காதல் அடைமழை காலம் - 13

#1
காதல் அடைமழை காலம் – 13

அத்தியாயம் – 14

“ மைசரா மெஹர்” தன் பெயரை அறிமுகமேயில்லாத ஒருவர் அழுத்தம் திருத்தமாக கூறியதும் திடுக்கிட்டு பார்த்தாள் மைசரா.

“ எ...எ...என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?” அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருங்கே தோன்ற வினவினாள்.

“நீ பொறந்த உடனே உன் காதுல பாங்கு (இறைவனை துதிக்கும் வரிகள்) சொல்லி நான் தானே பேரு வைச்சேன்”

ரமீஸுக்கு இப்போது தான் எல்லாம் புரிந்தது. சில மணி நேரங்களுக்கு முன்பு தான் கண்டது சபூரா சாச்சியையா? என யோசித்தவனுக்கு இப்போது சபூராவின் முகம் நன்றாகவே பிடிப்பட்டது. தன் பாசத்தை காட்ட முடியாத அவரது பரிதவிப்பும் புரிந்தது. பதினைந்து வருடங்களுக்கு மேலான இடைவெளியாலும், அப்போது அவனிருந்த நெருக்கடியான சூழ்நிலையாலும் அந்த நேரத்தில் அவன் மனம் எதையுமே ஆராயவில்லை.ஆனால் சபூரா ஏன் தன்னை யாரென்று கூறவில்லை? என குழம்பினான். இப்போது தனது சாச்சாவையும்( சித்தப்பா) , சாச்சியையும்(சித்தி) இணைத்த பிம்பமாய் தன் கண் முன்னே நின்றிருக்கும் மைசராவை கண்டு அதிசயத்து போனான்.

“ நீங்களா?? நீங்களா பேர் வைச்சது????” திருதிருவென முழித்தாள் மைசரா. இதுவரை அவளுக்கு உறவென்று யாரையும் தெரியாதே.....

“என்ன அப்படி பார்க்குற? என் பேத்தி பேரு எனக்கு தெரியாதா?”

“ இல்ல... நீங்க யாரையோ நினைச்சி என் கிட்ட பேசிட்டு இருக்கீங்க னு நினைக்கிறேன்” என்றாள் நம்ப முடியாமல்.

“ என் மகனையும் மருமகளையும் சேர்த்து உரிச்சி வைச்சிருக்கியே. உன்னை என்னால கண்டுபிடிக்க முடியாதா?” என்றார் கமர். மைசரா சபூராவின் முக ஜாடையை கொண்டிருந்தாலும் அவரை போல கோதுமை நிறத்தவள் இல்லை. அவளது தந்தையான முபாரக்கின் சிவந்த நிறத்தையும் அவரின் உடல் மொழியையும் கொண்டிருப்பவள். யாருக்குமே பார்த்தவுடன் சபூராவை போலவோ முபராக்கை போலவோ தோன்றாது. பெற்றவர்கள் இருவரது ஜாடையையும், பண்புகளையும் ஒருங்கே பெற்றிருந்தாள் மைசரா. ஆனால் அனுதினமும் மருமகளையும் பேத்திகளை பற்றியும் நினைத்துக் கொண்டிருக்கும் கமரின் எக்ஸ்ரே கண்கள் மைசராவை நொடி பொழுதில் அடையாளம் காட்டிவிட்டது. அவர் சந்திக்கும் புது மனிதர்கள் எவரையும் ஒரு முறை ஆழமாய் ஸ்கேன் செய்துவிடும் அவரது கண்கள்.

“ ஆச்சா.... என்னால நம்பவே முடியல. நம்ம மைசராவா இவ” ரமீஸ் உற்சாகத்தில் கத்தினாலும் கமரிடம் எந்த சந்தோஷமும் பிரதிபலிக்கவில்லை. அவர் முகம் காட்டும் பாவனை மகிழ்ச்சியா, துக்கமா, கோபமா, கவலையா.... எதுவென புரியவில்லை மைசராவுக்கு.

“ உன் உம்மா எங்கே? நான் வரேன்னு தெரிஞ்சவுடனே ஓடி ஒளிஞ்சிகிட்டாளா?” இகழ்ச்சியில் லேசாய் அவரது இதழ்கள் வளைந்தன.

“ உ...உம்....உம்மா” மைசரா தடுமாற, ரமீஸ் நடந்ததை மறுபடியும் நினைவுறுத்தினான்.

“ ம்.... அவளுக்கு உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கும். உங்களை பார்த்தாயில்ல அதான் மனசு கோளாறு பண்ணியிருக்கும். நீ போய் அவள கூட்டிட்டு வா ரமீஸ்” என ஏவினார்.

அரண்டு போய் நிற்கும் தன் புதிய தங்கையை கரம் பிடித்து வெளியே கூட்டி சென்றான் ரமீஸ். அவனின் உரிமையான தொடுகையில் உடல் சிலிர்த்தது அவளுக்கு. கமர் பேசியதில் மைசராவின் கண்கள் கரகரவென கண்ணீரை உகுந்தன. தன்னை சுற்றி நடப்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அவளுக்கு நினைவு தெரிந்தது முதல் தந்தை வீட்டு உறவு என ஒருவரையும் தெரியாது. எந்த இட்டான நேரத்திலும் அவர்கள் யாரும் வந்து உதவியதில்லை. இப்போதும் கூட தன்னை கண்டுகொண்டதில் மகிழ்ச்சி இருந்ததாக தெரியவில்லை.

“ விடுங்க..... விடுங்க.... என்னை...” சிறு பிள்ளை போல் அவனது கரத்தை உதறி விட்டு ஓடினாள் மைசரா.

“ மைசரா....நில்லுமா.... மைசரா...” அவளை தொடர்ந்து சென்று நிறுத்தினான்.

“ நான் சொல்றத கொஞ்சம் கேளு”

“ வேண்டாம்.... எங்கள விட்டுடுங்க... இவ்வளவு நாள் நாங்க தனியா தானே இருந்தோம். இனியும் அப்படியே இருந்துட்டு போறோம். எங்களுக்கு யாரும் வேண்டாம்” என விசும்பினாள். அவளது மனநிலையை புரிந்து கொண்டவன்,” முதல்ல இப்படி உட்காரு” என அவளை வராந்தாவில் உள்ள இருக்கையில் அமர வைத்தான். கைகளால் முகத்தை மூடிக்கொண்டு மௌனமாய் அழுதாள் மைசரா. அவளுக்கு குடிக்க குளிர்ந்த நீரை எடுத்து வந்து குடிக்க சொன்னான் ரமீஸ். அதை வாங்கி மளமளவென குடித்த பின் அவளின் உணர்ச்சி பிரவாகம் சற்றே தணிந்தது. முகத்தையும் கண்களையும் அழுத்தி துடைத்து கொண்டாள்.

அவள் ஆசுவாசபடுத்தி கொள்ளும் வரை அமைதியாக இருந்தவன்,” மைசரா.... இது ரொம்ப ஷாக்கான விஷயம் தான். ஆனால் பயப்படவோ, அழுவவோ தேவையில்லாத ஷாக் இது. உனக்கு இது இன்ப அதிர்ச்சியா இல்லையா? எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?. நீ என் சாச்சா மக. மூன்று வயசு வரைக்கும் உன்னை மார் மேலயும் தோள் மேலயும் போட்டு உன் கூட விளையாடியிருக்கேன்.நானும் யாஸ்மீனும் எவ்ளோ லூட்டி அடிப்போம் தெரியுமா? என் கை பிடிச்சிகிட்டே தான் சுத்துவா.... உங்களை எல்லாம் பிரிஞ்சி நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியுமா? மறுபடியும் உங்கள பார்க்க மாட்டோமா னு ஏங்காத நாளில்ல. ப்ளீஸ்.... அழாதே மைசரா.... சந்தோஷ பட வேண்டிய தருணம் மா இது.” என்றான் ஆறுதலாக

மைசரா சிறு விசும்பலோடு அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் மனதில் எண்ணற்ற கேள்விகளும், சஞ்சலங்களும் தோன்றி துளைத்தது.

“ ரிதா.... ரிதா....னு இவ்வளவு நேரம் உருகினாயே. ரிதா உன்னோட லாத்தா..... நான் உன்னோட காகா டா. நாங்க வேண்டாமா உனக்கு” தங்கள் வீட்டு பெண் தங்களையே அந்நியமாய் பார்க்கும் அவலத்தை எண்ணி துயரம் கொண்டான் ரமீஸ். அவனின் அன்பான மொழியில் உள்ளம் உருகியது அவளுக்கு. மாலை தான் இவனை போல ஒரு அண்ணன் வேண்டும் என எண்ணினாள் இப்போது அவனே ‘என்னை அண்ணனாக ஏற்றுக்கொள்ள மாட்டாயா?’ என கெஞ்சுவது விந்தையிலும் விந்தையாக இருந்தது. சில சமயம் வாழ்க்கை நமக்கு விசித்திரமான அனுபவங்களை கற்று கொடுக்கும்.

“ சரி.... அட்ரஸ் சொல்லு நான் போய் சாச்சிய கூப்பிட்டு வரேன்” என எழுந்தான். மைசராவுக்கு இன்னும் கலக்கம் தான் இந்த நவயுகத்தில் நூதனமான முறையில் எப்படி எப்படியோ ஏமாற்றுகிறார்கள். தீடீரென முளைத்த உறவுகளை நம்பி எப்படி வீட்டு முகவரியை கூறுவது என யோசித்தாள். அவர்கள் வீட்டில் கொள்ளையடிக்கும் அளவுக்கு எதுவுமில்லை தான். மைசராவின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருக்கும் பணமும் பாங்கில் தான் உள்ளது. அவள் முகத்தில் படர்ந்திருந்த தீவிரத்தை கண்டவனுக்கு அவளது யோசனை புரிந்தது.

“ என்ன மைசரா.... இவன நம்பி எப்படி அட்ரஸ சொல்றது னு யோசிக்கிறியா” என்றதும் யோசனையில் இருந்தவள் ஆம் என்பது போல தலையசைத்து பின் அவசரமாக இல்லை என இடவலமாய் ஆட்டினாள். அவள் செய்கையில் வாய் விட்டு சிரித்தான் ரமீஸ்.

“ இல்ல.... உங்... உங்களுக்கு எதுக்கு சிரமம்... நான் யாஸ்மீனுக்கு போன் போட்டு கூட்டிட்டு வர சொல்றேன்” என்றாள் அசடு வழிந்தவாறே.

“ ஆக நீ என்னை நம்பல.பாவி.... என்னை பார்த்தா மொள்ளமாரி.... முடிச்சவிக்கி மாதிரியா இருக்கு? என்னடா இது டாக்டருக்கு வந்த சோதனை” ரமீஸ் முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொல்ல பக்கென சிரித்துவிட்டாள் மைசரா.

அவள் சகோதரிக்கு போன் போட்டு விஷயத்தை கூற, அவளை தொடர்ந்து ரமீஸும் யாஸ்மீனிடம் பேசினான். தங்களுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அவளுக்கும் கடத்தினான்.

“ சரி வா.... அவங்க வர்ற வரைக்கும் ஆச்சா கிட்ட பேசிட்டு இருக்கலாம்” என அழைத்தான் ரமீஸ்.

“ ம்ஹுகும்.... நான் வரல”

“ ஏன் டா?”

“ என்னை பார்த்தது இன்ப அதிர்ச்சி னு சொன்னீங்க.... ஆனா அவங்க முகத்துல துளி கூட சந்தோஷமில்ல.... எ....என்னை அவங்களுக்கு பிடிக்கல னு நினைக்கிறேன்”

“ சே....சே.... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை டா. அது ஏதோ பழைய கோபத்துல பேசுறாங்க. நாம இப்போ போய் பேசுவோம்.... வா...”

“ கோபமா? என்ன கோபம்? ஏன் எங்க உம்மாவ இப்படி நிர்கதியா விட்டுடீங்க?” ஆதங்கமும் ஆற்றாமையுமாக கேட்டாள்.

அவள் கேள்வியில் முகம் சுருங்கியவன்,“ நாங்க விடல டா அவங்க தான் எங்கள விட்டுட்டு போயிட்டாங்க” என்றான். தங்கையின் சஞ்சல முகத்தை கண்டு சபூராவின் கடந்த காலத்தை பற்றி கூறினான்.

தாய் தந்தையின் இணக்கமான இல்லறம்,உறவுகளோடு கூடிய நல்லறம், தந்தையின் மரணம், கடையை எடுத்து நடத்திய சபூராவின் திறமை, ரசியாவின் ஏச்சுகள், வாதங்கள் என எல்லாவற்றையும் விவரித்தான் ரமீஸ். கண்களில் கண்ணீர் வழிய தன் பெற்றோர் இணைந்து வாழ்ந்த உன்னத நாட்களை கேட்டுக் கொண்டிருந்தாள் மைசரா. இத்தனை பெரிய குடும்பத்தில், இத்தனை அன்பு உறவுகளோடு வாழ்ந்த தன் தாய் எதற்காக இப்படி ஒதுங்கி வாழ வேண்டும் என கோபம் வந்தது அவளுக்கு. அதே சமயம் மூன்று பெண்களோடும், வயதான தந்தையோடும் போக்கிடம் இல்லாமல் வெளியேறியிருக்கிறார் என்றால் ரசியா எத்தனை கடுமையாக பேசியிருக்க வேண்டும்? இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட அவர் திருச்சி செல்ல விழையவில்லை என்றால் அவரின் மனகாயம் எத்தனை ஆழமாய் இருந்திருக்க வேண்டும்? தாயின் துயரை எண்ணி பிஞ்சு மனம் கூப்பாடு போட சிலையென அமர்ந்திருந்தாள் மைசரா. அவளின் விழிகள் மட்டும் தன் உணர்வுகளை கண்ணீராய் வெளியேற்றி கொண்டிருந்தது. மைசரா எப்போதாவது சபூராவின் கடந்த காலத்தை பற்றி கேட்டாலும் இருவரிகளில் பதில் கூறி முடித்துவிடுவார். இன்று ரமீஸ் விவரிக்கும் போது கண் முன் விரிந்தது காட்சி.....

“ இங்க பாரு மைசரா.... நீ நம்ம குடும்பத்த பற்றி தெரிஞ்சிகணும் நம்ம உறவுகள பற்றி தெரிஞ்சிகணும் னு தான் இதையெல்லாம் நான் சொன்னே தவிர முடிஞ்சி போன விஷயங்களை நினைச்சி வேதனை பட இல்லை.... “ என்றான் ரமீஸ்

ஆனால் அவன் கூறியதும் எதுவும் அவள் மனதில் பதியவில்லை போலும். “ அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனை நடந்தது? எதனால என் உம்மா வீட்டை விட்டு வந்தாங்க?” என்றாள் தீவிரமாக.“இப்போ தானே இதை பற்றி யோசிக்காதே னு சொன்னேன்”

“ ப்ளீஸ்.... சொல்லுங்க....”

அவளை சங்கடமாக பார்த்தவன்,” அது... அது பற்றி எனக்கு தெரியாது மைசரா. “ என்றான் பார்வையை எங்கோ பதித்து. அவன் உண்மையை மறைக்கிறான் என நன்றாக புரிந்தது. அதற்கு மேல் மைசரா எதுவும் கேட்கவில்லை.

“ வா.... ஆச்சாவ போய் பார்க்கலாம்”

“ உம்மா வரட்டும்” என்றவள் அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

இரவு நேரத்தில் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காது என்பதாலும் குடும்ப விஷயத்தை அங்கே பேசுவது உசித்தமாக இருக்காது என்பதாலும் மருந்துவமனை வளாகத்திலேயே இருந்த சிறு பூங்காவில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ரிதாவை பார்த்து கொள்ளும் படி செவிலியரிடம் கூறி விட்டு மூவரும் பூங்காவிற்கு வந்தனர். மைசரா தன் அன்னைக்கு விவரம் சொல்லி விட, சபூராவும் அங்கேயே வந்தார். சபூரா வரும் வரை மைசரா கமரிடம் எதுவுமே பேசவில்லை.

உடல் நடுங்க மகளின் கையை இறுக பற்றியபடி உள்ளே வந்தார் சபூரா. கூடவே யாஸ்மீனின் கணவனான சுல்தான் மற்றும் மூன்று வயதான பேரன். அன்னையை கண்டதும் ஓடிச் சென்று கட்டி கொண்டாள் மைசரா. பயத்தில் நடுங்கும் அன்னையை புரியாமல் பார்த்தாள். சபூராவை உறுத்து விழித்த படியே அருகில் வந்த கமர் ‘ பளார் ’ என அறைந்தார்.

- மழை வரும்

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 

Sponsored

Advertisements

New threads

Top