காதலில் கூத்து கட்டு
அத்தியாயம் 37
அன்று மாலை, திவ்யா தன் தந்தையின் வரவுக்காக வீட்டில் காத்திருந்தாள். திவ்யா காத்திருப்பதைக் கவனித்தும் கவனியாதது போல கடந்து நடந்தார் திவாகர். பல மாதங்கள் கடந்து வந்திருக்கும் மகளை ஒரு சிறு பார்வை பார்க்கக்கூட தோன்றவில்லை போல அந்த தந்தைக்கு.
“அப்பா... நான் திவ்யா, உங்களோட மூத்த பொண்ணு” அவரின் பாரா முகம் அவளை உசுப்பேற்ற, அவள் தன்னைத் தானே அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
நின்று திரும்பிய திவாகரின் கண்கள் இடுங்கின. “எனக்கும் ஞாபகம் இருக்கு” என்றார் குதர்க்கமாய்.
“பெத்த பொண்ணுங்களை வெறும் ஞாபகத்துல வச்சிருந்தா மட்டும் போதாது. எங்கமேல கொஞ்ச பாசமும் அக்கறையும் வைக்கணும்” திவ்யாவும் அதே குதர்க்கமாக அழுத்திச் சொல்ல,
“நான் பாசம், அக்கறை காட்டாம தான் இப்படி என் முன்னாடியே வளர்ந்து நின்னு தெனாவட்டா பேசறியா?” அவர் குரல் காட்டமாக ஒலித்தது.
திவ்யா முகம் சட்டென சிறுத்து போனது. உண்மையில் திவாகர் அவர்களிடம் அன்பும் அக்கறையும் காட்டாத தந்தை அல்ல. தன் மகள்கள் மீது அதிகம் பாசத்தை பொழிந்து வளர்த்தவர். மகள்கள் கேட்டது எதையும் மறுக்காமல் வாங்கி குவித்தவர். எப்போது அந்த பாசத்தில் விரிசல் விட தொடங்கியது?!
சசிதரனை தான் காதலிப்பதாக சொன்ன அன்றிலிருந்து அன்பை மட்டுமே காட்டிய தந்தை கொஞ்ச கொஞ்சமாக மறைந்து, பிடிவாதமும் அடக்குமுறையும் அவருள் முளைவிட தொடங்கி இருந்தது. ஏன் இந்த குணமாற்றம்? பிடித்தவனுடன் வாழ ஆசைப்படுவது அத்தனை பெரிய குற்றமா என்ன? பிடித்த பொருட்களை எல்லாம் மறு கேள்வியின்றி வாங்கி குவித்த அப்பா, எனக்கான திருமண வாழ்வில் என் பிடித்தத்தை எப்படி கழிக்க முன் வந்தார்?
முரண்பாடான கேள்விகள்! புரையோடிப்போன பதில்கள்!
“நீங்க வச்ச அந்த பாசம், அக்கறை இப்ப எங்க போச்சுப்பா? நானும் ரமியும் என்ன தப்பு பண்ணோம்னு இப்படி எங்களை ஒதுக்கி வச்சிருக்கீங்க?” குரல் கமற திவ்யா கேள்வி எழுப்பினாள்.
“பெத்து ஆசாபாசம் காட்டி, பார்த்து பார்த்து வளர்த்த எங்களை விட, அந்த பாழாப்போன காதல் தான உங்க ரெண்டு பேருக்கும் பெருசா போச்சு. எங்களை விட அவனுங்க தான உங்க ரெண்டு பேருக்கும் முக்கியமா போயிட்டாங்க?” அவர் பதில் அத்தனை ஆதங்கத்தை சுமந்து வந்தது.
“விருப்பப்பட்டவனோட வாழணும்னு ஆசைப்பட்டது தப்பாப்பா? உங்க பிடிவாதத்துக்காக நீங்க கை காட்ற எவனோ பிடிக்காதவனை கல்யாணம் பண்ணி இருந்தா நீங்க சந்தோஷப்பட்டு இருப்பீங்களா, இல்ல நானும் தான் மனசார வாழ்ந்து இருப்பேனா?” திவ்யா விடாது அவரிடம் கேட்டாள்.
“காதலிச்சவனை கட்டிட்டு நீ வாழறதை நானும் பார்த்துட்டு தான இருக்கேன். இப்படியொரு காதல், கல்யாணம் உனக்கு தேவையா?” அவரிடம் ஏளனம் வெளிப்பட்டது.
திவ்யா, “நானும் சசியும் பிரிஞ்சதுக்கு காரணம் புரிதலின்மை தான். பிரிஞ்சு இருந்தும் அவன என் சசின்னு தானே நினச்சு இருந்தேன். நாங்க வாழ கத்துக்கிறோம் ப்பா, சுக துக்கங்களை ஒரே மாதிரி கையாள தெரியல எங்களுக்கு. அதான் கொஞ்சம் தடுமாறிட்டோம்” தங்கள் தவறை அவள் வெளிப்படையாக தெரிவித்தாள்.
திவாகர், “என்ன மறுபடியும் உன் சசி புராணம் பாட ஆரம்பிச்சுட்ட, அவனோட வாழ மாட்டேன், டைவர்ஸ் வேணும்ன்ற அளவுக்கு குதிச்சதெல்லாம் மறந்துபோச்சா?” அவரிடம் கேலி இழையோடியது.
“மனசு பொறுக்காம சொன்னது அதெல்லாம், அப்படி சொல்லி கூட எனக்கு சசிய விட்டு மொத்தமா விலக மனசு வரலையே” திவ்யா உணர்ச்சிவசமானாள்.
“சரி தான். இப்ப என்ன உன் மனசை மாத்திக்கிட்டியா? உன் உத்தம புருஷனோட சேர்ந்து வாழற முடிவுல இருக்க அதான, நல்லது. அவனோட போறதுனா நீ தாராளமா போலாம். உன் முடிவுல நான் எப்பவும் தலையிட மாட்டேன்” திவாகர் விட்டெத்தியாக சொல்ல, மகளுக்கு மனது சுணங்கி போனது.
“இப்படி நீங்க விட்டத்தியா பேசறது நல்லால்ல ப்பா. ஆமா, நானும் சசியும் சேர்ந்து வாழ முடிவெடுத்து இருக்கோம். அதோட, வசி, ரமிய நம்ம குடும்பத்தோட சேர்க்க நினைக்கிறோம்” அவள் சொல்லவும், திவாகர் முகம் கறுகலானது.
“நீ உன் புருஷன் கூட போறதுனா போயிக்கோ, அதைவிட்டு அந்த பொறுக்கி பயலையும் ஓடுகாலி தங்கையயும் இந்த வீட்டுல சேர்க்க நினைச்ச… நான் மனுசனா இருக்க மாட்டேன்” அவர் சொற்கள் கொதித்து விழுந்தன.
“அப்பா… அவ நம்ம ரமிப்பா, சின்ன பொண்ணு, ஏதோ இக்கட்டுல உங்க பேச்ச மீறி போயிட்டா தப்பு தான் அதுக்காக அவளை மொத்தமா ஒதுக்கிடுவீங்களா?” திவ்யா மனம் தாங்கவில்லை. நிஜத்தில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அவளை வலிக்கச் செய்தது.
திவாகர், “இப்ப என்ன சொல்ல வர நீ. தெளிவா பேசு என் நேரத்த வேஸ்ட் பண்ணாத.”
திவ்யா, “உங்க பொண்ணோட வாழ்க்கைய பத்தி பேசறது உங்களுக்கு டைம் வேஸ்ட்டா ப்பா?”
அவர் அலுப்பாக தலையசைத்து நகர போக, “அப்பா…” திவ்யாவின் அழுத்தமான அழைப்பு அவரை நிறுத்தியது. “ரமிய நாம ஏத்துக்கலாம் ப்பா ப்ளீஸ், தவறி ஒருமுறை உங்க பேச்சை மீறி போனா, நீங்க மன்னிக்க கூடாதா?” என்றாள் கெஞ்சலாக.
“அவளை எதுக்கு நாம ஏத்துக்கணும், அவளுக்கு நீ சப்போட்டா? நாம வேணாம்னு தான அவனோட போனா” திவாகர் எதற்கும் இறங்கி வருவதாக இல்லை.
“நம்ம ரமி ஒரு சின்ன வாடகை வீட்டுல எந்த ஆதரவும் இல்லாம இருக்காப்பா, நாமெல்லாம் இருந்தும் அவளுக்கு இந்த நிலமை வர விடலாமா?”
“இந்த நிலமை அவளுக்கு அவளே ஏற்படுத்திக்கிட்டது. நல்லா அனுபவிக்கட்டும். அப்ப தான் இந்த அப்பனோட அருமை புரியும் அவளுக்கு.”
“ப்ளீஸ் ப்பா, இந்த பிடிவாதத்தை வச்சுட்டு நீங்க என்ன செய்ய போறீங்க? ரமிய கூப்பிடுங்க. சிதறி இருக்க நம்ம குடும்பம் ஒன்னா சேரணும். வெறுமையா இருக்குற இந்த வீடு மறுபடி கலகலப்பா ஆகணும்” திவ்யா கிட்டத்தட்ட வேண்டினாள் அவரிடம்.
அவளை மறுத்து சொல்ல வாயெடுத்தவருக்கு சட்டென எதுவோ யோசனை வந்து போனது. சற்று நேரம் நிதானமாக முகவாயை தேய்த்தப்படி யோசித்தவர், பின்பு ஒரு முடிவுடன் சொன்னார்.
“என்னை பொறுத்தவரைக்கும் நீயும் ரமியும் ஒன்னு தான். ரெண்டு பேரும் என்னை மதிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. எப்பவும் உங்க ரெண்டு பேரையும் என்னால முழுசா மன்னிச்சு ஏத்துக்க முடியாது. ஆனா பெத்த கடமைனு ஒன்னு இருக்கே அதுக்காக மட்டும் தான் இறங்கி வரேன்” என்றவர் உடன் தன் முடிவை சொல்ல, திவ்யாவின் கண்கள் விரிந்தன. குழப்பமாக நின்றாள் அவள்.
***
வாசலில் அழைப்பு மணி ஓசை எழுப்ப, “வரேன்…” குரல் கொடுத்தபடி ஓடிவந்து கதவைத் திறந்தவளை விரிந்த புன்னகையுடன் எதிர்கொண்டவன் முகம், அவள் வந்து நின்ற கோலத்தில் சிரிப்பை உதிர்த்தது.
கொத்தாக சேர்த்து ஒற்றை பிடிப்பானுக்குள் அடைத்தும் அடங்காத அவளின் கற்றை கூந்தல் கலைந்து முகத்தில் வழிந்திருக்க, பிறை நெற்றியிலும் கழுத்திலும் மஞ்சள் தூளோ வேறேதோ மாவோ அங்கங்கே பூசி இருக்க, அவளின் சோர்ந்த முகமும் வியர்வையில் நனைந்திருந்த மேல் சட்டையும், அவனுக்காக மின்னிய அவளின் கண்களின் பளபளப்பும் வசீகரனை எங்கோ வான வீதியில் ஏற்றி இறக்குவதாய்.
வீட்டுக்குள் நுழைந்தவன் பார்வையில் குறும்புகள் மிளிர, ரம்யாவை மேலும் கீழும் பார்த்து, “சும்மா சொல்ல கூடாதுடி, மிடில்கிளாஸ் பொண்டாட்டிக்கு ஏத்த பத்து பொருத்தமும் உனக்கு பக்காவா பொருந்தி வந்திருக்கு, கலக்கிற டன்டனக்கா” என்றான் கண்ணடித்து.
“ஏய், என்னை டன்டனக்கா சொன்ன எனக்கு கெட்ட கோபம் வந்திடும், சொல்லிட்டேன்” ரம்யா அவளின் குட்டி விரல் நீட்டி அவனை மிரட்ட, அவள் மென்விரலை பிடித்து தன்புறம் இழுத்தவன், “இன்னும் அந்த ரிங்டோனை தானடி மாத்தாம வச்சிருக்க, வேறெப்படி கூப்பிட உன்ன” அவளை வம்பிழுக்கலானான்.
“அந்த ரிங்க்டோன் கேட்டாலே சும்மா உடம்புக்குள்ள ஒரு எனர்ஜி ஏறுது மாமு, அதான் வச்சிருக்கேன். அதுல என்ன குத்தம் கண்டுபிடிச்ச நீ” என்றவள் அவன் நெருக்கத்தில் இதமான மல்லிகையின் வாசத்தை உணர்ந்தாள்.
இப்போது தான் அவன் ஒற்றை கரம் பின்னால் மறைந்து இருப்பதை கவனித்து, “மிஸ்டர் மிடில்கிளாஸ், என்ன இன்னிக்கு மணக்குறீங்க? என்ன விசயம்?” ரம்யா புருவம் உயர்த்தி தோரணையாக வினவ, முதல்முறை வசியின் முகத்தில் அசடு வழியலானது.
தன் முதுகு புறம் மறைத்திருந்த மல்லிகை பூவை அவளிடம் நீட்டியவன் முகத்தில் ஏதோவொரு விதமான சங்கடமும் தவிப்பும்.
வழியில் ஏதோ ஆர்வத்தில் பூவை வாங்கி வந்துவிட்டான் தான், இத்தனை நாட்கள் ஊடலுக்கு பிறகு இப்படி பூ வாங்கி தருவது, ஏதோ பழைய பட காட்சி போல அசட்டுத்தனமாக தெரிந்தது இப்போது.
“ஆஹா… சார் இன்னிக்கு ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல” ரம்யா அவனை விடாமல் கிண்டல் செய்ய, நிஜமாகவே அவனுக்கு வெட்கம் வந்து தொலைத்தது. அவன் ஆண்மை மிளிரும் முகம் இளகி குறுகுறுப்பதாய்.
“ஏய் மாமு, நீ வெட்கப்படுறீயா! அச்சோ எவ்ளோ கியூட்டா இருக்கடா மாமு நீ” ரம்யா அவன் கன்னம் கிள்ளி ரசித்து கொஞ்ச, “ஏய் போடி, நான் குளிக்கணும்” என்று நழுவி சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
ரம்யாவின் கலகலத்த சிரிப்பு சத்தம் அவன் பின்னோடு மோதியது.
‘ச்சே, என்ன கண்றாவி ஃபீல் இது, இப்படி தவிப்பா இருந்து தொலைக்குது. ஒத்த பூ வாங்கிட்டு வந்ததுக்கா இப்படி. இதுல வெட்கம் வேறையாம். ஆம்பளைக்கு போய் வெக்கம் வருமா என்ன? அதெல்லாம் பொண்ணுங்க டிபார்ட்மெண்ட் தானே, இந்த ராட்சசி என்னை வேணுமுன்னே கலாய்க்கிறா, இருக்கு அவளுக்கு’ குளியலோடு தனக்குள் புலம்பிக் கொண்டான் வசீகரன்.
வசீகரன் குளித்து தயாராகி வர, ரம்யா சமையலை முடித்திருந்தாள். “நான் தான் வரேன்னு மெஸேஜ் பண்ணேன் இல்ல, அதுக்குள்ள நீயே தனியா ஏன் இப்படி கிட்சன்ல வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்க புஷி” அவன் அவள் சோர்வைக் கண்டு அக்கறையாக கேட்க,
“சும்மா தான் மாமு, நானே செய்யணும்னு தோனுச்சு அதான்” அவளிடம் ஒரு பெருமிதம் கூட ஒட்டி இருந்தது.
“அப்படி என்ன ஸ்பெஷலா செஞ்சு வச்சிருக்க?” கேட்டபடி பாத்திரங்களை திறந்து பார்க்க, “வாவ்! வெஜ் புலாவ், எக் கறி செம காமினேஷன். அப்புறம் தயிர் பச்சடி ஓகே, இதென்ன? கேரட் அல்வா, கலக்குற ரம்யா” என்று மனைவியை சிலாகித்தவன், “இவ்வளவும் நீ தனியாவா செஞ்ச?” என்றான் நம்பாமல்.
ஆமென்று தலையாட்டியவள், “இருக்கறதுலயே சிம்புளா பார்த்து வெறும் நாலு ஐட்டம் தான் செஞ்சேன் மாமு” என்றாள் சின்னக்குரலில். அவர்கள் வீட்டில் என்றால் குறைந்தது பத்து வகைகளாவது இருக்கும் என்று எண்ணம் ஓடுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
“நீ என்ன செஞ்சாலும் அது எனக்கு ஸ்பெஷல் தான்டீ” என்று செல்லம் கொஞ்சி அவள் வியர்வை படிந்த நெற்றியில் தன் இதழ் ஒற்றி எடுத்தான்.
“புது பொண்டாட்டில அதான் இப்படி சொல்ற, ரெண்டு வருசம் கழிச்சு என்ன சொல்லுவியோ?” ரம்யா நொடித்துக் கொண்டு விலகி நின்றாள்.
“அடி பக்கி, இப்போ இந்த நிமிசத்தை பாருடீ. ரெண்டு வருஷம் கழிச்சு யோசிச்சு இப்பவே ஏன் புலம்பற” என்று அவள் தலையில் தட்டியவன், அவளைச் சுழற்றி பின்னோடு அணைத்து, “ரெண்டு வருஷம் கழிச்சு நான் மட்டும் இல்ல நீயும் தான்டீ மாறிடுவ, நம்ம ரெண்டு பேருக்கும் மாற்றம் இருக்கும், புரிஞ்சுதா?” அவன் சொன்ன நிதர்சனம் அவளுக்கும் புரியத்தான் செய்தது.
“அச்சோ விடு மாமு, கசகசன்னு இருக்கேன். நான் போய் குளிச்சிட்டு வந்திறேன், நீ சாப்பிட எல்லாத்தையும் எடுத்து வை” என்றுவிட்டு அவன் பிடியிலிருந்து நழுவிச் சென்றாள்.
சிரித்துக் கொண்டவன், “ஏய், சீக்கிரம் வாடி எனக்கு செம பசி” என்று குரல் கொடுத்துவிட்டு, சமைத்த பாத்திரங்களை ஹாலில் எடுத்து வைத்து, அறைக்குள் சென்று இலகுவான உடைமாற்றி வந்தான். இன்னமும் ரம்யா வந்திருக்கவில்லை. ஏதோ பாடலை ஹம் செய்தபடி, அழுக்கு பாத்திரங்களை சிங்கில் எடுத்துபோட்டு, சமையல் மேடை, அடுப்பை துடைத்து சுத்தம் செய்து முடித்துவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டான்.
“மாமு...” ரம்யாவின் அழைப்பில் நாணம் இழையோடியது. திரும்பி பார்த்தான். மஞ்சள் நிற டாப், இளம்பச்சை லாங் ஸ்கர்ட்டில் அப்போது தான் மழையில் நனைந்த மஞ்சள் ரோஜா போல புத்துணர்வாக தெரிந்தாள். அவன் தந்த மல்லிகை சரம் அவள் கூந்தலை விட நீளமாய் அவள் தோளை தொட்டிருந்தது.
ஒற்றை கண்ணை மூடி, அவளை ரசனையாக பார்த்தவன், “அதெப்படி வர வர நீ என் கண்ணுக்கு அழகா வேற தெரிஞ்சு தொலைக்கிற! என் கண்ணுல தான் ஏதோ ஃபால்ட் போல, சீக்கிரம் டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிக்கணும்” வசீகரன் தீவிரமாக சொல்ல, ரம்யா பற்களைக் கடித்துக்கொண்டு அவனை அடிக்க பாய்ந்தாள்.
அவள் கையைத் தடுத்து பிடித்தவன், “ராட்சசி, இன்னிக்கு உனக்கு ஒரு குட் நியூஸ் இருக்கு, சொல்லட்டுமா? வேண்டாவா?” அவளிடம் தர்க்கம் பேச, “நீ முதல்ல விசயத்தை சொல்லு, அது குட் நியூஸா, இல்லையான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்” அவள் முறுக்கி திருப்பிக் கொண்டாள்.
வசீகரன் மென்னகையுடன், ஒரு ஸ்பூன் கேரட் அல்வாவை எடுத்து அவள் வாயில் திணித்து, “சசியும் திவியும் காம்ப்ரமைஸ் ஆகிட்டாங்க, சேர்ந்து வாழறதா முடிவெடுத்து இருக்காங்க” என்றான்.
நாவில் நழுவிய இனிப்பை விட, அவன் சொன்ன சேதி அவளுக்குள் அத்தனை தித்திப்பதாய். “நிஜமே நிஜமா மாமு! ஹேய்ய் ரொம்ப ஹேப்பீ மச்சீ… அவங்க மொத்தமா பிரிஞ்சிடுவாங்களோன்னு ரொம்ப பயந்துட்டே இருந்தேன் தெரியுமா, இப்ப தான் நிம்மதியா இருக்கு” என்றவளிடம் அத்தனை ஆசுவாசம். அவன் முகத்திலும் அதே ஆசுவாசம்.
“இன்னைக்கு நம்ம ஸ்டூடியோவுக்கு நேர்ல வந்து சசி தான் சொன்னான்” வசீகரன் மிதமான குரலில் சொல்ல, ரம்யா எழுந்து குதித்தே விட்டாள். “சசி மாமா உன்கிட்ட பேசிட்டாங்களா? அவங்க கோபம் போயிடுச்சா! இன்னைக்கு நிறைய நிறைய ஸ்வீட் நியூஸா கொடுக்கற மாமு” என்றவள் உற்சாக மிகுதியில் அவன் கன்னத்தில் அழுந்த இதழ் புதைத்து மீள, “வர வர நீ ரொம்ப தேறிட்ட டீ” என்றவன் கைகள் அவளை தன்னுள் அடக்கிக் கொண்டன.
“மாமு பசிக்குதுன்னு சொல்லிட்டு, சாப்பிடாம என்கிட்ட வம்பு இழுக்கற நீ” ரம்யா அவனிடம் குறைப்பட்டு கொள்ள, “நீதானடி என்னை உசுப்பி விட்ட” என்று அவளை குற்றஞ்சாட்டி விலக்கி அமர வைத்தான்.
சசிதரன் தங்களை வீட்டிற்கு அழைப்பு விடுத்ததைப் பற்றி ரம்யாவிடம் சொல்லி அவளை குழப்ப விரும்பவில்லை அவன்.
இருவருக்கும் பசி இருக்கத்தான் செய்தது. உணவை பரிமாறி உண்ணத் தொடங்கினர். உணவினூடே ரம்யா, வசீகரன் முகத்தை இமையசையாது பார்த்து, “சசி மாமாவ நீ ரொம்ப மிஸ் பண்ண தான மாமு, இப்ப அவங்க வந்து பேசினதுல நீ ஹேப்பி தானே மாமு” என்றாள்.
“ம்ம்” என்று மௌனமாக தலையசைத்தவன், “நீயும் திவி அண்ணி, உன் ஃபேமிலிய மிஸ் பண்ற தான ரமி?” என்று கேட்டான்.
“ம்ம்” என்றவள், “திவிக்காவ பார்த்து ரொம்ப நாளாச்சு, நான் சமைக்க கத்துக்கிட்டேன், வீட்டு வேலை செய்ய கத்துக்கிட்டேன்னு சொல்லணும்னு ஆசையா இருக்கு. அப்புறம் நீ என்னை சும்மா சும்மா சண்டைக்கு இழுக்குறல்ல, அதையும் அவகிட்ட சொல்லணும், வேற யார்கிட்டையும் உன்னபத்தி கம்ப்ளைன்ட் பண்ண முடியாதில்ல… ஆனா, அக்கா தான் என்கிட்ட பேசவே மாட்டேங்கிறாளே, எப்படி இதெல்லாம் சொல்றது?” குரல் தேய உதட்டை பிதுக்கி கொண்டாள்.
ஒரு வாய் உணவெடுத்து அவளுக்கு ஊட்டி விட்டவன், “உன்கிட்ட பேசாம எங்க போக போறாங்க, சீக்கிரம் பேசுவாங்க பாரு” என்று தேறுதல் சொல்ல, அவளும் சரியென்று சமத்தாய் தலையாட்டிக் கொண்டாள்.
***
இரவு சாலையில் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. காரின் உள்ளே திவ்யா, சசிதரன் இருவரிடமும் பேச்சுக்கள் இல்லை. இருவேறு சிந்தனைகள் அவர்களை வெவ்வேறு புறம் அலைகழித்துக் கொண்டிருந்தது.
“வசீ என்ன சொன்னான்?” திவ்யா தான் முதல் பேச்செடுத்தாள்.
“அவனுக்கும் வீட்டுக்கு வரணும்னு ஆசை தானாம். அவங்க கல்யாணத்தை உங்க வீட்டுலயும் ஏத்துக்கணும்னு சொல்றான்” சசிதரன் சொல்வது திவ்யாவிற்கு சரியாய் விளங்கவில்லை.
“ஏன் அப்படி சொன்னான்? எங்க வீட்டுல அவனை ஏத்துக்கலனா என்னவாம் அவனுக்கு?”
சசிதரன், “அதுக்கு அவன் வித்தியாசமா ஒரு விளக்கம் வேற சொன்னான்” என்று வசீகரன் சொன்னதை அப்படியே ஒப்புவித்தான்.
‘இப்ப எனக்கு அவ, அவளுக்கு நான் மட்டும்னு இருக்கும்போதே சிலமுறை ஏதோ வேகத்துல பேசி அவளை கஷ்டப்படுத்திறேன். சில நேரம் அவளும் ஏதாச்சும் லூசுதனமா பண்ணி என்னை டென்ஷன் பண்ணிடுறா… எங்களுக்குள்ள இன்னும் அத்தனை பக்குவம் வரலண்ணா. ரமி இன்னும் விளையாட்டுதனமா தான் இருக்கா... நான் நம்ம வீட்டோட வந்துட்டா எனக்கு நீங்க, வீடு எல்லாமே கிடைச்சிடும். ஆனா ரமிக்கு!? அவ்வளோ ஈஸியா நம்ம மாமனார் என்னையும் ரமியையும் ஏத்துக்க மாட்டாரு. அது ரமிக்கு ஃபீலாகும்… அவ ஃபீல் பண்ணா எனக்கு பார்க்க சகிக்காது ண்ணா’ என்று புன்னகைத்தவன்,
‘இன்னும் கொஞ்ச நாள் தான், நம்ம மாமனாரே என்னை நிமிர்ந்து பார்க்குற லெவலுக்கு வந்துடுவேன், அப்ப அவரோட வறட்டு பிடிவாதம் கொஞ்சம் இறங்கிவரும். எங்களை ஏத்துக்க சம்மதிச்சு அவரும் இறங்கி வருவாரு. அதுவரைக்கும் காத்திருக்கோம். நான் சொன்ன ஒத்த வார்த்தைய நம்பி என்கூட வந்தாண்ணா, அவளுக்காக எப்பவும் நான் இருக்கணும். எனக்கு கிடைக்கிற எல்லா சந்தோசமும் அவளுக்கும் கிடைக்கணும் எந்த பாராபட்சமும் இல்லாம.’
“நிஜமா வசியா இப்படி சொன்னான்? நம்பவே முடியல. ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்ப நம்பிக்கை வருது, அவன் கூட ரமி நல்லா தான் இருப்பா” திவ்யா வியப்பும் நிறைவுமாக சொல்ல, சசிதரன் மனைவியை வித்தியாசமாய் பார்த்து வைத்தான்.
“எனக்கு புரியல திவி, வெத்து காரணம் சொல்லி வீட்டோட சேராம, அவனையும் அவளையும் கஷ்டப்படுத்திக்கிட்டு, அம்மா, பாட்டியையும் கூட கஷ்டப்படுத்துறான்” அவன் சலித்துக்கொள்ள,
“உன் மரமண்டைக்கு அதெல்லாம் புரியாது சசி, பொண்ணுங்க உங்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எல்லாம் செய்யணும்னு நினைக்கிறீங்க இல்ல, அதே தான் இதுவும். பசங்க நீங்களும் எங்களுக்காக உண்மையா இருக்கணும் எதையும் செய்யணும்னு எதிர்பார்ப்பு இருக்கும். உனக்கெல்லாம் அதைப்பத்தி நினப்பு கூட இருக்காது. நான் உன்கூட இருந்தா மட்டும் போதும் உனக்கு. பட், வசீ, ரமீய புரிஞ்சு வச்சிருக்கான். அவளுக்காக யோசிக்கிறான். இதைவிட என்ன வேணும். ரமீ உண்மையிலயே கொடுத்து வச்சவ தான்” திவ்யா உணர்ந்து சொன்னாள்.
“அப்ப நான் உன்ன பத்தி யோசிக்கலனு சொல்றீயா?” சசிதரன் சற்று கோபமாக கேட்க,
“என்னை பத்தி யோசிக்கிறது வேற, எனக்காக யோசிக்கிறது வேற சசி, அதை உனக்கு சொன்னாலும் புரியாது விடு” என்றவளைப் பார்த்து பற்களை நறநறத்துக் கொண்டான்.
“சரி சொல்லு, உன் அப்பன் என்ன முடிவா சொன்னாரு?” கடுப்பாகவே சசிதரனின் கேள்வி வந்தது.
“உன் தம்பி மாதிரி அவர் பக்கம் பக்கமா பேசல, ஒரே டைலாக்ல என்னை ஆஃப் பண்ணிட்டாரு” என்றதும் அவன் கேள்வியாக பார்க்க,
“நீயும் வசீயும் வீட்டோட மாப்பிளையா வரதா இருந்தா, அவர் ஏத்துக்க தயாரா இருக்காராம், அதுவும் அவர் பெத்த கடனுக்காக மட்டும் தானாம்” என்றாள் தகவலாய்.
“இருந்தாலும் உன் அப்பன் கேடி தான், என்னையும் வசீயையும் வீட்டோட வச்சு செய்யலாம்னு என்னமா பிளான் பண்ணி இருக்காரு” சசிதரன் அலுத்தபடி தலையசைக்க,
“ஏன் எனக்காக நீ எங்க வீட்டோட வர மாட்டியா?” திவ்யா அவனை கூர்மையாக பார்த்துக் கேட்டாள்.
இதுவே பழைய சசிதரனாக இருந்தால், தன் ஆண்வர்க்க திமிரை பறைசாற்றும் வசனங்களைப் பேசி அவளிடம் துள்ளி இருப்பான். இப்போது, இந்த ஒரு வருசம் பட்டறிவு அவனை சுதாரிக்க வைத்திருந்தது. எனவே, “நான் அப்படி சொல்லவே இல்லயே, நீ எனக்காக எங்க வீட்டு மருமகளா வந்து வாழும்போது, நான் உனக்காக உங்க வீட்டு மாப்பிள்ளையா வந்து வாழ மாட்டேனா?” அவன் அந்தர் பல்டி அடித்ததில், திவ்யா வாய்விட்டு சிரித்து விட்டாள்.
“ஆஹா, ஹௌ ஸ்வீட் ஆஃப் யூ” முகம் பளபளக்க கணவனை சிலாகித்தவள், “நீ சொன்னதே போதும் சசி, உன்ன நான் அவ்வளோ எல்லாம் கஷ்டப்படுத்த மாட்டேன். அதோட அப்பா ஒன்னும் எங்க மேல இருக்க பாசத்துல சொல்லல, உன்னயும் வசீயையும் அவர் கட்டுப்பாட்டுல வச்சுக்கணும்ற எண்ணத்துல தான் சொல்லி இருக்காரு” என்றவள் பெருமூச்செறிந்தாள்.
‘அப்பாடா’ நிம்மதியாக புன்னகைத்தவன், “உங்க அம்மா, நமக்காக உங்க அப்பாகிட்ட பேச மாட்டாங்களா?” என்று வினவினான்.
“சான்சே இல்ல, அம்மா எப்பவுமே அப்பா பக்கம் தான், அவங்களுக்கு அப்பா மேல அப்படியொரு க்ரஷ், ஒரு ஹீரோ ரேன்ஜ்க்கு கூட சொல்லலாம். வில்லன போய் ஹீரோ ரேன்ஜ்ல வச்சிருக்க ஒரே ஆள் நீதான்ம்மான்னு ரமி கூட அடிக்கடி அம்மாவ கேலி பண்ணுவா” என்றாள் திவ்யா.
“உங்கப்பா உண்மையிலே வேர்ல்ட் லக்கியஸ்ட் மேன் யா, நானும் இருக்கேனே” சசிதரன் நொந்துகொள்ள, முறைத்தவள், “உனக்கு நானே போதும்” என்று நொடித்தாள்.
ரயில் நிலையம் வந்து திவ்யாவை ரயிலேற்றியவன் அவள் கையைப் பிடித்து, “இன்னும் ரொம்ப நாள் காக்க வைக்காதடி, சீக்கிரம் இங்கேயே வந்திடு” என்றான் ஏக்கமாய்.
திவ்யாவின் பார்வை அவனை மென்மையாய் வருடியது. “வேலைய டக்குனு விட முடியுமா சசி, எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வந்திறேன்” என்றவள் தலையசைத்து விடைபெற, அவனும் சம்மதமாக தலையாட்டி விடை கொடுத்தான்.
சேர்ந்து வாழ சம்மதம் சொன்னாலும் திவ்யாவிடம் ஏதோவொரு ஒதுக்கம் இருப்பது அவனுக்குப் புரிந்தது. இம்முறை அவன் அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பொறுத்திருக்க முயன்றான்.
***
நன்றி மக்களே 🫶🫶🫶
நன்றி மக்களே 🫶🫶🫶