• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை -அத்தியாயம் எட்டு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
சிறு குன்றின் மேல் இருந்து அவற்றை கண்காணித்து கொண்டு இருந்தார் தேவநாராயணர் .வயது நிச்சயம் ஐம்பது இருக்கலாம் .ஆனால் கம்பீரம் மிஞ்சி இருந்தது . பட்டு அங்கவஸ்த்திரம் அணிந்து ,காதில் கடுக்கண் ,கையில்,காலில் காப்பு ,கழுத்தை ஒட்டி தங்க சங்கிலியில் ஆடும் ருத்ராஷ்க்ஷம் ,நவரத்தின மாலை ,இடையில் கட்ட பட்டு இருக்கும் வைர பிடி வைத்த வாள் என்று ஒரு அரசனின் கம்பீரம் அவரிடம் .பல விதைகளுக்கு அதிபதி ஆயிற்றே தேவ நாராயணர் .

அவர் கை கட்டி பணிவுடன் தன் முன்னால் நின்று கொண்டு இருந்த நபரை பவ்யத்துடன் பார்த்து கொண்டு இருந்தார் .

அவரின் முன் காவி உடையில் இருந்தார் ஒருவர் .முக அமைப்பு நிச்சயம் 2019 ஆம் ஆண்டு கச்சியம்பதி கோயிலில் ,நள்ளிரவில் ,பூட்டிய கோயிலுக்குள் பூஜை செய்து கொண்டு இருந்தவரை போன்றே இருந்தது .
(இருவரும் ஒரே நபரா ?)

அப்படி ஒரு தேஜஸ் அவர் முகத்தில் .இடையில் காவி நிற ஆடை .கழுத்தில் பெரிய ருத்திராட்சங்கள் .ஜடா முடி .கண்களில் தீட்ஷட்சண்யம் . 16 இடங்களில் விபூதி தீற்று .அவரே ஞான பழமாய் ,பக்தியின் வித்தாய் ஜொலித்து கொண்டு இருந்தார் .

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழுமாம்.-என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டு அவரே ஆகும் .
"கற்றது மறந்து விட்டதா தேவநாராயணா ?'என்றார் அந்த காவி உடை புனிதர் .குரலா அது அப்படி ஒரு சாத்வீகம் அதில் .

"அய்யனே ...தாங்கள் கேட்பது இந்த அடியேனுக்கு புரியவில்லை ..."என்றார் தேவநாராயணர்

"இந்த கந்தகோட்டத்தை (அரண்மனையை )முதலில் இருந்து நிர்மாணிப்பது நீ தானா என்று கேட்கிறேன் ?"என்றார் அவர் .

"இல்லை அய்யனே ....எனக்கு முன் வேறு ஒரு கல்வினையாளர் தான் இந்த பணியை செய்து கொண்டு இருந்தார் ...ஆனால் துரதிஷ்ட வசமாய் அவர் உயிர் இங்கேயே பிரிந்து விட்டது ....அதன் பிறகு தான் இளவரசர் என்னை நியமித்தார் ."என்றார் தேவநாராயணர் .

"விநாசா காலே விபரீத புத்தி ..."என்றார் அவர் தன் நெஞ்சில் உள்ள ருத்ராட்சட்ச்சை பிடித்த படி .

"அய்யனே ...."என்றார் தேவநாராயணர் ஒன்றும் விளங்காமல் .

"விதி வழி மதி செல்லும் என்பது இது தான் நாராயணா ....அழிவூ நெருங்கும் போது புத்தியும் விபரீதமாய் தான் எண்ண தொடங்கும் ..நடப்பது நடந்தே தீரும் ."என்று அவர் சொல்லி முடிக்கவும் அவர்கள் முன் மூவரும் புரவியில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது .

அதில் இருந்து கீழே இறங்கியவர்கள் அவர்கள் இருவரையும் வணங்கினார்கள் .இளவரசன் தன் குருவான தேவநாராயணர் காலில் விழுந்து வணங்க ,"சீரஞ்சீவியாக வாழ்க மகனே "என்று அவர் வாழ்த்த அந்த புனிதரின் இதழில் மர்ம புன்னகை விரிந்தது .

"இளவரசே !...இவர் என் குரு ...இவர் திருநாமம் சிவானந்த போகர் ....என் குரு .பெரும் தவசீலர் .வேதங்களில் கரை கண்டவர் .இதுவரை இமயமலையில் தவத்தில் இருந்தார் ....சில காலமாய் கச்சியம்பதி கோயில் பூஜை இவர் தான் ஏற்று உள்ளார் ....அவரின் ஆசி பெரு ...இவர் ஆசி நம்மை படைத்தவன் தரும் ஆசிக்கு நிகர் ."என்றார் தேவநாராயணர் ஆதித்யனிடம் .

அவர் காலில் விழுந்து வணங்க ஆதித்யன் முயல ,அதை கை காட்டி தடுத்தவர் ," தேவையில்லை "என்றார் .

அதை கேட்டு அனைவரும் ஒரு கணம் திகைத்து போயினர் .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"அயன்மீர் !..."என்றார் தேவநாராயணர் நெஞ்சம் பதைக்க .என்றுமே அந்த புனிதர் தன்னை வணங்க வரும் யாரையும் தடுத்ததில்லையே ...இன்று என்ன ....?

அவர் சிவ சொரூபம் என்பது மறுக்கமுடியாத உண்மை .தேவநாராயரானார் கண் முன்னே தான் ,அரவம் தீண்டி இறந்து விட்டதாக நம்ப பட்ட குழந்தை ஒன்றை மீண்டும் உயிர் பெற செய்தவர் .அவர் அங்கு வந்த பின் தான் கச்சியம்பதியின் இறை தன்மை அதிகமானதாய் தோன்றியது அவருக்கு . சில மனிதர்களின் முன் தான் நாம் அமைதி ,இறைத்தன்மையை உணர முடியும் .அப்படி பட்டவர் சதாசிவம் .இறைவனோடு பேசுபவர் என்று கூட இவர் கேள்வி பட்டதுண்டு .அந்த தவசீலர் வருங்கால மன்னனை வாழ்த்த மறுக்கிறார் என்றால் .?

"இளவரசர் உடல் நலம் இல்லாதவர் ....வணங்க தேவையில்லை ....மீண்டும் சந்திப்போம் தேவநாராயணா .."என்றவர் அந்த இடத்திலேயே இருப்பதற்கு விரும்பாதவர் போல் கிளம்ப முயல ,"அய்யனே !"என்ற தேவநாராயணர் குரல் கேட்டு நின்றார் அவர் .

"இவள் என் புத்திரி ....நித்திலவல்லி ...உங்கள் ஆசி வழங்குங்கள் ..."என்ற அவர் பேச்சு கேட்டு , தவசீலர் ஏதோ சொல்ல வருவதற்குள் அவர் திருப்பாதத்தை பணிந்து இருந்தாள் நித்திலவல்லி .

அவர் முகத்தில் மீண்டும் புன்முறுவல் தோன்றியது ."உன் மனம் போல் உன் வாழ்வூ மலரும் ...உன்னுடையது உன்னை விட்டு என்றுமே நீங்காது ....மகாராணியாக கடவாய் "என்றார் அவர் .

அவர் வாழ்த்தை கேட்டு அதிர்ந்து நின்றார் தேவநாராயணர் .என்ன விதமான வாழ்த்து இது ...அவர் மனம் பதைக்க ஆரம்பித்தது . கல்வினையாளர் குலத்தில் பிறந்த தன் பெண்ணரசி நாட்டினை ஆள போகும் அரசியா ?அரண்மனை ,அரசவை தர்பார் இதை எப்படி ஒப்பும் ?மகள் தன் நிலையை மறந்து இளவரசனை மணாளனாய் வரித்து விட்டாளா ...இறைவா இது என்ன சோதனை ..

ஆதித்யனும் ,நித்திலவல்லியும் திகைத்தவர்களாய் பார்வையை பறி மாறி கொண்டனர். அவர்கள் சத்திரிய முறைப்படி ,கந்தர்வ முறைப்படி சதி ,பதி ஆகி இருந்தார்கள் உள்ளதாலும் ,உடலாலும் ...அழகனை தவிர ,மலை குடிகளை தவிர வேறு யாரும் அறியாத இவர்கள் இணைவூ இந்த முனிபுங்கவருக்கு எங்கனம் தெரிய வந்தது?.அவர்களின் தடுமாற்றம் ,திகைப்பினை அந்த சன்யாசியும் புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தார்

"அய்யனே !என் மகள் தரணியை ஆளும் மகாராணியா .....என்ன விபரீதம் இது ?'என்றார் தேவநாராயணர் .

"நடப்பது நடக்கும் போது புரியும் தேவநாராயணா ...மகாராணி என்றால் தரணியை ஆள்பவள் என்று மட்டும் பொருள் இல்லையே ....மன நிம்மதியுடன் ,பூரணத்துவமான வாழ்வை வாழும் அனைத்து காரிகைகளும் மகாராணிகளே. மனதிற்கு பிடித்த மணாளனோடு ,கருத்து ஒருமித்து ,இல் வாழ்க்கை நியதிகளை கடைபிடித்து ,தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கும் எந்த பெண்ணுமே சக்ரவர்த்தினிகள் தான் ...உன் புத்திரி அந்த வகையில் தன் மணாளனின் இதயத்தை ஆள போகிறாள் . ...உன் அருந்தவச்செல்வி அந்த வகையில் மகாராணி தான் தேவ நாராயணா ....அவள் உயிரினும் மேலாக விரும்பும் வாழ்வூ அவளை வந்து அடையும் ....இம்மையிலும் ,மறுமையிலும் ..."என்றவர் புதிராக பேசி விட்டு விலக ,அவர்கள் திக்ப்ரமை பிடித்து நின்றனர் .
அவர் சீரஞ்சீவியாக வாழு என்று இளவரசனையும் வாழ்த்தவில்லை ,நித்திலவல்லியை சௌபாக்யவதியாய் வாழு என்றும் வாழ்த்தவில்லை என்பதை கண்ட அழகனின் கண்கள் சுருங்கியது .

தேவநாராயணர் ,ஆதித்யன் ,நித்திலவல்லி உரையாடி கொண்டு விலகி விட ,அந்த தவசீலரை தொடர்ந்து சென்றான் அழகன் .

வேகவதி ஆற்றங்கரையில் விச்ரந்தியாய் நடந்து கொண்டு இருந்தார் அந்த தவசீலர் .ஒரு இடத்தில் நின்று விட்டார் அவர் .அந்த மாலை வேளையில் பகலவனின் பொற்கிரணங்கள் பட்டு ஜொலித்து கொண்டு இருந்தது வேகவதி ஆறு .அந்த ஆற்றின் ஒரு புறம் ஜொலித்து கொண்டு இருந்தது பொன்மாளிகை .அதை கண்டவாறு கை கூப்பி நின்று விட்ட அவரின் முன் சென்றான் அழகன் .

"யார் நீ ?'என்றான் வாளின் மேல் கை வைத்தவாறு .

மெல்லிய புன்முறுவல் புரிந்த அவர் ,"அந்த கேள்விக்கான விடையை தான் தேடி கொண்டு இருக்கிறேன் அப்பனே..."என்றார் அவர் .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"அறிவூ பூர்வகமாக பேசி விட்டதாக நினைத்து கொள்ள வேண்டாம் ...எங்கள் இளவரசை கொல்ல வந்த கபட வேடதாரி தானே நீர் ?'என்றான் அவன் .

"இன்னொரு உயிரை வதைப்பதால் எனக்கு என்ன சோழமகுடமா கிடைக்க போகிறது ?நான் “சிவனே” என்று இருக்கும் சந்நியாசி ...எனக்கு எதற்கு அப்பா உன் இளவரசன் உயிர் ?"என்றார் அவர் பேச்சில் பல உள்ளர்த்தங்கள் .அதை புரிந்து கொண்டு இருந்தால் அழகன் நடக்க போகும் விபரீதத்தை தடுத்து இருக்கலாமோ !
((சோழ மகுடத்திற்காக உயிர் பலி ஏற்படுவதற்கான ஆயுத்தங்கள் ஆரம்பமாகி விட்டது என்கிறாரா ?)

"வார்த்தையில் ஜாலம் காட்டுவது தான் உமது இயல்போ ....உண்மையான தவசீலராய் இருந்து இருந்தால் ,வணக்கத்தை கூட ஏன் நீர் தடுக்க வேண்டும் ?ஆசான் இளவரசரை வாழ்த்தும் போது உமது முகம் ஏன் அப்படி மாறியது ?காணவில்லை என்று மட்டும் நினைக்காதீர் ...யார் நீ ?"என்றான் அழகன் .

"நீ காணவேண்டியதை காண மறுத்து ,காண தேவை இல்லாததை கண்டு கொண்டு இருக்கிறாய் முத்தழகா ...அமைதி கொள் ...இந்த பயம் ,பதட்டம் என்னிடம் தேவை அற்றது ...நான் தவ வாழ்வூ மேற்கொண்டவன் .எனக்கும் அரசியல் சூதுகளுக்கும் வெகு தூரம் ."என்றார் அவர் .

"உங்கள் வாதம் வேண்டாம் ...இளவரசை ஏன் வாழ்த்தவில்லை ?'என்றான் அழகன் .

"இருக்க வேண்டியது இருக்க கூடாத இடத்தில் இருப்பதால் ,உயர வேண்டியது இல்லாமல் போக போகிறது ..இது காலத்தின் நியதி .முழு சாதரூபம் கொண்டு நிர்மாணிக்க பட வேண்டியது கந்தகோட்டம் இல்லை.....இங்கு மனிதர்கள் வாழ முடியாது ....பக்திக்கு மத்தியில் இருக்க வேண்டியவளை பேராசைக்கும் ,பஞ்சமாபாதகத்திற்கும் நடுவே கொண்டு வைத்து ஆணவத்தை காட்டினால் ,அவள் தன்னை மறைத்து கொள்ள நினைத்து விட்டாள் அழகா ....அங்கே பாரு ஆலயத்தின் அழகை ....அரசர்கள் வசிக்கும் இடம் மட்டும் இல்லை ,இறை சொரூபம் இருக்கும் இடமும் ஆலயம் தான் …. .. மேலே காண் ....பகலவனை மறைக்க கரும் மேக திரள்கள் சூழ தொடங்கி விட்டது ....பகலவன் மறைவான் ....அவன் சுவடு காலப்பக்கங்களில் இருக்காது .....இனி இருள் சூழும் .."என்று அவர் கை காட்ட ஒரு கணம் திரும்பிய அழகன் தன்னை மறந்து, ஏதோ ஒரு சக்தி ஊந்த கை கூப்பி நின்றவனின் மேல் பொழிய ஆரம்பித்தது வான் மழை .

சில கணம் கழித்து திரும்பிய அழகன் அற்றன்கரையில் தான் மட்டும் தனியாக நிற்பதை கண்டு ,தலையை உலுக்கி கொண்டு இளவரசனை தேடி சென்றான் .

அதுவரை இருந்த ஒளி ,வெளிச்சம் மறைந்து ,அந்த தரணியை இருள் சூழ ஆரம்பித்தது .பகல் வேளை நள்ளிரவூ போல் மாறி போனது .ஒருவேளை நடக்க போவதை இயற்கையே கட்டயம் நவில்கிறதோ ?

அதுவரை காதலியின் செல்ல சிணுங்கல் போல் பட்டும் ,படாமலும் வீசி கொண்டு இருந்த தென்றல் ,ருத்ரதாண்டவம் ஆடும் சிவனின் நர்த்தனம் போல் சுழன்று வீச தொடங்கியது .

மழை ,பெரும் மழை ....சூறைக்காற்றுடன் பெரும் மழை .

தலைவனின் அணைப்பில் மெல்ல மயங்கி கொண்டு இருக்கும் தலைவியின் நெகிழிச்சி போல் ஓடி கொண்டு இருந்த வேகவதி ஆற்றின் அளவு ,அரக்க கூட்டத்தின் அதகளம் போல் உயர ஆரம்பித்தது .

வெள்ளம் ...வெள்ளம் ....வேகவதி ஆற்றில் அதுவரை காணாத அளவுக்கு வெள்ள நீரின் அளவு உயர ஆரம்பித்தது .வெள்ளத்தின் வேகம் தாள முடியாமல் கரையோரங்கள் அடித்து செல்ல பட்டன .வெள்ள நீரின் அளவு உயர்ந்து ,தங்க மாளிகையின் அடிப்பகுதியில் தேங்க ஆரம்பித்தது .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அதே சமயம் காஞ்சியின் ஒரு மனையில் (வீட்டில் )பத்துக்கும் மேற்பட்டோர் கூடி இருந்தனர் .கண்கள் சிவந்து அவர்கள் இருந்த தோரணையே மனதில் ஒருவித பயத்தை ஏற்ப்படுத்தியது என்றால் மிகையல்ல .அதில் மூவர் மட்டும் அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத தோற்றத்தில் இருந்தனர் .

மார்பில் ஆடிய முப்புரி நூல் அவர்கள் அந்தணர் குலத்தினர் என்பதையும் ,அவர்கள் அணிந்து இருந்த விலையுயர்ந்த பட்டு பீதாம்பரம் ,ஆபரணங்கள் அவர்கள் பெரும் தனக்காரர்கள் (பணக்காரரர்கள் )என்பதையும் பறை அறிவித்து கொண்டு இருந்தது .
நிச்சயம் சோழ சாம்ராஜ்யத்தின் உயர்ந்த பதிவியில் இருக்கும் கர்வம் அவர்கள் முகத்தில் தெரிந்தது .அரசவை ஆட்கள் அந்த சிறு வீட்டினுள் என்ன செய்கிறார்கள் .

நடுநாயக்கமாய் அமர்ந்து இருந்தவன் முதலில் பேசினான் .அவன் பெயர் ரவிதாசன் .அவனுக்கு இன்னொரு நாமமும் (பெயர் )இருந்தது .பஞ்சவன் ப்ரமாதிராஜன் என்பது .இந்த ப்ரஹ்மாதிராஜன் என்பது சோழ அரசவையில் உயர்ந்த பதவியில் உள்ள அந்தண குலத்தவருக்கு வழங்க படும் பட்ட பெயர் .எப்படி ஆதித்யன் வீரபாண்டியனை கொன்றதும் "யுவராஜா "என்ற பட்டம் கொடுக்க பட்டதோ அவ்வாறு .அவன் அருகே இருந்த மற்றும் இருவர் அவன் சக உதரன்ங்கள் (சகோதரன் ).சோமன் சாம்பவன் ,பரமேஸ்வரன் என்கிற இருமுடி சோழ ப்ரமாதிராஜன். அவர்களுடன் மலையனூர் ரவிதாஸ க்ரமவிதான் என்பவனும் அமர்ந்து இருந்தான் .

"சோழ அரசரும் ,இளவல் அருள்மொழி வர்மனும் இந்த தடவையும் உயிர் பிழைத்த விட்டனர் ." என்றான் சோமன் .

"இனி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக சரியாக எடுத்து வைக்க வேண்டும் அண்ணலே ....சோழ வம்சம் என்ன நடந்தது என்று உணரும் முன் இந்த குலம் வேர் அருந்தால் தான் நம் உண்மையான அரசர் மதுராந்தகர் அரசராய் அரியணை ஏற முடியும் ."என்ற ரவிதாசன் மேலும்

"மதுராந்தகரின் தந்தை மரணிக்கும் போது அவர் பாலகனாய் இருந்த காரணத்தினால் ,மணிமகுடம் சுந்தர சோழனுக்கு கொடுக்கப்பட்டது .அது தான் நமது இளவரசர் அரியணை ஏற வந்து விட்ட பிறகும் தன் மகன் ஆதித்ய கரிகாலனை அடுத்த அரசனாய் இவர் எங்கனம் அறிவிக்கலாம் ?இவரே நிஜ அரசர் கிடையாது ...இதில் இவர் குருதிக்கு அரசபதவி ....வேதனை ...வெட்கம் ...அவமானம் ...யாரின் உரிமையை யார் தட்டி பறிப்பது .?"என்றான் கோபத்துடன் .

"நேரம் வந்து விட்டது சகோதரா ....நம் உண்மையான அரசரை அரியணை ஏற்ற நேரம் வந்து விட்டது .அந்த நயவஞ்சக இளவரசன் இன்று அவன் கட்டும் காந்தரூபத்தை காண வந்து இருக்கிறான் ..இதுவே தக்க சமயம் .இவனை கருவருத்தால் சுந்தர சோழன் மனதளவில் ஒடிந்து போய் விடுவான் ...முடி நாம் இளவரசர் மதுராந்தகருக்கே ....வெல்க நாடு .....வெல்க நாடு ..."என்று முழங்கினான் பரமேஸ்வரன் .

"வெல்க நாடு ...வெல்க இளவரசர் மதுராந்தகர் "என்ற முழக்கம் இடி முழக்கத்தை தாண்டி ஒலித்தது .

"ஹ்ம்ம் கிளம்புங்கள் ...இந்த பாதாள அறை வழியே சென்றால் யாரும் அறியாமல் அந்த பொன் மாளிகைக்குள் நுழைந்து விடலாம் ....."என்றான் ரவிதாசன் .

இந்த நால்வருடன் மேலும் பனிரெண்டு பேர் அந்த நிலவழியின் மூலம் பொன்மாளிகைக்குள் பிரவேசித்து இளவரசன் ஆதித்யன் வருகைக்காக ஒளிந்து நின்றார்கள் .காலம் கடந்து கொண்டு இருந்தது .

அதே சமயம் கச்சி ஏகம்ப நாதனின் கோயில் கதவுகளை மூடி உள் பக்கம் தாளிட்டு கொண்டார் அந்த தவசீலர் சிவானந்த போகர் .கருவறையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்தவர் வெளியே வர அவரை எதிர்கொண்டான் அவன் .கரிய நிறத்தில் நல்ல அஃருதியான தேகம் கொண்டவன் .அவன் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ் .

"வணங்குகிறேன் சிவானந்த போகரே ..."என்றான் அவன் .

"வணக்கம் பைரவரே ...தாங்கள் என்னை தேடி ?"என்றார் போகர் .

"திருக்கோயிலின் கதவுகளை இந்த நொடிக்கே தாளிட்டு ...கோயில் விசையினை (சாவி )என்னிடம் ஒப்படைத்து விட்டிர்கள் ....மாலை நேர சாயரட்சை இன்னும் இறைவர்க்கு நடக்கவில்லையே ..."என்றார் அவர் .

"என்ன பைரவரே ...இது என்ன சோதனை .....காலத்திற்கே அதிபதி தாங்கள் ....நடக்க போகும் விபரீதங்களை அறியாதவர் போல் இது என்ன கேள்வி ?விநாசம் நடக்கும் போது திருக்கோயில் கதவங்கள் ,நடை சாற்ற பட்டு ...அன்றைய வரவூ ,செலவு கணக்கினை இந்த திருக்கோயிலின் காவல் தங்களிடம் சமர்ப்பிப்பது தானே எங்கும் நடக்கும் வழிமுறை ...."என்றார் சிவானந்த போகர் .

"இதை தடுக்க உம்மால் முடியாதா என்ன ?"என்றார் அவர் .

"அனைத்திற்கும் சாட்சியாய் இருக்கும் தாம் ...இப்படி வினவி என்னை சோதிக்கலாமா ?இது தெய்வ சங்கல்பம்.அந்த மாளிகையை தன் இருப்பிடமாய் தேவி தீர்மானித்து விட்டார்கள் ...அவர்களின் மூல சொரூபம் உலகத்தின் கண்களில் இருந்து முழுதாய் மறைய தீர்மானித்து என்னை இமயத்தில் இருந்து வரவழைத்து விட்டது ....நானும் தேவியின் அஞ்ஜனை (உத்தரவூ )படி திருஉருவ வடிவத்தை தஞ்சையில் அரண்மனையில் இருந்து கொண்டு வந்து ,அந்த பொன் மாளிகையினுள் மறைத்து விட்டேன் ...இனி நிசும்பசூதனி தேவி ஜல மூல சொரூபியாய் இருக்க திருவுள்ளம் செய்து விட்டார் ...தஞ்சையின் காவல் தெய்வம் இனி கச்சியம்பதி சாதரூப (தங்க )திருக்கோயில் ஜல தேவி ."என்றார் சிவானந்த போகர் .
ஹ்ம்ம் நடப்பது நடந்தே தீரும் என்கிறாய் ....இனி கலி காலம் வரும் ...தெய்வ மூர்த்தங்கள் களவாடப்படும் ...இந்த தேவி இருப்பது மறக்கப்படும் ...சிலவை மறைந்து இருப்பதே பிரபஞ்சத்திற்கு நல்லது ...."என்றவர் பிரகாரத்தில் விலகி போக சிவானந்த போகர் கை கூப்பி வணங்கினார் .

ஒரு நொடி நாம் கண் சிமிட்டி பார்ப்பதற்குள் அந்த கரிய உருவம் காணாமல் போய் இருந்தது .அவர் இடத்தில் நின்று கொண்டு இருந்தது கரிய பெரும் நாய் ஒன்று.அப்படி ஒரு உருவம் கொண்ட அஃருதியான நாய் உலகத்தில் வேறு எதுவும் இருக்கவே முடியாது . ஒரு ஆள் உயரத்திற்கு இருந்தது அந்த நாய் என்றால் மிகையல்ல .ஒருவேளை அந்த ஆள் மிக வேகமாய் நடந்து போய் இருப்பார் .கவனித்து இருக்க மாட்டோம் ..வெளியில் இருந்து நாய் கோயிலுக்குள் மழைக்கு அஞ்சி உள்ளே வந்து இருக்கும் போல் இருக்கிறது .

தேன் மழை பொழியும் ...
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
பின் குறிப்பு --சோழ செப்பு பட்டய தகவல்கள் அடிப்படையில்

(கல்கி அய்யா அவர்களின் பொன்னியின் செல்வனில் இந்த சகோதரர்களை பற்றிய குறிப்புக்கள் இடம் பெறவில்லை .ரவிதாசன் என்பவன் மட்டுமே நந்தினியை வந்து சந்திப்பதாக இருக்கும் ....நந்தினி என்ற பெண் உண்மையில் இருந்ததற்கான குறிப்புகள் எங்கும் இல்லை .தவிர உடையார்குடி கல்வெட்டுகள் இந்த மூன்று சகோதரர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ,குடும்பத்துடன் நாடு கடத்தப்பட்டதை சொல்கிறது .இவர்கள் வீரப்பாண்டியனின் ஆபத்துதவி /ஒற்றர்கள் என்பதற்கான சான்று இல்லை .... தவிர இவர்கள் சோழ சாம்ராஜ்ஜித்தியதில் உயர்ந்த பதவியில் இருந்ததற்கான குறிப்பாக இவர்களின் பெயரில் உள்ள ப்ரமாதிராஜன் என்ற பட்டம் சொல்வதாக நீலகண்ட சாஸ்திரியின் வாதம் . தவிர முடிஇளவரசனை கொன்றதற்கு வெறும் சொத்தை மட்டும் பறிமுதல் செய்து நாடுகடத்துவார்களா என்பது யோசிக்க வேண்டிய விஷயமே .

தவிர ராஜராஜ சோழன் என்று நம்மால் அறியப்படும் அருள்மொழி வர்மன் அரசனாய் ஆவதற்கு முன் கண்டராதித்தன் செம்பியன்மாதேவியின் மகன் நிஜ முடிஇளவரசன் மதுராந்தக சோழன் சிறிது காலம் அரியணை ஏறுகிறான் .தன் மாமனான அவர் உயிரோடு இருக்கும் வரை ,அவர் அரசராய் இருக்க விரும்பும் வரை தான் அரியணை ஏறப்போவது இல்லை என்று ராஜராஜன் மறுத்து முடி துறக்கிறார் .மதுராந்தகர் அரசராய் இருந்த காலத்தில் இந்த சகோதரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க படவேயில்லை என்பது வியப்புக்கு உரிய விஷயமே . .

இவர் காலத்திற்கு பிறகு ராஜராஜன் அரசனாய் ஆகிய ரெண்டாம் வருடம் இந்த சகோதரர்களின் குடும்பம் ,உறவினர் ,கொண்டார் ,கொடுத்தார் சொத்து எல்லாம் பறிமுதல் செய்ய பட்டு நாடுகடத்த படுகிறார்கள் என்பதை உடையார்குடி தகவல்கள் சொல்கின்றன .இதை வைத்து தான் மதுராந்தக சோழனின் அரசியல் ,அரியணை ஆசைக்காக ஆதித்யன் கொல்ல படுவதாக கூறி இருக்கிறேன் .ஏனென்றால் அடுத்த அரசன் என்ற நிலையில் இருப்பவனை கொன்று அதை பற்றிய தடயம் இல்லாமல் போவது என்றால் அதன் பின் மிக பெரிய அரசியல் மூளைகள் இருந்து இருக்க வேண்டும் .இவர் தான் ஆதித்யனை கொன்று இருந்தார் என்றால் ராஜராஜன் மகன் ராஜேந்திரனுக்கு ரெண்டாம் மதுராந்தகன் என்ற பட்ட பெயர் வந்து இருக்காது என்கிறார்கள் .

ஆனால் இவர்க்கு ஒரு மகன் மதுராந்தக கந்தாதித்தியா என்ற மகன் இருந்தும் மீண்டும் சோழ மணிமகுடம் ராஜராஜனுக்கு சென்றது எங்ஙனம் என்பது விளங்கவில்லை ...1000 ஆண்டுகள் கடந்த மஹாப்பெறும் அரசியல் புதிர் ஆயிற்றே

உபரி தகவல்கள்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,504
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
அருமையாக வரலாற்றில் நடந்ததை ஆராய்ந்து அறிந்து எழுதுவது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அருமையாக வரலாற்றில் நடந்ததை ஆராய்ந்து அறிந்து எழுதுவது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்
thanks friend...your comments are highly valuable and precious to me...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top