காதலில் கூத்து கட்டு
அத்தியாயம் 13
“என்ன வசி இதெல்லாம், பெரியவன மாதிரி நீயும் எங்களை மீறி போக துணிஞ்சிட்டியா?” என மேகவாணி தாங்க மாட்டாமல் கேட்டு இரு கைகளாலும் வசீகரன் சட்டையைப் பற்றி உலுக்கினார்.
“அம்மா… அவர் தான் உளறாருனா நீயும் ஏன் மா? நான் யாரையும் லவ் பண்ணல, முக்கியமா இந்த ஆள் பொண்ண தவறி கூட லவ் பண்ண மாட்டேன்.” இல்லாத ஒன்றை அவர்கள் இட்டுக்கட்டி பேச, வசீகரனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.
சாவித்திரி, “அவங்க வீட்டுல இருந்து ஒரு பொண்ணு வந்தே நம்ம வீடு அல்லோலப்பட்டு கிடக்கு. இதுல இன்னொருத்தியும் வந்தா, நம்ம குடும்பம் நாசமத்து போயிடும் சின்னவனே, வேணாம்பா.” பேரனின் முகம் பார்த்து புலம்பி சொல்ல,
“அய்யோ பாட்டிம்மா, உங்களுக்கு கூட என்மேல நம்பிக்கை இல்லயா, அவர் வேணும்னே என்னை பழிவாங்க பொய் சொல்றாரு.” வசீகரன் திவாகரை குற்றம் சாட்டினான்.
திவாகர், “என்னை என்ன உன்னமாதிரி நினச்சியா பொய் சொல்றதுக்கும் போக்கிரித்தனம் பண்றதுக்கும், பொண்ணு விசயத்துல எந்த அப்பனும் பொய் சொல்ல மாட்டான்.”
இளங்கோவன், “திவாகர், கொஞ்சம் பொறுமையா இருங்க, நான் விசாரிக்கிறேன்.” என்று மகன் பக்கம் திரும்பினார்.
அவரின் பார்வை வீச்சில், “பிராமிஸ் ப்பா, எனக்கும் ரம்யாவுக்கும் நடுவுல எதுவுமே இல்ல, ஜஸ்ட் பிரண்ட்ஷிப் கூட இல்லப்பா. லவ் எல்லாம் சான்ஸே இல்ல.” வசீகரன் தவித்த குரலில் சொன்னான்.
மறுத்து தலையசைத்த இளங்கோ, “இல்ல வசி, எதுவுமே இல்லாம திவாகர் இவ்வளவு உறுதியா பேச மாட்டாரு. என்னாச்சு சொல்லு?” அவரும் நம்பாமல் கேட்க,
“ச்சே, நீங்களும் என்னை நம்பாத மாதிரி பேசினா எப்படி ப்பா, உங்க எல்லாருக்கும் என்மேல அவ்வளவு டவுட் இருந்தா ரம்யாவ கூப்பிட்டு கேளுங்க, அவ சொன்னா நம்புவீங்க இல்ல.” வசீகரன் குரல் உயர்ந்தது.
“ரமி வீட்டுல இல்ல. சித்தப்பா வீட்டுக்கு போய் இருக்கா.” மைத்துனனுக்கு பதில் சொன்ன திவ்யாவிற்கும் அங்கே நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“சரி கால் பண்ணி வர சொல்லுங்க, எல்லாத்தையும் இப்பவே முடிச்சுக்கலாம்.” வசீகரன் விடாமல் சொன்னான்.
“ரம்யா வர மாட்டா” என்று திட்டவட்டமாக சொன்ன திவாகர், “இளங்கோ, என் பொண்ண நான் பார்த்துக்கிறேன், உன் பையன் அவ பக்கம் வராம நீதான் பார்த்துக்கனும். திவ்யா விசயத்துல நடந்த எதுவும் ரம்யா விசயத்துல நடக்க நான் விடமாட்டேன்.” அழுத்தமாக சொன்னார்.
வசீகரனுக்கு என்ன சொல்லி புரியவைப்பது என்றே தெரியவில்லை. ‘இந்த ஆளுக்கு வில்லன் ரோல் ஷூட் ஆகலன்னு யாராவது சொல்லி தொலைங்களேன். இல்லாத லவ்வ பிரிக்க போறாராமாம், ஷ்ப்பா முடியல’ சுவரில் தலையை முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
திவ்யா பக்கம் வந்து நின்ற திவாகர், “சசிதரன் கூட வாழ விருப்பம் இல்லனு திவ்யா தெளிவா சொல்லிட்டா, இதுக்கும் மேலயும் அவளை கட்டாயப்படுத்த எனக்கு விருப்பம் இல்ல. உங்க வீடு தேடி டைவர்ஸ் பேப்பர்ஸ் வரும். இப்ப நீங்க கிளம்பலாம்.” முடிவாக சொல்லிவிட, இளங்கோவன் குடும்பத்திற்கு அது பெரிய அவமானமாகிப் போனது.
சசிதரன் ஆத்திரமாக முன்வந்து, “என்ன மாமா, எங்க குடும்பத்தை கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்த திட்டம் போட்டு இருந்தீங்களா?” என்று தாடை இறுகியவன், “டைவர்ஸ்! என்னை டைவர்ஸ் பண்ணிட்டு நீ ரொம்ப சந்தோஷமா இருப்பியா திவி? முடியுமா உன்னால?” கண்களைச் சுருக்கி அவன் கேட்க, அவள் கண்களில் கண்ணீர் தேக்கங்கள்.
“இப்படி பேசி பேசி தான என் பொண்ண எங்களை விட்டு பிரிச்சு கூட்டிட்டு போன, இப்பவும் அதையே தான் பண்ற இல்ல.” திவாகர் மருமகனை அமர்த்தலாக வினவ, சசிதரன் முகம் ஆற்றாமையில் கசங்கியது.
திவ்யா, “ப்ளீஸ் சசி போயிடு, நான் உன்கூட வரமாட்டேன். முதல்ல இருந்தே நமக்குள்ள எதுவுமே ஒத்து வரல, இனியும் எதுவும் இல்ல... நம்ம பிரச்சனையில ரமிய இழுக்க வேணாம்னு வசி கிட்ட சொல்லு, அவ பாவம். அவளை வச்சு எதுவும் கேம் பிளே பண்ண வேணாம்னு அவன் கிட்ட சொல்லு.” திக்கிய வார்த்தைகளில் அவள் சொல்லி முடிக்க, சசிதரனுக்கு மட்டுமல்ல, அவன் குடும்பத்திற்கே வெறுத்துப் போனது.
இருந்தாலும் மனம் தாங்காமல் இளங்கோ, “அவசரப்பட்டு முடிவெடுக்காத திவ்யா, அது தப்பா தான் முடியும், இது விளையாட்டு இல்ல வாழ்க்கை...” மேலும் அவர் ஏதோ சொல்ல வர,
“போதும் ப்பா, அவளுக்கு நான் வேணாம்னா… எனக்கும் அவ வேணாம்! நாம போயிடலாம்.” சசிதரன் தன் தந்தையின் கையைப் பிடித்து இழுத்து நடக்க, வசீகரன் திவாகரை தீப்பார்வை பார்த்து நின்றான். சாவித்திரி, மேகவாணி அவனை இருபுறமும் பிடித்து இழுத்தபடி வெளியேறினர்.
***
வீட்டிற்குள் வந்த நால்வருமே தோய்ந்து ஓய்ந்து அமர்ந்து விட்டனர். பிள்ளைகளின் நல்வாழ்வை எண்ணி சமாதானம் பேச முயல, அங்கோ மொத்தமாய் எல்லாம் முடிந்து போனது. இதில் யாரை குற்றவாளி கூண்டில் நிற்க வைப்பது என்றும் தெரியவில்லை.
கணவன், மனைவி சண்டைக்கு மணமுறிவை தேர்ந்தெடுத்த திவ்யாவையா?
மனைவியின் மனநிலையை இப்போது வரை புரிந்து கொள்ளாமல், அவளை வீம்புக்கு மறுத்து வந்த சசிதரனையா?
மகளின் வாழ்க்கையை நினையாது, தன் வறட்டு பிடிவாதத்தில் தளராமல் நிற்கும் திவாகரையா?
தன் தொழிலில் நிலைக்கும் முன்னே காதலென்று புது பிரச்சனையைக் கிளப்பி விட்டிருக்கும் வசீகரனையா?
யோசிக்க யோசிக்க இளங்கோவனுக்கு தலை இரண்டாக பிளந்துவிடும் போல வேதனையானது. மற்றவர்கள் நிலையும் அவரை ஒத்தே இருக்க, கவலை அப்பிய முகத்துடன் சோர்ந்துபோய் அமர்ந்து இருந்தனர்.
இளங்கோ, “விடுங்க, மனச போட்டு குழப்பிக்காம உங்க வேலைய போய் கவனிங்க, அவங்களும் ஏதோ கோபத்துல பேசிட்டாங்க, இன்னமும் எதுவும் கைமீறி போகல. பார்த்துக்கலாம்.” என்று தனக்கும் சேர்த்து நம்பிக்கை சொன்னார்.
சசிதரன், “இனிமேலும் நீங்க எனக்காக அவமானப்பட வேணாம் ப்பா, அவளுக்கு என்கூட வாழணும்னு இருந்தா அவளா வரட்டும், இனி நானும் அவகிட்ட கெஞ்ச போறதா இல்ல.” என்று சொல்ல, இளங்கோவன் தலையசைத்துக் கொண்டார். வேறென்ன சொல்வது என்றும் அவருக்கு புரியவில்லை.
வசீகரன், “அந்த ஆளு வேணும்னே தான்ப்பா என்னையும் ரம்யாவையும் பிரச்சனையில இழுத்துவிட்டு, சசி, திவி உறவை முறிச்சிருக்காரு, இப்பவாவது என்னை நம்புங்க, நான் யாரையும் லவ்...”
அவன் பேச்சின் குறுக்கே கைநீட்டி தடுத்தவர், “போனது போகட்டும் வசீகரா, எப்படியோ உன் பேரும் அந்த பொண்ணு பேரும் அடிப்பட்டுடுச்சு, இனிமேலாவது சூதானமா நடந்துக்க, அந்த பொண்ண பார்க்கற, பேசற வேலை வச்சுக்காத, நான் சொல்றது புரியுது இல்ல?” இறுகிய குரலில் இளங்கோ சொன்னார்.
வசீகரன், “நானும் ரம்யாவும் பார்த்தா கூட பேசறது இல்லப்பா. இப்ப தான், அதுவும் சசி, திவிய சேர்த்து வைக்கணும்னு தான் நாங்க பேசினதே...”
அவன் விளக்கி முடிக்கும் முன்னே குறுக்கிட்ட சாவித்திரி, “அவங்கள ஜோடி சேர்க்கறேன்னு உன்ன ஜோடி சேர்த்துக்க பார்த்தாளாக்கும்.” என்று நொடிந்து கொண்டார்.
அந்த பேச்சை சகிக்காதவனாக, “பாட்டிம்மா, ரம்யா அப்படி இல்ல, நல்ல பொண்ணு தான்.” வசீகரன் பரிந்து வர,
“பார்த்தீங்களா அத்த, அந்த பொண்ண ஒத்த வார்த்தை சொன்னா இவனுக்கு தாங்கல. அப்ப ஏதோ இருக்குன்னு தான அர்த்தம், என் ரெண்டு புள்ளங்களையும் அந்த குடும்பத்துக்கு தார வார்க்கணுமா...” மேகவாணி கலங்கி புலம்பலானார்.
வசீகரன் வெளிப்படையாகவே தன் நெற்றியில் அடித்துக் கொண்டான். “அம்மா, அப்படி ஏதாவது இருந்தா நான் ஏன் மறைக்க போறேன், நம்புமா.” பரிதாபமாக அவன் குரல் இறைஞ்சியது.
மேகவாணி இவ்விதம் புலம்பி, கலங்குபவர் அல்ல தான் என்றாலும், ஏனோ இன்று அவருக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது. பெரிய மகனின் திருமண வாழ்வு கேள்விக்குறியானது, சின்ன மகனின் காதல் விசயம் வெளிப்பட்டது, உடன் அந்த வீட்டில் இருந்து கையறு நிலையாக வெளிவந்தது எல்லாமே அவரை பலவீனப்படுத்தி இருக்க, தன் உணர்ச்சிப் பெருக்கை, வடிக்கட்டாத வார்த்தைகளில் கொட்டினார்.
வசீகரன் அண்ணனின் உதவி நாடி அவன் முகம் பார்க்க, சசிதரன் தம்பியின் நினைவில்லாது தன் கவலையில் சிக்கித் தவித்திருந்தான்.
தன்னை எப்படி நிரூபிப்பது என்பது புரியாமல் பதிலுக்கு பதில் பேசி பேசி வசீகரன் ஓய்ந்து தான் போனான்.
அதேநேரம், அங்கே ரம்யாவின் சூழ்நிலையும் இவனை ஒத்தே இருந்தது. இல்லை, இன்னும் கூட மோசமாய்!
சசியும் திவியும் சேர்ந்து இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு வீட்டுக்குள் துள்ளிக்கொண்டு வந்தவளை, திவ்யாவின் கண்ணீர் முகம் நிறுத்தியது.
சோஃபாவில் பைரவி மடியில் படுத்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள் பெரியவள். வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்படி விடாமல் அழுது தீர்க்கும் மகளை சிறு குரலாக கண்டித்து கொண்டிருந்தார் பைரவி. எதிர் சோஃபாவில் இறுக்கமாக உட்கார்ந்து இருந்தார் திவாகர்.
ரம்யாவிற்கு என்ன நடந்தது என்று தெரிந்திருக்கவில்லை. மனம் ஏனோ பிசைந்தது. எப்படியும் இந்த சூழ்நிலையை அவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. “என்னாச்சு திவி, நீ சசி மாமா கூட போகலையா, ஏன் அழற?” ரம்யா அருகில் வந்து அவள் முன் முட்டியிட்டு அமர்ந்து கேட்க, திவ்யாவிடம் பதில் இல்லை.
“ரெண்டு பேரும் டைவர்ஸ்க்கு அப்ளே பண்ணலாம்னு ரெண்டு பக்கமும் முடிவெடுத்தாச்சு. இனி நமக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.” திவாகரிடம் இருந்து அழுத்தமாக பதில் வந்தது.
“என்னது டைவர்ஸா?” ரம்யா அதிர்ந்து அம்மாவைப் பார்க்க, பைரவியின் பார்வை அவள் மீது ஆழப் பதிந்தது.
“டைவர்ஸ் திவியோட முடிவு, அதுக்கு நீ ஏன் இவ்வளவு பதர்ற ரமி?”
அவர் கேள்வி இவளுக்கு முழுமையாக புரிந்திருக்கவில்லை. எனவே, “பதறாம என்ன செய்ய சொல்றீங்கம்மா, ரெண்டு வீட்டுலயும் பேசி சேர்த்து வைப்பீங்கனு பார்த்தா, இப்படி சொல்றீங்க. திவிய பாருங்க முடிவையும் எடுத்துட்டு அழவும் செய்றா. ஏன்னு கேள்வி கேட்டா, நீ சின்ன பொண்ணு உனக்கு ஒன்னும் புரியாதுனு வாயடைச்சிடுவா. புரிஞ்சவ இவ மட்டும் ரொம்ப விவரமா இருக்குறானு நினப்பு.” ஆதங்கமாக வார்த்தைகளை வீசினாள்.
“ஏய் சின்ன கழுதை, பெரியவ விசயத்துல மூக்க நுழைக்காம, உள்ள போ” திவாகர் சின்ன மகளை அதட்ட,
“அக்காவ அழவிட்டு நான் எங்க போறது, திவி எழுந்து முகம் கழுவிட்டு வா, உனக்கு பிடிச்ச ஹாட் சாக்லேட் செய்ய சொல்றேன்.” என்று திவ்யாவின் கைப்பற்றி எழுப்ப, பெரியவள் சின்னவள் கரத்தை உதறினாள்.
“ப்ச், என்னை சின்ன பொண்ணுனு சொல்லிட்டு நீதான் சின்னபுள்ளதனமா நடந்துக்கற திவி. அழுதா பிரச்சனை சரியா போகுமா? வயிறு முட்ட சாப்புட்டு, விடிய விடிய தூங்கி எழுந்து ஃபிரஷ்ஷா யோசிச்சு பாரு, உனக்கு புது தெம்பு வரும்.” என்று படபடத்துக் கொண்டே தமக்கையை எழுப்பி உட்கார வைக்க,
“இப்ப சாப்பாடு மட்டும் தான் குறைச்சல் இங்கே.” மீண்டும் தங்கையின் கையை உதறி விட்டவள், “நீ இன்னும் சின்ன பொண்ணு இல்ல ரமி, உன் விளையாட்டு பேச்செல்லாம் இத்தோட விட்டுடு. இருக்கற பிரச்சனை போதாதுனு நீ வேற இழுத்து வச்சிருக்க.” திவ்யா எரிந்து விழ, ரம்யாவிற்கு ஒன்றும் விளங்குவதாக இல்லை.
“நானா? நான் என்ன இழுத்துட்டு வந்தேன், சும்மா கைவீசிட்டு தான வந்தேன்.” என்றாள் தன் விளையாட்டு பேச்சை விடாமல்.
“ஏய், அந்த வசி கூட பேசாத, பழகாதன்னு சொன்னேன் இல்ல, கேட்டு தொலச்சியா நீ?”
“நான் எப்போ க்கா அவன்கூட பேசினேன், பழகினேன்? அவன்தான உன்கிட்ட சமாதானம் பேசறேன் பேர்வழின்னு என்னை இழுத்து வச்சு பேசினான்.” அவள் முகத்தைச் சுருக்கிக்கொள்ள,
“அதை தான் நானும் அப்ப இருந்து சொல்லிட்டு இருந்தேன். இப்ப எங்க வந்து நிக்குது பார்த்தியா... நீயும் அவனும் லவ் பண்றீங்கனு பேச்சு வந்திருக்கு!” திவ்யா குரல் உயர்த்தி சொல்லவும்,
“என்னாதே லவ்வா?” அதிர்ந்தவள், அவசரமாக தந்தையை பார்த்தாள். அவருக்கு தான் அவளிடம் எப்போதும் நம்பிக்கை குறைவே, இப்போது என்னவோ? என்று.
திவாகரின் இருண்ட முகமே அவரின் கோபத்தை பறைசாற்றுவதாய் இருக்க, அவள் மனதில் சட்டென பயம் சூழ்ந்தது. “அப்பா... காட் பிராமிஸ் ப்பா, நான் யாரையும் லவ் பண்ணல, இது... யாரோ கிளப்பிவிட்டு இருக்காங்க.” என்றாள் பதைபதைப்பாய்.
“யாரு, அந்த கேடு கெட்டவன் தான் கிளப்பி விட்டிருப்பான். அன்னைக்கே அவனோட ஃபோன்ல பேசாதன்னு உன்கிட்ட சொன்னேன் இல்ல, இப்ப பாரு ஒன்ன பத்தா திரிச்சு விட்டிருக்கான்.” வசீகரனை குற்றம் சாற்றி பைரவி ஆதங்கமாக பேசவும்,
“இவங்க ரெண்டு பேரும் ஃபோன்ல பேசற வரை தெரிஞ்சும், உனக்கு என்கிட்ட சொல்லணும்னு தோனல இல்ல பைரவி?” திவாகர் மனைவியைக் கோபமாகக் கேட்டார்.
“இல்லங்க, அதெல்லாம் அப்ப பெரிய விசயமா தெரியல.” பைரவியின் குரல் இறங்கியது.
“ஃபோன்ல கூட எதுவும் தப்பா பேசினதில்லப்பா, அக்கா, சசி மாமா பத்தி தான் பேசினான்.” என்றாள் சிறு குரலாய். எதற்காக இந்த விளக்கம் சொல்கிறோம் என்பது அவளுக்கும் புரியவில்லை. சட்டென மாறும் காலநிலை மாற்றம் போல அவளுக்குள் ஒருவிதமான பதைபதைப்பான மாற்றம், உடலின் பாரத்தை கூட்டியது போலானது.
“அவங்களை பத்தி பேசுறவன் நேரா என்கிட்ட பேசி இருக்கணும் ரம்யா உன்கிட்ட இல்ல, இதுலயே அவனோட வண்டவாளம் தெரியலயா உனக்கு?” திவாகர் குரல் உச்சத்தில் உயர, ரம்யாவின் உடலில் உதறல் பரவியது.
“நம்ம ரமி மேல தப்பிருக்காது, இப்படி கோபமா பேசாதீங்க அவ உடம்பு தாங்காது.” பைரவி கணவனை அமைதிப்படுத்த முயன்றார்.
“இவமேல தப்பில்லாம தான் அவன் கூட பைக்ல ஊர் சுத்திட்டு வந்து இறங்கினாளா? அதை அப்பவே கவனிக்காம விட்டேன் பாரு என்னை சொல்லணும்” திவாகர் விடாமல் பேச,
“நாங்க ஊரெல்லாம் சுத்தல, என்னை ட்ராப் பண்ணான் அவ்வளவு தான்.” ரம்யாவிடம் இருந்து சிறு குரலாய் பதில் வந்தது. ‘சொந்தக்கார பையன் கூட பைக்ல வந்தா கூட தப்பா?’ அவள் மனம் குரல் கொடுத்தது.
“நாளு நாள் முன்ன கோயில் வாசல்ல கொட்டமடிச்சு இருக்கீங்க ரெண்டு பேரும், அதுக்கு என்ன அர்த்தம்?” இப்போது அவர் கோபம் நேராய் மகளை தாக்க, ரம்யா பயந்து ஓரடி பின்வாங்கினாள். அவள் நெற்றியிலும் முகத்திலும் வியர்வை அரும்பி வழியலானது.
“அன்னைக்கு வசிக்கு பர்த்டே, அதான் விஷ் பண்ணேன் வேற ஒன்னும் இல்ல.”
“விஷ் பண்ண உனக்கு ஒன்னரை மணி நேரமா? அதுவும் டிரைவர் முன்னாடி அவன் கூட இளிச்சிட்டு நின்னு இருக்க.” அவர் ஆங்காரமாக கத்தினார்.
‘நம்ம சின்ன பாப்பா, எப்பவும் கோயிலுக்கு போயிட்டு அரைமணியில திரும்பிடும் சார், இன்னைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு, அதுவும் யாரோ ஒரு பையனும் கூட இருந்தான். நான் யாருன்னு பாப்பா கிட்ட கேட்டேன். சசி மாமாவோட தம்பினு சொல்லுச்சுங்க.’ அன்று கார் ஓட்டுநர் சொன்னவை திவாகர் காதில் பாய்ச்சிய ஈயத்தை போல தகித்தது.
“நான் இளிச்சிட்டு எல்லாம் பேசல… சாதாரணமா தான் பேசினேன்.” திக்கிய குரலில ரோஷமாக உரைத்தாள் ரம்யா.
கோபத்தில் திவாகர் மகளை அடிக்க கையோங்க, பைரவியும் திவ்யாவும் அவரை தடுத்துப் பிடித்துக் கொண்டனர். தந்தையின் ஆவேசத்தில் சின்னவளுக்கு மேல் மூச்சு வாங்கியது. அவசரமாக அவள் தன் கைப்பையை துழாவ, எப்போதும் அவள் பையில் இருக்கும் லாலிபாப் தீர்ந்து போயிருந்தது!
சின்னவளின் நிலையைக் கவனிக்கும் நிலையில் பெரியவர்கள் மூவருமே இல்லை. “காதல்னு வந்தா கண்ணு அவிஞ்சு போயிடுமா உங்களுக்கெல்லாம். இத்தனை வருஷம் பொத்தி பொத்தி வளர்த்த பெத்தவங்க மறந்து போயிடுமா? எவனோ ஒரு பொறுக்கி ராஸ்கல், எனக்கு ஃபோன் போட்டு உன்னயும் அவனையும் சேர்த்து வச்சு அவ்வளோ அசிங்கமா பேசுறான். அதெல்லாம் கேட்டு பெத்தவன் எனக்கு எப்படி துடிச்சு இருக்கும். இவ ஒழுங்கா இருந்தா இந்த பேச்செல்லாம் வந்திருக்குமா?”
அவருக்கு வந்திருந்த அந்த கைப்பேசி அழைப்பு, அதில் ரம்யாவுடன் வசீகரனை இணைத்து சொல்லப்பட்ட கீழ்தரமான விசயங்கள், அவருக்கு அருவருப்பையும் ஆத்திரத்தையும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருந்தது. திவ்யா, சசிதரன் திருமணத்தில் முதலிலேயே வசீகரன் மீது தீராத கோபத்தில் இருந்த திவாகருக்கு, ரம்யாவுடன் அவன் காதல் என்ற செய்தி, அவரை ஆத்திரத்தின் உச்சாணிக்கொம்பில் ஏற்றி இருந்தது. அந்த ஆத்திரத்தின் வேகத்திலேயே, மறுயோசனை இன்றி தன் மகளை சந்தேக கூண்டில் நிறுத்தி இருந்தார்.
தன்மீது சிறு தவறும் இல்லாத பட்சத்தில் தந்தையின் பெரிய குற்றச்சாட்டில் ரம்யாவின் நிலை மோசமானது. திணறிய மூச்சுக்களோடு பேசினாள். “நான்… எந்…எந்த தப்பும்… பபண்ண…ல...”
மகளின் நிலையை இப்போதுதான் கவனித்த பெரியவர்கள் அவளை தாங்கிக் கொண்டனர். உடனே மருத்துவருக்கு தகவல் தந்து மேலும் தாமதிக்காமல், ரம்யாவை மருத்துவமனை அழைத்துக்கொண்டு விரைந்தனர்.
***
நன்றி டியர்ஸ் 🫶🫶🫶
உடனுக்குடன் உங்கள் வாட்ஸ்அப்பில் இந்த கதைக்கான அப்டேட்ஸ் பெற yuva karthika what's app சேனலை follow செய்யலாம் link நன்றி டியர்ஸ் 🫶🫶🫶
Yuva Karthika Novels | WhatsApp-kanava
Käyttäjän Yuva Karthika Novels WhatsApp-kanava. Tamil novels, stories, updates. 100 seuraajaa
whatsapp.com
எனது அனைத்து கதைகளையும் ஆடியோ நாவலாக, Yuva karthika audio novels YouTube சேனலில் கேட்டு ரசிக்கலாம் link
Yuva Karthika Audio Novels
Tamil audio novels @ykaudionovels நான் யுவகார்த்திகா. இங்கு என் கதைகளை ஒலி புத்தகமாக கேட்டு ரசிக்கலாம்.
youtube.com