காதலில் கூத்து கட்டு
அத்தியாயம் 16
“எல்லாருமே என்கிட்ட ஏன் பொய் சொல்லிட்டாங்க, நீ அவ்வளோ அழகு இல்லனு? உன்ன நேர்ல பார்க்கும்போது தான் தெரியுது நீ எவ்வளோ... அழகுனு!” அவளின் முகத்தில் ரசனையான பார்வை பதித்து அவன் சொல்ல, காஞ்சிப்பட்டில் மிளிர்ந்தவள், பூரிப்பிலும் வெட்கத்திலும் அழகாய் புன்னகைத்து தலை தாழ்த்திக் கொண்டாள்.
அடுத்த காட்சியில், “என்னுடைய முக அழகின் ரகசியம், ‘திரிபுரா ஆயுர்வேதிக் ஃபேஸ் கிரீம்… முகத்தில் பொலிவை கூட்டும், மனதில் தன்னம்பிக்கை சேர்க்கும், திரிபுரா ஆயுர்வேதிக் ஃபேஸ் கிரீம்.” மணப்பெண் அந்த முகப்பூச்சினை கையில் வைத்தபடி அழகான புன்னகையுடன் சொல்ல, அந்த ஒன்றரை நிமிட விளம்பரம் முடிந்தது. அதற்கான டப்பிங் வேலைகள் தான் அங்கு நடைபெற்று கொண்டிருந்தது.
டப்பிங் கலைஞர்கள் பேசி முடித்ததும், “ஓகே தான வசி?” என்று கேட்டனர். “பர்ஃபெக்ட்” என்று தம்ஸ் அப் காட்டியவன், “லாஸ்ட் ஒன்ஸ் செக் பண்ணிடலாம்.” என்று மறுபடி மறுபடி அந்த விளம்பரத்தை திரையில் ஓடவிட்டு கவனிக்கலானான்.
அவனது அலைபேசி இசைத்து கவனத்தை கலைக்க, யாரென்று பார்க்காமல் எடுத்து காதில் ஒற்றி, “ஹலோ, கிளிக்கர்ஸ் ஆட் ஃபிலிம் மேக்கர்ஸ்” என்றான்.
“டேய், சசி பேசறேன்டா.”
“சொல்லு சசி, கொஞ்சம் பிஸியா இருக்கேன்.”
“அப்ப உனக்கு விசயம் தெரியாது?” சசிதரன் சந்தேகமாக கேட்க,
“எந்த விசயத்தை கேக்குற நீ?” வசீகரன் வேலை நேர குறுக்கீட்டில் கடுப்பானான்.
“ரமிக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி இருக்கறது உனக்கு தெரியுமா, தெரியாதா?” சசிதரன் கேட்கவும், வசீகரன் முகம் மாறியது.
“வாட்?”
“நெக்ஸ்ட் வீக் என்கேஜ்மென்ட், நெக்ஸ்ட் மன்த் ஃப்ர்ஸ்ட்ல மேரேஜ்னு கேள்விபட்டேன்” சசிதரன் மேலும் சொல்ல, வசீகரனுக்கு அதனை எப்படி எடுத்து கொள்வது என்று புரியவில்லை. ஆனாலும் ஏதோ தவறாகப்பட்டது.
“இவ்வளோ அவசரமா எதுக்கு, என்னடா நடக்குது அந்த வீட்டுல?”
சசிதரன், “அந்த வீட்டுல என்ன வேணா நடந்துட்டு போகட்டும், நீ உன் ஹீரோயிசத்தை காட்டுறேன்னு எதுவும் பண்ணி வைக்காத, அவங்களுக்கும் நமக்கும் இப்ப எந்த சம்பந்தமும் இல்ல, புரியுதா?” திவ்யாவின் மீதான கோபத்தை அப்படியே குரலில் இறக்கினான்.
அண்ணனின் கோபத்தை கணக்கில் கொள்ளாத வசீகரன், இந்த திடீர் திருமண ஏற்பாட்டில் ரம்யாவின் நிலையை எண்ணி கவலை கொண்டான். தன் நெற்றியை விரல்களால் தேய்த்தபடி, “மாப்பிள்ளை யாரு? டீடியல்ஸ் தெரியுமா உனக்கு?” அண்ணனிடம் விசாரிக்க,
“பேரு நவீன் குமார், வேற டீடியல்ஸ் தெரியல, நமக்கு எதுக்கு அதெல்லாம்.” சசிதரன் முயன்று வரவழைத்த அலட்சியத்தோடு பேசிக் கொண்டிருக்கும் போதே, வசீகரன் இணைப்பை துண்டித்து இருந்தான். இவன் தலைபாரம் அதிகமானது போன்ற உணர்வு. விரல்களால் தலையை அழுத்த கோதி கொண்டவனுக்கு இந்த புது பிரச்சனைக்கு தீர்வென்ன என்ற யோசனை.
“என்னாச்சு வசி, எனிதிங் ராங்?” தேவா கேட்க,
“ரம்யாக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்காங்களாம்.” சொல்லிவிட்டு கோபமாக காலை தரையில் உதைத்துக் கொண்டான்.
“என்னாது? அந்த பொண்ணு இன்னும் காலேஜ் கூட முடிச்சிருக்க மாட்டாளேடா? முதல்ல இந்த விசயத்தை உனக்கு யாரு சொன்னது ரமியா?” தேவா நம்பாமல் கேட்க,
இல்லையென்று தலையசைத்தவன், “சசி தான் சொன்னான். ஏன் இப்படி திடீர்னு? எனக்கு சுத்தமா எதுவும் புரியலடா.”
“எனக்கு புரிஞ்சிடுச்சு” என்ற தேவா, “நீயும் ரமியும் லவ் பண்றீங்கனு நினச்சு அவளோட அப்பன் உன்னயும் அவளையும் பிரிக்கறதுக்குனே, அலஞ்சு திரிஞ்சி ஒரு மாப்பிள்ளய புடிச்சு மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்காரு.” என்றான் ஒரே மூச்சாக.
வசீகரன், “அந்த ஆளு என்ன லூசாடா?” என்று பொங்கியவன், “பாவம் ரம்யாக்கு அங்க என்ன பிரச்சனைனு தெரியலயேடா.” என்று தவிப்பாக தன் முகத்தை அழுத்த தேய்த்து விட்டான்.
“ஓகேடா, ஃப்ர்ஸ்ட் இந்த வொர்க்க ஃபினிஷ் பண்ணிடலாம், இன்னும் லேட் பண்ணா இங்க ஸ்டூடியால பில் எகிறிடும், அப்புறம் அதை பார்த்துக்கலாம்.” தேவா சொல்ல,
“பினிஷிங் மட்டும் தானே நீ பார்த்துக்க தேவா, நான் அங்க என்ன பிரச்சனைனு பார்த்துட்டு வந்திறேன்” மேலும் நிற்காமல் வசீகரன் சென்று விட, தேவா தலையசைத்துவிட்டு அவன் விட்டுச் சென்ற வேலையைக் கவனிக்கலானான்.
வசீகரன், ரம்யாவின் எண்ணுக்கு முயல, அது தொடர்பற்று போயிருந்தது. அடுத்து திவ்யாவின் எண்ணிற்கு முயல, அலுவலகத்தில் இருந்தவள், சற்று தயங்கி தான் அழைப்பை ஏற்றாள்.
“அந்த நவீன் குமாரோட நம்பர் இருக்கா உன்கிட்ட?” வசீகரனின் நேரான கேள்வியில் கோபமானவள்,
“உன்னால தான் ரமிக்கு இவ்வளவு பிரச்சனை வசி, இன்னும் என்ன பண்ண போற நீ?” அவனைக் குற்றம் சாட்டினாள்.
“பிரச்சனை பண்ணவன் தானே சால்வ் பண்ணணும், சொல்லு.”
“என்கிட்ட இல்ல, எம் சி ஹாஸ்பிடல் ரிஷப்ஷன்ல கேட்டு பாரு ஒருவேளை சொல்லுவாங்க.”
“அவன் டாக்டரா?”
“இல்ல. அவனை தவிர அவன் ஃபேமிலில எல்லாரும் டாக்டர்ஸ்.”
“ஓகே தேங்க்ஸ்.”
“வசி நீ எதுவும் தப்பா…” திவ்யா சொல்லி முடிக்கும் முன் இணைப்பை துண்டித்திருந்தான். யாருக்காக யாரிடம் பேசுவது என்று ஒன்றும் விளங்கவில்லை திவ்யாவிற்கு. முன்பைவிட அவளின் குழப்பங்களும் தவிப்புகளும் அதிகமானது தான் மிச்சம்.
***
மதிய வேளையில், எம் சி மருத்துவமனையின் நிர்வாக அறையின் இருக்கையில் சரிந்து அமர்ந்தபடி உறங்கி போய் இருந்தான் நவீன் குமார். அவன் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா என அனைவரும் மருத்துவமனையின் முக்கிய பொறுப்புகளை ஏற்று கொள்வதால் அவனுக்கான வேலைகள் அங்கே பெரிதாக இருப்பதில்லை. மருத்துவம் படிக்க சோம்பல் பட்டு, நிர்வாகப் படிப்பை பெயருக்கு முடித்து வைத்திருப்பவனிடம் வேறென்ன பெரிதாக எதிர்பார்க்க முடியும்.
ஒலி எழுப்பிய கைப்பேசியை கண்கள் திறக்காமல் கைகளால் மேஜையில் துழாவி எடுத்து காதில் வைத்தான். “ஹலோ, நவீன் குமார் ஸ்பீக்கிங்.”
“ரம்யா பத்தி உங்ககிட்ட பேசணும். எப்ப பேசலாம்?” கத்தி போல கேட்ட குரலில் சட்டென விழித்து எழுந்து நேராக அமர்ந்தவன், “நீ யாரு மேன்?” குரல் எரிச்சலாக வந்தது.
“நான் வசீகரன்.”
“ஈவ்னிங் ஃபைவ் ஓ கிளாக்...” நவீன் சொல்லி முடிக்கும் முன்னே, “உங்க ஹாஸ்பிடல் ரிஷப்ஷன்ல தான் இருக்கேன்.” வசீகரன் சொல்லி முடித்தான்.
‘என்னடா’ என்று இருந்தது நவீனுக்கு. “ஓகே ரிஷப்ஷன்ல கேட்டு என் ரூம்க்கு வா.” என்றதோடு எரிச்சலுடன் வைத்து விட்டான்.
ஐந்து நிமிட இடைவெளியில் எதிரே வந்து நின்றவனை நவீனின் பார்வை அளந்தது.
வசீகரன் எந்த பூச்சும் இல்லாமல் நேராக பேச்சைத் தொடங்கினான். “எங்க ஃபேமிலி மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்க்னால ரம்யா வீட்ல இந்த கல்யாணத்தை முடிவு பண்ணி இருக்காங்க, அவளை ஃபோர்ஸ் பண்ணி உங்க கூட கல்யாணம் நடத்தி வைக்க ட்ரை பண்றாங்க, ரம்யா சின்ன பொண்ணு சார், காலேஜ் கூட இன்னும் முடிக்கல, ப்ளீஸ் எப்படியாவது இந்த மேரேஜ நிறுத்திடுங்க.” வசீகரன் சற்று இறங்கி பேசவும், நவீன் சத்தமாக சிரித்து வைத்தான்.
“யாரு அவளா சின்ன பொண்ணு, ஆஃப் சைஸ் பீப்பா மாதிரி இருக்கா நீ பாப்பா ரேஞ்சுக்கு பேசுற.” நவீன் நக்கலாக கூற,
“மரியாதையா பேசுங்க, உங்க ஏஜ் என்ன? அவ ஏஜ் என்ன? உங்க பக்கத்துல அவ குழந்தை மாதிரி இருப்பா. இப்ப அவளுக்கு படிக்கிற வயசு சார்.” வசீகரன் எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, அவனுக்கு புரிய வைக்க முயன்றான்.
“சோ வாட், அதான் வயசுக்கு வந்துட்டாள்ல, அப்புறமென்ன?”
அவன் கீழ்த்தரமான பேச்சில், “யோவ், எவ்வளோ சீப்பா பேசற நீ, ச்சே!” அவன் முகத்தில் ஓங்கி நாலு குத்துவிட பரபரத்த கைகளை முயன்று மடக்கி அடக்கிக் கொண்டான்.
“ஆமாடா இதைவிட சீப்பா கூட பேசுவேன், எனக்கு பேசி இருக்கிற பொண்ண பத்தி எவனோ ஒரு பொறுக்கி நீ பேச வந்திருக்க, எனக்கு எப்படி இருக்கும்? அவளுக்கு யாருடா நீ? லவ்வரா? உனக்கு பயந்து தான் அந்த திவாகர் அவசரமா அவன் பொண்ண என் தலையில கட்ட பார்க்கிறானா?” நவீன் கடுப்புடன் படபடக்க,
“நீ மனுசனா இருப்ப உன்கிட்ட பேசினா புரிஞ்சிப்பன்னு நினச்சு வந்தேன். ஆனா நீ...” வசீகரன் பற்களை நறநறத்தான்.
“நான் மனுசன் இல்லனு சொல்றீயா, யூ ராஸ்கல், உன்ன அடிச்சு விரட்டறத்துக்குள்ள மரியாதைய காப்பாத்திட்டு போயிடு.” நவீன் கத்தினான்.
“கத்தாதடா சுனாபுனாக்கி, போயும் போயும் உன்கிட்ட பேச வந்தேன் பாரு. என் டைம் வேஸ்ட்.” என்று அருவருப்பாக சொல்லிவிட்டு வசீகரன் வேகமாக வெளியேறிவிட்டான்.
நவீனின் முகத்தில் ஏகத்துக்கும் கோபம் ஏறியது. அவனின் கோபம் அப்படியே ரம்யாவின் வீட்டில் எதிரொலித்தது.
***
நன்றி ஃபிரண்ட்ஸ் 🫶🫶🫶
காதலாடுகிறது எந்தன் நெஞ்சம் அடுத்த எபி நாளைக்கு தரேன். இன்னைக்கு டைப்பிங் முடிக்க முடியாம போச்சு... நன்றி ஃபிரண்ட்ஸ் 🫶🫶🫶
Attachments
-
62.1 KB Views: 0