• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கள்வனே-21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
அத்தியாயம்-21

என்ன தான் தைரியமாக முடிவு எடுத்து விட்டாலும் எழிலரசிக்கு உள்ளுக்குள் ஒரு சிறு நடுக்கம் ஓடிக்கொண்டு தான் இருந்தது. சாதாரணமாக முகத்தை வைத்துக் கொள்ள எவ்வளவுதான் முயற்சித்தாலும் மனதிலுள்ள கலக்கம் முகத்தில் தெரியத்தான் செய்தது. நெடுமாறனும் அவள் நடவடிக்கையை கவனித்துக் கொண்டுதான் இருந்தான் காலையில் இருந்து அவனுக்கு இரண்டு முறை காபி கொண்டு வந்து கொடுத்து விட்டாள். ஏற்கனவே கொடுத்து விட்டாயே என சொன்னால் ஆமாம் கொடுத்துட்டேன்ல மறந்துட்டேன் என அவஸ்தையாய் புன்னகைத்தாள்..

இப்போது கொஞ்ச நாட்களாக அவனுக்காக அவள் பார்த்து பார்த்து செய்யும் சிறு சிறு வேலைகளை கூட செய்வதில்லை. நெடுமாறன் குளித்ததும் உடை எடுத்துக் கொடுப்பதில்லை அவன் உண்ணும் போது உணவு எடுத்து வைப்பதில் ஆர்வம் காண்பிப்பது இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் அவளை எதிர்பார்த்து ஏமாந்து அவனுக்குள் ஒரு சிறு வலி இருந்தது. இப்போதெல்லாம் ஒவ்வொன்றையும் அவளை கட்டாயப்படுத்தியே செய்ய வைக்கிறான் ஆனால் இன்று அவள் இயல்பாகவே ஒவ்வொன்றையும் செய்ய அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது..

"என்ன எலிக்குட்டி இன்னைக்கு கவனிப்பெல்லாம் கொஞ்சம் தூக்கலா இருக்கே என்ன விஷயம்..?" என குதூகலமான குரலில் கேட்டான்..

வெகு நாட்களுக்கு பிறகு தனது கவனிப்பில் அவன் மயங்கி விட்டிருக்கிறான் என்பது புரிய, "அது நீங்க என் மேல இருக்குற பாசத்துல தானே இதெல்லாம் செய்றீங்க. நான் நீங்க சொல்றத கரெக்டா செஞ்சிட்டா இயல நீங்க எதுவும் செய்ய மாட்டீங்க அதுதானே எனக்கும் வேணும். எல்லாம் பழையபடி மாறனும்னா நான் மாறனும் அதுக்காகத்தான் மொத ஸ்டெப் எடுத்து வச்சிருக்கேன்", என சொன்னாள்..

அவள் சொல்லி முடித்ததும் வியப்புடன் அவளைப் பார்த்தவன் சட்டென்று அவள் கைகளை பிடித்துக்கொண்டு, "நிச்சயம் நீ என்னை புரிஞ்சுக்குவன்னு தெரியும் பிரின்சஸ் இருந்தாலும் எனக்கு பயமாவே இருந்தது. இப்படியே காலம் முழுவதும் நம்ம வாழ்க்கை போயிடுமோன்னு ஒவ்வொரு நாளும் பயந்துகிட்டு இருந்தேன். நான் சொல்றதை நீ கேட்டுட்டு இருந்தா நாம ரெண்டு பேரும் மட்டும் இல்லை இயலும் சந்தோஷமா இருப்பா. அவளை எனக்கு பிடிக்காதுன்னு எல்லாம் கிடையாது அப்போலருந்தே அவளை எனக்கும் பிடிக்கும். இருந்தாலும் அவ உன்னை என்கிட்டே இருந்து பிரிச்சிடுவாளோங்குற பயத்துல தான் அவகிட்ட அப்படி நடந்துகிட்டேன். நீ எப்பவும் இதே போல இருந்தா நிச்சயம் என்னால அவளுக்கு எந்த கெடுதலும் வராது. நாம எல்லாருமே ஒன்னா சந்தோஷமா இருக்கலாம்", என அவன் புன்னகைத்தான்..

அவன் புன்னகையில் இருந்த ஏதோ ஒன்று அடுத்து அவளை ஏதும் பேச விடாமல் செய்ய பெயருக்கு சிரித்து அவன் கைகளை அழுத்தி விட்டாள் இப்போதைக்கு அது ஒன்றே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவள் கன்னத்தை ஒரு கையால் புன்னகையுடன் அழுத்தி ஆபீஸ் போயிட்டு வரேன் என்றபடி வெளியேறினான். வெகு நாட்களுக்கு பிறகு அவளும் வாசல் வரை வந்து அவனுக்கு கையாட்டி விடை கொடுத்தாள்..

எப்பொழுதும் தோட்டக்காரன் ஐந்து மணிக்கு கிளம்பி விடுவான் சமையல்காரம்மா இரவு உணவை முடித்து விட்டு கிளம்பி செல்வாள். ஆரம்பத்தில் இவர்கள் இருவரிடம் ஏதாவது உதவி கேட்கலாம் என அவள் நினைத்திருந்தாள் ஆனால் இருவருமே நெடுமாறனுக்கு விசுவாசமான வேலைக்காரர்கள். இரண்டாவது அவர்களை பார்த்தால் சராசரியான மனிதர்களைப் போல தோன்றாது. நிச்சயம் இவர்களும் ஏதாவது ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டவர்களாகத் தான் இருப்பார்கள் என்று அவளுக்கு உள்ளுணர்வு சொல்லியது. அதே போல அவர்கள் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்ததும் அவளுக்கு கேட்டது. அந்த தோட்டக்காரன் தன்வீருக்கு தூரத்து சொந்தமாம் கெட்டது போ என நினைத்துக் கொண்டாள். அவன் லட்சணமே அப்படி இருக்கிறது கண்டிப்பாக இவன் அவனுக்கு மேலே தான் இருப்பான். அதிலிருந்து அவர்களிடம் உதவி கேட்கும் எண்ணத்தையே கைவிட்டாள்..

அதோடு சமீபத்தில் தன்வீரின் பார்வை அவள் மேல் ஒரு வெறியுடன் படிவதை எழிலரசி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். அந்த கைக்காயம் ஆற தன்வீருக்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆனது அதுவரை கட்டோடு தான் சுற்றிக் கொண்டிருந்தான். அன்றைய நாள் நெடுமாறனின் தண்டனைக்குப் பிறகு அவனுக்கு தன் மேல் வன்மம் கூடியிருப்பதை அவள் உணர்ந்து தான் இருந்தாள். முதலிலாக இருந்திருந்தால் அவன் பார்வையில் உள்ளுக்குள் நிச்சயம் குளிர் பரவியிருக்கும் ஆனால் இப்போது அவளுக்கு அதை சுலபமாக கடக்க முடிந்தது. ஏனெனில் அதைவிட எவ்வளவோ பிரச்சினைகளை அவள் கடந்து வந்துவிட்டாளே..

மாலை சீக்கிரமாக நெடுமாறன் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்துவிட அவனை இன்முகத்துடன் வரவேற்றாள். ராஜு வந்து அவனை அழைத்து சென்றதும் அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொன்றாக நினைவில் நிறுத்திக் கொண்டிருந்தாள்..

முதலில் நெடுமாறன் கிளம்பியதும் நாய்க்கு வைக்க வேண்டிய உணவை ஸ்லீப்பிங் டேப்லெட்டை கலந்து வைத்துவிட வேண்டும். அடுத்ததாக சுற்றியுள்ள அலாரங்களை கிளம்ப போகும் பத்து நிமிடங்களுக்கு முன்னதாக மட்டுமே நிறுத்தி வைக்க வேண்டும். ஏனெனில் அந்த அலாரங்கள் நிறுத்தி வைக்கும் போது உடனடியாக நெடுமாறனுடைய மொபைலுக்கு செய்தி சென்று சேர்ந்துவிடும். அதனால் அவன் உடனே கிளம்பி வருவதற்கான வாய்ப்பு உண்டு அதனால் தான் சரியாக பத்து நிமிடம் முன்பாக அதை நிறுத்த நினைத்திருந்தாள்..

தோட்டக்காரன் சென்றுவிட்டான் சமையல் செய்பவரையும் இரவு உணவைத் தானே தயாரித்துக் கொள்வதாக சொல்லி அனுப்பி வைத்துவிட்டாள். மிச்சமிருப்பது தன்வீர் மட்டும் தான் அவனையும் அன்று மருத்துவமனையில் அவளை அடித்த பிறகு, அவனை பார்த்தாலே பயமாக இருக்கிறது அவனை இனிமேல் என் அருகே வர சொல்லாதீர்கள் என்பது போல நெடுமாறனிடம் சொல்லி வைத்தாள். நெடுமாறனும் அவளது நலனை கருத்தில் கொண்டு முன் வாசலை தாண்டி தேவையில்லாமல் அவள் அருகே வரக்கூடாது என தன்வீரிடம் ஏற்கனவே சொல்லி விட்டிருந்தான்..

தான் சிசிடிவி கேமராவையும் அலாரத்தையும் நிறுத்தி வைத்த அடுத்த நிமிடமே அது நெடுமாறனுக்கு சென்று சேர்ந்துவிடும். அதற்குள் எழில் ராஜுவுக்கும் முகிலனுக்கும் தகவல் கொடுத்து விடுவாள். அப்படி இல்லை என்றாலும் சரியாக ஏழு மணிக்கு பின் கதவின் வழியாக வெளியே வந்து விடுவோம் என சொல்லி இருந்தாள். தாங்கள் வெளியே சென்றதும் முகிலனின் ஆட்கள் மறைந்திருக்கும் இடத்திலிருந்து வந்து அழைத்துக் கொள்வார்கள்..

எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்க மாலை அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துவிட்ட நெடுமாறனோ முகத்தில் புதுப்பொலிவுடன் இருந்தான். தன் மனைவி தன்னிடம் சரியாக பேசிவிட்டாள் என்பதே அவனுக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருந்தது. எழில் மாலை சிற்றுண்டியும் டீயும் கொண்டு வந்து கொடுக்க அவனும் புன்னகையுடனே வாங்கிக்கொண்டான். ஏதோ யோசனையில் இருந்த அவனை ராஜுவின் குரல் கலைத்தது..

ராஜுவை ஆச்சரியமாக பார்த்த நெடுமாறன், "என்னடா ராஜூ இந்தப்பக்கம் அதுவும் இந்த நேரத்துல வந்திருக்க ஏதாவது முக்கியமான விஷயமா..?" எனக் கேட்டான்..

"ஒன்னும் இல்லடா நம்ம கிளப் மெம்பர்ஸ் ரொம்ப நாளா நீ வரலன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க நீயும் போகணும்னு சொன்னியே. அதான் இன்னைக்கு அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன். அடுத்தவாரம் கோல்ப் மேட்ச் வேற இருக்கு இப்போவே போய் ஒரு அட்டன்டன்ஸ் போட்டுட்டு வந்துடுவோம் அப்படியே அடுத்த வாரம் மேட்ச்சுக்கு நீ வருவேன்னு சொல்லிட்டு வந்துடலாம் கிளம்பு", என சொல்ல அவன் யோசனையாக ராஜுவை பார்த்தான்..

"என்னடா யோசிச்சுக்கிட்டு இருக்க கிளப்புக்கு போகலாம்ன்னு சொன்னா எனக்கு முன்னாடி நீ தான் கிளம்பி நிப்ப இப்ப என்ன ஆச்சு..?" என ராஜு கேட்டான்..

"ஒன்னும் இல்லடா இன்னைக்கே போகணுமா நாளைக்கு போகலாமே", என தயக்கத்துடன் ராஜுவை பார்த்தான்..

"இன்னைக்கு என்ன பண்ணலாம்னு இருக்க சும்மா தானே இருக்க..?" என ராஜு விடாபிடியாக அவனை அழைத்துச் செல்வதில் குறியாக நின்றான்..

"இல்லடா நானும் எழிலும் வெளில போயி ரொம்ப நாள் ஆகுது அதான் அவ கூட வெளில போகலாம்னு நினைச்சேன். கோச்சிக்காதடா ரொம்ப நாள் கழிச்சி இப்போதான் அவ என்கிட்ட ஒழுங்கா பேசுறா இப்ப விட்டா அவ கூட இது போல சந்தோஷமா இருக்க முடியுமான்னு தெரியல. அடுத்த வாரம் தானே மேட்ச் அதுக்குள்ள ஒருநாள் கிளப்புக்கு போகலாம் நான் இன்னைக்கு அவ கூட வெளியில போறேன்", என சொல்ல கேட்டுக் கொண்டிருந்த ராஜூவுக்கு மட்டுமல்ல எழிலரசிக்கும் அதிர்ச்சி தான்..

அவன் எதையும் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதால் ஓவராக அவனிடம் இழைந்து இப்போது நாமே பிரச்சினையை தேடிக் கொண்டோம் போலிருக்கிறதே. இவன் இப்படி ஒரு முடிவு எடுப்பான் என யாருக்கு தெரியும் இந்த நேரத்திலா இவனுக்கு இந்த மாதிரியெல்லாம் தோன்ற வேண்டும். அடுத்து கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை அதற்குள் எழிலரசி ஒரு முடிவுக்கு வந்தாள். என்ன ஆனாலும் சரி இன்று இந்த திட்டத்தை செயல்படுத்தியே ஆகவேண்டும். நான் இங்கிருந்து போகாவிட்டால் என்ன இயலரசி இங்கிருந்து போனால் அதுவே போதும்..

நெடுமாறன் எழிலரசியிடம் வந்து சீக்கிரம் கிளம்பு நாம் வெளியே போவோம் என புன்னகையுடன் சொல்லிவிட்டு அறைக்கு சென்றான். அவளும் சரி என தலையாட்டியதும் அவன் அங்கிருந்து செல்ல அவன் சென்று மறையும் வரை காத்திருந்த ராஜு திகைப்புடன் அவளிடம் வந்து இப்போது என்ன செய்வது எனக் கேட்டான்..

"இந்த பிளான்ல எந்த சேஞ்ச்சும் இல்ல ராஜு. நான் போகலைன்னாலும் இயல் இங்க இருந்து போயாகணும் எல்லாமே நம்ம திட்டம் போட்ட படியே நடக்கட்டும். நான் ஏற்கனவே இயல் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன் இப்போ பிளான் மாத்துறது அவளுக்கு தெரியாது அதை பத்தி நான் போய் இப்போ சொல்லிடுவேன். சரியா ஏழு மணிக்கு என் சிஸ்டம்ல நீங்க ஒரு சில மூவ் பண்ணுனா போதும் தானாகவே இங்கே உள்ள அலாரம் சிசிடிவி எல்லாம் ஆஃப் ஆயிடும்", என அவனுக்கு புரிகிற மாதிரி சொல்லிக் கொடுக்க அவன் புரிந்ததாக தலையாட்டினான்..

"அரை மணி நேரம் முன்னாலயே இதெல்லாம் நான் பண்ணி வச்சிட்டேன் ராஜு. கடைசியில டக்குனு முடிக்க அப்ப தான் வசதியா இருக்கும்னு தான் செஞ்சு வச்சேன் இப்போ அது நல்லதா போச்சு. நான் அவர் கூட போறேன் நீங்க இங்கயே இருந்து தன்வீர் கூட கொஞ்ச நேரம் பேச்சு கொடுங்க. நாய்ங்களுக்கும் நான் சாப்பாடு வச்சிட்டு போயிடுறேன் பாத்துக்கோங்க", என சொன்னவள் சொன்னபடியே இயலரசியின் அறைக்குள் நுழைந்தாள்..

இயலரசியிடம் விஷயத்தை சொல்ல அவள் முதலில் ஒத்துக்கொள்ளவே இல்லை..
"என்ன அக்கா விளையாடுறியா இந்த மாதிரியான ஒருத்தன்கிட்ட உன்ன விட்டுட்டு நான் மட்டும் போவேன்னு நினைச்சியா..? என்ன ஆனாலும் சரி நம்ம சேர்ந்தே இங்கருந்து போகலாம் அப்படி இல்லையா நானும் இங்கேயே இருக்கேன். அவன் இவ்வளவும் செய்றது உனக்காகத்தான் அப்படி இருக்கும்போது நான் வெளில போனா போலீஸ்ல சொல்லி உன்னை காப்பாத்த வருவேன்னு அவனுக்கு தெரியும். நான் மட்டும் இங்க இல்லன்னு அவனுக்கு தெரிஞ்சிட்டா உன்னை இங்க வைப்பான்னு நினைக்கிறியா அக்கா கண்டிப்பா உன்ன வேற எங்கேயாவது கூட்டிட்டு போய்டுவான்", என விம்மலுடன் சொன்னவளை தடுத்து நிறுத்திய எழிலரசி, "என்ன இயல் பேசுற அப்படி அவர் என்னைக் கொண்டுபோய் எங்கேயாவது அடைச்சு வெச்சா நானும் அப்படியே இருந்துடுவேன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா..? இப்போ நீ மட்டும் இங்க இல்லைன்னா என்ன ஆனாலும் அவரால என்ன தடுத்திருக்க முடியாது", என சொன்னாள்..

இல்லை எனும் விதமாக தலையாட்டிய இயலரசி, "இப்போ என்னால அவன் கூட இருக்குற நீ, நாளைக்கு உன் பிள்ளையாலையும் அப்படி இருக்கலாம் இல்லையா..? இப்போ என்ன வச்சு மெரட்டுறவன் நாளைக்கு உன் பிள்ளையை வச்சும் மெரட்ட மாட்டான்னு என்ன நிச்சயம்..? செய்ய மாட்டான்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா அவன் அப்பன் புத்தி தானே அவனுக்கும் இருக்கும்", என ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள்..

எழிலரசிக்கு சட்டென்று நெஞ்சு துணுக்குற்றது. அப்படியும் இருக்குமோ அதனால்தான் பிள்ளை என்றதும் அவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பானோ. நிச்சயம் அவன் குணத்துக்கு அப்படித்தான் எண்ணமாய் இருக்கும் இல்லையென்றால் எங்களுக்கிடையில் யாரும் வர விரும்பாதவன் எப்படி பிள்ளையை வர விடுவான். இவ்வளவு நாளும் பிள்ளைப் பாசத்தால் தான் அவன் அப்படி இருக்கிறான் என நினைத்திருக்க இந்த கோணத்தில் நினைத்துப் பார்க்காத தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள். இவ்வளவு நாளாய் ஒரு அவன் மேல் ஓரமாய் ஒட்டிக் கொண்டிருந்த பாசவலை அறுந்து விழுந்ததைப் போல தோன்றியது..

அவள் முகத்தை பார்த்ததும் இயலரசி வருத்தத்துடன், "எல்லாம் என்னால தானே அக்கா அவனை பத்தி எதுவும் தெரியாம அவனுக்கு உன் மேல இருக்குற காதலை மட்டும் பெருசா நினைச்சுட்டேன். நான் மட்டும் அவனுக்கு சப்போர்ட் பண்ணாம இருந்திருந்தா கண்டிப்பா நீயும் அவன பத்தி யோசிச்சு பார்த்திருக்கவே மாட்ட எனக்கு நல்லா தெரியும். நான் தான் உன்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டுட்டேன் அதனால தான் அவன் என்னை எவ்வளவு கஷ்டப் படுத்தினாலும் எனக்கு பெருசா தெரியல. உன்னுடைய வாழ்க்கைய இப்படி ஒரு தப்பானவன் கையில ஒப்படைச்சிட்டு அதுக்கு நானும் காரணமாய் இருந்துட்டு அவன்கிட்ட இருந்து இந்த அளவுக்கு கூட நான் அடிபடலன்னா அது எப்படி சரியா இருக்கும்", என அவள் விரக்தியாக சிரித்தாள்..

"பைத்தியம் மாதிரி பேசாதே இயல் இதுக்கெல்லாம் நீ எப்படி காரணமாக இருக்க முடியும். அவன் திட்டம் போட்டு நம்மள ஏமாத்திருக்கான் அதுல ஏமாந்துட்டோம். அப்படியும் அவன் காதல் உண்மைன்னு மட்டும் தானே நீ சொன்ன மத்தபடி வேற என்ன தப்பு செஞ்ச. அவன் காதல் பொய்யின்னு இப்போ கூட உன்னால சொல்ல முடியுமா..? அவன் கண்ணுல தெரிஞ்ச காதல் என் மேல வச்சிருந்த பாசம் இதெல்லாம் மட்டும்தான் நம்மால புரிஞ்சிக்க முடியும். அவன் சைக்கோவா நல்லவனா இதெல்லாம் எப்படி நம்மளால கண்டுபிடிக்க முடியும். பழகிப் பார்த்துருந்தா ஒரு வேளை தெரிஞ்சிருக்கலாம் ஆனா அதுக்கு அவகாசமே கொடுக்காம அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டான். இதுல உன் தப்பு என்ன இருக்கு தப்புன்னு சொன்னா என் மேல தான். அவன் இப்படிப்பட்டவன்னு தெரியாமலேயே காதலிச்சு கல்யாணம் பண்ணி இதோ வயித்துல ஏழு மாச குழந்தையோட இருக்கேனே நான் தான் முட்டாள்", என எழிலரசி கண்களும் முகமும் கலங்க அமர்ந்திருந்தாள்..

உணர்ச்சிவசத்துடன் இயலரசி, "எழில்..!" என்றபடி அவள் கைகளை பிடித்துக் கொள்ள சட்டென்று தன்னிலைக்கு வந்த எழிலரசி அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்..

"இப்போ இத பத்தி எல்லாம் யோசிக்க நேரமில்ல இயல் மொதல்ல நீ இங்க இருந்து போயாகணும் தயவு செஞ்சு எனக்காக இத செய். ஒருவேளை நெடுமாறனுக்கு உண்மை தெரிஞ்சாலும் உடனேவா என்னை இங்கிருந்த அழைச்சிட்டுப் போக போறான் எப்படியும் நாளாகும். அதுக்குள்ள நீ முகிலன கூட்டிட்டு இங்க வா சரியா..?" எனக் கேட்க இயலரசியோ முடியாது எனும் விதமாக தலையசைத்தாள். அவளை எப்படியோ கெஞ்சி கொஞ்சி மிரட்டி முறைத்து கண்ணீர் விட்டு என ஒரு வழியாக எப்படியோ ஒத்துக்கொள்ள வைத்தாள்..

இயலரசியிடம் என்னென்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்பதை எடுத்து சொன்னவள் வெளியில் வந்து அவள் அறைக்கு நெடுமாறன் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவசரமாக அவனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள். தன்னை விட தன் மனைவி ஆர்வமாக இருக்கிறாள் என நினைத்துக்கொண்ட நெடுமாறனும் புன்னகையுடன் அவளுடன் சென்றான். போகும்போது ராஜுவிடம் வந்தவள் மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி விட்டு இதுல கொஞ்சம் கூட சொதப்பிடக்கூடாது அவர்கிட்ட மாட்டுனா மறுபடி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது ப்ளீஸ் பார்த்துக்கோங்க என்று வேண்டிக்கேட்டு கொண்டு வேகமாக சென்று நெடுமாறன் காரில் ஏறிக்கொண்டாள்..

எங்கே போகிறான் என யோசனையுடன் இருந்தவள் கார் கடற்கரையை நோக்கி போகவும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். தங்கை அங்கிருந்து வெளியேற போகிறாள் என்பதே அவளுக்கு புது தெம்பை கொடுக்க அந்த கடற்கரை காற்று மேலும் புதுவித புத்துணர்ச்சியை தந்தது. அந்த மாலை நேரத்தில் கடற்கரை காற்று முகத்தில் மோதுவது இனிமையாக இருக்க மனம் அதை ஆவலுடன் ஏற்றுக்கொள்ளவும் செய்தது. இரு கைகளையும் தேய்த்து விட்டுக்கொண்டு மாலை மறையும் சூரியனை புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நின்ற மனைவியை நெடுமாறன் விழி எடுக்காது ரசித்துக்கொண்டு நின்றிருந்தான்..

இப்போதெல்லாம் அவள் பார்வையில் தெரியும் அந்நியம் அவளது அருகில் கூட செல்ல விடாமல் அவனை தடுத்துக் கொண்டிருந்தது. அவளை நெருங்கினாலே யாரோ போல பார்க்கும் அவள் பார்வையை கண்டு நொறுங்கிப் போவான். அதன்பிறகு அவள் அருகில் செல்ல கூட மனம் இருக்காது. அவளுக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் அவன் நிம்மதியாக தூங்கி எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது. அவளருகில் இருந்த இந்த கொஞ்ச நாட்களில் தான் அவனால் நிம்மதியாக தூங்க கூட முடிந்தது. இப்போது மறுபடியும் யாருமில்லாமல் தனிமையாக நிற்பது போல ஒரு உணர்வு. இன்று மீண்டும் அவள் பழையபடி தன்னிடம் அன்பாக நடந்து கொள்ளவும் மனம் சந்தோசத்தில் துள்ளல் போட்டது..

இப்போது அவளுக்கு நான் செய்வதெல்லாம் வெறுப்பாக இருக்கலாம் கண்டிப்பாக ஒரு நாள் அவளுக்கு என் காதல் புரியும். அன்று இந்த நிலை மாறி அவளுடைய அன்பு நிரந்தரமாகும் என நினைத்துக் கொண்டவன் அவளோடு சேர்ந்து கையை கோர்த்துக்கொண்டு கடல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்தான். எழிலரசி அவனைத் திரும்பிப் பார்த்தாலும் எதுவும் சொல்லவில்லை அடுத்து அவர்கள் இருவருக்குமான ஒவ்வொரு நிமிடமும் நொடிகளாக கரைய சற்று நேரத்தில் அவன் போனுக்கு மெசேஜ் வந்தது. அதை எடுத்து பார்த்தவன் புருவம் சுருக்கி உடனே கிளம்ப வேண்டுமென சொல்ல அங்கே எல்லாம் நல்லபடியாக முடிந்து இருக்கும் என எழிலரசி மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்..

அவன் உடனே கிளம்ப வேண்டும் என சொன்னதும் ஒன்றும் சொல்லாமல் அவனோடு கிளம்பியவள் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. வீடு வந்து சேர்ந்ததும் அவசரமாக இறங்கியவனோடு சேர்ந்து இறங்கி அவளும் உள்ளே செல்ல அங்கே கண்ட காட்சியில் உள்ளம் துடிக்க அதிர்ச்சியாகி நின்றாள்..
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Apdi ena aachu....😱
Iyal matikitangala....☹
Raju um matitaro....😬
Pochu..... waiting for next epi dear....❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top