• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 16

அத்தியாயம் – 17

“ ஸ்....ஸப்பா.... கொஞ்சம் நேரம் பயங்கர டென்ஷன் ஆகிடுச்சு. ஒரு வழியா எல்லாரையும் அனுப்பி வைச்சிட்டேன்.” என்றபடி அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்த பின் சபூராவின் எதிரில் வந்தமர்ந்தான் ரமீஸ். மைசராவும் தன் முகதிரையை விலக்கியிருந்தாள்.

“ நம்ம வீட்டு ஆளுங்களை எல்லாம் பார்த்தியா மைசரா?” என கேட்டான் ரமீஸ்.

“ ம்.... பார்த்தேன்”

“ எல்லாரும் நிறைய மாறிட்டாங்க” என்றார் சபூரா.அவர் மனம் உணர்ச்சி குவியலாய் குமுறிக் கொண்டிருந்தது.

“ இருக்காதா சாச்சி. கிட்டதட்ட பதினஞ்சி வருஷங்களுக்கு அப்புறம் பார்க்குறீங்க இல்லையா?”

“ ம்... ஆமா. ரமீஸ்..... இப்போ காசிம் தான் நம்ம கடைய பார்த்துக்கிறாரா? ரியாஸ் என்ன பண்றான்?”

“ரியாஸ் சாச்சா திருநெல்வேலில ஒரு ஜவுளி கடை வைச்சிருக்காங்க. வாரத்துல ரெண்டு நாள் தான் திருச்சிக்கே வராங்க. நம்ம திருச்சி கடைய வாப்பா தான் கவனிச்சிட்டு இருந்தாங்க.... வாப்பா இறந்ததுக்கு அப்புறம் சாச்சாவால ரெண்டு கடையும் கவனிச்சிக்க முடியல.... நானும் படிக்கணும் னு இங்க வந்துட்டேன். அதனால காசிம் மாமா தான் பார்த்துக்குறாங்க.... இப்போ வீடு, கடை எல்லாமே காசிம் மாமா கன்ட்ரோல்ல தான் இருக்கு” என்றான் பெருமூச்சு விட்டபடி.

“ஓ.....”

“ ஹேய்.... நீ ஏன் இப்படி பார்க்குற?” தற்செயலாக சராவை பார்த்தவன் அவளது முறைப்பை கண்டு வினவினான்.

“ நா... நான் ஒன்னு கேட்கலாமா காகா?” தீவிரமான முகத்துடன் கேட்டாள்.

“ கேளு.....”

“ ரிதாவ போயும் போயும் அந்த ரசியா வீட்டுகா கொடுக்க போறீங்க?” உச்சகட்ட அதிருப்தியில் கேட்டாள். ரமீஸ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“ அது.... “ அவன் பதில் சொல்லும் முன்பே,

“ ரிதா கிட்ட சம்மதம் கேட்டீங்களா? அவளோட விருப்பமும் முக்கியம் இல்லையா?”

“ கூல்... கூல்.... ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற மைசரா? இப்போ வரைக்கும் இத பற்றி ரெண்டு பேருக்கும் எதுவும் தெரியாது. எதுக்கு தேவையில்லாம அவங்க மனசை கலைக்கனும் னு நாங்க சொல்லல. அவங்களுக்கு கல்யாணம் பண்ணனும் னு நினைக்கும் போது தான் இத பற்றி அவங்க கிட்ட கேட்போம். அப்போ அவங்க ஓ.கே சொன்னா தான் இந்த கல்யாணம் நடக்கும். சரியா?” பொறுமையாக மைசராவிற்கு விளக்கினான்.

அப்போதும் முகத்தை தூக்கி வைத்திருந்தவள்,” என்னவோ.... அவ சந்தோஷமா இருந்தா அது போதும். ரிதா தனியா இருக்கா.... நா போறேன்” என எழுந்து சென்றுவிட்டாள். அவளுக்கு ரிதா ரசியாவின் மருமகளாக ஆவது துளியும் பிடிக்கவில்லை. அதிலும் காசிம் கூறிய ‘ அந்த ரிஸ்வி ஒரு முசுடு. அப்படியே அவன் உம்மாவோட ஜெராக்ஸ்....’ என்ற வார்த்தைகள் அவள் அதிருப்தியை மேலும் அதிகரித்தது.

“யா அல்லாஹ்! ரிதாவுக்கு அவள அன்பா ஆறுதலா பார்த்துக்குற மென்மையான குணமுடையவன் தான் மாப்பிள்ளையா அமையணும்.அந்த முசுடு பய வேண்டாம்.” என மானசீகமாக வேண்டி கொண்டாள்.

ஒரு வாரம் கழித்து......

“ சிஸ்டர் அந்த டெஸ்ட் ரிபோர்ட்ஸ் கொடுங்க...” டாக்டர் ரிதாவுடைய பரிசோதனை முடிவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ரிதா இப்போது நன்றாகவே குணமாகியிருந்தாள். இந்த ஒரு வாரமும் சபூரா ரிதாவை விட்டு இம்மியும் நகரவில்லை. அவளை தாய் போல் கவனித்து கொண்டார். கமர் பகல் நேரத்தில் கவனித்து கொள்ள, இரவு வரை மைசரா உடனிருப்பாள். தங்கையை கவனித்து கொள்ள இத்தனை பேர் இருக்க, ரமீஸ் வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்தான். இந்த ஒரு வாரத்தில் ரிதாவும் மைசராவும் நகமும் சதையுமாக இணைந்திருந்தார்கள். இருவருக்குமே மற்றவருடைய சிநேகம் தேவையாய் இருந்தது. ரிதாவிற்கு தன் வயதை ஒத்த சகோதரி கிடைத்ததில் மகிழ்ச்சி என்றால் சராவிற்கு தன் தமக்கை மணம் முடித்து சென்ற பின் ஏற்பட்ட வெற்றிடம் நிரம்பியதில் மகிழ்ச்சி.

பரிசோதனை முடிவுகளை ஆராய்ந்து முடித்த பின் மருத்துவர் பேச தொடங்கினார். “ இப்போ ரிதாவுடைய ரிபோர்ட்ஸ படிச்சி பார்த்ததுல சீரியஸான பிரச்சனை எதுவுமில்லை. முதல்ல இது பரம்பரை நோயோ இல்ல பிறந்தது முதல் வந்த நேயோ இல்ல.... இது முழுக்க முழுக்க இவங்களோட மன அழுத்தத்தினால ஏற்பட்டது. இவங்க எவ்ளோ சீக்கிரம் பழைய விஷயங்கள விட்டு வெளியே வர்றாங்களோ அவ்ளோ சீக்கிரம் குணமடைவாங்க. இவங்க மனநிலைல அதிக மாற்றம் வராம பார்த்துக்கோங்க. தனியா விடாதீங்க. ஆழ்ந்த தூக்கம், மெடிடேஷன், யோகா இதெல்லாம் மன அழுத்தம் குறைய ரொம்ப உதவும். ரெகுலரா செக்கப் க்கு வாங்க. இப்போ இவங்கள டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். மெடிசன்ஸ் கரெக்ட்டா கொடுத்துடுங்க” . மருத்துவர் கூறி விட்டு செல்ல ரமீஸ் தவிர்த்து அனைவருக்கும் மிகுந்த சந்தோஷமே....

“ ஹப்பா.... டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க”

“ நல்லவேளை சீரியஸா எதுவுமில்ல னு சொல்லிட்டாங்க”

“ நீ ஏம்பா ஒரு மாதிரி இருக்கே?” வாஞ்சையாக கேட்டார் கமர்.

“ அது ஆச்சா.... என்னோட ஹவுஸ் சர்ஜன் பீரியட் இன்னும் ஆறு மாசத்துல முடியுதில்லையா. எங்க சீப் டாக்டர் டெல்லில ஒரு ஆப்பர் இருக்குறதா சொன்னாங்க....”

“ சந்தோஷமான விஷயம் தானப்பா அத ஏன் வருத்தமா சொல்ற?”

“ எப்படி சாச்சி.... ரிதாவ இப்படி விட்டுட்டு போக முடியும். நான் நினைச்ச மாதிரியே ரிதாவோட பிரச்சனை ஸ்டெர்ஸ்( stress) தான். அவ மனசுக்கு மாறுதலா இருக்கும் னு தான் அவள சென்னைக்கே கூட்டிட்டு வந்தேன் ஆனா அவ மாறல. சரி.... காலேஜுக்கு அனுப்புனா நாலு பேரோட பழகுவா.... பழைசையெல்லாம் மறப்பா னு நினைச்சேன். அதுவும் நடக்கல. இப்படி ஒரு நிலைமைல எப்படி அவளால ஹாஸ்டல் வாழ்க்கைய வாழ முடியும்? டாக்டர் வேற அவள தனியா விட கூடாது னு சொல்றார். அதான் அந்த வேலைய வேண்டாம்னு சொல்லிடலாம் னு நினைக்கிறேன்” தன் மனதில் உள்ளதை முழுவதுமாக கூறினான் ரமீஸ்.

ரிதா,“ எனக்காக நல்ல வாய்ப்ப விட்டுட்டாதீங்க காகா. நான் எதையும் நினைக்க மாட்டேன்.” என்றவள் மைசராவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ நீ கவலைபடாம டெல்லிக்கு கிளம்பு ரமீஸ். ரிதா எங்க கூட என் வீட்ல இருப்பா.... “ சற்றும் யோசிக்காமல் கூறினார் சபூரா.

“ அதெப்படி முடியும் சாச்சி.... வீட்ல என்ன சொல்றது?”

“ அவ காலேஜ் ஹாஸ்டல்ல இருக்குறதா சொல்லிடுங்க காகா. வீக்கெண்ட்ல அவ திருச்சிக்கு போயிட்டு வரட்டும்” உற்சாகமாக திட்டம் தீட்டினாள் மைசரா.

“ பொய் சொல்ல சொல்றீயா? ” என்றார் கமர் கோபமாக.

“ இல்ல ஆச்சா.... அது....” என தடுமாறினாள் மைசரா. ரிதா தன் வீட்டுக்கு வரும் உற்சாகத்தில் அவள் கமரை பற்றி யோசிக்கவில்லை. அனைவருக்குமே ரிதா சபூரா வீட்டில் இருப்பது நல்லது தான் என தோன்றினாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் அது தவறு எனப்பட்டது. யார் என்ன சொல்வது என தெரியாமல் அங்கே மௌனம் நிலவியது.

“ நா.... நான் சாச்சி வீட்ல தான் இருப்பேன்” மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக கூறினாள் ரிதா.

“ அது சரிபட்டு வராது ரிதா. ஒன்னு உன் சாச்சிய அங்க வர சொல்லு. இல்லனா அவ இங்க தான் இருக்கானு எல்லார் கிட்டயும் சொல்லிட்டு அவ வீட்ல தங்கு. அத விட்டுட்டு இதென்ன திருட்டுதனம்?” கமர் கூறியதும் தாய் மகள் இருவரது முகமுமே வாடிவிட்டது.

“ அதெல்லாம் எனக்கு தெரியாது ஆச்சா. உங்க பெரியவங்க சண்டைய தயவுசெய்து எங்க மேல திணிக்காதீங்க.... நான் சாச்சி வீட்ல தான் இருப்பேன். நீங்க இத வீட்ல சொல்லுங்க சொல்லாம போங்க.... அது உங்க பாடு” என்று விட்டு மைசராவை பார்க்க, அவள் கட்டை விரலை லேசாக தூக்கி காட்டி,” சூப்பர்” என உதடசைத்தாள்.

ரிதாவின் உடல்நிலையும் மனநிலையுமே பிரதானமாக தோன்றியதில் யாராலும் அதற்கு மேல் மறுப்பு கூற முடியவில்லை. மைசராவுக்கு ரிதாவிற்கு இடையில் அரும்பியிருந்த ஆழாமான ஸ்நேகம் நிச்சயம் ரிதாவின் மனமாற்றத்திற்கு வழி வகுக்கும் என நம்பினர்.

ஆறு மாதங்கள் கழித்து ரிதாவை கல்லூரி விடுதியிலேயே தங்க வைத்து விட்டதாக திருச்சியில் கூறி விட்டு சபூராவின் வீட்டில் விட்டு விட்டு ரமீஸ் டெல்லி சென்றான். கமர் உடனிருந்ததால் அவர்களும் எதுவும் தோண்டி துருவி கேட்கவில்லை. பேத்தியின் நலனுக்காகவும், மருமகளின் மனநிம்மதிக்காகவும் கமர் அமைதி காத்தார். இன்று வரை அமைதியாகவே இருக்கிறார்.

ரமீஸ் டெல்லி சென்ற பிறகு இரண்டு வருடங்களாக ரிதா சபூராவின் வீட்டில் தான் வசிக்கிறாள். முற்றிலும் புதியதான சூழலில் அவள் மனகாயங்கள் எல்லாம் ஆற தொடங்கின. சபூராவின் அரவணைப்பிலும், மைசராவின் தோழமையிலும் ரிதாவிற்கு இதுவரை ஃபிட்ஸ் வரவேயில்லை.

ரமீஸுக்கு இப்போது இலண்டனில் ஆராய்ச்சி படிப்பு படிக்க வாய்ப்பு கிட்ட, அடுத்து இலண்டன் போக வேண்டும் என வந்து நின்றான். ஏற்கனவே பேரனை தனிமையில் விட்டுவிட்டோமே என மருகி கொண்டிருந்த கமர், ரமீஸுக்கு திருமணம் முடித்து துணையோடு அனுப்ப ஆசைபட்டார். ஆதலால் அவசர அவசரமாக பெண் பார்த்து நிச்சயித்து... இதோ இன்னும் பத்து நாட்களில் திருமணம்.....

ரமீஸ் எவ்வளவு அழைத்தும் சபூரா திருமண சமயத்தில் தன்னுடைய வருகை தேவையில்லாத குழப்பங்களை விளைவிக்கும் என கூறி மறுத்துவிட்டார். ஆனால் ரிதா விடவில்லை. மைசராவாவது திருமணத்திற்கு வர வேண்டும் என அடம் பிடிக்க, கமர் என் பேத்தி வர வேண்டும் என கட்டளையிட, சபூராவால் மறுக்க முடியவில்லை. ஆனாலும் மைசராவை தன்னுடைய மகளாக அனுப்பாமல் தோழியாக அனுப்புவதாக கூறினார். அதற்காக அவர்களது மற்றொரு தோழியான இஷ்ரத்தும் வர வேண்டும் என நிபந்தனையிட்டார். சராவும் ரிதாவும் கெஞ்சி கூத்தாடி இஷ்ரத்தை ஊருக்கு வர சம்மதிக்க வைத்தனர். ரிதா பரீட்சை முடிந்த உடனே திருச்சிக்கு கிளம்பி விட, மைசராவும் இஷ்ரத்தும் பத்து நாட்களுக்கு முன் வர திட்டமிட்டனர். ஆனால் இஷ்ரத் தான் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டாளே.... இப்போது மைசரா தன் சொந்த வீட்டிற்கே விருந்தாளியாக சென்று கொண்டிருக்கிறாள்.

“ என்ன மைசரா..... உள்ளே வர்ற ஐடியாவேயில்லையா?” காற்றை கிழித்து வந்த குரலில் நினைவு கலைந்தவள் திரும்பி பார்த்தாள். பளிச்சென்ற புன்னகையுடன் மன்சூர் நின்றுக் கொண்டிருந்தான்.

- மழை வரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
வாரத்திற்கு இருமுறை பதிவு கொடுக்கலாமே @ பர்வீன்.மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top