கற்புநிலை யாதெனில் - 12

Kathambari

Author
Author
SM Exclusive Author
#1
தன்னை, தன் காதலை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு, அவனது கைப்பாலத்திலே, அவளை நிறுத்தி வைத்திருந்தான், … பின்தான், மெதுவாக தள்ளி நிறுத்திப் பார்த்தான்… அவளும் கொஞ்சம் கொஞ்சமாக தலையை உயர்த்தி, அவனைப் பார்த்து, ஒரு கோடு போல், திராணியற்ற புன்னகை தந்தாள்… அவளுக்குள் ஏதோ மாற்றம் இருப்பது போல் தெரிந்தது… அதனால்

"ஏன் ஒரு… ஒரு மாதிரி இருக்க…"

"டயர்டா இருக்கு… அதான்…"

"பீவரோட டிராவல் பண்ணிருக்க கூடாதோ??..நீ சொன்னனு, நானும் கூட்டிட்டுப் போனே பாரு… ப்பீலிங் கில்ட்டி ஆன் மீ… பட் வேற எதுவும் இல்லைல.. உன்னப் பார்த்தா, ஏதோ டிப்பிரஸ்டா இருக்கிற மாதிரி தெரியுது… "

மேலும் மேலும், அவனின், செய்கையால், பேச்சால் உணர்த்தப்படும் காதலால், அவள் சொல்லொன்னா துன்பத்திற்கு ஆளானாள்..

" சரி போ.. போய் ரெஸ்ட் எடு… "

எப்போதும் சொல்லும், 'ம்ம்ம்' என்று கூட சொல்லாமல், திரும்பி, அவள் அறைக்குள் சென்றாள்… கதவைத் தாழிடும் போதும், அவன் நிற்பதைக் கண்டவள்… வரவழைத்த புன்னகையுடன்…

"குட்நைட்… தூங்கு…" என்றாள்.

'இது அவளே அல்ல' என்று அவனுக்குத் தெரிந்தது… அவளுக்கோ 'அவனின், பார்வையில் கூட திருப்துயின்மை' தெரிந்தது… இருந்தும் கதவைத் தாழிட்டாள்…

ஒருபுறம்… கதவை மூடியவள், அதில் அப்படியே சரிந்து கொண்டே வந்து, தரையில் அமர்ந்தாள்.. காதலை மறைத்ததைப் போல, தன் கவலையையும் மறைக்கும் முயற்சியில், வாயை மூடிக் கொண்டு அழுகைக்குள் புகுந்தாள்…

மறுபுறமோ! அவன்… தவித்துக் கொண்டிருந்தான்.. 'அவள் எதையோ தன்னிடம் மறைக்கிறாள்… அவளிடம் கதவைத் திறக்கச் சொல்லி, அதைக் கேட்டறிய வேண்டும்' -- என்றது காதல் மனம்… 'அவள் தன்னிடம், எதையும் மறைக்க மாட்டாள் என்றது' -- காதலியின் மீது நம்பிக்கை கொண்ட மனம்… என்ன செய்வது என்று தெரியாமல், அவனும் குழம்பித்தான் போனான்… வெகு நேரத்திற்குப் பின்னரே, அங்கிருந்து நகர்ந்து, அறைக்குச் சென்றான்…

அவளின் இரவுகள் தூக்கமில்லாமல் கழிந்தது…. நாளைய விடியல் பெரிதாக இருக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் காரணமாக இருக்கலாம்.. இந்த ஐந்து நாட்களை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டு வாழ்ந்திட வேண்டுமென்று நினைத்தாள்… அது முடியுமா? என்று அவளுக்கே சந்தேகம்! இத்தனை சீக்கிரமாக முடிந்துவிட்டதே, இந்த ஐந்து நாட்கள்!! என்று ஏக்கமாய் இருந்தது… அவனுக்கும் அவளுக்கும் இடையே உள்ள காதலை உணர முடிந்தது… உணர்ந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை… தான் ஏற்றாலும், சுற்றி உள்ளவர்கள் பற்றிய பயம்தான் அதிகமாக இருந்தது… தன்னைத் தானே, விடை தேவையில்லாத வினாக்களைக் கேட்டுக் கொண்டு அலுத்துப் போய், அசதியில் தூங்கி போனாள்…

அதிகாலையிலே விழிப்பு வந்தது.. இன்றைய தினத்தை கடப்பது, அத்தனை எளிதல்ல என்று நினைத்தாள்.. யோசித்தது போதும் என்று, எழுந்து தயாரானாள்… அன்றைய தினம் அவனின் கண்களின் பாவை நிறத்தில் புடவை அணிந்திருந்தாள்… நன்றாக மனதை திடப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்…

அவளுக்கு முன்பே அவனும் விழித்தெழுந்து, அவளுக்காகவே காத்திருந்தது போல் இருந்தது, அவன் அமர்ந்திருந்த தோரணை…

அவள் வெளியில் வருவதைக் கண்டவன், எழுந்து சென்று.. "இப்ப எப்படி இருக்கு.. பீல் பெட்டரா? " என்று கேட்டான் .

"ம்.. சாப்பிடலாமா.." என்றாள்.

"இல்ல… ஒரு பங்கஸூனுக்குப் போகணும்… ஸோ அங்கதான் பிரேக்பாஸ்ட்.. "

"ஓ… அப்போ லக்கேஜ் எப்ப எடுத்துக்க…" என்றாள் முதல் முயற்சியாக…

"லக்கேஜா.." என்று புரியாதது போல் கேட்டான்…

"இன்னைக்கோட ஆறு நாள் முடியுதுல…. அதான்…" என்று பின்னோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

"அவ்வளவு அவசரம் எதுக்கு… மேரேஜ்க்குப் போயிட்டு வந்து, அப்புறமா எடுத்துக்கோ.. " என்றவனுக்குப் புரிந்தது, அவளை இங்கே நிறுத்தி வைக்க, நிறைய போராட வேண்டுமென…

" மேரேஜா.. "

"ம்ம்ம்… என்னோட ரிசார்ட்டுக்கு மெட்டீரியல் சப்ளை பண்ற ஒருத்தரோட பையனுக்கு மேரேஜ்… ஸோ போயிட்டு வந்து, மத்தத பார்த்துக்கலாம்.."

"நான் எதுக்கு அங்கெல்லாம்.. "என்று ஒதுங்கப் பார்த்தாள்.

"அதான் ஆறுநாளுனு நீயே சொன்னேன்ல… இன்னும் ஆறு நாள் முடியல.. வந்தே ஆகணும்.." என்றான் நக்கலாக..

இவனைச் சமாளிப்பதற்கு, கல்யாண விழாவைச் சமாளிக்கலாம் என்று எண்ணியவள்… "சரி… "என்று அவனுடன் கிளம்பினாள்…

ஆனால் அங்குச் சென்றபிறகே தெரிந்தது, கல்யாண விழாவைச் சமாளிப்பது, அதை விட கடினமென்று.. ஏக்கங்களும் கோபங்களும் அவளை ஒருங்கே வாட்டியது…

அவனின் வருகை கண்டு, மணப்பையனின் தந்தை வந்து வரவேற்று, அவன் இருப்பதற்கு இருக்கை ஏற்பாடு செய்தார்.. சில நொடிகள் சம்பிரதாய நலவிசாரிப்புகள் முடிந்த பின், விடை பெற்றுச் செல்லும்போது 'இவங்க..' என்று அவளைக் கை காட்டினார்..

"என்னோட ஃபிரண்ட்.." என்று சொன்னான்…

சரி என்று தலையசைத்துவிட்டு, அவளையும் வரவேற்பது போல், ஒரு புன்னகையைத் தந்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்… அவர் சென்றவுடன்..

"ஏன் ப்ரண்ட்னு சொன்ன?? …" என்று 'தன்னை, அவருக்கு அறிமுகப்படுத்துதல் தேவையா' என்பது போல் கேட்டாள்..

"ஓ.. லவ்வர்னு சொல்லிருக்கனும்ல.. வெயிட், அவரக் கூப்பிட்டு சொல்லிடலாம்… " என்று எழுந்திருக்கப் போனவனைக் கையைப் பிடித்து இழுத்து, "பேசாம உட்காரு.." என்றாள் கோபமாக… அவனைத் திரும்பவும், இருக்கையில் அமரவைக்கப், அவன் கைகளைப் பிடித்துப் போராடிக் கொண்டிருந்தாள்…

சிறிது வினாடிகளில், அவனே சிரித்துக் கொண்டு, அமர்ந்து விட்டான்...

"எதுக்கு சிரிக்கிற…" என்றாள், இன்னும் அவன் கைகளை விடாமல் ...

"இல்ல… நானா போய், சொல்லியிருந்தா அவருக்கு மட்டும்தான் தெரிஞ்சிருக்கும்…. இப்ப… "என்று சுற்றியும், அவள் கைப்பிடித்து இழுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தான்..

அவளும் பார்வையைச் சுழல விட்டாள்.. அனைவரின் பார்வையைச் சந்திக்க முடியாமல், "ச்சே" எனச் சொல்லி, அவன் கைகளை விடுவித்து, கவனத்தை வேறு பக்கம் திருப்பும் எண்ணமாக, மணமேடையைப் பார்த்தாள்…

சிறிது நேரம், விமர்சையாக அங்கு நடந்து கொண்டிருந்த கல்யாணச் சடங்குகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்…

"என்ன அப்படி பார்க்கிற…." என்றான்.

"...."

"கைடன்ஸ் மாதிரியா…"

'புரியல எனக்கு' என்பது போல பார்த்தாள்…

"நம்ம மேரேஜ்க்கு கைடன்ஸ் எடுக்கிறியா..??"

"ப்ச்… கிராண்டா நடக்குதே, அதான் பார்த்தேன்.. நீ வேற.."

"நம்ம கல்யாணம், இதவிட கிராண்டா நடக்கும்…"

அவனையே 'எதற்கு இப்படி' என்பது போல் பார்த்தாள்.

"என் பாட்டியோட ஆசை… மறந்திடுச்சா…." என்று கண் சிமிட்டல் செய்தான்…

'எவ்வளவு நம்பிக்கை என் மீது' என்ற பார்வை பார்த்தாள், அவன் விழியை நோக்கி…

" அப்ப ஒன்னு ரெண்டு பேருக்கு டவுட் இருந்தாலும், இப்ப நீ பார்க்கிற பார்வையில கன்பார்ம் பண்ணியிருப்பாங்க…" என்றான் சிரித்துக் கொண்டே..

"ச்சை.. " என்று திரும்பிக் கொண்டாள்.

தற்செயலாக அவர்கள் அமர்ந்திருந்த பக்கமாகக், கடந்து செல்லப் போன, யாரோ ஒரு நடுத்தர வயது மனிதர், அவனைக் கண்டவுடன், அருகில் வந்து நலம் விசாரித்தார்… சிறிது நேரம் அவனிடம், தொழில் சார்ந்த பேச்சுகள் பேசி முடித்து, விடை பெறும் தருவாயில், அவளைப் பார்த்தார்..

"உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குமா…நீங்க கோவாவ??" என்று அவளிடம் கேட்டார்..

அவள், பதில் சொல்ல முடியாமல், துடிதுடித்துப்போனாள்..

அவனோ, "ஆமாம்… கோவாலதான் பத்து வருஷம் இருக்காங்க… ஸோ நீங்க பார்த்திருக்க சான்ஸ் இருக்கு…" என்று எளிதாகச் சொன்னான்..

அவரும்" இருக்கலாம்.. இருக்கலாம்.." என்று சொல்லி விடைபெற்றார்…

அவளுக்குத்தான் அதற்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை.. "போலாமா.." என்று அவனிடம் கேட்டாள்..

"வந்து கொஞ்ச நேரம்கூட ஆகல… அதுக்குள்ள எப்படி போகமுடியும்… வெயிட் பண்ணு…" என்றான்.

அமைதியானவள், சிறிது நேரத்தில் மீண்டும், அவனிடம் திரும்பி "எனக்குப் போனும்…" என்றாள்..

"ஒரு பத்து நிமிஷம் கூட வெயிட் பண்ண முடியாதா.."

"நீ கார்க்கீயைக் கொடு… நான் கார்ல வெயிட் பண்றேன்.." என்று கை நீட்டினாள்.

"சொல்றத கேட்கிறதே இல்ல.." என்று சாவியை எடுத்து, அவளிடம் நீட்டினான்..

வாங்கிக் கொண்டவள் "தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு, அந்த இடத்திலிருந்து 'கடகடவென' வெளியேறினாள்... காரின் அருகே வந்த பின்தான், நின்று மூச்சு வாங்கினாள்… 'ஏன் இந்த இடத்திற்கு வந்தோம்' என்று கோபம் வந்தது.. 'இப்பவே போய் விடலாமா.' என்று நினைத்தாள்.. ஆனாலும் அது அவளுக்கு எளிதல்ல என்பது போல் தோன்றியது… காத்திருந்தாள்… சிறிது நிமிடங்களுக்கு பின்பு, அவன் அங்கு வந்தான்..

"கார்கீய வாங்கிட்டு வந்துட்டு.. வெளியில நிக்கிற.."

"சும்மாதான்.. போலாமா.." என்றாள்.

"போலாம்… போலாம்…. " என்று அவளிடம் சாவியைப் பறித்துக் கொண்டு, காரை எடுத்தான்..

சிறிது நேரத்தில் வீடு வந்தவுடன், வேகமாக இறங்கி வந்தவள், அதே வேகத்தில் கதவை நோக்கி நடந்தாள்..

ஆனால் அவனோ, எவ்வளவு மெதுவாக வரமுடியுமோ, அவ்வளவு மெதுவாக வந்து கதவைத் திறந்தான்.. "எதுக்கு இந்த அவசரம்.. " என்றான்…

"ஒன்னுமில்லை…" என்று சொன்னவள் விறுவிறுவெனச் உள்ளே சென்று, தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்… உள்ளே வந்தவளின் பரிதவிப்புகள் அதிகமாயின… கண்களில் கவலைதான் பரவிக்கிடந்தது…. அவனிடம் காதலை மறுப்பது கொடுமை என்றால், அவனுடன் சேர்ந்து வாழப் போகும் வாழ்வு அதனினும் ஓருபடி மேலே கடுமையுடையதாகத் தோண்றியது… நேற்று, அந்தப் பெண் கேட்டாளே 'பர்சேஸா' என்று… அந்தப் பெண் கேட்டதின் அர்த்தத்தில், இவள் மனம் ஒருகணம் நடுங்கியது… தன்னுடன் இருக்கும் போது அவனும் சேர்ந்தல்லவா தவறாகப் பார்க்கப் படுவான்… அதுமட்டுமல்ல, இன்றைய தினம் கூட ஒருவர் கேட்டாரே 'பார்த்த மாதிரி இருக்குனு'... அவனுக்கு அது தர்மசங்கடமான நிலையோ? இல்லையோ?... ஆனால் தன்னால் அவன் அப்படி ஒரு நிலைக்கு உள்ளாகக் கூடாது.. அதற்காகவாது தன் காதலை மறைக்க வேண்டும்… நூறில் ஒரு சதவீதமாக, தன்னின் இந்த முடிவு, அவனுக்குத் துன்பத்தை தருமானால், என்ன செய்வது என்று காதல் மனது ஆசையாக துடித்தது… அந்த மனதைக் அடித்து, அடக்கி வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்….

அவனோ, அவளின் நடவடிக்கையை யோசித்தவாரு இருந்தான்… நேற்று தன்னுடைய பரிதவிப்பின் வெளிப்பாட்டைத், தவறாகப் புரிந்து கொண்டாளோ என்று மனம் பதறியது?.. ஆனால் அதற்கு முன்னரே அவளது முகம் சரியில்லை என்று மூளை உணர்த்தியது..

'லக்கேஜ்' எடுத்துக் கொண்டு வெளியே வந்தவளிடம் "ஏன் இந்த முடிவு.." என்று கேட்டான்.

"ஆறு நாள் முடிஞ்சிருச்சில, அதான்.. " என்றாள் முகத்தை சமநிலையில் வைத்துக் கொண்டு… ஆனால் மனம் என்னவோ ஊசலாடிக் கொண்டிருந்தது…

"ஓ.. சிக்ஸ் டேய்ஸ்.. கிரேட்.. ஆறு நாளப் பத்தி, நீ பேசாத… பர்ஸ்ட் நேத்து நடந்ததுக்கும், இன்னைக்கு நடந்துக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு.. அது ஏன்னு சொல்லு?? .."

"அப்படி எல்லாம் எதுவும் இல்லை… நீயா ஏதாவது நினச்சுகிட்டேனா.. நான் என்ன பண்றது.. "

"நான் ஏதாவது நினைக்கிறேனோ.. நீ ஒண்ணுமே நினைக்கவே இல்லன்னு சொல்லு.. " என்றவன் பார்த்த பார்வையில், நேற்று அவள், அவனிடம் நடந்து கொண்ட விதம் தெரிந்தது…

"நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல.. பிடிச்சிருக்கு, ஆனா அதுக்கு மேல எதுவும் இல்லை.. " என்றாள் தன் காதலைச் சாகடிக்கும் முயற்சியாக…

"அன்னைக்கு நடந்தத விடு.. நேத்து நடந்ததை பத்தி மட்டும் பேசு.. " என்று கொஞ்சம் கடினமான குரலில் பேசினான்…

"பாஸ்ட்ட பத்தி பேசக் கூடாதுனு சொல்வ.. இப்ப நீயே பேசற… " என்று சிரித்தாள்…

நய்யாண்டி சிரிப்புடன், அவள் தந்த பதிலுக்கு, 'என்ன ரொம்ப தெளிவா பேசுறோம்னு நினைப்பா' என்ற அவனின் பார்வையே, அவளைக் குத்தி, அவளின் சிரிப்பை மரிக்கச் செய்தது..

"நீ மேரேஜ் பங்ஸன்ல அவர் கேட்டத தப்பா எடுத்துக்கிட்டனு நினைக்கிறேன்… அந்த இடத்தில யாரு இருந்தாலும், பேசுனும்கிறதுக்காக, அவர் அந்தக் கேள்வியைத்தான் கேட்டிருப்பாரு… நீயா, எதாவது யோசிக்காத.. "என்று, அவளின் முடிவிற்குக் காரணம் தேடினான்…

" சரி.. "என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டாள். அதிகமாக பேசினால், அவனை சமாளிப்பது கடினம் என்று நினைத்தாள்.
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#2
"என்ன சரி.. இதுக்குத்தான் நேத்தே தெளிவா சொன்னேன்… 'யார் என்ன சொன்னாலும் உன்னோட முடிவில ஸ்ட்ராங்கா இருனு..' இப்ப பாரு.. " என்றான் விரக்தியாக.

"இதுதான் என் முடிவு...." என்றாள் விற்றேற்றியாக..

"இதான் முடிவா!!.. அதென்ன எனக்கு மட்டும் இப்படி… பாதியிலேயே விட்டுவிட்டுப் போறீங்க… " என்றான் கனத்த குரலில்.

அவனின் அந்தப் பேச்சில், அவள் உள்ளுக்குள் அழுதாள்.. அவன் பார்க்காத போது, பரிதவிப்பை ஏந்தியும், பார்க்கின்ற போது பற்றற்று பார்த்தும், - - என்று மாற்றி மாற்றி உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்…

" ச்சே ச்ச்சே.. நீ அப்படி நினைக்காத.. நீ ரொம்ப நல்லவன்தான்… அதனால.. "

"நான் உங்கிட்ட சர்டிபிகேட்டா கேட்டேன்.." என்றான் எரிச்சலாக..

"நான் சொல்றத கேளு…"

"சொல்லு…"

"உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு, சீக்கிரமாவே .."

"ஸ்டாப் இட்.." என்று கத்தியவன்.. "ஒரு பொண்ணோட பிரேக்அப் ஆன உடனே, இம்டியேட்டா உன்ன லவ் பண்றேனுதான இப்படிப் பேசற.. ஐ திங், அதான் உனக்கு, என்னோட லவ்வடோ டெப்த் என்னனே புரியல.. " என்றான் ஆழ்ந்த, அதே நேரத்தில் கோபமான குரலில்.

"நீயேன் காதல், அப்படி இப்படினு யோசிக்கிற…" என்றாள் விடாமல், அவனின் கோபத்தை நிறுத்தி வைக்க முயன்றாள்…

"என்னமோ இன்னைக்குத்தான் பர்ஸ்ட் டைம் சொல்ற மாதிரி பேசிற…"

"கோவாவ சுத்திக் காட்டிறதுதான ப்ளான்.. நீயேன்.." என்று அவள் முடிக்கும் முன்னே…

"ஆமா.. அன்னைக்கு அப்படித்தான் நினைச்சேன்… பட் சேம் டேயே, நான் என்னென்ன கொஸ்டின்லாம் ஒரு லவ்வர்கிட்ட, எக்ஸ்பெக்ட் பண்னேனோ, அதெல்லாம் உங்கிட்ட இருந்து வர்றப்ப, எவ்ளோ கன்பீயூஸ் ஆனேன் தெரியுமா?.. மே பீ அதுலதான், நீ கை கொடுக்க வந்தத கூட கவனிச்சிருக்க மாட்டேன்…" என்றான்.

முதல் நாளே அவனுக்குள், தான் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறோமா? என்ற உணர்வே, அத்தனை மகிழ்ச்சி தந்தது…ஆனால் அதை அனுபவிக்கும் நேரம் இதுவல்லவே!! என்று நினைத்தவள்… " ஏற்கனவே முடிவு பண்ணதுதானே… அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு பண்ற.. " என்று அவள் மனச்சுவரில், அவன் வரைந்த ஓவியங்களின் மீது, வாளி வாளியாக தண்ணீர் ஊற்றி அழிக்க முயற்சித்தாள்….

"தொந்தரவா… இன்னைக்கு நீ நடந்துகிறதுல டிபரென்ஸ் இருக்கு.. அது ஏன்னுதான கேட்டேன்…"

"சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டிருக்க… ஒன்னும் பண்ண முடியாது… நான் கிளம்புகிறேன்.." என்று செல்ல யத்தனித்தவள், நின்று திரும்பி "தேங்க்ஸ்.. இந்த அஞ்சு நாள….." என்றாள்.

"உன் தேங்க்ஸ தூக்கி டஸ்பின்ல போடு…" என்றவன்.. "நீ என்னைத் திரும்பி வந்து பார்ப்பனு தோணுது… அதனால சொல்றேன்…எனக்கு இப்ப இருக்கிற பிஸ்னஸ் டென்ஸன்ல, கண்டிப்பா வீட்டில் இருக்க மாட்டேன்… ஸோ, என்னோட ஆபீஸ்லதான் இருப்பேன்… இதே ரோட்டுக்கு பேரலலா இருக்கிற ரோட்லதான் என்னோட ஆபீஸ் இருக்கு… ஸ்டார் டவர்ஸ்ல, பிஃப்த் ப்ளோர்.. புரியுதா.. " 'நீ என்னை பார்க்க வருவ' என்ற நம்பிக்கையில் சொன்னான்..

"அவ்வளவு வேலை இருந்ததுனா, எதுக்கு அதைவிட்டுட்டு… இப்படி தேவையில்லாத வேல பார்த்த… " 'உன்னை மறுபடியும் பார்க்க வரமாட்டேன்' என்று நாசுக்காக சொன்னாள்.

"எது தேவை? எது தேவேயில்லனு? எனக்குத் தெரியும்.. நான் என்னைக்கும் எனக்குப் பிடிச்சத பண்றவன்.. இந்த பைவ் டேய்ஸ்ம் அதேமாதிரிதான்… போதும் பேசுனது, நீ உன் பேரு, போன் நம்பரைச் சொல்லு.. " என்றான்.

நம்பரைச் சொன்னவள், தன் பெயரைச் சொல்லாமல் மெளனம் காத்தாள்..

"ஹலோ.. பேரச் சொல்லு…"

"இல்ல வேண்டாம்…."

"ப்ச்… என்ன வேண்டாம்.. "

"நான் யார் கிட்டேயும் பேர் சொல்றது இல்லை.. "என்றாள்.. முதல் நாள் அவளைப் பார்த்த பொழுதும், இப்படித்தான் இருந்தது அவளது பேச்சு… அதே பேச்சு திரும்புகிறது… இந்த ஐந்து நாட்களில் இருந்த 'அவள்' இப்பொழுது இல்லை, என்று அவனுக்குப் புரிந்தது…

"நான் எங்கிட்டதான சொல்லச் சொல்றேன்.. "

".... "

"புரியல… இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்னு… "

"உனக்குப் புரியற மாதிரி சொல்லனும்னா… இந்தப் பத்து வருஷத்தில, என்னைக் கடந்து போன யார்கிட்டயும், என்னோட பேரச் சொன்னதும் இல்லை… யார் பேரயையும் கேட்டதுமில்ல..… அதேதான் உனக்கும்… " என்றாள் அழுத்தம் திருத்தமாக, அவனைப் பார்த்து.. அந்தப் பார்வையில் அத்தனை வெறுமை இருந்தது…

இதற்கு, அவன் என்ன பதில் சொல்ல முடியும்… வார்த்தைகளற்று நின்றான்.. அவனாலும், அவளுக்கு ஈடாக வார்த்தைகளைப் பிரயோகிக்க முடியும், ஆனால் அது இன்னும் அவளைக் காயப்படுத்தும்… அந்த ஒரு காரணத்தால் அமைதியாக நின்றான்..

" புரிஞ்சிடுச்சா…" என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு...

"ம்ம்ம்.. நல்லா… கடைசியா என்ன சொல்ல வர்ற… இங்க இருக்க மாட்ட… அதான…" என்றான் வலிகளுடன்..

தான் எடுத்த முடிவை, அவன் சொல்லிக் கேட்கும் போது, அது தருகின்ற வேதனையும், வெறுமைகளும், ஆற்றாமைகளும் பெரிதாகத் தோன்றியது… இருந்தும் "ஆமாம்.." என்றாள்.

"நீ குழம்பி இருக்கிற… அதான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க… அதனாலதான் இப்படி என்னைய கஷ்டப்படுத்திற மாதிரி பேசவும் செய்ற… "

"ச்சே ச்சே.. நான்… நா… நான்… ஏன் குழ.. குழம்பனும்…கஷ். கஷ்டப்படுத்தனும்… " என்றவளின் சத்தம் குறைந்த போயிருந்தது..

பார்வையை அங்கும் இங்கும் அலையவிட்டுக் கொண்டே… "ப்ச், அத நீதான் சொல்லனும்… விடு, உனக்கா என்னைக்கு பேரக் கேட்கனும்னு தோணுதோ, அன்னைக்கு கேளு…" என்றவன், தன் பார்வையை அவள் மேல் நிறுத்தி… " அவ்வளவுதான…" என்றான்.

வேறு வார்த்தைகள் சொன்னால், உரையாடல் தொடருமோ எனப் பயந்து.. " ம்ம்ம்… " என்றாள்.

தான் எதுவும் பேசினால், அவளுள் ஏற்பட்டிருக்கும் தன் மீதான பாதிப்பு குறைந்து விடுமோ என எண்ணியவன், எதுவுமே சொல்லாமல், அவன் அறைக்குள் சென்று விட்டான்..

தன்னையும் அறியாமல், கண்களில் நீர்ச் சொறிந்தாள்… இதற்குத் தானே ஆசைப்பட்டு, இத்தனைக் களேபரம் செய்தாய், பின்பு எதற்கிந்தக் கண்ணீர் என்று, அவள் சாகடிக்க நினைத்தக் காதல், சாகாமல் அவளை எள்ளி நகையாடியது…

எவ்வளவு சந்தோஷத்தை அள்ளிக் கொடுத்தவனையே, சங்கடப் படுத்திப் பார்த்தாயிற்று… இனி அந்த நீலவிழிகளைப் பார்ப்போம் என்ற நம்பிக்கை அறவே அற்று, கடந்த காலச் சங்கிலியில், தன்னைத் தானே கட்டிக் கொண்டன பழுப்பு விழிகள்!!

(தொடரும் )
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#5
ரொம்ப கஸ்டமாகீது சிஸ்ட்ரு:sleep:
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#8
So sad... 😔😔😔 என்ன சொல்றதுன்னு தெரியலை... Climax சீன்ல கொண்டு வந்து நிப்பாட்டிடீங்க... பரி டியர்... மிகவும் கனமான நகர்வு தான் இருவருக்கும்😕😕😕....பேர் சொல்லாததன் காரணம் நிச்சயமா இப்படி இருக்கும்னு எதிர் பார்க்கலை 😢😢😢...இப்ப எனக்கு பேர் kekkanumnu தோணலை பரிம்மா... உங்க எழுத்துல கதை சொல்ற விதம் அருமை dear..😘😘😘😍😍
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top