• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கபாடபுரம் (சரித்திர நாவல்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
19. கலஞ்செய் நீர்க்களம்


வலிய எயினன் அப்போதிருந்த சூழ்நிலையில் அவனிடம் விரிவாக உரையாட முடியாமலிருந்தது. யானை, யானையாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்த பூதாகாரமான மல்லர்கள் இருவரை மற்போரிடச் செய்து கண்டு இரசித்துக் கொண்டிருந்தான் எயினர் தலைவன்.

"இந்தத் தீவில் தனித்து வாழும் எங்களுக்கு உடல் வலிமையைத் தவிர வேறெந்தச் செல்வங்களும் இல்லை. எங்களைச் சுற்றியிருக்கும் கடலுக்கு அப்பாலுள்ள பெரிய பெரிய தேசங்களில் நால்வகைப் படைகளும், வேறு சாதுரியங்களும் உண்டு. எங்களுக்கு அவையொன்றும் கிடையாது" என்று கூறிவிட்டு மற்போரை இரசித்துக் காணுமாறு விருந்தினர்கள் இருவரையும் வேண்டிக் கொண்டான் எயினர் தலைவன்.

அவனுடைய வேண்டுதலாலும் யாவர் கவனமும் மற்போரையே சார்ந்திருந்ததாலும் அப்போது அதிகம் பேச்சுக் கொடுத்து எயினர் தலைவனுடைய மனத்தை அவர்களால் ஆழம் பார்க்க முடியவில்லை. எயினர்களிடம் கபடு சூதுவாது இல்லையென்றாலும் அவர்கள் முரடர்களாயிருந்தார்கள். அதனால் அவர்களுடைய மனப்போக்குப்படியே போய் அதன் பின்பே எதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

"தேச தேசாந்திரங்களையும் கடலிடைத் தீவுகளையும் சுற்றிப் பார்க்கும் எண்ணத்தோடு யாத்திரிகர்களாக வந்திருக்கிறோம்" என்று வந்தவுடனே எயினர் தலைவனிடம் கூறிய கூற்றுக்கு மாறுதலின்றி நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது. மற்போர் முடிந்த பின்னர் - போரில் வெற்றி பெற்ற எயின மல்லனுக்கு அவர்கள் தலைவன் பரிசளித்தான். அதன்பின் மற்போர் நடந்த இடத்திற்குச் சிறிது தொலைவில் அடர்த்தியான மரக் கூட்டங்களுக்கு மேலே மற்றவற்றை விடச் சற்று விசாலமாகவும், பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த எயினர் தலைவனின் பரணிற்கு அவனோடு அழைக்கப்பட்டுச் சென்றார்கள் முடிநாகனும், சாரகுமாரனும். அரண்மனையைப் போன்று செழுமையாகவும், வளமாகவும், அமைக்கப்பட்டிருந்தது அந்தப் பரண். விருந்துண்ட பின்னர் எயினர் தலைவன் பொதுவான பேச்சுக்களைத் தொடங்கினான்.

"வைரம் பாய்ந்த இந்தத் தீவின் மரங்களை எல்லாம் பாண்டி நாட்டுக்கு விற்று முத்துக்களைப் பெறுகிறோம் நாங்கள். அந்த மரங்களை அவர்கள் தேர்களாகவும், கப்பல்களாகவும் அறுத்துக் கட்டுகிறார்கள். அதன் மூலம் அவர்களுடைய படைவலிமையும் பெருகுகிறது. தேர்களை அவர்கள் எவ்வளவு கட்டினாலும் - தேர்ப்படையை எவ்வளவு பெரியதாக வளர்த்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் எங்களுடைய மரங்களை அறுத்துக் கலங்கள் கட்டுவதை மட்டும் நாங்கள் விரும்பமாட்டோம். தேர்களால் கடல்கடந்து வந்து எங்களோடு போரிட முடியாது. ஆனால் கலங்களைச் செலுத்திக் கடல் கடந்து வந்து எங்களோடு போரிட முடியும். பாண்டிய நாட்டு அரச குடும்பத்தினர் தேர்ப் படையைப் பெருக்குவதற்காகவே மரங்கள் பெற்றுச் செல்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் பிறர் அறியாத வண்ணம் பொருநை முகத்துவாரத்தில் ஆற்றை ஆழமாக்கிக் கொண்டு பல்வேறு கலங்களை அவர்கள் கட்டி வருவதாக எங்களுக்குத் தெரிகிறது" - என்று எயினர் தலைவன் அவர்கள் இருவர் முகத்தையும் கூர்ந்து நோக்கிக் கொண்டே கூறியபோது, "அப்படி இருக்க நியாயமில்லை ஐயா! பாண்டிய மன்னர்கள் எதைச் செய்தாலும் பிறருக்கு வஞ்சனை புரியமாட்டார்கள்" என முடிநாகன் மறுத்துப் பார்த்தான்.

"உங்களுடைய தேசத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் நன்றியையும், நம்பிக்கையையும் பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் கூறியதை நான் அப்படியே ஒப்புக் கொண்டுவிட வேண்டுமென்று எதிர்பார்ப்பது தான் தவறு" - என்று தீர்க்கமான குரலில் எயினர் தலைவனிடமிருந்து முடிநாகனுக்கு மறுமொழி கிடைத்தது. இந்த மறுமொழியைச் செவிமடுத்தபின் முடிநாகனால் சிறிதுநேரம் எதுவுமே பேசமுடியவில்லை. சாரகுமாரனோ எயினர் தலைவனுடைய கடுமையான முகத்தையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்து எயினர் தலைவனே மீண்டும் பேசத் தொடங்கினான்.

"இப்போதெல்லாம் நாங்களும் விழித்துக் கொண்டு விட்டோம். அவர்களைப் போல் பாதுகாப்பு நலன்கள் நிறைந்த விசாலமான பூமியை நாங்கள் ஆளவில்லை. எங்களுடைய சிறிய தீவை நாங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கு உரிய ஒரே வழி கடல் வழி தான். தேர்களையோ, சகடங்களையோ செய்து நாங்கள் பயனடைய முடியாது. எனவே, 'நாத கம்பீரம்' அருவியாக வீழ்ந்து ஆறாகப் பெருகிக் கடலுள் கலக்கும் இடத்தில் உள்முகமாக வனத்தின் அடர்ந்த பகுதியில் ஆற்றை ஆழப்படுத்தி நாங்களே கப்பல் கட்டும் தளம் ஒன்று அமைத்திருக்கிறோம். அந்தக் கலஞ்செய் நீர்க்களத்தில் இது காறும் சில நல்ல மரக்கலங்களைக் கட்டி முடித்திருக்கிறோம். இந்தத் தீவின் கடற்காவலர்கள் அவற்றை வெள்ளோட்டமாக எடுத்துக் கொண்டு கடலின் பல பகுதிகளுக்குப் போயிருக்கிறார்கள். இனிமேல் இந்தத் தீவில் கிடைக்கும் வைரம் பாய்ந்த நல்ல மரங்கள் எல்லாம் முதலில் எங்கள் கலஞ்செய் நீர்க்களத்தை நாடித்தான் போகும்."

"பாராட்டத்தக்க முயற்சி தான் ஐயா! ஆனால் இத்தகைய கலங்களைக் கட்டுவதற்கு அநுபவம் வாய்ந்த வல்லுநர்கள் நிறைய வேண்டியிருப்பார்களே?" என்று பாராட்டுவது போல் எயினர் தலைவனிடம் ஒரு கேள்வியைப் போட்டான் சாரகுமாரன்.

"அதற்குப் பஞ்சம் ஒன்றுமில்லை! 'கபாடபுரம்' முதலிய கோ நகரங்களிலே தேரும், கலமும் கட்டிமுடித்து வெள்ளோட்டம் விடும் வித்தகர்களாக இருப்பவர்களே இந்தத் தீவிலிருந்து சென்ற வலிமையாளர்கள் தானே?" என்று எயினர் தலைவன் உடனே ஆத்திரத்தோடு எதிர்த்துக் கேட்ட கேள்வியிலேயே சாரகுமாரனுக்கு வேண்டிய செய்தியும் கிடைத்துவிட்டது.

சிறிது நேர மௌனத்துக்குப் பின் எயினர் தலைவனிடம் சாரகுமாரன் ஒரு வேண்டுகோள் விடுத்தான்.

"ஐயா! நாதகம்பீர ஆற்றை ஆழப்படுத்திக் கப்பல் கட்டும் தளம் அமைத்திருக்கும் பகுதியை யாத்திரிகர்களாகிய நாங்களும் காண ஆசைப்படுகிறோம். எங்கள் ஆசை நியாயமானதென்று தாங்கள் கருதினால் மட்டுமே இந்த விருப்பத்தை ஏற்கலாம். இல்லாவிடில் நாங்களே எங்கள் விருப்பத்தை விட்டுவிடுகிறோம்."

"பொதுவில் நாங்கள் அந்நிய தேசத்து யாத்திரிகர்கள் எவரையும் அங்கு அழைத்துச் செல்வதில்லை. ஆயினும் உங்களிருவருடைய அன்பான வேண்டுகோளிலும் நியாயமிருப்பதாக எனக்குத் தோன்றுகிற காரணத்தால் நான் அதற்கு இணங்குகிறேன். இன்று மாலையிலேயே உங்கள் விருப்பத்தை நிறைவு செய்யப் பார்க்கிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். கலஞ்செய் நீர்நிலைக் களனுக்குச் செல்கிற வழியைக் கூடிய வரை வேறு தேசத்தார் அறிய விடக்கூடாது என்பது எங்கள் கருத்து. அதனால் செல்லும் வழி முடிய உங்கள் இருவருடைய கண்களையும் மேலாடையினால் கட்டி மறைத்தே அழைத்துச் செல்ல முடியும். தளத்தை அடைந்தவுடனே நீங்கள் சுதந்திரமாகக் கண்களைத் திறந்து பார்க்கலாம். இந்தச் சிறிய கட்டுப்பாட்டை நீங்களும் ஒப்புக் கொண்டு மதிப்பீர்களென நம்புகிறேன்" என்று அந்தத் தீவின் தலைவன் நிபந்தனை கூறியபோது இருவரும் அதற்கு இணங்கினர்.

மாலையில் அவர்கள் கலங்கட்டும் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புறப்பட்ட சில நாழிகைத் தொலைவு அடர்ந்த புதர்களுக்கு நடுவே நடந்து செல்ல வேண்டியிருந்தது. மூன்று நாழிகைப் பயணமும் முடிந்த பின் அவர்களுடைய கண்களை மூடிக் கட்டியிருந்த மேலாடைகள் அகற்றப்பட்டன. பார்த்தால் எதிரே கோலாகலமான வியக்கத்தக்க காட்சிகள் தென்பட்டன. அடர்ந்த நடுக் காட்டுக்குள் ஆறு ஆழப்படுத்தப்பட்டுக் கட்டிய கலங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. மரங்களை அறுப்போரும் கொல்லருமாகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தனர். ஆண்டுக் கணக்கில் கடலிலேயே மிதந்து கிடந்து திரிந்தாலும் அயராத தளராத கலங்களை அங்கு கண்டார்கள் அவர்கள்.

கலங்கட்டும் தளத்தை அமைத்திருந்த இடம்தான் தந்திரம் நிறைந்ததாயிருந்தது என்றால் ஏற்பாடுகளும் தந்திரம் நிறைந்தவையாயிருந்தன. காட்டுக்குள் அடர்த்தியினிடையே மறைந்திருந்ததனால் திடீரென்று கடலுக்குள் புகுந்து எதிரிகளைத் தாக்கவும், தாக்கிய வேகத்தில் உள்வாங்கித் திரும்பி மறையவும் ஏற்ற இடத்தில் தளம் அமைந்திருந்தது. இதுபோல் சிறிய தீவின் பாதுகாப்பு அல்லது எதிரிகளைத் தாக்கும் ஏற்பாட்டிற்கு மிகமிகப் பொருத்தமான தளமாக அது இருப்பதை இருவரும் உணர்ந்தனர். வார்த்தைகளை நிறைய தொடுத்து அந்த தளத்தை அதிகமாகப் பாராட்டினால் கூட அந்தப் பாராட்டிலிருக்கும் மிகையான அம்சங்களைக் கண்டு உணர்ந்து வலிய எயினன் சந்தேகிக்கக் கூடுமென்று தயங்கி அளவான வார்த்தைகளில் பாராட்டினார்கள் அவர்கள். கப்பல்கள் யாவும் கபாடபுரத்துக் கலஞ்செய் கோட்டத்தில் படைக்கப் பெறுவனவற்றை விட உறுதியாகவும், உழைக்க வல்லவையாகவும் இங்கு இருப்பதையும் அவர்கள் கண்டார்கள்.

மீண்டும் கலஞ்செய் நீர்நிலைக் களத்திலிருந்து திரும்பும் போது அவர்களிருவரும் கண் கட்டியே அழைத்து வரப்பட்டார்கள். பரணுக்குத் திரும்பியதும் இரண்டாவது முறையாக மீண்டும், "உங்களைப் போன்ற யாத்திரிகர்கள் ஒரு தீவின் தந்திரமான பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்டு வியப்பது இயல்பை மீறிய காரியமாகவே எனக்குத் தோன்றுகிறது?" என்று சந்தேகம் தொனிக்க வினாவிட்டு அவர்கள் இருவருடைய முகபாவங்களையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். அவனுடைய கழுகுப் பார்வை அவர்களைத் துளைப்பது போலிருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
20. சந்தேகமும் தெளிவும்



கலஞ்செய் நீர்க்களத்தை வாய்விட்டுப் பாராட்டுவதோ வியப்பதோ கூட எயினர் தலைவனின் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதைக் குறிப்பறிந்து கொண்ட சாரகுமாரனும், முடிநாகனும், விரைந்து பேச்சை வேறு பொருளுக்கு மாற்றினார்கள். "கலைகளில் எயினர் மரபினருக்கு ஈடுபாடு உண்டா? உண்டானால் என்னென்ன கலைகளில் ஈடுபாடு உண்டு?" என்பதுபோல் உரையாடல் மாற்றப்பட்டது.

கோ நகரங்களின் அரச தந்திர நாகரிகங்களும் உரையாடல் நுணுக்கங்களும் தெரியாவிட்டாலும் நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும், உள்ளோருக்கு இயல்பாகவே வாய்க்கும் சில சந்தேகங்கள் எயினர்களுக்கும் இருந்தன. திடீரென்று தங்களுடைய கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்க வேண்டுமென்று விருந்தினர்கள் ஆர்வம் காட்டியதும், பார்த்து முடித்ததும் - அதைப்பற்றிய பேச்சை வளர்த்தாமல் - ஒரு விதமான அவசரத்தோடு கலையைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் - எயினர் தலைவனுக்குக் கவலையை அளித்தன. சாதுரியமாகத் தொடர்ந்து பேசிய பேச்சினால் சாரகுமாரனும், முடிநாகனும் அந்தக் கவலையை மறக்கச் செய்துவிட்டார்கள். எயினர் தலைவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவனுள்ளேயே தளரும்படி செய்ய அவர்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது.

முடிவில் அவர்கள் இருவரும் அந்தத் தீவிலிருந்து விடைபெற முயன்றபோது. "ஏன் அவசரப்படுகிறீர்கள்? இன்னும் சில தினங்கள் தங்கியிருக்கலாமே?" என்று எயினர் தலைவன் உபசாரத்துக்காகக் கூறினான். அந்த உபசார வார்த்தைகளையே ஏணியாகப் பற்றி ஏறி நின்று கொண்டு எயினர் தலைவனின் சந்தேகத்தைக் கடந்து மீண்டான் இளையபாண்டியன். ஆயினும் சந்தேகத்தை முற்றிலும் கடந்துவிட்ட உறுதி அவனுக்கு வரவில்லை.

"ஐயா! யாத்திரிகர்களாகிய நாங்கள் ஒரே இடத்தில் தங்கி நின்று என்ன பயன்? புதிய புதிய இடங்களையும், புதிய புதிய காட்சிகளையும், புதிய புதிய மனிதர்களையும் சந்திப்பதும், காண்பதுமே, எங்களுக்குப் பயன் தரும். ஆகவே தயைகூர்ந்து எங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். தங்களுடைய அன்புக்கும் ஆதரவிற்கும் பலகாலும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று தனக்கோ முடிநாகனுக்கோ அந்தத் தீவில் மேலும் தொடர்ந்து தங்கித் தெரிந்து கொள்ள எதுவுமில்லை என்பதுபோல் அசிரத்தையாகப் பேசிய பின்பே சாரகுமாரன் எயினர் தலைவனின் சந்தேகச் சிறையிலிருந்து மீள முடிந்தது.

அறிவுக்கூர்மை மிக்கவர்களின் சந்தேகங்களையாவது சொற்களால் தெளிவு செய்துவிடலாம். 'அறியாமையும் பிடிவாதமும் உள்ள நாட்டுப்புறத்து மனிதர்களின் சந்தேகங்களைச் சொற்களாலோ, சிந்தனைத் தெளிவினாலோ மட்டுமே தீர்க்க முடியாது. சாதுரியம் மட்டுமே அப்படிப்பட்ட சந்தேகங்களைத் தீர்க்க முடியும்' என்பதைச் சாரகுமாரன் அந்த வேளையில் மிக நன்றாக உணர முடிந்தது. எயினர் தலைவன் தங்களுக்கு விடை கொடுத்து விட்டாலும் தங்களை வழியனுப்புவதிலும், தாங்கள் செல்ல வேண்டிய வேறு தீவுகளுக்கு எப்படி எப்படிப் போக வேண்டுமென்று வேறு சொல்லுவதிலும் அவன் அதிகமான சிரத்தை காண்பிக்க முன்வந்ததிலும் ஒரு சிறப்பான உள் நோக்கம் இருக்க வேண்டுமென்று தோன்றியது சாரகுமாரனுக்கு. அதை அவன் முடிநாகனிடம் கூறி விவாதிக்கவும் விரும்பவில்லை. அந்த உள்நோக்கத்தின் விளைவு விரைவில் தெரியுமென்றும் அவனுக்குத் தோன்றியது.

தங்களுடைய மரக்கலத்துக்கு வந்து பயணத்தைத் தொடங்கிய பின்பும் இதைப்பற்றித் தனிமையில் கூட அவன் முடிநாகனிடம் எதுவும் கூறவில்லை. மரக்கலத்தைச் செலுத்தும் மீகாமனும் பிற ஊழியர்களும் முடிநாகனும் செல்ல வேண்டிய திசையைக் குறித்துத் தங்களுக்குள் உரையாடத் தொடங்கிய போதும் இளையபாண்டியன் அதில் கலந்து கொள்ளவில்லை. 'இன்ன இன்ன திசையில் இப்படி இப்படி மரக்கலத்தைச் செலுத்திக் கொண்டு சென்றால் நீங்கள் செல்ல வேண்டிய தீவுகளுக்கு ஏற்றபடி வழி அமையும்' என்று விடைபெறும் போதும் எயினர் தலைவன் கூறிய வழிகளை இப்போது முடிநாகன் பிற ஊழியர்களிடம் நம்பிக்கையோடு விவரிக்கத் தொடங்கியபோது கூட இளையபாண்டியன் அதில் தலையிடவில்லை.

எல்லாம் பேசி முடித்து ஊழியர்களுக்கு இடவேண்டிய கட்டளைகளையும் இட்டு முடிந்த பின் முடிநாகன் தனியே நின்று கொண்டிருந்த இளையபாண்டியனுக்கருகே நெருங்கி, "எந்தத் திசையில் மரக்கலத்தைச் செலுத்தச் சொல்லியிருக்கிறேன் தெரியுமா?" என்று வினாவியபோது, "எந்தத் திசையில் செலுத்திக் கொண்டு போனாலும் ஆபத்து இருக்கிறது என்பதை மறந்து விடாதே" என்று பூடகமாக மறுமொழி கிடைத்தது இளையபாண்டியனிடமிருந்து. அந்த மறுமொழியைக் கேட்டு முடிநாகன் ஓரளவு அதிர்ச்சியடைந்தான் என்றே சொல்ல வேண்டும். மேலும் தொடர்ந்து இளைய பாண்டியன் ஏதாவது கூறுவான் என்று எதிர்பார்த்த முடிநாகனுக்கு அவனுடைய தொடர்பான நீடித்த மௌனம் திகைப்பையே அளித்தது. அந்த மௌனத்தைத் தற்செயலான அமைதியாகவோ சோர்வாகவோ கருதி விட்டுவிடவும் முடிநாகனால் இயலவில்லை. ஏதோ பெரிய காரணம் இருக்க வேண்டுமென்றும் தோன்றியது. ஒரு காரணமும் தனியே பிரிந்து புலப்படவில்லை. அந்த நிலையில் இளையபாண்டியனின் அந்த மௌனத்தைக் கலைத்து உரையாடலை வளர்க்கவும் தயக்கமாக இருந்தது அவனுக்கு. நீண்ட நேரம் அதே நிலைமை நீடித்தது. இளையபாண்டியனிடம் ஏதாவது பேசியாக வேண்டுமென்று முடிநாகனே வாய் திறந்தபோது சிறிதும் எதிர்பாராதவிதமாக இளையபாண்டியனே பேச முன்வந்தான்.

"முடிநாகா! நாம் இந்தத் தீவில் இன்னும் சில நாட்கள் தங்கி நம்மோடு எயினர் தலைவன் சுபாவமாகப் பழகத் தொடங்கிய பின்பு கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்கும் ஆவலை வெளியிட்டிருக்க வேண்டும். அவசரப்பட்டு விட்டோம். அவசரப்படாமல் காரியங்களைச் சாதித்துக் கொள்வதிலுள்ள நீடித்த சௌகரியம் அவசரப்படுவதில் எப்போதுமே இருப்பதில்லை" என்று இளையபாண்டியன் கூறத் தொடங்கியதும் முடிநாகனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் தனக்கு ஒன்றும் புரியாத பாவனையில் திகைப்போடு சாரகுமாரனின் முகத்தைப் பார்த்தான். சாரகுமாரனோ கடலைப் பார்த்தான். நான்குபுறமும் திரும்பித் திரும்பி எதையோ எதிர்பார்ப்பதுபோல் பார்த்தான். அதிலிருந்தும் முடிநாகனால் எதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவனுடைய சந்தேகமும் தீரவில்லை. தெளிவும் பிறக்கவில்லை. அந்நிலையில் அவர்கள் மனநிலையைப் போல் இருளும் மயங்கத் தொடங்கியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
21. ஒரு சோதனை


மரக்கலத்தில் தீப்பந்தங்கள் ஏற்றிப் பொருத்தப் பெற்றன. இருட்டிவிட்டதை உணர்வுக்குக் கொணர்வதுபோல் அந்தப் பந்தங்களின் ஒளி இருளின் செறிவைக் காட்டலாயிற்று. எங்கோ தொலைவில் அதே போன்ற ஒளியின் தூரத்துப் புள்ளிகள் தென்படத் தொடங்கின.

"வேறு மரக்கலங்களும் தென்படுகின்றன. இனி பயமில்லாமல் போகலாம்" என்றான் முடிநாகன்.

"அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியும்?" என்று பதில் வந்தது இளையபாண்டியனிடமிருந்து.

"கடற்பகுதியின் இந்த இடங்களில் முந்நீர்க் கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்கள் மிகுதியாயிருப்பதாகச் சொல்வார்கள். தனிக் கப்பல்கள் சிக்கிக் கொண்டால் கடம்பர்கள் துணிவாகக் கொள்ளைக்கு வருவார்கள். கூட்டம் கூட்டமாக மரக்கலங்கள் செல்லும்போது அவர்கள் தொல்லை இராது" என்ற முடிநாகனின் பேச்சை இடைமறித்து,

"உன் கண்ணில் இப்போது தென்படும் மரக்கலங்களின் ஒளித் தோற்றத்தைக் கொண்டு மட்டுமே அவை நமக்கு வேண்டியவர்களின் மரக்கலங்கள் என்றோ நம்மைப்போல் யாத்ரீகர்களின் மரக்கலங்கள் என்றோ எப்படிக் கொள்ள முடியும்?" என்று கேட்டான் சாரகுமாரன். அதை மறுத்துச் சொல்லவும் முடிநாகனால் இயலவில்லை. இளையபாண்டியனே மேலும் கூறத் தொடங்கினான். "நான் சொல்வதைக் கவனமாகக் கேள் முடிநாகா! தென்பழந்தீவுகள் பலவானாலும் - தீவுகளில் வாழ்பவர்களும், தீவுகளை ஆள்பவர்களும் கடற் கொலைஞர்களே. இனிவரப்போகும் எல்லாத் தீவுகளுக்கும் முன்வாயில் போன்ற இந்த எயினர் தீவிலேயே நாம் சந்தேகத்துக்கு ஆளாகிவிட்டோம். ஆயினும் தப்பி வந்தாயிற்று. நாம் அரச குடும்பத்துப் பிரதிநிதிகளா, அல்லது வெறும் யாத்திரிகர்களா? என்று சந்தேகத்துடனேதான் எயினர் தீவின் தலைவன் நமக்கு விடைகொடுத்திருக்கிறான். இதை நினைவில் வைத்துக் கொண்டு பயணம் செய்தால்தான் நாம் நம்முடைய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பிப் போக முடியும். ஆகவே இனி நாம் ஒரு காரியம் செய்ய வேண்டும்..."

"என்ன செய்ய வேண்டும் என்றுதான் கூறுங்களேன்..."

"நம்மை யாத்திரிகர்களாவே நிரூபிக்க வேண்டும். எப்படி யார் நம்முடைய பொறுமையைச் சோதித்தாலும் நமக்குக் கோபம் வரக்கூடாது. கோபம் வந்தால் தன்மான உணர்வு பெருகும். தன்மான உணர்வு பெருகினால் நம்மை வீரமரபினராக நிரூபித்துக் கொள்ளத் தோன்றும். போரிடும் உணர்வு வெளிப்படுமானால் 'உயர்ந்த அரசகுடும்பத்தைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள் இவர்கள்' என்று தெளிவாக நம்மைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். நாம் அதற்கு இடங்கொடுக்கக் கூடாது. ஆனால் அப்படிக் கோபதாபங்களுக்கு இடங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் தான் இனி நிறைய வரும் என்று தோன்றுகிறது. வீரத்தையும் காட்டக்கூடாது. செல்வத்தையும் காட்டக்கூடாது. நம்மிடமிருக்கும் விலையுயர்ந்த கபாடத்து முத்துக்களை வலிய எயினனிடம் வழங்கியதுபோல் இனியும் தொடர்ந்து வழங்கிக் கொண்டே போகக்கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. அதுவும்கூட ஒரு நிலைமைக்கு மேல் நம்மைச் சந்தேகத்துக்குரியவர்களாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும். யாத்திரிகர்களிடம் எவ்வளவு முத்துக்கள் தான் இருக்க முடியும்?"

"இதைத்தான் நான் முன்பே கூறியிருக்கிறேனே? 'யாத்திரிகர்கள்' என்ற போர்வைதான் நமக்குப் பாதுகாப்பானது. அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இவர்களுடைய அன்பையும் மதிப்பையும் பெற நம்முடைய கபாடத்து முத்துக்களை அளிப்பது பயன்படுமானால் நாம் அதற்குத் தயங்குவானேன்?"

"தயங்க வேண்டிய அவசியம் எயினர் தீவில் இறங்கிய வேளையில் நமக்கு இல்லை முடிநாகா! ஆனால் இனி அப்படித் தயங்கி ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் சந்தேகத்திற்கு ஆளாக வேண்டியதாக நேர்ந்துவிட்ட பின் தயக்கத்துக்குக் காரணமிருக்கிறது. நம்மை வழியனுப்பிய சுவட்டோடு எயினர் தலைவனே நாத கம்பீர ஆற்றின் முகத்துவார வழியே வேறிரண்டு கப்பல்களை அனுப்பி நம்மைச் சோதிக்க நேரிடலாம். அந்தச் சோதனையின் போது நாம் ஏமாறிவிடக்கூடாது என்பதுதான் என் கருத்து."

"அப்படி ஒரு சோதனை நமக்கு வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா இளையபாண்டியரே? என்று முடிநாகன் வினாவி முடிக்கவும்,

"நிச்சயமாக நினைக்கிறேன்! அதோ எதிரே பார்! புரியும்" - என்று பரபரப்போடு எதிர்புறம் சுட்டிக் காண்பித்தான் சாரகுமாரன். முடிநாகன் அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்து மலைத்தான். வழியை மறித்தாற்போல் கடலில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மரக்கலங்கள் நிற்பதும் அவற்றிலிருந்து தீப்பந்தங்களோடு சிறுசிறு படகுகளில் பிரிந்து இறங்கி ஆட்கள் வியூகம் வகுத்தாற்போல் கடலில் தென்படுவதும் நல்லதற்கு என்று படவில்லை.

"முடிந்தவரை கபாடபுரத்து அரச சின்னங்களள மறைத்துவை. முத்துக்களை மரக்கலத்தின் கீழறையில் கொட்டி ஒளித்துவிடு. ஒரு பாவமும் அறியாத யாத்திரிகர்கள் போல் நடிக்க இனி நீயும் நானும் துணிய வேண்டும். 'வலிய எயினனின் அன்பிற்குரிய விருந்தினர்களாக இருந்துவிட்டு வேறு தீவுகளுக்காகப் பயணத்தைத் தொடர்வதாக அவர்களிடம் கூறுவோம். வலிய எயினன் நாட்டில் இயற்கையழகு மட்டுமே நம்மைக் கவர்ந்ததாகச் சொல்வது தவிரக் கப்பல் கட்டும் தளத்தைப் பார்த்த நினைவே நமக்கு அடியோடு மறந்துவிட்டதுபோல் நடிப்போம். தப்பி மேலே செல்ல இவற்றைத் தவிர வேறு வழி இல்லை. இவற்றைக் கொண்டே தப்பி மேலே சென்றுவிடலாம் என்பதற்கும் உறுதி இல்லை" என்றான் இளையபாண்டியன்.

"இது இப்படித்தான் நடக்கும் என்று எப்படிப் பொருத்தமாக உங்களால் அநுமானம் செய்ய முடிந்தது இளையபாண்டியரே?" - என்று முடிநாகன் வியந்தான்.

"ஏதோ மனத்தில் தோன்றியது. அதற்கு விளைவு இருக்குமென்றும் நம்பமுடிந்தது. நான் நினைத்தபடியே இப்போது நடக்கிறது. வழி மறித்துக் கொண்டு நிற்கும் கலங்களை மீறி நம் மரக்கலத்தைச் செலுத்த வேண்டாம். இங்கேயே அடங்கிப் பணிவதுபோல் நிறுத்த ஏற்பாடு செய். நமது மரக்கலம் நின்றவுடனே அவர்களே கோபாவேசமாக வருவார்கள். பணிவாகவே பேசுவோம். வலிய எயினனின் விருந்தோம்பும் பண்பைப் புகழ்வோம்" என்று நடக்க வேண்டியவற்றில் பரபரப்புக் காட்டத் தொடங்கினான் சாரகுமாரன். முடிநாகனுக்கு அந்த முன்னெச்சரிக்கை வியப்பை அளித்தது. இளைய பாண்டியருடைய 'அரசதந்திர' மதிநுட்பம் பெருகிவருவதை உள்ளூரப் பாராட்டிப் பெருமை கொண்டான் அவன். அதற்குள் கடலில் நாலா திசைகளிலிருந்தும் படகுகள் அவர்கள் கலத்தை நெருங்கின. கொள்ளையிடுபவர் வழக்கமாகக் குரவையிடும் கோர ஒலிவிகற்பங்களும் காது செவிடுபடும்படி ஒலிக்கலாயின. அவர்களோ இயல்பை மீறிய நிதானத்தோடு அந்தக் கடற்கொள்ளைக்காரர்களை எதிர்கொண்டனர். தோன்றியபடி தோன்றிய இடத்தில் சட்டங்களையும் கயிறுகளையும் பற்றி அவர்கள் மரக்கலத்தில் ஏறிவந்த போது அந்த ஆத்திரமே குளிர்ந்து போகும்படி இளையபாண்டியனும், முடிநாகனும் அவர்களைப் பணிவோடும் விநயத்தோடும் வரவேற்றனர்."

"உங்களுக்கு எது வேண்டுமானாலும் தரச் சித்தமாயிருக்கிறோம். இந்த மரக்கலத்தை உங்கள் சொந்த மரக்கலம் போல் நினைத்துக் கொள்ளலாம். நாங்கள் வலிய எயினரைச் சந்தித்த மகிழ்ச்சியிலிருக்கிறோம். வலிய எயினரைப் போல் வெறும் யாத்திரிகர்களிடம் இவ்வளவு அன்பு காட்டுகிற கனிவு வேறு யாருக்கு வரும்? எயினர் தீவின் அழகையும் இயற்கை வளத்தையும் எங்களால் மறக்கவே முடியாது. 'மேலே உங்களுடைய யாத்திரையைத் தொடரும் போது கடலில் ஒரு பயமுமின்றிச் செல்லலாம்' என்று வலிய எயினர் கூறிய வார்த்தைகள் இன்னும் எங்கள் செவிகளில் ஒலித்தவண்ணமிருக்கின்றன" என்று இளையபாண்டியனும் முடிநாகனும் அன்போடு கூறிய சொற்களைக் கேட்டு வந்தவர்கள் தயங்கித் தயங்கி நிற்கவே - இவர்கள் இருவரும் மேலும் உற்சாகமாக வலிய எயினனைப் புகழலாயினர். வந்தவர்கள் தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இளையபாண்டியனோ அந்தச் சோதனையிலிருந்து மீள முடிவு செய்துவிட்ட வைராக்கியத்துடன் காரியங்களைச் செய்யலானான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
22. மொழி காப்பாற்றியது


கப்பலைச் சூழ்ந்து கொண்டவர்களோ இளையபாண்டியன் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகச் சோதனை செய்தனர். வலிய எயினனின் பெருந்தன்மையைப் புகழ்ந்து கூறிய இவர்களது சொற்களினால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. தாங்களிருவரும், எந்தவிதமான அரச தந்திரத்திலும் அக்கறையில்லாத வெறும் யாத்திரீகர்களே என்பதை இவர்கள் நிரூபிக்க முயன்றதிலும் அவர்கள் மனநிறைவு அடைந்துவிட்டதாகத் தெரியவில்லை. அரசியல் உறவுகளில் சந்தேகம் கொண்டவர்களுக்கே உரிய பேய்ப் பிடிவாதத்தோடு சாரகுமாரனிடம் உரையாடலைத் தொடங்கித் தொடர்ந்தார்கள் அவர்கள்.

"எயினர் தீவிலேயே உங்களை வியக்கச் செய்த இடம் கலஞ்செய் நீர்க்களமாகத்தான் இருக்கும். சிறிதும் ஒளிவு மறைவின்றி அதனை உங்களுக்குச் சுற்றிக் காண்பித்ததற்காகத் தான் வலிய எயினரை நீங்கள் மனமாரப் புகழுகிறீர்கள்! பொதுவாக யாத்திரீகர்களுக்குத் தங்களுடைய பாதுகாப்புப் படைக் கோட்டங்களைச் சுற்றிக் காண்பிக்க யாரும் துணியமாட்டார்கள். வெள்ளை உள்ளமும், பரந்த நல்லெண்ணமும் உள்ள வலிய எயின மன்னரைப் போன்றவர்கள் சூதுவாது அறியாதவர்களாகையினால் யாருக்கும் எதையும் மறைப்பதில்லை" என்று கூறிவிட்டு உடனே சாரகுமாரனின் முகத்திலும் கண்களிலும் பிரதிபலிக்கும் உணர்ச்சிகளைத் தேடுபவன்போலக் கூர்ந்து நோக்கினான் வந்தவர்களில் ஒருவன்.

"தீவு தீவாகச் சுற்றித் திரியும் எங்களை ஒத்தவர்களுக்கு எந்தப் புதிய பொருளைப் பார்த்தாலும் வியப்புத்தான் ஐயா! ஆனால் அந்த வியப்பும், விந்தையும், அடுத்த புதிய பொருளைப் பார்க்கிறவரைதான் எங்கள் மனத்திலே நிலைத்திருக்கும். ஒவ்வொரு மலராகத் தேடிப்பறந்து திரிந்து தேனுண்ணும் வண்டுகளைப் போல் அனுபவங்களிலே மகிழ்ச்சி கொள்ள அலைபவர்கள் நாங்கள்! சொல்லப்போனால் எயினர் தீவிலே நாத கம்பீரம் என்ற அழகிய அருவியும் ஆறும் எங்களைக் கவர்ந்த அளவு கூட கலஞ்செய் நீர்க்களமும், கப்பல் கட்டும் தொழில் நுணுக்கங்களும், எங்களைக் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்" - என முகத்தில் எந்தவிதமான உணர்வுகளுமில்லாத ஒரு பாமரனைப் போல் இளையபாண்டியன் மறுமொழி கூறினான். அவ்வளவில் கப்பலை வழிமறித்தவர்களுக்குச் சந்தேகம் படிப்படியாகக் குறைந்திருக்க வேண்டும். சிறிது நேரம் வேறு ஏதேதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுக் கொண்டு அவர்கள் போய்விட்டார்கள். போகும்போது சாரகுமாரனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தவன் ஓர் எச்சரிக்கையும் செய்துவிட்டுப் போனான்.

"உங்கள் யாத்திரையை இந்தக் கடற்பகுதியில் மிகவும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும் செய்ய வேண்டும். இங்கே இந்தத் தென்கடற் பகுதியில் கொடுமையான பழக்க வழக்கங்களையுடைய எத்தனை எத்தனையோ தீவுகள் இருக்கின்றன. யாத்திரை செய்பவர்களையும் அரசதந்திர நோக்கத்தோடு சுற்றுப்பயணம் செய்பவர்களையும் கூடத் தனித்தனியே வேறுபாடு கண்டு பிரித்துணரும் ஆற்றல் குறைந்தவர்களின் முன்னால் கூட நீங்கள் போய் நிற்க நேரிடலாம்". இந்த எச்சரிக்கையை அவன் எதற்காகச் செய்துவிட்டுப் போனான் என்பதை இளையபாண்டியனால் விரைந்து புரிந்து கொள்ள முடியவில்லையாயினும் இதில் ஏதோ உட்பொருள் இருப்பதாக உய்த்துணர மட்டும் முடிந்தது. துன்பமும் சோதனைகளும் வரும்போது மனித மனத்திற்கு இயல்பாகவே முன்னெச்சரிக்கையும் என்ன நேரப்போகிறது என்பதை உணரும் முனைப்பும் வருவதுண்டு. மழை பெய்யுமுன் இயல்பாகவே பூமியில் கிளரும் மண் வாசனையைப் போல் தற்செயலாக மனித இதயத்தில் நேரும் முன்னறிவிப்பு இது. கடலில் அவர்கள் கலத்தை வளைத்துக் கொண்டு தடுத்த கப்பல்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. விரைந்து நிகழ்ந்த ஆரவாரமும் அதைவிட விரைந்து நிகழ்ந்துவிட்ட தனிமையும் மாயங்கள் போல் தோன்றின.

இளையபாண்டியன், அதுவரை மௌனமாகவும், இனி என்னென்ன நேருமோ என்ற திகைப்புடனும் தன்னருகில் நின்று கொண்டிருந்த முடிநாகனை நோக்கிக் கூறலானான்:

"இந்தச் சோதனையில் தப்பிவிட்டோம். ஆனால் இதிலிருந்து தப்பிவிட்டதற்காக மகிழ்வதற்குக் கூட நேரமும், அமைதியும் இன்றி அடுத்த சோதனையை எதிர்பார்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம் நாம். சில காரியங்களில் வென்றுவிட்டதற்காகவோ, நிறைவு பெற்றுவிட்டதற்காகவோ, அந்த வெற்றியோ, நிறைவோ, நிகழ்ந்து முடிந்துவிட்டதாக நாம் நினைத்த மறுகணமே உடன் விரைந்து மகிழ்வதோ, பெருமிதப்படுவதோ கூட அரச தந்திரமாகாது. நம்முடைய மகிழ்ச்சியும் புறத்தார் அறிய வெளிப்படலாகாது. நம்முடைய துயரமும் புறத்தார் அறிய வெளிப்படலாகாது. சாதுரியத்தின் கனிந்த நிலை நமது உணர்ச்சிகளின் பலங்களையும், பலவீனங்களையும், பிறர் கணிக்கவும் முடியாமல் நம்மை அநுமானத்துக்கும் அப்பாற்பட்டவர்களாக வைத்துக் கொள்ளுவதுதான்."

"அப்படி நாம் இருக்கும் போது நம்மை உய்த்துணர முயல்கிறார்கள் இங்கிருப்பவர்கள்! அப்படியில்லாமல் நாமே பலவீனமாகவும் நம்மைப் பிறர் உணர முடிந்த வெளிப்படையான நிலையிலும் இருந்துவிட்டோமோ இன்னும் துன்பம் தான்! ஏன் தான் இந்தத் தீவுகளில் வசிக்கும் சிற்றரசர்கள் இவ்வளவு சந்தேகப்படுகிறார்களோ, தெரியவில்லையே?" என்று வினாவினான் முடிநாகன். இளையபாண்டியன் சில விநாடிகள் அவனுக்கு மறுமொழி கூறவும் தோன்றாமல் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக இருந்தான். பின்பு முடிநாகனை நோக்கிக் கூறத் தொடங்கினான்:

"நேருக்கு நேர் நம்மை யாரென்று உறைத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளத் தயங்கி இப்படித்தான் வலிய எயினன் நம்மை இனங்கண்டு கொள்ள முயல்வான் என்ற ஐயப்பாடும் அநுமானமும் என் மனத்தில் முன்பே உண்டாகிவிட்டன. அதனால்தான் நான் முன்னெச்சரிக்கை அடைய முடிந்தது. விரைந்து மகிழ்ந்திடுதலும், விரைந்து வெகுளியடைதலும் அரசர்குடிக்கு ஆகாத செயல்கள். வீரமரபினராகிய அரசர் குடிக்குச் சிறப்பாக உரிய தன்மானமும், கோபமும் நமக்கு இருக்கின்றனவா, இல்லையா, என்பதைத்தான் வலிய எயினன் சோதித்து அறிந்து கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறான். சொற்களின் மூலம் மனிதர்களை அறிந்து கொள்ள முயல்கிறவர்களை விட உணர்ச்சிகளின் மூலமே மனிதர்களை அநுமானம் செய்கிறவர்களிடம் மிக மிக விழிப்பாக இருக்க வேண்டும்."

"உண்மைதான் இளையபாண்டியரே! சிந்தனையின் மூலமாகவும், சொற்களின் மூலமாகவும், மனிதர்களை அறிந்து கொள்கிறவர்களை விட உணர்ச்சி பாவங்களின் மூலம் உய்த்துணர முயல்கிறவர்கள் குழப்பங்களையும் பயங்கர விளைவுகளையும் உண்டாக்கிவிட வல்லவர்கள். எதற்கும் நாம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்."

இவ்வளவில் அவர்களுடைய உரையாடல் நின்றது. கப்பல் ஊழியர்களைக் கூவி அழைத்து மேலே பயணத்தைத் தொடர வேண்டிக் கட்டளைகளை இட்டனர். சிறிது நேரத்தில் பயணம் தொடர்ந்தது. மேலே செல்லச் செல்ல அலைகள் சுழன்று சுழன்று புரட்டிக் கொண்டு வந்தன. அப்பகுதியில் இரண்டு மூன்று சிறுசிறு தீவுகளால் கடல் துண்டிக்கவும், பிரிக்கவும் பட்டிருந்ததனால் காற்றும், அலைகளும் அவர்களுடைய கப்பலை ஆட்டி வைக்கத் தொடங்கின. அந்த நேரத்தில் அவ்வளவு பயங்கரமான அலைகளுக்கும் காற்றுக்கும், இடையே பயணம் செய்வதைவிட அருகிலுள்ள தீவு ஏதாவது ஒன்றில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் பயணத்தைத் தொடர்வதுதான் பொருத்தமாக இருக்கும்போலத் தோன்றியது. இரவு நேரத்தில் இதுபோல் தீவுகளால் பிரிக்கப்பட்ட கடல் வழிகளில் காற்றுடன் அலையும் கொந்தளிப்பும் மிகுதியாயிருப்பதும் பகலில் சிறிது அமைதியடைவதும் வழக்கமென்று கப்பல் ஊழியர்களும் கூறவே தங்கிச் செல்வது என்ற முடிவை இளையபாண்டியன் உறுதிப்படுத்திக் கொண்டான்.

அதே நேரத்தில் முன் பின் தெரியாத ஒரு புதிய தீவில் இரவு நேரத்தில் போய்க் கரையிறங்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றியும் அவன் சிந்திக்கத் தவறவில்லை. இத்தகைய தீவுகளில் மனித இயல்பின் மேன்மையான நாகரிகங்களும், கருணை முறைகளும் பரவவில்லை என்பதாலும், தற்காப்பு என்ற ஒரே எண்ணத்தின் அடிப்படையில் புதியவர்கள் எவரைக் கண்டாலும் துன்புறுத்துவது இயல்பாகி விட்டமையாலும் தயங்க வேண்டியிருந்தது. அதே சமயத்தில் கரையேறத் தயங்கிக் கடலிலேயே பயணத்தைத் தொடர்வதிலும் துன்பங்கள் இருந்தன. துணிந்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலையில் இளையபாண்டியனும், முடிநாகனும் இருந்தனர். கப்பல் போய்க்கொண்டிருந்த வழியிலோ சுற்றும் முற்றும் கடலிடை அங்கங்கே கரிய பெரிய பாறைகளும் சிறு சிறு குன்றுகளும் தென்பட்டன. நடுவாகச் செல்ல இருந்த வழியோ குறுகியது. காற்று அதிகமாக அதிகமாகக் கலம் அலைக்கழிக்கப்பட்டது. எந்த இடத்தில் பாறைகளில் மோதுண்டு சிதற நேரிடுமோ என்ற பயமும் அதிகமாகியது. என்ன துன்பம் வருவதாயினும், அருகிலுள்ள தீவில் கரையிறங்குவது என்ற முடிவிற்கு வந்தார்கள் அவர்கள். அப்பகுதியிலுள்ள தீவுகள் மேடாகவும், பாறைகள் நிறைந்த பாங்கினதாகவும் கடல் உட்குழிந்து ஆழமானதாகவும் அமைந்திருந்ததனால் கரையோரமாக எந்த இடத்தில் கலத்தை ஒதுக்கிக் கொண்டு சென்றாலும் - குன்றுகளில் மோதாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு கரைசேருவது அரிதாயிருக்கும் போலத் தோன்றியது.

ஆயினும் திறமையாகக் கலத்தை ஒதுக்கிக் கரைசேர முயன்றார்கள். கரை நெருங்க நெருங்க அந்தக் கரைப்பகுதிப் பாறைகளிலும் குன்றுகளிலும் மங்கலாகத் தெரிந்த காட்சிகள் அவர்களைத் திடுக்கிடச் செய்வனவாக இருந்தன. எந்தத் தீவின் பெயரைச் சொன்னால் அழுத பிள்ளைகளும் வாய் மூடுமோ அத்தகைய குரூரமான தீவை அணுகியிருந்தார்கள் அவர்கள். ஆயினும அவன் அஞ்சவில்லை. தன்னிடமிருந்த மொழியறிவு தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு கரையிறங்குவதற்கான ஏற்பாடுகளிலே தயங்காமல் ஈடுபட்டான் அவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
23. கொடுந்தீவுக் கொலைமறவர்


அப்போது தாங்கள் கரையிறங்கப் போகும் தீவு - கொடுந்தீவு என்பதையும், அங்கு வாழும் உலகத் தொடர்பில்லாத விநோதமான இனத்தைச் சேர்ந்த கொலை மறவர்கள், தங்களுடைய வழிபடு தெய்வமாகக் கருதும் ஒரு பாறைக்கு நரபலியிடும் வழக்கமுடையவர்கள் என்பதும் இளையபாண்டியன் அறியாதவை அல்ல. கரையோரமாக ஒதுங்கியிருந்த மனிதர்களின் கோரமான கபாலங்களும், குரூரமாகச் சிதறிக்கிடந்த எலும்புகளும் இறங்கியவுடனேயே அச்சம் நிறைந்த வரவேற்பை அளித்தன. பேய்த்தீவு என்றும், பூதத்தீவு என்றும் அந்தத் தீவுக்கு வேறு பெயர்கள் வழங்கி வந்தன. நாகரிகமடைந்த ஏனைய நாடுகளிலும், தீவுகளிலும் வாழ்வோர் அந்தத் தீவுக்கு அளித்த மாற்றுப் பெயர்கள் அவை. பொதுவாக வேறு பகுதிகளிலிருந்து அந்த வழியாகப் பயணம் செய்வோர் கடல் அமைதியாயிருக்கும் பகல் வேளைகளிலேயே கடந்து மேலே சென்றுவிடுவது தான் வழக்கம்.

"இங்கே இறங்கவோ தீவுக்குள் பிரவேசிக்கவோ வேண்டாம் விடியும்வரை இப்படியே கரையோரமாகத் தங்கியிருந்துவிட்டு விடிந்ததும் இரகசியமாக மேலே பயணத்தைத் தொடர்ந்து விடலாம்" என்றான் முடிநாகன். ஆனால் இளையபாண்டியன் அதற்கு இணங்கவில்லை. கரையோரமாக ஒதுங்கிய கப்பலைக் காற்று மாற்றத்திற்கும், அலைகளின் உயர்வு தாழ்வுக்கும் ஏற்பக் கவனித்துக் கொள்ளும் பொருட்டு ஊழியர்களை மட்டும் கப்பலிலேயே விட்டுவிட்டுத் தானும், முடிநாகனும், தீவுக்குள் போகலாம் என்றே இளையபாண்டியன் முடிவு செய்திருந்தான்.

"தீவுக்குள் போகலாமா?" என்று இளையபாண்டியன் வினாவியபோது கப்பல் ஊழியர்களுக்குக் கட்டளைகள் இட்டுக் கொண்டிருந்த முடிநாகன், திகைப்போடும் பயத்தோடும் பேச்சை நிறுத்திவிட்டு இளையபாண்டியனின் முகத்தை ஏறிட்டு நோக்கினான். அந்தப் பார்வையில் பீதியும் உயிர்ப் பயமும் தெரிந்தன.

"பயப்படாதே முடிநாகா! கடலில் அரக்கனின் வாய்ப் பற்களைப் போல் துருத்திக் கொண்டிருக்கும் இந்தப் பாறைகளை விடக் கொடுந்தீவின் கொலைமறவர்கள் கெட்டவர்களாக இருந்துவிடமாட்டார்கள். எவ்வளவுதான் கொடியவர்களாக இருந்தாலும் மனிதர்களுக்குள்ளே இதயம் என்று ஒன்று இருக்கிறது. பாறைகளுக்குள்ளே அந்த இதயம் நிச்சயமாக இருக்க முடியாது. பாறைகள் கல்லால் ஆகியவை என்பதை நினைவு வைத்துக் கொள்!" என்று காரண காரியத்தோடு சாரகுமாரன் ஆறுதல் கூறிய பின்பே முடிநாகன் தைரியமாக அவனோடு புறப்பட்டான். மனிதர்களின் குருதி பட்டுப் பட்டுச் சிவப்பேறிப் போயின போன்ற அந்தத் தீவின் பாறைகளில் தொற்றித் தொற்றி ஏறித் தட்டுத் தடுமாறிச் செல்ல வேண்டியிருந்தது.

தான் பாறைகளில் ஏறும்போது ஓர் இடத்தில் காலடியில் ஏதோ இடறி நொறுங்கிய வேளையில் பீதியோடு கீழே குனிந்து அப்படி இடறி நொறுங்கிய பொருளைத் தூக்கிப் பார்த்த முடிநாகனுக்குக் கைகள் நடுங்கின. அது ஒரு மரித்த மனிதனின் எலும்புக் கூடு. வாயில் சொற்கள் வராமல் பேசத் தடுமாறிய குரலில் 'ஊ ஊ' என்று காற்றாக வெளிப்படும் பீதி நிறைந்த குரலில் இளையபாண்டியனுக்கு அந்த எலும்புக்கூட்டைக் காண்பித்தான் முடிநாகன்.

அதைக் கண்ட இளையபாண்டியனுக்கும் நெஞ்சம் ஒரு கணம் துணுக்குற்றது என்றாலும் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, "தீவுக்குள் அடியெடுத்து வைக்கும் போதே இப்படித் தெரியக்கூடாதது தெரிந்து கெட்ட சகுனம் ஆகிறதே என்று எண்ணாதே! நிமித்தங்கள் எல்லாம் நம்முடைய மனோபாவனைக்கு ஏற்றாற்போலத்தான் நமக்குத் தோன்றும். நிமித்தங்கள் நல்லவையாயிருந்தால் விளைவுகளும் நல்லவையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதேபோல் நிமித்தங்கள் தீயவையாயிருந்தால் விளைவுகளும் தீயவையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நிமித்தங்கள் யாவும் நமது பாவனையின் பிரதிபிம்பங்களாகவே இருக்கும். கவலைப்படாமல் தயங்காமல் முன்னேறலாம் வா!" என்று முடிநாகனுக்கு இளையபாண்டியன் உறுதி கூறியும் அவனுடைய பயமும் நடுக்கமும் குறையவில்லை.

குருதி முட்களைப் போல் காலில் கடுமையாகக் குத்தும் சிவந்த பாறைகளிலும், கற்களிலும் மிதித்து மிதித்து நடந்தார்கள் அவர்கள். தொலைவில் ஒரு காட்சி தெரிந்தது. கூட்டமாக அந்தத் தீவின் மனிதர்கள் ஒரு சிவப்பு மேடையில் எரிந்து கொண்டிருந்த தீயைச் சுற்றிக் கூத்தாடிக் கொண்டே வெறிமிகுந்த குரலில் ஏதோ பாடிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குரலிலும் கூத்திலும் பண்படையாத காட்டுக் குரூரம் மட்டுமே நிறைந்திருந்தது. தொலைவிலிருந்து அதைக் கேட்கும்போதே அருகில் செல்ல அஞ்சி நடுங்கி ஓடிவிட வேண்டும் போலிருந்தது. பண்படாமல் கரடு முரடாக இருந்த அந்தத் தீவின் காலைக்குத்தும் கற்களைப் போல் கேட்கும் செவிகளைக் குத்திக் கிழிப்பது போலிருந்தது அந்த ஓசை. அருகில் நெருங்கப் பூதாகாரமான மனிதர்களின் தடித்த உருவங்கள் கபாலங்களை அணிந்து இடுகாட்டுப் பேய்க் கணங்கள் போல் குதிக்கும் காட்சி தெளிவாகத் தெரியலாயிற்று. அவர்களோ வெறிமயமான கூத்தில் வட்டவடிவமாகக் கைகோத்து மேடையில் எரியும் தீயைச் சுற்றி ஆடிக் கொண்டிருந்ததனால் இவர்கள் இருவரும் வந்ததைக் கவனித்ததாகவே தெரியவில்லை.

இளையபாண்டியன் தைரியமாகவும், துணிவாகவும், முன்னேறிக் கொண்டிருந்தாலும், அவனைப் பின் தொடர்ந்து சென்ற முடிநாகன் அதே வேகத்தில் பின் தொடராமல் தயங்கித் தயங்கித்தான் நடந்தான். இந்த நிலையைக் கவனித்து உணர்ந்து கொண்ட இளையபாண்டியன் முடிநாகனைத் துணிவூட்டுவதற்காகவும், பாறைக்கற்களில் நடந்து நடந்து இசிவெடுத்து வலிக்கும் கால்களுக்கு ஓய்வளிப்பதற்காகவும் ஒரு காரியம் செய்தான். அந்த இடத்தினருகே இலைகளே இல்லாமல் கள்ளிக் கொடி போல் படர்ந்து அடர்ந்து உயரமாகச் செழித்திருந்த ஒரு புதரருகே முடிநாகனையும் அமரச் சொல்லிக் கையால் சைகை செய்துவிட்டுத் தானும் அமர்ந்தான். அருகில் அமர்ந்து சுத்தமான காற்றைக் கூடச் சுவாசிக்க முடியாமல் அந்தக் கொடிக்கள்ளியைச் சுற்றிப் பொறுக்க இயலாத துர்நாற்றம் வீசியது. அவர்கள் அடக்கி முடக்கி மறைவாக உடகார முயன்றபோது அந்தக் கொடிக்கள்ளியின் பசிய காம்புகள் முறிந்து பலபலவென்று பாலும் கொட்டி நனைந்தது. அந்தப் பால்பட்ட இடத்தில் தோல் தீய்ந்து புண்படரும். ஆகையால் இருவரும் தங்களால் இயன்றவரை அந்தக் கள்ளிப்பால் மேலே சொட்டாமல் தப்ப முயன்றார்கள். அவர்கள் முயற்சியினை மீறியும் சில இடங்களில் பால்பட்டு வேதனையளித்தது.

"செடிகள், கொடிகள், தரை எல்லாமே இங்கிருக்கிற மனிதர்களைப் போலவே வருகிறவர்களைத் துன்புறுத்தும் ஆற்றலில் சிறிதுகூடக் குறையாமல் இருக்கின்றன" என்று இளையபாண்டியனின் காதருகே முணுமுணுத்தான் முடிநாகன்.

"இவையெல்லாம் நம்மால் நிச்சயமாக மாற்றவோ, வேறாக்கவோ, திருத்தவோ முடியாது முடிநாகா! ஆனால் மனிதர்களை மாற்றவும், வேறாக்கவும், திருத்தவும் முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நீ ஒரு போதும் இழந்துவிடக் கூடாது! காரணம், நமக்குள் துடித்துக் கொண்டிருப்பது போல் அவர்களுக்குள்ளும் ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்" என்று இளையபாண்டியன் மெல்லிய குரலில் தன்னம்பிக்கையோடு மறுமொழி கூறியபோதும் முடிநாகனுக்கு அதில் அவ்வளவாக நம்பிக்கை பிறக்கவில்லை.

அவர்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போதே திடீரென்று அந்த வெறிக்குரலும் மனிதர்கள் திமுதிமுவென்று ஓடிவருகிற காலடி ஓசையும் தங்கள் புறமாகத் திரும்பினாற்போல் தோன்றவே அவர்கள் திடுக்கிட்டு நிமிர்ந்தனர். ஆம்! அவர்கள் இருவரும் அந்தப் புதரடியில் அமர்ந்திருப்பதை யாரோ ஒருவன் முதலில் பார்க்க நேர்ந்து பின் அவன் உடனே மற்றவர்களுக்கும் சொல்லியிருக்க வேண்டுமென்று தோன்றியது. ஏதோ வேட்டையாடுகிறவர்கள் தங்களுடைய ஆற்றலைவிட எளிய விலங்குகளுக்கு விரித்த வலையில் அவை தவறாமல் விழுந்து சிக்கியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியோடு ஓடி வருவது போல் இருந்தது அவர்கள் வரவு. எளிய விலங்குகளை வலிய விலங்குகள் இரைகண்டு மகிழ்ந்து தாவிப் பாய்ந்து வருவது போல் ஓர் வெறியை இவர்களுடைய பாய்தலில் அவர்கள் கண்டார்கள்.

இளையபாண்டியன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு புதரிலிருந்து எழுந்து நின்றதோடு தன்னைப் பின் தொடர்ந்து உடன் நிற்குமாறு முடிநாகனுக்கும் குறிப்பினால் உணர்த்தினான். கபால மாலைகளோடும் புலிப்பற்கள் போன்ற கோரப் பற்களைத் திறந்த வாயுடனும் அவர்கள் ஓடி வந்து சூழ்ந்து கொண்ட காட்சி மிகவும் குரூரமாக இருந்தது. வலையிலகப்பட்ட மீன்களைப் போல் இளையபாண்டியனும், முடிநாகனும் அந்தப் பைசாசங்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். திரிசூலங்களையும், வேல்களையும், கொலைக்கருவிகளையும் ஓங்கிக் கொண்டு அந்தக் கொடிய கூட்டம் தங்கள் மேல் பாய்ந்த போது அந்தத் தீவில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தபோது தன் காலில் இடறிய எலும்புக்கூடு நினைவிற்கு வரப்பெற்றவனாக நடுங்கினான் முடிநாகன். இளையபாண்டியனோ சிறிதும் அஞ்சாதவனாக ஏதோ ஒரு நம்பிக்கையினால் திடம் கொண்டவனைப் போல் அவர்களிடையே இருந்தான். அவர்கள் இளையபாண்டியனையும், முடிநாகனையும், வேட்டையாடிய விலங்குகளையோ, வலையில் விழுந்துவிட்ட மீன்களையோ இழுத்துச் செல்வது போலத் தங்கள் தலைவனிடம் இழுத்துச் சென்றனர்.

சுற்றிலும் கபாலங்கள் அடுக்கிய குருதிநிறப் பாறை ஒன்றில் முரட்டுச் சிங்கத்தைப் போல் கம்பீரமாக அமர்ந்திருந்தான் கொடுந்தீவின் தலைவன். அவனருகிலே நெருங்கி நிற்கவும் முடியாமல் முடைநாற்றமும், மாமிச வாடையும் வீசியது. அவனுடைய கண்கள் நெருப்புக் கோளங்களைப் போல் சிவந்து உருண்டன. மீசையோடு கூடிய அந்த முகம் பயமுறுத்துவதாக இருந்தது. இளையபாண்டியனையும், முடிநாகனையும் ஏதோ குற்றம் செய்தவர்களை விசாரிக்கக் கொண்டு போய் நிறுத்துவது போல் தலைவன் முன் நிறுத்தினார்கள் கொலை மறவர்கள்.

அதற்கு முன்பு சிறிது நேரம் வரை வெறிக்குரல்களும் ஆரவாரமுமாக இருந்த அந்தக் கூட்டத்தினர் தங்கள் தலைவனுக்கு முன்னால் வந்ததும் ஏதோ கோவிலுக்கு முன் தொழ வந்தவர்கள் பயபக்தியினால் கட்டுண்டு நிற்பதுபோல் அமைதியடைந்து நின்றார்கள். இளையபாண்டியன் அந்த நிலையில் மிகவும் சமயோசிதமான ஒரு காரியத்தைச் செய்தான். கொலை மறவனுடைய தலைவனிடம் அவர்களுடைய மொழியில் நலம் விசாரித்தான். அந்தத் தலைவனைச் சந்திக்க நேர்ந்ததற்காகத் தான் பெரிதும் மகிழ்வதாகவும் அந்தத் தீவைக் காண கொடுத்து வைத்ததற்காகக் களிப்பதாகவும் அவர்களுடைய மொழியில் தன்னுடைய இனிய குரலில் இனிய யாழ் மிழற்றுவதுபோல் இளையபாண்டியன் பேசத் தொடங்கியதும் கொலை மறவர் தலைவனின் குரூரமான முகத்தில் சிறிதே மலர்ச்சி பிறந்தது. கண்களில் ஒளி மின்னியது. அந்த நல்ல விளைவை உடனே மேலும் மேலும் வளர்த்து உறுதி செய்து கொள்ள விரும்புகிறவனைப் போலக் கொலைமறவர் தலைவனைப் புகழ்ந்து கூறும் பொருளமைந்த பாடல் ஒன்றை அமைத்துத் தன்னுடைய அரிய இனிய குரலில் பாடவும் தொடங்கிவிட்டான் சாரகுமாரன்.

அந்தக் குரலும், அந்த இசையமைதியும், அந்தப் பாடலும் அவர்களை வசியம் செய்வதுபோல் மயக்கின. கொலைமறவர் தலைவன் சிறு குழந்தை போல் உற்சாகமும் மயக்கமும் அடைந்தான். இசையில் தான் புகழப்படுவதைக் கேட்டு அவன் குழைந்து போனான். அப்படி இசையை அவனோ அல்லது அவனைச் சேர்ந்தவர்களோ அதுவரை கேட்டதே இல்லை. கல்லைப் போல் இறுகிக் கடினமாயிருந்த அவனுடைய ஈவு இரக்கமற்ற மனத்தில் அந்த இசையும், புகழ்ச்சியும், தன் மொழியில் எதிரி பேசக் கேட்ட வியப்பும் மாபெரும் மாறுதல்களை விளைவித்திருந்தன. அடுத்தகணம் அவன் செய்த காரியம் சுற்றியிருந்த எல்லாக் கொலைமறவர்களையும் வியப்பிலாழ்த்தியது. தங்கள் தலைவனிடம் இப்படி ஒரு பெரிய மாறுதலை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
24. புதிய இசையிலக்கணம்


இரண்டுவிதமான இசைகளால் கொடுந்தீவுக் கொலை மறவர்களையும் அவர்கள் தலைவனையும் சாரகுமாரன் வசப்படுத்தினான். பாடலுக்கும், புகழுக்கும், சேர்த்தே இசை என்று இசைவாகத் தமிழில் பெயர் சூட்டியவர்களை வாயார வாழ்த்தினான் அவன். திரும்பத் திரும்ப மீட்டினாலும், பாடினாலும் கேட்பவனுக்குச் சோர்வு தராமல் அவனை வசீகரம் செய்யும் இசையைப் போலத் திரும்பத் திரும்பச் சொல்லிப் புகழ்ந்தாலும் சொல்லப்படுகிறவனை வசீகரிப்பது என்ற காரணத்தால் தான் புகழும் இசைப்பெயர் பெற்றிருக்க வேண்டுமென்று சிந்தித்தான் சாரகுமாரன்.

அந்த தீவின் பாறைகளில் ஏறிக் கபாலங்களையும் உடைந்த எலும்புகளையும் பார்த்துக் கொண்டே நுழைந்த போது ஏற்பட்டிருந்த திகிலும், நடுக்கமும் இப்போது முடிநாகனிடம் இல்லை. மனிதனின் கல்மனத்தையும் இளகச் செய்து கருணைமயமாகச் செய்யும் அபூர்வமான ஆற்றல் இளைய பாண்டியருடைய குரலுக்கு இருப்பதைப் பல சமயங்களில் உணர்ந்திருந்தாலும் இன்று அதை மிக அதிகமாக உணர்ந்தான் முடிநாகன். மொழியும், பொருளும் மனிதனுக்குரிய நாகரிக உணர்வுகளும் சிறிதேனும் புரியாத ஒரு கொடிய காட்டுக் கூட்டத்தைக்கூட வசப்படுத்திவிட முடிந்த அந்தக் குரலுக்குரிய சாரகுமாரனைத் திடீரென்று அந்நியமாக விலக்கி ஒரு கலைஞனுக்குரிய உயரத்தில் வைத்துச் சிந்தித்த போது முடிநாகனின் வியப்பு எல்லையற்றதாயிருந்தது.

கொடுந்தீவு மறவர் தலைவன் தனக்குச் சமமாக இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும், அமர்வதற்கு இருக்கைகள் அளித்தான். காவியேறிய கோரப்பற்களைத் திறந்து இளையபாண்டியனை நோக்கி அவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அடையாளமாக நகைத்த நகையே பயங்கரமாக இருந்தது. தங்கள் வழக்கப்படி ஊனும், கள்ளும் கொடுத்து இளையபாண்டியனையும், முடிநாகனையும் உபசரிக்கத் தொடங்கினான் அவன். இளையபாண்டியனும், முடிநாகனும் அவற்றை உண்ணவும் பருகவும் அருவருத்ததைக் கண்ட அவன் விதம் விதமான தோற்றங்களையும் வேறு வேறு நிறங்களையும் உடைய பல கனிகளை வரவழைத்து அவர்கள் இருவருக்கும் அளித்தான்.

"ஏதோ மந்திரத்தால் எங்களையெல்லாம் வசியப்படுத்தி விட்டாய்" என்று பண்படாத தன் மொழியில் இளையபாண்டியனைப் புகழத் தொடங்கினான் அந்தக் கொடுமறவர் தலைவன். தான் பாடியது இசை என்றும் அது ஒரு கலை என்றும் இளையபாண்டியன் அவனுக்கு விளக்க முயன்றதெல்லாம் வீணாயிற்று. அவனோ விடாப்பிடியாக அதை மந்திரம் என்றே புகழ்ந்தான். அந்தக் கொடிய மனிதனிடம் அவன் கூற்றை அதிகமாக முனைந்து மறுக்க முயல்வதுகூடப் பகைமையை உண்டாக்குமோ என்ற தயக்கத்தில் பேசாமலிருந்து விட்டான் இளையபாண்டியன். பரிசுகள் என்ற பெயரில் மிருகங்களின் கொம்புகளினாலும் தோலினாலும் செய்த பல விநோதமான பொருள்களை இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் அளித்தான் அந்தத் தீவின் தலைவன். அவற்றை மறுக்காமல் இருவரும் ஏற்றுக் கொண்டனர்.

கொடிய முரட்டு மனிதர்களிடம் அவர்களது அன்பையும், உபசரிப்பையும், மதியாதது போல் அசிரத்தையாக நடந்து கொண்டாலும் நல்ல விளைவு இருக்காது. அன்பைக் கூட அதிகாரத்தோடு பயமுறுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்கிற மனிதர்கள் உண்டு. அந்த அதிகாரத்தையும், பயமுறுத்தலையும் இலட்சியம் செய்யாததுபோல் இருந்தால்கூட அப்படிப்பட்டவர்களுக்கு உடனே விளைகிற கோபம் பயங்கரமானதாக இருக்கும். எதற்கும் தயங்கமாட்டார்கள் அவர்கள். அதிகாரம் செய்யாமலோ, பயமுறுத்தாமலோ அன்பைக்கூட அவர்களால் செய்ய முடியாது. இந்த இயல்பை நன்றாகப் புரிந்து கொண்டு இளையபாண்டியனும் முடிநாகனும் நடந்து கொண்டார்கள். அந்தக் காட்டுமனிதர்களின் உண்டியும் ஆடலும் கூத்தும், குரவையும், விடிய விடிய நடந்தன. விடிகிற நேரத்துக்கு உறக்கம் சோர்ந்த விழிகளோடு அந்தத் தீவின் தலைவனிடம் விடைபெற நின்றார்கள் அவர்கள். அவனோ தன் கூட்டத்தாரோடு கரை வரை வந்து அவர்களை வழியனுப்பச் சித்தமாயிருந்தான்.

விகாரமான கூக்குரல்களுடனும், கோலங்களுடனும் உடன் வரும் அந்தக் காட்டுக் கூட்டத்தோடு நடந்து செல்வதே விரும்பத்தகாததாக இருந்தது. இறுதியாக அவர்களுக்கு விடைகொடுக்கும் போது கூட அந்தக் காட்டுத் தீவின் தலைவன், "இங்கு வந்து உயிருடன் தப்பிச் செல்கிற மானிடர் அரிதினும் அரியவர். நீ ஏதோ உன் குரலினால் எங்களுக்கு மந்திரம் போட்டுவிட்டாய். அதனால் தான் உன்னைக் கொல்லத் தோன்றவில்லை" என்று மறுபடியும் கூறினான். "மறுபடி எப்போதாவது இந்தப் பக்கம் வந்தால் எங்களைப் பார்த்து மந்திரம் போட்டுவிட்டுப்போ" என்று அவன் கூறியதைக் கேட்டுக் கொண்டே பாறைகளில் கீழிறங்கிக் கப்பலை நோக்கி விரைந்தார்கள். அவர்கள் கப்பலில் ஏறினபின்பே இருவரும் சுபாவமாக மூச்சுவிட முடிந்தது. 'அந்தத் தீவிலிருந்து உயிர்தப்பிக் கப்பலேறிவிட்டோம்' என்பது அவ்வளவிற்கு நம்பமுடியாதபடி இருந்தது. கப்பல் புறப்பட்டதும் முடிநாகன் இளையபாண்டியனை வியந்து புகழ்ந்து உரைக்கலானான்:

"இளையபாண்டியரே! நீங்கள் பாடுகிற இசைக்கென்றே புதிய இலக்கணம் ஒன்று இனிமேல் உண்டாக்க வேண்டும். பழைய இசையிலக்கணம் உங்களுடைய கலையின் எல்லையற்ற நயங்களை எல்லாம் வகுத்துக் கூறுகிற அளவு விரிவானதோ வகையானதோ அன்று. எனவே சிகண்டியாசிரியரைப் போன்ற இசை வல்லுநர்கள் உங்களை மனத்திற்கொண்டே ஒரு புதிய இசையிலக்கணம் காணவேண்டும். ஒன்றும் புரியாத காரணத்தால் இந்தக் கொடுந்தீவின் தலைவன் இதை மந்திரம் என்று புகழ்ந்தானே; அது முற்றிலும் பொருத்தமானதுதான். ஏனென்றால் மந்திரம் தான் இத்தகைய சாதனைகளைச் சாதிக்க முடியும். ஆயுதங்களைக் கொண்டே மனிதர்களை வெல்லமுடியும் என்று நேற்றுவரை நம்பி வந்தவன் நான். கலைகளின் உயர்ந்த பக்குவத்திலும் மனிதர்களை வெல்லமுடியுமென்பதை நேற்று நள்ளிரவு நிரூபித்துவிட்டீர்கள் நீங்கள்" என்றான் முடிநாகன்.

இளையபாண்டியனோ இந்தப் புகழ்ச்சிக்கு மறுமொழி ஏதும் கூறாமல் புன்முறுவல் பூத்தபடி இருந்தான். கப்பல் விரைந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பகுதியை விரைந்து கடந்து மேலே சென்றுவிட வேண்டும் என்று அவர்கள் ஊழியர்களுக்குக் கட்டளை இட்டிருந்தார்கள். தப்பிவிட்டாலும் எங்கே எந்தத் தீமை காத்திருக்குமோ என்ற முன்னெச்சரிக்கையும் பயமும் இன்னும் அவர்களை விட்டபாடில்லை. ஐந்தாறு நாழிகைப் பயணத்திற்குப் பின் மறுபடி அவர்கள் ஒரு சிறிய தீவை அடைந்தார்கள். இறங்கிச் சுற்றிப் பார்த்ததில் அந்தத் தீவில் மனிதர்களே இல்லையென்று தெரிந்தது. "பன்னீராயிரக்கணக்கான பழந்தீவுகள் இந்தத் தென்கடலிலும், மேற்குப் பகுதியிலும் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்று தங்கள் பாட்டனார் அடிக்கடி கூறுவார். இவை எல்லாவற்றிலுமே வளமோ வழக்காறுகளோ, வாழ்க்கையோ ஒரே விதமாக இருப்பதில்லை. இந்தத் தீவைப் போல் சிலவற்றில் வாழ்க்கையே இல்லை. ஆயினும் இவற்றைச் சுற்றிப் பார்ப்பதால் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களையே தங்கள் பாட்டனார் பெரிதாக மதிக்கிறாரென்று தெரிகிறது" என்றான் முடிநாகன்.

அன்று மாலை இருள் சூழுகிறவரை மேலும் பல தீவுகள் ஆளரவமற்ற மயானம் போல் குறுக்கிட்டுக் கழிந்தன. இருட்டுகிற வேளைக்குக் 'கற்பூரத்தீவு' எனப்படும் பசுமையான தீவுக்கு வந்து சேர்ந்தனர் அவர்கள். அந்தத் தீவின் இன்னொரு விநோதம் தீவில் ஆண்மக்களே அதிகம் இல்லை; அவ்வளவு பெரிய தீவில் இரண்டு பேரோ, மூன்று பேரோ மட்டுமே ஆண்மக்கள் இருப்பதாக அவர்கள் கேள்விப்பட்டனர். அந்த இருவரையும் அவர்கள் தங்கள் கண்களால் பார்க்கவில்லை. கற்பூரத்தீவும் ஒரு விந்தையாகவே இருந்தது. அந்தத் தீவின் பெண்மக்களே வில்லும் அம்பும் எடுத்துக் குறிபார்த்து எய்வதில் வல்லவர்களாக இருந்தனர் என்பதையும் அவர்கள் கண்டனர்.

கற்பூரத் தீவின் பெண்கள் அவர்களை ஏதோ அபூர்வ விலங்குகளைப் பார்ப்பதுபோல் வெறித்து வெறித்துப் பார்த்தனர். குறிப்பிடத்தக்க எந்தப் பயமும் அந்தத் தீவிலே இல்லை. மறுநாள் பொழுது விடிந்து அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது கரையில் அந்தத் தீவின் பெண்கள் கூட்டமெல்லாம் ஏதோ விநோதத்தைக் காண்பதுபோல் கூடிவிட்டது. மறுநாள் பயணத்தின் போது தங்கச் சுரங்கங்கள் நிறைந்த ஆடகத்தீவு குறுக்கிட்டது. ஆனால் அந்தத் தீவில் அவர்கள் இருவரையும், அவர்கள் கப்பலையுமே அருகில் கூட வரவிடாமல் தடுத்துவிட்டார்கள். தங்கத் தீவுக்காரர்கள் அந்நியர் வரவையே தடை செய்திருந்தனர். யாரும் தீவையே நெருங்கிவிடாதபடி சுற்றிலும் போர் மரக்கலங்களை வீரர்களோடு காவலுக்கு நிறுத்தி வைத்திருந்தனர். ஆடகத் தீவில் இறங்கிப் பார்க்க வேண்டுமென்று இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் எவ்வளவோ ஆசையிருந்தும், அது முடியவில்லை. உடனே நிராசையோடு முடிநாகன் கூறலுற்றான்:

"இந்தத் தீவுகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பெரும் கடற்படையெடுப்பின் மூலம் இவற்றை வென்று பாண்டிய நாட்டின் கீழே அடக்கிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று தங்கள் பாட்டனாருக்கு ஆசை இருக்கிறது. அந்த ஆசை தங்கள் காலத்திலாவது நிறைவேறுமோ என்ற நம்பிக்கையில்தான் இப்படியெல்லாம் உங்களைப் பயணம் அனுப்பியிருக்கிறார். ஆனால் தனிப்பட்ட ஒரு முழுப் பேரரசையே வெற்றி கொண்டாலும் கொள்ளலாமே தவிர இப்படிப்பட்ட தனித்தனித் தீவுகளை வென்று சேர்ப்பது என்பது அசாத்தியமானது."

"கொடுந்தீவுத் தலைவனை இசையினால் வென்றதுபோல எல்லோரையும் வெல்ல முடியுமானால் வெல்லலாம்" என்று சிரித்துக் கொண்டே முடிநாகனுக்கு மறுமொழி கூறினான் இளையபாண்டியன். இளையபாண்டியனுடைய மனம் கலைவிநோதப் பான்மையுடையதாகவே இருப்பதை இந்த மறுமொழியின் மூலம் முடிநாகன் உணர முடிந்தது. பெரிய பாண்டியரும், வெண்தேர்ச் செழியரும் இராஜரீக உணர்வுகளையே கலைகளாகக் கருதுகிற நிலையில் இளையபாண்டியர் இசை போன்ற கலைகளையே ஒரு தனி சாம்ராஜ்யமாகக் கருதுகிற பக்குவத்திற்கு அவருடைய ஆசிரியர்கள் அவரை வளர்த்துவிட்டிருப்பது நன்றாக விளங்கியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
25. மீண்டும் கபாடம் நோக்கி


தொடர்ந்து ஒரு திங்கள் காலம் தென்பழந்தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து பல தீவுகளையும், பலவிதமான மனிதர்களையும், பலவிதமான பழக்கவழக்கங்களையும் பலவிதமான ஒழுகலாறுகளையும் அறிந்து முடித்த பின்னர் கபாடபுரம் நோக்கிப் பயணம் திரும்ப முடிவு செய்தார்கள் அவர்கள். சில இடங்களில் மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். சில தீவுகளில் சாதுரியமாகத் தங்களை யாரென்று இனங்காட்டிக் கொள்ளாமலே தப்பிக் கரைசேர வேண்டியிருந்தது. இன்னும் சில தீவுகளில் ஒரு பற்றுமற்ற துறவிகளைப் போல நடிக்க வேண்டியிருந்தது. இப்படிப் பல துறையான அனுபவச் செல்வங்களைப் பெற்று முடிந்த மனநிறைவோடு திரும்பிய போது இளையபாண்டியனும், முடிநாகனும், கப்பல் ஊழியர்களும் கபாடபுரத்தை விரைந்து சென்று காணும் ஆர்வமும், மனவேகமும், பிரிவுணர்ச்சியும் உடையவர்களாயிருந்தனர்.

எனவே திரும்பும் காலையில் எந்தத் தீவிலும், அதிகமாகத் தங்காமல் அவசியமான சில தீவுகளில் மட்டும் தங்கி விரைந்து ஊர் திரும்பத் தொடங்கியிருந்தனர். ஒரே மூச்சாகப் பயணத்தைத் தொடர முடியாமல் அங்கங்கே அவசியமான சில இடங்களில் நிறுத்தி உணவுப் பொருள் முதலிய தேவைகளை மரக்கலத்தில் நிறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இல்லையானால் எங்கும் நிறுத்தாமலே பயணத்தைத் தொடர்ந்திருப்பார்கள். ஊழியர்கள் மிகவும் சோர்ந்து களைத்துப் போயிருந்தார்கள். எப்பொழுது கரைசேரப் போகிறோம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் அவர்கள். முடிநாகனும் இளையபாண்டியனும் ஒருவருக்கொருவர் ஆர்வத்தை மனம் விட்டுக் கூறிக்கொள்ளவில்லை என்றாலும் ஊழியர்களை ஒத்த அதே மனநிலையில் தான் இருந்தனர். தென் பாண்டி நாட்டுக் கரை நெருங்க நெருங்க அவர்கள் ஆர்வம் அதிகமாயிற்று. "யார் யாரிடம் எந்த எந்த அனுபவத்தை விவரித்துச் சொல்ல வேண்டும் என்பதில் இளையபாண்டியருக்கு அதிகக் கவனம் வேண்டும். பாட்டனாரிடம் இசையினால் கொடுந்தீவு மறவர்களின் மனத்தை மாற்றி வெற்றி கொண்ட நிகழ்ச்சியைக் கூறக்கூடாது. எயினர் தீவின் கலஞ்செய் நீர்க்களத்தின் நுணுக்கங்களை அறிய மேற்கொண்ட இராஜதந்திர நிகழ்ச்சிகளைப் பெரியபாண்டியரிடம் கூறினால் நாம் அவர்களை இசையால் மயக்கியது கோழைத்தனம் என்று கருதுவார் அவர். அதனால் தான் கவனமாயிருக்க வேண்டும் என்றேன்" என்றான் முடிநாகன். இளையபாண்டியனும் அவன் கூற்றை மறுக்காமல் ஒப்புக் கொண்டான்.

பொருநை முகத்துவாரத்தை ஒட்டினாற்போலிருந்த சிறுதுறைமுகத்தை நெருங்கி மரக்கலம் நங்கூரம் பாய்ச்சப்படுகிற நிலையை அடைந்தபோது சொந்த மண்ணில் இறங்கப் போகிறோம் என்ற ஆர்வம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. துறையில் இருந்தவர்களும், துறை ஊழியர்களும் ஆர்வத்தோடு இளையபாண்டியரின் மரக்கலத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். செய்தியை அரணமனையிலுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஒருவன் அரண்மனைக்கு விரைந்தான்.

துறைமுகம் எங்கும் இளையபாண்டியர் திரும்பி வந்து விட்ட செய்தி ஒரு பரபரப்பையே உண்டாக்கியிருந்தது. துறையிலிருந்த வீரர்கள் ஓடோடிச் சென்று இளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குச் செல்வதற்காக இரண்டு குதிரைகளை ஆயத்தம் செய்து கொண்டு வந்து நிறுத்தினர். அரண்மனை வாயிலில் தாய் திலோத்தமை இளையபாண்டியனுக்கு ஆரத்தி சுற்றித் திலகமிட்டு வரவேற்றாள். முதியபாண்டியர் ஆர்வத்தோடு அவனைத் தழுவிக் கொண்டு சில விநாடிகள் தன் பிடியிலிருந்து விடவே இல்லை. தந்தை அநாகுலனுக்கோ, தாய் திலோத்தமைக்கோ, மகனிடம் அளவளாவிப் பேச நேரமே அளிக்காமல் முதிய பாண்டியரே அவனைத் தம்மோடு அழைத்துக் கொண்டு போய்விட்டார். முடிநாகனும் உடன் சென்றிருந்தான். முதிய பாண்டியருடைய மந்திரக்கிருகத்தில் சிகண்டியாசிரியரும், அவிநயனாரும் கூட இருந்தனர். சிகண்டியாசிரியரைப் பார்த்தவுடனே அந்தக் கொடுந்தீவு அனுபவத்தைக் கூறுவதற்கு நா முந்தியது! ஆனால் பாட்டனாரும் உடனிருப்பதை எண்ணி அந்த உணர்வை அடக்கிக் கொண்டான் இளையபாண்டியன். முதிய பாண்டியருடைய வினாக்களுக்கும், குறுக்கு வினாக்களுக்கும் தடுமாறாமல் மறுமொழி கூறி அவருடைய மனத்திருப்தியைச் சம்பாதிப்பது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது. நல்ல வேளையாக முடிநாகனும் உடனிருந்தது ஓரளவுக்கு உதவியாக இருந்தது.

"எந்தத் தீவிலாவது குறிப்பாகத் தென்பாண்டி நாட்டின் மேலும், கபாடபுரத்தின் மேலும் முறுகிய பகை இருக்கிறதா?"

"பகை என்பதையே வேறு விதமாகவும் சொல்லலாம். நட்பும், விருப்பமும் இல்லை என்பதே பகையின் அடையாளம்தான். அந்தத் தீவிலுள்ளவர்கள் அவரவர்கள் தலைவனையே தங்கள் கடவுளாக வீர வணக்கம் புரிகிறார்கள். ஆடகத் தீவில் எங்களைத் துறையிறங்கவே விடாமல் மறுத்துவிட்டார்கள். எயினர் தீவில் கலங்கட்டும் தளத்தைக் காண்பித்து முடித்தபின் எங்கள் மேல் கடும் சந்தேகமுற்றுப் பல சோதனைகள் வைத்தார்கள். அவர்களை மீறித் தப்பி மேலே செல்ல நாங்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது."

"நமது கடற்படையை வலிமையுடையதாக்கி எப்போதாவது இந்தத் தென்பழந்தீவுகளை எல்லாம் கைப்பற்றி அடக்கிப் பாண்டி நாட்டினோடு சேர்க்க முயன்றால் வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? உன் கருத்து என்ன?" என்று முதியபாண்டியர் கேட்டபோது அதற்கு இளையபாண்டியன் மறுமொழி கூறத் தயங்கி இருந்தான். ஆனால் முடிநாகன் உடனே முன் வந்து, "முதியபாண்டியர் திட்டமிட்டு யோசனை கூறிச் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்று உறுதியான குரலில் கூறினான். மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு முதியபாண்டியர் விடை கொடுத்தார்.

உடனே சிகண்டியாசிரியர்பால் சென்றான் சாரகுமாரன். சிகண்டியாசிரியரிடம் கொடுந்தீவில் தனக்கு ஏற்பட்ட இசை அனுபவத்தை அவன் கூறியபோது அவர் வியந்தார். இசையின் விந்தைகளில் இது ஒரு புதிய சாதனை என்று கூறி அங்கு நிகழ்ந்ததைப் பற்றி விவரமாகக் கூறச் செய்து மீண்டும் கேட்டார். கேட்டவர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். ஏதோ பெரிய காரியத்துக்கான சிந்தனை அவர் மனத்தில் உருவாகிறது என்பதை முகபாவத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

"இசைத்துறையில் ஒரு புதிய ஆராய்ச்சி செய்ய இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கம்! உன் வாழ்விலும் இதனால் ஒரு புதிய பெரும்பயன் விளையப் போகிறது பார்" என்று சிறிது நேரத்தில் வியந்து கூறினார் சிகண்டியாசிரியர். சாரகுமாரனுக்கு அதைக் கேட்டு மெய்சிலிர்த்தது.

"மந்திரம் என்று அந்தக் கொடுந்தீவு மறவன் உன்னுடைய இசையைப் புகழ்ந்தது ஒருநாளும் வீண்போகாது பார்!" என்று மேலும் சிகண்டியாசிரியர் உற்சாகமாகக் கூறியபோது இளையபாண்டியனுக்கு மறுபடி மெய்சிலிர்த்தது. தன் வாழ்வில் இந்த நிகழ்ச்சி ஏதோ பெரிய மாறுதலை ஏற்படுத்தப்போகிறது என்பது போல் தனக்குத்தானே ஓர் உள்ளுணர்வு அவனுள் விகசித்து மலர்ந்தது. அந்த உணர்வு ஆத்மபூர்வமானதாகவும் இருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
26. சிகண்டியாசிரியர் மனக்கிளர்ச்சி


சிகண்டியாசிரியரிடம் இசையைப் பற்றிய பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருந்த போதே சாரகுமாரனுக்குக் கண்ணுக்கினியாளின் ஞாபகம் வந்தது. பழந்தீவுப் பயணத்தை எதிர்பாராதவிதமாக மேற்கொள்ள நேர்ந்திருந்ததனால் அவளை நீண்ட நாட்களாகச் சந்திக்க முடியாமற் போய்விட்டது. நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரம் வந்த அந்த இசைக் குடும்பம் இவ்வளவு நாட்கள் அங்கே தங்கியிருக்கிறதோ, அல்லது வேறு ஊர்களுக்குப் பெயர்ந்து போய்விட்டதோ என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. விழாவுக்காக வந்திருந்த பாணர்களும், விறலியர்களும், கூத்தர்களும் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவர்கள் இருக்கிறார்களா, புறப்பட்டுவிட்டார்களா என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினான் அவன். என்ன காரணத்தினாலோ சாரகுமாரனுடைய மனத்தில் இசையின் நுணுக்கங்களைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம் இன்றியமையாதவளாக அவளும் நினைவு வந்தாள்.

அக்கம்பக்கத்துத் தீவுகளையும் நாடுகளையும் வென்று பாண்டியப் பேரரசை வலிமையாக்கும் போர்வீரனாக அவனை எதிர்பார்த்தார் பாட்டனார் வெண்தேர்ச்செழியர். அவன் இதயமோ அவனை உலகறியாமல் உள்ளூறக் கலைவீரனாக இசைவீரனாக வளர்த்துக் கொண்டிருந்தது. இணையற்ற அழகியும், நவீன கலைகளில் பெருவிருப்பமுடையவளும், குரலினிமைமிக்கவளுமாகிய தன் தாய் திலோத்தமையைக் கொண்டு வளர்ந்து விட்டான் அவன். தந்தை அநாகுலனின் போர்வலிமையோ பாட்டனார் வெண்தேர்ச்செழியரின் அரசதந்திரச் சூழ்ச்சிகளோ அவன் இதயத்தோடு ஒட்டவேயில்லை. சிகண்டியாசிரியருக்கு இந்த உண்மை புரிந்த அளவிற்குப் பாட்டனார் வெண்தேர்ச் செழியருக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ வேறு யாரிடமுமே இசைக்கலையைப் பற்றிய தன் ஆர்வங்களையும், அந்தரங்கங்களையும் தெரிவிக்காத அளவு சிகண்டியாசிரியரிடம் மட்டும் தெரிவித்திருந்தான் சாரகுமாரன்.

இசைக் கலையின் மேல் அந்தரங்கமாக அவனுள் உறங்கிக் கிடந்த காதல் கண்ணுக்கினியாளைச் சந்தித்தபின் விழித்துக் கொண்டுவிட்டது. அவளைப் பார்க்கத் தவித்த போது இசையைப் பாடவும் தவிர்த்தான் அவன். இசையைப் பாடத் தவித்தபோது அவளைப் பார்க்கவும் தவித்தான். இசைக்கும் காதலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். இசையிலே காதல் பிறக்கிறது அல்லது காதலிலே இசை கனிகிறது. மனிதன் இன்னொன்றின் மேல் செலுத்தும் அளவற்ற பிரியத்தின் உருவகம் தான் இசையோ என்னவோ?

பழந்தீவுகளில் பயணம் செய்து திரும்பிய மறுநாள் வைகறையில் - முடிநாகனின் துணையும் கூட இல்லாமல் - உலாவச் சென்று வருவது போல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கம் சென்றான் சாரகுமாரன்.

இருள் பிரியாத வைகறை வேளையில் யாரையோ நிரந்தரமாகப் பிரிந்துவிட்டாற்போல ஓலமிடும் கடல் அலையோசையும், குளிர்ந்த காற்றும் மனத்திற்குள் ஓடும் நினைவின் விரைவிற்கேற்ப விரையும் புரவிப் பயணமும், மிகவும் இரம்மியமாயிருந்தன. அந்த வேளையில் யாருடைய கவனத்தையும் கவராமல் தனிமையாகவும் தன்னிச்சையாகவும் அரண்மனையை விட்டுப் புறப்படுவது கூடச் சுலபமான காரியமாயிருந்தது அவனுக்கு. கடற்கரைக் காற்றில் வெண்பட்டு விரித்தாற் போன்ற மணல் வெளியில் புரவி சென்றபோது சுகமாயிருந்தது.

புன்னை மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. எப்போதாவது தற்செயலாகக் கீழே உள்ள நீரில் உதிரும் புன்னைக்காய் வாத்தியம் வாசிப்பது போன்றதொரு ஒலியை எழுப்பி ஓய்வதும் செவிக்குச் சுகமானதாயிருந்தது. இன்னும் சிறிது தொலைவு சென்றபின் அதைவிடச் சுகமான நாதம் ஒன்று உயிரின் குரலாகவே காற்றுடன் உலவி வந்து அவன் செவிகளில் எட்டலாயிற்று 'சோகத்தை இப்படியும்கூட இசையினால் பேசமுடியுமா?' என்று இளையபாண்டியனை வியக்கச் செய்யும் குரலாயிருந்தது அது. அந்தக் குரலில் புதிது புதிதாக மெருகேறியிருந்த நுணுக்கங்களையும், அழகுகளையும், நளினங்களையும் இணைத்து எண்ணியபோது அது வேறாகத் தோன்றியதே தவிரக் கூர்ந்து செவிமடுத்தபோது குரல் அவனுக்குப் பழகியதாகவே இருந்தது.

அருகில் நெருங்க நெருங்கக் குதிரையிலிருந்து கீழே இறங்கி அந்தக் குரல் வரும் வழியிலே ஓடவேண்டும் போல் அத்தனை ஆர்வமாயிருந்தது அவனுக்கு. அப்படியே செய்தான் அவன். புன்னை மரத்தடியில் அமர்ந்து குனிந்து மணற்பரப்பை நோக்கியவாறு கண்ணுக்கினியாள் தான் பாடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த உலக நினைவே இல்லை போல் தோன்றியது. அருகில் நெருங்கிச் சென்றால் அவளுடைய பாடலை எங்கே நிறுத்திவிடுவாளோ என்ற தயக்கத்தினால் விலகியே நின்றான் இளையபாண்டியன். நெய்தற் பண்ணை இத்தனை உருக்கமாகவும் இசைக்க முடியும் என்பதை இன்றுதான் அவனால் உணர முடிந்தது. மொழியில் இசையும் ஒரு பிரிவு என்பதைவிட இசையே ஒரு தனிமொழி என்று தனித்து பிரித்துச் சிறப்புக் கொடுத்துவிடலாமென்று இப்போது தோன்றியது அவனுக்கு.

தான் நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு வைகறையில் இதே கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளைச் சந்தித்த போதும் அவள் இந்த நெய்தற் பண்ணையே பாடிக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தான் அவன். அதே நெய்தற்பண் இப்போது இன்னும் நன்றாக கனிந்திருந்தது. சோகம் இசையாக வரும்போது இன்பத்தையல்லவா கொடுக்கிறதென்ற விந்தையான சிந்தனையில் ஈடுபட்டான் அவன். சிறிது நாழிகையில் அவளுடைய பாட்டு நிறைந்தது. நிறைந்த பின்பும் அவளுடைய குரல் செவிகளையும் காற்று வெளியையும் விட்டு அகலாமல் அப்படியே நித்திய சங்கீதமாக நிலைத்துவிட்டது போல் ஓர் இனிய பிரமையை நிலவச் செய்திருந்தது. 'சிலருடைய இசைக்காக இலக்கணங்கள் படைக்கப்பட்டுள்ளன. வேறு சிலருடைய இசையோ இலக்கணங்களையே புதிது புதிதாகப் படைக்கிறது' என்று அவளுடைய இசையைக் கேட்டு நினைத்தான் சாரகுமாரன்.

அவ்வளவில் தலை நிமிர்ந்த அவள் அவன் அங்கு வந்து நிற்பதைப் பார்த்துவிட்டாள். உடனே எழுந்து சீற்றத்தோடு முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்ட அவளை எப்படி ஆற்றுவிப்பதென்று அவனுக்குத் தயக்கமாயிருந்தது.

"எப்போது பாடினாலும் நெய்தற் பண்ணையே பாடுகிறாயே? அவ்வளவு பெரிய நிரந்தரமான சோகம் என்னவோ?" என்று பேச்சைத் தொடங்கினான் அவன்.

அவளிடமிருந்து மறுமொழி இல்லை. சில விநாடிகள் மௌனமாகவே நின்றாள் அவள். மறுபடியும் அவனே பேசினான்.

"சிலருடைய குரலுக்குச் சோகமே அழகாக இருக்கிறது..."

"சிலருடைய செயல்கள் சோகத்தையே பிறர்க்குத் தருவதால் தானோ என்னவோ?" என வெடுக்கென்று மறுமொழி கூறினாள் அவள்.

"நீ சீற்றமடைந்து பயனில்லை கண்ணுக்கினியாள்! எதிர்பாராதவிதமாக என் பாட்டனார் என்னைப் பழந்தீவுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டார். உன்னிடம் விடைபெறவும் முடியவில்லை. எங்கே நீயும் உன் குடும்பத்தினரும் கபாடபுரத்தை விட்டே ஊர் பெயர்ந்து போயிருப்பீர்களோ என்ற பயத்துடனேயே இப்போது இங்கு தேடி வந்தேன்..."

"பிறரைப் பயப்பட வைப்பவர்கள் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?"

"நீ கூறுவது தவறு! நான் யாரையும் பயப்பட வைக்கிறவனில்லை..."

"இருந்தாற்போலிருந்து மறைகிறவர்களும் - இருந்தாற் போலிருந்து தோன்றுகிறவர்களும் பயப்பட வைக்கிறவர்கள் தாமே?"

"சந்தர்ப்பம் அப்படி நேர்ந்துவிட்டது! அது என் தவறில்லை" என்று கூறிய இளையபாண்டியன் எயினர் தீவின் இயற்கையழகைக் கண்ட வேளையில் அவளை நினைவு கூர்ந்ததையும், பிற பயண அநுபவங்களையும் தொடர்ந்து கூறலானான். அவன் கூறியவற்றைக் கேட்கக் கேட்க அவள் சினம் சிறிது சிறிதாக அடங்கியது.

"இன்னும் ஒரு திங்கள் காலத்தில் இங்கிருந்து புறப்பட வேண்டுமென்று என் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்" என்றாள் அவள். அவள் குரலில் கவலை ஒலித்தது.

"அதற்குள் எவ்வளவோ நடக்கும்" என்று புன்சிரிப்போடு அவளுக்கு மறுமொழி கூறினான் அவன். இப்படியே சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டுப் பிரிந்தார்கள் அவர்கள். மறுபடி அடுத்த நாள் அவளைச் சந்திப்பதாகக் கூறினான் அவன்.

அரண்மனை திரும்பியதுமே அவன் சிகண்டியாசிரியரைச் சந்தித்து அன்று வைகறையில் தான் கடற்கரையில் கேட்ட நெய்தற்பண்ணின் புது நயங்களை விவரித்தான்.

சிகண்டியாசிரியரும் அதனை ஆர்வத்தோடு கேட்டார்.

"இசையில் பல்லாயிரம் நுணுக்கங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி இயல்பை மீறிய அபூர்வத் திறமைகளை விளக்கும் புதிய இசையிலக்கணம் ஒன்றை நானே வரைவதாக இருக்கிறேன். அந்த மாபெரும் இசையிலக்கணத்தை இங்கேயே கோ நகரில் அரங்கேற்றவும் முடிவு செய்துள்ளேன்" என்று மனத்தில் ஏற்பட்ட புதுமைக் கிளர்ச்சியோடு அவனுக்கு மறுமொழி கூறினார் சிகண்டியாசிரியர். சாரகுமாரனும் அதைக் கேட்டு மகிழ்ந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
27. பெரியபாண்டியரின் சோதனை


கண்ணுக்கினியாளின் நெய்தற்பண்ணைப் பற்றிச் சாரகுமாரன் வியந்து கூறியதைக் கேட்டுச் சிகண்டியாசிரியரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவருடைய விருப்பத்தைச் சாரகுமாரனால் மறுக்க இயலவில்லை. மறுநாள் வைகறையில் சிகண்டியாசிரியரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான் அவன். ஆனால் முன் தினம் சென்றது போல் ஆசிரியரையும் உடன் அழைத்துக் கொண்டு அவனால் புரவியில் செல்ல முடியவில்லை.

எனவே அரண்மனை இரதம் ஒன்றில் ஆசிரியரை அழைத்துச் சென்றிருந்தான் அவன். விடிந்ததும் அரசக்கிருகத்து இரதங்களைச் சுற்றிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த வெண்தேர்ச்செழியர் ஓர் இரதம் குறைவதைக் கண்டு முடிநாகனிடம் வினாவினார். முடிநாகனும், இளையபாண்டியனும், சிகண்டியாசிரியரும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துக்கு இரதத்தில் சென்றிருக்கும் செய்தியை அவரிடம் தெரிவிக்கும்படி ஆயிற்று. தவிர்க்க முடியவில்லை. ஏற்கனவே கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் ஒரு பாண்மகளின் இசைக்கூத்தை இளையபாண்டியன் இரசித்து வியந்ததை மாறுவேடத்தில் சென்று கண்டிருந்த பெரியபாண்டியர் அதனால் சினமுற்றிருந்தார். இன்று சிகண்டியாசிரியரும் இளையபாண்டியனோடு சென்றிருப்பதை அறிந்து அவருடைய ஐயப்பாடு அதிகமாயிற்று.

"இவ்வைகறை வேளையில் சிகண்டியாசிரியரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு எதற்காகச் சென்றான் சாரகுமாரன்?" என்று அவர் கடுகடுப்போடு வினாவியபோது முடிநாகன் தயங்கித் தயங்கி மறுமொழி கூறினான். ஆயினும் பெரியபாண்டியர் சந்தேகத்தோடுதான் திரும்பினார்.

"சிகண்டியாசிரியர் திரும்பியதும் அவரை நான் காணவேண்டும் என்று சொல்" எனக் கூறிவிட்டுத்தான் திரும்பினார் அவர். என்ன நேருமோ என்ற பயத்தில் முடிநாகனுக்கு நெஞ்சு படபடத்தது. இளையபாண்டியரையே கூப்பிட்டு விசாரணை செய்தாலும் ஏதாவது கூறித் தப்பித்துக் கொள்வார். சிகண்டியாசிரியரைக் கூப்பிட்டு விசாரித்தால் அவர் பெரியபாண்டியரிடம் பொய் சொல்ல மாட்டார். அவர் பொய் சொல்லாவிட்டால் இளையபாண்டியரின் மேல் பாட்டனாருக்குத் தாங்க முடியாத சினம் மூளுமே என்று எண்ணி அஞ்சினான் முடிநாகன். இளையபாண்டியர் அதைப் பெரியவரிடம் தான் சொன்னதற்காகத் தன்மேற் சினந்து கொள்வாரோ என்ற பயம் கூட முடிநாகனுக்கு இருந்தது. தேரில் கடற்கரைக்குச் சென்றிருந்த சிகண்டியாரும், சாரகுமாரனும் திரும்பி வருகிறவரையில் அரசகிருகத்து தேர்கள் நிறுத்தப்படுகிற இடத்திலேயே அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான் முடிநாகன்.

நன்றாக விடிந்து சில நாழிகைகள் கழிந்த பின்பே அவர்கள் சென்றிருந்த தேர் திரும்பி வந்தது. உடனே முடிநாகன் இளையபாண்டியனை மட்டும் ஒரு கணம் தனியே அழைத்துப் பெரியவர் தேர்களைப் பார்க்க வந்திருந்ததையும், நடந்த பிற விவரங்களையும் கூறினான். இளையபாண்டியனால் முடிநாகனிடம் கோபித்துக் கொள்ள முடியவில்லை. சிகண்டியாசிரியரிடம் பெரியவர் வினாவினால் அவருக்குச் சந்தேகம் வராதபடி மறுமொழி கூறுமாறு சொல்லிவிட முடிவு செய்தான் அவன். தேரை அரசகிருகத்தின் தேர்ச்சாலையில் விட்டு விட்டு இருவரும் அரண்மனைக்குள்ளே செல்ல இருந்த நிலையில் முடிநாகன் "பெரியபாண்டியர் தங்களைக் கண்டு பேச விரும்பினார்" என்று சிகண்டியாசிரியரிடம் தெரிவித்தான். சிகண்டியாசிரியரும் அதைக் கேட்டுத் தாமே பெரியபாண்டியரைக் காண்பதாக அவனிடம் கூறிச் சென்றார். அப்படிச் செல்லும்போது குறிப்பறிந்த சாரகுமாரன் அவருடன் செல்லவில்லை. சிகண்டியாசிரியரைக் கண்ணுக்கினியாளின் தெய்வீக இசையைக் கேட்கச் செய்துவிட்ட பெருமையில் இருந்தான் இளையபாண்டியன். பாட்டனாரிடம் சிகண்டியார் விபரீதமாக எதுவும் கூறிவிட முடியாது என்பதில் அவனுக்கு நல்ல நம்பிக்கையும் இருந்தது.

சிகண்டியார் பெரியபாண்டியரைச் சந்திக்கச் சென்ற போது பெரியபாண்டியர் எதற்காகவுமே சிறப்பான காரணத்திற்காக அவரைக் காண விரும்பியது போல் பேசாமல் பொதுவான பல செய்திகள் பற்றிப் பேசினார். இசை நூல்கள், இளையபாண்டியனின் இசைப் பயிற்சி, குருகுலவாசத்தை முடித்து அவனுக்கு அரசியல் அனுபவங்களை உணர்த்த, எல்லாவற்றையும் பற்றிக் கூறிக் கொண்டே வந்தவர் இறுதியில் இளையபாண்டியனும் அவரும் தேரில் போயிருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டுச் சிகண்டியாரின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.

"ஓ! அதுவா? நெய்தற் பண்ணைப் புதுப்புது நுணுக்கங்களுடன் பாடும் பாண்மகள் ஒருத்தி கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் இருப்பதாக அறிந்து காண்பதற்குச் சென்றோம். அந்தப் பாண்மகளின் குரல் இலக்கணங்களை மீறிய அழகுடையதாயிருந்தது. அந்தக் குரலுக்கே ஓர் இலக்கணத்தைப் படைக்கலாம் போல அத்தனை அழகுடையதாயிருந்தது" என்று வியந்தவாறே பெரியபாண்டியருக்கு மறுமொழி கூறினார் அவர்.

"உங்களுக்கு முன்பே தெரிந்த அவளைக் காண இளையபாண்டியனை நீங்கள் அழைத்துச் சென்றீர்களா? அல்லது அவளை முன்பே அறிந்த இளையபாண்டியன் அவளைக் காண உங்களை அழைத்துச் சென்றானா?"

இதற்குச் சில கணங்கள் மறுமொழி சொல்லத் தயங்கினார் சிகண்டியார்.

"சிறப்பான காரணம் எதற்காகவும் இதை வினவவில்லை சிகண்டியாசிரியரே! அறிவதற்காகவே வினாவுகிறேன்" என்று அவரை மேலும் தூண்டினார் பெரியவர். "இளைய பாண்டியர் முன்பே பலமுறை அந்த அபூர்வ இசையைக் கேட்டு என்னிடம் பெருமையாகக் கூறியதால் தான் நானும் சென்றேன். நான் படைத்துவரும் இசை நுணுக்க நூலுக்குப் பெரிதும் பயன்படும் அனுபவம் அது" என்று நிர்விகல்பமாக மறுமொழி கூறிவிட்டார் அவர்.

"அப்படியானால் நானும் அந்தப் பாண்மகளின் இசையைக் கேட்க ஆசைப்படுகிறேன். நாளை என்னை அழைத்துச் செல்வீரா?" - என்று உள்ளடக்கமான குரலில் சிகண்டியாரைக் கேட்டார் பெரியபாண்டியர்.

சிகண்டியார் தயங்கினார். "வேறொன்றுமில்லை! நல்ல இசையை நானும் பாராட்டலாமே என்றுதான்" என மேலும் வேண்டினார் பெரியவர்.

இசைபோன்ற நுண்கலைகளில் விருப்பமே அதிகமில்லாத பெரியபாண்டியர் திடுமென்று இப்படிக் கேட்டதில் ஏதோ விபரீதமிருப்பதாக அப்போதுதான் சிகண்டியாருக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் தட்டிக் கழிக்க முயன்றார். பெரியபாண்டியரோ பிடிவாதமாக அந்தப் பாண்மகளைத் தானும் பார்த்தே தீரவேண்டுமென்றார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
28. கலைமானும் அரிமாவும்


பெரியபாண்டியருடைய பிடிவாதத்தைச் சிகண்டியாசிரியருடைய சொற்களால் தகர்க்க முடியவில்லை. கலை காரணமாக ஏற்படும் ஆர்வத்தையும், அரசியல் காரணமாக ஏற்படும் அக்கறையையும், பகுத்து உணரமுடியாத அளவிற்குச் சிகண்டியாசிரியருடைய மதி மழுங்கியிருக்கவில்லை. 'நானும் அந்தப் பாண்மகளின் இன்னிசையைக் கேட்க ஆசைப்படுகிறேன்' என்று பெரியபாண்டியர் கூறியதைச் சிகண்டியார் நம்பவில்லை. அவருடைய வேண்டுகோளில் இயற்கையான ஆர்வமோ, கனிவோ இல்லாததை அவர் முன்பே கூர்ந்து கவனித்து உணர்ந்துவிட்டார். அந்த வேண்டுகோளில் யாருமே விரும்பத் தக்கதல்லாத ஒரு கடுமையான உள்நோக்கம் இருப்பதுபோல் சிகண்டியாசிரியருக்குத் தோன்றியது. அதற்கு இணங்கவும் மனமின்றி அதை மறுக்கவும் இயலாதவராய்க் குழப்பமானதொரு மனநிலையில்தான் அப்போது அவர் இருந்தார்.

கண்ணுக்கினியாளைப் பற்றிப் பெரியபாண்டியரிடம் எதுவும் கூற நேர்ந்தால் அவருக்குச் சிறிதும் சந்தேகம் வராதபடி கூறுமாறு இளையபாண்டியன் தன்னிடம் வேண்டிக் கொண்டிருந்ததை இப்போது நினைவு கூர்ந்தார் சிகண்டியாசிரியர். சிறிய காரணத்துக்காகவோ, பெரிய காரணத்துக்காகவோ எதற்குமே அவர் பொய் சொல்லிப் பழகியதில்லை. பொய் சொல்லக் கூடாதென்ற நோன்பை அழித்துக் கொள்ளக் காரணம் சிறிதாயிருந்தால் என்ன? பெரியதாயிருந்தால் என்ன? அது அவரால் முடியவில்லை. பெரியபாண்டியரைக் கண்ணுக்கினியாளிடம் அழைத்துப் போக அவர் இணங்கிவிட்டார். 'அப்படித் தம்மை அங்கு அழைத்துப் போகும் செய்தியை இளையபாண்டியனுக்குத் தெரிவிக்கலாகாது' என்றும் சாமர்த்தியமாகச் சிகண்டியாசிரியரிடம் வாக்கும் வாங்கிக் கொண்டுவிட்டார் பெரியவர். கலை உள்ளத்தின் கனிவையும், மென்மையையும் அரசியல் காரணங்களுக்காக அவற்றை அணுகுகிறவர்களால் புரிந்து கொள்ள முடியாமற் போகிறதே என்று உள்ளூற வருந்துவதைத் தவிரச் சிகண்டியாசிரியரால் அப்போது வேறெதுவும் செய்ய இயலவில்லை. இளையபாண்டியன் தன்னைக் கண்ணுக்கினியாளிடம் அழைத்துச் சென்ற அதே தினத்தின் மாலை வேளையில் பெரியவரைத் தான் அவளிடம் அழைத்துச் செல்ல வேண்டியவராக இருந்தார் சிகண்டியாசிரியர்.

காலையில் இளையபாண்டியனோடு கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்ற போதிருந்த அவ்வளவு உற்சாகம் மாலையில் வெண்தேர்ச் செழியரோடு சென்ற போது அவருக்கு இல்லை. கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது போன்ற மனநிலையோடு இருந்தார் அவர். கண்ணுக்கினியாள் என்ற புள்ளிமானைக் காணப் பெரியபாண்டியர் என்ற சீற்றம் நிறைந்த முதிய சிங்கத்தை அழைத்துப் போவது போன்ற அவ்வளவு வேதனை அந்த இசைப்புலவருடைய உள்ளத்திலே நிறைந்திருந்தது. சிகண்டியாசிரியர் சந்தேகப்பட்டதற்கும் வேதனைப்பட்டதற்கும் ஏற்றாற்போலவே பெரியபாண்டியரும் அங்கு நடந்து கொண்டார். சிறிது நேரம் அவளுடைய இசையைக் கேட்பதுபோல நடித்த பெரியபாண்டியர் அவளிடம் வினாவிய வினாக்களும் விசாரித்த விசாரணைகளும் சிகண்டியாசிரியரைக் கலக்கத்திற்கு உள்ளாக்கின.

"இவ்வளவு நன்றாகப் பாடும் வல்லமை வாய்ந்த நீயும் உன் பெற்றோரும் ஏன் இந்தக் கபாடபுரத்திலேயே தங்கி விட்டீர்கள்? பயன் மரம் நாடிச் செல்லும் பறவைகள் போல் ஊரூராகச் சென்று பாடிக்கொண்டிருப்பதல்லவா சிறந்த பாண்குடியினருக்கு அழகு?" என்று முதல் வினாவிலேயே அவள் மனத்தை ஆழம் பார்த்தார் பெரியபாண்டியர்.

"நகரணி மங்கல விழாவுக்காக இங்கு வந்தோம்! அப்படியே தங்கிவிட்டோம். வந்த கலைஞர்களை எல்லாம் காலவரையறையின்றி விருந்தினராக ஏற்று உபசரிக்கும் பண்புள்ள இந்தப் பாண்டிய நாட்டில் முதல் முதலாக நீங்கள் தான் இப்படி எங்களை வினாவுகிறீர்கள்! தங்கள் நாட்டிற்கு வந்த கலைஞர்கள் வேறு ஊர்களுக்குப் புறப்பட்டுப் போகாமல் ஏன் அதிக நாட்கள் தங்கியிருக்கிறார்கள் என்று கவலைப்படும் முதல் மனிதரை நான் இன்று மாலையில் இப்போதுதான் இங்கே சந்திக்கிறேன்!" என்றாள் கண்ணுக்கினியாள்.

"நான் தவறாகக் கூறவில்லை பெண்ணே! சிறப்பாக வேறு காரணம் ஏதாவது இருந்தாலன்றிக் கலைஞர்கள் ஓரிடத்திலேயே இப்படித் தங்கமாட்டார்களே என்றுதான் வினாவினேன்..."

"இது வெறும் வினாவா? அல்லது கவலையா? என்று எனக்குப் புரியவில்லை. உங்கள் கேள்வி வினாவாக மட்டும் ஒலிப்பதுபோல எனக்குத் தோன்றாததுதான் காரணம். கலைஞர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று கலைஞர்களே உணராத ஒன்றை வற்புறுத்துகிறீர்கள் நீங்கள்..."

"அப்படியில்லை. இடத்தின்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். கலையின் மேல் பிரியப்பட்டு மட்டுமே ஓரிடத்தில் தங்க முடியாது...?"

"எப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன். இடத்தின் மேல் பிரியப்படுத்துவது தவிர மனிதர்கள் மேல் பிரியப்படத்தக்க அத்துணைச் சிறப்பான பண்புள்ள மனிதர்களும் இங்கு நிறைய இருக்கிறார்கள் என்று காலை வரையில் நான் எண்ணியிருந்தேன். இப்போதோ என்னுடைய அந்த இரண்டாவது எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது."

"நீ மிகவும் சினமாகப் பேசுகிறாய் பெண்ணே! பேச்சில் எப்போதுமே நிதானம் வேண்டும். அதுவும் என்னைப் போன்ற முதியவர்களிடம் உரையாடும்போது இன்னும் அதிகமான நிதானம் வேண்டும்."

மறுமொழி கூறாமல் அவரை வெறுப்பவள் போல் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டாள் அவள். இந்தக் கேள்விகளை விரும்பாத சிகண்டியாசிரியர் வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றார். சிறிது தொலைவு விலகி நின்ற அவள் தந்தை, அருகில் வந்து பெரியபாண்டியரிடம் ஏதோ பேசத் தொடங்கினார்.

"தொடர்ந்து ஓரிடத்திலேயே தங்கிவிடாமல் பல இடங்களுக்கு மாறிமாறிச் சென்று கொண்டிருப்பதனால்தான் கலைஞர்களின் கலை வளர்ச்சியும் மெருகும் அடையும்" என்று மீண்டும் அவளுடைய தந்தையிடம் வாதிடத் தொடங்கினார் பெரியபாண்டியர்.

உடன் வந்திருந்த சிகண்டியாசிரியருக்கே வெறுப்பைத் தருவதாயிருந்தது அவர் பேச்சு. தானும், தன்னுடன் வந்தவரும் இன்னார் இன்னாரெனச் சிகண்டியாசிரியர் தெரிவிக்காததனால் புள்ளிமான் போன்ற அந்தப் பெண்ணுக்குப் பெரிய பாண்டியரிடம் பயமும் இல்லை, மதிப்பும் வரவில்லை. சினமே மேலெழுந்து பொங்கியது. காலையில் இளையபாண்டியன் சிகண்டியாசிரியரை மாறுவேடத்தில் அழைத்து வந்திருந்ததனால் இப்போது அவரை அவளுக்கு அடையாளமும் தெரியவில்லை. ஆனால் உடன் வந்திருந்த கிழச்சிங்கத்தை ஒத்த அந்த முதியவர் வினாவினாற் போன்ற வினாக்களையே தன்னிடம் வினவாமல் அமைதியாக இருந்ததோடல்லாமல் அந்த வினாக்களை ஓரளவு வெறுப்பதுபோன்ற முகபாவத்தையும் காண்பித்ததனால் சிகண்டியார் மேல் அவளுக்குக் கோபம் வரவில்லை. பெரியபாண்டியர் மேலேயே சினம் மூண்டது. பெரியபாண்டியரோ தான் யாரென்று அவளுக்குக் குறிப்பாகப் புரியவைத்து அவளை மேலும் பயமுறுத்தவும், திகைக்க வைக்கவும் விரும்பினார்.

அரசகுடும்பத்தினர் மட்டுமே பாணர்களுக்குப் பரிசளிக்கும் பொற்பூக்கள் சிலவற்றைத் தம்மோடு கொண்டு வந்திருந்த அவர் அந்த பொற்பூக்களில் ஒன்றை எடுத்து, "எவ்வாறாயினும் ஆகுக! உன் கலைத்திறனைப் போற்றி இவற்றை உனக்களிக்கிறேன்" என்று அவற்றை அவளிடம் நீட்டினார். ஆனால் அவள் அவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரை எள்ளி இகழ்வது போன்ற புன்னகையொன்று உடன் அவள் இதழ்களில் மின்னி மறைந்தது. "தங்களை மதியாதவர்களுடைய பரிசை ஏற்பது கலைஞர்களின் இயல்பில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?" என்று அவள் பதிலுக்குச் சீறிய போது பெரியவரின் முகத்தின் சினம் அதிகமாகியது. கடுமையும் மிகுதியாகி வளர்ந்தது.

"ஏதேது? உங்கள் சினத்தைப் பார்த்தால் எங்களை நாடுகடத்தவும் செய்வீர்கள் போலிருக்கிறதே?" என்றாள் அவள்.

"அவசியமென்று கருதினால் அதையும் செய்ய முடிந்தவன் தான் நான்" என்று கூறிவிட்டுப் "போகலாம்! புறப்படுங்கள்" என்று சிகண்டியாரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார் பெரியவர். புறப்படுகிறபோது முறைக்காக ஒரு வார்த்தை கூட அவளிடமோ அவள் தந்தையிடமோ சொல்லிக் கொள்ளவில்லை. சிகண்டியார் மட்டும் சொல்லி விடைபெற்றுக் கொண்டார். இருவரும் அரண்மனையை நோக்கித் திரும்பினர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top