• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

களம்புகல் ஓம்புமின் | சிறுகதை | அறிவியல் புனைவு | சங்கவிலக்கிய அடிப்படை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
[மு.கு.: கதைக்கு முன் இதைப் படிக்கவில்லை என்றால் ஒருமுறை படித்துவிடுக! நன்றி!]
[கதையின் இறுதியில் ஒரு ‘அருஞ்சொற்பொருள்’ தந்துள்ளேன். தேவையெனில் பார்க்கவும். ஏதேனும் புரியாத சொல் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள், சேர்த்துவிடுகிறேன்!]

1

தொடுவானத்தில் கதிரவனின் வெளிச்சம் மெல்லிய வைரவூசியாய் நீண்டு பருத்துக்கொண்டிருந்தது. வளிமண்டலம் இல்லாத நிலவின் பரப்பில் கருப்பு வானத்தில் ஊடுருவிய அந்த வெள்ளை ஒளிக்கற்றை மெல்லியதாயினும் நேரடியாய்க் காண இயலாததாய் ஒளிர்ந்தது.

வளிமண்டலமில்லாத நிலவுகளின் விடியல்கள் கவிதையின் பாடுபொருள்கள் அல்ல; அந்நிலவின் பரப்பில் தத்தம் பணியில், அது ஏதேனும் ஒரு குமிழின் வாயிலில் கதிர்வாளைப் பிடித்தபடி சும்மா நிற்பதாய் இருந்தாலும், கருத்தாய் ஈடுபட்டிருந்த தொடிம வீரர்களும் கவிபாடும் கவிஞர் அல்லர்!

பதுமன் இறுமாப்பும், அச்சமும், சோர்வும் கலந்த கலவையாய்த் தொடிமப் படைகளின் பாடிவீடுகளாய் விளங்கிய குமிழ்களின் வரிசையின் ஊடே நடந்தான். இறுமாப்பு, அவனை யாரும் தடுக்காததால் ஏற்பட்டது - படைவீரன் சீருடையில் இருந்தாலும் அவனது தோளில் மின்னிய எலியின் உருவம் அவனை ஒற்றன் என அடையாளம் காட்டியது, எனவே அவனை யாரும் தடுக்கவில்லை, தடுக்கவும் இயலாது, இதற்காகவே அவன் இங்குத் தன் சீருடையில் வந்திருந்தான். அச்சம், அவன் கொண்டு வந்த செய்தியின் கசப்புத்தன்மையினால் உண்டானது - பதி என்ன செல்லப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு - என்ன சொல்வார் என்று அவனுக்குத் தெரிந்திருந்ததன் உறுத்தல். சோர்வு, பயணக் களைப்பு. அதியக் கோளிலிருந்து அதன் நிலவுக்கு 20 காலத்துளிகளில் வந்துவிடலாம் - அதியர்களின் கலத்தில் வருவதென்றால் - இவன் யாருமறியாது வர வேண்டிய நிர்பந்தத்தில் மீத்தாவலைப் பயன்படுத்தி ஏறத்தாழ இரண்டு ஒளிநாள் தொலைவு பயணித்தல்லவா வந்திருக்கிறான்? ஒன்றிரண்டு நொடிகளுக்கு என்றால் மீத்தாவல் விளையாட்டு போல இருக்கும் (சிவ்வென்று புத்துணர்வு தருவதாய்) அதற்கு மேல் பதுமனுக்கு ஒவ்வாது - ஆனால், வேறு வழியில்லை!

தொடிம வீரர்கள் அதியக் கோளை முற்றுகையிடுவதற்கான பணிகளில் மும்முரமாய் இருப்பதைக் காண முடிந்தது பதுமனால். இவனை யாரும் பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை, ஆனால் ஒவ்வொரு நிலையாகக் கடந்து அவன் பதியின் குமிழை நோக்கி முன்னேறுகையில் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளால் தான் கவனிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதைப் பதுமன் நன்கு அறிந்தே இருந்தான். அவனது சீருடையையும் கவசத்தையும் ஊடுவிப் பார்க்கும் ஊடுகதிர்க் கருவிமுதல் அவனது நாடித்துடிப்பையும் இரத்தத்தில் கலந்திருக்கும் வேதிப்பொருள்களையும் தொலைவிலிருந்தே அலசிக்கொண்டிருக்கும் பல்லொலிக் கருவிவரை ஆங்காங்கிருப்பதை அவனால் உணர முடிந்தது! எனினும் பதி இருந்த குமிழியின் வாயிலை அவன் அடைந்ததும் அங்குக் காவல் புரிந்த வீரர்கள் சம்பிரதாயமாக அவனது விவரங்களை விசாரித்தனர்.



தொடிமர்களின் பாடிவீடுகளின் இந்தப் பகுதி நிலவின் ‘முகப்’ பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. அதியக்கோளின் ஒரே நிலவான இத்துணைக்கோள் அதியத்துடன் கடலலைப்பிணைப்பு பெற்று இயங்குவதால் அதன் ஒரு அரைகோளம் எப்போதும் அதியக் கோளை நோக்கியதாகவும், மற்றொரு அரைகோளம் எதிர்த்திசையிலேயும் இருக்கும் - அதியக்கோளை நோக்கியவண்ணம் இருக்கும் பகுதியைத்தான் ‘முகம்’ என்பர், மற்றதை ‘புறம்’ என்பர்.

தொடிமர்கள் அதியக்கோளின் மீது படையெடுத்து, அதனை முற்றுகையிட ஆயத்தம் செய்யத் தோதான பகுதி அக்கோளின் நிலவின் முகந்தானே? தொடிமர்களின் எண்வகைப்படைப் பிரிவுக்கும் தலைவரான, அவற்றின் மாதண்ட நாயகரான, அவரது பதவிக்கேற்ப எல்லா வீரராலும் ‘பதி’ என்று அழைக்கப்படுபவரான பெருஞ்சேனாதிபதி நன்மள்ளனாரின் பாடிவீடு, செயற்கை வளிமண்டலமும் தட்பவெட்ப சீரமைப்பியும் கொண்டதான அந்தப் பெரிய குமிழி, நடுநாயகமாக தொடிமர்களின் கொடி பெரிதாய்ப் பறக்க, அதியக்கோளை உற்று நோக்கும் ஒரு பெருங்கண்ணைப் போல அமைந்திருந்தது. பதுமன் ஒருவித பரவசத்துடன் உள்ளே நுழைந்தான்.

நிலவின் ‘புறத்’தில் இன்னொரு பாடிவீடு அமைந்திருப்பதையும் அவன் அறிந்தேயிருந்தான், அதை மனத்திரையில் கற்பனை செய்தவன், ஒரு வேளை அடுத்து அதற்குள் செல்லும் வாய்ப்பும் அவனுக்கு வாய்த்தாலும் வாய்க்கும் என்பதை எண்ணிப்பார்த்தான், ஒற்றர்படை தண்டநாயகர் அவனை எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் அனுப்பியிருந்தார். தொடிமக்கோளின் சர்வாதிகார ஆளுநரைக் கூட சந்திப்போம் என்ற எண்ணம் அவனது பரவசத்தை மேலும் கூட்டி உடலில் மெல்லிய புல்லரிப்பை உண்டுபண்ணியது, அவனது உடலில் ஏற்பட்ட அம்மெல்லிய வேறுபாடுகளை வெற்றுவெளியிலிருந்து வளிமண்டலத்திற்குள் வந்ததன் எதிரொலி என்று எண்ணிக்கொண்டன அவனைக் கண்காணித்த கருவிகள்!

பதுமன் உள்ளே நுழைந்து மூச்சுமுகமுடியைக் கழட்டியவுடன் பெருஞ்சேனாதிபதியின் மெய்க்காப்பாளன் ஒருவன் அவன் முன் வந்து, தன்னைத் தொடருமாறு செய்கை காட்டிவிட்டு முன் செல்ல, பதுமன் தொடர்ந்தான். தனக்கு முன்னால் செல்பவன் தனக்கே மெய்க்காப்பாளனாய்ச் செல்வதைப் போல உணர்ந்த பதுமனுக்குப் பெருஞ்சேனாதிபதியின் புகழ்பெற்ற மெய்க்காப்பளர்களாகிய ‘நெருப்பீட்டி’களுள் ஒருவன் தனக்குக் காவல் செய்கிறான் என்ற எண்ணம் பூரிப்பைத் தந்தது. முன்னால் சென்ற அந்த நெருப்பீட்டி சட்டென நின்று திரும்பிப் பதுமனை முறைத்துவிட்டு மீண்டும் முன்னால் செல்லத் தொடங்கினான். பதுமன் எண்ணமும் உணர்வுகளும் அடங்கிப் போனவனாக அவனைப் பின் தொடர்ந்தான்!

ஒரு அறையின் வாசலில் நின்று அருகில் இருந்த ஒரு உலோக வட்டத்தைத் தனது ஈட்டியால் அந்த மெய்க்காப்பாளன் தட்ட, கதவு திறந்துகொண்டது. பதுமனை உள்ளே செல்லச் செய்கை காட்டிவிட்டுக் கதவின் அருகிலேயே நின்று கொண்டான் அந்த நெருப்பீட்டி. பதுமன் உள்ளே நுழைந்தவுடன் அவனுக்குப் பின்னால் கதவுகள் மூடிக்கொள்வதை உணர்ந்தான். அவனுக்கு நேராக ஒரு மேசையும் அதற்குப் பின்னால் ஒரு உயர நாற்காலியும் இருந்தன. அவ்வறை எந்த விதமான அலங்காரங்களும் இன்றி, மிக வெளிறிய இளஞ்சிவப்பில் மெல்லிய மனவழுத்தம் தரும் அமைப்பில் இருப்பதாகத் தோன்றியது பதுமனுக்கு. அறையைப் பார்வையால் ஒரு சுற்று அளந்து மீண்டும் அந்த நாற்காலியை நோக்கும்போதுதான் அதற்குப் பின்னால் அறையின் இருமூலையிலும் இரண்டு நெருப்பீட்டிகள் நிற்பதைக் கண்டான் பதுமன். அவனது இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது! இவர்கள் இங்கேயேதான் நிற்கின்றனரா, இல்லை நான் வந்தபின் வந்தனரா?

அடுத்து என்ன என்று அவர்களை வினவலாமா வேண்டாவா என்று பதுமன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே அவனுக்கு வலதுபக்கம் சுவரில் ஒரு கதவு அரவமின்றித் திறக்க நன்மள்ளனார் அறைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்தார். ‘மாதண்ட நாயகர், பெருஞ்சேனாதிபதி நன்மள்ளனார்’ என்று பதுமன் ஒருமுறை சொல்லிக்கொண்டான். இவர்தானா? சீருடை ஏதுமின்றி, விடுமுறையில் உல்லாசக் கோளுக்குச் செல்லும் விண்கலத்தில் வந்து அமரும் பக்கத்து இருக்கை பயணியைப் போல எந்த ஆராவாரமுமின்றி இவ்வளவு எளிமையாக வந்தமரும் இவர்தானா நன்மள்ளனார்?

”சேனாதிபதி சித்திரனாரின் ஒற்றர்கள் எல்லோருமே உன்னைப் போல மந்தமாகத்தான் இருப்பார்களா? இல்லை, நீதான் இருப்பதிலேயே சிறந்தவன் என்று உன்னை என்னிடம் அனுப்பி வைத்தாரா?” என்று பதுமனைப் பார்த்து வினவிய அவரது குரலில் இருந்த கட்டளைத் தொனியும் எரிச்சலும் பதுமனை மேலும் உலுக்கின!

“வ- வந்தனம் பதி!” உடலை விறைத்துக் கைகளை மார்புக்கு நேராய் இணைத்து அவரை வணங்கினான். ச்ச, எத்தனைமுறை மனத்திற்குள் செய்து பார்த்துக் கொண்டேன், நேரில் இப்படி திணறிவிட்டேனே! இனி இவர் என்னைப் புழுவைப் போலத்தான் மதிப்பார்! சித்திரனாரிடம் என்னைப் பற்றி என்ன சொல்லப் போகிறாரோ! என்னால் ஒற்றர் படைக்கே இழுக்கு! “சித்திரனாரின் வந்தனம். அந்தக் கிழவி இங்கு வந்து நம் ஆளுநரைச் சந்திப்பது உறுதியாகிவிட்டது!”

”பதுமா! அக்கிழவி நிலவில்தான் இருக்கிறாள், நாளை புறத்தில் உள்ள தனது பாடிவீட்டில் ஆளுநர் அவளைச் சந்திக்கிறார். உங்கள் செய்தி அந்தக் கிழவியைவிட மெல்ல வந்து சேர்கிறது, இத-”

“அது செய்தி இல்லை பதி!” அவசரப்பட்டு அவர் பேசி முடிக்கும்முன் குறுக்கிட்டுவிட்டோம்!

“ஒற்றர் படைக்குச் சில சலுகைகள் தேவைதான் போல...” ங-கதிரைவிட தீர்க்கமான பார்வையால் பதுமனை முறைத்தபடியே வினவினார் நன்மள்ளனார், “எது செய்தி, சொல்...”

“மன்னிக்கவும் பதி! இதோ!” என்று ஓரடி முன்வைத்து அவருக்கு முன் இருந்த மேசையில் மிகப் பணிவுடன் ஒரு சிறிய பேழையை வைத்துவிட்டு மீண்டும் பின் சென்று விறைப்புடன் நின்றான்.

நன்மள்ளனார் தனக்கு வலப்பக்கம் நின்றிருந்த நெருப்பீட்டியை நோக்க அவன் கம்பீரமான நடையில் வந்து அப்பேழையைக் கையில் எடுத்துத் திறந்து அதற்குள் இருந்த சிறிய மாத்திரையைத் தன் கையிலிருந்த ஒரு கருவிக்குள் போட, அது சில நொடிகள் அக்கருவிக்குள் பயணித்து வெளிவர, ‘சரி’ என்பதைப் போல தலையை ஒரு வெட்டுவெட்டி மாத்திரையை மீண்டும் பேழையிலேயே வைத்துப் பேழையை மூடாமலேயே மேசை மேல் வைத்துவிட்டு மீண்டும் தன் இடத்திற்குச் சென்று சிலையைப் போல நின்றுகொண்டான்.

நன்மள்ளனார் பதுமனைப் பார்த்து மெல்ல புன்னகைத்துவிட்டு (அவரது முகத்தசைகளின் அந்த அசைவைப் ‘புன்னகை’ என்றுதான் பதுமன் எண்ணினான்!) அம்மாத்திரையை வாயிலிட்டுக்கொண்டார்.

அதில் வேதிப்பொருள்களில் தீட்டப்பட்டிருந்த செய்தி நன்மள்ளனாரின் மூளையை எட்டுவதைப் பதுமனும் தனக்குள் கற்பனை செய்துகொண்டான், அதில் இருக்கும் செய்தி அவனுக்குத் தெரியும். மாத்திரையை வாயில் வைத்து, எச்சிலில் அது கரையத் தொடங்கியதும் கனவுபோல, தொலைவில் கேட்கும் ஒலியைப் போல அதன் செய்தி மூளைக்குள் ‘கேட்கும்’. அதி இரகசியமான செய்திகளைத்தான் இவ்வாறு மாத்திரையில் பரிமாறுவார்கள் எனினும், ஒற்றனாகிய பதுமனுக்கு அவ்வனுபவம் நிறையவே உண்டு! ஒருவருக்கு உருவான அச்செய்தி-மாத்திரையை வேறொருவர் உண்டால் உடனே மரணந்தான்! நன்மள்ளனார் இறந்துவிடவில்லை, தன் முகத்தசைகள் இறுக, பதுமனைக் கூர்ந்து நோக்கினார்.

”இச்செய்திக்குத் தகுந்த ஆதாரம் இருக்கும் என்றே நம்புகிறேன்?”

“இருக்கிறது பதி! நானேதான் ஆதாரம்!” பதுமன் விறைப்புடன் சொன்னான். இந்தத் தொடிம-அதியப் போரின் வரலாற்றில் தான்தான் முதல் அத்தியாயம் என்ற எண்ணம் அவனுள் ஓடியது!

நன்மள்ளனார் எழுந்து நின்றார், “ஆளுநரைச் சந்திக்கத் தயாராய் இரு!”
-------​
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
2

தான் தங்கவைக்கப்பட்டிருந்த அறையின் கதவு திறந்து அந்த நெருப்பீட்டி உள்ளே நுழைவதைக் கண்டவுடந்தான் பதுமனுக்கு நிம்மதி ஏற்பட்டது.

எவ்வளவு காலத்துளிகள் கடந்தன என்பதைக் கூட அறிய இயலாத அந்த அறைக்குள் காத்திருப்பது நரக வேதனையாய் இருந்தது. இவனது சோர்வை நீக்க பணிவீரன் கொண்டு வந்து வைத்த சாற்றைக் கூட பதுமனால் முழுதாக அருந்த இயலவில்லை.

விடுவிக்கப்பட்ட சுருள்வில்லைப் போல துள்ளியெழுந்தான் பதுமன், “புறப்படலாமா?”

வந்த நெருப்பீட்டி ‘ஆம்’ என்று தலையசைத்துத் தன்னைப் பின்தொடர செய்கை செய்துவிட்டு முன்னால் மிடுக்காய் நடந்தான்.

பதுமன் தானும் வீரன்தான் என்று காட்டிக்கொள்ள எண்ணியவனாய் அதே மிடுக்கு நடையுடன் அவனைத் தொடர்ந்தான். அடே, நெருப்பீட்டியா! என் அருமை தெரியாதடா இப்போது உனக்கு! நாளை என்னைப் பற்றி உன் மகன் பள்ளியில் படிப்பான், அப்போது சொல்வாய் வெட்கமின்றி எனக்கும் பதுமனாரைத் தெரியும் என்று, ஏதேனும் சிபாரிசு என்று வா, அப்போது இருக்கிறது உனக்கு!

நெருப்பீட்டிகளை முதலில் கண்டபோது அவனுக்குள் பொங்கிய பெருமையும் பற்றும் அவர்களோடு பழகப் பழக (அதாவது அவர்களைப் பின் தொடர்ந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லுதல், எதுவும் பேசாமல் சுவரோடு சுவராய்ச் சிலையென அவர்கள் காத்து நிற்கும் அறையில் இருத்தல் முதலிய பழக்கம்!) கரைந்துவிட்டது பதுமனுக்கு. தொடிமத்திலேயே, ஏன், பேரண்டத்திலேயே தாமே ஆகச் சிறந்த வீரர் படை என்பது போல இயங்கும் அவர்களின் மிடுக்கும் இறுமாப்பும் பதுமனுக்கு எரிச்சலூட்டத் தொடங்கிவிட்டன.

குமிழியைவிட்டு வெளிவந்ததும் வாயிலருகிலேயே ஒரு சிறிய காற்றுந்து காத்திருந்தது அவனுக்காய். பதுமனை அதில் ஏறிக்கொள்ளும்படி செய்கை செய்த நெருப்பீட்டியின் முகத்தில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே எரிச்சலும் சினமும் தெரிந்ததாய் தோன்றியது பதுமனுக்கு. நம் எண்ணங்களை இவன் வெறுமனே உணர்கிறானா? அல்லது ஏதேனும் கருவியால் தெளிவாய்ப் படித்தேவிடுகிறானா? ஆ, ஒற்றருக்குத் தெரியாமல் அப்படி ஒரு கருவி இருந்துவிடுமா? சும்மா நின்று காவல் காத்தாலும் இவர்கள் திமிருக்குக் குறைவேயில்லை!

”ம்ம்ம்...” என்று பதுமனின் சிந்தனையைக் கலைத்த நெருப்பீட்டி ‘ஏறு’ என்று மீண்டும் செய்கை செய்துவிட்டுத் தானும் தாவி அக்காற்றுந்தில் ஏறிக்கொண்டான். பதுமன் ஏறி இருக்கையோடு தன்னைப் பிணைத்துக்கொண்டதும் அது ‘விய்ய்ய்ங்ங்ங்’ என்று வழுக்கிச் சென்றது.

தேர்ந்த ஓவியனின் தூரிகைக் கீற்றைப் போல அக்காற்றுந்து பாடிவீடுகளைவிட்டு மேலெழும்பி, நிலவின் பரப்பையொட்டிப் பயணித்து அதன் புறப்பக்கத்தை அடைந்து கீழிறங்கியது.

அங்கிருந்த பாடிவீடு இருமடங்கு பெரியதாய் இருந்தது, அதியர்களின் பார்வையிலிருந்து பெரும்பகுதி படையை மறைக்கத்தான் இவ்வேற்பாடு என்பது பதுமனுக்குத் தெரியும். என்ன ஏற்பாடு செய்து என்ன? அந்தக் கிழவியை இங்கு வரவிட்டாயிற்று! போதாக் குறைக்கு ஆளுநர் நம் படைகளின் பெருக்கையும் திறனையும் அவளுக்கு அணிவகுத்துக் காட்டப் போகிறாராம்! அவள் எல்லாவற்றையும் நன்கு கவனித்துக்கொண்டு நேராக அதியம் சென்று தன் கோளின் ஆளுநரிடமும் தண்டநாயகர்களிடமும் விவரமாய்ப் புட்டுப் புட்டு வைப்பாள்... என்ன முட்டாள்தனம் இது? ’தூது’ என்பது பண்டைய மரபாம்! ஆளுநர் வரலாற்றில் நல்ல பேர் வாங்க நம்மையெல்லாம் முட்டாள் ஆக்குகிறார்! ச்ச! தூதரை உபசரித்தல் மரபு, சரி, அதற்கு இந்தக் கிழவிதான் கிடைத்தாளா? பொல்லாத கிழவி! அவள் போட்டிருக்கும் திட்டம்... ஒற்றர்படை மட்டும் அவள் முகத்திரையைக் கிழிக்காவிட்டால் படையும், பதியும், ஆளுநரும் இந்த நிலவிலேயே தூசியாகப் புரண்டிருப்பார்கள்!

அம்மாபெரும் போர்ரகசியம் இக்கணம் மாதண்ட நாயகருக்கும், ஒற்றர்படை தண்டநாயகருக்கும், தனக்கும் மட்டுமே தெரியும் என்று எண்ணியதில் பதுமனின் நெஞ்சு புடைத்தது! ஆளுநருக்கும் பதி சொல்லியிருப்பாரோ? இல்லை, தன்னையே நேரில் சொல்லும்படி கட்டளையிடுவாரா?

சிந்தனையில் மூழ்கியபடியே ஆளுநர் தங்கும் அந்தப் பெரிய குமிழின் வாயிலுக்கே வந்துவிட்டோம் என்பதை வந்த பிறகே உணர்ந்தான் பதுமன். சம்பிரதாயச் சோதனைகள் முடிந்தவுடன் வேறொரு நெருப்பீட்டியைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றான்.

அவர்கள் ஒரு வாயிலை நெருங்கிய அதே வேளையில் நான்கு நெருப்பீட்டுகள் புடைசூழ நன்மள்ளனாரும் அங்கு வந்து சேர்ந்தார். பதுமனும் அவனுடன் வந்த நெருப்பீட்டியும் அவரைக் கண்டதும் ஒரு சேர வணங்கினர். “வந்தனம், பதி!” பதுமன் கடைக்கண்ணால் பார்த்து தன் வணக்கத்தையும் அந்த நெருப்பீட்டியின் வணக்கத்தையும் ஒப்பிட்டுக்கொண்டான்! நன்மள்ளனார் ஒரே ஒரு நொடி தலையைத் திருப்பி அந்த நெருப்பீட்டியின் வணக்கத்தை தலையசைத்து ஏற்றுக்கொண்டுவிட்டு, பதுமனை நோக்கினார்.

“செய்தியை ஆளுநருக்குச் சொல்லிவிட்டேன். அவர் ஆதாரம் கேட்கவில்லை, எதற்கும் நீ என்னுடனே இரு! இருப்பதே தெரியாமல் இருக்க வேண்டும், என்ன?” என்றுவிட்டு அருகில் இருந்த நெருப்பீட்டிகளை ஒரு முறை நோக்கிவிட்டு அறைக்குள் செல்லத் தொடங்கினார். நெருப்பீட்டிகளும் அவரைப் பின் தொடர்ந்தனர், பதுமனோடு வந்தவன் மட்டும் இவனை முன்னால் போகச் சொல்லிப் பின்னால் வந்தான்.

அக்கதவிற்குப் பின்னால் அத்தனை பெரிய அறையைப் பதுமன் எதிர்பார்க்கவில்லை! அதை அறை என்றே கூற இயலாது, படைகள் பயிற்சி செய்யும் திடலைப் போல மிகப் பரந்ததாய் இருந்தது, ஆங்காங்கு சிறு சிறு படைப்பிரிவுகளும் அணிவகுத்து நின்றிருந்தன, இது அறையல்ல திடல்தான் என்றே பதுமன் முடிவு செய்தான். அனிச்சையாக அவன் பார்வை மேலே செல்ல, அனைத்தையும் உள்ளடக்கியபடி கவிந்த குமிழியின் மேல்பகுதி தெரிந்தது!

அப்பெரிய அறையின் நட்டநடுவில் இருந்த அந்தப் பெரிய நீள்வட்ட மேசையை நோக்கி நன்மள்ளனாரும் நெருப்பீட்டிகளும் செல்ல, பதுமனும் தொடர்ந்தான்.

மேசைக்கு பத்தடி தொலைவில் நன்மள்ளனாரைத் தொடர்ந்த நெருப்பீட்டிகள் சட்டென நிற்க, பதுமனும் நிற்க வேண்டியதாயிற்று. இந்தக் காவல்காரப் பயல்களோடு நானும் தள்ளி நிற்பதா? நன்மள்ளனாரைத் தொடர்ந்து சென்றால் என்ன? நான் முக்கிய செய்தியைத் தாங்கி வந்தவன் அல்லவா?

மேசைக்கருகே நன்மள்ளனார் செல்கையிலேயே இருவரைத் தவிர அங்கு அமர்ந்திருந்த மற்ற அனைவரும் எழுந்து நிற்பதையும், அருகில் சென்ற நன்மள்ளனார் அமர்ந்திருந்த ஆளுநருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத், தனக்கு வந்தனம் சொன்ன மற்ற தண்ட நாயகர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு தனக்கான இருக்கையில் அமர்வதையும் பதுமன் நெருப்பீட்டிகளோடு நின்றவண்ணமே கண்டான். மேசையைச் சுற்றிலும் பத்தடி இடைவெளியில் ஆங்காங்கு நெருப்பீட்டிகள் மூவர் நால்வர் எனச் சிறு சிறு குழுவாய் நிற்பதையும் கண்டான். மீண்டும் ஆளுநரிடமே தன் பார்வையைச் செலுத்தியவன் அவரிடம் பேசும் வாய்ப்பு தனக்குக் கிடைக்குமா கிடைக்காதா என்று எண்ணுகையில் சட்டென நினைவு வந்தவனாய் ஆளநருக்கு அருகில் இருந்த, நன்மள்ளனார் வந்த போது எழாமலே இருந்த அந்த இன்னொரு ஆளைக் கவனித்தான். ஆ, அவளேதான், அதியத்திலிருந்து தூது என்ற பெயரில் கேடு விளைவிக்க வந்திருக்கும் அந்தக் கிழவி...

ஔவையார்! அதியக் கோளின் பழம்பெருமை வாய்ந்த ஆட்சிக்குழுவின் தலைமைக் கிழவி! விஞ்ஞானி! ’ஔவையார்’ என்பது அவளது பதவிக்கான பட்டப்பெயர், அவளது இயற்பெயர் இப்போது யாருக்கும் தெரியாது! தொடிமத்திலும் கூட அவ்வழக்கம் இருக்கிறது, கீழிருந்து முன்னேறி ஒருவர் மேல்நிலைப் பதவிக்கு வருகையில் அவரது இயற்பெயரை அழித்து அப்பதவிக்கேற்ற பட்டப்பெயர்களைக் கொடுப்பர். தொடிமத்தின் இப்போதைய ஆளுநர் பெயர் ’மாப்பறந்தலையார்’ - அவர் தரைப்படையில் இருந்து பலப் போர்க்களங்களைக் கண்டு வென்று உயர்ந்தவர் என்பதைக் குறிக்க இப்பெயர்! நன்மள்ளனார் என்பதும் பதவிக்கான பட்டப்பெயர்தான்! ஆனால், தொடிமத்தின் பட்டப்பெயர்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு உரியவை, அந்நபரின் பதவிக்காலமோ வாழ்நாளோ முடிந்து வேறொருவர் அப்பதவிக்கு வருகையில் அவர் தனக்கான ஒரு பதவிப் பட்டப்பெயரை உருவாக்கிக்கொள்வார். அதியத்தில் அப்படி அன்று, சில மிக உயர்ந்த பதவிகளுக்கான பட்டப்பெயர்கள் மாறாமல் இருப்பவை. ‘ஔவையார்’ அப்படிப்பட்ட பெயர்தான்.

எந்தக் கிழவன் / கிழவி அப்பதவிக்கு வந்தாலும் அவர் பெயர் ’ஔவையார்’தான்! இதை வைத்துதான் ஏமாற்றுகிறார்கள், கயவர்கள்! இந்தக் கிழவியின் அகவை 200 ஆண்டு என்கின்றனர், 500 ஆண்டு என்கின்றனர்... இந்த கள்ளத்தனத்தாலேயே இவளைக் கண்டு பல கோள்களின் அரசரும், ஆளுநரும், தலைவரும், முதலமைச்சரும், தண்ட நாயகர்களும் அஞ்சுகின்றனர். இவள் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பாமே! அதனால்தானே நம் ஆளுநர் கூட இவளைத் தூது வர அனுமதித்துப் பாடிவீட்டிற்குள் நுழையவிட்டு, இதோ இவளுக்கு நம் படைகளின் வலிமையையும் திறனையும் கண்காட்சி காட்ட ஏற்பாடு செய்துள்ளார்! பெயருக்கேற்ற மரியாதையோடு நடந்துகொள்கிறாளா இவள்? கள்ளி!

பதுமன் மனத்திற்குள் பொங்கிக்கொண்டிருக்கையில் ஆளுநரின் மேற்பார்வையில் அவரது பணிப்பில் ஔவையாருக்குத் தொடிமப் படைகள் காட்டப்பட்டன. எண்வகைப் படை என்று பெருமையாய்க் குறிக்கப்படும் தரைப்படை, நீர்ப்படை, வளிப்படை, ஒளிப்படை, விண்வெளிப்படை, மறைப்படை, ஒற்றுப்படை, மற்றும் மெய்க்காவற் படை ஆகிய எட்டில் ஒற்று மற்றும் மெய்க்காவற்படை ஆகிய இரண்டு தவிர்த்த ஏனைய ஆறு படைகளின் சிறப்பான படைக்கலன்களையும் படைக்கருவிகளையும் வரிசை வரிசையாய் ஔவையாருக்குக் காட்டிக்கொண்டிருந்தார் ஆளுநர்.

தொடிமம் அதியத்திலிருந்து பிரிந்து உருவான இனக்குழுதான் என்று ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் உண்டு. தொடக்கத்தில் அதியத்தின் ஒரு படைப்பிரிவு தங்கிய கோளாகவே தொடிமம் இருந்ததெனவும், பொருள், மனிதர், தகவல் ஆகிய பரிமாற்றங்கள் மெள்ளக் குறைந்து, நாளடைவில் தொடிமக்கோள் அதியர்களால் முற்றிலும் மறக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டது எனவும் அண்ட வரலாற்றாளர் கருதுகின்றனர். இதைத் தொடிமர்கள் காட்டமாய் மறுத்தார்கள் எனினும், அவர்கள் கோள் இன்றளவும் முழுக்க போர் சார்ந்தே இயங்கும் போர்க்குடிக்கோள் என்பது உண்மைதான். தொடிமத்தில் எல்லாமே படைதான், தொடிமர் அனைவருமே வீரர்தான். பத்து வயதிலேயே தொடிமச் சிறுவர்களுக்குப் போர் பயிற்சி தொடங்கப்படும். ஐந்து ஆண்டுகள் கட்டாய அடிப்படைப் பயிற்சிக்குப் பின் ஆறாவது ஆண்டிலிருந்து தீவிர பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் மூன்றில் ஒருவர்தான் தாக்குப்பிடிப்பர், அவர்களே தொடிமத்தின் முறையான போர்ப்படைகளில் இணைவர். மற்றவர் பிற பயிற்சிகள் மேற்கொண்டு பிற வேலைகளுக்குச் செல்ல வேண்டியதுதான். ஆக, தொடிமத்தின் கவிஞன் கூட போர் பயிற்சி பெற்றவன்தான்! அதியம் இதற்கு நேர்மாறாய் எல்லாத் துறைகளுக்கும் சம மதிப்பளித்து வளர்ந்தது. அதியத்தின் படையோ வீரர்களின் திறனோ எவ்வகையிலும் குறைந்துவிடவில்லை. சொல்லப்போனால், தொடிமரைவிட அதியருக்கே பேரண்டத்தின் பல கோள்களில் மதிப்பு அதிகம் இருந்தது! இதன் இரகசியத்தை உணர இயலாமலும், அதியத்தின் பழமையையும் பெருமையையும் பொறுத்துக்கொள்ள முடியாமலும் இரண்டில் ஒன்று முடிவு கட்டிவிடுவது என்ற நோக்கோடுதான் அதியத்தை அழிக்கத் தொடிமர் படையெடுத்து வந்துள்ளனர்!

தொடிமத்தின் தீவினையோ, அதியத்தின் நல்வினையோ தற்போதைய ஆளுநருக்கு ஔவையாரைத் தூது வரவிட்டு உபசரிக்கும் எண்ணம் வந்து தொலைத்தது! ஆளுநரின் இச்செயல் பெரும்பான்மையாக யாருக்கும் பிடிக்கவில்லை என்ற போதும் யாரும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவும் இல்லை, நன்மள்ளனாரைத் தவிர! தொடிமம் போர்க்கோள் என்றால் அதன் மாதண்ட நாயகர் போரே இரத்தமும் சதையும் இதயமும் மூளையுமாக உருவெடுத்து வந்தவர்! அவர் ஆளுநராய் இருந்திருந்தால் இந்நேரம் தொடிமப் படை தாய்க்கோளை நோக்கிப் பறந்துகொண்டிருக்கும் - அதியக்கோள் கற்குவியலாய்த்தான் பகலவனைச் சுற்றிக்கொண்டிருக்கும்!
--------​
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
3

திடலில் சட்டென அமைதி நிலவியது. ஔவையார் பேசுகிறார்!

“மாப்பறந்தலையாரே! நன்மள்ளனாரே! தண்ட நாயகர்களே! என்னை மதித்து, விருந்தோம்பி, என் தூதை ஏற்று, எனக்கு உங்கள் படைப்பிரிவுகளையும் கலன்களையும் கருவிகளையும் காட்டியதற்கு நன்றி!...” நிதானமாய், ஆனால் அழுத்தமாய், எல்லோருக்கும் கேட்கும்படி வலியதாய் பேசியபடியே மெல்ல சுழன்று அனைவரையுமே நோட்டம்விட்டார் ஔவையார், ”புதுப்புது தொழிநுட்பமும், அதனால் புதுப்புது கருவிகளும் கலன்களும் உருவாக்கி யிருக்கிறீர்கள்! நன்று... மிக்க நன்று! பொதுவாக நாம் அனைவருமே ங-கதிரைக்கொண்ட கருவிகளைத்தான் பெற்றுள்ளோம், ஆனால், நீங்கள் புதிதாய் வலிமையும் திறனும் மிக்கதாய் ஒரு கதிரைக் கண்டறிந்துள்ளீர்கள், ள-கதிர் என்று அதற்குப் பெயரும் வைத்து, அதைக்கொண்டும் கருவிகளைச் செய்துள்ளீர்கள்! ஆகா, அருமை... மிகுந்த பாராட்டிற்குரியது! உங்கள் படையும், கலனும், கருவியும், தொழில்நுட்பமும் இன்று மலர்ந்த மலரைப் போல புதிதாய்ப் பொலிவு மிக்கதாய் விளங்குகின்றன... எங்கள் அதியத்தின் படைகள் பழையவை, கலன்களும் கருவியும் தொழில்நுட்பங்களும் மிக மிகப் பழையவை... பல போர் கண்டு துருப்பிடித்தவை!”

ஆளுநரின் முகம் பெருமையாலும் உவகையாலும் ஒளிர்ந்தது. ஔவையாரையே அசத்திவிட்டோம் என்ற பெருமை! பதுமனுக்கு எரிச்சல் எல்லை மீறியது!

அடேய் முட்டாள் கிழவா! அவள் உன்னைப் புகழவில்லையடா, இகழ்கிறாள்! இது கூடவா உரைக்கவில்லை உன் பித்தலை மண்டைக்கு? நம் படைகளைப் பூ என்கிறாள், அதியத்தின் படைகளை இரும்பு என்கிறாள்! புதியதாய் இருந்தாலும் நம் தொழிநுட்பம் இன்னும் சோதிக்கப்படாதது, போர்க்களத்தில் கையாளப்படாதது, அதியத்தின் தொழில்நுட்பமும் கலன்களும் பல போர் கண்டவை, வெற்றி ஒன்றையே சுவைத்தவை என்று அக்கிழவி நுண்ணியதாய்க் குத்திக்காட்டுகிறாள், நீ பல்லை இளித்துக்கொண்டு அவள்முன் நிற்கிறாய்! இழுக்கு... பெரும் இழுக்கு... நீ தொடிமத்தில் பிறந்து பயிற்சி பெற்ற வீரன்தானா? ச்சே!

பதுமனின் உளத்தில் பொங்கிய அதே சினம் நன்மள்ளனார் உளத்திலும் பொங்கியது, ஆனால், அவர் பதுமனைப் போல உயிர்க்கஞ்சிப் பேசாமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை, பேசினார்.

”எந்தாய்! (ஆளுநரை அவ்வாறுதான் அழைப்பர்!) ஔவையார் நம்மைப் புகழ்வதாக எனக்குத் தோன்றவில்லை, கீழினும் கீழாக இகழ்கிறார்...” என்று அவர் முடிப்பதற்குள் ஆளுநரின் முகத்தில் இருந்த பெருமையொளி மாறி சினவிருள் கவிந்தது,

“உண்மையா? ஔவையே, என்ன இது? முன்பே நீர் வருவது தூதிற்கு அல்ல, எங்கள் படைக்கலன்களைச் சேதப்படுத்தும் கிருமி மென்பொருளை விதைப்பதற்கே என்று எனக்குத் தகவல் வந்தது, அதைப் பெரிதுபடுத்தாமல் நான் பெருந்தன்மையாய் உங்களை வரவேற்று விருந்தோம்பினேன், எனக்கு நீங்கள் செய்யும் பதில் மரியாதை இதுதானா?” மாப்பறந்தலையாரின் சினச்சொற்களைக் கேட்டு சற்று முன் அவரை அலட்சியமாய் எண்ணிய பதுமனுக்கும் அவர்மீது மரியாதையும் அச்சமும் ஒரு சேர பெருக்கெடுத்தது!

ஔவையார் சிறிதும் அச்சமோ தயக்கமோ இன்றி, முகத்தில் தவழ்ந்த அந்த எள்ளல் புன்னகை மாறாமல் பேசினார்,

“செய்தி வந்ததா? நன்று நன்று! எங்கே வராமல் தவறிவிடுமோ என்று கொஞ்சம் கவலைப்பட்டேன்! உங்கள் புதிய தொழில்நுட்பங்களை இன்னும் உங்கள் ஒற்றர்படையில் பயன்படுத்துவதில்லை போலும், அதுதான் செய்தி தவறாமல் வந்து சேர்ந்துவிட்டது!” வழக்கம்போல பேசுகையில் பார்வையைச் சுழலவிட்ட ஔவையார் ‘ஒற்றர்படை’ எனும்போது தன் பார்வையைப் பதுமன் மேல் ஒரு சில நொடி நிறுத்தினார், அந்த ஒரு சில நொடிகளில் அவர் பார்வை பதுமனை ஊசி துளைப்பைதைப் போல துளைத்தது!

“மாப்பறந்தலையாரே, நீர் புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் நன்கறியப்படாத தொழில்நுட்பங்களைக் கையாள அவசரப்படுகிறீர்! நீங்கள் புதிதாய்க் கண்டறிந்ததாக எண்ணி இறுமாக்கும் ள-கதிரை நாங்களும் அறிவோம், ஆனால் அதில் நாங்கள் அவசரப்பட்டு ஆயுதம் செய்யவில்லை! ள-கதிர் என்று நீங்கள் அழைக்கும் கதிரின் பண்புகளை முழுமையாக உணர்வீர்களா? இல்லை! எங்களுக்கும் அது இன்னும் புரியாத புதிர்தான்! இவற்றை உங்களுக்கு யார் உணர்த்துவது? தரமில்லாத கருவிகளோடும் தொழில்நுட்பத்தோடும் நீர் எம்மோடு போரிட்டுத் தோற்றுப்போனால் அது எமக்கு இழுக்கன்றோ? படைக்கலன்களின் பழுதினால்தான் தொடிமர் அதியரிடம் தோற்றனர் என்று வரலாற்றில் பதிவானால் அதிய வீரர்கள் தங்கழுத்தைத் தாமே துண்டித்துக்கொண்டு மடிவர்! அதைத் தவிர்க்கவே யான் உங்கள் கருவிகளிலும் கலன்களிலும் எம் மென்பொருள் கிருமியைப் புகுத்தினேன்... நான் கிருமியைப் புகுத்தப் போகும் செய்தியையும் உங்களுக்குக் கிடைக்கச் செய்தேன்! கிருமி உங்களுக்கு உங்கள் கருவி கலன்களின் பலவீனத்தை யெல்லாம் சரியாகக் காட்டிக்கொடுத்ததா? இனி அவற்றையெல்லாம் சரி செய்துவிட்டுதானே எம்மோடு போருக்கு வருவீர்? எமது விஞ்ஞானியர் குழுவை வேண்டுமானால் அனுப்பிவைக்கவா? உம் விருந்தோம்பலுக்கு யாம் செய்த பதிலுதவியாக இருக்கட்டும்!”

ஔவையாரின் பேச்சு அங்கிருந்த அனைவரின் இரத்தத்திலும் சூடேற்றியது. நெருப்பீட்டிகள் தங்கள் ஈட்டிகளைக் கைகள் சிவக்கும்படி கெட்டியாகப் பிடிக்கத் தொடங்கினர். நன்மள்ளனாரின் கண்ணில் எந்நொடியும் தீப்பொறிகள் பறக்கும் என்பது போல இருந்தது. மாப்பறந்தலையார் மனித எரிமலையைப் போல நின்றிருந்தார்!

”ஔவையாரே!” ஒரு வழியாய்த் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டவராய் ஆளுநர் பேசினார், “தூது என்ற பெயரால் இன்று உமது தலை தோளைவிட்டு நீங்காமல் பிழைத்தது! பெருமை பேசிக்கொள்ளவும் ஒரு எல்லை உண்டு! எமது படைகளையும் தொழில்நுட்பத்தையும் வீரத்தையும் இவ்வளவு தாழ்த்திப் பேசும் உமது கோளில் ஒருவரேனும் போர்க்களத்திற்கு வரும் தகுதியுடையவனாய், வீரன் என்ற சொல்லுக்கு ஏற்றவனாய் இருக்கிறானா?”

தரையிலிருந்து விண்ணுக்குத் தாவும் விண்கப்பலின் சீற்றத்தைப் போல இருந்தது மாப்பறந்தலையாரின் சொற்கள்!

ஆனால், அதற்கும் அசரவில்லை அந்த ஔவையார்க் கிழவி! முகத்தில் இருந்த அமைதி மாறமலே பதிலளித்தாள்!

“ஏன் இல்லை, மாப்பறந்தலையாரே? இருக்கிறார்! ஒருவரல்ல பலர்! ங-கதிர்வாளிலிருந்து வெளிப்படும் ஒளிக்கீற்று தம்மை நோக்கி வருகையில் கண்ணை இமைத்தாலும் தம் வீரத்திற்கு இழுக்கு என்று எண்ணி நெஞ்சை நிமிர்த்திக் காட்டும் ஆணும் பெண்ணுமாய் வீரர்கள் பலர் உள்ளனர் எமது கோளில்! இவர்களுக்கெல்லாம் தலைவனாய் ஒருவன் இருக்கிறான்... ஒரே பகலில் பத்து விண்கப்பல் செய்யும் பட்டறையில் ஒரு மாதம் முழுக்க உழைத்து ஒரே ஒரு உந்துபொறியைச் செய்ததைப் போல உருவான வீரன்! எங்கோ திடலில் வீரர்கள் பயிற்சிக்காக முரசு முழங்கினால் ’ஆஹா, போர் வந்தது’ என்று மகிழ்ந்து துள்ளி எழுபவன் ஒருவன் இருக்கிறான்!”

ஆளுநர் மாப்பறந்தலையார் ஔவையார்க்குப் பதில் சொல்லுமுன் நன்மள்ளனார் ஓரடி முன்வந்து ஆளுநரைப் பார்க்க, ஆளுநரும் தலையசைக்க, ஔவையாருக்கு நன்மள்ளனார் பதிலளித்தார்,

“ஔவையாரே! போர்க்களத்தில் எதிர்த்து போராட துணிவில்லாமல் தூது என்ற பெயரில் வந்து வாய்ச்சொல்லில் வீரம் காட்டுகிறீர்! எப்படி அது? ஒரு நாளில் பத்து விண்கப்பல் செய்யும் பட்டறையில் ஒரு மாதம் முழுக்க உழைத்துச் செய்த ஒரேஒரு உந்துபொறி போன்ற வீரன்! அதாவது, உங்களின் அந்த ஒரு வீரன் எங்களின் 300 வீரர்களுக்குச் சமம் என்று குறிப்பாய்ச் சொல்கின்றீர்? கூட்டி வாரும் அந்த ஒரு வீரனை, ஏன், கூட்டி வாரும் 300 வீரரை, எமது ஒரு வீரன் அவர்களையெல்லாம் கொன்று குவித்து தொடிமத்தின் வீரத்தை நிலைநாட்டுவான்! உங்களைப் போல எங்களுக்கு வாய்ச்சொல்லில் வீரம் காட்டத் தெரியாது, களத்தில் காட்டுவோம்...” என்று நிதானமாய் ஆனால் சினத்தை அழுத்தமாய் குரலில் காட்டியவராய்ப் பேசிவிட்டு, ஆளுநர் பக்கம் திரும்பினார் “எந்தாய்! இனியும் இக்கிழவியோடு என்ன பேச்சு, அனுப்பிவிடுங்கள் இவரை...”

”நன்மள்ளனாரே, ஒரு வீரன் ஒரு கலன் ஒரு கருவி என்று இருபக்கத்திலிருந்தும் ஒருவரை மோத வைத்து இப்போரின் முடிவைச் செய்ய எமக்குச் சம்மதம்! தூதாக வந்த எமக்கு எம் கோளின் ஆளுநர் சார்பாய் பேசவும் முடிவெடுக்கவும் அதிகாரம் இருக்கிறது! உமக்கும் சரி என்றால் இடத்தையும் நாளையும் நீரே முடிவு செய்க, நம் வீரம் பேசட்டும் எது உயர்ந்ததென்று!” என்று ஔவையார் மாதண்டநாயகருக்குப் பதிலளித்தார். இம்முறை அவரது குரலிலும் சற்று கடுமை இருந்தது.

“அப்படியே ஆகட்டும்! நாளையே நம்-” ஆளுநர் பேசி முடிப்பதற்குள் ஔவையார் குறிக்கிட்டார்,

“அவசரம் வேண்டா பறந்தலையாரே! உமது கருவிகளில் எமது கிருமி காட்டிக்கொடுத்த பலவீனத்தை எல்லாம் சரி செய்து கொள்ளுங்கள்! ஒரு வாரம் ஆகும் அதற்கு, அதன் பின்பே நம் வீரர்கள் மோதட்டும்!” என்று குரலில் எள்ளல் ததும்ப உரைத்தார்.

மாப்பறந்தலையார் சீற்றத்தில் பதிலுரைக்க எத்தனித்தவர், தொடிமத்தின் தலைமை விஞ்ஞானி ஔவையார் சொல்வது சரிதான் என்பது போலத் தன்னை நோக்கித் தலையசைப்பதைக் கண்டு மேலும் சீறி, அவ்விடத்தைவிட்டு அகன்றார். அங்கிருந்த நெருப்பீட்டிகளில் சரிபாதியினர் அவருடன் சென்றனர். நன்மள்ளனார் முன் வந்து,

“ஔவையாரே! தூது என்ற மரியாதையை இழந்தீர், எனவே எம் ஆளுநர் விடைபெறாமல் அகன்றார், இது எங்கள் பக்கத்துப் பிழையாகாது! மேலும், எப்படியும் போர் என்று வந்ததன் பின் இத்தூது வீண் என்றானது, எனவே இனியும் இங்கிருக்க உமக்கு உரிமை இல்லை! மேலும் சிக்கல் ஏதும் ஏற்படுத்தாமல் அதியத்திற்குச் சென்றுவிடுங்கள், எமது விண்வெளிப்படையின் தண்டநாயகர் நீத்தமள்ளனார் உங்கள் பயண ஏற்பாட்டைக் கவனிப்பார்” என்று நீத்தமள்ளனாரை நோக்கித் தலையசைத்துவிட்டு அவரும் அங்கிருந்து சென்றார். அவரோடு வந்திருந்த ஐந்து நெருப்பீட்டிகளும் அவரைப் பின் தொடர, பதுமனும் அவர்களுடன் செல்ல வேண்டியதாயிற்று.

பதுமன் அவ்வறையைவிட்டு வெளியேறுகையில் தண்ட நாயகர் நீத்தமள்ளனாரும் அவரைச் சார்ந்த நெருப்பீட்டிகளும் ஔவையாரைச் சூழ்ந்துகொள்வதைக் கவனித்தான்.
---------------​
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
4

அன்றிரவு உணவு உண்கையில் போரின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை பதுமன் அறிந்துகொண்டான். அதற்காகவே அவன் தன்னறையில் உண்ணாமல் வீரர்களுக்கான பொது உணவுக்கூடத்திற்கு வந்திருந்தான்.

அன்றிலிருந்து ஏழாவது நாளில் தொடிம வீரன் ஒருவனும் அதிய வீரன் ஒருவனும் அதியத்தை அடுத்திருந்த ஒரு வறண்ட கோளில் ஏற்படுத்தப்படும் களத்தில் துவந்த யுத்தம் செய்து இப்போரின் வெற்றி-தோல்வியைத் தீர்மாணிக்கப் போகிறார்கள்!

பதுமன் உணவுக்கூடத்தில் ஓர் ஓரமாக அமர்ந்து மெல்ல உண்டுகொண்டிருந்தான். உண்பதைவிட சுற்றி இருந்த வீரர்கள் பேசிக்கொள்வதில்தான் அவன் கவனம் அதிகம் சென்றது.

“போருக்குப் படையெடுத்து வந்துட்டு யாரோ கிழவி சொன்னாளென்று துவந்த யுத்தம் நடத்துவதா? என்னையா கூத்து இது?” என்றான் ஒருவன். அவன் தோள்பட்டையில் இருந்த கழுகின் படம் அவன் வளிப்படையைச் சேர்ந்த வலவன் என்று உணர்த்தியது.

“ஆமடா, நாமெல்லாம் வீரர் அல்லவா? போர் செய்ய வந்தோமா வேடிக்கைப் பார்க்க வந்தோமா?” என்றான் அவன் கூட இருந்த மற்றொரு வலவன்.

”எந்தையிடம் போய் இதைக் கேட்க வேண்டியதுதானே? உணவுண்கையில் ஏனடா கரைகிறீர்கள்?” என்று அவர்களை அதட்டினான் ஒருவன். அவனது தோள்பட்டையில் சுறாமீனின் படம் இருந்தது, நீர்ப்படையைச் சேர்ந்த மாலுமி அவன்!

“அதானே! கட்டளையை ஏற்று பணி செய்ய வேண்டியது நம் கடமை, போரிடு என்றால் போரிடு, வேடிக்கைப் பார் என்றால் வேடிக்கைப் பார்! நெருப்பீட்டிகளைப் பார், எவனாவது எதற்காவது வாயைத் திறக்கிறானா? அதனால்தானப்பா அவர்கள் சிறந்தவர் என்று போற்றப்படுகின்றனர், நாமெல்லாம் வாய்ப்பேசியே கெட்டுப் போகிறோம்!” என்றான் மற்றொரு மூத்த மாலுமி. நீர்க்கலம் செலுத்தும் அவன் கைகள் பதுமனின் தொடையளவிற்குப் பருத்திருந்ததாலோ என்னவோ யாரும் அவனை எதிர்த்துப் பேசவில்லை. சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.

“அது சரி, அதிய வீரனை எதிர்த்து யுத்தம் செய்யப்போகும் நம் வீரன் யாரென்று முடிவாயிற்றா?” மீண்டும் பேச்சை மெல்லத் தொடங்கினான் ஒரு இளம் விண்வெளிப்படை வீரன். ஏனோ விண்வெளிப்படை வீரர்கள் பார்வைக்கு நோஞ்சான் போலவே இருந்தனர்!

”கேட்க வேண்டுமா? நெருப்பீட்டிகளின் தளபதி ஒருவன் இருக்கிறானே, அவன் பெயரென்ன? அவனைத்தான் அனுப்புவர்! அவன் மனிதன்தானா என்ற ஐயம் பலபேருக்கு உண்டு! போருக்காகவே செய்த இயந்திர-மனிதன் போல இருப்பவன்!” இது தோள்பட்டையில் யானைப்படம் போட்ட தரைப்படை வீரன்.

”அவன்தானா? நினைத்தேன்! வீமனோ! வாமனோ! ஆனால் நீர் சொல்வது உண்மைதானடா, போருக்காக இயந்திர-மனிதர்களைச் செய்யும் திட்டம் நம்மிடம் இருப்பதாகத்தான் கேள்வி, அவன் மனிதனே அல்ல, இயந்திரம்தான்!” முதலில் பேசிய வளிப்படை வீரன் வியந்து சொன்னான்.

”பிதற்றாதே! ஆளுநரையும் தண்ட நாயகர்களையும் பாதுகாக்கும் பணிக்கு இயந்திரங்களையா வைப்பார்கள்? இயந்திரம் வலிமையாய் இருக்கும், ஆனால் ஒரு மனிதனைப் போல இடம்-சூழல் அறிந்து முடிவெடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் அதனால் செயல்பட இயலுமா? வீமன் மனிதனேதான், இயந்திர மனிதன் அல்ல, மனித இயந்திரம்!” என்று கூறிப் பெரிதாய் நகைத்தான் அந்த மாலுமி.

அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

பதுமன் போதும் என்று எழுந்து தன்னறைக்கு வந்தான். வழக்கமாய் இருப்பதைப் போல எந்த ஒரு நெருப்பீட்டியும் அங்குக் காவலுக்கு இல்லை. எனக்குக் காவல் தேவையில்லை என்று எண்ணிவிட்டார்களா? அல்லது, இருக்கும் குழப்பத்தில் என்னைக் கவனிக்க மறந்துவிட்டனரா? நான் வந்த விண்கலத்தை எங்கே நிறுத்தியிருப்பர்? அதைத் தேடிக் கண்டுவிட்டு வரலாமா? இந்தப் போரின் நிலை என்னவாகும்? இவ்வளவு பெரும்படையை வைத்துக்கொண்டு ஏன் இந்த நிலவிலேயே தங்கியிருக்கின்றனர்? இறங்கித் தாக்க வேண்டியதுதானே?

எப்போது உறங்கினோம் என்று அறியாமலே பதுமன் உறங்கியிருந்தான்.

அடுத்த நாள் பதுமன் எழுந்திருக்கையில் நன்பகல் ஆகியிருந்தது. தன்னை யாருமே எழுப்பாதது அவனுக்கு வியப்பாக இல்லை! அன்றும் அவன் உணவுக்கூடத்திலேயே உணவுண்டான். நேற்றிரவு அவன் கவனித்த அதே வீரர் கூட்டம் இப்போதும் இருப்பதைக் கண்டு அவர்கள் கவனிக்காதவண்ணம் அவர்களின் அருகில் சென்று அமர்ந்தான்.

”எனக்கென்னவோ அது யதேச்சையாக ஏற்பட்ட விபத்து போலத் தெரியவில்லை, துவந்த யுத்தத்துக்குப் போகப் பயந்துகொண்டு தானாகவே தடுக்கி விழுந்து காலை உடைத்துக்கொண்டிருப்பான் அந்த வீமன்!” என்று அறைந்து கூறிக்கொண்டிருந்தான் அந்தத் தரைப்படை வீரன்.

“சரியாய்ச் சொன்னாய் தம்பி! அவனைப் போய் ஆகா ஓகோ என்று போற்றினோம், யுத்தத்திற்கு அஞ்சும் கோழைப் பயல்!” என்று உரக்கவே சொன்னான் அந்த மூத்த மாலுமி.

”என்ன இருந்தாலும் அவன் நெருப்பீட்டிகளின் தளபதி, அவன் வீரத்தையா ஐயப்படுவது? கவனச் சிதறலால் விபத்து ஏற்பட்டது என்று மருத்துவரே சான்றளித்திருக்கிறாராம்!” என்றான் அந்த விண்வெளிப்படை வீரன்.

“பயிற்சி பெற்ற வீரனுக்கு, அதிலும் தளபதியாய் இருப்பவனுக்கு எப்படியடா யுத்தப் பயிற்சியின்போது கவனச் சிதறல் வரும்? இவன் என்ன நேற்றா படையில் சேர்ந்தான்? இவனை நம்பித் தொடிமத்தின் வெற்றியையே அடகு வைக்க இருந்தோமே...” மாலுமியின் குரலில் எரிச்சல் அப்பியிருந்தது.

“இதேதான்! இதேதான் அண்ணே காரணம்! ஒரு முழுக்கோளின் வெற்றி தோல்வியை ஒரே ஒரு வீரன் தலையில் கட்டினால் அவன் என்ன செய்வான்? பாவம்! அந்த மனவுளைச்சல்தான் அவன் கவனத்தைச் சிதறடித்துள்ளது!” என்று பரிந்து பேசினான் விண்வெளி வீரன்.

”இதில் என்னடா மனவுளைச்சல்? நம் கோளுக்காக உயிரையும் தரத் துணிந்துதானே படையில் சேர்கிறோம்? வீரனுக்கு உயிரா முக்கியம்? உயிரே முக்கியமில்லை என்றால் அச்சம் ஏன் வருகிறது, மனவுளைச்சல் ஏன் வருகிறது?” இளைய மாலுமியின் குரலில் ஒருவித ஏமாற்றமும் ஏரிச்சலும் இருந்தன!

“நிதானமாய் யோசித்துப் பார் அண்ணே... படையோடு படையாய்க் களத்திற்குச் செல்வதும், தனி ஒருவனாய், தன் கோளின் பிரதிநிதியாய்க் களத்திற்குச் செல்வதும் ஒன்றா? வெற்றி அல்லது வீரமரணம் என்பது வேறு, வெற்றி அல்லது தோல்வி என்பது வேறு! உன் தோல்வி உன்கோளின் தோல்வி, உன்னை நம்பிய பலவாயிரம் வீரர்களின் தோல்வி என்றால் உன்னால் நிம்மதியாக யுத்தம் செய்ய இயலுமா? சொல்லு?”

”என்னைத்தான் கூப்பிடுகிறார்கள் தொடிமத்தின் சார்பாய் யுத்தம் செய்ய, அடப்போடா! எதற்கெடுத்தாலும் நெருப்பீட்டி, நெருப்பீட்டி... நாமெல்லாம் வீரர்களாகவே அவர்கள் கண்களுக்குத் தெரியமாட்டோம்!” என்று கோவம் கலந்து அலுத்துக்கொண்டான் அந்த மாலுமி.

”நெருப்பீட்டிகள் தனிப்படை கிடையாது என்பதை மறந்துவிட்டீரா? ஒற்றர் தவிர்த்த நம் ஆறு படைகளிலும் சிறந்த வீரனைத்தானே நெருப்பீட்டியாக்கிப் பயிற்சி அளித்து பணிக்கு அமர்த்துகின்றனர்? எந்தவொரு நெருப்பீட்டியும் தொடக்கத்தில் ஆறு படைகளில் ஏதோ ஒன்றில் இருந்தவன்தான், நீயேன் இப்படிப் பிரித்துப் பேசுகிறாய்?” தரைப்படை வீரன் சற்று காட்டமாகவே பதிலளித்தான்.

”கடந்த சில ஆண்டுகளாய் எந்த மாலுமியும் நெருப்பீட்டியாகவில்லை, தெரிந்துகொள்!” என்று சீறினான் மூத்த மாலுமி.

“மாலுமிகள் முரடர்கள்! மெய்க்காவல் வேலை உடல்வலியை மற்றும் சார்ந்ததல்ல! இங்கும் கொஞ்சம் தசை வேண்டும்” என்று விண்வெளிவீரன் தன் மண்டையைத் தட்டிக்காட்ட இரு மாலுமிகளும் ஆவேசமாய் இருக்கையைவிட்டு எழ, தரைப்படை வீரன் சட்டென அவர்களுக்கு இடையில் வந்து தடுத்தான்,

“அண்ணா, உங்கள் வீரத்தை இங்கே காட்டாதீர்கள்! வீமனுக்குக் கால் உடைந்துவிட்டது, அடுத்து யாரென்று இன்னும் முடிவாகவில்லை, நீங்கள் போய் உங்கள் பேரைக் கொடுங்களேன்?” அவனது குரலில் இருந்த எள்ளல் இரு மாலுமிகளையும் மேலும் சீற்றத்துக்குள்ளாக்கியது,

“பேரைக் கொடுக்க எனக்கென்ன அச்சமா? கொடுத்தால் மட்டும் உடனே ஏற்றுக்கொண்டு விடுவார்களா? வீமனுக்கு கால் உடைந்தால் அடுத்து சோமனோ கீமனோ, நெருப்பீட்டியில் இருந்துதான் அடுத்த தீவட்டியைத் தேர்வு செய்வர்!”

“உண்மைதான், நெருப்பீட்டியின் சயந்தன் என்பவனைத்தான் அடுத்து தேர்வு செய்வார்கள் என்று கேள்விப்பட்டேன் நான்...” என்றான் அந்த விண்வெளிவீரன், அவனை அறியாமலே அவன் கை இடுப்பில் உறங்கும் கதிர்த்துப்பாக்கியின் மீது இருந்தது.

“சயந்தனா? அவன் காட்டுமிராண்டிப் பயலாயிற்றே...” என்று சண்டையை மறந்து ஆர்வமானான் இளைய மாலுமி.

அவனுக்கு விண்வெளி வீரன் பதில் சொல்லும் முன் வெளியில் ஏதோ அரவம் கேட்க, உள்ளேயும் அனைவரும் பரப்பரப்பானார்கள்.

சயந்தன் தன் தலையைத் தானே வெட்டி பலிகொடுத்துக்கொண்டானாம்! போரில் தொடிமம் வெல்ல அவன் ஒரு பழைய மரபைப் பின்பற்றி அவ்வாறு செய்தான் என்றும், இல்லையில்லை, யுத்தத்திற்கு அஞ்சியே தற்கொலை செய்துகொண்டான் என்றும் குழப்பமாய்த் தகவல்கள் வந்து சேர்ந்தன.

பதுமன் உணவுக்கூடத்தைவிட்டு வெளியேறினான். அறையில் வருவதற்குள் வீரர்களிடையே பலவகைக் குழப்பமும் சிறுசிறு வாக்குவாதங்களும் சண்டைகளும் ஆங்காங்கே நிகழ்வதைக் கவனிக்கத் தவறவில்லை.

அந்தப் பாடிவீடுகளில் அதுநாள்வரை இருந்த ஏதோவோரு ஒழுங்கும் கட்டுப்பாடும் மெள்ள விடுபட்டுப் போவதைப் போல உணர்ந்தான் பதுமன். அவனது ஒற்றன் மூளை இது கலகத்திற்கான பாதை என்று எச்சரிக்கை மணி அடித்தது. நாசக்கார கிழவி! எப்படியெல்லாம் குழப்பிவிட்டுப் போயிருக்கிறாள்! அதியக் கிழவி... விஞ்ஞானிக் கிழவி... கிருமிக் கிழவி...

பதுமன் ஔவையாரை மனதாறத் திட்டினான். அவனுக்குத் தோன்றிய அந்தக் கடைசி சொல்லில் ஏதோ ஒரு பொறிதட்டியது. கிருமிக் கிழவி!

பதுமன் சட்டெனப் பரப்பரப்பானான். உடனே ஆளுநரைச் சந்தித்தாக வேண்டும்! குறைந்தபட்சம் பதியையாவது சந்திக்க வேண்டும்! கிருமிக் கிழவி!
--------------------​
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
5

பதுமனுக்கு நன்மள்ளனாரைச் சந்திக்கத்தான் அனுமதி கிடைத்தது. அதுவும் நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது. பாடிவீடுகளில் நெருப்பீட்டிகளின் காவல் பலப்பட்டிருந்ததைக் கண்டான்.

மாதண்ட நாயகரின் குமிழிக்குள் அவனை அனுமதிக்க முதலில் மறுத்தேவிட்டனர். சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டுவிட்டு அனுப்பிவிடவில்லை. குடைந்தெடுத்தெனர். சமீபத்திய ஒற்றுச் செய்தி ஒன்று இருக்கிறது என்று அவன் சொன்னபின், அரைகுறையாய் நம்பி அவனை உள்ளேவிட்டனர், அதுவும் அவன் கைகளைப் பின்னால் கட்டி! தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஊகித்திருக்கிறார்கள்! என்ன கேவலம், நம் படைவீரர்களிடமிருந்தே நம் தலைவர்களைக் காக்க வேண்டிய அவல நிலை! எல்லாம் அந்தக் கிழவியால்! ஏ கிழவியே, உன் கள்ளத்தனத்தை மற்றவர் தவறவிட்டிருக்கலாம், ஆனால், நான் சரியாகக் கண்டுகொண்டேன், இதோ பதியிடம் விளக்கி உன் ஆட்டத்தைக் குலைக்கிறேன் பார்... அதியத்தை கற்குவியலாக்காமல் நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம்! ஒரே ஒரு தொடிம ஒற்றனின் திறனை அறிந்துகொள்ளப் போகிறாய் நீ! பார்... பார்...

பதுமனுக்கு முன் சென்ற நெருப்பீட்டி நின்று திரும்பி அவனை உற்று நோக்கினான். தன் உதட்டின் மேல் கையை வைத்து ‘அமைதி’ என்று சைகை காட்டிவிட்டு மீண்டும் முன்னால் நடந்தான். பதுமன் அஞ்சவில்லை, ஆனாலும் சிந்தனையைக் கட்டுப்படுத்திக்கொண்டு, பதியின் முன் சென்றதும் என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்று எண்ணங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டான்.

வந்தனம் பதி! நம் வீரர்களுக்குள் இருக்கும் குழப்பம் தாங்கள் அறிந்ததே! இச்சிறியேன் கண்டறிந்த ஓர் உண்மையை உங்களிடம் தெரிவிக்கவே வந்தேன். நான் முதலில் தங்களைச் சந்தித்தபோது ஔவைக்கிழவி வருகிறாள், அவள் நம் கலங்களிலும் கருவிகளிலும் ஒரு கிருமியைச் செலுத்தப் போகிறாள் என்ற செய்தியைக் கொண்டு வந்தேன். ஆனால், அவள் அது தான் நடத்திய நாடகம் என்று சொல்லி நம்மைச் சிறுமைபடுத்தினாள். பதி, அச்செய்தி வீண் செய்தி அல்ல! அதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது! அந்த ஔவைக் கிழவி செலுத்திய கிருமி மென்பொருள் கிருமி மட்டுமல்ல, அவள் ஒரு உளவியல் கிருமியையும் செலுத்திவிட்டிருக்கிறாள். வீண் பெருமை பேசி நம்மை உணர்ச்சிவசப்பட செய்து தொடிம-அதியப் போரை, இரண்டு கோள்களுக்கிடையில் நடக்க வேண்டிய போரை, இரண்டு வீரர்களுக்குள் நடக்கும் துவந்த யுத்தமாக மாற்றிவிட்டாள். இதில்தான் அவளது உளவியல் தந்திரம் அடங்கியுள்ளது, பதி! வெற்றி அல்லது வீரமரணம் என்று உற்சாகத்துடன் போரிட வேண்டிய வீரனை வெற்றி அல்லது தோல்வி என்ற மனவுளைச்சலுடன் போரிடச் சொன்னால் எவன்தான் துணிவான்? தொடிம-அதியப் பகை தலைமுறைகள் கடந்தது, அதனை இரண்டில் ஒன்றாய்த் தீர்மாணிக்க வேண்டிய இந்தப் போரை ஒரே ஒரு வீரனின் தலையில் கட்டினால் எப்பேர்பட்ட வீரனாலும் அதைத் தாங்க இயலாது! நெருப்பீட்டியே ஆனாலும் துவண்டுதான் போவான்! நீங்களே கூட சோர்வடைவீர்கள்!

அந்தக் கடைசி வாக்கியத்தைச் சொல்வது தன் உயிருக்கு அத்தனை ஒவ்வாது என்பதைப் பதுமன் உணர்ந்து மெல்லிதாய் நடுங்கி அடங்கிய வேளை அவன் மாதண்ட நாயகரான நன்மள்ளனாரின் முன் நின்றுகொண்டிருந்தான்.

“வந்தனம் பதி!”

“பதுமா! என்ன ஒற்றுச் செய்தி? நீ எங்கே சென்று ஒற்றறிந்தாய்? சீக்கிரம் சொல்...” நன்மள்ளனார் தான் பார்த்துக்கொண்டிருந்த கைத்திரையிலிருந்து பார்வையைத் திருப்பாமலேயே வினவினார்.

”அது- மன்னிக்கவும், பதி! ஒற்றுச் செய்தி அல்ல, நான்- இச்- இச்சிறியேன் கண்டறிந்த ஓரு உண்மையை உங்களிடம்-” அவன் முடிப்பதற்குள் நன்மள்ளனார் சட்டென அவனை நிமிர்ந்து பார்க்கவும், பதுமன் மேலும் தடுமாறினான், அவர் ஏதும் பேசாமல் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, சற்றே அமைதி யடைந்தவனாய்த் தொடர்ந்தான்,

“அந்த ஔவையார்க் கிழவி செலுத்தியது மென்பொருள் கிருமி மட்டுமல்ல, பதி! ஒரு உளவியல் கிருமியையுந்தான்! அதாவது-”

“இரண்டு கோள்களின் போரை அவள் இரண்டு வீரரின் போராக்கிவிட்டாள், அதானே?”

அவர் மீத்தாவல் விண்கலத்தைப் போல அத்தனைச் சுருக்கமாய், அத்தனை நேரடியாய் அதைச் சொல்லிவிட்டது பதுமனுக்கு ஏமாற்றத்தை அளித்தது!

”அது... ஆம் பதி... அ-” பதுமன் திணற நன்மள்ளனார் சட்டெனத் திரும்பி பின்னால் இருந்த நெருப்பீட்டிக்குச் சைகை செய்ய, அவன் வந்து பதுமனின் கைக்கட்டை வெட்டிவிட்டான்.

“பதுமா! நீ வந்ததும் ஒருவகையில் நல்லதாய்ப் போயிற்று! நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்!” என்று அவனைக் கூராய் நோக்கினார். பதுமனால் அந்தப் பார்வையைச் சமாளிக்க இயலவில்லை. அவன் மனத்தில் மெல்ல ஒரு ஐயம் தோன்றியது, அவன் வயிறு ஈயம் உருகுவதைப் போலக் கலக்கியது... நன்மள்ளனார் அழுத்தமாய்ச் சொன்னார்,

“தொடிமம் சார்பாய் துவந்த யுத்தத்தில் கலந்துகொள்ளப் போகிறவன் நீதான்!”

பதுமன் சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டதைப் போல உணர்ந்தான். “பதி- ப-” அனிச்சையாக உடலை விறைத்து அவருக்கு வணக்கம் செய்தான், சிந்தனையிலும் வாயிலும் சொற்களே வரவில்லை.

”அஞ்சாதே பதுமா! ஔவைக்கிழவியின் உளவியல் சூழ்ச்சியைத் தானாகவே உணர்ந்துகொண்ட வீரனால்தான் அதை முறியடிக்கவும் இயலும்! நம் வீரருக்கு ஏற்படும் அதே மனவழுத்தம்தானே அதிய வீரர்களுக்கும் ஏற்படும்? பின் எப்படி இந்தச் சூழ்ச்சி ஔவைக்கிழவிக்கு மட்டும் சாதகமானதாகும்? இது இருமுனை கத்தி, இரண்டு பக்கமும் வெட்டும்... நாம் யுத்தத்திற்கு வரமாட்டோம் என்ற துணிச்சலில்தான் அக்கிழவி இதைப் பயன்படுத்தியிருக்கிறாள், நாம் உன்னை நிறுத்துவோம், தீவிர போர்ப்பயிற்சி இல்லாத ஒரு ஒற்றனே உங்களுக்குப் போதும் என்று நாமும் அவள் ஆட்டத்தை அவளிடமே ஆடுவோம்... கலங்காதே, இது உடல்வலிமையால் செய்யும் போரல்ல, மனவலிமையால் செய்ய வேண்டிய போர், இதற்கு ஒற்றனாகிய உன்னைவிட சிறந்தவன் வேறு யாருமில்லை! இன்னும் ஐந்து நாள்கள் உள்ளன, நாம் ஒரு ஒற்றர்படை வீரனைத்தான் முன்னிறுத்தப் போகிறோம் என்ற தகவலே அக்கிழவியையும் அதியத்தையும் உலுக்கிவிடும், இது அவள் எதிர்பாராத அடியாக இருக்கும்! அதுதான் சரி! நீதான் தொடிமத்தின் சார்பாய் துவந்த யுத்தம் செய்யப்போகும் வீரன்!”

பதுமனுக்குச் சிந்திக்கவோ பேசவோ வாய்ப்பே தராமல் அவர் பேசி முடித்தார். பதுமன் தன் மூளைக்குள்ளேயே ஒரு கிருமி புகுந்து தன் மூளையைச் செயலிழக்கச் செய்வதைப் போல உணர்ந்தான். நன்மள்ளனர் நெருப்பீட்டிகளுக்குக் கட்டளைகள் இட்டதையோ, அவர்கள் இவனை அழைத்துக்கொண்டு சென்றதையோ, அவன் தங்கியிருந்த அறைக்கல்லாது வேறொரு அறைக்கு அவனைக் கூட்டிக்கொண்டு வந்ததையோ உணர்ந்தும் உணராமலும் கனவில் இருப்பவனைப் போல இருந்தான் பதுமன்.

அந்த அறையில் அவனை விட்டுவிட்டு நெருப்பீட்டிகள் சென்ற பின்பு அனிச்சையாய் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்த பின்புதான் பதியிடம் விடைபெறும் விதமாய் வந்தனம் கூடச் செய்யாமல் வந்துவிட்டோம் என்பதை உணர்ந்தான். சாதாரண நிலையில் இது இரண்டாந்தரக் குற்றமாக எண்ணப்பட்டுக் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டிருக்கும், மாறாய் இங்கு அவனுக்கு அதிகமான உபசரிப்பு கிடைத்தது. ஒரு சேவகன் அவனுக்கு குடிக்க அல்லது உண்ண ஏதேனும் வேண்டுமா என்று கேட்டுவிட்டுச் சென்றான்.

பதுமன் கட்டிலில் படுத்துக்கொண்டே சிந்திக்கத் தொடங்கினான். அவனது மூளை மெள்ள செயல்பாட்டிற்கு வந்தது. ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் தலை வெடித்துவிடும் எனுமளவிற்கு அவனது சிந்தனை ஓட்டம் முன்னும் பின்னும் மாறி மாறி ஓடியது. இது அப்படி இருந்திருந்தால், அது இப்படி ஆனால் என்று சிந்திக்கச் சிந்திக்கக் குழப்பமே மிஞ்சியது. பதுமன் சோர்வடைந்து தன்னை அறியாமலே உறங்கிவிட்டிருந்தான்.

மீண்டும் கண்விழித்தபோது காலையாக இருந்தது. சேவகன் ஒருவன் வந்து குடிக்க ஏதோவொரு பானத்தைத் தந்தான். அறையை ஒட்டியே குளியலறை இருப்பதாய்ச் சொல்லிச் சென்றான். பதுமன் குளித்துவிட்டு வந்தபோது கட்டிலுக்கு அருகில் ஒரு மேசை போடப்பட்டு அவனக்காக காலையுணவு காத்திருந்தது. தரைப்படையின் உயர்நிலை வீரர்களுக்குத் தரப்படும் சத்துணவே பெரும்பான்மை இருப்பதைக் கவனித்தான். ஒன்றிரண்டு இனிப்பு வகைகளும் இருந்தன, அவை உயரதிகாரிக்களுக்கானவை என்பதையும் பதுமன் அறிவான்.

உண்ட பின் மெல்ல தன் அறையைவிட்டு வெளியே வந்தான். வாயிலில் இருந்த நெருப்பீட்டி அவனுக்கு வந்தனம் செய்தான். பதுமனும் பதிலுக்கு வணங்கினான். அந்த நெருப்பீட்டியின் இதழோரம் மெல்லிய ஒரு எள்ளல் நகை இருந்ததாகத் தோன்றியது பதுமனுக்கு! பதுமன் குமிழியைவிட்டு வெளியே சென்றான், நெருப்பீட்டி சற்று இடைவெளிவிட்டுப் பின்தொடர்ந்தானே ஒழிய ஏதும் தடுக்கவில்லை. சட்டென பதுமனுக்கு ஒன்று தோன்றியது, சரி, இது எவ்வளவுவரை செல்கிறது பார்ப்போம் என்று பாடிவீடுகளின் ஊடே அங்குமிங்கும் நடந்தான்.

அவனுக்கு முன்னால் சற்று தொலைவில் பயிற்சித் திடல் தெரிய, பதுமன் அதை நோக்கி நடந்தான். தான் செல்லும் இடத்திலெல்லாம் பலரின் கண்கள் தன்னைக் கவனிப்பதைக் கவனித்தான், இவன் பார்க்கையில் அவர்கள் பார்வையை அவசரமாய்த் திருப்பிக்கொண்டனர்.

திடலின் அருகில் வந்தவுடன்தான் அதனை அடுத்து இருந்த விண்கலங்கள் நிறுத்தும் துறையைக் கவனித்தான் பதுமன். பதுமனின் மூளை விரைந்து கணக்குப்போட்டது. தனக்குப் பின்னால் வந்த நெருப்பீட்டியை அருகில் வர அழைத்தான்,

“நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய இயலுமா?”

“கட்டளை!” அந்த நெருப்பீட்டி விறைத்து நின்றான், பதுமன் உதட்டில் மலரத்துடித்த புன்னகையை அடக்கிக்கொண்டான்.

“என் ஆயுதத்தை நான் இருந்த அறையிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன், அதைக் கொண்டு வா, விரைந்து செல்!” என்று உண்மையிலேயே கட்டளையிட்டான்.
----​

பதுமனின் விண்கலம் ஒரே மீத்தாவலில் ஒரு ஒளிநாளைக் கடந்து அதியக்கோள் இருந்த விண்மீன் மண்டலத்தின் எல்லையைத் தொட்டிருந்தது. தன் அறையில் தனது ஆயுதத்தைத் தேடி அப்படி எதுவும் அங்கில்லை என்று உணர்ந்து தன்னிடம் சொல்லத் திரும்பி வந்து தன்னைத் தேடிக்கொண்டிருக்கும் அந்த நெருப்பீட்டியைக் கற்பனையில் கண்டு பதுமன் மெல்ல புன்னகைத்துக்கொண்டிருந்தான்.

தமது ஏமாற்றத்தை அந்த நெருப்பீட்டியும் நன்மள்ளனாரும் உணர்ந்துகொள்ளும் போது நான் ’அந்தரமடை’ அண்டத்தின் விளிம்பைத் தொட்டிருப்பேன்! அங்கிருக்கும் ஏதோவொரு வணிகக் கோளுக்குள் எப்படியேனும் நுழைந்துவிட வேண்டும். முடிந்தால் வழியில் எங்காவது இக்கலத்தை மாற்றி வேறொரு கலத்தைப் பெற வேண்டும். ஒரு ஒற்றனுக்கு இதெல்லாம் எளிதுதானே!

பதுமனின் மூளை திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தது. சட்டென அவனது சிந்தனையோட்டதில் ஔவையாரின் முகம் மின்னல் வெட்டியதைப் போல வந்தது. பேச்சிலேயே ஒரு போரை வென்றுவிட்ட அந்தக் கள்ளக் கிழவியைத் தூற்றுவதா? போற்றுவதா?

அந்தச் சிக்கலை வரலாற்று அறிஞரிடமும் அதியத்தின் கவிஞரிடமும் விட்டுவிடத் தீர்மாணித்து, கலத்தைச் செலுத்துவதில் தனது கவனத்தை நிறுத்த முயன்றான் பதுமன்!

[முற்றும்]
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
6
அருஞ்சொற்பொருள்:

குமிழ் - bubble like dome shaped (hemispherical) dwellings (protect from exposed outer space)
பதி - Head / Cheif
காலத்துளி - An unit of time (approx. = 1 minute)
மீத்தாவல் - hyper-jump (a type of space travel faster than light)
ஊடுகதிர்க் கருவி - x-ray scanner
பல்லொலிக் கருவி - multisonic scanner (ultra, audible and infrasonic sounds used to scan the molecular composition of things)
கடலலைப்பிணைப்பு - tidal lock (even Earth's Moon is tidally locked, so we always see the same side of our moon!)
ங-கதிர் - a electromagnetic like ray more powerful than x-ray or gamma ray (fictional!)
சுருள்வில் - spring
காற்றுந்து - aircar (hovercraft like vehicle that is used to travel quickly across the surface of a planet)
ள-கதிர் - another powerful ray like ங-கதிர் (fictional)
கிருமி மென்பொருள் - virus software / malware
உந்துபொறி - engine (புறநானூற்றின் தேர்-சக்கரம் உவமையை நான் விண்வெளிக்கப்பல் - உந்துபொறியாகக் கையாண்டுள்ளேன்!)
துவந்த யுத்தம் - duel (fight between two warriors)
வலவன் - pilot
மாலுமி - sailor
’அந்தரமடை’ அண்டம் - Anderomeda galaxy

எண்வகைப் படை: (Eight-fold force):
தரைப்படை - infantry
நீர்ப்படை - navy
வளிப்படை - airforce
ஒளிப்படை - light force (uses specialized short-range and long-range laser like beams)
விண்வெளிப்படை - space-force
மறைப்படை - stealth-force (they are part of all the above armies)
ஒற்றுப்படை - espionage
மெய்க்காவற் படை - bodyguards / royal guards of kings and chiefs (in Thodimam's culture they are called 'Neruppeetti' - Fire-lancers, due to the laser-spear they hold as a symbol of their brigade)
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அருமையான பதிவு சகோ இரண்டு தடவைகள் படிச்சுட்டேன். இன்னும் படிக்கனும். அந்த நெருப்பீட்டிகள் எல்லாம் உண்மை தானா சகோ :unsure::unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top