• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கபாடபுரம் (சரித்திர நாவல்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
29. இசைநுணுக்க இலக்கணம்


கண்ணுக்கினியாள் மேல் இளையபாண்டியன் சாரகுமாரனுக்கு அன்பு இருப்பதையும், அப்படி ஓர் அன்பையோ தொடர்பையோ இணைப்பையோ விரும்பாதவராகப் பெரியபாண்டியர் மனம் குமுறுவதையும் சிகண்டியாசிரியர் தெளிவாகப் புரிந்து கொண்டார். போகிற போக்கைப் பார்த்தால் பெரியபாண்டியர் சினவெறியில் அந்தப் பாண்மகளையும் அவள் குடும்பத்தினரையும் நாடுகடத்தினால் கூட வியப்பதற்கில்லை என்று தோன்றியது. அதற்குள் தம் கலை இலட்சியமாகிய இசைநுணுக்க இலக்கண நூலை இயற்றி அரங்கேற்றி முடித்துவிடுவதில் கவனம் செலுத்த வேண்டியவராக இருந்தார் அவர். இளையபாண்டியனும், கண்ணுக்கினியாளும் தத்தம் குரலினிமையின் மூலம் விளைவித்துக் காட்டிய புதுமைகளையும், நுணுக்கங்களையும், நயங்களையும் கண்டபின் அவற்றை இலட்சியங்களாகக் கொண்டே இசைநுணுக்கத்தை இயற்றத் தொடங்கியிருந்தார் அவர். கலைத்துறையைப் பொறுத்தவரையில் ஓர் சுவையின் மேலான எல்லையைத் தொடுகிறவர்கள்தான் அதுவரை அந்தத் துறைக்கு என்று அமைக்கப்பட்டிருந்த இலக்கணங்களையும் மரபுகளையுமே வளர்த்துப் புதியதாக்கி விடுகிறார்கள்.

இப்படிப் புதிய இலட்சியங்கள் பிறந்துவிட்டபின்பே அவற்றை எடுத்துக்காட்டாகக் கொண்டு புதிய இலக்கணங்களும், மரபுகளும் பிறக்கின்றன. இலட்சியங்களைப் படைக்கிற படைப்பாளியின் சாதனை எல்லை என்கிற உயரத்தை அடையமுடியாமல் சில வேளைகளில் இலட்சணங்களை வரையறுத்துச் சொல்லுகிற இலக்கண ஆசிரியரின் கீழ் எல்லையிலேயே தளர்ந்து நின்றுவிடுவதும் உண்டு. அப்படித் தளர்ந்து நின்றுவிடுவதனால் அந்தக் கலையின் எதிர்காலத்துக்கு வளர்ந்துவரும் புதிய மரபுகள் சொல்லப்படாமலே போய்விடும். அந்த நிலை ஏற்பட்டுவிடலாகாதே என்பதற்காகத்தான் சிகண்டியாசிரியர் இசை நுணுக்க இலக்கணத்தை விரைந்து இயற்றிக் கொண்டிருந்தார். அந்த இலக்கணத்தை அவர் இயற்றுகையில் பெரும்பான்மை நேரம் சாரகுமாரனும் அவருடன் கூடவே இருந்தான். பெரியபாண்டியரோடு தாம் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று வந்த செய்தியைச் சிகண்டியாசிரியர் சாரகுமாரனிடம் கூறவில்லை. சாரகுமாரன் மட்டும் முடிநாகனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் சில காலை வேளைகளிலும், சில மாலை வேளைகளிலும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று வந்தான். அப்படிச் சென்று கண்ணுக்கினியாளைச் சந்தித்த போதும் அவளிடம் ஆழமான மாறுதல் ஒன்றை உணர்ந்தான் அவன்.

சிரிப்பும், மகிழ்ச்சியும், கலகலப்பான உரையாடலும் அற்றுக் கவலை நிறைந்தவளாய்த் தென்பட்டாள் அவள். அந்த மாறுதலைப் புரிந்து கொள்ளவும் முடியாமல், வினாவித் தெரிந்து கொள்ளவும் இயலாமல் வேதனைப்பட்டான் சாரகுமாரன். கபாடபுரத்திலிருந்து தாங்கள் வேறு ஊருக்குப் புறப்படப் போவதைப் பற்றியே அவனைச் சந்திக்க நேரும் போதெல்லாம் பேசிக் கொண்டிருந்தாள் அவள். சாரகுமாரனுக்கு இது புதுமையாக இருந்ததோடல்லாமல் மனவருத்தத்தை அளிப்பதாகவும் இருந்தது. மனத்திற்குள்ளேயே துயரப்பட்டான் அவன். சிகண்டியாசிரியர் பெரியபாண்டியரை அவளிடம் அழைத்துச் சென்றிருந்ததையும், அவர் அவளிடம் வினாவிய வினாக்களையும் கூறியிருந்தாரானால் சாரகுமாரனுக்கு அவளுடைய இந்த மாறுதலுக்கான காரணங்கள் எல்லாம் தெளிவாகப் புரிந்திருக்கும். அதையும் அவர் கூறாததால் ஒன்றும் புரியாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது சாரகுமாரனுக்கு.

"கோ நகராகிய கபாடபுரத்தின் அரசவையில் பெரும் புலவர்கள் அனைவரையும் கூட்டிய அரங்கத்தில் இசை நுணுக்கத்தை அரங்கேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன் நான். பெரியபாண்டியரிடம் இதை எடுத்துக்கூறி அவருடைய இசைவைப் பெற வேண்டும்" என்று சாரகுமாரனிடம் விளக்கினார் சிகண்டியாசிரியர்.

"நாமிருவருமாகச் சென்று பாட்டனாரிடம் கூறினால் அவர் அவசியம் இணங்குவாரென்று நம்புகிறேன்" என்று சாரகுமாரன் கூறத்தொடங்கியதை மறுத்து, "நான் ஒருவனே சென்றால் பெரியபாண்டியர் ஒரு வேளை இந்த அரங்கேற்றத்திற்கு இணங்கினாலும் இணங்கலாம். இளையபாண்டியரும் உடன் வந்தாலோ பெரியவருக்கு உலகத்தில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் வந்துவிடும். மறுத்தாலும் மறுத்துவிடுவார்" என்றார் சிகண்டியாசிரியர். ஆசிரியரின் இந்தக் கருத்தில் இளையபாண்டியனுக்குச் சந்தேகம் எதுவும் உண்டாகவில்லை. அதனால் அவன் அவர் விருப்பப்படியே செய்ய இணங்கினான். ஆனால் ஒன்றை மட்டும் சிகண்டியாசிரியரிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறினான்.

"இசைநுணுக்கம் என்ற தங்கள் நூல் தோன்றக் காரணமாயிருந்தவளும் அந்த அரங்கேற்றம் நிகழ்கிற அன்று இந்த அரண்மனையில் வந்து இசைக்க வேண்டும் என்பது என் விருப்பம்" என்று சாரகுமாரன் ஒவ்வொருமுறை கூறும்போதும் சிகண்டியாசிரியர் உள்ளூர வருந்தினார். "கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பாண்மகள் வந்து பாட வேண்டும்" என்று வேண்டினால் பெரியபாண்டியர் இசைநுணுக்க நூலை அரங்கேற்றவே ஒப்புக் கொள்ளமாட்டாரென்று தோன்றியது. அதை இளையபாண்டியனிடமும் மனம் விட்டுச் சொல்ல முடியாமல் தவித்தார் அவர். சாரகுமாரனின் தந்தை அநாகுல பாண்டியனிடம் இந்த அரங்கேற்றத்தைப் பற்றி விவரித்துக் கூறலாம் என்றாலோ பெரியபாண்டியர் வெண்தேர்ச் செழியரின் விருப்பத்துக்கு மாறாக அநாகுலனும் ஒரு காரியத்தைச் செய்ய மாட்டான் என்பது சிகண்டியாசிரியருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எனவே பெரிய பாண்டியரையே தேடிச் சென்றார் அவர். பெரியபாண்டியர் சிகண்டியாசிரியரை வரவேற்ற விதமே இசையைப் பற்றியோ, கலைகளைப் பற்றியோ, கடற்கரைப் புன்னை மரத்தோட்டத்தில் தங்கியிருக்கும் பாண்மகளைப் பற்றியோ எதையும் என்னிடம் சொல்லிவிடாதே என்பதுபோல் இருந்தது.

"தென்பழந்தீவுகள் அனைத்தையும் ஒரு வலிமை வாய்ந்த கடற்படையை அனுப்பி வெற்றி கொண்டு நேராகக் கபாடபுரக் கோ நகரின் ஆட்சிக்குக் கீழே கொணர்ந்து பாண்டியர் வலிமையைப் பலப்படுத்திவிட எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதற்கு இன்னும் ஒரு வழி புலப்படவில்லை. தென்கடலில் தனித்தனியே சிதறுண்டு கிடக்கும் அந்தத் தீவுகளை ஓரிரு நாட்களில் வெற்றி கொள்வதும் சாத்தியமென்று தோன்றவில்லை. அதிக நாட்களும், அதிக முயற்சியும், அதிகப் பொறுமையும் அந்தக் காரியத்திற்குத் தேவைப்படும். அநாகுலனை அனுப்பலாமென்றாலோ, அவ்வளவு அதிக நாட்கள் அவன் கோ நகரத்தில் இல்லாமல் வெளியே தீவுகளுக்குப் போவது நல்லதல்ல. நானே போகலாமென்றாலோ என்னுடைய முதுமையும், தளர்ச்சியும் அதற்கு ஏற்றவையல்ல. இந்த நிலையில் இந்தப் படையெடுப்பிற்குத் தலைமையேற்கச் சாரகுமாரன் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை. முன்பே அதை மனத்திற் கொண்டுதான் அவனையும், முடிநாகனையும் தென்பழந்தீவுகளில் ஒருமுறை சுற்றிவருமாறு செய்தேன். ஆனால் அவனோ இன்னும் அரசியற் பொறுப்புக்களில் அக்கறையற்றவனாகத் தோன்றுகிறான்."

"ஓர் அரசன் போரற்ற அமைதிக் காலங்களில் மட்டுமே கலைகளின் இரசிகனாக இருக்கலாமே அன்றிப் போர்க்காலங்களில் கலைகளை மறக்கவும் தெரிய வேண்டும். இரசிகனாக இருப்பதற்கும் மேலாக அவனே கலைஞனாக இருப்பதோ, கவிஞனாகவே வளர விரும்புவதோ அவனைப் பெற்ற அரசகுடும்பத்துக்கு எவ்வளவிற்குப் பயன்படாமல் போகுமென்பதை உங்களைப் போன்ற புலவர்களால் ஒருபோதும் உணர முடிவதில்லை. ஆனால் என் போன்றவர்களோ ஒவ்வொரு விநாடியும் அதை மட்டுமே உணர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கலைகள் மனித இதயத்தை நெகிழச் செய்து நளினமாக்கிவிடுகின்றன. ஒரு மனம் அப்படி நெகிழ்ந்து நளினமாவதனால் அது ராஜதந்திர நினைவுகளுக்கோ, அரசியற் சூழ்ச்சிகளுக்கோ பயன்படாமல் போகிறது" என்று கவலை தோய்ந்த குரலில் பெரியபாண்டியர் தன்னிடம் வருத்தப்பட்ட போது, தான் வந்த காரியத்தை அவரிடம் கூறுவதற்கு ஏற்ற சமயம் அதுதானா இல்லையா என்பதைக் கணிக்க முடியாமல் தயங்கியபடியே பேசாமல் இருந்தார் சிகண்டியாசிரியர். பெரியபாண்டியரோ அவருடைய தயக்கத்தைத் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு மேலும் தொடர்ந்து குறைபடத் தொடங்கிவிட்டார்.

"மனம் அரசதந்திரத்திற்கு ஏற்றதாக வாய்க்காத காரணத்தினாலேயே அப்படிப்பட்ட அரசகுமாரர்களைப் பெற நேர்ந்த பல அரச குடும்பங்கள் பெருமையழிந்து மரபு கெட்டிருக்கின்றன. தென்பழந்தீவுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிய பின் அந்தத் தீவுகளை வென்று அடக்கி வலிமை மிக்கதொரு பாண்டியப் பேரரசை உருவாக்க வேண்டியதைப் பற்றித் தானாகவே என்னிடம் பேசவருவான் வருவானென்று சாரகுமாரனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான். அவனோ காலையும், மாலையும், தேரிலும் புரவியிலுமாக மாற்றி மாற்றிக் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறான். இந்த நிலையிலேயே நீங்கள் வேறு இசையிலக்கணம் ஏதோ இயற்றிக் கொண்டிருக்கிறீர்களாம்..." என்று அவர் கூறிக்கொண்டே வந்தபோது அதுதான் சமயமென்று,

"ஆம்! அந்த இசையிலக்கண நூலைக் கபாடபுரத்துப் புலவர் பெருமக்கள் கூடிய பேரவையிலேயே அரங்கேற்றுவது பற்றிப் பேசத்தான் நான் இப்போது உங்களிடம் வந்தேன். விரைவில் அதை அரங்கேற்றி முடித்துவிட்டால் அப்புறம் இளையபாண்டியருடைய கவனத்தை அரசியற் காரியங்களில் திருப்புவதற்கு மிகவும் வாய்ப்பாக இருக்கும். அதை அரங்கேற்றக் காலந்தாழ்த்திக் கொண்டே போனாலும் இளையபாண்டியருடைய கவனம் அந்த அரங்கேற்றத்தை எதிர்நோக்கியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கும். அதைத் தவிர்க்க ஒரே வழி அந்த அரங்கேற்றத்தை உடன் ஏற்பாடு செய்து முடிப்பதுதான்! தங்கள் மனக்குறிப்பை அறிந்துதான் நானும் அதனை விரைந்து அரங்கேற்றி முடிக்க விரும்பினேன்". சமயோசிதமாக அவர் மனப்போக்கினை அறிந்து இப்படிப் பேச்சைத் திசை திருப்பினார் புலவர்.

"அரங்கேற்றம் முடிந்தபின்பும் சாரகுமாரன் கலை கலை என்று திரியத் தொடங்கினால் எனக்கு உங்கள் மேல்தான் கோபம் வரும்" என்று நிபந்தனையில் இறங்கினார் பெரியவர். ஒரு வழியாக அதற்கு ஏதோ தீர் திறன் கூறி அவரை அரங்கேற்றத்துக்கு இணங்கச் செய்து அடுத்த பௌர்ணமி மாலையில் இசைநுணுக்க நூலுக்கு அரங்கேற்ற நாள் குறித்தார் சிகண்டியாசிரியர்.

"இந்த நூல் அரங்கேறிய உடனே மறுபடியும் இன்னொரு இசையிலக்கணத்தை உடனே உருவாக்கி விடமாட்டீரே?" என்று பெரியபாண்டியர் குத்தலாகக் கேட்ட போது சிகண்டியாசிரியருக்கு உள்ளூறச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் அந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டு அடக்கமாகவும் நிதானமாகவும், "அப்படியெல்லாம் ஒன்றும் நேர்வதற்கில்லை" என்று பெரியவருக்கு மறுமொழி கூறினார் சிகண்டியாசிரியர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
30. அரங்கேற்றம்


பல தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர் பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற இணங்கினார் பெரியபாண்டியர். உடனே அதற்கான மங்கல நாளும் குறிக்கப் பெற்றது. நகரணி மங்கல விழா முடிந்த உடனே மீண்டும் இத்தகைய பெருவிழா ஒன்று கோ நகரில் நிகழ இருப்பதைக் கேட்டுச் சங்கப் புலவர்களும், அறிஞர் பெருமக்களும் இரட்டை மகிழ்ச்சி அடைந்தனர். செய்தியை நகருக்கு முரசறிந்து தெரிவிக்கும் கடமையுள்ளவர்கள் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் ஏறி வீதிவீதியாகப் பரப்பினார்கள்.

"இளையபாண்டியர் சாரகுமாரருக்குப் புதிய இசையறிவிக்கும் பொருட்டுச் சிகண்டியாசிரியர் இயற்றியிருக்கும் இசைப் பேரிலக்கணம் அரங்கேற இருக்கிறது" என்ற செய்தி நாலா திசைகளிலும் நகரில் பரவியது. பாணர்கள் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திலும் செய்தி அறிவிக்கப்பெற்றுப் பரவியிருந்ததில் வியப்பில்லை. எல்லாப் பாணர்களுக்கும் மகிழ்ச்சியை விதைத்த இச்செய்தி ஒரே ஒருத்தியின் இதயத்தில் மட்டும் இனம்புரியாத கவலையை உண்டாக்கியது. பிறருக்கு விண்டுசொல்லி அவர்களுடன் பங்கிட்டுக் கொள்ள முடியாத வேதனையாயிருந்தது அது. விழா நிகழும் முன்பாகவே தானும் தன் பெற்றோரும் கபாடபுரத்தை விட்டுப் புறப்பட்டு விடலாமா என்றுகூடத் தோன்றியது அவளுக்கு. ஆனால் கூட்டம் கூட்டமாக ஓரிடத்தை விட்டு மற்றோர் இடத்திற்குப் பயணம் செய்யும் வழக்கத்தையுடைய பாணர்கள் - எல்லோரும் சேர்ந்து புறப்பட்டாலொழியத் தனியே புறப்பட இயலாது. அப்படிப் புறப்படுவதனால் தனிவழிப் பயணத்தில் பல துன்பங்கள் வரும். எனவே நகரணி மங்கல விழாவுக்கு வந்து அப்படியே தொடர்ந்து தங்கிய எல்லாப் பாணர் கூட்டமும் மிகச் சில நாட்களில் நடைபெற இருக்கும் சிகண்டியாசிரியரின் இசையிலக்கண அரங்கேற்ற விழாவுக்கும் இருந்து கண்ட பின்பே புறப்பட எண்ணினர்.

'இடத்தின் மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். மனிதர்கள்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம்' என்று பெரியபாண்டியர் தன்னிடம் இரைந்துவிட்டுப் போனதை நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் கண்ணுக்கினியாள். பல காரணங்களால் அவள் மனத்தில் நிம்மதியில்லை. இந்நிலையில் இசையிலக்கண நூலரங்கேற்ற விழாவுக்கு இரண்டு நாளிருக்கும் போது ஒருநாள் அதிகாலையில் சாரகுமாரன் கடற்கரையில் கண்ணுக்கினியாளைச் சந்தித்தான். அப்போது வெகு ஆர்வத்தோடு தேடி வந்த அவனிடம் இனிதாக முகம் கொடுத்துப் பேசாமல் தயங்கி நின்றாள் கண்ணுக்கினியாள்.

"இருந்தாற் போலிருந்து புதிராகிவிடுவதும் பெண்களுக்கு ஓரியல்பு போலிருக்கிறது" என்று குத்தலாகப் பேச்சைத் தொடங்கினான் சாரகுமாரன். அதற்கும் அவளிடமிருந்து மறுமொழி இல்லை. வேறுபுறம் திரும்பித் தலைகுனிந்தபடி நின்றாள் கண்ணுக்கினியாள். அவளுடைய மனமாறுதலுக்கும், மௌனத்துக்கும் காரணமாக என்ன நிகழ்ந்திருக்க முடியுமென்பதை அவனால் அநுமானிக்க முடியவில்லை. சிகண்டியாசிரியருடன் பெரியபாண்டியரும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவளை மருட்டியதும் வெருட்டியதும் அவனுக்குத் தெரியாது.

"சிகண்டியாசிரியருடைய இசையிலக்கணமே உன்னை இலட்சியமாகக் கொண்டுதான் பிறந்திருக்கிறது! இப்படியெல்லாம் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் போது நீ துயரப்படுவதன் காரணம்தான் எனக்குப் புரியவில்லை கண்ணுக்கினியாள்!" என்று மறுபடியும் அவன் அவளை அணுகிக் கேட்டபோது அவள் விழிகளில் நீர் திரளுவதைக் கண்டான். வார்த்தைகளால் விளக்கப்படாத அந்த மோனமான சோகம் அவன் இதயத்தை அறுத்தது. அழுகைக்கிடையே ஒவ்வொரு வார்த்தையாக அவள் கூறினாள்:

"இலட்சணங்கள் பிறக்கும் அவசரம் சில சமயங்களில் இலட்சியங்களையே அழித்துவிடுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்."

"இருக்கலாம்! ஆனால் நீ பேசுகின்ற 'தொனி'யை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லையே?"

"இயல்புதானே? சொற்களைத்தான் விளங்கிக் கொள்ள முடியும். தொனிகளை உணரத்தான் முடியும்."

இதற்கு மறுமொழி ஒன்றும் கூறாமல் சிறிது நேரம் அமைதியாயிருந்த இளையபாண்டியன், "நல்லது! இனி நான் வந்த காரியத்தைச் சொல்லிவிட்டுப் புறப்படவேண்டியதுதான். இசையிலக்கண அரங்கேற்ற விழாவுக்காக உன்னை அழைக்க வந்தேன். சிகண்டியாசிரியர் இலக்கண நூற்பாக்களை ஒவ்வொன்றாக அவையில் கூறி விளக்கியதும் அதற்கேற்ற முறையில் நானும் நீயும் இசைபாடி இலக்கணங்களுக்கு இலட்சியம் காட்ட வேண்டும்."

"நீங்கள் அரசகுமாரர்! எதற்கும் எந்த இடத்திலும் இலட்சண இலட்சியங்கள் கூற முடியும். நாங்கள் நாடோடிப் பாண்குடி மக்கள். எங்களுடைய பெருமையும், புகழ்களும், வரையறுக்கப்பட்ட எல்லையோடு நின்றுவிடக் கூடியவை. நாங்கள் சிலவற்றை அடையமுடிந்து பலவற்றை அடைய முடியாமல் தவிக்கும் ஏழைகள்" என்று அவள் கூறியபோது அழுகையும், விம்மலும் குரலை அடைத்தன.

"உன் மனத்தை யாரோ வலிய முயன்று கெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நான் என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாய். அரங்கேற்ற விழாவுக்கு வா! அங்கே சிகண்டியாசிரியர் என்னைக் கூப்பிட்டுப் பாட வேண்டும்போது மறுக்காமல் யாழுடன் வந்து பாடு..." என்று வேண்டிக் கொண்டு அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே புரவியேறிப் புறப்பட்டுவிட்டான் சாரகுமாரன்.

அவனுடைய புரவி இருந்த இடத்தைவிட்டு மறைந்த மறுகணமே அவள் கோவென்று கதறியழத் தொடங்கினாள். அவளுள்ளே குமுறிக் கொண்டிருந்த உணர்ச்சிகள் வெடித்துக் கிளர்ந்தது போலாயின. கடலையும், மணற்பரப்பையும், புன்னை மரங்களையும் அவற்றொடு தன்னைச் சூழ்ந்துவிட்ட தனிமையையும் உணர்ந்தவள் போல் நெடுநேரம் குமுறிக் குமுறி அழுது தீர்த்தாள் அவள். கடற்கரைக்கும் மனிதனுடைய சோகத்துக்கும் உலகு தொடங்கிய நாள் முதல் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் போலிருக்கிறது! இல்லையானால் இரங்கலையும், சோகத்தையும் பேசும் நெய்தல் திணையை ஏன் கடற்கரையாக அமைத்திருக்கப் போகிறார்கள்? தன் உணர்ச்சியின் வேதனைகள் எல்லாம் தீரும் வரை அங்கிருந்து அழுத பின்பே புன்னைத் தோட்டத்திற்குத் திரும்ப முடிந்தது அவளால்.

முதல் முதலாக நகரணி மங்கல விழாவிற்கு வருகிற வழியில் சாரகுமாரனைச் சந்திக்க நேர்ந்தது முதல் பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக நினைக்க முயன்றாள் அவள். அப்போது 'கபாடபுரத்து முத்து வணிகன்' என்று இளையபாண்டியன் தன்னைப் பொய்யாக அறிமுகப்படுத்திக் கொண்டது நினைவுக்கு வந்தது அவளுக்கு. அப்போதும் அதற்குப் பின்பு சந்திக்க நேர்ந்த வேளைகளிலும் இருவருக்குமிடையே நிகழ்ந்த அழகிய உரையாடல்களை எல்லாம் தொகுத்து நினைவு கூர்ந்தாள். தேருலாவின் போது உலாக்கோலத்திலே சாரகுமாரனின் எழிற்கோலத்தைக் கண்ட காட்சி இன்னும் அவள் மனக்கண்களில் அப்படியே இருந்தது.

ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டே வந்தவளுடைய நினைவு அறுந்து சோகம் மீண்டும் தொடங்குகிற இடமாக வாய்த்தது, முதியபாண்டியரும், சிகண்டியாசிரியரும், சேர்ந்து வந்து தன்னைச் சந்தித்த சந்திப்பை நினைவு கூறுவது. அந்தச் சந்திப்பை நினைவு கூறுதலே மற்ற எல்லா இனிய நினைவுகளையும் அழிப்பதாக இருந்தது. அவளுடைய இனிய அநுராக நினைவுகளை எல்லாம் மறக்கச் செய்யும் பேரிடியாக இருந்தது பெரியபாண்டியரின் வரவும், வந்து தன்னிடம் உரையாடிய கடுமையான உரையாடலும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
31. யாழ் நழுவியது


கபாடபுரத்தின் அரசவையில் அன்று கோலாகல வெள்ளம். இடைச்சங்கப் புலவர்கள் யாவரும் வரிசை வரிசையாகப் புலமைச் செருக்குடனே வீற்றிருந்தார்கள். கிழச்சிங்கம் போல் பெரியபாண்டியர் புலவர்களுக்கு நடுநாயகமாகச் சிகண்டியாசிரியருடன் அமர்ந்திருந்தபடியால் பட்டத்து முறைப்படி அநாகுல பாண்டியன் தனியே கொலுவீற்றிருந்தும்கூட அங்கு எடுப்பாகத் தெரிய முடியாது போயிற்று. பெரியபாண்டியருக்கும் சிகண்டியாசிரியருக்கும் நடுவே அடக்க ஒடுக்கமாகப் பணிவுடன் இளையபாண்டியன் சாரகுமாரனும் அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தில் யாரையோ துழாவிக் கொண்டிருந்தன. அப்படி அவன் யாரையோ துழாவித் தேடுவதைப் பெரியபாண்டியரும் சிகண்டியாசிரியரும் அவனறியாமல் கவனித்துத் தங்களுக்குள் ஒருவர் முகத்தை மற்றொருவர் குறிப்பாகப் பார்த்துக் கொண்டார்கள்.

சிகண்டியார் ஒருவருக்கு மட்டும் அந்த நிலையில் இளையபாண்டியன் மேல் மிகவும் அநுதாபமாக இருந்தது. உள்ளூற மனத்துக்குள்ளேயே அரசகுல தர்மங்களின் கடுமையான நெறி துறைகளை வெறுத்தார் அவர். பிரியமுள்ள இருவருக்கு நடுவே ஏற்றத்தாழ்வு - பெருமை - சிறுமை கற்பிக்கும் இராசகம்பீர வாழ்வின் கொடுமையினால் இளையபாண்டியன் சாரகுமாரன் தன் இருதயத்திலே வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சோகம் ஒன்றைத் தாங்க நேரிடப் போவதை எண்ணி அவர் தவித்தார். பாவம்! இளையபாண்டியனுக்குப் பெரியபாண்டியர் செய்திருக்கும் ஏற்பாடு தெரிந்திருக்க நியாயமில்லை. அரங்கேற்றத்திற்காகக் கூடியிருந்த அவையின் வியூகத்தில் கடைசி வரிசையாக எங்கோ ஒரு மூலையில் பாணர்கள் அமரவும், நிற்கவும் இடம் விடப்பட்டிருந்தது. விழாவில் கண்ணுக்கினியாளும் பாடுவதற்குப் பெரியபாண்டியரின் இசைவைச் சிகண்டியார் சாமர்த்தியமாகப் பெற்றிருப்பார் என்று இளையபாண்டியன் நினைத்திருந்தான்.

சிகண்டியார் நிலைமையோ இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்தது. பெரியபாண்டியருக்கு அஞ்சவேண்டிய நிலையில் இருந்த அவரே இளையபாண்டியனுக்கு அநுதாபப்பட வேண்டிய நிலையிலும் இருந்தார். முடிநாகனை அருகே கூப்பிட்டு அரங்கேற்று விழாவிற்குக் கண்ணுக்கினியாளும் அவள் பெற்றோரும் வந்திருக்கிறார்களா இல்லையா என்று பார்த்து அறிந்து வரச்சொல்லலாம் என்று இளையபாண்டியன் எண்ணினாலும் அவ்வாறு செய்ய முடியாமலிருந்தது. ஒரு புறம் சிகண்டியாரும் மறுபுறம் பெரியபாண்டியரும் அமர்ந்து அவனைச் சிறை வைத்தது போலிருந்த அந்தச் சூழ்நிலையில் முடிநாகனை அருகே கூப்பிடவும் இயலாததுபோல் தோன்றியது.

கண்ணுக்கினியாள் வந்திருக்கிறாளா இல்லையா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமோ கட்டுக்கு அடங்குவதாக இல்லை. வாழ்க்கையின் உயரத்திலிருக்கும் ஒருவன் அதன் கீழிருக்கும் தன்னுடைய அந்தரங்கமான சினேகிதனையோ, சினேகிதியையோ காணுகிற அளவு இறங்கி வரமுடியாமற் போவது போல் கொடுமை வேறொன்றுமில்லை என்று தோன்றியது இளையபாண்டியனுக்கு. புலவர்களின் பாயிரம், சிறப்புப் பாயிரங்களுடன் நூல் அரங்கேற்றம் தொடங்கியது. சிகண்டியாசிரியர் பாண்டியர் தலைநகரையும், பெரியபாண்டியரையும், அநாகுலனையும் புகழ்ந்து பாடியபின், இளையபாண்டியர் சாரகுமாரருக்கு இசைநுணுக்கம் அறிவிப்பதன் பொருட்டு அந்நூல் இயற்றப்படுவதாகவும் தொடங்கி நூற்பாக்களை ஒவ்வொன்றாகக் கூறி விளக்கி அரங்கேற்றலானார் சில பண்வரம்புகளுக்கு ஏற்ப இளையபாண்டியனே அங்கு பாடியும் காண்பித்தான். புலவர் பெருமக்கள் சிகண்டியாசிரியரை நோக்கி ஐய வினாக்களையும், தடை வினாக்களையும் எழுப்பினர். அவற்றுக்கெல்லாம் சிகண்டியார் மறுமொழி கூறினார். இளையபாண்டியன் மனநிம்மதியில்லாமல் அங்கிருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தையே துழாவிக் கொண்டிருந்தன.

இறுதியில் ஒருவாறாகத் தன் மனத்துக்கு இனியவளாகிய கண்ணுக்கினியாள் நின்றுகொண்டிருந்த இடத்தையும் அவன் பார்த்துவிட்டான். கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் தங்கியிருந்த பாணர்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்த ஒரு மூலையில் அவளும் கண் கலங்கி நின்று கொண்டிருப்பதை அவன் கண்டு கொண்டான். அவன் உள்ளம் பதறியது. "இசையிலக்கண நூலின் அரங்கேற்றத்தில் பாணர்களைவிட வேறு யாருக்கு உரிமை இருக்கிறது? அவர்களை எல்லாம் எங்கோ ஒரு கோடியில் இருக்கச் செய்திருப்பது ஏன்?" என்றெல்லாம் அவன் மனத்தில் சந்தேகங்களும் கொதிப்புக்களும் கிளர்ந்தன. ஆயினும் அவற்றைப் பாட்டனாரிடம் கேட்க அஞ்சினான் அவன்.

அவனுடைய பார்வை போகிற இடங்களையெல்லாம் கவனித்துக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த பாட்டனாரோ, "எங்கே கவனிக்கிறாய் சாரகுமாரா? ஆசிரியருக்குச் செவி கொடுத்து நூலைக் கேள். பராக்குப் பார்க்காதே!" என்றார். இதில் அவருடைய சூழ்ச்சி ஏதோ இருப்பதாகத் தோன்றினாலும் அவரைக் கேட்க முடியாமல் தவித்தான் இளையபாண்டியன். அரங்கேற்றத்தைப் பற்றியும் அதில் அவள் பாட வேண்டியதைப் பற்றியும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளிடம் தான் கூறியவற்றை எல்லாம் நினைவு கூர்ந்தான் சாரகுமாரன். அவளை அரங்கிற்குள்ளேயே வரவிடாமல் ஒதுங்கி நிற்கச் செய்துவிட்ட விதியை எண்ணி நோவதைத் தவிர அப்போது அவனால் வேறெதுவுமே செய்ய முடியவில்லை. அரங்கேற்றம் மகிழ்ச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

"இலட்சணங்கள் பிறக்கிற அவசரம் சில சமயங்களில் இலட்சியங்களையே அழித்துவிடுகிறது" என்பதாக அன்று அவள் கூறியது நினைவு வந்தது அவனுக்கு. அரங்கேற்றம் முடிந்த பின்பாவது அவள் நிற்கிற இடத்தைத் தேடி ஓடவேண்டுமென்பது அவன் ஆவலாயிருந்தது. தான் ஓர் அரசகுமாரனாகப் பிறந்ததற்காக அதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அன்று வருத்தப்பட்டான் அவன். ஒருவாறு அரங்கேற்றம் நிறைகிற நிலை வந்தது. சிகண்டியாசிரியர் இலக்கண நூலின் இறுதி நூற்பாவை விளக்கிக் கொண்டிருந்தார். அரசவையைச் சேர்ந்த இசைப் புலவர்கள் அதற்கு மேற்கோள் பாடிக்காட்டத் தொடங்கினார்கள். பாடி முடிந்ததும், இளையபாண்டியன் நினைத்ததற்கு மாறாகச் சங்கப் புலவர்களும், அவையிலிருந்த அறிஞர் பெருமக்களும், அவனையும், அவனுடைய பாட்டனாரையும் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். பாட்டனார் அவன் கையை அன்பாகப் பற்றிக் கொண்டு நிற்கிற பாவனையில் அவன் எங்கும் நழுவ முடியாதபடி பிடித்துக் கொண்டு விட்டார். புலவர்களின் புகழுரைகள் அவனுடைய செவியை நிறைக்கத் தொடங்கின.

"இளையபாண்டியருடைய குரலினிமைக்காகவே இப்படியோர் இசையிலக்கணம் தோன்றியது சாலப் பொருத்தமுடையதே" என்றார் ஒரு புலவர். "சிகண்டியாசிரியர் தருணமறிந்து இந்த இசையிலக்கண நூலை அரங்கேற்றியுள்ளார்" என்று புகழ்ந்தார் வேறோர் புலவர். யாருடைய வாயால் புகழக்கேட்டு மகிழவேண்டுமென்று அவன் ஆசைப்பட்டானோ அந்தப் புகழுரையைக் கேட்க முடியாமலிருந்தது. அவள் தன்னோடு வந்திருக்கும் பெற்றோர்களுடனும் பிற பாணர் கூட்டத்தினருடனும் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னராவது அவளைக் கண்டு இரண்டு வார்த்தைகள் பேசிவிட வேண்டுமென்று அவன் தவித்தான். ஆனால் முடியவில்லை.

நீண்ட நேரத்துக்குப் பின் அந்த அவையிலிருந்து அவனும், அவனைச் சுற்றிப் பெரியபாண்டியர், சிகண்டியார், தந்தை அநாகுலன், முதலியோருமாக வெளியேறியபோது, செல்லுகிற வழியில் கண்ணுக்கினியாள் நின்ற பகுதி வெறுமையாயிருந்தது. அவைக்கு வெளியே எங்குமே யாருமே இல்லை. ஆனால் இதென்ன? அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் அவளுடைய யாழ் அல்லவா கேட்பாரற்று வீழ்ந்து கிடக்கிறது?

இளையபாண்டியன் பதற்றத்தோடு தன்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து பிரிந்து விலகிச் சென்று அந்த யாழை எடுத்தான். அது சற்றே கீறி உடைந்திருந்தது.

"யாருடைய யாழ் கீழே விழுந்தபோதெல்லாம் அவன் விரைந்து எடுத்தளித்திருந்தானோ அந்த யாழ் இப்போது கீழே விழுந்து உடைந்தேவிட்டது" என்ற உண்மை மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது. அது அவளுடைய யாழ்தான் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை. விரக்தியிலோ, கோபத்திலோ, அல்லது தான் பார்க்கவேண்டுமென்பதற்காகவோ அவள் அதை அப்படி அங்கே போட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று அவனால் அநுமானம் செய்ய முடிந்தது. இதை அநுமானம் செய்யும் போது பரிதாபத்துக்குரிய அந்த அரசகுமாரனின் கண்கள் கலங்கின. கைகள் நடுங்கின. நெஞ்சம் துடிதுடித்தது. நடுங்கும் கைகளால் அந்த யாழை எடுத்துச் சென்ற போது அவன் கால்கள் பின்னின. நடை தளர்ந்தது.

அந்த யாழ் ஒன்றாவது அவள் ஞாபகமாகத் தன்னிடமிருக்கட்டும் என்று அவன் அதை எடுத்து வருவதைக்கூடப் பொறுக்காமல், "இதென்ன உடைந்த யாழ் போலல்லவா தோன்றுகிறது? உடைந்த பொருள்கள் யாவும் அமங்கலமானவை. திருமகள் விலாசம் திகழும் அரண்மனை வாத்தியசாலையில் வைத்தற்குரிய தகுதி அமங்கலப் பொருள்களுக்கு என்றுமே இல்லை" என்று அதை இளையபாண்டியனிடமிருந்து வலியப் பறித்து அகழியில் எறிந்துவிட்டார் பெரியபாண்டியர். அந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் சிகண்டியாசிரியர் கண்களை மூடிக்கொண்டார். இளையபாண்டியனோ பாட்டனார்மேல் வெறுப்புடனே ஒன்றும் எதிர்த்துப் பேச முடியாமல் இருந்தான். முடிந்தால் அன்றிரவோ, மறுநாள் காலையிலோ, கடற்கரைக்குச் சென்று அவளைக் கோபித்துக் கொள்ளவும் எண்ணினான்.

'கவிஞனின் எழுத்தாணியும் பாணர்களின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவர்களிடமிருந்து கீழே நழுவவிடக்கூடாது' என்று நான் முன்பு கூறியதை மறந்து விட்டாயா? கையிலிருந்த யாழ் உடைவது போல் கீழே போட உனக்கு எப்படி மனம் வந்தது பெண்ணே? - என்றெல்லாம் இடித்துரைக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். ஆனால் அன்று மாலையோ இரவோ, அவன் எங்கும் போக முடியாமல் சிகண்டியாசிரியரும், பெரியபாண்டியரும் அவனுடனேயே இருந்துவிட்டனர். சிகண்டியாசிரியர் ஒன்றும் பேசவில்லை.

பெரியபாண்டியர் மட்டும், "ஓர் அரசகுமாரன் மலை குலைந்தாலும் நிலைகுலையாத திடசித்தமுடையவனாக இருக்கிற மனப்பக்குவம் பெற வேண்டும். கலைகளோ, கலைத்திறனோ அவன் தொழிலல்ல! கலைகளை அவன் இரசிக்கலாம். ஆனால் ஆண்மைதான் அவன் தேசத்தைக் காக்கும்" என்றெல்லாம் சம்பந்தா சம்பந்தமின்றி உபதேசம் செய்யத் தொடங்கினார். பொறுமையாக அவற்றை அவன் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

அன்றிரவு சாரகுமாரனுக்கு உறக்கம் கொள்ளவில்லை. எப்போது விடியும் என்ற ஆவலிலே மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்தான் அவன். விடிந்ததும் பரபரப்பான மனநிலையோடு புரவியேறிக் கடற்கரைக்கு விரைந்தான் அவன். அங்கு சென்று அவன் கண்டதென்ன? கடற்கரைப் புன்னைத் தோட்டம் வெறுமையாயிருந்தது. அங்கு பாடியிறங்கியிருந்த பாணர்கள் எல்லாரும் புறப்பட்டுப் போயிருந்தார்கள். அருகே இருந்த மீனவர்கள் சிலரிடம் விசாரித்ததில் முதல் நாளிரவே அவர்கள் ஒழித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. அவன் தவித்தான். மனம் பதறினான். 'இலட்சணங்கள் பிறக்கும் அவசரத்தில் இலட்சியங்கள் அழிவதும் உண்டு' என்று அவள் கூறிய சொற்களையே மீண்டும் நினைத்தான். ஏதோ ஒரு பரபரப்பில் புரவியை விரைந்து செலுத்திக் கபாடங்களைக் கடந்து புறநகருக்கு வந்தான். 'அவளைப் பின் தொடர்ந்து பிடித்துவிடலாம்' - என்ற வெறியோடு பெரும் பாண்டிய ராஜபாட்டையில் சிறிது தொலைவு சென்றபின், 'அது சாத்தியமில்லை' என்று அவநம்பிக்கையோடு மீண்டும் தளர்ந்து திரும்பினான்.

எதிரே அவன் பாட்டனார் நிறுத்திய மாபெரும் புகழ்மிக்க செம்பொற் கபாடங்கள் வெயிலொளியில் மின்னுவது தெரிந்தது. எதிர்காலத்தில் பெயர் சொல்ல முடிந்த பல காரியங்களைச் சாதிக்க வல்ல சரித்திரத்தை உடைய அந்த இளம் ராஜகுமாரனின் இதயம் குருதிநீர் வடித்தது அந்த விநாடியில். மனித இதயத்தின் அந்தரங்கமான சங்கீதத்துக்கு எந்த நாளும் உலகில் வடிவம் தந்து பாடமுடியாதென்று உணர்ந்தவன் போல் விரக்தியோடு அந்த வானளாவிய கபாடங்களை மீண்டும் அவன் நிமிர்ந்து பார்த்தபோது அவனது அழகிய விழிகளில் நீர் மல்கியது. இப்போது அவனுடைய மனமும் ஒரு கபாடம் ஆகிவிட்டது. மனத்துக்கினிய ஒருத்தியின் மிக இனிய நினைவுகளை உள்ளே வைத்துப் பூட்டிக் கொள்ள வேண்டிய நிலைமையினால் அவனுடைய தலைநகரைத் தவிர அவன் மனமும் கூட ஒரு கபாடபுரம் ஆகிவிட்டது.

'எதிர்கால வரலாறு தன்னையும் - தனக்காகப் பிறந்த இசையிலக்கண நூலையும் பற்றி அறிகிற அளவு உலகம் தன் காதலின் ஏமாற்றத்தை எங்கே அறியப் போகிறது?' என்றெண்ணியவாறே குதிரையை மெல்லச் செலுத்தியபடி மீண்டும் நகருக்குள் திரும்பினான் சாரகுமாரன். கோ நகரத்தின் மாபெரும் கபாடங்கள் திறக்கப்பட்ட அந்த இனிய வைகறை வேளையிலே அந்த அநுதாபத்துக்குரிய இளவரசனின் மனதுக்குள்ளே இரண்டு கபாடங்கள் மூடிக்கொண்டன. அந்த மூடிய கபாடத்துக்குள்ளே ஒரு நளின சங்கீதம் இடையறாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்கு மூப்பில்லை. சோர்வில்லை. ஓய்வில்லை. உலைவில்லை. ஏனென்றால் இந்த உலகில் எந்த நாளும் மனித இதயத்தின் அந்தரங்கமான சங்கீதத்துக்கு வடிவம் தந்து பாட முடிவதில்லை.

முற்றும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top