காதல் அடைமழை காலம் - 02 (2)

#1
2019-10-08-16-39-03-866.jpg

அத்தியாயம் 03


மைசராவை வற்புறுத்தி கிளம்ப வைத்துவிட்டாலும் தன் தோழி தனியாக பயணம் செய்வதில் ரிதாவுக்கு கலக்கம் தான். வெளியில் தான் மிகவும் தைரியமான பெண்ணாக காட்டி கொள்ளும் மைசரா உண்மையில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். தன் அன்பு கட்டளைக்கு இணங்கி தனித்து வருபவளை பாதுகாக்க வேண்டி அவளுக்காக பிராத்தனை செய்து கொண்டாள் ரிதா. ஹாலில் அமர்ந்திருந்த தங்கையின் கசங்கிய முகத்தை கண்ட ரமீஸ் அவளது அருகில் வந்து அமர்ந்தான்.

“ என்ன குட்டி மா…..வாடி போய் உட்கார்ந்திருக்க? ஏதும் பிரச்சனையா?” என ஆறுதலாய் வினவினான்.

“ என் ப்ரெண்ட் இஷ்ரத் கடைசி நேரத்தில வரல னு சொல்லிட்டா காகா.”

“அச்சச்சோ அப்போ….மைசரா?” அதிர்ச்சியும் வருத்தமும் விரவிய குரலில் கேட்டானவன்.

“அவளும் வரல னு தான் சொன்னா….நான் தான் வற்புறுத்தி வண்டி ஏற வைச்சிருக்கேன். ஆனா அவ தனியா வரத நினைச்சா பயம்மா இருக்கு காகா”

“சாச்சி( சித்தி)… என்ன சொன்னாங்க?”

“சா…சாச்சிக்கு தெரியாது. இங்க வந்ததுக்கு அப்புறம் சொல்லிக்கலாம் னு சொன்னேன்” தயக்கமாய் கூறினாள் ரிதா.

“ம்ப்ச்…ஏன் ரிதா? அவங்க கண்டிப்பு பற்றி உனக்கு தெரியாதா? அவங்க கிட்ட தனியா வர்றத சொல்லாம இருந்தா கண்டிப்பா அவங்க மைசரா கிட்ட கோபப்படுவாங்க”

“அவங்க கிட்ட கேட்டா சராவை தனியா அனுப்புவாங்க னு நினைக்கிறியா?”

“அனுப்ப மாட்டாங்க தான்”

“சரா வரலனா உனக்கு பரவாயில்லையா?”

“ம்ஹூம்…அவ கண்டிப்பா வரணும்”
“அதுக்கு தான் இப்படி பண்ணேன். அவ வந்து சேர வரைக்கும் அவளுக்காக துவா(பிராத்தனை) செய்துட்டு இருக்கேன்.”

“பயப்படாத ரிதா. அவ நம்ம வீட்டு பசங்க கூட தான் வர்றா”

“எப்படி?” ஆச்சரியத்தில் விழி விரிய கேட்டாள் ரிதா.

“நான் தானே எல்லாருக்கும் டிக்கெட் போட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் தனியா வர வேண்டாமே ன்னு நம்ம வீட்டு பசங்க கூட சேர்த்து தான் போட்டேன். இப்போ ரிஸ்வி,மன்சூர்,அவன் ப்ரெண்ட்ஸ் அப்புறம் நம்ம மைசரா எல்லாரும் ஒன்னா தான் வந்திட்டு இருப்பாங்க.” என்றதும் சந்தோஷம் தாங்கவில்லை ரிதாக்கு.

“சூப்பர் காகா….சூப்பர்…..முதல்ல கைய குடு. ஆனா நம்ம வீட்டு பெங்களூர் புலி எப்படி இதுல சேர்ந்துச்சு?” என ஆர்வமாக கேட்டாள் ரிதா.

“ரிஸ்விய சொல்றியா? புலி இங்க ஒரு கான்பிரன்ஸ்க்கு வந்துச்சு….வலைய(டிக்கெட்) போட்டு வந்து தான் ஆகணும் னு கூண்டுல ஏத்திட்டேன்…உனக்கு ஏதும் வருத்தமா?” ஓரக் கண்ணால் தங்கையை பார்த்தபடி கேட்டான்.

“ சே…. சே…மச்சான் வரதுல எனக்கென வருத்தம்? சந்தோஷம் தான்” என்றாள் அண்ணனின் நோக்கம் புரிந்தபடி.

“ ஓ.கே… ஓ.கே… நம்பிட்டேன்”

“சரி…. சரி…. முதல்ல சராவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்றேன் அப்போ தான் அவ பயப்படாம வருவா.” பேச்சை மாற்றும் விதமாக கூறியவள், “ஆச்சா….(தந்தை வழி பாட்டி… வாப்சா என்பது மருவி ஆச்சா என்றாகிவிட்டது)….என் போன் எடுத்துட்டு வாங்களேன்” என உள்ளே குரல் கொடுத்தாள். எழுபத்தைந்து வயதிலும் நடமாடுமளவு திடமாக இருந்த கமர் வாப்சா, தனது பேத்தியிடம் அவளது அலைபேசியை கொண்டு வந்து கொடுத்து விட்டு அருகே அமர்ந்தார். சிவந்த நிறம், வட்ட முகம், சராசரி உயரம், கனிவும் கம்பீரமும் கலந்த பார்வை என பார்ப்போரின் மனதில் மரியாதையும் பணிவும் ஏற்படுத்தும் தோற்றம். அந்த குடும்பத்தின் ஆலமரம். தன் பல விழுதுகளை இழந்துவிட்டாலும் தன் நிழலில் எஞ்சி நிற்கும் குருத்துகளை அரவணைக்கும் ஆணிவேர்.

“என்ன….. மைசரா கிளம்பிட்டாளா?” சற்றே சுவாரசியமில்லா குரலில் வினவினார் கமர்.

“கிளம்பிட்டா ஆச்சா…. தயவுசெய்து உங்க கோபத்தையெல்லாம் அவ கிட்ட காட்டிடாதீங்க…. அவ என் கெஸ்ட்….” என அறிவுறுத்தினாள் ரிதா.

“நான் ஏன் அவ கிட்ட கோபத்தை காட்ட போறேன்?அவ மேல எனக்கென்ன கோபம்? ஆனாலும் ரிதா நீ செய்ற வேலை எனக்கொன்னும் சரியா படல. உன் மாமிகாரிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது….அவ்வளவு தான்…வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சிடுவா”

“ஹா…ஹா…ஆச்சா…உலகத்திலேயே மகளுக்கு பயப்படற முதல் உம்மா நீங்க தான்” என சிரித்தான் ரமீஸ்.

“அதானே?” என ரிதாவும் ஒத்து ஊதினாள்.

“ம்….என்ன செய்றது? ரசியா குணம் அப்படி தான். சின்ன வயதிலிருந்தே கொஞ்சம் முரட்டு சுபாவம்.”

“அதெல்லாம் இல்லை. அவங்க சின்ன புள்ளயா இருக்கும் போதே நீங்க மண்டையில நாலு கொட்டு கொட்டி வளர்த்திருக்கணும்” என வாயடித்தாள் ரிதா.

“ஏலா….என்ன வாய் நீளுது? நாளைக்கு நீ அவ வீட்டுக்கு தான் வாக்கப்பட்டு போகணும்… மறந்துடாதா” என சீறினார் கமர்.

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. போன உடனே முதல் வேலை உங்க மக கொட்டத்தை அடக்குறது தான்” என தனது வாப்சாவை வெறுப்பேற்றினாள். ரிதா தங்களிடம் இப்படி பேசுவதும் தனது வருங்கால மாமியாரான ரசியாவை பார்த்ததும் பொட்டி பாம்பாய் அடங்குவதும் அவ்வப்போது நடப்பது தான்.

இவர்கள் செல்ல சண்டை போட்டு கொண்டிருக்க தனது இரவு உணவை முடித்து கொண்டு வந்தமர்ந்தார் ரியாஸ். கமரின் இளையமகன்.

“சாப்பிட்டீங்களா மக்களே….” என தனது அண்ணன் பிள்ளைகளை வாஞ்சையாய் விசாரித்தார்.

“ம்…. ஆச்சு சாச்சா (சித்தப்பா)”

“ பிள்ளைங்க எல்லாம் நல்லபடியா கிளம்பிட்டாங்களா? எத்தனை மணிக்கு வருவாங்க ரமீஸ்?”

“ எல்லாரும் கிளம்பிட்டாங்க சாச்சா… ராத்திரி ஒரு மணிக்கு ட்ரெயின் வரும். நான் கார் எடுத்துட்டு போய் அழைச்சிட்டு வந்திடுவேன்”

“கல்யாண மாப்பிள்ளை நீ எதுக்கு நேரங்கெட்ட நேரத்தில அலைஞ்சிட்டு இருக்கே. நான் போயிட்டு வரேன்” என்றார் அக்கறையாக.

“பரவாயில்லை சாச்சா…. கடையையும் பார்த்துகிட்டு…. கல்யாண வேலையையும் பார்த்துகிட்டு…. ஏற்கனவே நீங்க ரொம்ப டயர்ட்டா தெரியிறீங்க. நான் போய்கிறேன்…. ரிஸ்வி வந்துட்டா அப்புறம் நான் ப்ரீ தான். ஒன்றும் பிரச்சனையில்லை….” என அவரை சமாதானபடுத்தினான்.

“சரி தான். ரிஸ்வி வந்துட்டா நமக்கு கவலையில்லை. எல்லாத்தையும் அவனே பார்த்துப்பான். இன்னைக்கு உன் கடைக்கு ஏதோ லோடு வந்ததா இமாத் சொன்னானே ரமீஸ்… என்ன லோடுப்பா அது? இன்னைக்கு வர வேண்டிய லோடு ஏதும் இல்லையே?”

சற்று நேரம் அமைதியாக இருந்தவன்,” அது… வாப்பா உம்மாக்கு (அப்பா அம்மாவுக்கு) பாத்தியா (பாத்தியா என்பது இறந்தவர்களுக்காக செய்யப்படும் பூஜை) ஓதிட்டு இல்லாதவங்க ஐம்பது பேருக்கு துணிமணி கொடுக்கணும் னு சொல்லியிருந்தேன் இல்லையா? அதுக்காக வந்த லோடு சாச்சா” என முகம் இறுக கூறியவன் கமரின் புறம் திரும்பி,” வாப்சா…. லோடை வீட்லயே இறக்கி வைக்க சொன்னேனே? பசங்க ஒழுங்கா இறக்கிட்டானுங்களா?” என வினவினான்.

“அதெல்லாம் ஒழுங்கா இறக்கிட்டாங்க ரமீஸ்..... எல்லாத்தையும் தயாரா அடுக்கி வைச்சிருக்கேன்” என்றவரின் குரலும் கம்மியது. மூன்று வருடங்களுக்கு முன்பு விபத்தில் பறிகொடுத்த தனது மூத்த மகனையும், மருமகளையும் நினைத்து அவர் மனம் விம்மியது.

“ மூணு வருஷம் ஆயிடுச்சுமா. ஆனாலும் காகாவும் மச்சியும் (அண்ணனும் அண்ணியும்) இறந்து போனதை மனசு ஏத்துகிட மாட்டேங்குது.” ரியாஸ் மனம் வருந்தி கூறினார். ரமீஸ் தன் மடியில் சாய்ந்து கண்ணீர் விடும் ரிதாவை தன்னோடு அணைத்து கொண்டான்.

அனைவரும் ஒருவித இறுக்கத்தில் உழன்று கொண்டிருக்க, ரியாஸின் மனைவியான சனோபர் வந்து கணவனை அதட்டினார்.” என்னங்க நீங்க…... ரிதா முன்னாடி எதுக்கு இந்த விஷயத்தை பற்றி பேசுனீங்க? பாருங்க புள்ள அழ ஆரம்பிச்சிட்டா” என்றாள் கவலையாக. அப்போது தான் ரிதா அங்கிருப்பது நினைவில் உரைக்க பதறி போய் அவளை சமாதானம் செய்தார் ரியாஸ்.

“செல்லக்குட்டி அழாதேடா…. சாச்சா ஏதோ ஞாபகத்துல பேசிட்டேன். நீ அதையே நினைச்சிட்டு இருக்காதேடா” அவரோடு சேர்ந்து மற்றவர்களும் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்ற முயன்றனர்.

“ரிதா மா…..அழ கூடாது. எல்லாத்தையும் கடந்து வர கற்றுக்கணும் மா….” என ரமீஸ் தங்கையை தேற்ற, ஆனால் அவள் அழுகை நின்ற பாடில்லை. மேலும் மேலும் அவளின் அழுகை கூட , அவளை ஆறுதல்படுத்தும் வழி தெரியாமல் அனைவரும் அவளை கவலையாய் பார்த்தனர். ரமீஸின் கையை அழுத்திய கமர், கண்களால் பேரனிடம் எதையோ உணர்த்தினார். அதை கவனித்த சனோபர் தானாவே உள்ளே சென்று ஒரு மாத்திரையையும் தண்ணீரையும் கொண்டு வந்து ரமீஸிடம் கொடுத்தாள்.

தன் மடியில் படுத்திருந்த தங்கையை எழுப்பி அமர வைத்தவன் அவளிடம் மாத்திரையை நீட்டினான். அவன் நீட்டிய மாத்திரையை வாங்காமல், “ வேண்டாம் காகா” என மறுத்தாள் ரிதா.

“போட்டுக்கோ ரிதா”

“தூங்கிடுவேன் காகா. சரா வருவாயில்ல”

“பரவாயில்லை. அவ வந்தா….ஆச்சாவும் நானும் பார்த்துக்குறோம்…நீ மாத்திரையை போடு” என உந்த, மாத்திரையை வாங்கி போட்டவள் சிறிது நேரத்தில் உறக்கத்தின் பிடிக்கு சென்றாள். அவளை கை தாங்கலாய் கமரின் அறையில் படுக்க வைத்து விட்டு வந்தார் சனோபர். சிறிது நேரம் பேசிவிட்டு ரியாஸும் சனோபரும் தங்களது அறைக்கு உறங்க சென்றுவிட்டனர்.

“ம்ப்ச்…..என்ன ரமீ….கொஞ்ச நாளா இந்த பிரச்சனை இல்லாம இருந்துச்சு. இப்போ மறுபடியும் ஆரம்பிக்குதே” என்றார் கமர் கவலையாக. இப்போது ரமீஸ் அவரது மடியில் படுத்திருந்தான்.

“அதுக்கு தான் மைசரா வேணும் னு நாங்க ரெண்டு பேரும் ஆசைபடுறோம் ஆச்சா. ரிதா சாச்சி வீட்ல இருக்குற இந்த இரண்டு வருஷத்துல இது போல என்னைக்கும் அழுததில்ல” என்றவனுக்கு அப்போது தான் ரிதா மைசராவுக்கு போன் செய்ய வேண்டும் என சொன்னது நினைவு வந்தது. மைசராவின் புதிய எண் அவனிடம் இல்லை.இப்போது தான் மாற்றியிருந்தாள். ரிதாவின் அலைபேசி ரகசிய குறியீடும் தெரியவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தவன் தன் மாமி மகனான ரிஸ்விக்கு போன் செய்தான்.

மழை வரும்….

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 

Sponsored

Advertisements

New threads

Top