காதலாடுதே எந்தன் நெஞ்சம்
அத்தியாயம் 16
“என்னா பொண்ணு மதனி அது. எப்பா! வீச்சரிவாள வீசிட்டு வந்து நின்னுச்சு பாரு. ஐயாவே அரண்டு போயிட்டாருன்னா, நாங்கெல்லாம் எம்மாத்திரம்! அத்தனை ஆம்பளங்களுக்கு நடுவுல அசால்ட்டா பேசுது. பதில் பேச எவனுக்கும் வாய் வரல. நான் என்ன சொல்றேன்னா, அந்த பொண்ணு கண்டிப்பா நம்ம பையனுக்கு வேணவே வேணாம். தப்பித்தவறி அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு வந்துச்சு, வீடு தாங்காது அவ்வளோ தான் சொல்லிபுட்டேன்.”
ஒருவன் அங்கு நடந்ததை எல்லாம் இங்கு வந்து ஒப்பிக்க, தேசிகனின் அம்மா அருளரசி அமைதியாக அவற்றை உள்வாங்கினார். என்ன இருந்தாலும் ஒரு பெண்ணிடம் இத்தனை வீராப்பை அந்த கிராமத்து பெண்மணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டு ஆண்களுக்கு அடங்கி வாழ்ந்தே பழகியவருக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது.
அதற்கு மாறாக பெருமாள் உள்ளுக்குள் பற்றியெரியும் நெருப்பாக தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தார். தன் அப்பாவை அப்படி பார்க்க தேசிகனுக்கு தாங்கவில்லை. தன் விருப்பத்திற்காக சென்றவர் அவமானப்பட்டு வந்ததில் அவனது இளரத்தம் கொதிப்புற்றது.
“அப்பா, நீங்க சொன்னது தான் சரி, அவளை வெட்டிப் போட்டா தான் அடங்குவா. அவளோட இத்தனை திமிருக்கு கொடூரமா செத்தொழியட்டும். நம்ம ஆளுங்களுக்கு சொல்லி விடுப்பா.” தேசிகன் ஆத்திரமாக உரைக்க, அவர் தலை மறுப்பாக அசைந்தது.
“இல்லடா மவனே, இப்ப அவளை ஊரே சாமியா பார்க்குது. நாம அவளை கொன்னுப்போட்டா, அவளுக்கு கோயில் கட்டி நிஜ சாமியாக்கி கும்பிட ஆரம்பிச்சுடுவானுங்க. செத்தவ சாமியானா, கொன்னவன் குடும்பம் மிச்சமீதி இல்லாம அழிஞ்சு போகும் டா. அப்படி ஒரு நிலமை நம்ம குடும்பத்துக்கு வேணாம்.” என உறுதியாக மறுத்தார்.
“இந்த கதையெல்லாம் நீங்க நம்புறீங்களா ப்பா?” தேசிகன் சலிப்பாக கேட்க,
“நம்பணும்டா, சாமி இருக்கா இல்லயான்னு ஆராயாம, சாமி நம்ம காப்பாத்தும்னு நம்பி கும்புறோம்ல. அதுபோல தான் இதுவும். சாமி நம்ம அழிக்கும்றதையும் நம்பணும்.” என்றார் அழுத்தமாய்.
“அப்ப அவளை அப்படியே விட்ற சொல்றீங்களா?”
அதற்கும் இடவலமாக தலையசைத்தவர், “அவளையாவது விடறதாவது. ஆம்பளங்க கூட என் முன்ன எதிர்த்து பேச துணியாத பேச்சை அவ எனக்கு நேரா பேசிபுட்டா டா. உசுருக்கும் மானத்துக்கும் பயந்த எவளுக்கும் இந்த துணிச்சல் வராது. அவளுக்கு எதுக்கும் பயமில்ல. அதான் அப்படி ஆடுறா… அவ பயப்படணும்… அவளை பயப்பட வைக்கணும்… அந்த பயத்துல நம்ம கால்ல வந்து விழ வைக்கணும்.” பெருமாள் அமர்த்தலாக உரைத்தார்.
“அதுக்கு என்ன பண்ணனும் ப்பா?” தேசிகன் கேட்டு நின்றான்.
“இப்பத்திக்கு அவ அப்பன் அவளுக்கு சீக்கிரம் மாப்பிள பார்த்து கல்யாணம் முடிச்சு கரை சேர்க்க தான் நினைப்பான்.” என பெருமாள் யோசனையாக தொடங்க,
“இவ்வளோ நடந்ததுக்கு அப்புறம் எவன்ப்பா அவளை கட்டிக்க வருவான்?” தேசிகன் அசுவாரஸ்யமாக குறுக்கே கேட்டான்.
“பக்கி பயலுக, அவளுக்கு நடந்ததை வச்சே ஒன்னுக்கு நாலு பங்கா வரதட்சணைய தீட்டலாம்னு நாக்க தொங்கப்போட்டு வருவானுங்கடா. சிவனாண்டியும் தன் பொண்ணுக்கு கொட்டி கொடுப்பானே!” பெருமாள் நிலைமையை எடுத்துச் சொல்ல, இதில் தான் என்ன செய்ய வேண்டும் என்று தேசிகனுக்கு நன்றாகவே புரிந்தது.
“அவன் வீட்டுல எந்த மாப்பிள பையன் காலடியும் படக்கூடாது. வர சம்பந்தத்தை எல்லாம் கலைச்சு விட்டுடு. வாழ்க்கை போச்சுன்னு அப்பனும் பொண்ணும் கதறி சாவணும்.” பெருமாள் குயுக்தியாக கூற,
“அது லாங் ப்ராஸஸ், வெட்டி வேலைப்பா. அதைவிட ஸார்ட்டா ஈஸியா என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, சொல்லவா?” என்ற அவரது அருமை மகன் தன் திட்டத்தை விளக்க, பெருமாளின் புருவங்கள் உயர்ந்து இறங்கின.
“இப்பத்தி பசங்க எல்லாம் புதுசா தான் யோசிக்கிறீங்கடா. ஆனா, இதலயும் கோட்டை விடாம பார்த்துக்க. முன்ன போல சொதப்பி மாட்டிக்கிட்ட நீ என் புள்ளயே இல்லன்னு உதறிட்டு போய்கிட்டே இருப்பேன்.” என்றார் அழிசாட்டியமாக.
“நான் முடிச்சிடுவேன் ப்பா, இந்த முறை டார்கெட் மிஸ் ஆகாது.” தேசிகன் முழு உறுதியுடன் உரைத்தான். அடிப்பட்ட நாகம் போல விஷம் கக்க சீறிக் கொண்டிருந்தது அவனது கயமை உள்ளம்.
***
“பொண்ணா பொறந்தா நெஞ்சில கொஞ்சமாவது அச்சம் இருக்கணும். நாலு பேரு முன்னால அடக்க ஒடுக்கமா அடங்கி இருக்கணும். இதெல்லாம் எடுத்து சொல்லி தான உன்ன வளர்த்தேன். இத்தனை நாளும் நல்லாதான இருந்த. இப்ப மட்டும் எந்த பேய் பிசாசு புடிச்சு ஆட்டுதோ உன்ன” என்ற புலம்பலோடு கை நிறைய திருநீறை அள்ளி சத்யவர்த்தினி நெற்றியில் பூசினார் நீலாவதி. கூடவே விசம்பு வைத்து சுற்றிய வெள்ளை துணியை கயிறாக திரித்து அவள் வலது கை மணிக்கட்டில் இறுக கட்டினார்.
“அய்யோ சித்தி, என்னை எந்த பேய் பிசாசும் அடிக்கல.” சத்யா மறுத்து அலறினாள்.
“எதுவும் அடிக்காம தான், அந்தா பெரிய வீச்சரிவாள வீசிக்கிட்டு வந்தியா?” நீலா நம்பாமல் கேட்க,
“பின்ன, அப்பா அவன் கால்ல விழணும்னு சொல்லுவான், நான் வேடிக்கை பார்த்துட்டு நிப்பேனா?” சத்யவர்த்தினி இப்போதும் கோபத்தோடு உரைத்தாள்.
“அவனுக்கு பதில் சொல்ல உன் அப்பாக்கு தெரியாது பாரு, நீ ஆங்கரிச்சிக்கிட்டு வந்து நிக்கற. வயசு பொண்ணுடி நீ, கொஞ்சமாவது பயமிருக்கா உனக்கு. எனக்கு தான் அடிவயிறு கலங்குது.” நீலாவதி கலங்கி பேசினார். அவர் சுமந்து பெற்றெடுக்கா விட்டாலும் பார்த்துப் பார்த்து வளர்த்த பெண்ணல்லவா, அவர் மனதும் கலங்கியது.
“எனக்கு ஒன்னும் ஆகாது சித்தி. நீங்க கவலைபடாதீங்க.” அவர் தோளில் தலை சாய்ந்து சத்யவர்த்தினி சமாதானம் செய்ய, அப்போதும் நீலாவதி மனது தெளியவில்லை. வயது பெண்ணின் வாழ்க்கை, ஏதாவது தவறிவிட்டால் என்ன செய்ய முடியும் என்ற தாய்க்கே உரித்தான பயம் அவரை சூழ்ந்து அலைகழித்தது.
“நீலா, நீயும் கலங்கி பாப்பாவையும் கலங்க வைக்காத. எல்லாம் நல்லபடி நடக்கும் எழுந்து வேலைவெட்டிய பாரு.” சிவனாண்டி கூறியதும், ஆவேசமாக கணவனிடம் திரும்பினார்.
“என்ன நல்லபடி நடக்கும்? ஆங், இங்க நடக்கிறதெல்லாம் பார்த்தா நல்லது நடக்கிறது மாதிரியா தெரியுது. உங்க பொண்ணு வீரதீரமா பேசிட்டா போதுமே பூரிச்சு புல்லரிச்சு நிப்பீரு. கொஞ்சமாவது கண்டிக்கணும்னு எண்ணம் இருக்கா உமக்கு. இப்ப அதோட கதி, நம்ம வீடு இடிஞ்சி கிடக்கு, பெத்த புள்ளங்களை சொந்த ஊருக்கு அழைச்சிட்டு வர யோசனையா இருக்கு. வயசு பொண்ண யாரோ எவரோ தெரியாதவன் வீட்டுல விட்டு வைக்கற கதியா போச்சு.” நீலாவதி சுடு சட்டியில் இட்ட எள்ளாக வெடித்தார்.
“ஏய், நம்ம சரவணன் கல்யாணத்துல விக்ரம் தம்பிய பார்த்து பேசியிருக்கேன். அவரு ஒன்னும் நமக்கு தெரியாதவர் இல்ல.” சிவனாண்டி மனைவி கடைசியாக புலம்பியதற்கு மட்டும் சட்டென விளக்கம் தந்தார்.
“என்ன இருந்தாலும் தனி ஆம்பள தான அவரு. பொண்டாட்டி குடும்பம்னு இல்லாதவர் கிட்ட நம்ம பொண்ண அனுப்பி இருக்கீங்க. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருந்தா கூட வேணாம்னு சொல்லி இருப்பேன். எங்க, இந்த வீட்டுல எப்பவும் உங்க நாட்டாமை தான.” நீலாவதி மேலும் பேச,
“இப்ப அதில என்ன குறைஞ்சு போச்சு. நம்ம பொண்ணு பாதுகாப்பா தான இருந்துட்டு வந்திருக்கா” சிவனாண்டியும் பதில் கூறினார்.
சத்யா இருவரது வாய் சண்டையையும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்திருந்தாள். கணவன் மனைவி சண்டையில் தலை கொடுத்து இடி வாங்கும் உத்தேசமெல்லாம் அவளுக்கு இல்லை. தான் தான் இந்த சண்டைக்கு மூலக் காரணம் என்பதில் பெருமை வேறு.
“அதை தான் நானும் சொல்றேன், காலா காலத்துல அவளுக்கு கண்ணாலம் முடிச்சிருந்தா, இப்படி வேற எவனோ வீட்டுக்கு அனுப்பி காபந்து பண்ற நிலமை நமக்கு வந்திருக்குமா? முதல்ல எவனும் சத்யா கிட்ட வம்பு பண்ணவே துணிஞ்சிருக்க மாட்டானே!” நீலா ஆதங்கம் பொங்க உரைக்க, சிவனாண்டி மனதிலும் அந்த உறுத்தல் இருந்தது.
“நீ சொல்றதும் சரிதான் புள்ள, இனிமே சத்யா கண்ணாலத்தை தள்ளி போடுறதா இல்ல. நானும் நாலு இடம் சொல்லி வச்சிருக்கேன். நல்ல இடம் அமைஞ்சா கல்யாண வேலைய பார்க்க வேண்டியது தான்.” சிவனாண்டி முடிவாக உரைத்தார்.
அப்பா தன்பக்கம் பந்தை தட்டியதில் சத்யவர்த்தினி ஜர்க்கானாள். “அப்பா, நான் இன்னும் பிஜி முடிக்கல. எக்ஸாம் வேற வருது.” என்றாள் மறுப்பாக.
“கண்ணாலம் கட்டிகிட்டு தாராளமா படிச்சு முடிச்சிக்க. இப்ப நிறைய பொண்ணுங்க குழந்தை பெத்துட்டு கூட காலேஜ் போய் படிக்கிறாளுங்க. அதெல்லாம் பெரிய விஷயமில்ல. இனியாவது நாங்க சொல்றதை கேட்டு இரு. உன்னோட வீராவேசம், அடாவடித்தனம் எல்லாத்தையும் மூட்ட கட்டி வச்சிட்டு, சமைக்க கத்துக்கிற வழிய பாரு.” என மகளுக்கு அதட்டல் விட்ட நீலாவிற்கு, விரைவாக நல்ல வரன் அமைந்து கட்டிக்கொடுத்தால் போதுமென்றிருந்தது.
சத்யா அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே!
“ப்ளீஸ் சித்தி, இன்னும் ஒரேயொரு வருசம் நம்ம வீட்டோட இருந்துக்கிறேனே. ப்ளீஸ் ப்பா…” இருவரிடமும் கெஞ்ச ஆரம்பித்தாள்.
“இல்ல பாப்பா, நீலா சொல்றது தான் சரி. நானும் முடிவு பண்ணிட்டேன். நீ தங்க புள்ளயா கண்ணாலத்துக்கு தயாராகற வேலைய பாரு.” என்று முடிவாக சொல்லிவிட்டு சென்ற அப்பாவை, இயலாமையாக பார்த்திருந்தாள் சத்யவர்த்தினி.
பிறகு, வருவதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டாள்.
யாரையும் கலவரப்படுத்தாமல் அடுத்த ஒரு வாரம் ஓரளவு அமைதியாக நகர்ந்தது. சத்யாவின் தம்பிகள் வெற்றிமாறனும், சக்திவேலும் ஊர் திரும்பி இருக்க, அவர்களுடன் அவள் பொழுது தொய்வின்றி சென்றது. மருதுவின் துணையோடு கல்லூரிக்கும் சென்று வந்தாள். சரவணனும் தன் வேலைக்கு நடுவே நாள் தவறாமல் அவளிடம் சிறிது நேரம் பேசினான். வீட்டு பராமரிப்பு வேலைகளும் வேகமாக நடந்தன. கூடவே மணமகன் தேடலும் ஜோராக நடந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினமாதலால், காலையிலேயே தங்கள் நிலத்தின் பம்புசென்ட் தண்ணீரில் தம்பிகளுடன் சேர்ந்து சத்யாவும் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாள். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரில் முங்கி குளித்து, நீச்சல் பழகி, விழுந்து, எழுந்து என அவர்கள் கொண்டாட்டம் அலுக்காமல் தொடர்ந்தது.
பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் சத்தத்தையும் மீறி, “குட்டிமா… டேய் குட்டிமா…” கேட்ட அழைப்பில் திரும்ப, சரவணவேலு தன் மூன்று வயது மகளை கைகளில் தூக்கிக்கொண்டு வரப்பில் வருவது தெரிந்தது.
நீரிலிருந்து துள்ளி இறங்கி வந்தவள், “ஓய் மாமா, எப்ப வந்தீங்க, இன்னிக்கு வரேன்னு சொல்லவே இல்ல.” உற்சாகமாய் முன்னால் வந்தவள், அவன் பின்னோடு திலகாவும் நான்கு வயது மகளை பிடித்தபடி வருவதைக் கவனித்து தாமதித்து நின்றாள்.
மாமன் திடீரென குடும்பத்துடன் வந்திருப்பது அவளுக்கு எதையோ விபரீதமாக உணர்த்த, மூளையை தீட்டி யோசித்தவள், “அக்கா, பசங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்க என்ன மாமா விஷேசம்?” என விசாரித்தாள்.
“எல்லாம் நல்ல விசயம் தான் சத்யா, நீ முதல்ல ஈரத்தை மாத்திட்டு வா.” திலகா அவளுக்கு பதில் மொழியவும்,
“நல்ல விசயம்னா… என்னை பொண்ணு பார்க்க யாராவது வராங்களா?” சத்யவர்த்தினி சந்தேகமாக கேட்டுவிட,
“அது... ஆமாடா, இன்னிக்கு மாப்பிள வீட்ல இருந்து உன்ன பார்க்க வராங்க. பையன் பேரு பிரபஞ்சன். சாப்ட்வேர் இன்ஜினியர், பிரான்ஸ்ல ஒர்க் பண்றான். நம்ம ராகவன் மாமாக்கு நல்லா தெரிஞ்சவங்களாம். ரொம்ப நல்ல குடும்பம்னு சொன்னாரு. நானும் பையன பத்தி விசாரிச்ச வரைக்கும் ரொம்ப நல்ல டைப். எனக்கும் மாமாவுக்கும் ரொம்ப திருப்தி. உனக்கும் பிடிக்கும்டா.” ஒரே மூச்சாக சரவணன் தகவல்களை பகிர்ந்தான்.
சத்யா எதுவும் பதில் பேசாமல் அமைதியாக அருகிருந்த மோட்டார் அறைக்குள் உடை மாற்ற சென்றாள்.
“என்ன திலோ, எதுவுமே சொல்லாம போறா?” சரவணன் மனைவியை பார்க்க,
“பொறுங்க, அவளே வந்து சொல்லுவா.” என்ற திலகாவிற்கு தண்ணீரை பார்த்ததும் தாங்களும் அதில் விளையாட வேண்டும் என அடம்பிடிக்கும் மகள்களை அதட்டி இழுத்துப் பிடிப்பதே பெரும் வேலையானது.
“டேய் மச்சானுங்களா, போதும் வெளியே வாங்கடா” இன்னும் தண்ணீருக்குள் இருந்த வெற்றி, சக்தியையும் சரவணன் அழைக்க, இருவரும் மனமே இல்லாமல் இறங்கி வந்தனர்.
சத்யா உடைமாற்றி வந்தவள், தம்பிகளும் ஈர உடை மாற்றி வர, அனைத்து ஈரத் துணிகளையும் கையோடு கசக்கி அலசி கொடியில் காயவைத்த பிறகே மாமன் பக்கம் திரும்பி வந்தாள்.
அவளின் அசாத்திய அமைதியில் துணுக்குற்ற சரவணன், தன் மொபைல் திரையில் பிரபஞ்சனின் நிழற்படத்தை எடுத்து சத்யாவிடம் காட்டினான்.
வெளிநாட்டு வாசத்தில் மெருகேறிய நிறத்துடன், பார்வைக்கும் அழகாக தெரிந்தான் அந்த இளைஞன். சத்யா சில நொடிகள் அந்த படத்தை உற்று பார்த்தவள், திருப்பி அவனிடமே கொடுத்துவிட்டு, “அப்ப எல்லாரும் சேர்ந்து, என்னை நாட்டை விட்டே விரட்ட முடிவு பண்ணிட்டீங்கல்ல?” எனக் கேட்ட போது அவள் குரல் உடைந்திருந்தது.
மாமன் சொன்ன எந்த சமாதானங்களும் அவள் மனதில் பதியவில்லை. அவள் மறுப்பை கண்டு கொள்வாரும் யாருமில்லை.
அடுத்த அரை மணியில் திலகாவின் கைவண்ணத்தில் தயாராகி இருந்தாள் சத்யவர்த்தினி. தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்தவளுக்கு, பட்டுச் சேலையும் நகையுமாக தன் தோற்றமே புதிதாக தெரிந்தது.
“நான் கல்யாணத்துக்கு சேலை கட்டிக்கிட்டா?”
“எதுக்கு, நீ தரையில விழுந்து வாரவா? ஒழுங்கா தாவணியே கட்ட வரல, இதுல சேலை வேறயா?”
“ஆனா, பாட்டி, தாத்தா என்னை சேலையில பார்க்க ஆசைப்படுறாங்களே?”
“அதுக்கு முதல்ல நீ வளரணும் குள்ளச்சி. உன் பாட்டி தாத்தாவ உன் கல்யாணத்தப்ப வந்து உன்ன சேலையில பார்த்துக்க சொல்லு. இப்ப உனக்கு கம்ஃபர்ட்டா இருக்க டிரஸ்ஸா போட்டுக்க.” செல்லமாய் அவள் தலையில் குட்டு வைத்து அவன் சொல்ல,
அதில் வலிக்காத தலையை தேய்த்துவிட்டபடி, “அப்ப என் கல்யாணத்துக்கு நீயும் வருவியா?” ஆர்வம் மின்ன கேட்டிருந்தாள்.
“நான் இல்லாம எப்படி உன் கல்யாணம் நடக்குமாம்?”
அன்று விக்ரம் கண்களால் கொஞ்சி சொன்னதன் நினைவலையில், இப்போது இவள் கண்ணோரம் ஈரம் சேர்ந்திருந்தது.
“சத்யா, இப்ப எதுக்காக கண் கலங்குற. ஜஸ்ட் பொண்ணு பார்க்க தான வராங்க.” திலகா அவள் கண்ணோர ஈரத்தை ஒற்றியெடுத்து சிறிதாக அதட்டி வைத்தாள்.
மாப்பிள்ளை வீட்டாரும் சரியான நேரத்திற்கு வருகை தந்தனர். அறிமுகப் படலம் முடிய, சத்யாவின் கைகளில் தேநீர் டிரே திணிக்கப்பட்டு, கூடத்திற்கு அழைத்து வரப்பட்டாள்.
அவளை பார்த்த முதல் பார்வையிலேயே பிரபஞ்சனின் கண்கள் ஒளிர்ந்தன. நிழற்படத்தை விட நேரில் பேரழகியாக தோன்றினாள். மாப்பிள்ளை வீட்டு பெரியவர்களின் திருப்தியை அவர்களின் முகமே பளீச்சென காட்டியது.
“பையனும் பொண்ணும் கொஞ்ச நேரம் தனியா பேசட்டும். அதுக்குள்ள நாம மத்த விசயத்தை பேசிக்கலாம். என்ன நான் சொல்றது?” பிரபஞ்சனின் அப்பா தாமோதரன் கூறவும், சிவனாண்டியும் சம்மதமாக தலையசைத்தார்.
அதன்படி இருவரும் பின்புற தோட்டத்தில் தனித்து விடப்பட்டனர். அங்கே பூத்துக் குலுங்கும் பூக்களை ரசனையாக பார்த்த பிரபஞ்சன், “உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்குங்க.” என பேச்சை தொடங்க,
சத்யா, “தேங்க்ஸ்” என்றாள்.
“அப்ப இந்த பூந்தோட்டத்தை நீங்க தான பராமரிக்கறீங்க, ரைட்” அவன் மேலும் அவளை பேச்சுக்கு இழுக்க,
“இங்க என்ன பூ வாங்கவா வந்தீங்க?” சத்யா பட்டென கேட்டிருந்தாள்.
“இல்லங்க, பொண்ண வாங்க தான் வந்தேன்” அவன் அடக்கிய சிரிப்புடன் கூற,
“இந்த வம்பு பேச்செல்லாம் என்கிட்ட வேணாம். எனக்கு இந்த கல்யாண ஏற்பாட்டுல சுத்தமா விருப்பமில்ல. என் அப்பா கிட்ட உங்களை பிடிக்கலன்னு தான் சொல்லப்போறேன். வீணா கற்பனைய வளர்த்துக்காம வீட்ட பார்த்து கிளம்புங்க.” என்று உடைத்து பேசியவளை அவன் கண்கள் குறுகுறுவென நோக்கின.
“ஏன் என்னை பிடிக்கலன்னு காரணம் தெரிஞ்சிக்கலாமா?” அவன் பொறுமையாக கேட்டான்.
“அதை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.”
“காரணமே இல்லாம என்னை மறுத்தா எனக்கு கஷ்டமா இருக்குமே!” பிரபஞ்சன் பாவம் போல சொல்ல,
பெருமூச்செறிந்தவள், “நான் ஒருத்தன விரும்பி தொலைச்சிட்டேன். போதுமா காரணம்?” என்றாள் சத்யவர்த்தினி அழுத்தமாக.
பிரபஞ்சன் சிறிதும் முகம் மாறாமல், “நீங்க பொய் சொல்றீங்க சத்யா. உங்களபத்தி முழுசா விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டு தான் இங்க வந்திருக்கேன்.”
“ஹலோ, உங்ககிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.” எனவும், அவன் நக்கலாக புன்னகைத்தான்.
“தேசிகன் பிரப்போஸ் பண்ணும்போதும் இந்த பொய்ய தான சொன்னீங்க. இப்ப என்கிட்டையும் அதையே சொல்றீங்களே! நான் விசாரிச்ச வரைக்கும் உங்களுக்கு எந்த அஃபைரும் இல்ல. உங்கள தேடி வர பசங்களை அடிச்சு விரட்டுன கதை தான் இருக்கு” பிரபஞ்சன் சாவகாசமாக உரைக்க, இவள் புருவங்கள் உயர்ந்தன.
“பரவால்லயே, அந்த பொறுக்கி கிட்ட நான் சொன்னது வரைக்கும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.” சத்யவர்த்தினி போலியாக வியந்தாள்.
“நான் கட்டிக்கிற போற பொண்ண பத்தி இவ்வளோ கூட தெரிஞ்சிக்கலனா எப்படிங்க?” அவனும் அலட்டாமல் பதிலளிக்க,
“சாரி மிஸ்டர் பிரபஞ்சன், நீங்க கட்டிக்கப்போற பொண்ணுங்க லிஸ்ட்ல என் பேரு இருக்காது.” என்றாள் பற்களை கடித்து.
“அட, பொண்ணுங்க லிஸ்டா? எனக்கு நீங்க மட்டும் போதுங்க.” என்றான்.
அவளுக்கு சுறுசுறுவென ஏறியது. இதற்குமேல் அவனிடம் பேசி பயனில்லை என்றுணர்ந்தவள், “நான் சொல்ல வேண்டியதை தெளிவா சொல்லிட்டேன். அப்புறம் உங்க கஷ்டம்” என எச்சரிக்கை விடுத்து சென்றவளை, இவன் புன்னகை மாறாமல் பின்தொடர்ந்தான்.
“எல்லாம் நல்லபடியா பேசி முடிச்சாச்சு. நீங்க சரின்னு சொன்னீங்கனா, அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை கோயில்ல முகூர்த்தம் வச்சுக்கலாம். பிரபஞ்சனுக்கு இந்த மாசத்தோட லீவ் முடியுது. எவ்வளோ சீக்கிரம் கல்யாணம் முடிக்கறோமோ அவ்வளோ நல்லது.” பிரபஞ்சனின் அப்பா சொன்னதை கேட்டபடி இருவரும் அங்கு வந்து நின்றனர்.
சிவனாண்டி அவருக்கு சம்மதம் சொல்லும் முன் மகளின் முகத்தை பார்க்க, அவள் மறுப்பாக தலையசைத்தாள். அதில் பெருமூச்செறிந்தவர், “அடுத்த வாரமே கல்யாணம்னா ரொம்ப கஷ்டங்க. நான் வீட்ல பேசிட்டு முடிவ சொல்றேன்.” என்று முடிவை தள்ளி வைத்து எழுந்தார்.
அதில் மாப்பிள்ளை வீட்டார் முகம் சற்றே வாட்டம் கண்டது. “அங்கிள், எங்க கல்யாணத்தை சீக்கிரம் வைக்கறது தான் பெட்டர்னு எனக்கு படுது. எப்படியும் அந்த தேசிகன் ஏதாவது பிரச்சனை செய்ய பார்ப்பான். அவனுக்கு எந்த வாய்ப்பும் நாம தரக்கூடாதுன்னு நினைக்கிறேன்.” பிரபஞ்சன் நேரடியாக சிவனாண்டியிடம் பேசியதில், அவர் மனம் குளிர்ந்து போனது.
அவர் இப்போது மகளை தவிர்த்து, மச்சானை கேள்வியாக ஏறிட்டார். சரவணவேலு முழு சம்மதத்துடன் தலையசைக்க, அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது. மகளை எப்படியும் பேசி சம்மதிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், “நீங்க சொல்றதும் சரிதான் மாப்பிள்ள. அடுத்த வாரமே கல்யாணத்தை வச்சிக்கலாம். எங்க பொண்ணு கல்யாணம் எந்த குறையும் இல்லாம நிறைவா நடக்கணும்.” மனதார வேண்டிக் கொண்டவராக சபையில் தன் சம்மதத்தை உரைத்தார்.
பிரபஞ்சன் வெற்றி களிப்போடு சத்யவர்த்தினியை நோக்க, அவளோ, தன் அப்பாவையும் தாய்மாமனையும் பார்வையால் எரிக்க முயன்றிருந்தாள்.
***
நிஜமா அடுத்த எபி ரிப்பீட் ஆகாது ஃபிரண்ட்ஸ்.... இந்த எபிக்கு என்னை பாவம் பார்த்து மன்னிச்சுடுங்க
நன்றி மக்களே 🫶🫶🫶