காதலாடுகிறது எந்தன் நெஞ்சம்
அத்தியாயம் 17
“என்ன தைரியம் இருந்தா நான் வேணான்னு சொல்லியும் கல்யாணத்துக்கு நாள் குறிச்சி இருப்பீங்க? கட்டிட்டு வாழப்போறவ நானா இல்ல நீங்களா?” மாப்பிள்ளை வீட்டார் தலை மறைந்ததுமே சத்யவர்த்தினியின் குரல் உயர்ந்திருந்தது.அத்தியாயம் 17
“சத்யா, அப்பா முன்னாடியே குரல உசத்த ஆரம்பிச்சிட்டியா? உனக்காக தான நாங்க எல்லாரும் ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்றோம். அதை கூட புரிஞ்சிக்காம ஆட்ற.” நீலா மகளை அடக்க முயன்றார். அவருக்குத் தெரியும், அவள் அப்பாவும் மாமனும் அவளிடம் தழைந்து பேசுவார்களே ஒழிய அதட்டி கண்டிக்க மாட்டார்கள் என்று. யாருக்கும் அடங்காமல் அடம்பிடிப்பவளை தான் மட்டுமாவது அடக்கி வைக்க வேண்டும் என்று முயன்றார். அவரால் முயல மட்டுமே முடிந்தது.
“எனக்காக பார்த்து செய்றீங்க சரி. என் விருப்பத்தை கேட்டு செய்றீங்களா?” அவள் கேள்வி சித்தியிடம் இருந்தாலும், பார்வை தந்தையை உறுத்திருந்தது.
“பாப்பா, நல்ல சம்மந்தம்டா. பையனும் குணத்துல தங்கம். நீயே பார்த்தல்ல உனக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு அக்கறை எடுத்து பேசினதை. கைநிறைய சம்பாதிக்கிறாப்ல, கண்ணுக்கு நிறைவா இருக்காப்ல வேறென்னமா குறை?” சிவனாண்டி மகளிடம் இதமாக பேசி புரிய வைக்க முயன்றார்.
“ஓ, இதெல்லாம் இருந்தா நான் அவனை கட்டிக்கணுமா? என்னோட விருப்பு வெறுப்புக்கு மதிப்பில்லயா? அந்த உளுத்துப்போன தேசிகனுக்கு பயந்து, இந்த இத்துப்போன பிரபஞ்சனுக்கு என்னை காவு கொடுக்க பார்க்குறீங்கல்ல?”
“குட்டிமா, காவு அது இதுன்னு என்ன பேச்சு இது? பிரபஞ்சனுக்கு என்ன குறைன்னு அவனை இப்படி கீழறக்கி பேசற நீ? உன்மேல நாங்க பாசம் வச்சிருக்கோம்னா நீ தப்பா பேசினாலும் தலை ஆட்டுவோம்னு அர்த்தமில்ல. உனக்குன்னு நல்ல வாழ்க்கை தேடி வரும்போது, உன் வீம்புல அதை நீயே இல்லாம பண்ணிக்காத.” சத்யாவின் இவ்வித பேச்சு சரவணனையும் கோபப்படுத்தியது. அவள் விருப்பத்திற்கு எல்லாம் தலையாட்டி தானும் அவளை இத்தனை அடமாக மாற்றி விட்டோமோ என வருந்தினான்.
“ஆள் பார்க்க நல்லா இருந்தா, நாலு வார்த்தை அழகா பேசுனா அவன் உத்தமன் ஆகிடுவானோ? அந்த உத்தமன் எனக்கு வாழ்க்கை கொடுக்க எவ்வளோ வரதட்சணை கேட்டான்? அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க மாமா?” சத்யவர்த்தினி ஆதங்கமாக வீசிவிட்ட கேள்விக்கு, சரவணனிடம் பதிலில்லை.
அவர்கள் பேசிய வரதட்சணை அவனுக்கே மலைப்பாக இருந்தது. மறுக்கவும் வழியில்லை, ஒத்துக்கொண்டு ஆயிற்று. இத்தனையும் மாமா ஒற்றை ஆளாக செய்வது கடினமே. தாய்மாமன் சீராக தான் பாதி செலவை ஏற்று அவருக்கு தோள் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
“ஏன் அமைதியாகிட்டீங்க பதில சொல்லுங்க மாமா?” சத்யவர்த்தினி விடுவதாக இல்லை.
“அவரென்ன பதில் சொல்லுவாரு. எங்க வீட்டுலயும் வரதட்சணைன்ற பேர்ல கொட்டி கொடுத்து தான் இவருக்கு கட்டி வச்சாங்க. அதுவும் அட்வகேட் வேறயா சொல்லவே தேவயில்ல.” திலகா குறுக்கே பதில் பேசி, கணவனிடம் முறைப்பை பெற்றுக் கொண்டாள்.
“பொண்ணுக்கு செய்ய வேண்டியது பெத்தவங்க கடமை, அதை நாங்க செய்ய தயாரா தான் இருக்கோம். நீ இப்படி வெட்டி பேச்சு பேசாம, கல்யாணத்துக்கு தயாராகற வழிய பாரு.” நீலாவதியும் அதட்டிச் சொன்னார்.
தன்னை சேர்ந்தவர்கள் அனைவரும் தனக்கு எதிராக நிற்க, சத்யவர்த்தினிக்குள் வெறுமை பரவியது. என் விருப்பம் இவர்களுக்கு ஒன்றுமில்லயா? அவள் மனம் கூக்குரலிட்டது.
மகளின் வாட்டம் பொறுக்காத சிவனாண்டி, “பார்த்தவுடனே ஒருத்தரை புடிச்சிடாது பாப்பா, போக போகத்தான் புடிக்கும். உன்ன பெத்தவன் உனக்கு நல்லது மட்டும் தான் செய்வேன்னு நம்புறல்ல தாயி? என்னை நம்பி இந்த கண்ணாலத்துக்கு ஒத்துக்கோமா, உன் வாழ்க்கை ஒரு குறையும் இல்லாம நல்லா இருக்கும்.” நம்பிக்கையின் பெயரில் இதமாக பேசி மகளை சம்மதிக்க வைக்க முயன்றார் அவரும்.
அவளுக்கு மனது விட்டுப் போனது. “நீங்க சொல்ற இந்த தகுதி எல்லாம் அந்த தேசிகனுக்கும் இருந்துச்சு ப்பா… அப்பவும் எனக்கு பிடிக்கலன்னு தான் சொன்னேன். என் விருப்பத்தை மதிக்காம அவன் அவனோட வழியில என்னை வற்புறுத்த முயற்சி பண்ணான். இப்பவும் உங்களுக்கு முழுதகுதியா தெரியிற இந்த பிரபஞ்சனை எனக்கு பிடிங்கலன்னு தான் சொல்றேன். நீங்களும் என் விருப்பத்தை கண்டுக்காம உங்க வழியில என்னை சம்மதிக்க வைக்க முயற்சி பண்றீங்க…”
அவள் சிதறவிட்ட சொற்களின் வீரியத்தில் அங்கு கனத்த மௌனம் சூழ்ந்து கொண்டது.
விலுக்கென நிமிர்ந்த சரவணவேலு, “அந்த பொறுக்கி பயலுக்கு தோதா எங்களை சொல்லுவியா சத்யா? என்ன பேசறோம்னு தெரிஞ்சி தான் பேசறியா? இவனை பிடிக்கல பிடிக்கலன்னு சொன்னா வேற எவன தான் உனக்கு பிடிச்சு தொலைச்சிருக்கு?” கோபத்தின் வீரியத்தில் அவனும் வார்த்தைகளை சிதறவிட்டான்.
“ஏலே சரவணா, பாப்பாவ போய் என்ன பேசற நீ?” சிவனாண்டி மச்சானை அதட்டல் விட,
“ஆமா…” அங்கே சத்யாவின் குரல் உயர்ந்து ஒலித்தது.
அனைவரது பார்வையும் அவளை மோத, இமைகளை அழுத்த மூடி திறந்தவள், “எனக்கு விக்ரமை பிடிச்சிருக்கு. கட்டிக்கிட்டா அவரை தான் கட்டிப்பேன்.” உறுதியாக சொல்லி முடித்த நொடியில், அவளது இட கன்னம் விறுவிறுவென காந்தியது.
அவள் விக்ரம் பேரை சொன்னதுமே சரவணன் அதிர்ந்து நின்றுவிட்டிருக்க, மகள் சொன்னதை ஜீரணிக்க முடியாத ஆத்திரத்தில் சிவனாண்டி முதல் முறையாக அவளை ஓங்கி அறைந்திருந்தார்.
“யாரு எவருன்னு தெரியாம என்ன பேச்சு பேசற? இதுதான் நாங்க உன்ன வளர்த்து வச்சிருக்க லட்சணமா?” அவரின் கொதிப்பு அடங்கவில்லை. விக்ரமின் முகமும் அவனது தோற்றமும், வயதும் அவர் கண்முன்னால் வந்து போக, இந்த நொடியே அவனை தேடிச்சென்று வெட்டி சாய்க்கும் ஆவேசம் எழுந்தது.
அதே கோபத்தில் திரும்பியவர், அடுத்த அறையை தன் மச்சானின் கன்னத்தில் இறக்கினார்.
“ஐயோ!” கணவன் அறை பட்டதில் திலகா பதறி கணவன் அருகில் வர, பெண் பிள்ளைகள் ஏதும் புரியாமல் அழுவதற்கு தயாராகினர். வெற்றியும் சக்தியும் நிலமை புரிந்து குழந்தைகளை அங்கிருந்து பொறுப்பாய் அழைத்துச் சென்றனர்.
“ஆண்டவா! எங்க குடிமுழுகி போச்சே! இது வெளிய தெரிஞ்சா என்னாகுமோ? உனக்கேன்டி இப்படி புத்தி போகுது?” நீலாவதி அதிர்வு நீங்காமல் அரற்றலானார்.
இத்தனைக்கும், அறை வாங்கிய இருவர் மட்டும் அசையாமல் அப்படியே இறுகி நின்றிருந்தனர்.
“நல்லவன் வல்லவன் குட்டிமாவ நல்லா பார்த்துப்பான்னு சொல்லி என்கிட்ட வக்காலத்து வாங்கினியேடா, பாரு உன் நண்பன் இவள பார்த்துக்கிட்ட லட்சணத்தை. வெறும் நாலு நாளுல நம்ம புள்ள மனச கலைச்சு விட்டிருக்கான். இதுக்கு என்னடா சொல்லுவ நீயி?” விக்ரம் மீதெழுத்த அத்தனை கோபத்தையும் சரவணன் மேல் இறக்கினார் சிவனாண்டி.
சரவணனிடம் பதிலில்லை. மாமாவிடம் அறை வாங்கியது கூட அதிக வலி தரவில்லை. ஒரு தந்தையின் நியாயமான கோபத்தின் வெளிப்பாடாகத் தான் அவர் அறையை ஏற்றுக்கொண்டான். அவனும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தகப்பன் அல்லவா.
ஆனால், உற்ற நண்பனின் துரோகத்தை தான் அவனால் தாங்கவே முடியவில்லை. மலையளவு அவன் மீதிருந்த நம்பிக்கையின் பெயரில் தான் சத்யாவை அவனிடம் அடைகலமாக அனுப்பி இருந்தான். நண்பன் மீதிருந்த அத்தனை நம்பிக்கையும் தூள் தூளாக சிதற, தானே ஏமாந்த ஆற்றாமை அவனை உள்ளுக்குள் கொதிப்புறச் செய்தது.
“விக்ரமை தப்பா பேசாதீங்க ப்பா, அவர முன்னயிருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் தான் அவர விரும்புனேன்.” சத்யா குறுக்கே வந்து சொல்லி முடிக்கவில்லை அவள் மறு கன்னத்திலும் அறை விழுந்தது.
அப்பாவின் முரட்டு கரத்தின் அடுத்தடுத்த அறை அவளை சற்றே கிறுகிறுக்க வைத்தது. கன்னங்களின் எரிச்சல் வேறு விறுவிறுத்தது.
“இன்னொரு வார்த்தை பேசின வெட்டி பொலி போட்டுடுவேன் பார்த்துக்க. சாதி சனம் தான் பார்க்க தெரியாம போச்சு, வயசு வித்தியாசம் கூடவா உன் கண்ணுக்கு தெரியாம போச்சு. விரும்பறாளாம்.” சிவனாண்டி மீண்டும் மகளை கையோங்கினார்.
அதற்கு மேல் அவள் அடி வாங்குவதை தாங்காமல் கணவனுக்கும் மகளுக்கும் குறுக்கே வந்த நீலாவதி, “வயசு புள்ளய அடிக்கற வேலை வேணாம். இனிமே ஆகற வேலைய பாருங்க.” என்று தடுத்து நின்றார்.
“என்னத்த பார்க்க சொல்லுற நீலா, இவ பண்ணி வச்ச காரியத்துக்கு போலீஸ் வாசல மிதிச்சிட்டு வந்தாச்சு. அது போதாதுன்னு இப்ப நம்ம தலையில இடிய தூக்கி போட்டுருக்கா, தாயில்லா புள்ளன்னு பார்த்து பார்த்து வளர்த்தோமே அதுக்கு இவ நமக்கு தந்ததை பார்த்தியா?” ஆற்றாமையின் அங்கலாய்ப்பில் புலம்பினார் சிவனாண்டி.
“ப்பா, நீங்க இப்படி கோவப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யல. விக்ரம் கிட்ட பேசுங்க, உங்களுக்கே உள்ளது புரியும்.” சத்யா அவருக்கு நிதானமாக புரிய வைக்க முயன்றாள்.
“அவன் கிட்ட நான் எதுக்கு பேசணும்கிறேன்? அவன் மட்டும் என் கண்ணுல பட்டான் அன்னிக்கு தான் அவனுக்கு கடைசி நாளு பார்த்துக்க.”
“அவரை என்னப்பா பண்ணுவீங்க, கொன்னுடுவீங்களோ? எதுக்கு, நான் அவர் மேல ஆசை வச்சதுக்கா, இல்ல அவர் உங்க சாதியில வந்து பொறக்காம போனதுக்கா? எதுக்கு அவர்மேல இத்தனை ஆவேசம்? என்னை மாமாக்கு கட்டிக்கொடுக்க நினைச்சப்ப உங்களுக்கு வயசு வித்தியாசம் கண்ணுக்கு தெரியல இல்ல. இப்ப விக்ரம் வயசு மட்டும் பெருசா தெரியுதா? எனக்கு ஒன்னுன்னதும் அவர்கிட்ட தானே உதவின்னு நின்னீங்க, அப்ப அவர் சாதி, குலம், கோத்திரம் எதுவும் தேவைப்படல.”
“சத்யா பேசாம இரு.” நீலா அவளை அடக்கியும் அடங்காதவள்,
“நான் தான்ப்பா அவர்மேல மனசு வச்சேன். அவருக்கு உங்க பொண்ணு மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லன்னு சொல்லிட்டாரு. ஆனா, எனக்கு நம்பிக்கை இருக்குப்பா. எனக்கு ஒன்னுனா அவர் வந்து நிப்பாரு.” சிவந்த முகமும் கலங்கிய விழிகளுமாக அசையாத நம்பிக்கையுடன் உரைத்தாள்.
மகள் பேச்சை உள்வாங்கிய சிவனாண்டிக்கு ஆத்திரத்தில் கண்கள் சிவந்தன. கோபத்தின் வீரியத்தில் மகளை ஏதேனும் பேசிவிடுவோமோ என்று தன்னை கட்டுப்படுத்தியவர், சரவணனை திரும்பி பார்க்க, அவனது இறுகி கருத்த முகத்தை கண்டதும் நெஞ்சு பிசைந்தது.
“சரவணா, கோபத்துல அடிச்சிட்டேன்டா… என்னை மன்னிச்சிடுபா.” உடனே அவன் கைபிடித்து மன்னிப்பை வேண்டினார். பலாபலன் எதிர்பார்க்காமல் பாசத்திற்காக மட்டுமே ஓடி வரும் மச்சான் உறவை இழக்கும் தைரியம் இல்லை அவருக்கு.
சரவணன் முகத்தை அழுத்த துடைத்து விட்டு, “நான் வாங்க வேண்டிய அடி தான் மாமா. கண்மூடித்தனமா எவனையும் நம்ப கூடாதுனு என் மூஞ்சில அடிச்சு தெளிய வச்சுட்டான், என் உயிர் நண்பன்.” கசப்பாக உரைத்தவன் பார்வை சத்யாவிடம் படிந்தது.
“நான் தான் சொல்றேன் இல்ல, நான் மட்டும் தான் அவர்மேல ஆசப்பட்டேன்னு, அவர் உங்க நம்பிக்கைக்கு எந்த துரோகமும் செய்யல மாமா.” விக்ரமை அவர்கள் துரோகியாக பேசுவதை ஏற்க முடியாமல் மீண்டும் அதையே வலுவூட்டி உரைத்தாள் சத்யவர்த்தினி.
அவள் பேச்சை கழித்து விட்டவன், “முன்ன இருந்தே அவனை விரும்பறதா சொன்னல்ல, எப்ப இருந்து?” சரவணன் தன் சந்தேகத்தை கேள்வியாக வீச, அவளாலும் வெடுக்கென பதில் மொழிய இயலவில்லை. ஏதோவொன்று அவளை தாமதிக்க செய்தது.
“எங்க கல்யாணத்தைப்ப தான் அவனை முன்ன பார்த்த, அப்ப இருந்தேவா?” சரவணன் மேலும் கேட்க, அவள் மௌனமாய் ஆமோதித்து தலையசைத்தாள்.
சரவணன் பற்கள் நறநறத்தன. “இத்தனை வருசத்துல என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு தோணல இல்ல உனக்கு? அதான், யார் வீட்டுக்கும் போகமாட்டேன்னு அடமா நின்னவ, அவன் பேர் சொன்னதும் தனியா பெங்களூர் கிளம்பி போனியா?” அவன் அடுத்தடுத்த கேள்விகளில் அனல்வீச்சு கூடிக்கொண்டே போனது.
இதற்கு எப்படி அவள் பதில் உரைப்பாள்? ஆம், இத்தனை வருடங்கள் அவனை கண்ணில் கூட காணாமல் ஏக்கத்தை சுமந்திருந்தவள், வாய்ப்பு கிடைத்ததும் வேறு எதைப் பற்றியும் யோசிக்காது கிளம்பி விட்டிருந்தாள்.
சில பிரத்யேக உணர்வுகள் உயிருக்குள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு இருக்க வேண்டியவை, அவற்றை வார்த்தைகளில் வெளிக்கொண்டு வர முயன்றால், அதன் மேன்மை மொத்தமாய் அடிப்பட்டு சிதைந்து போகும். தன்னுணர்வை அப்படி வார்த்தையில் வெளிப்படுத்தி சிதைத்துக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. மௌனமாகவே நின்றிருந்தாள்.
சரவணனும் அதற்குமேல் அவளிடம் ஏதும் கேட்க பிடிக்காமல், தன் மனைவியிடம் கை காட்ட, திலகா கணவனின் கோபம் புரிந்து சத்யாவை உள்ளே அழைத்துச் செல்ல முயல, சத்யா அசையாது நின்றாள். அவள் பார்வை தன் மாமனிடம் படிந்திருந்தது.
“இது என் வாழ்க்கை தானே மாமா, என் வாழ்க்கையில என் விருப்பத்துக்கு முக்கியத்துவம் இல்லயா?” அவனிடம் தன் உரிமையை கேள்வியாக வைக்க, சரவணனின் தாடை இறுகியது.
“நீ பேசின வரைக்கும் போதும் எங்க மனசு குளுர்ந்து போச்சு. இதுக்கு மேல எதையும் பேசி வைக்காத, வா.” நீலாவதி அவளை பிடித்து அறைக்குள் இழுத்துச் செல்ல, சத்யவர்த்தினி தன் அப்பாவையும், மாமனையும் கலவரமாக பார்த்தபடியே சென்றாள்.
“தப்பு பண்ணிட்டோம் சரவணா… நம்ம புள்ள மேல கண்மூடித்தனமா நம்பிக்கை வச்சுபுட்டோம். அவ எது செஞ்சாலும் சரின்னு நாமளே அவளை ஏத்தி விட்டுபுட்டோம். இப்ப பாரு, ஆகாத காரியம் செஞ்சுக்கிட்டு வந்து நம்ம முன்னால எம்புட்டு தகிரியமா பேசறா.” சிவனாண்டி உடைந்துபோய் அவன் தோள் பற்றி கலங்கிப் புலம்பினார்.
“இந்த பொண்ணுங்க தைரியம் எல்லாம் கடைசியில இப்படி காதல்ல வந்து தான் முட்டி நிக்கும் போல. இது நமக்கு தான் தெரியாம போச்சு மாமா” அவனும் விரக்தியாக உரைத்தான். இரத்த பாசமும், உற்ற நட்பும் பொய்த்துப் போன விரக்தி நிலை அவனையும் பதம் பார்த்திருந்தது.
“இப்ப மேக்கொண்டு என்னயா செய்யறது? மாப்பிள வீட்டுக்கு என்னனு பதில் சொல்றது? வர முகூர்த்தத்துல நாள் குறிச்சு எல்லாத்துக்கும் சம்மதம் சொல்லிட்டேனே! இவ கூத்து வெளிய தெரிஞ்சா நாக்க புடிங்கிட்டு தொங்க வேண்டியது தான்.” மனதின் அழுத்தம் தாளாமல் தலைபாரம் கூடிப்போக, கூடத்து கம்பத்தில் சாய்ந்து தலையை பிடித்தபடி கீழே உட்கார்ந்து விட்டார் சிவனாண்டி.
சரவணவேலு ஏதும் பதில் தராமல் தீவிர யோசனையோடு நின்றிருந்திருந்தான்.
“ஆனா ஒன்னு சரவணா, நீயே மனசு மாறி கேட்டாலும் அந்த நாதியத்தவனுக்கு என் பொண்ண தரமாட்டேன். ஆமா கவனத்துல வச்சிக்கோ!” அவர் மேலும் ஆவேசமாக உரைக்க,
தலை திருப்பி அவரை நோக்கியவன், “என் நம்பிக்கைய கொன்னவனுக்கு நம்ம பொண்ண கொடுக்க நான் சம்மதிப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா மாமா?” என கேட்டு மறுப்பாக தலையசைத்து, “குறிச்ச முகூர்த்தத்துல குட்டிமா கல்யாணத்தை முடிங்கணும் மாமா. இதுக்கு மேல நம்மால பின்வாங்க முடியாது. கல்யாண ஏற்பாட்ட ஆரம்பிக்கலாம். எழுந்திருங்க.” ஒரு முடிவோடு உரைத்தான்.
“அதெப்படியா முடியும்? நான் பெத்து வச்சிருக்கவ அகம்புடிச்சவளாச்சே! வீம்புக்கு ஏதாச்சும் செஞ்சி ஊர் முன்னால நம்ம மானத்தை சந்தி சிரிக்க வச்சிட்டானா என்ன செய்ய முடியும் நம்மால?” மகளின் பிடிவாத குணம் அவரை மிரட்டி பார்த்தது.
“நம்ம குடும்பத்துக்கு அவமானத்தை தேடித்தர மாதிரி குட்டிமா எதுவும் செய்யமாட்டா மாமா, எனக்கு நம்பிக்கை இருக்கு.” சரவணன் சமாதானம் கூற, அவர் பார்வை அவனில் கொக்கி இட்டது.
“இதுக்கு மேலையுமா அவளை நம்பிகிட்டு கிடக்க?”
“இப்பவும் குட்டிமாவ நம்புறேன் மாமா, ஏன்னா அவ தெய்வா அக்காவோட வார்ப்பு. அவ இரத்தம் நம்ம மீறி போக துணியாது.” அவன் அறுதியிட்டுக் கூறினான்.
சிவனாண்டி பெருமூச்சுடன் எழுந்து நின்றவர், “அந்த பெங்களூர்காரன் மட்டும் குறுக்க வந்து ஏதாச்சும் பிரச்சனை பண்ணான்னு வை, அவனை வெட்டி போட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பேன். அவன நம்பினதுக்கு என் ரத்தம் கொதிக்குதுடா!” கொதிப்புடன் வஞ்சினம் உரைத்தார்.
“அவன் வரமாட்டான் மாமா, அவனை என்கிட்ட விடுங்க, நான் பேசிக்கிறேன்.” சரவணன் முடிவாக சொன்ன கையோடு கைப்பேசியை அழுத்தியபடி அங்கிருந்து அகன்றான்.
சிவனாண்டியும் தன் கோபத்தை தாண்டி, மகளின் திருமணம் எந்த அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிய வேண்டுமே என்ற நப்பாசையுடன் மனதில் வேண்டிக் கொண்டார்.
***
சரவணவேலு அழைப்பெடுத்ததும், எதிர்முனையில் அழைப்பை ஏற்ற விக்ரம், “சொல்லுடா நல்லவனே, சண்டே எப்படி போகுது?” வழக்கமான கேலியோடு பேச்செடுக்க,
“சத்யா உன்ன விரும்பறது உனக்கு தெரியுமா?” சரவணன் கேள்வி கொந்தளிப்புடன் அவன் செவியில் மோதியதில், விக்ரம் நேர் நிமிர்ந்து அமர்ந்தான்.
“என்னாச்சு சரவணா?”
“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. அவ உன்ன விரும்பினது உனக்கு தெரியுமா, தெரியாதா?” அவன் குரல் உயர்ந்து கடுத்தது.
“தெரியும் டா. ஆனா, நீ நினைக்கற மாதிரி தப்பா எதுவுமில்ல…”
“தப்போ சரியோ என்கிட்ட ஏன்டா முதல்லயே சொல்லல?” தான் அதீதமாக நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டது அவனை பெரிதாக பாதித்தது.
நண்பனின் குற்றம் சாட்டும் தொனியில் விக்ரமின் அடி நெஞ்சில் ஒருவித நடுக்கம் பரவிட, “அப்ப அவ சின்ன பொண்ணுடா, ஏதோ விவரம் புரியாம காதல்னு வந்து சொன்னா. அப்பவே இதெல்லாம் லவ் இல்ல ஜஸ்ட் அபக்ஷன்னு புத்தி சொல்லிட்டு தான் வந்தேன். அதோட என்னை மறந்துடுவான்னு நினைச்சேன். இதெல்லாம் உன்கிட்ட சொல்லி காம்ப்ளிகேட் ஆக்க வேண்டாம்னு தான்…” தன் தரப்பு நியாயங்களை வரிசை பிறழாமல் விளக்கிக் கூற,
“அப்ப நீ ரொம்ப நல்லவன்னு சொல்ல வர?” என திருப்பி கேட்ட சரவணனுக்கு கோபத்தின் வீச்சில் தேகம் நடுங்கியது.
“நீ ஏதோ தப்பா புரிஞ்சிட்டு பேசற சரவணா, முதல்ல நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு அப்புறம் நாம பொறுமையா பேசலாம்.” விக்ரம் அவனை நிதானப்படுத்த நினைக்க,
“என்னடா பொறுமையா பேசறது? நம்பிக்கை துரோகி! சத்யாவ உன் வீட்டுக்கு அனுப்ப கேட்டேனே, அப்பவாவது உங்க ரெண்டு பேருக்குள்ள இப்படியொரு விசயம் ஓடுதுன்னு சொல்லி இருக்கணுமா இல்லயா நீ? என்னை முட்டாளாக்கிட்டியே டா? என்னையே கூட்டிக்கொடுக்க வச்சிட்ட இல்ல?”
“போதும் நிறுத்து சரவணா…” விக்ரம் குரல் உயர்த்தி கத்தி விட்டான்.
ஆத்திரத்தின் வேகத்தில் இருவருக்குமே மூச்சிறைத்தது.
எச்சிலை கூட்டி விழுங்கி தன்னை நிதானப்படுத்திய விக்ரமன், “ரெண்டு நிமிஷம் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு. அதுக்கப்புறம் என்னை தப்பு சொல்லு. ஆறு வருசத்துக்கு முன்னாடி உன்னோட கல்யாணத்தப்ப அவ உளறி வச்சதுடா. அதை நானே மறந்துட்டேன். அவளும் மறந்து போய் இருப்பான்னு தான் நினைச்சேன். அவ இங்க வரதையும் நான் சாதாரணமா தான்டா எடுத்துக்கிட்டேன். அவ இத்தனை வருசமா என்னை மனசுல வச்சிருக்கறது… சத்தியமா எனக்கு தெரியாதுடா. தெரிஞ்சிருந்தா நானே…”
“தெரிஞ்சிருந்தா என்னடா செஞ்சு இருப்ப?” அவனை முழுதாக பேசவிடாமல் சரவணனின் கேள்வி குறுக்கே பாய்ந்தது.
“சரவணா…” விக்ரம் குரல் கண்டனமாக எச்சரிக்க,
“தெரிஞ்சிருந்தா நீயே ரூட் விட்டிருப்பல்ல?” அவன் குதர்க்கமாக கேட்டான்.
“மறுபடி மறுபடி வார்த்தைய விடுற சரவணா” விக்ரம் அவனை எச்சரித்தான்.
“எனக்கு உன்மேலயும் டவுட்டா இருக்குடா. சத்யாவ நினைச்சிட்டு தான் இத்தனை வருசம் கல்யாணத்தை தள்ளி போட்டிருக்கல்ல.” சரவணனின் பேச்சு ஒவ்வொன்றும் கொல்லனின் சுடுகொம்பு போல வெப்பம் தகித்து இறங்கியது.
“நான் அப்படிப்பட்டவன்னு நீ யோசிக்கிறியாடா?” விக்ரம் கேள்வியும் அதே தகிப்புடன் வெளிவந்தது.
“ஆமாடா, நீ அப்படிப்பட்டவன் தான். தாலி கட்டி பொண்டாட்டின்ற உரிமைய கொடுக்கறதுக்கு முன்னால உன்ன கொடுத்துட்டு செத்து போனவன்தான உன் அப்பன். உனக்குள்ளயும் அந்த இரத்தம் தானே ஓடுது. உன் அப்பன் புத்தி தான உனக்கும் வரும்...” சரவணன் ஓங்கி வீசிய பழி சொல்லில், விக்ரம் மொபைலை சுவற்றில் விசிறி அடித்திருந்தான். அது சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறி உயிரை விட்டிருந்தது.
இப்படியொரு பழிச்சொல்லை, அதுவும் தன் நண்பனின் வாயிலிருந்து அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. தன்னுள் எழும் சீற்றத்தை கட்டுப்படுத்த இயலாமல் அவன் தலை இரண்டாய் பிளந்துவிடுவது போன்ற வேதனையை தந்தது.
அவனால் நிற்க முடியவில்லை, நடக்க முடியவில்லை, உட்காரவும் முடியவில்லை. தன் அலுவலக அறைக்குள்ளேயே இப்படியும் அப்படியும் வெறி பிடித்தவன் போல நடந்தவனுக்கு, தன்னை கட்டுப்படுத்தும் மார்க்கம் மட்டும் புரியவில்லை. நண்பன் தந்த பழி சொல்லை ஜீரணிக்கவே முடியாமல், அந்த நொடியே எரிந்து சாம்பலாகி காற்றில் கலந்து தடமற்று மறைந்து மாயமாகிவிட்டால் தேவலாம் என்றிருந்தது. அத்தகைய சக்தி அவனுக்கில்லையே!
புயலை போல அங்கிருந்து வெளியேறியவன், அதே வேகத்தில் தன் பைக்கை உறும விட்டு, முழு வேகத்தில் சாலையில் பாய்ந்து பறந்தான்.
மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டதை உணர்ந்த பிறகுதான் சரவணனும் தன் வார்த்தைகள் எல்லை தாண்டி போனதை உணர்ந்தான். அவன் இவ்விதம் பேச நினைக்கவில்லை. வார்த்தை தவறிவிட்டது. தவறிய வார்த்தைகள் மீண்டும் வாய் திரும்ப வழியில்லையே. அவை சிதறியது சிதறியது தான், மீண்டும் அள்ளிச் சேர்க்க இயலாது.
நம்பிக்கை என்பது காட்டாற்றின் தடுப்பு கறை போல, அதன் உறுதி நிலைக்கும் வரை வெள்ளமும் அடங்கி ஓடும். நம்பிக்கையின் உறுதி உடைய நேர்ந்தால், கறையை அடித்துச் செல்லும் வெள்ளப்பெருக்கின் அதகளம் போல, மனிதனின் மனங்களும் குணங்களும் சிதறி சின்னாபின்னமாகி போய்விடுகிறது.
‘நேற்று வரை கீச்சுக்களின்
சலசலப்பில்
கலகலத்திருந்த
கிணற்றடி பூமரத்தின்
தூக்கணாங் குருவிக்கூடு
இன்று வெறுங்கூடாக
சூரைக்காற்றில் தள்ளாடுகிறது!’
***
நன்றி ஃபிரண்ட்ஸ் 🫶🫶🫶
உடனுக்குடன் உங்கள் வாட்ஸ்அப்பில் இந்த கதைக்கான அப்டேட்ஸ் பெற yuva karthika what's app சேனலை follow செய்யலாம் link சலசலப்பில்
கலகலத்திருந்த
கிணற்றடி பூமரத்தின்
தூக்கணாங் குருவிக்கூடு
இன்று வெறுங்கூடாக
சூரைக்காற்றில் தள்ளாடுகிறது!’
***
நன்றி ஃபிரண்ட்ஸ் 🫶🫶🫶
Yuva Karthika Novels | WhatsApp-kanava
Käyttäjän Yuva Karthika Novels WhatsApp-kanava. Tamil novels, stories, updates. 100 seuraajaa
whatsapp.com
எனது அனைத்து கதைகளையும் ஆடியோ நாவலாக, Yuva karthika audio novels YouTube சேனலில் கேட்டு ரசிக்கலாம் link
Yuva Karthika Audio Novels
Tamil audio novels @ykaudionovels நான் யுவகார்த்திகா. இங்கு என் கதைகளை ஒலி புத்தகமாக கேட்டு ரசிக்கலாம்.
youtube.com
Last edited: