காதல் அடைமழை காலம் - 15(1)

காதல் அடைமழை காலம் – 15(1)

அத்தியாயம் – 16

“அஸ்ஸலாமு அலைக்கும் மைசரா” மெல்லிய குரலில் பரிவும் பாசமும் நிறைந்திருந்தது.

“ வ....வ அலைக்கும் அஸ்ஸலாம் ரிதா. இப்போ எப்படியிருக்க?” என்றவளின் குரல் உள்ளே சென்றது.

“ ம்....பீலிங் பெட்டர்.... மைசரா காலேஜ் போகலயா?”

“ இல்ல....”

“ அப்போ ஏன் என்னை பார்க்க வரல” உரிமையாய் வந்த கேள்வியில் உருகி போனாள்.

“ .................”

“ஹலோ.... மைசரா....”

“ ஆங் சொ....சொல்லு ரிதா....”

“ காலையில தான் காகா எல்லா விஷயமும் சொன்னாங்க. எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஆனா ஏன் சாச்சி வீட்டுக்கு வர மாட்டேன் னு சொல்லிட்டாங்க?” என்றாள் கவலையாக.

“ அது... அது....” என தடுமாறியவளுக்கு தான் காரணமே தெரியதே....

“ சரி விடு..... நீ வர மாட்டியா?” என கேட்டாள் ஆதங்கமாய். அதற்கு மேல் மைசராவால் தாங்க முடியவில்லை. நேற்று வரை ரிதா கண் திறந்து பார்க்க மாட்டாளா..... ஒரு வார்த்தை பேச மாட்டாளா..... என ஏங்கி விட்டு இன்று சொந்தம் என தெரிந்தவுடன் விலகி நிற்பது கேவலமாக இருந்தது.

“ நைட் சரியா தூங்காததுனால காலையில நல்லா தூங்கிட்டேன் ரிதா. இப்போ போன் அடிச்சதுல தான் எழுந்தேன். கொஞ்ச நேரத்தில கிளம்பி வரேன். ஓ.கே வா” என கூற

“ ஹே....வர்றீயா!!! வா... வா...” என குதூகலித்தாள் ரிதா. லேசாக அரும்பிய புன்னகையோடு குளியலறை நோக்கி சென்றாள் மைசரா.

குளித்து முடித்து தயாராகி வந்தவள் தாயிடம் எப்படி கூறுவது என யோசித்தபடியே வெளியே வந்தாள். உலகமே இருண்டுவிட்டாற் போல் அமர்ந்திருந்தார் சபூரா. அருகில் குட்டி பேரன் குவளையிலிருந்த நீரை தலையிலும் தரையிலும் கொட்டி விளையாடி கொண்டிருந்தான்.

“ டேய்.... டேய்... படவா... என்னடா பண்ணி வைச்சிருக்க” என துண்டோடு வந்தவள் குழந்தையை தூக்கி துடைத்துவிட்டாள்.

“ குல்கிறேன் சாஸி.... என்ன விடு” என்றான் கோபமாக

“ ஆமாடா.... ஹால்ல நின்னு குளி... விளங்கிடும்...” என்றவள் ஒரு உடை எடுத்து வந்தாள்.

“ எனக்கு தெஸ்ஸு வேணாம். நான் குலிக்க போறேன்” என அடம் பிடித்தது குழந்தை.

“ ட்ரெஸ் வேணாமா.... டேய்... பொம்பள புள்ள இருக்குற வீட்ல ஆம்பள பையன் இப்படியெல்லாம் இருக்க கூடாதுடா” என கிண்டலாக பிதற்றியபடி அவனை பிடித்து உடையை அணிவித்தாள். உடை உடுத்தியதற்காக அழம் குழந்தைக்கு பொரி உருண்டை ஒன்றை கொடுத்து சமாதானபடுத்தினாள். பின் கொட்டியிருந்த நீரை துடைத்தாள்.

“ சல்லு குட்டி பார்த்தியாடா? இங்க இவ்ளோ களேபரம் நடந்திட்டு இருக்கு... உங்க கன்மா( தாய் வழி பாட்டி) என்னவோ மியூசியத்துல வைச்ச சிலை மாதிரி உட்கார்ந்திட்டு இருக்காங்க” என புலம்ப குழந்தையோ பொரி உருண்டையில் மும்பரமாய் இருந்தான்.

“ உம்மா.... உம்ம்ம்மா” என தோளை பிடித்து உலுக்க, அப்போது தான் தன் நினைவுகளிலிருந்து வெளிவந்தார் சபூரா.

“ ஏம்மா இப்படி இருக்கே....”

“ இல்லமா... ஒன்றுமில்லை” என கலங்கிய கண்களை துடைத்து கொண்டவர்,” யாஸ்மீன் புள்ளய பார்த்துக்க சொன்னாளே” என சுற்றும் முற்றும் பார்த்தார்.

“ சரி தான்...” என நீண்ட மூச்சை விட்டவள் குழந்தையின் சேட்டையை பற்றி கூறினாள்.

“ அச்சச்சோ.... புள்ள தலைய நல்ல துடைச்சியா” என்றார் குழந்தையை ஆராய்ந்தபடி.

“ ம்... நல்லா துடைச்சிவிட்டேன் மா. யாஸ்மீன் எங்க?”

“ அவ குளிக்க போனா....” என்னும் போதே யாஸ்மீன் குளித்து முடித்து அங்கு வந்தாள்.

“ இப்போ எதுக்கு மா இப்படி உட்கார்ந்திருக்கே? அதான் ராத்திரியே எல்லாத்தையும் உதறிட்டு வந்துட்டோம்ல” என்றாள் யாஸ்மீன் சற்று எரிச்சலாக. அமைதியாக அமர்ந்திருந்தார் சபூரா.

“ வா சாப்பிடலாம்” என்றபடி உணவு மேஜைக்கு சென்றாள் யாஸ்மீன்.

“ ஏன் யாஸ்மீன் கோபப்படுற?” என்றாள் சரா

“ பின்னே என்னலா.... நைடெல்லாம் உம்மா தூங்கவேயில்ல. ஆனா காலையிலேயே எழுந்து கிளம்பினாங்க. காலேஜ் போறாங்க னு நெனைச்சேன் ஆனா சித்திக்கா ஆன்ட்டி வந்தப்ப நான் காலேஜுக்கு வரல னு சொல்லி அனுப்பிட்டாங்க. அப்போதிலிருந்து இப்படியே தான் உட்கார்ந்திருக்காங்க. கேட்ட கேள்விக்கு பதிலுமில்ல” என பொரிந்தாள். அவளுக்கு அன்னையின் நிலையை காண சகிக்கவில்லை. மைசரா தாயை திரும்பி பார்த்தாள். அவர் அழுதுக் கொண்டிருந்தார். அவளுக்கு புரிந்தது.... ரிதாவ பார்க்க கிளம்பி விட்டு பின் போக துணிவில்லாமல் அமர்ந்திருக்கிறார் என்று.....

“ ம்மா.... ரிதா போன் பண்ணாமா...”

“ ரிதா வா? நல்லாயிருக்காளாமா? அவளே பேசினாளா?” என படபடத்தார்.

“ ஆமா மா. அவ தான் பேசுனா.....ஏன் வரல னு கேட்டா?” என அவரையே பார்த்தவள் ” நாம ரிதாவ போய் பார்க்கணுமில்லையாமா?” என்றாள்.

“ கட்டாயம் பார்க்கணும் சரா. பக்கத்துல இருந்து அவள கவனிச்சிகணும். உங்க வாப்பா இறந்த சமயத்தில மச்சானும் லாத்தாவும் (ரிதாவின் பெற்றோர்) எவ்ளோ ஆறுதலாக என்னை அரவணைச்சிகிட்டாங்க தெரியுமா? “ முதன்முறையாக தன் கடந்த கால நாட்களை பற்றி பேசினார் சபூரா.

“ அப்புறம் ஏன்மா வீட்டை விட்டு வந்தே?” மனதில் தோன்றிய கேள்வியை தொண்டையிலேயே முடக்கிவிட்டாள் சரா. அவளுக்கு அன்னையின் கண்ணீரை விட அவரது கண்களில் தெரியும் குற்றவுணர்வு வெகுவாய் வலித்தது.

அவரது கரத்தை ஆறுதலாக பற்றியவள்,” இப்போ என்னம்மா..... நீ ரிதாவ பக்கத்துல இருந்து கவனிச்சிகணும்.... ஆனா மறுபடியும் திருச்சி போக இஷ்டமில்ல.... நீ இங்க இருக்கறது அங்க யாருக்கும் முக்கியமா அந்த ரசியாவுக்கு தெரிய கூடாது..... அவ்ளோ தானே? நீ கிளம்பு....ஆச்சா கிட்ட நான் பேசிக்கிறேன்.... சரியா? முதல்ல சாப்பிடு மா” என்றவள் சென்று தட்டில் யாஸ்மீன் செய்த ரவா கிச்சடியையும் தேங்காய் சட்னியும் வைத்து கொண்டு சபூராவின் அருகில் வந்தாள்.

கண் கலங்க அமர்ந்திருந்த சபூராவின் கண்களை துடைத்து விட்டவள்,” அழதமா.... சாப்பிடு” என அன்னைகே தாயாகி ஊட்டிவிட்டாள்.

யாஸ்மீனை வீட்டில் விட்டுவிட்டு சபூராவும் மைசராவும் மருத்துவமனைக்கு சென்றனர். அவர்கள் செல்லும் போது ரமீஸ் இல்லை. ரிதாவோடு கமர் மட்டுமே இருந்தார்.

“ சாச்சி....” என சந்தோஷ குரலில் அழைத்தவளை அணைத்து கொண்டார் சபூரா. பின் அவளது உடல்நிலையை பற்றி விசாரித்தவர் கமரிடம் சென்றார். மைசராவும் ரிதாவும் ஆனந்தமாக அளவலாவி கொண்டனர். சபூராவிடம் பட்டும் படாமல் பேசிக் கொண்டார் கமர். அவருக்கு மருமகள் தன்னோடு வரவில்லையே என கோபம் சபூராவுக்கும் புரிய தான் செய்தது. ஆனால்.....

“ ரமீஸ் காகா எங்க?”

“ அவங்க வொர்க் பண்ற ஹாஸ்பிட்டல்ல இருந்து போன் வந்தது.... அதான் அங்க போயிருக்காங்க” இன்று சற்று தேறியிருந்தாள்.

“ ஓ.....”

“ நாம சிஸ்டர்ஸ் னு தெரியாமலே அஞ்சு மாசம் ஒரே கிளாசுல படிச்சிருக்கோம் பாரேன். காலையில காகா சொல்லும் போது பயங்கர ஷாக் எனக்கு” என்றாள் ரிதா.

ம்... எனக்கும் தான். நேற்று புல்லா ஒரே ஷாக்கும், சர்ப்ரைசும் தான்” என சிரித்தாள் சரா. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்தான் ரமீஸ். சபூராவையும் மைசராவையும் அவன் அங்கே எதிர்பார்க்கவில்லை. அவர்களை கண்டதும் அதிர்ந்து நின்றான்.

“ என்ன காகா ஷாக் ஆகிடீங்களா? எப்படி வர வெச்சேன் பார்த்தீங்களா....” மெல்ல சிரித்தபடி கேட்டாள் ரிதா.

“ அய்யோ.... எதுக்கு இப்போ இவங்கள வரச் சொன்னே” என்றான் கோபமாக

“ என்னப்பா ஆச்சு.... ஏன் புள்ளய திட்டுற?” என்றார் சபூரா ரிதா எழுந்து அமர உதவியபடி.

“ நீங்க தான காகா.... சாச்சி வரல னு புலம்புனீங்க.... “ என்றாள் ரிதா

“ புலம்புனா அப்படியே விட்ருவேனா.... அவங்க வரலனா நான் போய் கூட்டுட்டு வர போறேன். நீ எதுக்கு போன் பண்ண?”

“ சரி இப்போ என்ன தான் பிரச்சனை?” என்றாள் மைசரா நடுவில் தலையிட்டு.

“ ஊரிலிருந்து எல்லாரும் ரிதாவ பார்க்க வந்துட்டு இருக்காங்க.”

“ சொல்லவேயில்ல....” ரிதாவும் முழித்தாள்.

“நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது தான் போன் வந்தது.... சரி வேலையெல்லாம் முடிச்சிட்டு போய் சொல்லிக்கலாம் னு நினைச்சேன். தே ஆல்மோஸ்ட் ரிச்சிடு”, என்றதும் சபூராவிற்கு கை கால் எல்லாம் உதறல் எடுத்தது.

“ ரமீஸ்.... நாங்க கிளம்புறோம் பா.” என நழுவினார் சபூரா.

“இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஓடி ஒளிந்து வாழுவே?” அதுவரை பேசாமல் இருந்த கமர் கேட்க, அவரை இயலாமையோடு பார்த்தார் சபூரா.

“ என்ன தான் நடந்தது சாச்சி? ஆச்சா கூப்பிட்டு கூட வர மாட்டேங்கிறீங்க?” என்றாள் ரிதா. தலைகுனிந்து நின்றார் சபூரா.

“ ஆச்சா.... இந்த மாதிரி பேசாதீங்க னு காலையிலேயே சொன்னேனில்ல.... நீங்க மறுபடியும் மறுபடியும் இத பற்றியே பேசினா பிள்ளைங்க என்ன ஏது கேட்கும். உங்களால விளக்க முடியுமா? சாச்சி நமக்கு கிடைச்சதே போதும். அவங்க நம்ம கூட இருக்கணும்கிறத விட அவங்க நிம்மதியா இருக்கணும்றது தான் முக்கியம். விடுங்க.... அவங்க இஷ்டபடி செய்யட்டும்” மைசரா பேச நினைத்தை ரமீஸ் பேசி விட சராவுக்கு நிம்மதியாக இருந்தது. இருந்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் அப்படியென்ன நம்மிடம் விளக்க முடியாத விஷயம் என உறுத்தியது.

கமரும்,” என்னவோ செய்ங்க” என கூற ரமீஸின் அலைபேசி ஒலித்தது.

எடுத்து பேசி விட்டு வந்தவன்,” சாச்சி அவங்கயெல்லாம் வந்துட்டாங்க. நீங்க....” என லேசாய் நெற்றியை தேய்த்து யோசித்தான்.” சரி வாங்க” என அழைத்து சென்றவன் வெளியே வராந்தாவின் கடைசியில் வரிசையாக போடபட்டிருந்த இருக்கைகளில் தூணிற்கு பின் போடப்பட்டிருந்த இருக்கைகளில் இருவரையும் அமர செய்தான். மைசரா ஏற்கனவே முகம் முழுதும் மறையும் படி புர்கா அணிந்திருந்தாள். சபூராவும் தன் துப்பட்டாவால் முகத்தை மறைத்து கொண்டார். ரமீஸ் கீழே சென்று அவர்களை அழைத்து வந்தான்.
 
Last edited:

Advertisements

Latest updates

Advertisements

Top