காதலாடுகிறது எந்தன் நெஞ்சம்
அத்தியாயம் 18
சத்யவர்த்தினி மனம் வெதும்பி போயிருந்தாள். விக்ரம் மேல் தான் கொண்ட நேசத்தை இப்படி அனைவரின் முன்பும் போட்டுடைக்க நேரிடும் என்று அவளும் நினைக்கவில்லை. அந்த சூழ்நிலையின் அழுத்தத்தில் தன்னால் வெளிவந்து விட்டது. அப்பாவின் கோபம் அவளுக்கு நியாயமாகவே பட்டாலும், அவர் மாமாவை அடித்தது அவளுக்கும் அதிர்ச்சி தான்.
தான் அறை வாங்கியதைப் பற்றி அவளுக்கு கவலை இல்லை. இருபுறமும் புடைத்திருக்கும் கன்னங்களின் வலியும் அவளுக்கு பெரிதில்லை, இனி என்ன நேருமோ என்ற பரிதவிப்பு அவளை அதிகம் வாட்டியது.
விக்ரம் அவள் காதலை ஏற்றிருந்தால் இதற்கெல்லாம் கவலைபட்டிருக்க மாட்டாள். அவனும் முரண்டு பிடிக்கும் இந்நிலையில் திடுமென இந்த திருமண ஏற்பாடு அவளை பதற்றமாக்கி இருந்தது. விளைவு, இத்தனை வருடங்கள் ரகசியமாய் பொத்தி வைத்திருந்த காதலை போட்டுடைத்து விட்டாள். இனி, அடுத்து அப்பா என்ன முடிவெடுப்பார் என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை.
எப்படி இருந்தாலும் விக்ரமை மறந்து வேறு வாழ்வை பற்றி அவளால் யோசிக்க முடியாது. தன்னுள் இரண்டற கலந்திருப்பவன் நினைவை எவ்விதம் பிரித்தெடுக்க?
அவள் கணிப்பின் படி, இந்நேரம் விக்ரமனுக்கு இங்கு நடந்த அனைத்தும் தெரிய வந்திருக்கும். ஆனாலும் இன்னும் அவன் தன்னை அழைத்து திட்டாதது அவளுக்கு அவஸ்தையாக இருந்தது. எப்படியும் அவன் திட்டத்தான் செய்வான் என்பதில் அவளுக்கு நிச்சயம் தான். அவனிடம் காதலை எதிர்பார்த்து இப்போது இவள் தான் விரக்தி நிலைக்கு வந்திருந்தாள். ஆனாலும் அவனை தவிர்த்து வேறு யோசிக்க முடியவில்லை. எல்லா முட்டாள் தனங்களிலும் முதன்மையானது இந்த காதலாகத்தான் இருக்கும் போல. வேண்டாம் என்று மறுப்பவனிடமே வெட்கமில்லாமல் விரும்பி ஓடுகிறது என, தன் மனதை நொந்து கொண்டாள்.
அவன் அழைப்புக்கான காத்திருப்பு மணி கணக்கில் நீள, இவளே பொறுமை இழந்து விக்ரமிற்கு அழைப்பெடுத்தாள். இணைப்பு போகவே இல்லை. மறுபடி மறுபடி முயன்றவளுக்கு பயம் கவ்வியது.
யோகினியின் எண்ணை தேடி எடுத்து அவளுக்கு அழைத்தாள். உடனே எடுத்த யோகினி, “ஹலோ சத்யா” எனவும்,
“யோகி, உங்க விக்கி சார் என்ன பண்றாரு. நான் கால் பண்ணா எடுக்கவே இல்ல.”
“அது எப்படி எடுப்பாரு, அவர் ஃபோன் தான் தூள்தூளா உடஞ்சி கிடக்கே.”
“என்ன சொல்ற யோகி?”
“எனக்கும் சரியா தெரியல சத்யா, சார் காலையில ரொம்ப கோபமா வெளிய போனாரு, அவர் ரூம்ல மொபைல் உடஞ்சி கிடந்தது. இப்ப வரைக்கும் அவர் திரும்பி வரவே இல்ல. என்னாச்சு, எங்க போனாருன்னு, இங்க யாருக்கும் தெரியல.” அவள் வருத்தமாய் சொல்ல, தன் செயலால் அதீத கோபம் கொண்டிருக்கிறான் போல என்று எண்ணி, பெருமூச்செறிந்தாள்.
“சரி யோகி, உங்க சார் வந்ததும் எனக்கு இன்பார்ம் பண்றீங்களா ப்ளீஸ்...”
“கண்டிப்பா சத்யா, எங்க வருங்கால பாஸுக்கு இது கூட செய்ய மாட்டேனா?” யோகினி சிரிப்புடன் கூற,
“ம்ம்” வெறும் ஊம் கொட்டலுடன் வைத்தாள் சத்யவர்த்தினி.
அப்படியே படுக்கையில் சுருண்டு படுத்தவளின் இமையோரம் இரு துளி கண்ணீர் சொட்டியது. ‘உனக்கு என்னை புரியவே புரியாதா விக்ரமா...” பெண் மனம் ஏக்கத்தில் வெம்பியது.
அவளுக்கு முற்றிலும் மாறாக, அவமானத்தின் கனகனப்பில் வெந்து கொண்டிருந்தான் விக்ரமாதித்தன்.
‘நம்பிக்கை துரோகி! உன் அப்பன் புத்தி தான உனக்கும் வரும்!’
சரவணனின் ஒவ்வொரு பழிச்சொல்லும் அவனை நெருப்பின் நடுவே நிற்க வைத்திருந்தது. கண்ணியம், ஒழுக்கம், கட்டுப்பாடு என கோடிட்டு வாழ்ந்து வருபவனால் இந்த குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லை. இதற்கு காரணமானவளை என்ன செய்தால் தகும் என்ற கோபம் எழுந்தது.
அவளை ஒன்றும் செய்ய தோன்றாமல், அன்று முழுவதும் ஏதோவொரு சாலையோர மர நிழலில் பைக்கில் சாய்ந்து இருந்தவனுக்கு, இருட்ட தொடங்கியதும் தான் சற்று நிதானம் மீண்டிருந்தது. வண்டியை எடுத்து மிதமான வேகத்தில் விடுதிக்கு திரும்பினான்.
அவனுக்கு நினைவு தெரிந்த போதிலிருந்தே அவனது பிறப்பு தொடர்ந்து மற்றவர்களின் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றது. அது இளம்பிராயத்திலேயே அவனுக்குள் ஆறாத ஆழமான தழும்பை உருவாக்கி இருந்தது. அந்த கரும்புள்ளியில் இருந்து அவன் விலகி ஓடவே முயல்கிறான், ஆனாலும் அதிலேயே நிற்கிறான். அது தானே அவன் ஆரம்பப்புள்ளி, அதிலிருந்து அவனால் எங்கு ஓடி ஒளிய முடியும்? அவன் பிறப்பின் அடையாளத்தை எவ்விதம் அவனால் மாற்றியமைக்க முடியும்?
அவன் சுயம்பு. எப்போதுமே அவனுக்கென்று யாரும் இருந்ததில்லை. நினைவு தெரிந்த வயதிலிருந்தே தனித்து போராடி மேலேறி வந்தவன், தனிமையின் கோரப்பிடியில் நசுங்கி தத்தளித்து, இப்போது அந்த தனிமையையே தன் அடையாளமாக மாற்றிக் கொண்டவன்.
அவனும் பிள்ளை பருவத்தில் அம்மா, அப்பா அன்புக்காக ஏங்கியவன் தான், இளமை பருவத்தில் தனக்கான குடும்ப வாழ்க்கை கனவுகளை சேமித்தவன் தான். அவனது ஏக்கங்கள், கனவுகள் எல்லாம் அடுத்தடுத்து சிதறி கலைந்து போக, அப்போதே முடிவெடுத்து விட்டான், தனக்கென யாரும் வேண்டாம் என்று.
‘தனித்து வளர்ந்தேன், தனித்தே வாழ்ந்துவிட்டு போய்விடுகிறேன்! எனக்கும் என் தனிமைக்கும் இடையில் எந்த இடையூறும் வேண்டாம்!’ என்பது அவனது ஆணித்தனமான எண்ணம். அதில் இதுவரை அவன் மாறியதில்லை.
பிறப்பிலிருந்து அவன் அனுபவித்த உதாசீனங்கள், வறுமை, இல்லாமை, போதாமை அனைத்தும், தன் வாழ்க்கை தரத்தில் தான் உயர்ந்து காட்ட வேண்டும் என்ற வீம்பை அவனுக்கு தந்திருந்தது. அந்த உத்வேகத்தில் இன்று நிமிர்ந்து நிற்கிறான்.
இப்போது அவன் முழுமையான மனிதன். வெற்றியாளன். ஆனாலும் அவன் யாரையும் அண்ட விடவில்லை. முன்பு கனத்த தனிமை, இப்போது அவனுக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது. நிறைவான ஆசுவாசத்தை தருகிறது. இந்த பூரணத்துவத்தோடு வாழ்ந்து மடிந்துவிட வேண்டும் என்ற பேராசை அவனுக்கு.
அவனுக்கு உறவென்று யாரும் இல்லை எனினும் நட்பை உயிராக மதிப்பவன். சரவணவேலு முதல் பாலநாதன் வரை வயது வித்தியாசங்களின்றி நட்பை பேணி காப்பவன். இதில் சரவணன் நட்பு தனித்துவமானது. அவனுக்கு மிகவும் நெருக்கமானதும் கூட. அவனிடமிருந்து வந்த அவச்சொல்லை அவனால் இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை. இனியும் முடியும் என்றும் தோன்றவில்லை. கோபம், ஆத்திரம் எல்லாம் குறைந்து இப்போது அவனிடம் வெறுமை உணர்வு மட்டுமே அழுத்தி இருந்தது.
விக்ரம் வந்த சில நிமிடங்களில் யோகினி அவன் முன் வந்து நின்றாள். அவன் கேள்வியோடு நிமிர, “விக்கி சார்... சத்யா உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க...” அவள் தன் மொபைலை அவனிடம் நீட்ட, அவன் அதை வாங்கவில்லை.
“இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் யோகி, இதுக்கப்புறம் நீ சத்யா பேரை சொல்லிட்டு வந்த, உனக்கு இங்க வேலை இருக்காது.” அவன் எச்சரிப்பில், யோகினி அதிர்ச்சியானாள்.
“சார்...”
“போய் ஒழுங்கா வேலைய பாரு.” விக்ரம் உத்தரவிட, வெளியே வந்து விட்டாள்.
அவன் பேச்சு அனைத்தும் மறுமுனையில் சத்யாவும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். “சாரி யோகி, நான் உங்கள திட்டு வாங்க வச்சுட்டேன். இனி உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன். தேங்க்ஸ்.” என இணைப்பை துண்டித்து கொண்டாள்.
இனி என்ன? என்ற அவள் சிந்தனை அவனை தாண்டி நகர மறுத்து அப்படியே தேங்கி நின்றது. ஆனால் அவனுக்கோ, அவளை தவிர மற்ற யோசனைகள் வரிசை கட்டி நின்றன.
***
தன் வீட்டில், தன் அறையில், நெற்றியை பிடித்தபடி கலங்கிப் போய் உட்கார்ந்திருந்தான் சரவணவேலு.
விக்ரமனுடன் இவனது நட்பு எதிர்பாராமல் நிகழ்ந்தது.
அன்று, இளமையின் துடிப்பில் கண்மண் தெரியாத வேகத்தில் பைக்கை ஓட்டிச் சென்று சிறு கவனக்குறைவில் நிலைதடுமாறி சறுக்கி விழுந்து, இரத்தக் காயத்துடன் சாலையில் உயிருக்கு போராடி துடித்திருந்தான் சரவணன். அந்நிலையில் அவனை சுற்றிலும் மனித முகங்கள்... அதில் யாருமே அவனுக்கு உதவ முன்வரவில்லை. இவனுக்கு உயிர் மூச்சு பதைபதைக்க, அப்போது யாரோ ஒருவன் அவனை அள்ளி தூக்கினான்.
மயக்கத்தில் அமிழ்த்திய இமைகளை அழுத்தி திறந்து பார்த்தான் சரவணன். தனக்கான பதற்றத்தை ஏந்தி இருந்த விக்ரம் முகம் தெரிந்தது. “உங்களுக்கு பெருசா அடியில்ல ப்ரோ, பயப்படாதீங்க. பத்தே நிமிஷம், ஹாஸ்பிட்டல் போயிடலாம்.” இவனுக்கு நம்பிக்கை சொன்னவன், “அண்ணே, சீக்கிரம் ஆட்டோ எடுங்க.” என்று அவசர குரலில் ஓட்டுநரை விரட்டுவதும் அவன் செவியில் விழுந்தது. அத்தோடு நினைவு தப்பி இருந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து அவனுக்கு நினைவு திரும்பிய போதுதான் தான் இன்னும் உயிருடன் இருப்பதையே சரவணனால் உணர முடிந்தது. அவனை சரியான நேரத்திற்கு மருத்துவமனையில் சேர்த்தது மட்டுமின்றி, இருவருக்கும் ஒரே வகை இரத்தப் பிரிவு என்பதை அறிந்து விக்ரம் அவனுக்காக இரத்தம் கொடுத்துவிட்டு சென்றதையும் அங்கிருந்த செவிலியிடம் கேட்டு அறிந்தவனுக்கு, அவன்மேல் நன்றி உணர்வு பெருகிற்று. அந்த நன்றி உணர்வால் அவர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நட்பாக வளர்ந்திருந்தது.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வந்த நட்பு, இன்று இப்படி சிதறிப்போகுமென அவன் எண்ணியிருக்கவே இல்லை. என்ன கோபம் இருந்தாலும் தானே தறிக்கெட்டு வார்த்தைகளை தவறவிட்டது, அவனை குற்ற குறுகுறுப்பில் வறுத்தெடுத்தது.
ஊரிலிருந்து வந்ததிலிருந்து கணவன் இப்படி அமர்ந்திருப்பதை பார்த்து திலகாவின் உள்ளமும் கலங்கியது.
தன் தோளில் ஆதரவாக கை வைத்தவளை நிமிர்ந்து பார்த்தவன், அவள் வயிற்றில் முகம் புதைத்து இடையோடு கட்டிக் கொண்டான்.
சரவணனின் பொசுக்கென்ற இந்த அணைப்பு திலகாவை திடுக்கிடச் செய்தது. ஆசையாய் அணைப்பது வேறு, இப்படி ஆறுதல் நாடி அணைப்பதெல்லாம் இதுவரை நேர்ந்ததில்லை. சரவணவேலு அத்தனை எளிதில் உடைபவனோ, அல்லாடுவனோ இல்லை. தன் கணவனை அத்தனை திடமானவனாக எண்ணி இருந்தவளுக்கு அவனின் இந்த நிலை பெரும் வேதனையை தந்தது.
“வயசுல பெரியவரா இருந்தா அறிவுன்னு ஒன்னு வேணாமா? கோபம் வந்தா எல்லாமே கண்ணு மறைச்சிடுமா? எப்படி அவரு உங்கள கை ஓங்கலாம், அதுவும் எங்க கண்ணு முன்னாடியே. அவர் பொண்ணு காதலிச்சதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? எனக்கு மனசே ஆறலங்க… அவங்களுக்காக பார்த்து பார்த்து எவ்வளோ செஞ்சிருப்பீங்க. அதையெல்லாம் அப்பாவும் மகளும் கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தாங்களா?” திலகாவிற்கு மனம் தாளாமல் புலம்பி கலங்கி, தன்னவனை தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.
சரவணவேலு பெருமூச்செறிந்தான். அவள் முதுகை ஆதரவாக தட்டி கொடுத்தவன், “திலோ, என் மாமன் கையால அறை பட்டதுல என் கிரீடம் இறங்கி போகாது. அவருக்கு என்மேல எல்லா உரிமையும் இருக்கு. கோபத்துல கை நீட்டினவரு, அது தீர்ந்ததும் என் கைய புடிச்சிட்டு மன்னிப்பு கேட்டருல்ல. அது தான்டி என் மாமன். வெள்ளந்தி மனுசன். என்ன கொஞ்சம் வீராப்பு ஜாஸ்தி.” தன் மாமனை பற்றி உணர்வுபூர்வமாக உரைத்தான்.
“நல்லா தான் மாமன் புராணம் பாடுறீங்க, அப்பறம் ஏன் அவரு கையால அடி வாங்கினதுக்கு இப்படி உடைஞ்சு போய் உக்கார்ந்து இருக்கீங்கலாம்?” அவன் சமாதானம் கூட அவளை கவலை படுத்தியது.
“மாமா அடிச்சதை நினைச்சு நான் கவலைபடல. குட்டிமாவும், விக்ரமும் என் கழுத்துல கத்தி வச்சிட்டாங்களே… அதை தான் என்னால தாங்கவே முடியல திலோ. எவ்வளோ நம்புனேன் அவன… என் உசுர காப்பாத்தினவன்னு அவன்மேல மொத்த நம்பிக்கையும் கொட்டி வச்சேன். எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா சிதைச்சிட்டான். கொஞ்சங்கூட தப்பா யோசிக்காம குட்டிமாவ அவன் கிட்ட அனுப்பி வெச்சேன். அதுக்கு, ரெண்டு பேரும் சேர்ந்து என் முதுகுல குத்தி, முகத்துல கரிய பூசிட்டாங்க.” கசந்து மொழிந்த சரவணவேலு அவளிடமிருந்து விலகி நெற்றியை அழுத்திக் கொண்டான். மனதின் ஆற்றாமை, வேதனை, தவிப்பு அவனை விடாமல் வதைத்துக் கொண்டிருந்தது.
கணவன் வேதனையை தனக்கானதாக தாங்கியவள், அவன் நெற்றியை பிடித்து மெதுவாக அழுத்திக் கொடுத்தாள். அவனுக்கும் அவள் சேவை தேவையாக இருந்தது, தன் தலையை அவள் கைகளுக்கு வாகாய் கொடுத்து கண்கள் மூடினான்.
“நீங்களும் பெரியப்பாவும் உங்க இடத்துல நின்னுகிட்டு அவங்க மேல குற்றம் சுமத்துறீங்க. ஒரு நிமிசம் அவங்க இடத்துல நின்னு யோசிச்சு பாருங்களேன்.” திலகா மெதுவாக சொல்ல,
“என்ன யோசிக்க சொல்ற?” அவன் கேள்வியும் வெறுப்பு தடவியே வந்தது.
“சத்யாவ பத்தி யோசிங்க. அவ இடத்துல நின்னு பாருங்க. நம்ம கல்யாணத்துல தான் சத்யா, விக்ரம் அண்ணாவ சந்திச்சதா சொன்னீங்க. அப்படி பார்த்தா நமக்கு கல்யாணமாகி ஆறரை வருசம் ஆச்சு. இத்தனை வருசம் கடந்தும் அவ மனசுக்குள்ள விக்ரம் அண்ணாவ தான் நினச்சிட்டு இருக்கான்னா, இனி நீங்க சொல்லியோ, யார் சொல்லியோ அவ மனசு மாற போறதில்ல.”
“அதுக்கு…” தன் நெற்றி பிடித்திருந்த அவள் கரங்களை தட்டிவிட்டு நிமிர்ந்தவன், “அந்த துரோகி விக்ரமையே அவளுக்கு கட்டி வைக்க சொல்றீயா?” கோபமாக கேட்டான்.
திலகாவிற்கும் கோபம் வந்தது. “அண்ண என்ன துரோகம் செஞ்சிட்டாருன்னு இப்படி குதிக்கிறீங்க? இத்தனை வருசம் அவரு கல்யாணம் கட்டிக்காம தனியா இருக்காரேன்னு நீங்க தான பொலம்பி தவிச்சீங்க?”
“அவங்களுக்குள்ள நடந்த எல்லாத்தையும் என்கிட்ட மறச்சிருக்கான். இது துரோகம் இல்லயா? அவன் ஒத்தயில நிக்கிறான்னு என் அக்கா மகளை அவனுக்கு கட்டி வைக்க முடியுமா, ரெண்டு பேருக்கும் எவ்வளோ வயசு வித்தியாசம்னு புரியுதா? உன்னால எப்படி அவங்களை ஜோடி சேர்த்து பார்க்க முடியுது? ச்ச!” சரவணனுக்கு அவர்களை இணையாக நிறுத்தி பார்க்கவே ஒம்பவில்லை.
“என்ன மறச்சாரு? சத்யா தான் தெளிவா சொல்றாளே, இவ தான் அவர்மேல ஆசைப்பட்டாளாம், அண்ண இவளை விலக்கி தான் வச்சிருக்காரு. இத்தனை வருசத்துல விக்ரம் அண்ணாவோட ஃபோன்ல கூட பேசனதில்லன்னு சொல்றா. அவர் இவ நம்பரை அப்பவே பிளாக்ல போட்டு இருந்தாரு போல, இவ அனுப்புன எந்த மெசஜ்க்கும் ரிப்ளே வரவே இல்ல. போன வாரத்துல இருந்து தான் அண்ணாவோட மெசேஜ், கால் அக்சப்ட் ஆகி இருக்கு. நான் சத்யாவோட போன எடுத்து ஃபுல்லா செக் பண்ணிட்டேன்.” திலகா தான் ஆராய்ந்து அறிந்ததை உரைக்க,
“கடைசியில நான் குட்டிமாவ பெங்களூர் அனுப்பணும்னு யோசிச்சு செஞ்சது தான் தப்பா போச்சில்ல… நான் அப்படி செய்யாம இருந்திருந்தா…” அவன் தன்னையே நொந்து சொல்ல,
“அப்பவும் எதுவும் மாறி இருக்காதுங்க. சத்யாவோட பிடிவாதம் பத்தி தான் தெரியுமில்ல. அவளும் விக்ரம் அண்ணாவ விட்டு வேற யாரையும் கட்டிக்க சம்மதிச்சு இருக்க மாட்டா. கடைசியா இன்னைக்கு காலையில வெடிச்சு சொன்னா பாருங்க அதே போல தான் உடைச்சு சொல்லி இருப்பா. அப்பவும் நீங்க இப்படித்தான் ஷாக் ஆகி அல்லாடி இருப்பீங்க.” திலகா அடித்துச் சொன்னாள்.
சரவணன் இருப்பு கொள்ளாமல் எழுந்து குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அவனால் எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை. நட்பிற்கும், பாசத்திற்கும் நடுவே இடிப்பட்டு அவன் குழம்பிய நிலையில் இருந்தான்.
அவனுக்கு மாறாக திலகா குழப்பம் இன்றி பேசினாள். “அவங்க வயசு வித்தியாசத்தை பத்தி சத்யாவே பெருசா நினைக்கலை, நீங்க யோசிச்சு குழம்பறதெல்லாம் வேஸ்ட்ங்க. அவ மனசுல விக்ரம் அண்ணா இருக்கறாருன்னு தெளிவா சொல்லிட்டா. இதுக்குமேல அவளை வற்புறுத்தி வேற கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல. நீங்களே அடிக்கடி சொல்லுவீங்களே, குட்டிமா எதுக்கும் துணிஞ்சவ, யாருக்கும் அடங்காதவன்னு. இதுக்குமேல நான் சொல்ல எதுவுமில்ல. எப்பவும் போல உங்க ஃப்ரண்ட் கூட பேசி இந்த பிரச்சனைக்கும் நல்ல முடிவு எடுங்க.” என்றவள் தன் மகள்களை கவனிக்க சென்றுவிட்டாள்.
அவள் இறுதியாக, ‘உங்க ஃப்ரண்ட் கூட பேசி…’ என கொட்டு வைத்து சென்றதில் சரவணன் பற்களை நறநறத்து அமர்ந்திருந்தான். ஆம், அவனுக்கு ஒவ்வொரு விசயத்தையும் நண்பனிடம் ஆராய்ந்து அலசி முடிவெடுப்பது கிட்டத்தட்ட பழக்கமாகி இருந்தது. குறிப்பாக குட்டிமா பற்றிய விசயங்கள் என்றால், விக்ரமை தவிர வேறு யாருடனும் அவனால் ஆலோசிக்க முடியாது. அவள் எந்த கல்லூரியில், என்ன பாடப்பிரிவில் படிக்க வேண்டும் முதற்கொண்டு, அவள் பிறந்த நாளுக்கு என்ன உடை வாங்கலாம், என்ன நகை வாங்கலாம் என்பது வரைக்கும் விக்ரமிடம் ஆலோசித்தே இதுவரை செய்து வந்தான். கூடுமானவரை விக்ரம் ஆலோசனைகள் சரியானதாகவே இருந்திருக்கின்றன வேறு.
இதையெல்லாம் எண்ணிப் பார்த்தவனுக்கு, தானே அவர்கள் இருவருக்கும் இடையில் மெய்நிகர் (virtual) பாலமாக இருந்து தொலைத்திருக்கிறோமே என்று தன்மீதே ஆத்திரமும் கோபமும் கிளர்ந்தது.
அன்றைய இரவு அவர்களுக்கு பல குழப்பங்களுடனும் ஆற்றாமை வேதனையுடனும் நீண்ட இரவாக கழிந்திருக்க, அசாத்திய மௌன நிலையில் புலர்ந்தெழுந்தது மறுநாள் விடியல்.
விக்ரம் தன் அன்றாட மிதிவண்டி பயிற்சியை முடித்து வந்து, அடுப்பில் பால் பாத்திரத்தை ஏற்றி வைத்து தனக்கான காபி கலக்க ஆயத்தமானான்.
“விக்ரம்… எனக்கும் காஃபி.” என்ற குரலில் அவன் திரும்ப, உறக்கம் தெளியாத விழிகளை மூடி மூடி திறந்து, திறந்த வாயை புறங்கையால் மறைத்து கொட்டாவி விட்டபடியே அவன் முன் வந்தாள் சத்யவர்த்தினி.
“என்ன சத்யா பழக்கம் இது? ஃபேஸ் கூட வாஷ் பண்ணாம வந்து நிக்கிற. போய் பிரஷ் பண்ணிட்டு வா.” அவன் அதட்டியதில் முகம் சுருக்கியவள்,
“இந்த வீட்ல ஒரு பெட் காஃபிக்கு கூட வழியில்ல.” என முணுமுணுத்து திரும்பி நடந்தவள், “ரெண்டு நிமிசத்தில வந்திடுவேன். எனக்கு உன் கையால காஃபி வேணும்.” என அவள் அலட்டலாக சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கொள்ள, “வர வர ரொம்ப பேசற நீ…” அவன் கண்டனம் அவளின் அறை கதவில் மோதி எதிரொலித்தது.
மற்றொரு கப் எடுத்து அவளுக்கும் காபி கலந்து எடுத்து வந்தவன், சோஃபாவில் அமர்ந்து தன் காபியை பருகி முடிக்க, அதுவரையிலும் அவள் வெளி வந்திருக்கவில்லை.
அவளுக்காக ஆறும் காபியை கவனித்தவன் சட்டென எழுந்து சென்று, “சத்யா, பிரஷ் பண்ண உனக்கு எவ்வளோ நேரம். காஃபி ஆறுது பாரு. சீக்கிரம் வந்து தொலை.” என்று அவள் அறை கதவை அழுத்தி திறந்தவன், ஒரு நொடி திகைத்து, தன் முகத்தில் தானே அறைந்து கொண்டான்.
“ச்செ, ஷிட்!” தரையை ஓங்கி மிதித்தவனுக்கு தன் முட்டாள்தனத்தை தன்னாலேயே ஜீரணிக்க முடியவில்லை.
அவள் விட்டுப்போன வெறிச்சோடிய அறை, அவளது வாசம் மட்டும் சுமந்து அவனை பார்த்து கேலியாக நகைப்பது போலிருந்தது.
வேகமாக அவள் அறையிலிருந்து வெளிபொந்தவன், சோஃபாவில் தலையைப் பிடித்து அமர்ந்துவிட்டான்.
தனக்கென்ன நேர்ந்தது? அவனால் நம்பவே முடியவில்லை. இதென்ன கனவா? கற்பனையா? அவனால் அருதியிட்டு கூறமுடியவில்லை. இங்கு இல்லாத ஒருத்தியை சற்றுமுன் நேரில் பார்த்து பேசி இருக்கிறான்! தனக்கு நேர்ந்தது பிரமையா? மாயையா? அவனால் அனுமானிக்க இயலவில்லை.
அவள் இங்கு வந்து தங்கிவிட்டு சென்றதன் தாக்கம் தன்னை இந்தளவு பாதிக்கும் என்று அவன் எண்ணி இருக்கவே இல்லை. நிச்சயம் தான் ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டும் என்ற யோசனைக்கே வந்துவிட்டான். பாவம்!
இரு கைகளாலும் முகத்தை அழுத்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவன் பார்வையில், மேசையில் அவளுக்காக அவன் வைத்திருந்த காபி கோப்பை பட, அதில் காபி ஆறி ஏடு படிந்து அவனை பார்த்து கொக்கரித்து சிரிப்பது போலிருந்தது.
மூச்சை ஆழ இழுத்தவன், மெதுவாய் வாய் வழியே மூச்சுக்காற்றை வெளியிட்டு, “ரிலாக்ஸ் விக்ரமாதித்தியா! கண்ட்ரோல் யுவர் செல்ஃப்… நேத்து நடந்த பிரச்சனையில டே அண்ட் நைட் அவளை பத்தியே யோசனையில இருந்த இல்ல. அதால தான் இப்படி அவ இந்த வீட்டுல இருக்கிற மாதிரி உனக்கு இல்யூஷன் தெரியுது. ஜஸ்ட் காம்டவுன். எமோஷ்னல் ஆகாத… உன் லைஃப்ல சத்யவர்த்தினி இல்ல, யாருமே இல்ல, நீ மட்டும் தான்! உனக்கு யாரும் வேண்டாம்!” அவனை அவனே சமாதானம் செய்து அமைதியானான்.
தன் மனநிலை சற்று தெளிந்தது போல உணர, எழுந்தவன், முதலில் அந்த கப்பை எடுத்துச் சென்று கழுவப் போக, “விக்ரம்… என்னோட காஃபி!” மீண்டும் கேட்ட அவள் குரலில், திடுக்கிட்டவன் கரம் நழுவி அந்த பீங்கான் கோப்பை தரையில் விழுந்து உடைந்து காபி கறையை சிதறவிட்டது.
அடுத்து விக்ரமன் யோசிக்கவே இல்லை. தரையை சுத்தம் செய்தவன், வேகமாக குளித்து தயாராகி வீட்டை பூட்டிக் கொண்டு வெளியேறினான். அவன் நேரே சென்று நின்றது, பெயர் பெற்ற மனநல மருத்துவ நிபுணரின் கிளீனிக்.
அவள் குரல் கேட்பதையும், அவள் உருவம் தெரிவதையும் அவன் காதல் வகையில் சேர்க்கவில்லை, மூளைக்கோளாறு என்ற வகையில் சேர்த்துவிட்டான். விளைவு, அவனை முழு மனவியல் பரிசோதனை செய்து ஆராய்ந்த மருத்துவர் இறுதியாக, “உங்க தனிமை தான் உங்க நோய்க்கு காரணம் மிஸ்டர் விக்ரமாதித்தன். உங்கள கற்பனையில வந்து இம்சிக்கிற அந்த பொண்ணை சீக்கிரம் கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்க எல்லா பிரச்சனையும் சரியாகிடும்.” என்று விரிந்த சிரிப்புடன் ஆலோசனை வழங்கியவரை முறைத்தபடியே வெளியேறினான் விக்ரமன்.
இரவின் பட்டறையில்
நட்சத்திரங்களை உருக்கி
தெளித்துவிட்ட பனித்துளிகள்
என் தோட்டவெளி எங்கும் சிதறிக் கிடக்கின்றன
உன் தலையணையில் உதிர்ந்து கிடக்கும்
ஒற்றை கூந்தல் இழையை எடுத்துக் கொள்ளவா
அவற்றை கோர்த்தெடுக்க!
***
நன்றி ஃபிரண்ட்ஸ்🫶🫶🫶
நன்றி ஃபிரண்ட்ஸ்🫶🫶🫶
உடனுக்குடன் உங்கள் வாட்ஸ்அப்பில் இந்த கதைக்கான அப்டேட்ஸ் பெற yuva karthika what's app சேனலை follow செய்யலாம் link
Yuva Karthika Novels | WhatsApp-kanava
Käyttäjän Yuva Karthika Novels WhatsApp-kanava. Tamil novels, stories, updates. 100 seuraajaa
whatsapp.com
எனது அனைத்து கதைகளையும் ஆடியோ நாவலாக, Yuva karthika audio novels YouTube சேனலில் கேட்டு ரசிக்கலாம் link
Yuva Karthika Audio Novels
Tamil audio novels @ykaudionovels நான் யுவகார்த்திகா. இங்கு என் கதைகளை ஒலி புத்தகமாக கேட்டு ரசிக்கலாம்.
youtube.com