காதலாடுகிறது எந்தன் நெஞ்சம்
அத்தியாயம் 15
பழைய நினைவுகளின் தாக்கம் இருவரையும் பாதித்திருந்தது.
விக்ரம் அன்றிரவு நேரங்கழித்து வெகு தாமதமாகவே வீட்டிற்குத் திரும்பினான்.
சத்யா அவன் வரவுக்காக வெகுநேரமாக காத்திருந்து ஹால் சோஃபாவில் படுத்து உறங்கிப் போயிருந்தாள்.
கதவு திறந்து உள்ளே வந்தவன், அவளை பார்த்து நெற்றி சுருக்கினான். ‘ரூம்ல தூங்காம இங்க ஏன் படுத்து இருக்கா?’
அவளை அப்படியே விட்டுச் செல்ல மனமின்றி, அவளருகில் வந்தவன், “சத்யா…” என்று விளித்து அவளின் தோள் தட்டி எழுப்ப, அரை உறக்க நிலையில் விழித்துப் பார்த்தாள்.
விக்ரம், “எழுந்து உள்ள போய் தூங்கு.” என்றதும், தலையை குலுக்கி உறக்கம் கலைத்து எழுந்தமர்ந்தவள், “விக்ரம்… உன் கூட பேசணும்” என்றாள் பரிதவிப்பாய்.
“நாளைக்கு பேசிக்கலாம் இப்ப போய் ரெஸ்ட் எடு.” என்றான் அவன் பிடிகொடுக்காமல்.
“வேணும்னே என்னை அவாய்ட் பண்ற இல்ல?” அவள் அவனை பிடித்து நிறுத்தி அவன் கண்களை கூர்ந்து கேட்க,
“உனக்கு இப்ப காய்ச்சல் இல்ல தானே?” அவன் கேள்வி வேறாய் வந்ததில், அவள் உடல் தளர்ந்து போனாள். அவன் விலகலில் அவள் மனதும் தளர்ந்து போயிருந்தது.
“உன்ன நேர்ல பார்க்க எவ்வளோ ஆசையா வந்தேன் தெரியுமா? ஆனா நீ என்னை சுத்தமா மறந்தே போயிட்டல்ல?” அவன்மீது கொள்ளை பிரியம் கொட்டி வைத்திருந்த அவள் மனது விசும்ப கேட்டு நின்றாள்.
“சும்மா உளறிட்டு இருக்காத. போய் தூங்கு.” அவன் எரிச்சலானான்.
“நான் எது பேசினாலும் உனக்கு உளறலா தான் தெரியுது இல்ல? நான் உன்ன விரும்புறேன்னு சொன்னப்ப நீ தான, இது காதலிக்கிற வயசில்ல, நீ இன்னும் வளரணும்னு சொல்லிட்டு போன? ஒரு வாரம் உன்ன பார்க்காம இருந்தேன்னா நீ என் நினைப்புல இருக்க மாட்டேன்னு சொன்ன தான? ஞாபகம் இருக்கா இல்லயா?
முழுசா ஆறு வருசம்... நீ என் கண்ணுல படவேயில்ல, அட்லீஸ்ட் ஒரு ஃபோன் கால் கூட பண்ணி பேசல. ஆனாலும் கூட உன் நினப்பு என் மனசவிட்டு போகல. அப்ப எனக்குள்ள உன்மேல இருக்கற இந்த உணர்வுக்கு பேரென்ன?”
விக்ரம் பெருமூச்செறிந்தான். “ப்ச், சத்யா. நீ இன்னும் என்னை நினைச்சிருப்பன்னு நான் எதிர்பார்க்கல. அப்ப நீ சின்ன பொண்ணு ஏதோ புரியாம பேசறன்னு நினைச்சேன். இப்ப வளர்ந்தும் அதே முட்டாள்தனத்தை பிடிச்சு தொங்கிட்டு இருப்பன்னு எனக்கு எப்படி தெரியும்?” என்றவன் தலையை அழுத்த கோதிவிட்டான். தேவையில்லாத சிக்கலில் அவள் தன்னை சிக்கவிட்ட உணர்வு அவனுக்குள்.
“நான் உன்ன விரும்பறது உனக்கு முட்டாள்தனமா தோணுதா ஃப்ரண்ட் மாமா? இவ்வளோ நாள்ல என்னை பத்தி ஒரு தடவை கூட நீ நினைச்சதே இல்லயா?” அவளின் உள்ளுணர்வு ஆழமாய் நம்பியது அவனுக்கும் தன்னிடம் விருப்பம் இருக்கிறது என்று.
“சத்தியமா இல்லடி, நான் எப்படி உன்ன…” அவன் சொல்லி முடிக்கவில்லை, அவள் பாய்ந்து வந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
சாதாரணமாக நின்றிருந்தவன் அவளின் திடீர் அணைப்பில் நிலைதடுமாறி இரண்டடி பின்னால் நகர்ந்து இருவரும் சாய, கைக்கு அருகெட்டிய சோஃபா முனையை பற்றிக்கொண்டு தரையில் அழுந்த காலூன்றி, மறுகையால் அவளை வளைத்துப் பிடித்து அவள் பாரத்தையும் தாங்கி நேர் நின்றான்.
விநாடிக்குள் இந்த தடுமாற்றம் நடந்தேறி இருக்க, அவள்மேல் அவனுக்கு கோபம் கனன்றது. “சத்யா, லீவ் மீ! நீ என்ன பண்றன்னு உனக்கு புரியுதா?” அவன் அவள் கைகளை விடுவிக்க முயல, முரட்டு குழந்தையாக அவனை இன்னுமே இறுக்கிக் கொண்டாள்.
“என்னை ஏமாத்திட்ட விக்ரம்… எனக்காக நீ இருப்பேன்னு நம்பி உன்கிட்ட வந்தேன்…” அவள் திக்கலோடு அவனை குற்றம்சாட்டவும், அவன் உடல் தளர்ந்தது.
“இப்பவும் உனக்காக நான் இருக்கேன் சத்யா, ஒரு நல்ல ஃப்ரண்டா, வெல்விஷரா, அதுக்கு மேல நமக்குள்ள எதுவும் வேணாம்.” அவன் அப்போதும் நிதானம் தவறாமல் உரைத்தான்.
அவள் பிடியும் தளர்ந்து விலகி கொண்டவள், “நிஜமா நமக்குள்ள எதுவுமில்லயா? என்னை உனக்கு பிடிச்சதே இல்லயா?” நம்பமுடியாத வேதனையை தாங்கி வந்தது அவளின் கேள்வி.
“பிடிக்கும். அதுக்காக கட்டிக்கணும்னு இல்லயே! உனக்கு என்மேல இன்டர்ஸ்ட் இருக்குன்னு ஃபர்ஸ்ட் டைம் ஃபீல் பண்ண அப்பவே உன்னவிட்டு விலகி வந்துட்டேன். அது புரிஞ்சும் நீதான் விலகாம அதே இடத்தில நின்னுட்டு இருக்க.”
“நான் என்ன பண்ண? உன்ன மாதிரி பொசுக்குனு மனச மாத்திக்க தெரியல எனக்கு.” என்றவளுக்கு தன்மீதே கோபமாக வந்தது. “சாரி… தெரியாம உங்கள ஹக் பண்ணிட்டேன்.” எனும்போதே அவள் விழியோரம் இருதுளி கண்ணீர் உடைப்பெடுத்து வழிந்திருந்தது.
அதை புறங்கையால் துடைத்து விட்டவள், மறுபடி சோஃபாவில் சென்று அமர்ந்து விட்டாள். விக்ரம் தன்னை நினைக்கவே இல்லை, அவன் தன்னை ஏற்க தயாராக இல்லை என்பதை கிரகித்துக் கொள்ள வெகு சிரமமாயிருந்தது அவளுக்கு.
தன் மொத்த உலகத்தையும் அவனாக மாற்றி வைத்திருக்கிறாள் என்பதை அவனிடம் எப்படி நிரூபிப்பாள்? நிரூபித்தால் தான் நேசம் வருமா என்ன? அப்படியொன்றும் அவனிடம் காதலை பெற வேண்டியதில்லை அவளுக்கு.
அவள் உள்ளுக்குள் அல்லாடுவதை அமைதியாக பார்த்திருந்தான் விக்ரம். அவள் தெளிந்து வரட்டும் என்பதே அவன் எண்ணமாக இருந்தது.
இவ்வித சில நொடி அற்ப உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மீண்டு விட்டாலே பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் என்பது அவனது நம்பிக்கையாக இருந்தது. அவன் பிறப்பும் இப்படியானதொரு அசம்பாவிதம் தானே! அதை எப்படி அவனால் மறக்க முடியும்?
வாழ்க்கையின் கிடைமட்டத்தில் அடிபட்டு மிதிப்பட்டு போராடி சற்றே மீண்டெழுந்து இருக்கிறான். தனக்கு இதுவே போதும், இதற்கு மேல் எதுவும், யாரும் தேவையில்லை என்ற முடிவில் அவன் திடமாக இருக்க, கண்ணெதிரே ஒருத்தியின் தனக்கான பரிதவிப்பும் ஏமாற்றமும் அவனை பெரிதாக பாதிக்கவில்லை போல.
“ரிலாக்ஸ் சத்யா. சும்மா இதை போட்டு குழப்பிக்காத, ஜஸ்ட் மூவ் ஆன்.” என்றவனை குதறிவிடும் வேகத்தோடு விழியுயர்த்தி ஏறிட்டவள்,
“எனக்கு என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா? அந்த பொறுக்கி என்கிட்ட…” சொல்ல கூட ஒவ்வாமல் வெறுப்போடு பேச்சை நிறுத்தினாள்.
“ஹேய், அதுக்கு தான் அவனை நீ பொலந்து கட்டிட்ட இல்ல, இன்னும் என்ன விடு.”
“ஆமா, ஆத்திரத்துல அவனை அடிச்சி போட்டேன் தான்… அதுக்குப்புறம் கூட என்னால அதை மறக்க முடியாம கஷ்டப்பட்டேன். ஏதோ என் வாய்ல அசிங்கத்தை பூசிக்கிட்ட மாதிரி அத்தனை கொடுமையா இருந்துச்சு. தண்ணி கூட குடிக்க முடியாது, வாந்தி வந்திடும். சாப்பாட்ட கூட வாய்ல வைக்க முடியல. இதையெல்லாம் அப்பா, மாமா கிட்ட சொல்ல கூட முடியல.
அவங்க ரெண்டு பேரும் என்னை எங்கையாவது ஒளிச்சி வைக்கிறதலையே தீவிரமா இருந்தாங்க. என்னளவில நான் எப்படி பாதிக்கப்பட்டிருப்பேன்ற யோசனை கூட அவங்களுக்கு இருக்கல. அப்ப நான் உன்ன தான் தேடுனேன் விக்ரம்... எனக்காக வரமாட்டியான்னு வேண்டிக்கிட்டேன். அப்பவும் நீ வரவே இல்ல. நானா தான் உன்ன தேடி வந்தேன்.
அப்பவும் நீ என்னை வேண்டாதவ மாதிரி தான நடத்தன? நீ கொடுத்த காஃபி, நீ செஞ்சு தந்த சாப்பாடு தான் எனக்கு இறங்குச்சு. வருச கணக்கா உன்ன பார்க்காம இருந்த ஏக்கமோ என்னவோ, உன்ன தவிர மத்ததெல்லாம் ஒன்னுமில்லன்னு துரத்தி அடிச்சிடுச்சு. எனக்கு எல்லாமே நீயின்னு நினைச்சிருந்தேன். நான் உனக்கு ஒன்னுமே இல்லன்னு இந்த நாலு நாள்ல காட்டிட்ட...” என்றவள் அடைத்த தொண்டையை செருமிவிட்டு கொண்டாள்.
விக்ரம் நெற்றியை அழுத்தி தேய்த்துவிட்டு, “எனக்கு உன்ன நினைச்சு பயமா இருக்கு சத்யா, வீணா என்மேல ஆசைய வளர்த்துக்கிட்டு உன் லைஃப மொத்தமா பலி கொடுத்துடுவியோன்னு பயப்படுறேன்! ப்ராமிஸா உன்ன என்னால வேற மாதிரி நினைக்க முடியலடி! நீ என் ஃப்ரண்ட்டோட அக்கா பொண்ணு. அவனோட குட்டிமா. இப்பவும் நான் முதல்ல பார்த்த குட்டிப்பொண்ணா தான் எனக்கு தெரியற! நான் எப்படி உன்ன அக்ஸப்ட் பண்ணிக்க முடியும்? நிஜத்தை சொல்லணும்னா… நீ என்னை கத்தி மேல நிக்க வைக்கிற சத்யா!”
விக்ரம் இவ்விதம் கூற, அவளால் என்ன பதில் உரைக்க முடியும்? இமைகளை அழுத்தி மூடி மறுபுறம் திரும்பி கொண்டாள். அவள் விழிகளில் நீர்கட்டி நின்றது.
“நீங்க ஒன்னும் எனக்காக கத்தி மேல நிக்க வேணாம். இது என் பிரச்சனை நானே பார்த்துக்கிறேன். உங்களை தேடி வந்தது என்னோட முட்டாள்தனம் தான், மன்னிச்சிடுங்க! இனிமே உங்கள தொந்தரவு செய்ய மாட்டேன்!” முயன்றவரை கண்ணீரை உள்ளிழுத்து அவள் பேச பேச, அவனுக்கு அய்யோ பாவமாக இருந்தது.
“நாளைக்கே நான் ஊருக்கு போயிறேன். நான் இல்லாம நீங்க மட்டும் நிம்மதியா இருங்க.” என்றதோடு தன் அறைக்குள் சென்று விட்டாள்.
தன்னால், தனக்காக இப்படி ஒருத்தி வேதனையில் வெந்து போகிறாளே! என்று அவன் மனசாட்சி அவனை குற்ற கூண்டில் ஏற்றி நிறுத்தியது. இதில் அவன் தவறு எதுவென்றும் அவனுக்கு புரியவில்லை. இயல்பாக அவளிடம் பழகினான், அவளுக்கு தன்மீது ஆர்வம் எழுந்ததை உணர்ந்த நொடியிலேயே அவளை விட்டு விலகிச் சென்றான். வருட கணக்கில் அவள் பார்வையிலேயே படாமல் விலகி இருந்தான். இன்னும் தான் என்ன செய்திருக்க வேண்டும் என்பது அவனுக்கு விளங்கவில்லை.
இத்தனை பிடிவாதமான நேசத்தை அவள் என்மீது வைத்து தொலைக்க வேண்டுமா? என சலித்துப் போய் விக்ரம் இரு கைகளால் தலையை தாங்கியபடி அமர்ந்து விட்டான். அவளை இங்கிருந்து அனுப்பி வைப்பதை விட அவனுக்கும் இப்போது வேறு வாய்ப்பில்லை. சத்யவர்த்தினி நாளை ஊருக்கு கிளம்புவதாக கூறியதை நண்பனுக்கு தகவலாக அனுப்பினான்.
***
அதன்படி, மறுநாள், சிவனாண்டியும், சரவணவேலுவும் சத்யாவை அழைத்துச் செல்ல வந்துவிட்டனர்.
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல தம்பி. உங்க நல்ல மனசுக்கு உங்க வாழ்க்கையும் நல்லபடியா அமையும்.” விக்ரமாதித்தனின் கரங்களை பிடித்து சிவனாண்டி நெகிழ்ச்சியோடு உரைக்க, அவனுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவதென்று தெரியவில்லை. போதுமே என்பது போல தன் நண்பனை பார்த்து வைத்தான்.
“மாமா, உங்க நன்றி படலம் போதும், கிளம்பலாம் வாங்க.” சரவணன் நண்பனை காக்க முயல,
“அட இரு சரவணா, ஒரு ஆபத்துன்னு நாம உதவி கேட்டப்போ, நம்ம சொந்தக்காரவங்க கூட தயங்கி தான மழுப்புனாங்க. இந்த தம்பி நமக்கு உறவா இல்லன்னாலும், மறுக்காம நம்ம பொண்ண காபந்து பண்ணுச்சு. அதுக்கு உரிய மரியாதைய நாம தர வேணாவா?” சிவனாண்டி மச்சானையும் அடக்கினார்.
இத்தனைக்கும் சத்யவர்த்தினி, தன் பையை கையில் வைத்தபடி அமைதியாக அவர்களை பார்த்திருந்தாள்.
“ஏ புள்ள, என்ன அப்படியே நிக்கிற, தம்பி கால்ல விழுந்து ஆசி வாங்கு வா.” சிவனாண்டி மகளை அழைக்கவும், விக்ரமன் பதறினான். “ஐயோ சார்! அதெல்லாம் ஒன்னும் வேணாம். நேரமாச்சு பார்த்து கிளம்புங்க.” என்றான் அவசரமாக. மகளை விட இந்த தந்தையில் அலும்பு பெரிதாக இருந்தது அவனுக்கு.
“உங்களுக்கு தெரியாது தம்பி, நீங்க அவளுக்கு செஞ்சது பெரிய விசயம். ஒத்த பொண்ணுனு நாங்க அவளை செல்லங்கொடுத்து பொத்தி வளர்த்துட்டோம். ஆனா, நீங்க அவளுக்கு சொன்ன தைரியம் தான், அப்பவும் அவளை காப்பாத்தி இருக்கு, இப்பவும் அவளை காப்பாத்தி இருக்கு. இல்லனா எம்புட்டு செய்தியில பார்க்கறோம். மிரட்டலுக்கு பயந்து உசுர மாச்சிக்கறதெல்லாம்…” என்றவருக்கு குரல் கமற, தன் பெண்ணுக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகள் என்று வேதனை மூண்டது.
“நான் அவளுக்கு பெருசா எதுவும் சொல்லிடலை சார். சத்யா பிறப்புலயே தைரியமானவ, போராட்ட குணம் கொண்டவ.” என்றவன் பார்வை அவளை தொட்டு மீண்டது.
“உங்களுக்கு பெரிய மனசு தம்பி, கண்டிப்பா ஒரு நாள் நம்ம வீட்டுக்கு நீங்க வரணும். இப்ப நாங்க பொழுதோட கிளம்புறோம்.” என சிவனாண்டி மீண்டும் நன்றி உரைத்து விடைபெற்று முன்னால் நகர, சத்யவர்த்தினி அவனை திரும்பியும் பாராது தந்தையுடன் நடந்தாள்.
“சாரிடா, இப்ப உன்னோட டைம் ஸ்பெண்ட முடியல. நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம். அப்புறம், இனிமே நட்ட நடு ராத்திரி ஃபோன் போட்டு என் தூக்கத்தை கெடுக்க மாட்டல்ல?” சரவணவேலு நண்பனிடம் பாவமாக கேட்க,
“அந்த தொல்லைய தான் உன்னோட கூட்டிட்டு போறியே, இனிமே நானும் நிம்மதியா தூங்குவேன்டா” விரிந்த சிரிப்புடன் பதில் தந்தவனை திரும்பி முறைத்துவிட்டு சென்றாள் அவள்.
சரவணனும், “டேய், என் அக்கா மக உனக்கு தொல்லையா?” என கேட்டு அவனை முறைக்க, “பின்ன இல்லயா?” விக்ரம் திருப்பி கேட்கவும், இருவருக்குமே சிரிப்பு விரிந்தது. அந்த சிரிப்புடன் நண்பனை அணைத்து விடைபெற்று காரை கிளப்பினான் சரவணன்.
அவளை அனுப்பிவிட்ட நிம்மதியோடு வீடு திரும்பியவனை முதல் முறை அவன் வீட்டின் வெறுமை சற்று அசைத்துப் பார்த்தது. தன்னை தவிர்த்து ஜடமான பொருட்கள் மட்டுமே விரவி கிடந்த தன் வீட்டை வித்தியாசமாக சுற்றிப் பார்த்தவன், தன் மனம் போகும் போக்கில் தலையை குலுக்கிக் கொண்டான். உடனே வீட்டை பூட்டி விட்டு தன் விடுதியை மேற்பார்வையிட கிளம்பினான்.
சத்யாவிற்கு, அப்பாவிடமும் மாமாவிடமும் சொல்லவும், கேட்கவும் பல விசயங்கள் இருந்தன. முதலில் கொஞ்ச நேரம் முறுக்கி திருப்பியவள், அதன்பிறகு அவர்களிடம் சகஜமாக வாயளக்க ஆரம்பித்து விட்டாள்.
அவர்கள் ஊர் எல்லை வந்து சேர, இரவு பதினொரு மணி கடந்திருந்தது. அந்த கிராமமே நிசப்த அமைதியில் இருக்க, திடீரென இரு புறமும் பைக் வந்து அவர்கள் காரை மறித்து நிற்கவும், சரவணவேலு பதறி காரை நிறுத்தினான்.
“என்னாச்சு, யாரு நீங்க?” இருட்டில் சரியாக அடையாளம் தெரியவில்லை அவனுக்கு.
“வக்கீல் தம்பி, நான் தான் மருது. அந்த பெருமாளு ஆளுங்க நம்ம ஊரை நோட்டம் போட்டுனே இருக்கானுங்க. சிவனாண்டி அண்ண சத்யா தங்கச்சிய அழைச்சிட்டு வரதா சொல்லுச்சு. அதான் உங்களுக்கு துணைக்கு நம்ம ஆளுங்களோட வந்தேன்.” என்றார் ஒரு முரட்டு மனிதர், அவர் தோற்றத்திற்கு மாறாக அவர் பேச்சில் அத்தனை வாஞ்சை மிளிர்ந்தது.
“மருதண்ணே, இன்னும் என்ன வேணுமாம் அவனுங்களுக்கு? வாங்கி கட்டிக்கிட்டது பத்தலையாமா?” சத்யவர்த்தினி அவரிடம் சீற்றமாக கேட்டாள்.
“விடு தங்கச்சி, பார்த்துக்கலாம். எங்கள மீறி தான் எவனும் நம்ம ஊருக்குள்ள காலடி எடுத்து வைக்கோணும். நீ போய் நிம்மதியா தூங்குமா” என்றார் மருது தன் மீசையை நீவிவிட்டபடி.
அவர்கள் உடன்வர சரவணன் காரை இயக்கி வந்து வீட்டில் நிறுத்தினான். “எய்யா மருது, காலம்பற வூட்டாண்ட வா பேசிக்கலாம். சரியா?” என்ற சிவனாண்டி மகளுடன் வீட்டுக்குள் செல்ல, சேதமடைந்திருந்த தங்கள் வீட்டின் முன் தோற்றத்தை கண்ட சத்யாவிற்கு உள்ளம் கொதிப்புற்றது.
“ஏன் ப்பா வீடு இப்படி கிடக்கு?”
“அதான் அந்த பெருமாளு ஆளுங்க செஞ்ச வேலை பாப்பா. மேஸ்திரி வேலை நடக்குது. உடைஞ்ச கதவு ஜன்னல் எல்லாம் மாத்தி, முன்னாடி பெரிய கேட் வச்சி சுவரு எடுக்க சொல்லி இருக்கேன். நீ உள்ள வா தாயி.” மகளை அழைத்தவர், “சரவணா நீயும் வாப்பா” மச்சானையும் அழைத்தபடி உள்ளே நடந்தார்.
வாசற்கதவை அவர் தட்டும்முன்பே திறந்த நீலாவதி, “நேரமாகவும் எனக்கு பயந்து வந்துடுச்சு, வழியில எதுவும் பிரச்சனை இல்லையே” என விசாரித்தபடி மூவருக்கும் குடிக்க தண்ணீர் தந்தவர், “உனக்கு காய்ச்சல் விட்டுடுச்சா சத்யா?” என அவள் நெற்றி கழுத்தில் புறங்கை வைத்து சோதித்து பார்த்தார்.
“நான் நல்லா இருக்கேன் சித்தி, தம்பிங்க எங்க, தூங்கிட்டாங்களா?” உடன் பிறப்புகளை காணும் ஆவலில் கேட்டாள்.
“பசங்களை அம்மா வீட்டிலயே விட்டு வந்துட்டேன்டி. இந்த ஊரும் இந்த வீடும் கிடக்கற நிலமைக்கு எல்லாஞ் சரியான அப்புறம் கூப்பிட்டிக்கலாம்னு சொல்லி இருக்கேன்.” நீலாவதி பேச்சு மேலோட்டமாக வந்தது. “ம்ம், அவனுங்களுக்கு ஸ்கூலும், உனக்கு காலேஜும் கெட்டது தான் மிச்சம்.” என தனக்குத்தானே புலம்பிக் கொண்டார்.
என்னவோ இவள் ஒருத்தியால் தான் இத்தனை பிரச்சனை என்ற சலிப்பு சித்தியிடம் நன்றாகவே வெளிப்பட, சத்யா அடுத்து பேசாது தன் அறை நோக்கி நடந்தாள்.
சரவணனுக்கும் அவர் பேச்சு சங்கடத்தைக் கொடுத்தது. அவளுடன் வந்தவன், “குட்டிமா, கொஞ்ச நாள் நீ நம்ம வீட்ல வந்து தங்கிக்கடா. இங்க எல்லாம் சரியானதும் வரலாம்.” என்றுரைக்க, தன் மாமன் தனக்காக கவலை கொள்வது அவளுக்கும் புரிந்தது.
“வேணா மாமா. காலேஜ் கண்டினியூ பண்ணனும். அதோட நான் இங்க இருந்தா தான் இதெல்லாம் சரியாகும். இல்லனா என்னை வச்சே ரெண்டு ஊரும் அடிச்சிட்டு கிடக்கும். எனக்கு ஒன்னும் ஆகாது, என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க, எனக்கும் தூக்கம் வருது மாமா.” என தைரியம் சொல்லி செல்லும் அக்கா மகளை பெருமையோடு பார்த்தவன் தன் அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தான்.
தினமும் இரவில், மூடிய கதவருகே, “சத்யா... சத்யா...” என்று குரல் கொடுக்கும் விக்ரமனின் விளிப்பு கேளாமல், அவளுக்கு இன்றைய இரவு பாரமாய் கழிந்தது.
மறுநாள் விடியலில் விழித்தெழுந்ததும் சத்யா, நேராக தன் தோட்டத்து பூக்களை ரசிக்க வந்து நின்றாள். அவர்கள் வீட்டின் பின்புறம் கழனிக் காட்டோடு இணைந்திருக்க, அங்கே கணக்கின்றி அவள் நட்டு வளர்த்திருந்த மலர்கள் எல்லாம் அவளை தலையாட்டி வரவேற்றன.
அவற்றிற்கு புன்னகையை பரிசளிக்க முடியாமல் அவள் முகம் வாடிப்போனது, கொல்லைப்புறத்தில் நசுங்கி உலர்ந்து கிடந்த செடிகளை பார்த்து.
அன்று வீட்டை நாசம் செய்தவர்கள், தான் ஆசையாக வளர்த்த செடிகளையும் விட்டு வைக்கவில்லை என புரிந்து உள்ளுக்குள் கனன்றவள், சேதமான செடிகளை நீக்கிவிட்டு அந்த இடத்தை சமன்படுத்தி வைக்கலானாள்.
“நினச்சேன், காலையில இங்க வந்து மண்ண கிளற ஆரம்பிச்சிட்டியா? கை கழுவிட்டு வந்து டீ குடி வா.”
சித்தியின் அழைப்பில் எழுந்து வந்தவள், “நிறைய செடி வீணா போச்சு சித்தி” வருத்தமாக சொன்னபடி தேநீரை வாங்கி முதல் மிடறு பருக, நாவில் ஊறிய தேநீரின் துவர்ப்பு சுவை கடந்த சில நாட்களாக ருசித்த குளம்பியின் அலாதியான சுவையை அவளுக்கு நினைவூட்டிப் போனது. அதுவரை வாடியிருந்த அவள் முகம் பூவாய் மலர்ந்திட, தேநீரை ரசித்துப் பருகினாள்.
மீதமிருந்த இடங்களையும் சுத்தம் செய்துவிட்ட கையோடு ஒரு செம்பருத்தி கிளையை நிலத்தில் ஊன்றி நட்டவள், புதிய செடியோடு சேர்த்து தோட்டம் முழுக்க தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டுக்குள் வரும்போது, சரவணவேலு கிளப்பி தயாராகி நின்றான். “அப்ப நான் கிளம்புறேன்டா. எதுக்கும் ஜாக்கிரதையா இரு. எதுவா இருந்தாலும் ஒரு கால் பண்ணு ஓடி வந்திடுவேன்.” என்று அவளிடம் விடைபெற்று கிளம்பினான்.
அதன்பிறகு அவளுக்கான அன்றைய வேலைகள் வரிசை கட்டி நின்றன. குளித்து தயாராகி வந்தவள், காலை உணவு முடிந்த கையோடு அப்பாவும் மருதுவும் உடன்வர கல்லூரிக்கு விரைந்தாள்.
சத்யவர்த்தினி முதுகலை கணிதம் இறுதியாண்டில் இருக்க, இடையே இந்த பிரச்சனையில் ஏற்பட்ட விடுப்புக்கு காரணம் கூறி விடுப்பு கடிதம் எழுதி தந்து, அனுமதிபெற்று வகுப்பறைக்குள் நுழைந்தாள்.
தோழிகளின் ஆர்ப்பாட்ட வரவேற்பில் ஆரம்பித்து, விக்ரமாதித்தன் எனும் மான்ஸ்டர் கதை, அவளின் பெங்களூர் நாட்கள், ரெஸ்டாரன்ட் உடன் கூடிய பாரின் அமைப்பு, தான் பார்த்த மது வகைகள், அங்கு உண்ட உணவின் தரம், ருசி என நாள் முழுவதும் பேசி பேசியும் அவள் வாய் ஓயாமல் முடிந்திருந்தது அன்றைய வகுப்பு.
மாலை அவள் கல்லூரி விட்டு வெளிவரும்போதே மருது அவளுக்காக நின்றிருந்தார். “என்ன மருதண்ணே எனக்கு காவலா?” என்று கிண்டலாக கேட்டபடி அவரிடம் வந்தவள், “நீங்க கொடுக்கற அலும்புல இப்பல்லாம் என்னை நானே பெரியாளா நினச்சிருக்கேன்னா பாருங்களேன்” கெத்தாக சொல்லி சிரிக்க, மருதுவின் முரட்டு முகத்திலும் சிரிப்பு விரிந்தது.
அவர் தன் புல்லட்டை எடுக்க, “அண்ணே அண்ணே, நான் ஓட்டிட்டு வரேனே” என அவரிடம் கெஞ்சி கேட்டு வண்டியில் துள்ளி ஏறி அமர்ந்து அதை உதைத்து உறுமவிட்டாள். காட்டெருமை போலிருக்கும் தன் வண்டியின் மேல் அவள் உருவம் கத்தரிக்காய் அளவே தெரிய, மருது சிரித்துக் கொண்டார்.
“அண்ணே, தயங்காம ஏறி உக்காரு.” எனவும், அவர் இன்னும் சிரித்தபடி அவள் பின்னால் அமர்ந்தார். அவள் கைகளில் வண்டி டுபுடுபு சத்தத்தோடு உறுமி சென்றது.
அவர்கள் வீட்டை அடையும்போதே, வாசலில் சிலர் சேர்ந்திருக்க, என்னவென புரியாமல் இருவரும் இறங்கி உள்ளே நடந்தனர். வீட்டுக் கூடத்தில் வெள்ளையும் சொள்ளையுமாக சிலர் சட்டமாக அமர்ந்திருக்க, சிவனாண்டியும் மற்றவர்களும் கோபமாக ஏதோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
“யாருண்ணே இவங்கெல்லாம்?” சத்யவர்த்தினி மருதுவிடம் வினவ,
“உன்கிட்ட வம்பு செஞ்சான்ல, அந்த பையனோட அப்பனும் அவங்க ஆளுங்களும். என்னத்துக்கு வீடு வரைக்கும் வந்திருக்கானுங்கன்னு தெரியல. நீ உள்ள போயி இரு தாயி. நான் என்னனு பார்க்கறேன்.” என்ற மருது வேட்டியை உதறி மடித்துக்கட்டி கொண்டு அவர்களிடம் செல்ல, சத்யவர்த்தினி அவர்களை சந்தேகமாக கவனித்தபடி தன்னறைக்கு நடந்தாள்.
“ஐயா, அதான் அந்த பொண்ணு” பெருமாள் காதில் ஒருவன் ஓத, அவர் பார்வை சத்யாவிடம் சென்றது. பாந்தமான சுடிதாரில் கையில் புத்தக பையோடு அமைதியாக உள்ளே சென்றவளை கவனித்தவருக்கு, இந்த புள்ளப்பூச்சி பெண்ணா, தன் மகனை அத்தனை ஆவேசமாக தாக்கியது என்பதை நம்ப கடினமாகத் தான் இருந்தது.
“பெருமாளு, போலீசு ஸ்டேஷன்லயே எல்லாத்தையும் பேசி முடிச்சாச்சுல. அதைவிட்டு இப்ப நடுவீட்ல வந்து உக்கார்ந்துட்டு நீ பிரச்சனை பண்ணா நாங்க பார்த்திட்டு இருக்க மாட்டோம்.” அவர் தன் மகளை நோட்டம் விடுவதை பொறுக்காமல் சிவனாண்டி கோபமாக குறுக்கிட்டு பேசினார்.
“என்ன சிவனாண்டி, என்னை பார்த்தா பிரச்சனை பண்ண வந்தவன் மாதிரி தெரியுதாயா? நம்ம ரெண்டு குடும்பத்து பிரச்சனை இப்ப ரெண்டு ஊரு பிரச்சனையா மாறி கிடக்கு. ஊருக்கு ஒன்னுனா என்னால பார்த்துட்டு இருக்க முடியுமா? அதான் எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சுக்கலாம்னு நானே இறங்கி வந்திருக்கேன்” மைக்கில் பேசுவது போன்ற கணீரென்ற குரலில் பேசினார் பெருமாள்.
“இன்னும் முடிக்க என்னயா கிடக்கு?” சிவனாண்டி அடக்கிய ஆத்திரத்துடன் கேட்க,
“நான் சொல்றதை பொறுமையா கேளுப்பா. ஏதோ சின்னஞ்சிறுசுங்க விவரம் புரியாம முட்டிக்கிடுச்சுங்க. இதுல நம்ம ரெண்டு பக்கமும் சேதாரமாகி போச்சு. ஊருல வேற பேச்சாயிடுச்சு. இதுக்கு மேல இதை வளரவிடாம சட்டுபுட்டுனு ரெண்டுக்கும் கல்யாணம் கட்டிவச்சிட்டா எல்லா பிரச்சனையும் சுமூகமா முடிஞ்சிடுமில்ல. என்ன சொல்ற?” என்றதும், சிவனாண்டி விருட்டென எழுந்தார்.
“ஏலே, ஏதோ பெரிய மனுசன்னு பொறுமையா பேசுனா, உன் பொறுக்கி மவனுக்கு என் பொண்ண கேப்பியா?”
“சும்மா நீ கோபப்பட்டு கத்தறதால ஒன்னும் ஆக போறதில்ல சிவனாண்டி. உன் பொண்ணோட திமிர்தனம் சுத்துவட்டாரம் பூரா பரவி கிடக்கு. இனி எவனும் துணிஞ்சி வந்து அவளை கட்டமாட்டான். ஏதோ நான் பெரிய மனசு பண்ணி என் மகனுக்கு உன் பொண்ண கேக்கறேன்னா, நீ என் கால்ல விழுந்து கட்டிக் கொடுக்கணும், அதைவிட்டு…” பெருமாள் தெனாவெட்டாக பேசும்போதே, ஒரு வீச்சரிவாள் பறந்து வந்து அவர் காலடியில் நங்கென்று விழுந்தது.
அதில் அந்த மனிதருக்கு சிறிது அல்லுவிட, காலை வெடுக்கென தூக்கிக் கொண்டு நிமிர்ந்தார்.
அங்கே சத்யவர்த்தினி ஆங்காரமாய் நின்றிருந்தாள். அவள் நிற்கும் கோலமே அங்கிருந்தவர்களை ஓரடி பின்வாங்க வைத்தது.
“உம்ம கால்ல விழுந்து உம்ம வீட்டுக்கு மருமவளா வரணுமோ? ஊருல நீங்க பெரிய மனுசனாம். அதான் அருவாள உம்ம காலடியில வீசி இருக்கேன். இதையே உம்ம கழுத்துக்கு வீச எம்முட்டு நேரமாவும்?” அடிக்குரலில் கேட்டு வந்தவள், கீழிருந்த அரிவாளை குனிந்து எடுக்கவும், அந்த மனிதர் மிரண்டு எழுந்து விலகி நின்றார்.
“அடியே! பெரியவங்க பேசும்போது நீ ஏன் ஊடால வர? என்ன உனக்கு அத்தனை ஆங்காரம்? வாடி” நீலாவதி பதறி வந்து அவளை கண்டித்து அங்கிருத்து இழுத்தார். அவரை தவிர வேறு யாருக்கும் அவளை கண்டிக்க கூட நா எழவில்லை.
“விடுங்க சித்தி, என்னை பத்தி தான பேசறாங்க. அப்ப நான் தான பதில சொல்லணும்.” என்றவள் பெருமாள் பக்கம் விருட்டென திரும்பி,
“பொண்ணுங்க கிட்ட எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு புத்தி சொல்லி பையன வளர்க்க துப்புல்லாத பெரிய மனுசனுக்கு, அந்த வீணா போன புள்ளக்கு பொண்ணு கேட்டு வர மட்டும் துப்பு வந்துடுச்சோ?” என குரல் உயர்த்தி கேட்டாள்.
“ஏய், வாயடக்கி பேசு…” கன்னங்களில் ஊளைச்சதை துடிக்க அவளிடம் கர்ஜித்த பெருமாள், “எங்க வீட்டு பொம்பளங்க எங்க முன்னால மூச்சு விட கூட பயப்படுவாளுங்க. நீ என்னயா இப்படி அடங்காபிடாரி பொண்ண வளர்த்து வச்சிருக்க?” என சிவனாண்டியை பார்த்து ஏசினார்.
“எய்யா, அந்த அங்காள பரமேஸ்வரிக்கு நேந்துகிட்டு பெத்தெடுத்த பொண்ணுயா அவ. எவன் சால்ஜாப்புக்கும் அடங்காதவ. தப்பு பண்ணது உன் மவன், அதை மறைக்க இங்க வந்து நிக்காத. கிளம்பிடு” மீசையை முறுக்கிவிட்டு சிவனாண்டி எச்சரித்தார்.
மருது உட்பட மற்றவர்களும் சிவனாண்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்க, “அப்பனும் மவளும் நல்லா தெனாவட்டா தான் பேசறீங்க. இன்னும் எத்தனை நாளைக்கு உங்க ஜம்பம் செல்லும்னு நானும் பார்க்க தான போறேன். இவளபத்தி தெரிஞ்ச எவனும் இவள கட்டிக்கிட வரமாட்டான். கடைசியில நீங்க ரெண்டு பேரும் எங்க கால்ல வந்து விழுந்து தான் வாழ்க்கை பிச்சை கேக்கணும். கேப்பீங்க.” என்றுவிட்டு கோபமாக வெளியேறினார் பெருமாள்.
“நான் செத்தாலும் சாவேனே தவிர என்னிக்கும் அந்த பொறுக்கிய கட்டமாட்டேன்…” சத்யவர்த்தினியின் சூளுரை அவர் காதில் பாய்ந்து வந்து ஒலித்தது.
‘அடித்து வீசும் புயல் காற்றில்
நெடு மரங்களெல்லாம்
வேரோடு சரிய
மண்ணடியிலிருந்து
மெல்ல தலை நீட்டுகிறது
ஒற்றை காளான்!’
***
நன்றி டியர்ஸ் 🫶🫶🫶
உடனுக்குடன் உங்கள் வாட்ஸ்அப்பில் இந்த கதைக்கான அப்டேட்ஸ் பெற yuva karthika what's app சேனலை follow செய்யலாம் link நன்றி டியர்ஸ் 🫶🫶🫶
Yuva Karthika Novels | WhatsApp-kanava
Käyttäjän Yuva Karthika Novels WhatsApp-kanava. Tamil novels, stories, updates. 100 seuraajaa
whatsapp.com
எனது அனைத்து கதைகளையும் ஆடியோ நாவலாக, Yuva karthika audio novels YouTube சேனலில் கேட்டு ரசிக்கலாம் link
Yuva Karthika Audio Novels
Tamil audio novels @ykaudionovels நான் யுவகார்த்திகா. இங்கு என் கதைகளை ஒலி புத்தகமாக கேட்டு ரசிக்கலாம்.
youtube.com