• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 04

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் - 04

2019-10-08-16-39-03-866.jpg

அத்தியாயம் 04

jk-gJhev0YgUcE-unsplash.jpg

இரயில் வேகமெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பலர் அலைபேசியில் ஏதோ பார்த்தபடியும், பேசியபடியும், பாடல்கள் கேட்டபடியும் இருக்க, சிலர் அரட்டை அடித்தபடியும், நாட்டு நடப்பை விவாதித்தபடியும் இருக்க, சிலர் புத்தகத்தை வாசித்தபடி இருந்தனர்.இன்னும் மிக சிலர் உறங்க ஆரம்பித்திருந்தனர். இந்த இரயில் பயணம் முடியும் முன் இவர்களின் குடும்பத்தை அறிமுகம் செய்துவிடுகிறேன். இவர்களது சற்று பெரிய குடும்பம். ஆகையால் கிளை கதைகளும் ஏராளம்.

திருச்சியில் மிகவும் பிரபலமான ஹம்ஸா டெக்ஸ்டைல்ஸ் இவர்களுடையது. கமரின் கணவர் அப்துல் ஹம்ஸா ஆரம்பித்த இந்த ஜவுளிகடை தற்போது மூன்று இடங்களில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

குடும்பத்திற்கு ஆலமரமான கமரூன்னிஸா வாப்சாவிற்கு வஞ்சனையில்லாமல் ஐந்து பிள்ளைகள்.

1. மூத்தவர் – அமீர் அலி
அவரது மனைவி – ஜமீலா பீவி
இவர்களின் பிள்ளைகள் – ரமீஸ் ஹம்ஸா மற்றும் ரிதா குல்சும்.


2. இரண்டாவது மகன் – முபாரக் அலி
அவரது மனைவி – சபூரா பேகம்
பிள்ளைகள் – கமர் யாஸ்மீன், மைசரா மெஹர்.


3. மூன்றாவது மகள் – ரசியா சல்தானா
இவரது கணவர் – தாமிர் ஆசாத்
பிள்ளைகள் – ஜிஷான் ரிஸ்வி, அயான் சித்திக்

4. நான்காவது மகன் - ரியாஸ் அலி
இவரது மனைவி – சனோபர் மின்ஹா
பிள்ளைகள் – ஜஸிரா, மாஹிர்


5. கடைசி மகள் – அஸ்மா கானம்
இவரது கணவர் – முத்து காசிம்
இவர்களுக்கு ஒரே பிள்ளை – மன்சூர் அலி


ரயில் திருச்சியை முன்னோக்கி செல்ல, நாம் சற்று பின்னோக்கி செல்வோம். கொஞ்சம் பெரிய பிளாஷ்பேக் தான். கடுப்பாகாம படிச்சிடுங்க நட்பூஸ்….

மூத்தவரான அமீர் அலி தந்தை இறந்த பின் தாயிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். தந்தை விட்டு சென்ற கடையை திறமையாக கவனித்து கொண்டார். இவரின் திறமையை பார்த்து அதே ஊரில் புகழ்பெற்ற நகை கடை உரிமையாளர் சலீம் தன் ஓரே மகளாகிய ஜமீலாவை தானாக முன் வந்து அவருக்கு திருமணம் முடித்து கொடுத்தார். ஜமீலா வசதியான வீட்டிலிருந்து வந்திருந்தாலும் அந்த கர்வம் சிறிதும் இல்லாதவர். அன்பும் அடக்கமும் உடையவர். அப்பாவி. குடும்பத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். அவர்களுக்கு அப்போது ரமீஸ் மட்டுமே பிறந்திருந்தான்.

இரண்டாவது மகனான முபாரக் அலி. அண்ணோடு சேர்ந்து கடையை கவனித்து கொண்டிருந்தார். அமீரை போலவே நல்ல மனமும், சிறந்த குணமும் உடையவர். ஒரு கத்னா விஷேச வீட்டில் தான் சபூராவை முதன்முதலில் பார்த்தார்.

கத்னா என்றால் ஆண்களின் ஆண்குறியின் முன் பகுதி தோலை நீக்குவதாகும். இதை சுன்னத் செய்தல் என்றும் கூறுவர். இது இஸ்லாமிய ஆண்களுக்கு கட்டாய கடமை. அதை சிறு வயதிலேயே செய்துவிட வேண்டும். இதை செய்து கொள்ளும் ஆண்களுக்கு சிறுநீர் தொற்று, சிறுநீர் உபாதைகள் மற்றும் பால்வினை நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும், அவர்களுடைய மனைவிக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதில்லை என்றும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண் பிள்ளைகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்வது போல் இந்த சுன்னத் விடும் சடங்கையும் சிலர் விமர்சையாக கொண்டாடுவர்.

தொழில்முறை நண்பரான காதர் பாட்ஷாவின் நான்கு வயது மகனுக்கு தான் அன்று கத்னா விஷேசம். முபாரக் கத்னா செய்யும் வைத்தியரை கூட்டி கொண்டு நண்பர் வீட்டிற்கு வந்தார். வைத்தியரை கூடத்தில் அமர வைத்து விட்டு நண்பரை அழைத்தவாறே வீட்டினுள் நுழைந்தார்.

“ பாஷா….”

“ மாமா…. “ என துள்ளி குதித்து ஓடி வந்தான் கத்னா செய்ய போகும் காதரின் மகன் தமீம். அவன் பின்னாடியே ஓடி வந்த வாழை குமரியான சபூரா புதிதாக ஒரு வாலிபனை கண்டதும் சற்று தள்ளியிருந்த தூணின் அருகிலேயே மறைவாக நின்று கொண்டார்.

“ டேய்… வாடா… வாடா… குட்டி பயலே” பிள்ளையை வாரி அணைத்து கொண்டார் முபாரக்.

“ மாமா… மாமா…. இன்னைக்கு எனக்கு கத்னா பண்ண போறாங்க தெரியுமா?” விவரம் தெரியாத சின்ன பிள்ளை வீடே அதிர கத்தியது.

“ அடேய்…. தமீமு… ஏன்டா இப்படி கத்துற? இதெல்லாம் சத்தம் போட்டு சொல்ல கூடாதுடா…. மடையா” என பதறினார் அவர்.

“ மாமா…. உங்களுக்கு கத்னா பண்ணிடாங்களா?” என அதிரடியாக அடுத்த கேள்வியை கேட்க, சபூராவிற்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது. தன் கரத்தை கொண்டு வாயை இறுக மூடிக் கொண்டார்.

“ இன்னைக்கு நீ என் மானத்தை கப்பல்ல ஏத்தாம விட மாட்டே போல. இதுக்கு தான் பொறந்த ஏழாவது நாளே சுன்னத் பண்ணணும் னு சொல்றது. அப்போ விட்டதால இப்போ வந்து தண்டோரா போடுற….. போலே…. போய் உங்க வாப்பாவை வரச் சொல்லு… நல்ல வேளை யாரும் கேட்கல” என அவனை கீழே இறக்கி விட்டார்.

“ மாமா… மாமா…. சொல்லுங்க மாமா… உங்களுக்கு எப்படி கத்னா பண்ணாங்க? காட்டுங்க” என கெஞ்ச

“ அடேய்….” என அவர் பல்லை கடிக்க, எவ்வளவு முயன்றும் அடக்க முடியாமல் கிளுகென சிரித்துவிட்டார் சபூரா.

அங்கே ஒரு பெண் மறைவாக நிற்பதை அப்போது தான் கவனித்தார் முபாரக். அதற்கு மேல் அவர் நின்றிப்பாரா என்ன? தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே ஓடி வந்தார் அவர். வைத்தியரை பார்த்ததும் தான் தன் நண்பர் நினைவு வர மீண்டும் உள்ளே நுழைந்தார்.

“ ச்சே…. பாவம்லே அவங்க…. இப்படி மானத்த வாங்கிபுட்டியே. கிறுக்கி…. நான் வேற சிரிச்சிபுட்டேன்” என விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தார் சபூரா. அவர் நிற்கையில் எப்படி போவது என எண்ணியபடி வாயிலில் நின்றிருந்த முபாரக்கின் மனதில் அழகாய் பதிந்தது சபூராவின் புன்னகை முகம். கிழிசல் இல்லாத ஆனால் புதிதென சொல்ல முடியாத பாவாடை தாவணி. காதிலும் கழுத்திலும் ஆடிக் கொண்டிருந்த மெல்லிய அணிகலன்கள் நாங்கள் தங்கம் இல்லை என சத்தியம் செய்தது. செக்கசெவலென இல்லை என்றாலும் இந்த கோதுமை நிறமும் அழகு தான் என எடுத்துரைத்த நிறம். ஓப்பனை எதுவும் வேண்டாம் நான் மட்டும் போதும் என கர்வமாய் மொழிந்தது சபூரா கண்களில் தீட்டியிருந்த சுர்மா.

சுர்மா என்பது ஒருவகை சுட்டகல். இந்த கல்லை கூழாங்கல்லில் உரசி, விரலால் எடுத்து மை போல் கீழ் இமைகளில் தீட்டி கொள்வர். இது அழகுக்காக மட்டும் பயன்படுவதில்லை, கண்களுக்கு குளிர்ச்சி தருவதற்காகவும் பயன்படுத்தபடுகிறது. இதனை அஞ்சனம் எனவும் கூறுவர். ஆண் பெண் இருபாலரும் இதனை உபயோகிக்கலாம்.

சபூராவின் சிரித்த முகத்தை இமை கொட்டாமல் பார்த்திருந்தார் முபாரக். வைத்தியர் வந்து முதுகை தட்டிய பிறகு தான் தன்னிலை உணர்ந்தார் அவர்.ஒரு பெண்ணை இப்படி ரசிக்கிறோமே என இதயம் படபடக்க வைத்தியரை திரும்பி பார்த்தார்.

“ ஒ…ஒரு நிமிஷம் பாய்…. பாஷாவ கூட்டிட்டு வந்திடுறேன்.” என படபடத்தார்.

“ ஒன்றும் பிரச்சனையில்ல தம்பி… பொறுமையா கூட்டிட்டு வாங்க… அப்புறம் தம்பி! அந்நிய பெண்ணை முதல் முறை இப்படி பார்க்குறது தப்பில்ல…. ஆனா மறுபடியும் பார்த்தா ஹராம்( தடை செய்யப்பட்டது).” குறுநகையுடன் கூறினார் அவர். இஸ்லாத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கட்டுபாடுகள் உண்டு. அந்நிய ஆண்களை கண்டால் பெண்கள் மட்டுமல்ல அந்நிய பெண்களை கண்டால் ஆண்களும் தங்கள் பார்வையை தாழ்த்தி கொள்ள வேண்டும்.

“ ஆங்…. தெ… தெரியும். சும்மா தான் பார்த்தேன்” என தடுமாறியவர், வழிந்த வேர்வையை துடைத்தபடி உள்ளே சென்றார். உறவுகளும் வர ஆரம்பிக்க அதற்கு பிறகு சபூரா அவர் கண்களில் தென்படவேயில்லை. ஆனால் அவரது எளிமையான தோற்றமும், அஞ்சனம் தீட்டிய விழிகளும் முபாரக்கின் மனதை விட்டு அகலவேயில்லை. அவர் குடும்பத்து பெண்கள் வீட்டிற்குள் இருக்கும் போது கூட எப்போதும் பட்டாடையும், நகைகளும் அணிந்து தான் வலம் வருவர். ஆனால் இது எதுவுமில்லாமலே சபூரா பேரழகிராய் தெரிந்தார். அந்த கள்ளம்கபடம் இல்லாத சிரிப்பு அவரை வெகுவாய் கவர்ந்தது.

சபூராவை பார்க்க முடியாவிட்டாலும் அவரை பற்றிய விவரங்களை பாஷா மூலமாக தெரிந்து கொண்டார் முபாரக்.

சபூரா மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். ஆயினும் அப்போதே இளங்கலை பட்டம் பெற்றிருந்தார். காதர் பாஷாவிற்கு தூரத்து உறவு. சிறு வயதிலேயே தாயை பறிகொடுத்தவர். வயதான தந்தை மற்றும் தன் குட்டி தங்கைக்கு தாயாய் வாழ்ந்து கொண்டிருப்பவர். தன்மானமும் நேர்மையும் மிகுந்தவர். அவரது பகுதியில் இருக்கும் ஒரு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்தார். அவரை பற்றி தெரிந்து கொண்ட பிறகு இன்னும் பிடித்து போனது அவருக்கு. தன் விருப்பத்தை வீட்டிற்கு வந்து தன் தாயிடம் கூறினார்.

கமர் அந்தஸ்து பாராதவர். மகனின் விருப்பத்திற்கு செவி சாய்த்து சபூராவை பெண் கேட்க போனார். சபூரா தன் தங்கையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திருமணத்திற்கு மறுத்தார். தன் மகளை சம்மதிக்க வைக்கும் வழி தெரியாமல் தவித்தார் அவரது தந்தை. இளம் வயதிலேயே கணவனை இழந்து தனிமனுஷியாய் பிள்ளைகளை வளர்த்த கமருக்கு சபூராவின் மனம் புரிந்தது. அவரது அலங்காரமில்லாத அழகும், தெளிவான பேச்சும் அவரை வெகுவாய் ஈர்த்தது. ஜமிலாவிற்கும் சபூராவை மிகவும் பிடித்திருந்தது. ரசியாவிற்கு பின் தைரியமாக பேசும் பெண்ணை இப்போது தான் அவர் பார்க்கிறார். தன் நாத்தனார் ரசியாவின் பேச்சில் கூட சிறு திமிரும் கர்வமும் இருக்கும். ஆனால் சபூராவின் பேச்சில் நிமிர்வும், தன் முடிவை விளக்கும் தைரியமும் தான் இருந்தது.

ரசியாவிற்கோ சபூராவை துளியும் பிடிக்கவில்லை. அப்போது ரசியா பதினைந்தே வயதான சிறு பெண். தன் பெரிய காகாவுக்கு நகை வியாபாரியே தேடி வந்து பெண் கொடுத்திருக்க, இங்கு சபூராவோ ஒரு ஓட்டு வீட்டில் இருந்து கொண்டு தங்கள் குடும்பத்தை மறுத்து கொண்டிருந்ததை எரிச்சலாக பார்த்தார். கமர் ஒரு வழியாக சபூராவை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். சபூரா வீட்டின் வசதிகேற்ப திருமணம் எளிமையாக முடிய, வலிமா விருந்து விமர்சையாக முடிந்தது. வலிமா என்பது திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளை வீட்டினரால் கொடுக்கப்படும் விருந்து. இஸ்லாத்தில் இது மிகவும் முக்கியம். தனக்கு மணம் முடிந்ததை ஊர்காரர்களுக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி.

அப்போது ரியாஸ், அஸ்மா எல்லாம் சிறு பிள்ளைகள்.

ரசியாவால் தான் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ரசியா செல்வ செழிப்பில் வளர்ந்தவர். அந்தஸ்து, கவுரவத்தை பெரிதாய் நினைக்கும் கமருடைய மாமியாரின் நகல். குணத்திலும் ஜாடையிலும் அவரை போலவேயிருப்பார். கோபம் வந்துவிட்டால் பொறுமையை இழந்துவிடுவார். கமர் எவ்வளவு முயன்றும் மகளின் இந்த குணத்தை மாற்ற முடியவில்லை. அதிலும் வீட்டின் முதல் பெண் பிள்ளை என்பதால் செல்லம் ஜாஸ்தி.திருமணம் முடிந்து சபூரா அவர்களது வீட்டிற்கு வந்த பிறகும் கூட ரசியாவிற்கு அவரை பிடிக்கவில்லை. ஜமிலாவிடம் காட்டும் அன்பையும் ஒட்டதலையும் சபூராவிடம் காட்டமாட்டார். தன் குத்தல் பேச்சாலும், அலட்சிய பார்வையாலும் சபூராவை அன்றாடம் காயப்படுத்துவார். ஆனால் முபாரகின் பேரன்பிலும், கமரின் அனுசரனையிலும், ஜமீலாவின் கனிவிலும், ரமீஸின் மழலை பாசத்திலும் திளைத்துக் கொண்டிருக்கும் சபூரா இதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டார். கமருக்கு தான் தன் மகள் பேசுவதை கேட்டு கவலையாக இருக்கும்.

முபாரக் – சபூராவின் மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடையாளமாக கமர் யாஸ்மின் பிறந்தாள். அந்த சமயத்தில் தான் கமர் ரசியாவிற்கு திருமணம் செய்ய விரும்பினார்.

தொடரும்….

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Attachments

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top