• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கள்வன்- 26(final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
எழிலரசிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகியிருந்தது. எல்லோருமே எழிலரசியை மட்டுமல்ல அவள் குழந்தையையும் கைகளில் வைத்து தாங்கினார்கள். அம்மா அப்பா தங்கை என மாற்றி மாற்றி எப்போதும் அவனை தூக்கி வைத்துக் கொண்டே திரிந்தார்கள். அவன் அப்படியே ஜாடையில் நெடுமாறனை உரித்து வைத்திருந்தான் கண்ணும் உதடும் மட்டும் எழிலரிசியைப் போல இருந்தது..

முகிலன் தினமும் ஒருமுறையாவது வந்து குழந்தையையும் அவளையும் பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தான் அவனது எண்ணம் வீட்டிலுள்ள எல்லோருக்குமே புரிந்தது. முடிவு எடுக்க வேண்டியது எழிலரசி என்பதால் அதைப்பற்றி எதுவும் பேசாமல் ஒதுங்கி இருந்தார்கள்..

மணிகண்டன் தன் பெண்கள் பட்ட கஷ்டத்தை பற்றி கேள்வி பட்டபோது கண்களில் ரத்த கண்ணீர் வராத குறைதான். முயல் குட்டிகள் மாதிரி துள்ளித்திரிந்த தன் இரண்டு பெண்களை இப்படி ஒடுக்கி வைத்து விட்டானே என நெடுமாறன் மேல் அவருக்கு ஆத்திரம் பெருகியது. தான் மட்டும் எழிலரசி காதல் திருமணம் செய்துகொண்டாள் என்ற கோபத்தில் ஒதுங்கி இருக்காமல் அவளை சென்று பார்த்து வந்து கொண்டிருந்தால் நிச்சயம் இவ்வளவு தூரம் வந்திருக்காது என தன்னை எண்ணி நொந்து கொண்டார். தங்கள் பேச்சை மீறி காதலித்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக பிள்ளைகளை ஒதுக்கி வைத்து பெற்றவர்கள் எல்லோரும் எவ்வளவு பெரிய தவறு செய்கிறார்கள். பிறந்த வீட்டு அன்பும் அனுசரணையும் கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் எவ்வளவோ பெரிய விஷயத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் என பெருமூச்சுடன் நினைத்துக்கொண்டார்..

ராஜு அன்று ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு வந்தவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தான். அவனைக் காப்பாற்ற எவ்வளவோ போராடியும் பிழைத்து விட்டாலும் உடனே அவன் கோமாவுக்கு சென்று விட்டான். அதிலிருந்து அவன் மீண்டு வருவது கடினம் எப்போது வேண்டுமானாலும் கோமாவிலேயே அவன் உயிர் பிரியலாம் என டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள்..

ஒரு வாரமாக எழிலரசி தீவிர யோசனையில் இருந்தாள் என்னவென்று கேட்டும் சரியாக பதில் சொல்லவில்லை. முகிலனிடம் நெடுமாறனை பார்க்கவேண்டும் என சொல்ல முதலில் அதிர்ந்தாலும் உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது அங்கெல்லாம் நீ போக வேண்டாம் என தடுத்தான் ஆனால் அவள் பிடிவாதமாக இருக்கவும் வேறு வழியில்லாமல் பர்மிஷன் வாங்கிவிட்டு வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்னான்..

விஷயம் கேள்விப்பட்டு மணிகண்டன் குதித்துக் கொண்டிருந்தார். அவனை எதுக்காக நீ பார்க்க போகணும் அதெல்லாம் வேண்டாம் அவன் உனக்கு பண்ணுனது பத்தாதா என எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். அவள் கண்டிப்பாக போயே தீர வேண்டும் என பிடிவாதம் பிடிக்க நான் எதை சொல்லி நீ கேட்டிருக்க என்னமோ பண்ணு என எரிச்சலுடனும் சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டார்..

எழிலரசியிடம் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு தந்தையை சமாதானப்படுத்துவதற்காக இயலரசி அவர் பின்னாலேயே சென்றாள். எழிலரசியிடம் கோபமாக பேசிவிட்டாலும் மணிகண்டன் உள்ளே வந்து மனம் அலைபாய அமர்ந்திருந்தார்..

"என்னப்பா ஏன் அக்கா கிட்ட கோபமா பேசுறீங்க..?" எனக் கேட்டபடி இயலரசி அவர் அருகில் சென்று அமர்ந்தார்..

"நீயே பார்த்தல்லம்மா திரும்பவும் அந்த பைத்தியக்கார பயல எதுக்கு போய் பார்க்க நினைக்கிறா அவனால பட்டது பத்தாதா..?" என கோபமாக கேட்டார்..

"அப்பா ஆயிரம் தான் இருந்தாலும் அவர் அக்காவோட புருஷன். ஏதோ மனநிலை சரியில்லாம அப்படி பண்ணிட்டாரு. அவர் ஹாஸ்பிடல் போய் திருந்தி வந்தா நல்லது தானே. நாளைக்கு அவர் திரும்பி வந்தா அவர் கூட அக்காவை அனுப்ப முடியாதுன்னு நம்மளால சொல்ல முடியாது ஏன்னா இதுல முழுக்க முழுக்க முடிவெடுக்க வேண்டியது அக்காதான். அவளுக்கு அவரை பிடிச்சிருக்குன்னா அவர் கூடவே சந்தோஷமாய் இருக்கட்டும் அவளோட சந்தோஷம் தானே நமக்கு முக்கியம். என்னதான் அவர் செஞ்சது தப்பா இருந்தாலும் அதுல முழுக்க முழுக்க எழிலரசி மேல இருந்த அன்பு தானேப்பா தெரிஞ்சது. நாமளே தேடி கல்யாணம் பண்ணி இருந்தாலும் அவன் அக்கா மேல இவ்வளவு அக்கறையாவும் அன்பாவும் இருந்திருப்பான்னு உங்களால சொல்ல முடியுமா. நான் கூட இருந்து பார்த்து இருக்கேன்பா நிச்சயம் அவன் அக்கா மேல வச்சது தூய்மையான அன்பு. என்ன அவனுக்கு தெரிஞ்ச விதத்துல அதை வெளிப்படுத்திட்டான் அவ்வளவு தான் ஆனா எப்படி இருந்தாலும் அதை பொய்யின்னு சொல்ல முடியாதே. அவன் செஞ்ச தப்புக்கு கோர்ட்டும் சட்டமும் அவனுக்கு சரியான தண்டனை கொடுக்கும். அவன் திருந்தி நல்லவனா வெளில வந்தா அக்கா அவ கூட வாழணும்னு விருப்பப்பட்டா போகட்டும் நல்லபடியா இருக்கட்டும்" என சொன்னாள்..

"ஏன்மா அவன் உன்னை இவ்வளவு தூரம் கஷ்டப்படுத்தி இருக்கானே அவன் மேல உனக்கு கோபமே இல்லையா..?" என அவள் தலையை ஆதுரமாக தடவியபடியே மணிகண்டன் கேட்டார்..

"கோபமா கொலைவெறியே இருக்குப்பா என் கண்ணு முன்னால மட்டும் அவன் வந்தான்னா அப்படியே அவன கொல்லணும்னு தான் தோணுது. திரும்ப பார்த்திடவே கூடாதுங்குற அளவுக்கு அவன் மேல அவ்வளவு வெறி இருக்கு" என அவனது நினைவுகளில் ஆத்திரத்துடன் பேசிக்கொண்டிருந்தாள்..

அவளை ஆச்சர்யமாக பார்த்த மணிகண்டன், "பின்ன ஏன்மா அவனுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணுற..?" என கேட்டார்..

"அதெல்லாம் நான் பேசினது அக்காவுக்காகப்பா திரும்ப அவ மேல நீங்க கோபப்படக் கூடாதுங்குறதுக்காக அவ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நாம சப்போர்ட்டா நிக்கனும்ப்பா அதுக்காகத்தான். எந்த நிலைமையிலும் அவ கூட நாம இருந்தா தான் அவளுக்கும் தைரியமா இருக்கும். அதே நேரம் இன்னொரு தடவை இப்படி செய்ய அவராலயும் முடியாது நாமளும் விடமாட்டோம்" என இயலரசி நிதர்சனத்தை எடுத்து சொன்னாள்..

புரிந்து கொண்டதாக தலையாட்டிய மணிகண்டன் "நிச்சயம் முன்னாடி செஞ்ச தப்பை இப்போ செய்ய மாட்டேன்மா அவ என்ன முடிவெடுத்தாலும் அவளுக்கு நான் துணையா இருப்பேன்" என மனதார சொன்னார்..

அம்மா அழகு சுந்தரி யோசனையுடன் "அந்த முகிலன் தம்பி அவளையே சுத்தி சுத்தி வர்றாரேங்க அவருக்கு என்ன பதில் சொல்ல போறான்னு தெரியலையே..?" என கவலையுடன் சொன்னார்..

"அம்மா நான் அப்பாவுக்கு சொன்னது தான் உங்களுக்கும் அவ அத்தான வேண்டாம்னு சொல்லிட்டு முகிலன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவளுக்கு நாம துணையா இருக்கணும். இது அவ வாழ்க்கை, முடிவு எடுக்க வேண்டியது அவ தான் ஆனா அவ என்ன முடிவெடுத்தாலும் அவளுக்குத் துணையா நம்ம குடும்பம் சப்போர்ட்டா இருக்கணும் புரியுதாம்மா..?" என கேட்க அவரும் சரி என்று சொல்ல இயலரசி புன்னகையுடன் அப்பாவையும் அம்மாவையும் அணைத்துக் கொண்டாள்..

மறுநாள் முகிலனுடன் நெடுமாறனை பார்க்க குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்பிய எழிலரசியை யாரும் தடுக்கவில்லை. இயலரசி மட்டும் "அக்கா நீ என்ன முடிவெடுத்தாலும் நாங்க எல்லாரும் உனக்கு சப்போர்ட்டா இருப்போம் தைரியமா இருக்கா" என சொல்லி அனுப்பி வைத்தாள்..

நெடுமாறனுக்கு இன்னும் தண்டனை வழங்கப்பட வில்லை ஆனாலும் அவன் மனநிலையை கருத்தில் கொண்டு அரசு மனநல காப்பகத்துக்கு அவனை அனுப்பியிருந்தார்கள். சீனிவாசனிடமிருந்து அவனுடைய மருத்துவ ரிப்போர்ட்டை வாங்கி முகிலன் இங்குள்ள டாக்டர்களிடம் கொடுத்திருக்க அதை வைத்து இப்போது அவனுக்கு ட்ரீட்மென்ட் நடந்து கொண்டிருந்தது. சின்ன வயதிலேயே அவனை சரிப்படுத்தி இருந்தால் சீக்கிரமாக குணப்படுத்தி இருக்கலாம் ஆனால் இப்போது அவன் மனதில் வேர்விட்டு வளர்ந்து விட்ட சில எண்ணங்களை அவ்வளவு சீக்கிரம் அவனிடமிருந்து களைய முடியவில்லை. மருத்துவர்கள் முடிந்தவரை அவனை குணப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்..

அவன் இருந்த அறையின் கம்பிகளுக்கு பின்னால் வந்து நின்ற எழிலரசியும் முகிலனும் நெடுமாறனை தேட அவன் அந்த அறையின் ஓரத்தில் படுத்திருந்தான். அவனது வரிவடிவத்தை மட்டுமே பார்க்க முடிந்தது ஏற்கனவே அவர்கள் வந்த விவரத்தை சொல்லியும் அவன் எழுந்து வரவில்லை. அவர்களை பார்க்க விருப்பமில்லை என்பது அவனது நடத்தையிலேயே தெரிந்தது..

"மாறா நீங்க என் மேல கோவமா இருப்பீங்கன்னு தெரியும். நீங்க என்கிட்ட பேச விரும்பாததுல இருந்தே என்னால புரிஞ்சுக்க முடியுது. நீங்க என்கிட்ட பேச வேண்டாம் அட்லீஸ்ட் நான் சொல்றதை மட்டுமாவது கேளுங்க. நான் உங்கள கொல்லுன்னு சொன்னது தப்புதான் ஆனா அந்த நேரத்துல எனக்கு கோவத்துல வேற என்ன சொல்றதுன்னு தெரியல. சின்ன வயசிலிருந்து உங்க கூடவே இருந்த ராஜு அண்ணாவையே அப்படி கொலை பண்ற அளவுக்கு அடிப்பீங்கன்னு எதிர்பார்க்கல. அவரையே அப்படி பண்றவரு எந்த எல்லைக்கும் போவீங்கன்னு தான் நான் அப்படி சொன்னேன். நடக்கிற ஒவ்வொரு பிரச்சினைக்கும் மெயின் காரணமே நான்தாங்கும் போது என்னாலேயே என்னை மன்னிக்க முடியல. என்னால தான் எனக்கு ரொம்ப வேண்டியவங்க அன்பானவங்க எல்லாருமே வேதனைய அனுபவிக்கிறாங்கனும் போது என்னால எப்படி நிம்மதியாக இருக்க முடியும். அதுமட்டுமா என்னால எத்தனை பேர் உயிர் போயிருக்கு அத நெனச்சு எத்தனை நாள் வருத்தப்பட்டு இருப்பேன் தெரியுமா..? என்ன ஒரே ஒரு ஆறுதலான விஷயம் அவங்க யாரும் இந்த பூமியில வாழ தகுதி இல்லாதவங்க.." என்றவள் சற்று நிறுத்தி ஒரு பெருமூச்சுடன்.,

"உண்மையிலேயே வீட்ல நான் பேச நினைச்சது வேற தான் ஆனா உங்களை பார்த்ததும் என் மனசுல இருக்கறத எல்லாம் கண்டிப்பா கொட்டிட்டுப் போகணும்னு முடிவு பண்ணிட்டேன்.."

"ஏன் மாறா எல்லாருக்கும் கல்யாணம் குழந்தை இது மட்டும் தான் வாழ்க்கையா..? அதையும் தாண்டி எவ்வளவோ இருக்கு தானே அதை நான் புரிஞ்சுக்கவே இல்ல பாரேன். ஆரம்பத்துல நானும் காதல் கல்யாணம் தான் வாழ்க்கைனு நினைச்சேன் எல்லாரும் சொல்ற மாதிரி வாழ்க்கைக்கு காதல், பணம், நல்ல குணம் இதெல்லாம் இருந்தா போதும்னு நினைச்சேன். ஆனா அது எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமா தலைவிதி அது நல்லாருக்கணும். அது மட்டும் நல்லா இல்லைன்னா எப்பேர்ப்பட்ட வாழ்க்கையையும் அது நரகமாக்கிடும்.."

"சரி விஷயத்துக்கு வர்றேன் மாறா நான் உங்களை பார்க்க வரக்கூடாதுன்னு தான் நினைச்சேன் அப்புறம் யோசிச்சு பார்த்தப்ப இந்த குழந்தையை உங்ககிட்ட காட்டாம இருக்குறது தப்புன்னு தோணுச்சு அது தான் காட்டிட்டு போகலாம்னு வந்தேன். ஆனா எந்தக் காரணத்தைக் கொண்டும் இது உங்களோட குழந்தைன்னு சொந்தம் கொண்டாடிகிட்டு என்கிட்ட வந்துடாதீங்க அப்புறம் என்னோட இன்னொரு முகத்தை நீ பார்ப்பீங்க.."

"அப்புறம் நீங்க குணமாகி வெளில வந்ததும் என்னோட வாழலாம்னு கனவு கூட காணாதீங்க நிச்சயம் அது நடக்காது. நான் பேசுற எதுக்கும் நீங்க பதில் சொல்லணும்னு அவசியம் கிடையாது ஆனா கட்டாயம் நான் பேசுறத நீங்க கேட்கணும் அதுக்காக தான் பேசிகிட்டு இருக்கேன். ஒருவேளை மறுபடியும் என்ன கடத்தலாம் டார்ச்சர் பண்ணலாம்னு கனவு கண்டா அத இப்போவே மறந்துடுங்க. என்னடா இவ்வளவு தைரியமா பேசறாளேன்னு பாக்குறியா..? சாவோட விளிம்புல இருந்துட்டு வந்தவங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் சுலபமா தான் தெரியுமாம். கிட்டத்தட்ட எனக்கும் அந்த நிலைமை தானே உங்களால ஒவ்வொரு நாளும் நான் சாவை பார்த்துட்டு வந்துருக்கேன். அது என்ன இப்போ ரொம்ப வலிமையாக்கி இருக்கு. அதையும் மீறி நீங்க ஏதாவது பண்ணினா நானும் உயிரோட இருக்க மாட்டேன் உங்களையும் உயிரோட விடமாட்டேன். இதெல்லாம் வேண்டாம் நாங்க நல்லா இருக்கணும் உங்கபிள்ளை உங்கள மாதிரி அனாதையாகிட வேண்டாம்னு நினைச்சா உங்களுக்கு குணமானா கூட கடைசி வரைக்கும் நீங்க என் கண்ணுல பட்டுடாதீங்க. நீங்க பண்ணுன எல்லாத்தையும் மறந்துட்டு உங்கள அப்படியே ஏத்துக்குற நல்ல மனசு எனக்கு கிடையாது.. "

தன் குழந்தையைப் பற்றியும் அதன் உரிமையை பற்றியும் பேச முடிவெடுத்தவள் இந்த முறை கொஞ்சம் பொறுமையாக பேச நினைத்தாள்.
"நான் இப்போ இங்க வந்தது நடந்து முடிஞ்சத பத்தி பேசவோ இல்ல நம்ம உறவ புதுப்பிச்சிக்கவோ கிடையாது இந்நேரம் அது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். உங்களை பார்த்ததும் எனக்கு மனசுல உள்ள எல்லாம் சொல்லணும்னு தோணுச்சு அதனால தான் சொல்லிட்டேன்.."

"நான் உண்மையிலேயே இங்க பேச வந்தது நம்ம குழந்தையை பத்தி மட்டும் தான். அவனுக்கு நீங்க சொன்ன மாதிரி எல்லாம் கிடைக்கணும்னா அவனை விட்டு நீங்க விலகி இருக்கறதுதான் நல்லது. நீங்க நினைச்ச மாதிரியே நான் அவன் கூடவே இருந்து நல்லா பாத்துப்பேன் அவன நல்லா படிக்க வைச்சு பெரிய ஆளாக்குவேன். அப்புறம் நீங்க சொன்ன அப்பா பாசம் அது அவனுக்கு கிடைக்குமான்னு தெரியாது ஏன்னா நல்லவரோ கெட்டவரோ நீங்கதானே அவனுக்கு அப்பா. ஆனா கண்டிப்பா அவனுக்கு ஒரு நல்ல பிரண்டா ஒரு வழிகாட்டியா நிச்சயம் அவனுக்கு யாராவது கிடைப்பாங்க. ஒருவேளை அவன் வேற யார்கிட்டயாவது அந்த அப்பா பாசத்தை உணரலாம்.."

"அப்புறம் கடைசியா ஒன்னு சொன்னீங்க ஞாபகம் இருக்கா அவனுக்காக நீங்க என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொன்னீங்க. இதையே தான் எனக்கும் சொன்னீங்க அதனால என்ன சுத்தி இருக்கிறவங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல. அதேபோல என் பிள்ளையையும் அவன் வாழ்க்கையையும் எதுவும் பாதிக்க கூடாதுன்னு தான் நான் இந்த முடிவை எடுத்தேன். அவனுக்கு எல்லாம் கிடைக்கணும்னா அவன் என் கிட்ட இருந்தா தான் நடக்கும் அதனால அவனுக்கு உரிமை கோரி நீங்க வர மாட்டீங்கன்னு நம்புறேன். ஏன்னா இவன வச்சி என்னை உங்க கிட்ட வர வைக்கலாம்னு நினைச்சா நிச்சயம் நடக்காது அந்த நினைப்பையே அடியோட மறந்துடுங்க.."

"உங்களோட இந்த நிலைமைக்கு காரணம் உங்க அம்மாவை வீட்டுக்குள்ள அடைச்சு வெச்சு கொடுமைப்படுத்தி உங்க அப்பா பண்ணுன அந்த தப்பான வேலைதான். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் இருந்து வளர்ந்துட்டு எப்படி உங்களால அதே கொடுமைய எனக்கும் செய்ய முடிஞ்சது. நீங்க கேட்கலாம் என் காதலுக்காக தானே இவ்வளவும் செஞ்சேன்னு ஆனா யோசிச்சு பாருங்க மாறன், உங்க அப்பா உங்க அம்மாவை அடைச்சு வச்சி விபச்சாரம் செய்ய வச்சதும், நீங்க அடைச்சு வெச்சு உங்க கூட என்னை இருக்க வச்சதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு. உங்க அப்பா செஞ்சது விபச்சாரம்னா ஒரு வகையில நீங்க செஞ்சதும் அதுதானே.." என சொல்ல சட்டென்று ஏதோ விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது..

ஒரு நிமிடம் திடுக்கிட்டவள் அவனது கோபம் புரிய வர, "சரி தப்பு தான் அந்த அளவுக்கு சொல்ல முடியாது தான் ஆனா யோசிச்சுப் பாருங்க உங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சதுக்கப்புறம் நிச்சயமா உங்களோட நார்மலான வாழ்க்கைய என்னால வாழவே முடியாது. அப்போ நீங்களும் என்ன அதேபோல கடைசி வரையும் அடைச்சு வெச்சா தான் நான் உங்க கூட இருக்க முடியும். உங்க அம்மா அப்பாவை பத்தி அவங்க வாழ்க்கையை பத்தி எல்லாம் தெரிஞ்சதுக்கப்புறம் நீங்களும் உங்க அப்பா மாதிரியோன்னு தானே தோணும். அங்க இருந்து வந்ததனால கூட உங்களுக்கு இந்த எண்ணம் தோணிருக்கலாம். உங்க எண்ணத்துல தவறு இல்ல ஆனா நோக்கம் தவறு தானே. ஆரம்பத்திலேயே நீங்க ஒன்னு சொன்னிங்க நியாபகம் இருக்கா..? உங்க அம்மா மாதிரி நான் தைரியம் இல்லாதவ கிடையாதுன்னு அது நிஜம்தான். உங்க அப்பா மாதிரி ஆளாய் நீங்க இருந்திருந்தா இந்நேரம் உங்களை கொன்னு புதைச்சிருப்பேன் ஆனா நீங்க இவ்வளவும் பண்ணது உங்க காதலுக்காக அதனாலதான் இப்போ உங்ககிட்ட பேச வந்தேன்.." என சொன்னவள் தொடர்ந்து.,

"இப்படி எல்லாம் பேசுறதனால எனக்கு உங்க மேல காதலே இல்ல நான் உங்களை காதலிக்கவே இல்லன்னு நீங்க என்ன நினைச்சுக்கிட்டாலும் எனக்கு கவலை இல்லை. இப்போதைக்கு எனக்கு இதோ என் குழந்தை இவன் மட்டும் போதும். இவன நான் நல்லபடியா வளர்ப்பேன் உங்க அம்மா மாதிரி சைக்கோவா வளர்க்க மாட்டேன். நான் இப்படி உங்களை பத்தி சொல்றது தப்பு தான் ஆனா நீங்க இப்படி ஆனதுக்கு உங்க அம்மாவும் ஒரு காரணம். அவங்க மட்டும் தைரியமா அங்கருந்து வெளியில வந்துருந்தாங்கன்னா நீங்களும் இப்படியாகியிருக்க மாட்டீங்க உங்களால நாங்களும் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருந்திருக்காது. இத நான் உங்க அம்மாவை குறை சொல்லணும்னு சொல்லல என் மனசுக்கு தோணுனத சொன்னேன். அவங்க அந்த சூழ்நிலைய கடந்து வர முடியாம அதுக்குள்ள மாட்டிகிட்டு உன்னோட உயிர் உன்னோட வாழ்க்கை இதையெல்லாம் யோசிச்சு அவங்க அதை செய்திருக்கலாம் எனக்கும் அது புரிய தான் செய்யுது. எங்க அம்மாவுக்கு இல்லாத தைரியம் உனக்கு இருக்குன்னு சொன்னீங்கல்ல அதே தைரியத்தோட யார் உதவியும் இல்லாம என் பிள்ளைய நான் வளர்த்து ஆளாக்குவேன். அதுக்கு யாரோட துணை அவசியம் இல்லை அதுவும் உங்களை மாதிரி ஒரு அப்பாவோட துணை அவசியமே இல்ல.."

சற்று இடைவெளி விட்டவள், "எல்லாமே நீங்க எனக்காக தான் செஞ்சிருக்கீங்க என்கூட இருக்கணும்னு தான் செஞ்சிருக்கீங்க ஆனா கொஞ்சம் யோசிச்சு பாருங்க மாறா நான் என்ன நீங்க வாங்கி வச்ச பொம்மையா..? நான் உயிரும் உணர்வும் உள்ள ஒரு பொண்ணு. நல்லவேளை இயலரசிய வச்சி என்னை மிரட்டி நீ என்னென்னவோ செய்ய சொன்ன மாதிரி என் கூட செக்ஸ் வச்சுக்கணும்னு நினைக்கல. அதை மட்டும் நீங்க செஞ்சிருந்தா உங்களை கடைந்தெடுத்த அயோக்கியன்னு சொல்லி இருப்பேன். இப்போ உன்ன நல்லவன்னும் என்னால சொல்ல முடியலையே நீங்க செஞ்சதுக்கு பேர் என்ன மாறா கிட்டத்தட்ட அதே அயோக்கியத்தனம் தானே. இயலரிசி உனக்கு என்ன பண்ணுனா மாறா எப்ப பார்த்தாலும் அத்தான் அத்தான்னு உன்னை பத்தியே பேசிக்கிட்டு இருந்தாளே அதுக்கு தண்டனையா..? என் கணவன்னு அன்புல உன் மேல பாசமா இருந்தாளே அதுக்காகவா..? நீங்க என்னை கொடுமை படுத்தி இருந்தா உங்களை ஏத்துக்கிறேனோ இல்லையோ என்னைக்காவது ஒரு நாள் மன்னிக்கவாவது செஞ்சுருப்பேன். அவ எனக்கு குழந்தை மாதிரி அவளுக்கு இப்படி செஞ்ச உங்களை இனி பார்க்க கூட விரும்பல.."

"இனிமே உங்களோட ஒரு வாழ்க்கைய என்னால நினைச்சுப் பார்க்கவே முடியாது அதனால இனி எப்போதுமே என் வாழ்க்கையிலேயோ என் பிள்ளை வாழ்க்கையிலேயோ குறுக்கிட நினைக்காதீங்க. நம்மளோட டைவர்ஸ் கேஸ் நடந்துக்கிட்டு இருக்கு கூடிய சீக்கிரம் தீர்ப்பு வந்துடும். பிள்ளையையும் என் கூட இருக்க சொல்லிடுவாங்க ஆனா நீங்க அப்படியே விட மாட்டீங்க அதனாலதான் இனி எங்க வாழ்க்கையில நீங்க குறுக்கிட கூடாதுன்னு பேச வந்தேன்.."

"நான் நினைச்சிருந்தா இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு உங்களை என்னைக்கோ என்னால கொன்னுருக்க முடியும். என் மேல இருந்த நம்பிக்கைல என் கையால எத்தனையோ முறை ஊட்டி விடச் சொல்லி சாப்பிட்டுருப்பீங்க ஒரு தடவை கூட நீங்க என்னை சந்தேகப்பட்டது இல்லயே. அத சாக்கா வச்சு சாப்பாட்டுல ஏதாவது கலந்து உங்களுக்கு கொடுத்துருந்தா என்ன செஞ்சிருக்க முடியும். அப்பவே எனக்கு அது தோணுச்சு என் தங்கை கஷ்டப்படுறதுக்கு உங்களுக்கு விஷத்தை கொடுத்துட்டு நானும் சாப்பிட்டுடலாம்னு நினைச்சேன். அத செய்யாம விட்டதுக்கு என் வயிற்றில் இருந்த பிள்ளை ஒரு காரணம்னா நான் உங்கள உயிரா நேசிச்சது தான் முக்கியமான காரணம். இப்போ அதே காரணத்துக்காகத்தான் நான் உங்களை பிரியனும்னு நினைக்கிறேன்.."

"இங்கே எத்தனையோ பேர் இன்னும் மனைவியை அடிமையாக வச்சிருக்காங்க சிலபேரு அன்புக்கு சிலபேரு அதிகாரத்திற்கு சில பேர் இன்னும் எவ்வளவு வழியில அடிமையா வச்சிருக்காங்க. நீங்க உங்களுக்கு தெரிஞ்ச விதத்தில உங்களோட அளவில்லாத அன்பைக் காட்டி என்ன உங்க கூடவே வச்சுக்கலாம்னு நினைச்சீங்க ஆனா அதுவும் ஒரு வகையில் அடிமைத்தனம் தான் இல்லையா மாறா. இதெல்லாம் உங்களுடன் நிலையில்லாத மனதால தான் நடந்துச்சு ஒருவேளை நீங்க குணமாகி நல்லபடியா வரலாம். ஆனா உங்கள நம்பி இன்னொரு முறை உங்களோட வாழ முடியும்னு எனக்கு தோணல. எத்தனையோ பேருக்கு எத்தனையோ காரணங்களால தங்களோட கணவன் மேல பயம் இருக்கும். முதல்முறையா எனக்கு உங்க அன்பு பார்த்து பயமா இருக்கு. எல்லாருக்குமே வாழறதுக்கு அன்பு தேவைதான் எனக்குமே அளவில்லாத அன்பு தேவைன்னு நினைச்சேன் ஆனா இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனமான அன்பு கிடைக்கும்னு நான் நெனச்சே பாக்கலை அது எனக்கு வேண்டவும் வேண்டாம்.." எனத் தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி முடித்தவள் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அவன் ஏதாவது பேசுவான் என எதிர்பார்த்து நின்றிருந்தாள்..

கொஞ்ச நேரம் அந்த அறையை சுற்றியே அவளது பார்வை பதிந்து இருந்தது. தான் இவ்வளவு தூரம் பேசிய பேச்சுக்களுக்கு அவன் தன்னை திட்டினாலோ ஏதாவது சபித்தாலோ தேவலாம் என்று தான் இருந்தது. அதை வைத்தாவது அவனை முழுமையாக வெறுத்து விட்டு இங்கிருந்து போகலாம் என நினைத்தாள் ஆனால் அவன் எதுவுமே பேசவில்லை அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக முகிலனை திரும்பி பார்த்தாள்..

"அவன் எதுவும் பதில் சொல்ல மாட்டான்னு நமக்கு தெரிஞ்சது தானே எழில், சரி வா போகலாம் எவ்வளவு நேரம் குழந்தையை வச்சிக்கிட்டு இப்படி நிப்ப" என அவளை தோளோடு அணைத்து அங்கிருந்து அழைத்துச் செல்ல ஒரு பத்து அடி நடந்து இருக்கமாட்டார்கள் "பிரின்சஸ்..!" என்ற நெடுமாறன் குரல் கேட்டது..

அன்று மயங்கி விழும் போது, "என்னை எப்படி நீ அப்படிச் சொல்லலாம்" என்ற அவன் உயிரை உருக்கும் குரல் கேட்டதோடு சரி அதன்பிறகு இப்போது தான் பேசுகிறான்..

அவனது குரலில் சட்டென்று எழிலரசி கால்கள் தன்னால் அங்கேயே நின்று கொண்டது. எதற்காக கூப்பிடுகிறான் என புரியாமல் அங்கிருந்தபடியே அவன் இருந்த அந்த அறையை திரும்பிப்பார்த்தாள்..

"ஐ லவ் யூ பிரின்சஸ்..!" என்று சொல்ல அவன் குரலில் இருந்தது என்ன பாவம் என்றே பிரித்து அறிய முடியவில்லை..

அவன் அப்படி சொல்லியதில் முகிலனின் முகம் கடுகடுக்க ஆரம்பிக்க எழிலரசியோ தொண்டை தண்ணீர் வற்ற இவ்வளவு நேரம் பேசியும் இப்படிச் சொல்கிறானே என எங்கோ வெறித்தபடி அமைதியாக நின்றாள். பிறகு ஒரு பெருமூச்சுடன், "முகி போகலாம்" என்றபடி குழந்தையை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்..

அது நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்த பிறகு முகிலன் அவளைப் பார்க்க வந்திருந்தான். இன்று எப்படியாவது தன் மனதில் இருப்பதை அவளிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தான். உள்ளே வந்ததும் அவளைப் பார்த்து புன்னகைத்தவன் குழந்தையோடு சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் தூங்கும் வரை அவனை கையிலேயே வைத்திருந்தவன் பிறகு குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்..

"எழில் இன்னைக்கு உன்கிட்ட பேசிட்டு போகலாம்னுதான் வந்தேன் என்ன முடிவு பண்ணி இருக்க..?" எனக் கேட்டான்..

"எதைப் பத்தி முகி..?"

"நம்ம கல்யாணத்த பத்தி தான் எழில்.."

"நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே முகி எனக்கு இந்த காதல் கல்யாணம் இதிலெல்லாம் நம்பிக்கையே போயிடுச்சு. இனி அதைப் பத்தி நான் யோசிக்கிறதா கூட இல்ல இந்த வாழ்க்கைக்கு இனி என் பையன் மட்டும் எனக்கு போதும். மாறன் கிட்ட சொன்னது தான் முகி உனக்கும். கல்யாணம் காதல் இது மட்டும் வாழ்க்கை இல்ல அதையும் தாண்டி எவ்வளவோ இருக்குன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். சும்மா என்ன மறுபடியும் அதே மாதிரி ஒரு கூட்டுக்குள்ள அடைக்க நினைக்காத முகி. இனிமேயாவது என்ன அடைச்சு வைக்கிற உரிமை யாருக்கும் இல்லாம என்ன சுதந்திரமா இருக்க விடு.."

"ஏன் எழில் நான் உன்கிட்ட அப்படி இருப்பேன்னு நீ நினைக்கிறியா..?"

"தெரியலையே முகி எனக்கு தெரியலையே" என கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள், "நல்லா தெரிஞ்ச மாறனையே கண்டுபிடிக்க எனக்கு எவ்வளவோ காலம் ஆச்சு இதுக்கு அப்புறம் நான் யாரையும் நம்ப தயாரா இல்லை.." என திடமாக சொன்னாள்.

"எழில் எனக்கு உன்னோட நிலைமை புரியுது உன்னோட மனக்காயமும் புரியுது. நான் உன்னை கட்டாயப்படுத்த விரும்பல நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். நமக்கு கல்யாணமானாலும் உனக்கும் உன் குழந்தைக்கும் நல்ல பாதுகாப்பா இருப்பேனனே தவிர கண்டிப்பா எந்தவிதத்திலும் நான் உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன். அதே நேரம் உன்கிட்ட உரிமை எடுத்துக்கவும் மாட்டேன். நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு நான் உன்னை காதலிக்கிறேன்னு உன்னை வேற எந்த விதத்திலும் நான் அணுகவும் மாட்டேன். கடைசி வரையிலும் நம்ம இப்படியே இருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான் ஆனா நீ மட்டுமே என் கூடவே இருந்தா அது போதும்.." என முகிலன் சொல்ல சட்டென்று நெடுமாறன் நீ என் கூடவே இருந்தா போதும் என சொன்னது ஞாபகம் வந்தது. அதை நினைத்ததும் எழிலரசி விரக்தியாக சிரித்துக் கொண்டாள்..

"ஏன் சிரிக்கிற..?"

"இதையே தான் அவனும் சொன்னான். அப்படி நான் கூட இருக்கிறதுல உங்க ரெண்டு பேருக்கும் என்ன அவ்வளவு சந்தோஷம்.."

"அவன் என்ன நினைச்சு சொன்னான்னு எனக்கு தெரியல எழில் ஆனா நான் உன்னையும் இந்த குட்டியையும் என் உறவா நினைச்சி தான் சொன்னேன். உங்க ரெண்டு பேருக்கும் கடைசிவரையிலும் என்னை ஒரு பாதுகாவலனா நினைச்சுக்கோங்க அவன் கிட்ட எனக்கு அப்பான்ற ஸ்தானத்தை மட்டும் நீ கொடுத்தா போதும்.."

"அப்படி என்ன எங்க ரெண்டு பேர் மேலயும் உனக்கு அக்கறை..?"

"தெரியல எழில் அவன் பிறந்ததும் என் கையில தானே அவன முதல் முதல்ல வாங்கினேன். அதிலேயே எனக்கு அவன் மேல ஒரு இனம் புரியாத பாசம் உருவாகிடுச்சி. இந்த சமுதாயத்துல ஒரு பொண்ணு தனியா வாழமுடியாது அந்த மாதிரியான டயலாக் எல்லாம் நான் பேசமாட்டேன். நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இல்லேன்னாலும் உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய நான் கடைசிவரையிலும் செய்வேன். நீ என்ன ஏத்துக்கலைன்னா நான் இப்படியே தான் இருக்கப் போறேன் வேற கல்யாணமோ குழந்தையோ வாய்ப்பே இல்ல அட்லீஸ்ட் உங்களுக்கு நான் பாதுகாப்பாவாவது கடைசிவரையிலும் இருப்பேன். ஒருவேளை மனசு மாறி நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு என் மேல காதல் வந்தா நம்ம கணவன் மனைவியா வாழலாம் அப்படி இல்லைன்னா உனக்கு ஒரு நல்ல நண்பனா, உனக்கு ஒரு துணையா, அவனுக்கு அப்பாவா கடைசிவரையிலும் இருந்துட்டு போயிடுவேன். தயவு செஞ்சு என் காதல நிரூபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடு எழில். நான் மட்டும் உன்கிட்ட ஒழுங்கா காதலை சொல்லி அதை சரியா எடுத்துட்டு போய் உன்ன ஒத்துக்க வச்சிருந்தா உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம் தானே எழில்.."

"அப்படி சொல்ல முடியாது முகி அப்போ உன் மேல எனக்கு அந்த மாதிரியான ஒரு எண்ணம் வரல.."

"எப்பவுமே வராதா எழில்..?"

"தெரியலை முகி" என்றவளுக்கு வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை..

"எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு எழில் ப்ளீஸ் நீ யோசிச்சு சொல்லு" என சொன்னவன் சற்று நேரம் அமைதியாக இருக்க அவளும் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவளிடம் விடைபெற்றுக் கிளம்பி விட்டான்..

கீழே இயலரிசி தன் தந்தையிடம் அக்காவை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தாள்..

"ஏன்மா அந்தப் பையன் இவ்வளவு தூரம் கேட்கும் போது அவ பிடிவாதமா மாட்டேன்னு இருக்காளே நாம ஏதாவது பேசி பார்க்கலாமா..?" என மணிகண்டன் கேட்டார்..

"ஏம்பா நான் அன்னைக்கு தான் அவ்வளவு தூரம் சொன்னேனே அவ எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு நாம சப்போர்ட் பண்ணனும்னு திரும்பவும் இப்படி கேட்கிறீங்களேப்பா..?" என அலுத்துக் கொண்டாள்..

"அவ ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தவங்கள ஏத்துக்கிட்டு இருந்திருந்தா நானும் எதுவும் பேசி இருக்க மாட்டேன்மா ஆனா அவ யாருமே வேண்டாம் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கேன்னு சொல்றாளே எங்களுக்கு பிறகு அவளுக்கு யாரும்மா இருக்கா நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்டுவ.."

"அவ எந்த முடிவு எடுத்தாலும் அவளுக்கு சப்போர்ட் பண்ணனும்னு சொன்னது எந்த முடிவா இருந்தாலும் நீங்க ஏத்துக்கணும்னு தான்பா அவளுக்கு இதுதான் இஷ்டம்னா அவ இப்படியே இருக்கட்டும். உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்களும் புருஷனோட தான் வாழ்றாங்களா இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க..? அவளுக்கு வேண்டிய மாரல் சப்போர்ட் மட்டும் நம்ம கொடுத்தா போதும் மத்ததெல்லாம் அவளே பார்த்துப்பா. இப்போ என்ன கல்யாண வாழ்க்கை தானே அவளுக்கு இல்ல அவ கேரியர்ல அவ நல்லபடியா முன்னேறட்டும். ஆரம்பத்ததுலருந்து அவளுக்கு வேலை பார்க்கிறதுன்னா ரொம்ப இஷ்டம் தானேப்பா அதுல அவ முன்னேற்றத்துக்கு எல்லா உதவியும் நாம பண்ணுவோம். நாம எல்லாம் குழந்தையை பார்த்துக்கலாம். ஒருவேளை அவ மனசு மாறி முகிலன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நிச்சயம் அவர் நல்லா பார்த்துப்பார். அவ கூட நாம இருப்போம் அப்படியே அவ கேரியரை விடாம தொடர்ந்து முன்னேறி போக சொல்லுவோம்.."

"ஒருவேளை அவன் திரும்ப வந்துட்டா என்னம்மா பண்றது..?"

"நெடுமாறனை சொல்றீங்களாப்பா எழில் பேசிட்டு வந்ததுக்கு நிச்சயம் அவன் திரும்ப வர மாட்டான் அதுவும் அவ வேற யார் கூடயாவது வாழ்க்கைய அமைச்சு கிட்டா நிச்சயம் அவன் இவளை தொந்தரவு பண்ண மாட்டான். அப்படியே அவன் வந்தாலும் எழில் ஏத்துகிட்டா எழிலுக்காக எல்லாத்தையும் மறந்துட்டு அவனை நம்மளும் ஏத்துக்க தான் வேணும்.."

புரிந்ததாக மணிகண்டன் தலையாட்டினார் ஆனால் எழில் என்ன முடிவு எடுப்பாள் என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை. அவள் இருவரில் யாராவது ஒருவரை ஏற்று கொண்டாலும் சரி காலம் முழுவதும் தனியாகவே இருந்தாலும் சரி இனி அவளுக்காக அவள் குடும்பம் துணை நிற்கும். இப்போதைய அவள் நிலையில் மாற்றம் இல்லை என்றாலும் காலம் மாறும்போது நிச்சயம் அவளது முடிவும் மாறும். எழிலரசி என்ன முடிவு எடுக்கப் போகிறாள் என்பதை காலம்தான் முடிவு செய்யும்..

சுபம்
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
910
Reaction score
1,366
Location
Chennai
Excellent story .nallave niraiva konduponinga.ezhiloda words super.really enjoyed this story very much.best wishes
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Maran ta avanga pesanadhulam correct dhan...
Ezhil Mudiva kalam dhan sollum....😌

Story ah nalla mudichirukeenga....

Nice story dear....❤

Pottiyil vetri pera vazhthukkal....🤝😊
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany
சூப்பர் சகி👌👌👌

எழிலோட மனசு எவ்வளவு தூரம் பாதிக்கபட்டிருக்குன்னு அவளோட ஒவ்வொரு வார்த்தையிலயும் தெரியுது🥺🥺🥺🥺. இங்கு காதல் செய்ததும் தவறல்ல காதலிக்க பட்டதும் தவறல்ல😊😊😊😊😊.

மாறனின் மன இறுக்கம் இவ்வளவு பெரிய இழப்பை அவனுக்கு கொடுத்திருக்கு. அதித அன்பே ஆபத்தில் முடிந்தது தான் மிச்சம்🙄🙄🙄🙄.

முடிவு நான் எதிபார்க்காதது😲😲😲😲

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி👏👏👏💐💐💐👏👏👏
 




Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
Maran ta avanga pesanadhulam correct dhan...
Ezhil Mudiva kalam dhan sollum....😌

Story ah nalla mudichirukeenga....

Nice story dear....❤

Pottiyil vetri pera vazhthukkal....🤝😊
மிக்க நன்றி sis.. 💐💐😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top