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட அநுபவம் விந்தையானதாக இருந்தது. அதை அறிந்து கொள்ளும் ஆவல் குறைவதாய் இல்லை. 'இதோ அருகில் நெருங்கிவிட்டோம். இன்னும் நொடிப் பொழுதில் இந்த ஒளியைப் பற்றிய உண்மை நமக்கு விளங்கிவிடும்' - என்று நினைத்த கணத்திற்கு அடுத்த கணமே அந்த ஒளி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தோ திசை தப்பியோ போய்க் கொண்டிருந்தது. நீண்ட நேரத் தடுமாற்றத்திற்குப் பின் மிக எளிமையான அந்த உண்மையை முடிநாகன் தான் கண்டுபிடித்தான்.

கபாடபுரத்தின் பெயர்பெற்ற இரத்தினாகரங்களில் எடுத்த ஒளி நிறைந்த மணி ஒன்றை அந்த இடத்தில் சுவரில் பதித்திருந்தார்கள் அவுணர்கள். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் குறிப்பிட்ட தொலைவுவரை 'பளிச்சிடும்'படி அந்தக் கல் பதிக்கப்பட்டிருந்தது. அவுணர்களின் சாதுரியமான இந்த வேலைப்பாட்டை இளையபாண்டியன் மிகவும் வியந்தான். அந்த மணி பதித்திருந்த இடத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது. கண்டுபிடித்து முடித்ததும் வெற்றிப் பெருமிதத்தோடு அடுத்த வழியைத் தேடிப் புறப்பட்டார்கள் அவர்கள்.

அடுத்த வழி பிரிகிற இடத்திலும் இதைப் போல் ஒரு மணி சுடர் பரப்பியது. ஆனால் ஒரு சிறிய வேறுபாடும் இருந்தது. தேர்க்கோட்டத்து வழியில் பதிக்கப்பட்டிருந்த மணி சிவப்புக் கலந்த ஒளிச் சுடரை உமிழ்ந்தது என்றால் - மற்றொரு வழித் தொடக்கத்தில் பதிக்கப்பட்டிருந்த மணி நீலங் கலந்த ஒளிச் சுடரை உமிழ்ந்து கொண்டிருந்தது. அந்த இரண்டாவது வழி புறம்போய் முடிகிற இடம் எது என்பதை அறிந்து கொள்வதிலும் அவர்கள் அதிக ஆவல் காட்டினார்கள். முதல் வழி தேர்க்கோட்டத்துப் புதரில் மதிலருகே வெளியேறுவதாய் அமைந்திருப்பதனால் இரண்டாவது வழி வேறு திசையில் வேறு பகுதியில் தான் அமைந்திருக்க வேண்டும் என்பதை அநுமானம் செய்ய முடிந்தாலும் பிரத்யட்சமாகக் கண்டு முடிவு தெரிந்து கொள்கிறவரை அந்த ஆவல் அடங்கிவிடாது போலிருந்தது.

"அசுர சாதுரியம் என்பார்களே; அதற்கு ஏற்றாற் போலல்லவோ காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள்?" என்று அந்த உள் வழிகளையும் அவற்றின் பிரிவுகளையும் வியந்தான் சாரகுமாரன். மற்றோர் வழி பிரிகிற இடத்தில் மிக அருகே கடல் அலைகளின் ஓசையைக் கேட்டு அந்த இடம் கடற்கரைக்குச் சமீபமாக இருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. உப்புக் காற்றும் மெல்ல மெல்ல உட்புகுந்து அலைவதை அவர்கள் உணர்ந்தனர். இறுதியில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு பாறைச் சரிவில் வெளியேறுகிறாற் போல் அமைந்திருந்தது அந்த வழி. உள்ளேயிருந்து வருகிறவனுக்குத்தான் வெளியேறியாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் அதன் வழியே வெளியேற முடியுமென்பது தெரியுமே ஒழியப் புன்னைத் தோட்டத்தின் பக்கமிருந்தோ, வெளியே கடற்புறத்திலிருந்தோ பார்க்கிறவனுக்கு அந்தப் பாறையருகிலிருந்து அவுணர் வீதி முரசமேடைவரை போய்ச் சேருவதற்கேற்ற சுரங்க வழி ஒன்று உள்முகமாகச் செல்லும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாதபடி இருந்தது.

பாறைக்கு மிக அருகே கடலில் படகுகள் நிற்கவும் புறப்படவுமான சிறு துறை ஒன்றிருந்தது. தென்பழந்தீவுகளிலிருந்து இரகசியமாகத் தேடி வருகிறவர்களை அவுணர் வீதிக்கு அழைத்துச் செல்லவும், அதே போல அவுணர் வீதியிலிருந்து தென்பழந்தீவுகளுக்குக் கடத்திக் கொண்டுபோக வேண்டியவற்றைக் கடத்திக் கொண்டு போகவும் இந்த இரண்டாவது வழி பெரிதும் பயன்படும் என்று தோன்றியது. பொருத்தமறிந்து இடமறிந்து அவுணர்கள் இந்த வழியை அமைத்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சியை வியப்பதைத் தவிர வேறொன்றுமே செய்யத் தோன்றவில்லை. படிகளில் ஏறி வெளியே பாறைச் சரிவில் கால் வைத்ததும் எதிரே பேயறைந்தாற் போலக் கண்ணுக்கு எட்டிய தூரம் கடல் தெரிந்தது. முன்பின் அந்த வழிகளில் வந்து பழகாத புதியவர்களுக்குத் திடீரென்று கடல் அந்தப் பாறையையும் அதில் நிற்கும் தன்னையும் விழுங்க வருவதுபோல் அச்சம் தோன்றும்படி செய்யவல்லது அந்த இடம்.

விடியல் வேளை நெருங்கிக் கொண்டிருந்ததனால் சாரகுமாரனும், முடிநாகனும், அரண்மனைக்குத் திரும்ப எண்ணினர். அந்த வைகறையின் சுகமான சீதளக் காற்றில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் பூத்திருந்த புன்னைப் பூக்களின் நறுமணம் எல்லாம் கலந்து வீசியது. எங்கோ ஓரிரு காகங்கள் கரையத் தொடங்கியிருந்தன. அந்தக் காற்று, அதில் கலந்திருந்த புன்னைப் பூ வாசனை, எல்லாம் சேர்ந்து கண்ணுக்கினியாளை நினைவூட்டின. நகர் பரிசோதனைக்காகப் புறப்பட்ட மாறுகோலத்திலிருப்பதே தனக்கும் முடிநாகனுக்கும் அப்போது ஒரு நன்மையாயிருப்பதை இளையபாண்டியன் உணர்ந்தான். முடிநாகனோடு அவன் புன்னைத் தோட்டத்திற்குள் புகுந்த போது மெல்ல மெல்ல விடியத் தொடங்கியிருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
13. நெய்தற்பண்


புன்னைப் பூக்களின் நறுமணத்தோடு - தோட்டத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து - யாரோ நெஞ்சு உருக உருக நெய்தற்பண்ணை இசைக்கும் ஒலியும் கலந்து வந்தது கடல் அலைகளுக்கும் சோகத்துக்கும் ஏதோ ஓர் ஒலி ஒற்றுமை இருக்கும் போலும். கவிகளின் சிந்தனையில் கடல் அலையொலி சோகத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றியிருக்கிறது. குழலிசையிலும், கடலலையிலும், மாலை வானின் செக்கர் நிறவொளியிலும், உலகில் முதல் கவிஞனே சோகத்தைத்தான் கண்டிருக்க முடியும் போலிருக்கிறது. அதனால்தான் நெஞ்சின் சோகத்துக்கு எதிரொலிகளாக அமைய முடிந்தவற்றை வரிசைப்படுத்தும் போதெல்லாம் இவற்றையே ஒன்று சேர்த்துத் தொகுத்து வரிசைப் படுத்தியிருக்கிறார்கள். சுவை, ஒளி, உறு, ஓசை, மணம் இவற்றிற்கும், மனிதனுடைய சிந்தனைக்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டும். ஒரு சுவையோடு உறவு கொள்ளும் போதுகளில் எல்லாம் முதன் முதலாக அந்தச் சுவையைக் கண்ட வேளையின் நினைவுகள் வருகின்றன. ஓர் ஓசை, ஒரு மணம், ஓர் உணர்வு, எல்லாமே அதன் முதல் அநுபவத்தைச் சார்ந்த முதல் நினைவுகளுடனேயே வருகின்றன.

புன்னை மரத் தோட்டத்தின் நறுமணம் அதே சூழ்நிலையில் அதே இடத்தில் முன்பு கண்ட கண்ணுக்கினியாளின் - ஆடல் பாடலை நினைவூட்டியது. இப்போது வெகு தொலைவிலிருந்து செவியை அணுகும் அந்த நெய்தற்பண்ணும் அவளுடைய குரலைப் போலவே இருந்தது. எதிரே தீயணைந்து வெறும் புகைமட்டும் எழும் கலங்கரைவிளக்கத்துப் பாறையில் அந்தப் புகை எழுச்சியும் கூட ஒரு மோனமான சோகத்தைக் குறிக்கும் அடையாளம் போல் தோன்றியது. நெஞ்சின் இரங்கலைத் தத்ரூபமாக எடுத்தியம்ப நெய்தற்பண்ணைவிட வேறு சிறந்த இசையில்லை. இப்போது இந்த வைகறையில் எங்கிருந்தோ தொலைதூரத்துக் கந்தர்வ உலகிலிருந்து வருவதைப் போன்று மெல்லிய ஒலியலைகளாக வரும் இந்தக் குரலோ - 'இது நெய்தற்பண்' - என்று கண்டுபிடிக்க முடிந்ததை விட 'நெய்தற்பண் இப்படித்தான் இருக்க வேண்டும்' - என்று வரையறுக்கும் அழகிய எல்லையாகவே கொள்ளத்தக்கதாயிருந்தது. அருங்காலையில் மங்கலான ஒளியில் கடலருகே புன்னைப் பூ மணக்கும் சூழலில் வந்த இசைக் குரலில் மனமுருகி நடந்து கொண்டிருந்த சாரகுமாரனுக்கு வேறு கடமைகளை நினைவூட்டலானான் முடிநாகன்.

"முரசமேடைக் கரந்து படையிலிருந்து செல்லும் இரகசிய வழிகள் எங்கெங்கே போய் முடிகின்றன என்று கண்டு பிடித்துவிட்டதற்காக மட்டுமே முதிய பாண்டியர் நம்மைப் பாராட்டிவிடமாட்டார். அரச குடும்பத்து மதிநுட்பம் சாதாரண ஒற்றர்களைப் போல் புறச் செய்திகளை அறிவதற்காக மட்டும் பயன்படக்கூடாது. 'தோற்றம் அதன் பின்னுள்ள கருத்து கருத்தின் பின் மறைந்திருப்பதாகத் தோன்றும் உட்கருத்து - இறுதியாக அவை பற்றிய நம் அநுமானங்கள் - எல்லாவற்றிற்கும் மேலாகத் தொகுத்துணரும் ஞானம்' - ஆகிய அனைத்தும் வேண்டுமென்று கூறியிருக்கிறார் பெரியவர். வெறும் தைரியத்தையும் ஆர்வத்தையும் கண்டு அவர் ஏமாறமாட்டார். ஆகவே இந்த முரசமேடைக்குக் கீழே உள்ள வழிகள் பற்றி இன்னும் அதிக நுணுக்கமான உண்மைகள் எவையேனும் நம் கவனத்திலிருந்தோ, சிந்தனையிலிருந்தோ தப்பியிருந்தால் அவற்றையும் கவனித்துச் சிந்திக்க வேண்டும் இளையபாண்டியரே!" என்று காதில் வந்து இழையும் நெஞ்தற்பண்ணை இரசிக்க முடியாமல் உடன் பேசிக் கொண்டே வந்த முடிநாகனின் பேச்சு சாரகுமாரனுக்கு வெறுப்பூட்டினாலும் கேட்டுத் தீர வேண்டியிருந்தது.

சிகண்டியாரின் இசைக்கலையின் மிக உயரிய நுணுக்கங்களையெல்லாம் கற்றறிந்தவனும், அந்தக் கலையை உயிரினும் மேலானதாக மதிப்பவனும் ஆகிய சாரகுமாரனோ நெய்தற் பண்ணை இதுவரை வேறெவரும் இத்தனை நெஞ்சுருகப் பாடிக் கேட்டதில்லை. நேரம் வேறு பொருத்தமாக அமைந்து விட்டது. அதனாலும் அந்த இசையின் மதிப்புப் பன்மடங்காகப் பெருகிவிட்டது. அருகில் நெருங்க நெருங்க அவனுடைய சந்தேகத்துக்குத் தெளிவு கிடைப்பதுபோல் அந்தக் குரல் அவளுடையது என்றே தெரிந்தது. இனிமையின் நீரொழுக்குப் போன்ற இடையறாத அந்தச் சொல் மதுரம் அவளுக்கே சொந்தமானதல்லவா? இடமும் பாணர்கள் தங்கியிருந்த புன்னைத் தோட்டத்திற்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியாயிருக்கவே அவன் தன் அநுமானத்தில் அதிக நம்பிக்கை கொள்ள வாய்ப்பிருந்தது. அப்போது குரலுக்குரியவளின் பொலிவு நிறைந்த முகமும் அவனுள் நினைவில் தோன்றியது. முகத்தின் அழகைக் குரலும், குரலின் அழகை முகமும் மிகுவிப்பனவாயிருந்தன.

"ஏதேது? இசை, நாடகம், போன்ற கலைகள் வெறும் விருப்பத்தைத்தான் பெருக்கும் என்று தங்கள் பாட்டனார் கூறியது பொய்யாயிராது போலிருக்கிறதே?" என்று குறும்புச் சிரிப்போடு மறுபடி முடிநாகன் குறுக்கிட்ட போது இளையபாண்டியனுக்குக் கோபமே வந்துவிட்டது. ஒரு கணம் ஒன்றும் மறுமொழி கூறாமல் மௌனமாக திரும்பி முடிநாகனை உறுத்துப் பார்த்தான் சாரகுமாரன். முடிநாகனின் பேச்சு அவ்வளவில் நின்று போயிற்று. அமைதியாக இளைய பாண்டியரைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. அவன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் - இசைக்குரல் மிக அருகே ஒலிப்பது போல் தோன்றவே தயங்கி நின்று அந்தப் புன்னைமரக் கூட்டத்தில் சுற்றும் முற்றும் கவனிக்கலானாளன் சாரகுமாரன்.

அங்கே சிறிது தொலைவில் ஒரு புன்னை மரத்தினடியில் வெண்பட்டு விரித்தாற் போன்ற மணற்பரப்பில் அந்தக் காட்சி தெரிந்தது. கண்ணுக்கினியாள் தான் மணற்பரப்பில் ஒசிந்தாற் போல அமர்ந்து வேறு யாரோ இரண்டு பெண்களுக்குப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தாள். அவள் பாடிக் கொண்டிருந்த இடத்திற்கருகே நீர் தேங்கியிருந்த சிறு பள்ளம் ஒன்றில் நெய்தல் பூக்கள் நிறையப் பூத்திருந்தன. அந்தப் பள்ளத்திற்கு அப்பால் பசுமைச் சுவரெடுத்தது போல் தாழை மரங்கள் புதராய் மண்டி வளர்ந்திருந்தன. மணற் பரப்பில் முத்துதிர்த்தாற் போலவும் தற்செயலாய் நேர்ந்த அவளுடைய அந்த இசையரங்கிற்கு ஓர் அலங்காரம் செய்தாற் போலவும் புன்னைப் பூக்கள் நிறைய உதிர்ந்திருந்தன.

தங்களுடைய திடும்பிரவேசத்தினால் அவள் தனது பாடலை நிறுத்திவிடக்கூடுமோ என்றஞ்சிய சாரகுமாரன் - நின்ற இடத்திலிருந்தே மறைந்து கேட்கலானான். தனிமையையும், தான் எக்காரணத்தைக் கொண்டும் தயங்கவோ தளரவோ, அவசியமில்லாதவர்களுக்கு முன் பாடுகிறோம் என்ற உணர்வையும் ஒரு விநாடி மாற்றிவிட்டால் கூட அந்தப் பெண்ணின் அழகும் மாறிவிடும். அது தெரிந்துதான் அவள் பாடி முடிகின்றவரை மறைந்து நின்று செவிமடுத்த பின்பு நேரில் எதிரே போய் நின்று பாராட்டலாமெனக் கருதியிருந்தான் இளையபாண்டியன். கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் நகரணி மங்கல நாளுக்காக வந்து பாணர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து தன் தோழிகளோடு சிறிது தொலைவு விலகி வந்து இருந்து பாடும் காரணத்தாலேயே அவள் தனிமையை நாடி வந்திருப்பதை உணர முடிந்தது.

பாடி முடிந்தபின் அவள் மணற்பரப்பில் உதிர்ந்திருந்த புன்னைப் பூக்களைத் தொகுக்கத் தொடங்கினாள். அவள் தோழிகளோ நீரில் இறங்கி நெய்தற் பூக்களைக் கொய்யத் தொடங்கினார்கள்.

குனிந்து புன்னைப் பூக்களைத் தொகுத்துப் பொறுக்கிக் கொண்டிருந்தவள் அருகே மணற் பரப்பில் இலேசாகத் தெரியத் தொடங்கியிருந்த நிழலைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்த போது சாரகுமாரன் எதிரே புன்னகை பூத்தபடி நின்றான். முதலில் அவளுக்குத் திகைப்பாயிருந்தது. அவனுடைய நகர் பரிசோதனைக் கோலத்தைப் பிரித்துக் கணித்துத் தனியாக அவனை மட்டும் அவள் உணர்ந்து கொள்ளச் சிறிது நேரம் ஆயிற்று.

"ஓ! கபாடபுரத்து முத்து வணிகர் அல்லவா நீங்கள்?" என்று அவள் வினாவிய குரலில் குறும்பு நிறைந்திருந்தது.

"இந்த அதிகாலையில் இப்படி நெஞ்சு நெகிழ நெய்தற் பண் பாடும்படி அத்தனை பேரிரக்கம் என்னவோ தெரியவில்லையே?" என்று சாரகுமாரனும் குறும்புடனேயே வினாவினான்.

"உணர வேண்டியவர்களுக்குக் கூடப் புரியாத இரக்கத்தினால் பயன் தான் என்ன?"

"புரியவில்லை என்று நீ எப்படி சொல்ல முடியும் பெண்ணே?"

"புரிந்திருந்தால் வினாவியிருக்கக் கூடாது."

"வினவினால் சம்பந்தப்பட்டவர்கள் வாய்மொழியாலேயே மெய்யைத் தெரிந்து கொள்ளலாம் என்று நோக்கமாயிருக்கலாம்..."

"யார் கண்டார்கள்? கூசாமல் பொய் சொல்லுகிறவர்களுக்கும் கல்நெஞ்சுக்காரர்களுக்கும் எந்த நோக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்!"

"கல்நெஞ்சாயிருந்தால் உன்னுடைய நெய்தற் பண்ணும் உருக்க முடியாமல் அல்லவா போயிருக்கும்?"

"உருக்கியிருக்கிறது என்பதுதான் என்ன நிச்சயம்?" என்று கேட்டுவிட்டு ஆவலோடு அவன் முகத்தை ஏறிட்டு நோக்கினாள் கண்ணுக்கினியாள்.

அவள் தோழிகள் இன்னும் நெய்தற்பூப் பறிப்பதிலிருந்து மீளவில்லை. முடிநாகனும் முன்பு இருவரும் நின்ற இடத்திலேயே பின் தங்கிவிட்டான்.

"உன்னுடைய இசை ஏழுலகையும் வெற்றி கொள்கிற போது நான் எம்மாத்திரம்?" என்று அவளருகே நெருங்கி நாத்தழுதழுக்கக் கூறினான் சாரகுமாரன். அவள் முகத்தில் நாணமும் புன்னகையும் கலந்ததிலே பெருமிதம் இடம் தெரியாது கரைந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
14. எளிமையும் அருமையும்


அந்த வைகறை வேளையில் புன்னைத் தோட்டத்தின் குளிர்ந்த சூழ்நிலையில் கண்ணுக்கினியாள் ஓர் அழகிய தேவதைபோற் காட்சியளித்தாள். அவளுக்கு இயற்கையாகவே நிரம்பியிருந்த பேரழகு போதாதென்றோ என்னவோ அவனைக் கண்டு நாணிய நாணம் அவள் அழகை இன்னும் சிறிது அலங்காரம் செய்தது. பெண்ணுக்கு அவள் தேடி எடுத்து அணியாமல் தானாகவே அவள் மேல் படர்ந்து அலங்கரிக்கும் அழகு ஒன்று பருவகாலத்தில் வருவதுண்டு. அதுதான் நாணம். அதுதான் பிறக்கும்போது அவளால் தனக்குத்தானே சூட்டப்பட்டுக் கொண்டு வரப்படுகிற பிறவி அணிகலன். பிறந்த பிறகு கற்பிக்கப்படாமல் உயிரோடு ஒட்டிக் கொண்டு வரும் உணர்வுகள் எல்லாவற்றிலுமே அழகு உண்டுதான். அந்த அழகையும் - அவளையும் தொடர்புபடுத்தி அப்போது சிந்தித்தான் சாரகுமாரன். அவனுடைய சிந்தனை அவளை வியக்கும் சொற்களாக வெளிப்பட்டது.

"எல்லா நாட்களும் பொழுது புலர்ந்தாலும் மிகச் சில நாட்கள் யாரோ மிகச் சிலருக்குப் பாக்கியத்தோடு பொழுதுகள் புலர்கின்றன. என்னுடைய நாள் இன்று பாக்கியத்தோடு விடிந்திருப்பதாக நான் நினைக்கிறேன் பெண்ணே! நான் இப்போது சற்றுமுன் கேட்டதும் அழகு. இதோ என் முன் காண்பதும் அழகு."

இப்படி அவன் கூறிக்கொண்டே வந்தபோது கடற்புரத்திலிருந்து பலமாக வீசிய காற்றினால் மேலே இருந்த புன்னை மரக்கிளைகள் ஆடி அசைந்ததன் காரணமாகக் கொட்டினாற் போல ஒரு கொத்துப் பூக்கள் கண்ணுக்கினியாள் மேல் உதிர்ந்தன. பூக்கள் வேகமாக உதிர்ந்ததற்கே வருந்தினாற்போல் காற்றைக் கடிந்து கூறியவாறே விலகினாள் அவள்.

"ஏன் விலகுகிறாய்? மலரை நோக்கி மலர்கள் உதிர்வதுதானே இயல்பு?"

"ஆகா! கேட்பானேன்? கபாடபுரத்து முத்து வணிகர்களுக்கு எது வருகிறதோ, வரவில்லையோ, நன்றாகப் புகழ வருகிறது. இனிமேல் உங்களை முத்து வணிகரென்று சொல்வது கூடத் தவறு. அன்று முத்து வணிகரென்று சொல்லிக் கொண்டீர்கள். அதற்குப்பின் ஒருநாள் அரண்மனைக் கொலுமண்டபத்தில் பார்த்தேன். பின்னொரு சமயம் தேர்க்கோட்டத்துக் கூட்டத்தில் உலாவில் பெரிய பாண்டியருடைய தேருக்கு அடுத்த அலங்காரத் தேரிலிருந்து இறங்கி வந்தீர்கள். இன்று காலையிலோ - அவையெல்லாம் பொய்யாக இப்போது இப்படிப் பழந்தீவுக் கொலை மறவர்களான அவுணர்களைப் போல் கோலத்தில் வந்து நிற்கிறீர்கள்... நீங்கள் யாரோ ஒரு மாயா விநோத மனிதராயிருக்க வேண்டும்... நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்பவை பொய்கள். அந்தப் பொய்கள் உங்களைப் பற்றிய உண்மையைத் தெரிவித்துவிடும் அளவுக்குப் பலவீனமான பொய்களாயிருக்கின்றன."

"நீ குற்றம் சுமத்துவது போல் பொய்கள் எவற்றையும் நான் கூறவில்லை என்பதை மறுபடியும் வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன் பெண்ணே..."

"அப்படியானால் பொய்க்கும், மெய்க்கும், இலக்கணமோ வேறுபாடோ தாங்கள் தான் இனிமேல் எனக்குச் சொல்ல வேண்டும். உண்மை அல்லாதது பொய்யென்றும் பொய் அல்லாதது உண்மை என்றும்தான் உலகியல் ரீதியாக என் பெற்றோர்களிடமிருந்து நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்."

"நீ தெரிந்து கொண்டிருப்பது வாதத்திற்குப் பொருந்தலாம்; ஆனால் நியாயத்திற்குப் பொருந்தாது. உண்மையைப் போல் தோன்றும் பொய்களும் உண்டு. பொய்யைப் போல் தோன்றிவிடுகிற உண்மைகளும் உண்டு."

"இதில் நீங்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் போலிருக்கிறது."

"நீ எப்படி வைத்துக் கொண்டாலும் அதை நான் மறுக்கத் துணியவில்லை. நான் கூறியதில்தான் என்ன தவறு? இந்தக் கபாடத்தின் விலையுயர்ந்த முத்துக்களை எல்லாம் உலகத்துக்கு அளிப்பவர்கள் நாங்களே அல்லவா?"

"வணிகரைப் போல் சாதுரியமாகப் பேசுகிறீர்கள். கலைஞரைப் போல் இசையை அதன் நுணுக்கமறிந்து புகழ்கிறீர்கள். அரசரைப் போல் முகக்குறியுடன் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறீர்கள். புலவரைப் போல் சொற்போருக்கு வருகிறீர்கள்...! இதில் எது உண்மையென்றுதான் விளங்கவில்லை?"

"ஏன்? எல்லாவற்றிலுமே சிறிது சிறிது உண்மையிருக்கலாம்! ஒன்று மட்டும்தான் உண்மையாயிருக்க வேண்டுமென்பது என்ன அவசியம்?"

"அந்தக் கற்பனைகள் எல்லாம் இனிமேல் என்னிடம் பலிக்காது ஐயா! நீங்கள் யாரென்ற உண்மையை நான் எப்போதோ தெரிந்து கொண்டாகிவிட்டது. என்னென்ன தன்மைகள் பொருந்தியவர் என்ற உண்மைதான் இன்னும் எனக்குத் தெரியவில்லை என்று இப்போது கூறினேன்."

"தன்மைகளை உணர முயலவேண்டும். ஆராய்வதற்கு ஆசைப்படக்கூடாது..."

"உணர்வது வேறு; ஆராய்வது வேறு என்றா நினைக்கிறீர்கள்?"

"சந்தேகமென்ன? உணர்ச்சிக்கு முடிவில்லை. ஆராய்ச்சிக்கு முடிவுண்டு! நீ என்னை உணர வேண்டுமென்றுதான் நான் ஆசைப்படுவேனே ஒழிய ஆராய வேண்டுமென்று நான் ஒரு போதும் ஆசைப்படமாட்டேன்."

"அப்படியல்ல! மனிதர்களை ஆராய்ந்து உணர வேண்டுமென்பார் என் தந்தை..."

"உணர்ந்தவர்களையே ஆராயவேண்டுமென்று சொல்லவில்லையே அவர்? உணராதவர்களைத்தானே ஆராய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்? தெரிந்த பின்பு தெளியலாம். தெளிந்த பின்பும் தெரிய முயல்வது குறும்பு, அல்லது அநீதி..."

"நீதி எது அநீதி எது என்பதை உங்களைப் போல் அரச குடும்பத்தார் அறிந்திருப்பது நியாயமே! இப்படித் தர்க்கம் செய்பவர்கள் எப்போதும் அறிவுக்கு மதிப்பளிக்கிற அளவு உணர்ச்சிக்கு மதிப்பளிப்பதில்லை..."

"அறிவும் உணர்வும் வேறுவேறென்று நினைப்பதால் தான் உனக்கு இப்படிப் பேசத் தோன்றுகிறது. அறிவும், உணர்வும் உள்ளங்கையும் புறங்கையும் போன்றவை! கலைஞனிலிருந்து அரசன் வரை இதில் மாறுதல் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை."

"அப்படியே இருக்கட்டும்! தயைசெய்து என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள். நான் சொற்களால் ஏழை; என்னிடமிருப்பவை ஆடம்பரமில்லாத எளிய சொற்கள். அவை தருக்க ஞானத்தாலோ, விவகார ஞானத்தாலோ கூராக்கப்படாதவை..."

"போதும்! அதோ பூக்கொய்யச் சென்ற என் தோழிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதோ உங்கள் பின்புறம் மரத்திற்கு அப்பால் பதுங்கி நிற்கிற உங்கள் நண்பரும் அதிசயத்தைப் பார்ப்பதுபோல் எட்டி எட்டிப் பார்க்கிறார். முடியுமானால் அருகிலிருக்கும் எங்கள் கூடாரத்திற்கு வரவேண்டுகிறேன். என் பெற்றோர் வழிப்பயணத்தில் என்னைக் காப்பாற்றிக் கபாடபுரம்வரை தேரில் கொண்டு வந்து சேர்த்ததற்காக உங்களுக்கு நன்றி கூற ஆர்வத்தோடிருக்கிறார்கள். அரண்மனைக்குத் தேடிவந்து அவர்கள் அதைக் கூற இயலாது. நாங்கள் ஏழைகள், அரண்மனைக்கு வருகிற தகுதியோ, பெருமிதமோ இல்லாதவர்கள். தயை செய்து எங்கள் குடிசையில் உங்கள் பொன்னடிகள் ஒருமுறை நடக்கும்படி செய்தால் பாக்கியமுள்ளவர்களாவோம்..."

"எளிமையில்தான் அருமை இருக்கிறது. அந்த அருமையை விட வேறு பெருமிதம் எளிமைக்கு எதற்கு? நீங்கள் இன்னும் சிறிது காலம் கபாடபுரத்தில் தங்கியிருப்பீர்கள் அல்லவா? இன்னொருநாள் நானே உங்கள் கூடாரத்திற்கு வருகிறேன் பெண்ணே! இன்று எனக்கு விடைகொடு! என்னால் இயலுமானால் உன்னுடைய குரலுக்காகவே தனியாய்ப் புதிதாய் ஒரு பெரிய இசையிலக்கணமே படைக்கும்படி செய்வேன். அப்படி ஒரு காலம் வந்தாலும் வரலாம்."

"ஏதோ நாங்கள் எங்களுடைய எளிய கலையைப் பெரிய பற்றுடன் ஆண்டு வருகிறோம். உங்களுடைய ஓயாப் புகழ்ச்சியைக் கேட்டால் எனக்குப் பயமாயிருக்கிறது. கலைஞர்களுக்குப் போதாத காலம் சில வேளைகளில் அவர்களை வந்தடைகிற புகழோடு சேர்ந்து வருமென்பார் எங்கள் தந்தை."

"நீ கூறுவதை எல்லாம் கேட்டால் உங்கள் தந்தையை உடனே பார்க்கவும் பேசவும் வேண்டும்போல் ஆசையாயிருக்கிறது எனக்கு. ஆனால் அதுவும் இப்போது இயலாமலிருக்கிறது. அரசியல் கடமையாக வந்தவனுக்கு வேண்டிய போது நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்கிறது? உயர்ந்த இசையைக் கேட்க நேரும்போதெல்லாம் பொற்பூவும், பொன்னாரமும் அளிப்பது எங்கள் குடிவழக்கம். ஆனால் இப்போது இந்த விநாடியில் இந்த இடத்தில் என்னிடம் பொற் பூ இல்லாத காரணத்தால் உன்னைப் போலவே நானும் ஏழைதான். மறுக்காமல் இதைப் பொற் பூக்களாக ஏற்றுக் கொள் பெண்ணே..." என்று உணர்வு பொங்கக் கூறியபடியே கிளையை வளைத்து இரண்டு பெரிய புன்னைப் பூக்களைக் கொய்து அவளிடம் நீட்டினான் சாரகுமாரன்.

அவள் நாணத்தோடு அவற்றை வாங்கிக் கொண்டு வணங்கினாள். அவன் முடிநாகனை நோக்கி விரைந்தான். அவள் தோழிகளும் அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தனர். அந்தப் பூக்களை நுகர்ந்தபோது அவை மட்டும் தனியே நிறைய மணப்பது போல உணர்ந்தாள் கண்ணுக்கினியாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
15. பழந்தீவுப் பயணம்



இளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குத் திரும்பிய போது நன்றாக விடிந்து வெயிலேறியிருந்தது. நீராடிக் காலைக் கடன்களை முடித்த பின்னர் இருவரும் பெரிய பாண்டியரைச் சந்திக்கச் சென்றார்கள். முடிநாகன் மட்டும் உற்சாகமின்றி இருந்தான்.

"பெரிய பாண்டியரிடம் நமது சாதனைகளாகவோ, வெற்றிகளாகவோ, கூறுவதற்கு ஒன்றுமில்லாமல் போகிறோம் சாரகுமாரரே! 'சுரங்கப் பாதைகள் தொடங்குமிடத்தையும், முடியுமிடத்தையும் கண்டுபிடித்து அறிந்து கொண்டோம்' என்று நான் கூறுவதை அவர் பொருட்படுத்தி மதிக்கவே மாட்டார். ஏற்கனவே உங்கள் மேல் அவருக்கு ஒரு குறை இருக்கிறது. அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கலை ஆர்வமோ, முனைப்போ அளவுக்கதிகமாக இருப்பதை - மறுக்கிற மனம் அவருடையது. கலைகளில் ஆர்வம் காண்கிறவன் விருப்பு வெறுப்புக்களில் அழுந்தி நிற்கிற மெல்லிய மனப்பான்மையை அடைந்து விடுகிறான். இந்த மெல்லிய மனப்பான்மை அரச தந்திரத்துக்கு இடையூறானது. பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியாத சூழ்ச்சித் திறனும், நுணுக்கமும் உள்ள வலிய மனமே அரசனுக்கு வேண்டுமென்பவர் அவர். எனவே, அவரால் நம்முடைய அனுபவங்களை வெற்றிகளாக ஒப்புக் கொள்ள முடியாது என்று அஞ்சித் தயங்கியபடியே அவருக்கு முன் போக வேண்டியவர்களாயிருக்கிறோம் நாம்" என்றான் அவன்.

முடிநாகன் கூறியபடியேதான் ஆயிற்று. அவர்கள் கூறியவற்றை எல்லாம் மிக அலட்சியமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு முடிவில் அந்த அலட்சியத்திற்கு ஒரு முத்திரை வைப்பது போல் புன்முறுவல் பூத்தார் வெண்தேர்ச்செழிய மாமன்னர்.

"இப்படிச் சுரங்கங்களும், சூழ்ச்சிகளும் செய்து கொண்டு வாழ்கிற அவுணர்களை நம்பித் தேர்க்கோட்டத்தை ஒப்படைத்திருக்கிறீர்களே; அது என்ன நம்பிக்கையோ?" என்று சிறிது துணிவுடனேயே அவரிடம் நேருக்கு நேர் வினாவினான் இளையபாண்டியன்.

அவனுக்கு உடன் மறுமொழி கூறாமல் - அவன் முகத்தையே சிறிது நேரம் கூர்ந்து நோக்கினார் பெரிய பாண்டியர். பின்பு நிதானமாகவும் சுருக்கமாகவும் அவனை நோக்கிச் சில வார்த்தைகளைக் கூறலானார்.

"உன்னுடைய கேள்விக்கு விடை இங்கே இல்லை. இந்தப் புதிய கோ நகரத்தின் தென்பகுதிக் கடலுக்குள் அங்கங்கே காடுகளாகவும், மலைகளாகவும், சிதறிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான பழந்தீவுகளில் இருக்கிறது அந்த விடை."

"இருக்கட்டும்! அந்தப் பழந்தீவுகள் எல்லாம் கபாடபுரக் கோ நகரத்தின் ஆணைகளுக்கு உட்பட்ட சிற்றரசுகளல்லவா? அவைகளை நம் பகைகளாகக் கருத நேர்வது எப்படி?" என்று மேலும் விடாமல் வினாவினான் சாரகுமாரன்.

"நீதி, அநீதிகளும், நியாய அநியாயங்களும் தெரியாத அந்தக் காட்டு மனிதர்களிடம் நட்பு இருப்பது போல் பாவனை செய்து நமது அரச தந்திரத்தால் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறோமே ஒழிய வேறு பொருள் அந்த உறவுக்கு இல்லை."

"அது உறவா, பகையா, என்பதே இன்னும் விளக்கப்படவில்லையே?"

"விளக்கப்படாமலிருக்கிறவரை தான் சில நிலைமைகளுக்குப் பாதுகாப்பு அதிகம். சில வேளைகளில் அவசரப்பட்டு அவற்றை விளக்கி முடிவு கண்டுவிடுவது கூடச் சிறுபிள்ளைத் தனமாக முடிந்து விடும்! பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் நமது தேர்க்கோட்டத்தில் அடிமைகளைப் போல் பணிபுரிகிறார்கள். தென்பழந்தீவுகளிலுள்ள வானளாவிய மரங்களிலிருந்து வைரம் பாய்ந்த அடிமரப் பகுதிகளும், பிற சட்டங்களும், நமது தேர்க் கோட்டத்திற்காகக் கிடைக்கின்றன. கபாடபுரத்திற்கும், அந்நிய தேசங்களுக்கும் இடையே இராஜபாட்டையைப் போல பயன்படும் கடல்வழிகள் எல்லாம் இந்தத் தென்பழந்தீவுகளை ஊடறுத்துக் கொண்டே செல்கின்றன. அப்படி இருக்கும்போது இந்தப் பழந்தீவுகளின் அவுணர்களோடு நாம் கொண்டிருப்பது பகையா, உறவா என்பதை அழுத்தி உறைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ள முயல்வதுகூட அவசியம்தானா என்பதையும் அதன் பலாபலன்களையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்."

"இப்படியே தொடரவிடுவதிலுள்ள பயன் என்னவாக இருக்குமென்று புரியவில்லை."

"பெரிய நன்மைகள் இல்லாவிட்டாலும், தீமைகள் எவையும் இல்லை. நமக்கு வேண்டிய மரங்களும், காய், கனி, கிழங்குகள், அபூர்வ மூலிகைகள் முதலியனவுமெல்லாம் இந்தப் பழந்தீவுகளிலிருந்து கிடைத்துவிடுகின்றன. அவர்களும் எப்போதாவது கபாடத்திலிருந்து முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு போகிறார்கள். கடல் கோளுக்குப் பின் இந்தப் புதிய கோ நகரத்தையும் தேர்க்கோட்டத்தையும், நான் சமைக்க முயன்றபோது பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் உதவியாக இருந்தார்கள். அவர்களோ, அவர்களுடைய வழிமுறையினரோ தான் இப்போது இங்கு நம்மைச் சுற்றி இருக்கும் அவுணர்களாவர்."

"காரணம் கருதியே அவர்களை நான் பொதுவாக விட்டு வைத்திருக்கிறேன். விரோதிகளாக ஏற்றுக்கொண்டு அழிக்க முயலவுமில்லை. நண்பர்களாக ஏற்றுக்கொண்டு கொண்டாடவுமில்லை. மனம் இடைவிடாமல் நினைப்பதற்கும், பாவிப்பதற்கும் விளைவுகள் கூட நாளடைவில் ஏற்பட்டுவிடுமென்ற நம்பிக்கை எனக்கு உண்டு. சிலரைக் காரணமின்றி பகைவர்களாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டோமென்றால் நாளடைவில் நாம் அவர்களிடமிருந்து பகைத்தன்மைக்குரிய தீவிர விளைவுகளையே எதிர்பார்க்கலாம். அவுணர்களை நான் அப்படிக் கருதாததற்கு இதுதான் காரணம். வெறும் சுரங்கங்களால் என்ன செய்து விட முடியும்? எங்காவது உயர்ந்த இடங்களில் கொள்ளையடிக்கிற முத்துக்களையும், இரத்தினங்களையும் தங்கள் தீவுகளுக்குக் கடத்திக் கொண்டு போக முடியும். தேர்களை - ஓர் அணுவளவு கூட அசைக்க முடியாது. கடல் நீரில் தேர்களை ஓட்டிக் கொண்டு போய் அவர்களுடைய தீவுகளில் நிறுத்திவிட முடியாது. ஆகவே தான் இவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்தி நான் கவலைப்படவில்லை."

"ஆனால் என்னுடைய கவனம் ஒரு பகுதியில் மட்டும் கூர்மையாக இருக்கிறது. இந்த அவுணர்களில் சிலர் நமது கோ நகரத்தின் தெய்வீகக் கபாடங்களிலுள்ள இரத்தினங்களைப் பெயர்த்துக் கொண்டு போய்விடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகக் கேள்விப்படுவதை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் இங்கு குளித்தெடுக்கப்படும் முத்துக்களையும், நமது மகேந்திரமலை இரத்தினாகரங்களில் விளையும் இரத்தினங்களையும் வாரிக் கொண்டு போனால் கூட ஓரளவு அவற்றைப் பொறுத்துக் கொள்ளலாம். கபாடங்களை நெருங்கினால் அவர்கள் தங்களுக்கே அழிவு தேடிக் கொள்கிறார்கள் என்றாகிறது... நீ ஒரு காரியம் செய்ய வேண்டும் சாரகுமாரா! உன்னுடன் நகரணி மங்கலத்துக்காக இங்கு நம் கோ நகரத்துக்கு வந்திருக்கும் அவிநயனாரும், சிகண்டியாசிரியரும் ஏனைய சங்கப் புலவர்களும் சிறிது காலம் இங்கேதான் தங்கியிருப்பார்கள். அவர்களைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம்."

"முடிநாகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு பழந்தீவுகளில் பயணம் செய்து திரும்பி வரவேண்டும் நீ. அப்படிப் பயணம் புறப்படும்போது உனக்கு நினைவிருக்க வேண்டியதெல்லாம் இது ஓர் இராஜதந்திரச் சுற்றுப் பயணம் என்பதுதான். ஒவ்வொரு விநாடியும் இது உனக்கு நினைவிருக்க வேண்டும். இதற்குப் பழுது உண்டாக்கும் முறையில் முடிநாகனோ, நீயோ, உங்களை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது. பல ஆண்டுகளுக்கு முன் நான் கண்ட அதே நிலைகள் தான் இன்றும் தென்பழந்தீவுகளில் இருக்கின்றனவா அல்லது மாறுதல் ஏதேனும் உண்டா - என்பது எனக்குத் தெரிய வேண்டும். நானே நேரில் போய்ச் சுற்றியறிந்து வருவதற்கு என் முதுமை இடங்கொடாது. உன் தந்தையைப் போகச் சொல்லலாம் என்பதற்கும் வழியில்லை. கோ நகரத்து அரசியற் கடமைகளை அவன் கவனிக்க வேண்டும். ஆகவே தவிர்க்க முடியாத காரணத்தால் உன்னையும் முடிநாகனையும் பழந்தீவுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன் குழந்தாய்!"

"நான் கூறுகின்றவைகளைக் கவனமாகக் கேட்டுக் கொள். கொற்கையிலும், மணலூரிலும் தங்கி இலக்கண இலக்கியங்களைக் கற்று அறிவது போல் இது அவ்வளவு சுலபமான காரியமில்லை. நீயோ அரசியலின் பாலபாடத்தைக் கூட இன்னும் கற்கவில்லை. அரசியல் ஞானமும், சூழ்ச்சித் திறன்களும், படிப்படியாய் அனுபவங்களின் மூலமே கிடைக்க வேண்டும். சில அனுபவங்கள் நமக்குப் பாதகமாய் முடியலாம். அவற்றாலும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளலாம். இன்னும் சில அனுபவங்கள் நமக்குச் சாதகமாய் முடியும். அவற்றாலும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளலாம். வேறு சில அனுபவங்களோ சாதகமாக முடியுமா, பாதகமாக முடியுமா என்பதை இனங்காண முடியாமல் அரைகுறையாக நிற்கும். அவற்றிலிருந்து படிப்பினைகளைத் தேடும் வேளைகளில் மட்டும் அவசரப்பட்டுவிடக் கூடாது. பழந்தீவுகளில் பயணம் செய்யும் போது தேசாந்திரிகளைப் போல் சுற்றித்திரிய வேண்டுமே ஒழியக் கபாடபுரத்து அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் அவர்கள் சந்தேகப்படும்படி நடந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு சந்தேகப்பட இடங்கொடுத்து விட்டீர்களானால் நீங்கள் அவர்களைச் சுற்றிப் பார்த்து அறிந்து கொள்ள முடியாமல் அவர்கள் உங்களைச் சுற்றிப் பின்தொடர ஆரம்பித்து விடுவார்கள். இதில் பலவற்றை முடிநாகன் நன்றாக அறிந்திருப்பதால்தான் அவனை உன்னோடு துணைக்கு அனுப்புகிறேன்" என்றார் பெரியபாண்டியர்.

பழந்தீவுப் பயணத்துக்கு முழுமனத்தோடு இணங்கினான் சாரகுமாரன். பெற்றோர்களிடம் விடைபெற்று வருமாறு அவனை அனுப்பினார் பெரியபாண்டியர். தந்தை அநாகுல பாண்டியர், "போய் வரவேண்டியது அவசியம் தான். போய்வா! ஆனால் உன்னோடு பரிசாகக் கொடுப்பதற்கேற்ற முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு செல். பல வேளைகளில் அது உன்னைக் காப்பாற்றும்படி நேரிடலாம்" என்று குறிப்பாக ஒன்றைக் கூறினார். தாய் திலோத்தமையோ அவனுடைய அந்தப் பயணத்தையே மறுத்தாள். அவளுக்குச் சீற்றமே வந்துவிட்டது. "உன் பாட்டனாருக்கு ஏன் தான் இப்படிக் கொடுமையான எண்ணம் வந்ததோ, தெரியவில்லையே? பழந்தீவுகளுக்கு அனுப்புவதற்கு நீதானா அகப்பட வேண்டும். முடியாதென்று மறுத்துவிடு குழந்தாய்" - என்று சீறினாள் அவள்.

"மறுப்பதற்கில்லை அம்மா! நான் பெரியவருக்கு வாக்குக் கொடுத்து ஒப்புக் கொண்டுவிட்டேன். பெரியபாண்டியருடைய கட்டளையை மறுக்கவேண்டுமென்று என்னால் நினைக்கவும்கூட முடியாது. எனக்கு அரசதந்திர நெறிகளையும் சூழ்ச்சித் திறனையும் கற்பிப்பதற்காக அவர் செய்யும் ஏற்பாட்டை நான் எப்படி மறுக்க முடியும்? தவறாமல் நானும் முடிநாகனும் பழந்தீவுகளுக்குப் போயே ஆகவேண்டும். அதனால் எனக்கும் சில அரசதந்திரப் பயன்கள் உண்டு" என்று புன்சிரிப்போடு அன்னைக்கு மறுமொழி கூறினான் அவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
16. எயினர் நாடு



தன் தாய் திலோத்தமையாருக்குச் சாரகுமாரன் நிறைய ஆறுதல் கூற வேண்டியிருந்தது. எவ்வளவு ஆறுதல் கூறியும் பழந்தீவுகளில் அவன் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்பதை மகனிடம் கவலையோடும், பாசத்தோடும் வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவள். அறிவுக்கும் அன்புக்குமிடையே இளையபாண்டியனின் உள்ளம் சில நாழிகை நேரம் ஊசலாடியது. பாசம் என்னும் மெல்லிய உணர்வும், அறிவு என்னும் தீவிரமான கடமையும் போராடின. தான் ஆறுதல் கூறியது போதாதென்று முடிநாகனைக் கொண்டும் தாய்க்கு ஆறுதல் கூறச் செய்தான் இளையபாண்டியன்.

"இளையபாண்டியருக்குத் துணையாக அடியேனும் உடன் செல்லுவதால் கோப்பெருந்தேவி - இவ்வளவு மிகையாகக் கவலைப்பட வேண்டியதில்லை. பொதுவாக அரசகுமாரர்கள் பட்டத்துக்கு வருமுன் தன் நாட்டிற்கு நான்கு புறத்துமுள்ள கடல் எல்லை, நிலவெல்லைகளிலுள்ள பகுதிகளை அரசதந்திர முறையில் சுற்றிப் பார்க்க வேண்டிய அவசியம் உண்டு என்பதனாலேயே பெரியபாண்டியர் இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பட்டத்திற்கு வந்தபின் இத்தகைய சுற்றுப் பயணங்களைச் செய்ய முடியாது போகும். செய்ய முடிந்தாலும் அது தன்னிச்சையானதாகவும், சுதந்திரமானதாகவும் இராது. இவற்றையெல்லாம் புரிந்து கொண்டால் கோப்பெருந்தேவி இளையபாண்டியருக்கு முழு மனத்துடன் விடை கொடுக்க முடியும்" என்று முடிநாகன் எடுத்துக் கூறியபோதும் கூடக் கோப்பெருந்தேவி அரைகுறை மனநிலையில் தான் இருந்தாள். அவளுடைய மனநிலையை மகன் சாரகுமாரன் மூலமாகக் கேள்விப்பட்டு அநாகுலபாண்டியன் வந்து கடுமையாக எடுத்துக் கூறியபின்பே அவள் இணங்கினாள்.

"மகனிடம் உனக்குப் பாசமும், அன்பும், இருக்க வேண்டியதுதான். ஆனால் அதற்காக கடமையை மறந்துவிடலாகாது. அரச குடும்பத்துப் பிள்ளையைச் செல்லமாக வளர்க்க நினைப்பதை விட அதிகமாக ஒரு தாய் அவனுக்கும், அவன் பிறந்த நாட்டிற்கும் வேறெந்தக் கெடுதலையும் செய்துவிட முடியாது என்பதை நினைவு வைத்துக் கொள். நீ இன்று உன் மகன் மேல் மட்டும் பாசம் காண்பிக்கிறாய்! அந்த மகனோ நாளை இந்த நாட்டின் உயிர்க்குலத்தின்மேல் எல்லாம் பாசம் காண்பித்து ஆள வேண்டியவன். நாளைப் பரந்த பாசத்தைக் காண்பிக்க வேண்டியவர்களை இன்று நாம் குறுகிய பாசத்தால் வளர்ப்பது கூடத் தவறு."

"குறுகிய பாசத்தால் பேணப்பட்டுச் செல்வப் பிள்ளைகளாகவும், சவலைப் பிள்ளைகளாகவும் வளர்க்கப் படுகிறவர்கள் நாளை பரந்த அன்பையும், பாசத்தையும், செலுத்த முடியாதவர்களாகிவிடுவார்கள். இளைய பாண்டியனைப் பழந்தீவுகளுக்கு அனுப்புவதற்கு நீ இணங்கவில்லை என்பது தெரிந்தால் பெரியபாண்டியரே உன்னிடம் பேசவருவார். அவர் எதிரே வந்து நின்றால் உனக்குக் கைகால் பதறும். பேசுவதற்குச் சொற்கள் வராமற் போய்விடும்" என்று அநாகுலபாண்டியன் இவ்வளவெல்லாம் எடுத்துக் கூறிய பின்பே திலோத்தமை இதற்கு இணங்கினாள். பெரியபாண்டியர் தன் எதிரில் வந்துநின்று கடுமையான சொற்களில் திடமாக விவாதிப்பார் என்பதைக் கேள்விப்பட்டதும் அந்நிலை வரை போகவிடுவதில் பயனில்லை என்று தோன்றியது அவளுக்கு.

"நான் பெண்! இதற்கு மேல் அரசியல் காரணங்களின் விளைவுகளை மறுக்கச் சக்தியில்லாதவள். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்" என்று சோகம் இடறும் இனிய குரலில் கணவனுக்குப் பதிலிறுத்தாள் திலோத்தமை. இளையபாண்டியனும், முடிநாகனும் பழந்தீவுகளுக்குப் பயணம் செய்வது உறுதியாயிற்று. சிகண்டியார், அவிநயனார் ஆகிய ஆசிரியர்களிடம் கூறி விடைபெறுவதற்காக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குப் பேரப்பிள்ளையாண்டானாகிய சாரகுமாரனை அழைத்துக் கொண்டு போனார் பாட்டனார் வெண்தேர்ச் செழியர்.

"புலவர் பெருமக்களே! இலக்கண இலக்கியங்களையும் இசைக்கலையையும் நீங்கள் கற்பித்து விட்டீர்கள்! பரம்பரை பரம்பரையாக வரவேண்டிய அரசதந்திர முறைகளை இவனுக்குக் கற்பிப்பதற்காக நான் சில காரியங்களைச் செய்யப் போகிறேன். இந்த மாபெரும் பாண்டியர் மரபில் அரச குடும்பத்துச் சூழ்ச்சித்திறன் குறைவாகவும், ஒரு கலைஞனைப் போன்ற மென்மையும், இங்கிதமும், அதிகமாகவும் கொண்டு பிறந்திருப்பவன் இவன் தான். ஆகவே இவனைப்பற்றி மட்டும் நான் சற்றே அதிகமாகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது. உங்களுடைய நூல்கள் கற்றுத்தரமுடியாத பல கடுமையான அனுபவ பாடங்களைக் கற்றுத்தர நான் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. இதை நீங்கள் எந்த விதத்திலும் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டீர்களென்று எனக்குத் தெரியும். ஆயினும் முறை கருதியும், நாகரிகம் நோக்கியும் உங்களிடம் விடைபெற இவனை அழைத்து வந்தேன்" என்று அவர்களிடம் பேச்சைத் தொடங்கினார் வெண்தேர்ச் செழிய மாமன்னர்.

"நமக்கெல்லாம் நிகழ்காலத்தைப் பற்றிய கவலைகள் என்றால் பெரியபாண்டியருக்கு எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள்தான்..." என்று சிகண்டியாரிடம் சிரித்துக் கொண்டே விளையாட்டாகக் கூறினார் அவிநயனார்.

பெரியவர் விடவில்லை. "ஆம்! ஆம்! எனக்கு எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய கவலைதான். நிகழ்காலத்தைப் பற்றி நான் நினைத்துத் தயங்கிக் கொண்டிருக்கும்போதே அது கரைந்து போய்விடுகிறது. இறந்தகாலத்தைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயனில்லை. நிச்சயமாக எனக்கு முன் நான் நினைக்கவும் திட்டமிடவும் முடிந்த காலமாக எதிரே மீதமிருப்பது எதிர்காலம் ஒன்றுதான். ஆகவே அதைப் பற்றி மட்டும் நான் நிறையக் கவலைப்படுவது நியாயம்தானே அவிநயனாரே?" என்று அவிநயனாரை மடக்கினார். இதற்கு மறுமொழி ஒன்றும் கூறாமல் பெரியபாண்டியரை நோக்கிப் புன்முறுவல் பூத்தார் அவிநயனார். பெரியவர்களும் மூத்தவர்களும் பேசிக் கொண்டிருக்கும் அந்தப் பேச்சில் இடையே தான் குறுக்கிடுவது கூடாது என்று கருதியது போல் அடக்கமாகவும் விநயமாகவும் ஒதுங்கி நின்றான் சாரகுமாரன்.

"பழந்தீவுகளுக்குப் பயணம் செல்லுமுன் இளையபாண்டியனை அரச கம்பீர மரியாதைகளுடன் இந்தக் கபாடபுரத்தின் பிரதான வீதிகளில் நகருலா வரச் செய்ய வேண்டுமென்பது என் ஆசை. வசந்தகாலத்தின் செழிப்பான மலரைப் போல் இளமை அரும்பி நிற்கும் நம் சாரகுமாரனைக் கோ நகரில் யாவரும் காண ஆவலாயிருப்பார்கள் அல்லவா?" என்று ஒரு விநோதமான ஆசையை வெளியிட்டார் சிகண்டியார். ஆனால் என்ன காரணத்தாலோ, 'அப்படிச் செய்ய முடியாது செய்யவும் கூடாது' என்று பெரிய பாண்டியர் அதை உடனே மறுத்துவிட்டார்.

"நகரணி மங்கல நாளன்றுதான் எங்களோடு இவனும் தேருலா வந்திருந்தானே? இப்போது மறுபடியும் தனியாக இன்னொரு நகருலாவுக்கு அவசியமென்ன?"

"அது பொதுவாக நிகழ்ந்த தேருலா. மூவாயிரம் முத்துத் தேர்கள் தேர்க்கோட்டத்திலிருந்து புறப்பட்டன. அதில் ஏதோ ஒரு தேரில் இளையபாண்டியனும் வந்தான். நீண்ட நாள் குருகுலவாசத்துக்குப் பின் சாரகுமாரன் கோ நகரத்துக்கு வந்திருப்பதால் அவன் மட்டுமே சிறப்பாகவும், தனியாகவும் ஒரு தேருலா வருதல் வேண்டும்."

"இவ் வேளையில் அப்படிச் செய்வது நல்லதில்லை. இவன் பழந்தீவுகளைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான் என்ற செய்திப் புறத்தார்க்கு அதிகம் தெரியக்கூடாதென்று கருதுகிறேன் நான். 'தேருலா' நிகழச் செய்வது இந்தப் பயணத்தை ஊரறிய முரசறைவது போலாகும். பல்வேறு தீவுகளின் ஒற்றர்களும் நிரம்பியுள்ள நம் கோ நகரத்தில் இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படிச் செய்வது சாத்தியமில்லை" என்று பெரியவர் தீர்மானமாக மறுத்த பின்பே சிகண்டியாசிரியர் அடங்கினார்.

இளையபாண்டியனும், முடிநாகனும், பழந்தீவுகளில் சுற்றுப் பயணம் செய்யும் செய்தி அரண்மனை வட்டத்தினரிலும் அரசகுடும்பத்தோடு பொறுப்பான தொடர்புள்ள சிலருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாகப் பட்டத்து அரசர்களோ, அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களோ கடற்பயணம் புறப்படும்போது பெரிய துறைமுகத்தில் கோலாகலமாகவும் அலங்காரமாகவும் வழியனுப்பும் வைபவம் நடைபெறுவதுண்டு. இந்த முறை அந்த அலங்கார வைபவங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டிருந்தன. பயணமே பொருநை முகத்துவாரத்தை ஒட்டினாற்போல் கடலிற் கலக்கும் சிறு துறைமுகத்தின் வழியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணம் புறப்படுமுன் அந்தப் பெண் கண்ணுக்கினியாளை ஒரு முறை பார்த்துச் சொல்லிவிட்டு வரவேண்டும் என்று இளையபாண்டியன் எண்ணியிருந்தும் அது இயலாமல் போயிற்று. கடைசி விநாடிவரை பெரியபாண்டியர் பல எச்சரிக்கைகளையும் செய்திகளையும் அவனுக்குக் கூறிக் கொண்டே இருந்தார்.

சிறுதூறலாக மழை பெய்து கொண்டிருந்த மங்கலான நண்பகல் வேளை ஒன்றில் அவனும் முடிநாகனும், தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். பாட்டனாரும், தந்தை அநாகுலபாண்டியரும், அரசகுடும்பத்தினரும், சில புலவர்களும் வழியனுப்ப வந்திருந்தார்கள். அவர்களுடைய பாய் மரக்கப்பல் பொருநை முகத்துவாரத்திலிருந்து திருப்பத்தைக் கடந்து தென்பெருங்கடலில் பிரவேசித்தபோது காற்று அவர்கள் செல்ல வேண்டிய திசைக்கு ஏற்றதாக வாய்த்திருந்தது.

கப்பல் கடலுக்குள் வந்ததும் தற்செயலாகத் தொலைவிலே தென்பட்ட புன்னைத் தோட்டமும் அதன் சுற்றுப் புறங்களும் இளையபாண்டியனின் கண்களிலே தெரிந்து கண்ணுக்கினியாளை நினைவூட்டின. அந்த நினைவோடு கப்பல் தளத்தில் நின்று கொண்டிருந்த இளையபாண்டியனை அணுகித் தென்பழந்தீவுகள் பற்றிய திசை விவரங்களும், குறிப்புகளும், வரையப்பட்டிருந்த திரைச்சீலையைப் பிரித்துக் காண்பிக்கலானான் முடிநாகன். இளையபாண்டியனுடைய கவனமும் அப்போது அதில் சென்றது. போது இருட்டுவதற்குள் எயினர் தீவுகளின் ஒரு முனையான மரங்கள் அடர்ந்த மலைப் பகுதியை அடையலாம் என்று திரைச்சீலையிற் கண்ட விவரங்களிலிருந்து தெரியவந்தது.

"நம்முடைய கபாடபுரத்துத் தேர்க்கோட்டத்தில் உருவாகும் தேர்களுக்கு வேண்டிய வைரம் பாய்ந்த தேர்ச் சட்டங்களும், மரங்களும், இந்தத் தீவிலிருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன" என்று அந்தத் தீவைப் பற்றி விளக்கத் தொடங்கினான் முடிநாகன். பயணத்தின் உற்சாகமும், கடற்பரப்பின் கருநீல அழகும், வெயிலே தெரியாத மங்கலான வானமும், இளையபாண்டியனின் உள்ளத்தில் களிப்பு நிறையச் செய்திருந்தன. அவனுடைய இதழ்களில் மனத்தின் களிப்பை வெளிக்காட்டுவது போல் இசை பிறந்தது. அந்த இசையால் கப்பல் ஊழியர்கள் களைப்பை எல்லாம் மறந்தனர். முடிநாகனும் அதை இரசிக்கலானான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
17. வலிய எயினன் வரவேற்பு


அந்தி மயங்குகிற வேளையில் - எதிரே தொடுவானமும் கடற்பரப்பும் சந்திக்கிற விளிம்பில் கருங்கோடு போல் ஒரு வரைவு தெரிந்தது. அருகில் நெருங்க நெருங்க, மரங்களின் வடிவமும் மலையும் மெல்லத் தெரியலாயின. தூரதிருஷ்டிக் கண்ணாடி பதித்த கருவியினால் பார்த்துவிட்டு "தீவு நெருங்குகிறது" என்று அறிவித்தான் முடிநாகன். இளையபாண்டியன் அந்தக் கருவியை வாங்கித் தொலைவில் தெரிவதைப் பார்த்தபோது, வானளாவிய மரங்கள் செறிந்த மலை ஒன்று கண்களில் தெரிந்தது. அவ்வளவு உயரமாகவும், பருமனாகவும், செழிப்பாகவும், அடர்த்தியாகவும் மரங்கள் செறிந்திருந்த மலையைப் பார்ப்பதே மகிழ்ச்சியாயிருந்தது.

அந்தத் தீவின் நடைமுறைகளையும் ஒழுகலாறுகளையும் பழக்கவழக்கங்களையும் இளையபாண்டியனுக்குச் சொல்லத் தொடங்கினான் முடிநாகன்.

"யாத்ரிகர்கள் என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட நாம் அங்கே தெரிவிக்கலாகாது. அப்படித் தெரிவிப்பதனால் பெரிய பெரிய கெடுதல்கள் சம்பவிக்கலாம்" என்று முடிநாகன் எச்சரிக்கையாக முன்பே கூறி வைத்தான். இந்த எச்சரிக்கை கப்பல் ஊழியர்களுக்கும் ஒரு முறைக்கு இரு முறையாக வற்புறுத்தித் தெரிவிக்கப்பட்டது. பாய்மரங்களிலும், கப்பலின் பிற்பகுதிகளிலுமிருந்த அரசியல் அடையாளச் சின்னங்கள் மறைக்கப்பட்டன. தீவினர்களுக்குக் கொடுப்பதற்கான அன்பளிப்புப் பொருள்களாக - யானைத் தந்தங்களும், முத்துக்களும், இரத்தினங்களும் எடுத்து வைக்கப்பட்டன.

"இந்தவிதமான தீவுகளில் மென்மையும், நாகரிகமும் பொருந்திய பண்பட்ட இராசநீதி முறைகள் எவையும் கிடையாது. இறங்கியதும் தீவுத்தலைவனைச் சந்தித்து யாத்ரீகர்களாக வந்திருப்பதாய்த் தெரிவித்து அன்பளிப்புக்களை வழங்கிவிட வேண்டும். மனிதர்களைப் பிடிக்கவில்லை என்றால் உடனே அவர்களைக் கொலை செய்வதற்குக் குறைவான வேறெந்தச் சிறிய தண்டனையையும் வழங்கத் தெரியாது இவர்களுக்கு" என்றான் முடிநாகன்.

"இயல்புதான்! நாகரிகம் அடையமுடியாத தொடக்க நிலையில் எல்லாக் குடிமக்களும் இப்படித்தான் இருக்க முடியும். மொழியும், பேச்சும், இலக்கணமும், இலக்கியமும், இசையும், நாடகமும், கலையும், காவியமும் தோன்றித்தான் மனிதனின் தொடக்கக்கால மிருகத்தன்மைகளைப் படிப்படியாகக் கரைத்து அவனை மென்மையாக்கியிருக்கின்றன. அந்தக் கலை நாகரிகமும் மொழி நாகரிகமும் தோன்றாத இப்பகுதிகளில் கொடிய நீதிமுறைகள் தான் நிலவமுடியும்" என்று முடிநாகனுக்கு விளக்கம் கூறினான் இளையபாண்டியன்.

நீலக்கடலினிடையே அந்தத் தீவும் - அதிக உயரமில்லாத குன்றுகளும் மனோரம்மியமாகக் காட்சியளித்தன. மரங்களும், இலை தழைகளும், செடி கொடிகளும், நெய் பூசித் துடைத்துப் பளபளப்பாக வைத்தவை போல் பசுமை மின்னின. தரைப்பகுதி மரங்களின் பசுமைக்கும் இந்தத் தீவுப் பகுதித் தாவரங்களின் பசுமைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது. இந்தப் பசுமையில் ஒருவிதமான செழிப்பும், அடர்த்தியும் மதம் பிடித்ததுபோல் பற்றியிருந்தன. மனிதர்களும் அதேபோல் வலிமை மதம் பிடித்தவர்களாய்த் தோன்றினார்கள். வலிமையையும், திடனையும் காட்டுவதுபோல் கரிய நிறம், வளையம் வளையமாகச் சுருண்ட செம்பட்டை முடி, ஒளி மின்னும் சிறிய கூர்மையான கண்கள், அதிக உயரமில்லாத தோற்றம், சதைப் பிடிப்பு வாய்ந்த திரண்ட தோள்கள், பரந்த மார்பு, வேகமாக ஓடுவதற்கும், துரத்துவதற்கும் ஏற்ப வாய்ந்தவைபோல் இறுக்கமான குதிகால்கள், அத்தீவின் மனிதர்களான எயினர்கள் பார்ப்பதற்கு விநோதமாயிருந்தார்கள். இடுப்பைச் சுற்றி ஒரு சிவப்பு நிற மரப்பட்டையைக் கச்சையாக அணிந்திருந்தார்கள்.

இளையபாண்டியனும், முடிநாகனும் தங்கள் பாய்மரக் கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தச் செய்தனர். பாய்களும் கீழே இறக்கிச் சுருட்டி முடியப்பட்டன. கரையில் குன்றினருகே ஒட்டினாற்போலக் கப்பலைக் கொண்டுபோய் நிறுத்த முடியாமையினால் சிறிது தள்ளியே நிறுத்த வேண்டியதாயிற்று. கப்பல் நிறுத்தப்படுவதைப் பார்த்ததும் அதிலிருந்த இளையபாண்டியனோ, முடிநாகனோ கூப்பிடாமல் தாங்களாகவே இரண்டு குரூரமான தோற்றத்தையுடைய குள்ள எயினர்கள் ஓர் சிறு படகில் அதை நோக்கி வந்தனர். எயினர்கள் பேசிய தமிழில் வல்லின ஒலி அதிகமாயிருந்தது. படுத்த குரலில் சொல்ல வேண்டிய சொற்களைக் கூட எடுத்த குரலில் வலித்துப் பேசினார்கள். சொற்களைப் பல்லைக் கடித்துக் கொண்டு வெளியிடுவதுபோல் வெளியிடும் சமயங்களில் அவர்களுடைய முகத்தில் பளீரென்று மின்னும் சிறிய கண்கள் பார்ப்பவர்களுக்குப் பயமூட்டுகின்றனவையாய் இருந்தன. கரையிலிருந்து கொண்டுவந்த அந்தச் சிறிய படகைக் காண்பித்து, "கீழே இறங்கி இந்தப் படகுக்கு வாருங்கள்" என்பதுபோல் இளையபாண்டியனையும், முடிநாகனையும் நோக்கி அந்தக் குள்ளர்கள் சைகையால் அழைத்தார்கள். தோற்றத்தைக் கண்டு ஏளனமாக எண்ணி அந்தக் குள்ளர்களை அலட்சியம் செய்யவோ அவர்கள் வேண்டுகோளை மறுக்கவோ, கூடாதென்பதுபோல் இளையபாண்டியனுக்குக் குறிப்பாக உணர்த்தினான் முடிநாகன்.

"இவர்கள் இந்தத் தீவிற்குத் தலைவனான வலிய எயினனின் பணியாளர்கள். வலிய எயினனுடைய வார்த்தைக்குத் தீவிலுள்ள பெருமக்கள் அடங்கிக் கட்டுப்படுவார்கள். வலிய எயினர்கள் அரசகுடும்பத்தினரைப் போல் பரம்பரையாகப் பட்டத்துக்கு வந்து தீவின் ஆட்சி உரிமையைப் பெறுகிறவர்கள். தீவுக்கு வருகிற பிற நாட்டினரை இவர்கள் முதலில் வலிய எயினனிடம் அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி விடுவார்கள். பாட்டனார் நம்மிடம் கொடுத்து அனுப்பியிருக்கும் அன்பளிப்புப் பொருள்களில் ஒரு பகுதியை இப்போது நம்முடன் எடுத்துக் கொண்டுவிட வேண்டும். மற்றெந்த நாட்டினர் எந்த எந்த அன்பளிப்பைக் கொண்டு வந்து கொடுத்தாலும் கபாடத்து முத்துக்களை அன்பளிப்பாகக் கொண்டு தருகிறவர்களிடம் இவர்கள் தனிப்பிரியம் காட்டுவார்கள் என்று தங்கள் பாட்டனார் கூறியிருக்கிறார் அல்லவா? அந்த உபாயம் இப்போது நமக்குப் பயன்படும் வேளை வந்திருக்கிறது" என்று இளையபாண்டியனின் செவியருகே நெருங்கி மேலும் கூறினான் முடிநாகன்.

ஊழியர்களை எல்லாம் கப்பலிலேயே விட்டுவிட்டு இளையபாண்டியனும், முடிநாகனும் வலிய எயினனைச் சந்திப்பதற்காகத் தீவிற்குள் அழைத்துச் செல்லவந்த படகில் புறப்பட்டனர். படகு கரையை நெருங்கியதும் - வேறு இரண்டு குள்ளர்கள் தீப்பந்தத்தோடு காத்திருப்பது தெரிந்தது. தீவில் இருள் செறிந்திருந்தது. மேலே வானளாவிய மரங்களும் செடி கொடிகளும், அடர்ந்து படர்ந்திருந்த பகுதியில் நூலிழை ஓடுவதுபோல் ஒற்றையடிப்பாதை ஒன்று ஊடறுத்துக் கொண்டு போயிற்று. அந்தப் பசுமை அடர்த்தியினிடையே சிள் வண்டுகள் ஓசையிடும் சூழலில் ஒற்றையடிப்பாதை என்ற சிறு வழி அச்சமூட்டுவதாக இருந்தது. குரவையிடும் ஒலி மெல்லக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆள் நடந்துவரும் ஒலியில் அமைதி கலைந்து மரங்களில் அடைந்திருந்த பறவைகள் சிறகடித்து எழுந்தன. பறந்துவிட்டு மறுபடியும் அடைந்தன.

அந்தி மயங்கும் நேரத்தின் இயல்பான இருளை மரங்களின் அடர்த்தி மிகைப்படுத்தி அதிகமாக்கி இருந்தது. தேக்கு, வெண்கடம்பு, தேவதாரு, ஆகிய மரங்கள் வானளாவ வளர்ந்திருந்தன. அவற்றின் பருத்த அடிமரங்கள் இருளில் பூதாகரமாகத் தோன்றின. இரு குள்ள எயினர்கள் தீப்பந்தத்தோடு முன்னால் வழிகாட்டி நடக்கப் பின்னால் வேறிரண்டு எயினர்கள் காவல் வர இளையபாண்டியனும், முடிநாகனும் நடந்து சென்ற வழி நீண்டு கொண்டேயிருந்தது. நீண்ட நேரத்திற்குப் பின் தாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த ஒற்றையடிப்பாதை ஒரு பள்ளத்தாக்கை நோக்கி இறங்குமுகமாகச் செல்வதை அவர்களால் உணர முடிந்தது. செழிப்பும், வளமும், பெருகி ஒரே பசுமை அடர்த்தியாகத் - தாவரக்குகையாக இருண்டிருந்த அந்தப் பகுதியில் மேடு பள்ளம் உணர்வதே அருமையாக இருந்தது.

ஓரளவு பொறுமையைச் சோதிக்கும் தொலைவுவரை நடந்தபின் பள்ளத்தாக்கானதொரு சமவெளியில் மரங்கள் ஆகாயத்தை மறைக்காத திறந்தவெளிக்கு வந்திருந்தார்கள் அவர்கள். திறந்த வெளியில் அங்கங்கே பரவலாகத் தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. எயினர்கள் கூட்டம் கூட்டமாகத் தென்பட்டார்கள். மேல் மரம் வெட்டப்பட்டதால் பத்துப் பன்னிரண்டுபேர் அமர முடிந்த வட்டவடிவமான மேடைபோல் தானே நேர்ந்திருந்த ஓர் அடிமரத்தில் வலிய எயினன் கம்பீரமாக வீற்றிருந்தான். அவன் கையில் நீண்ட வேல் இருந்தது. அதன் இலை போன்ற கூரிய நுனி தீப்பந்தத்தின் ஒளியில் பளீரென்று மின்னிக் கொண்டிருந்தது. இருளில் ஒவ்வொருவருடைய கண்களும்கூட அந்த வேல் நுனியைப் போல் பளீரென்று ஒளிர்ந்து கொண்டிருந்தன. இளையபாண்டியனும், முடிநாகனும் ஏழுகோல் தொலைவிலேயே நிற்குமாறு செய்துவிட்டு உடன் வந்த குள்ளர்கள் - வலிய எயினனைப் பயபக்தியோடு அணுகி வணங்கி ஏதோ கூறினர்.

அந்த நேரம் பார்த்துச் சமயோசிதமாகக் கபாடத்து முத்துக்களையும், சில இரத்தினங்களையும் இரு உள்ளங்கைகளிலும் ஏந்தியபடியே வலிய எயினனை நெருங்கினான் முடிநாகன். இரவில் விண்மீன்களாக மின்னும் அந்த முத்துக்களையும் இரத்தினங்களையும் கண்டவுடன் வலிய எயினனின் குரூரமான முகத்தில்கூட ஒரு மலர்ச்சி பிறந்தது. இளையபாண்டியன் ஏனோ வலிய எயினனின் அருகில் நெருங்கிச் செல்வதற்குத் தோன்றாமல் முதலில் நிறுத்தப்பட்ட இடத்திலேயே தயங்கி நின்றான்.

முடிநாகனோ தானாக எடுத்துக் கொண்ட உரிமையுடன் வலிய எயினனுக்கு அருகில் நெருங்கி முத்துக்களை வழங்கியதோடு அமையாமல், "தலைவரே! நாங்கள் பாண்டிய நாட்டு யாத்ரிகர்கள். தென்பழந் தீவுகளில் இயற்கை வளங்களைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறோம். தங்களுக்கு அன்பளிப்பாக இந்த முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தோம்" என்று மிக விநயமாகப் பேசவும் தொடங்கிவிட்டான். வலிய எயினன் முகமலர்ச்சியோடு அவற்றைப் பெற்றுக் கொண்டான்.

"ஏன் உங்களுடன் வந்தவர் அங்கேயே தயங்கி நிற்கிறார்! அவரையும் கூப்பிடுங்கள். இருவரும் அப்படி அமர்ந்து கொள்ள வேண்டுகிறேன்" - என்று பக்கத்தில் மென்மையாக அலங்கரிக்கப்பட்டிருந்த இன்னோர் வெட்டுண்ட அடிமரப்பகுதியைக் காண்பித்தான் வலிய எயினன். இளையபாண்டியனும் முடிநாகனுக்கு அருகில் வந்து சேர வேண்டியதாயிற்று. இருவரும் வலிய எயினனுடைய வேண்டுகோளுக்கிணங்கி அமர்ந்து கொண்டனர். வலிய எயினன் அந்தத் தீவில் விளைந்த விநோதமான தோற்றங்களையுடைய பல நிறக்கனிகளை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தான்.

"இந்தத் தீவுக்கு வரும் விருந்தினர்களையும் நண்பர்களையும் நாங்கள் நேசபாசத்தோடு வரவேற்க முடிவுசெய்து விட்டோமென்றால் தான் இப்படிக் கனிகளை அளித்து உபசரிப்போம்" என்று இரைந்து சிரித்துக் கொண்டே தன் முரட்டுக் குரலில் உரத்துக் கூறினான் வலிய எயினன். முடிநாகனும், இளையபாண்டியனும் கூடப் பதிலுக்குப் புன்முறுவல் பூக்க முயன்றனர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
18. நாதகம்பீரம்



எயினர் தலைவன் அவர்களைத் தன் விருந்தினர்களாக ஏற்று மிகவும் அன்போடும் ஆர்வத்தோடும் உபசரிக்கத் தொடங்கி விட்டான். அவர்கள் அவனுக்குப் பரிசளித்த முத்துக்களும் அவற்றைவிட நயமான வார்த்தைகளும் எயினர் தலைவனின் மனத்தில் ஒரு நன்மதிப்பை உண்டாக்கியிருக்க வேண்டுமென்பது அவனுடைய மலர்ச்சியிலிருந்தே தெரிந்தது. இந்த முதல் இராசதந்திரச் சந்திப்பை எவ்வளவிற்கு எவ்வளவு பயணத்தைப் பற்றிய நம்பிக்கை தங்கள் மனத்தில் பெருக முடியுமென்பது இருவருடைய எண்ணமுமாக இருந்தது. கூடியவரை தங்கள் உரையாடல் பொதுவான உரையாடலாக இருக்குமாறு இருவருமே கவனம் வைத்துக் கொண்டு பேசினார்கள்.

தொன்மையான தென்பழந்தீவுகளுக்கும், கபாடபுரத்துக்கும் இடையேயுள்ள அரசியல் உறவின்மைகளையோ, உறவுகளையோ, உரையாடலுக்குப் பொருளாக்கி விடாமல் தவிர்ப்பதை இருவருமே சாதுரியமாக நிறைவேற்ற முடிந்தது. எதை விரும்பிப் பேசுகிறோமோ 'அதையே ஏன் விரும்பிப் பேசுகிறோம்' என்ற கேள்வி எதிராளியின் மனத்தில் எழுந்துவிடாமலும், எதை விரும்பித் தவிர்க்க முயல்கிறோமோ 'அதை மட்டும் ஏன் தவிர்க்க முயல்கிறோம்?' - என்ற சந்தேகம் எதிரிக்கு ஏற்படாமலும் பேசுவதுதான் இராசதந்திரப் பேச்சு. இத்தகைய பேச்சுக்களைப் பயிலவும், பழகவுமே பெரியபாண்டியர் தங்களை இந்தச் சுற்றுப்பயணத்திற்கு அனுப்பியிருக்கிறார் என்பது இருவருடைய மனத்திலும் மேலெழுந்து நின்ற காரணத்தினால் இருவருமே அதைச் செம்மையாகச் செய்ய முடிந்தது.

பகல் நேரத்திலும் வெயில் உள்ளே நுழைய முடியாதபடி அடர்ந்து செறிந்திருந்த காடுகளாலான அந்தத் தீவில் காட்டு விலங்குகளின் தொல்லைகளிலிருந்து விடுபடக் கருதியோ, என்னவோ குடியிருப்புகளை எல்லாம் மரங்களின் உச்சியில் அமைந்திருந்த பரண்களில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அந்தத் தீவில் செழித்து வளர்ந்திருந்த ஒருவகைப் புல்லினால் குடிசைகள் அழகுற வேயப்பட்டிருந்தன. முடிநாகனும், சாரகுமாரனும், தங்குவதற்குக்கூட அப்படி இரண்டு பரண்களிலமைந்த புல்வேய் குரம்பைகளே கிடைத்தன. உயர்ந்த மரக்கிளைகளில் வைரம் பாய்ந்த பல கைகளைப் பதித்துப் பசுமைச் சூழலில் தொங்குவதுபோல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குடிசைகளில் தங்குவதற்கு இதமாக இருந்தது. நீருள் அமிழ்ந்திருப்பதுபோன்ற தண்மை அங்கு நிலவியது. அந்தத் தண்மையின் சுகத்தினாலும், பயணம் செய்துவந்த களைப்பினாலும் முடிநாகன் நன்றாக உறங்கிவிட்டான்.

இளையபாண்டியனுக்குத்தான் உறக்கமே வரவில்லை. அந்த இயற்கையழகின் தூண்டுதலில் கண்ணுக்கினியாளின் நினைவு வந்தது அவனுக்கு. 'உண்மை அன்பிற்கும், பரிவிற்கும்தான் எத்தனை பெரிய சக்தி? நினைப்பதிலும், காண்பதிலும், சிந்திப்பதிலும், எல்லாவற்றிலும் நம்முள் பொங்குகிற பரிவின் மற்றொரு நுனியிலிருப்பவர்களே நமக்கு ஞாபகம் வருகிறார்களே?' என்றெண்ணி வியந்தான் அவன். மரங்களும், செடிகளும், கொடிகளுமாக ஒரே மனத்தின் பல உணர்வுகளைப் போல் நெருங்கிப் பிணைந்திருந்ததனால் அவன் அமர்ந்திருந்த பரணில் காட்டின் பசுமை மணம் கம்மென்று தொகுதியாகப் பரவியிருந்தது. 'பூக்களின் நறுமணம் நமக்குப் பிரியமானவர்களின் ஞாபகத்துக்கு ஒரு தூதுபோல வாய்க்கும்' என்று அகப்பொருள் இலக்கணத்தில் ஏதோ ஒரு துறைக்கு விளக்கம் கூறுகிறபோது ஆசிரியர் கூறியது நினைவு வந்தது அவனுக்கு.

அந்தத் தண்மை அந்த இயற்கையின் மலர்ச்சி, அந்த இரவின் ஏகாந்தம், யாவும் கண்ணுக்கினியாளையே எண்ணச் செய்தன. சிலருடைய நினைவு ஞாபகத்தின் ஒரு மூலையில் இருக்கும். வேறு சிலருடைய நினைவு ஞாபகத்தின் ஒரு பாதியாக இருக்கும். இன்னும் சிலருடைய நினைவே ஒரு ஞாபகமாக இருக்கும். மனத்தின் அந்தரங்க கீதங்களாகப் பெருகிப் பல்லாயிரம் பண்களை ஒலிக்கும் இங்கித நினைவுகள் சிலவும் இதயத்திற்கு உண்டு. அந்த நினைவுகள் குருதியும் சதையுமாக இதயத்தோடு பிணைந்தவையாக இருக்கும். கண்ணுக்கினியாளைப் பற்றிய நினைவும் அவனுள் அப்படித் தவிர்க்க முடியாததாகவே இருந்தது. இயற்கையழகு மிகுந்த அந்தக் குளிர்ந்த வனத்தில் அவளை நினைப்பதற்கு என்றே இரவெல்லாம் விழித்திருந்தாலும் தகும் என்பது போலிருந்தது அவன் நிலை. 'மனித இதயத்திற்குள் கரை கொள்ளாத் தவிப்பாக நிரம்பியிருக்கும் ஏதோ ஓர் உணர்வுதான் அவன் பாடும் இசையாகிறது' என்று இசை நுணுக்கங்களைக் கற்பிக்கும் போது ஆசிரியர் சிகண்டியார் இடைக்கிடை கூறுவதுண்டு. கண்ணுக்கினியாளின் இசையும் நளினமான குரலும் ஞாபகம் வருகிற வேளைகளில் எல்லாம் சிகண்டியார் கூறும் இந்த வாக்கியத்தையும் உடனிகழ்ச்சியாகச் சேர்த்தே நினைத்திருக்கிறான் அவன்.

'கண்ணுக்கினியாள்
செவிக்கினியாள்
பண்ணுக்கினியாள்
பலப் பலவாய் மன
எண்ணுக்கினியாள்'

என்று அவளைப் பற்றி நிறைவேறியவரை அப்படியே நின்று மேலே நிறைவேறாத கவிதையொன்றும் அவனுள் முகிழ்த்திருந்தது.

அடர்ந்த காட்டினிடையில் இடைவெளிகளில் புகமுயலும் காற்றின் உக்கிரமான ஓசையும், தொலைவில், அதிக அன்புக்குரியவரைப் பிரிய நேர்ந்துவிட்ட யாரோ வாயிலும் வயிற்றிலும் ஏற்றிக் கொண்டு கதறுவது போன்ற கடல் ஓசையும் ஒலித்த வண்ணமிருந்தன. எப்போது உறங்கத் தொடங்கினோம் என்று தனக்கே நினைவில்லாத வேளையில் உடல் களைப்பின் காரணமாகச் சோர்ந்து இளையபாண்டியனும் உறங்கத் தொடங்கியிருந்தான். உறங்கத் தொடங்கிய உறக்கத்தையும், அதன் இனிய நினைவுகளையும், கனவுகளையும், வேகமாக யாரோ ஓடிவந்து கலைத்ததுபோல் வைகறை விரைந்து வந்து கலைத்து விட்டது. வைரக் கற்களின் பட்டைகளில் இருந்து விதவிதமான ஒளிக்கீறல்கள் பாய்வதைப் போல் காலைக் கதிரவனின் கதிர்க்கற்றைகள் அந்த அடர்ந்த வனத்தில் நுழைய முயன்றன. இளையபாண்டியன் கண்விழித்தவுடன் அருகே பரணுக்குள் முடிநாகன் படுத்துறங்கிக் கொண்டிருந்த இடத்தைப் பார்த்தபோது அங்கே அவனைக் காணவில்லை. கீழே தரையைக் குனிந்து பார்த்தபோது அவன் அங்கே நின்று கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரையும் நீராடல் முதலிய காலைக் கடன்களை ஆற்ற அழைத்துச் செல்லுவதற்காக எயினர் தலைவனால் அனுப்பப்பட்டிருந்த பணியாளன் ஒருவனும் பரணுக்கடியில் காத்திருந்தான். ஏற்கெனவே கீழே இறங்கிவிட்ட முடிநாகன் அந்தப் பணியாளனுடன் தான் பேசிக் கொண்டிருந்தான். சாரகுமாரனும் கீழே இறங்கிப் போய் அவர்களோடு சேர்ந்து கொண்டான். பணியாள் அவர்கள் இருவரையும் பக்கத்துக் குன்றின் சரிவில் இருந்த ஓர் அருவிக்கு நீராட அழைத்துச் சென்றான். அந்த அருவியின் பெயர் 'நாத கம்பீரம்' என்று கூறியபோது பொருத்தமான அந்தப் பெயரை வியந்தான் சாரகுமாரன். பாறைகளிலும் கற்களிலும் துள்ளிக் குதித்து விழும் வேளையில் மத்தளம் கொட்டுவது போலிருந்தது அந்த அருவியின் நாதம். அருவியைக் கண்களால் அருகிலிருந்து காணாமல் சிறிது தொலைவு விலகிச் சென்று மரங்களின் மறைவிலோ, புதரிலோ, குன்றின் மறுபுறத்திலோ நின்று அந்த ஓசையை மட்டும் செவிமடுத்தால் யாரோ தொலைவிலிருந்து உரத்த குரலிலே மத்தளம் வாசிப்பது போலவே ஒலித்தது. அந்தத் தீவின் அதிசயங்களில் ஒன்றாக அதனையும் கூறினார்கள்.

'எல்லாக் கலைகளும் இயற்கையின் பல்வேறுவிதமான சங்கேதங்களிலிருந்துதான் பிறந்து விரிந்து பின் நோக்கமும், துறையும் கற்பிக்கப்பட்டனவாதல் வேண்டும்' என்று தன்னுடைய ஆசிரியர்கள் முன்பொரு சமயம் தனக்குக் கற்பித்திருந்த பிரத்யட்ச வாக்கியத்தை இப்போது நினைவு கூர்ந்தான் சாரகுமாரன். நாத கம்பீரத்தின் குளிர்ந்ததுவும், காட்டு மூலிகைகள், வேர்கள், பூக்கள், பச்சிலைகளின் சுகமான வாசனை நிறைந்ததுவுமாகிய நீரில் குளித்தெழுந்த போது தேவர்களின் அமுதத்தை உண்ட உற்சாகம் அவர்கள் உடலில் நிறைந்திருந்தது நீராடி உடைமாற்றிக் கொண்டு அவர்கள் மீண்டும் எயினர் தலைவனைச் சந்திக்க வேண்டியிருந்தது. "இன்றைப் பகற்பொழுதையும், இரவையும் இங்கே கழித்துவிட்டு நாளைக் காலையில் இந்தத் தீவை விட்டுப் புறப்பட்டு யாத்திரையை மேலே தொடர வேண்டும்" என்று கூறியிருந்தான் முடிநாகன்.

எயினர் தலைவனின் அரசியல் உள் நோக்கங்களைப் பொதுவாக அறிய வாய்ப்பு ஏற்படும் முறையில் அதே சமயத்தில் தாங்கள் யார் என்று எயினர் தலைவன் அறிந்து கொள்ளவும் முடியாமல் தந்திரமாகச் சில வினாக்களை வினாவிப் பார்க்க வேண்டும் என்று அன்றைக்கு அவர்கள் நினைத்திருந்தார்கள். முதல் நாள் அவர்களை வரவேற்ற அதே இடத்தில் அதே பழைய சுற்றப் பரிவாரங்களோடுதான் இன்றும் எயினர் தலைவன் அவர்களை எதிர்கொண்டான். ஆனால் அவர்கள் நினைத்தபடி ஒரு காரியம் மட்டும் முடியவில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top