You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


காதல் அடைமழை காலம் - 20

#1
காதல் அடைமழை காலம் – 20

அத்தியாயம் – 21

மைசரா தன் தேவைகளை முடித்து கொண்டு தொழுகைகான சுத்திகரிப்பு வேலைகளையும் செய்து விட்டு வெளியே வர, ஹாலில் ரமீஸ் அமர்ந்திருந்தான்.

ஓடிச் சென்று அவன் தோளில் சாய்ந்து அழ வேண்டும் என தோன்றிய எண்ணத்தை மனதிலேயே அடக்கி கொண்டாள்.

“ ஹேய்.... எழுந்துட்டியா மைசரா? ஸாரிடா நைட் உன்னை வாசல்லயே விட்டுட்டு போற மாதிரி ஆகிடுச்சு.....” என்றான் வாஞ்சையாக.

“ பரவாயில்லை விடுங்க காகா...”

“ நீ வேற.... இப்போ ரிதா எழுந்து என்னை உண்டு இல்ல னு பண்ணிடுவா.... நான் பார்த்துக்குறேன் னு சொன்னதுனால தான் அவ மாத்திரையே போட்டுகிட்டா மைசரா. பட் என்னால தான் சரியாக கவனிக்க முடியாம போச்சு.ஸாரிடா....” அவன் வருத்தமாக பேசி கொண்டேயிருக்க, சராவின் பார்வை ரமீஸுக்கு பின்னால் சென்றது.

வெள்ளை நிற எம்ட்ராய்ரி போட்ட முழு கை குர்தாவும், நீல நிற பேண்டும் போட்டு ஜம்மென படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் ரிஸ்வி. சிவந்திருந்த விழிகளால் அவளை பார்க்க, முகத்தை திருப்பிக் கொண்டாள் மைசரா.

அரவம் கேட்டு திரும்பி பார்த்த ரமீஸ் அசந்து போனான்.

“ வாடா.... வாடா... மாப்ள... கரெக்டா தொழுகைக்கு வந்திட்டியே.... “ என அவனை தழுவிக் கொண்டான். அவன் பூசியிருந்த அத்தர் வாசனை ( அத்தர் என்பது பூக்களிலிருந்து தயாரிக்கபடும் நறுமண திரவியம். பெர்ப்யூம்களில் கலக்கபடும் வேதி பொருட்களும், ஆல்கஹாலும் இதில் இருக்காது) மைசராவின் நாசியை தீண்டியது. சற்று முன்பு குடலை பிரட்டும் வாடை இவனிடமிருந்தா வந்தது என எண்ணுமளவிற்கு கம கம வென இருந்தான் ரிஸ்வி.

“ நீ என்ன தான் குளித்து அத்தர் எல்லாம் போட்டுட்டு போனாலும் குடிகாரனோட தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட போவதில்ல.... ஒருமுறை குடிச்சா 40 நாள் தொழுகை, செய்ற நல்ல காரியம் எதுவும் இறைவனை சேராது. இது கூட தெரியாதா?” மனதிற்குள் நினைத்து கொண்டாள் மைசரா. அவளின் பார்வையில் தொனித்த ஏளனம் ரிஸ்விக்கும் புரியாமலில்லை. அவனது அழுத்தமான பார்வை அவள் மேல் விழ, அங்கிருந்து விலகி போனாள்.

“சரா.... சாச்சாக்கு ஸலாம்(வணக்கம்) சொல்லிட்டு போ....” என ரமீஸ் அழைக்க திரும்பி பார்த்தாள். தொழுகைக்காக ரியாஸும் வந்தார். கமரின் குடும்ப நிறமான சிவந்த நிறத்தை கொண்டிருந்தவர் சராசரி உயரத்தில், சின்ன தாடியுடன் இருந்தார்.

“ அஸ்ஸலாமு அலைக்கும்” என்றவள் சாச்சா என சொல்லாமல் முழுங்கினாள். அவளது தடுமாற்றத்தை புரிந்தவன்,” என்னை காகா னு தானே கூப்பிடுற.... இவங்களயும் நான் கூப்பிடுறது போல சாச்சானே கூப்பிடு” என அவளின் நிலையை இலகுவாக்கினான்.

“ அஸ்ஸலாமு அலைக்கும் சாச்சா” மன நிறைவோடு கூறினாள்.

“ வ அலைக்கும் அஸ்ஸலாம்.... நீ தான் ரிதா ப்ரெண்டாமா?”

“ ஆமா சாச்சா”

“ நல்லது மா. உன் வீடு மாதிரி நினைச்சிக்க. கூச்சபடாம என்ன வேணுமோ ஆச்சா கிட்ட கேளு.... சரியா மா?” என்றார் வாஞ்சையாக. அவர் மேல் புதிதாக ஓர் நேசம் பிறந்தது . அந்நிய பெண் என்பதால் அவர் மைசராவிடம் அதற்கு மேல் பேசவுமில்லை. உற்று நோக்கவுமில்லை.

ரிஸ்வியிடம் நலம் விசாரித்து கொண்டவர், “ சரி ரமீஸ்.... பள்ளிவாசலுக்கு கிளம்பலாமா?” என்றார்.

“ வாங்க போகலாம் சாச்சா.... அதென்ன கையிலே பெட்டி?”

“ தொழுதுட்டு அப்படியே திருச்சி கிளம்பறேன் பா”

“ என்ன சாச்சா.... கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் தானே இருக்கு....”

“ அதான் ரிஸ்வி வந்துட்டானே.... இனி எல்லாத்தையும் அவன் கவனிச்சிப்பான். நானும் எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்திடுறேன்” அவர்கள் பேசியபடி பள்ளிவாசலுக்கு செல்ல, மைசரா தொழுகை அறைக்கு சென்றாள். இஸ்லாத்தில் தொழுகை என தனியிடம் ஒதுக்க வேண்டும் என கட்டாயம் இல்லை. இட தூய்மை, உணை தூய்மை, மன தூய்மை இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் தொழலாம். எனினும் கமரின் வீட்டில் தொழுகைகென தனியே அறை இருந்தது.

மைசரா உள்ளே செல்லும் போது மூன்று பேர் வரிசையாக தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் மைசராவிற்கு முதுகு காட்டிய நின்றிருந்ததால் அவளுக்கு முகம் தெரியவில்லை. முதலில் நிற்பது கமர் என்று அனுமானித்தவளால் மற்ற இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் ஒருவர் சனோபராக இருக்கலாம் என்றாலும் இன்னும் ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் வரிசையில் மைசராவும் சேர்ந்து கொண்டாள். இஸ்லாமியர்கள் பிரிந்து தொழுவதை விட சேர்ந்து தொழுவது தான் சிறப்பு.

தொழுகையை முடித்து கொண்டு தன் மன சஞ்சலங்களை எல்லாம் இறைவனிடம் கொட்டி விட்டு சற்றே இலேசான மனதோடு கண் திறந்தாள் மைசரா.


“ ஹாய் மைசரா.....” குதூகலமான அந்த குரலை கேட்டவுடனேயே,

“ நீங்க சனோபர் சாச்சி தானே?” என கேட்டாள் மைசரா. தொழுது முடித்து வெளியே வர, சனோபர் ஹாலில் அமர்ந்திருந்தார். சிரித்த முகம், சிநேக குணம், சிரிக்க சிரிக்க பேசும் ரகம். கொஞ்சம் பூசினாற் போல இருப்பார் அவர்.

“ வாவ்.... கண்டுபிடிச்சிட்டியே... அப்போ ரிதா என்னை பற்றி நிறைய சொல்லிருக்கா னு நினைக்கிறேன்”

“ ஆமா” என்றாள் புன்சிரிப்புடன்.

“ சூப்பர்.... உன்னை பற்றியும் நிறைய சொல்லியிருக்கா...இப்படி உட்காரு” என தன்னருகே இருந்த சோபாவை காட்டியவர், “ ரெண்டு பேரும் திக் ப்ரெண்ட்ஸ் போல. சரா இப்படி சொன்னா.... சரா அப்படி சொன்னா னு எப்பவும் உன் புராணம் தான். வீக்கெண்டுல கூட உன்னை விட்டுட்டு வர மாட்டேங்குறாளே ரிதா. அவ பழைய படி மாறதுக்கு நீ தான் முக்கிய காரணம் னு சொன்னா. ரொம்ப சந்தோஷம் சரா. நீ என்னை சாச்சி னு கூப்பிடு நான் உன்னை சரா னு கூப்பிடுறேன். டீல் ஓ.கே வா?”

“ டபுள் ஓ.கே சாச்சி” என மகிழ்ச்சியாக சம்மதித்தாள். சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.

“ சுட சுட டீ ரெடீடீடீடீ.....” என்ற அறிவிப்போடு வந்து நின்றாள் தில்ரூபா. 26 வயது மதிக்கத்தக்க சற்றே கருத்த மேனியுடையவள். என்றாலும் நல்ல களையான முகம்..... அதில் கள்ளமில்லா சிரிப்பு. திருமணம் முடிந்து நான்கு மாதங்களே ஆன புதுப்பெண்.

“ ஓ.... இவர் தான் ஆச்சா பக்கத்துல நின்று தொழுது கொண்டிருந்தவரா....” என புரிந்து கொண்டாள் மைசரா. தொழுகையில் எந்த பாகுபாடும் இல்லை. முதலாளி, தொழிலாளி..... பணக்காரன், ஏழை அனைவரும் சமமே. தனி தனியே தொழ அனுமதியில்லை.

“ சரா..... இவ பேரு தில்ரூபா.... நீ தில்லு னே கூப்பிடு.” என அறிமுகம் செய்தார் சனோபர்.

“ அவ என்னை லாத்தானே (அக்கா) கூப்பிடட்டுமே. நான் அவள விட பெரியவ தானே” என சிணுங்கினாள் அவள்.

“ இந்த காலத்தில பேர் சொல்லி கூப்பிடறது தான் பேஷன் தில்லு. கட்டுன புருஷனையே பேர் சொல்லி தான் கூப்பிடுறாங்க” என போலியாக அலுத்துக் கொண்டார் சனோபர்.

“ அப்போ தில்ரூபா னு கூப்பிடட்டும்”

“ நோ....நோ.... சரா நீ தில்லு னு கூப்பிடு”

“ நீங்க தான் அப்படி கூப்பிட்டு வெறுபேத்துறீங்கன்னா புதுசா வந்த புள்ளயையும் கெடுக்காதீங்க”

“ அவங்களுக்கு பிடிக்கலனா விடுங்க சாச்சி. நான் லாத்தானே கூப்பிடுறேன்”

“ நீ வேற அவளுக்கு அப்படி கூப்பிட்டா ரொம்ப புடிக்கும். என்ன..... அவ புருஷன் மட்டும் தான் அப்படி கூப்பிடனுமாம்” என கூற, குங்குமமாய் சிவந்தது தில்ரூபாவின் முகம்.

“ புதுப்பொண்ணுக்கு வெட்கத்த பாத்தியா.....”

“ அட போங்க லாத்தா...... எம்மா தாயே.... நீ என்னை தில்லுனே கூப்பிடு” என்றாள். அவளின் பெயரை ‘தில்லு’ என சுருக்கியதே சனோபர் தான். ஆனால் ஏனோ அப்படி அழைத்தால் தில்ரூபாவிற்கு வெட்கம் வந்து விடும். அதனாலேயே சனோபர் அவளை தில்லு என்றே அழைப்பார்.


“ ம்.... அப்படி வா வழிக்கு”

“ அவ கிட்ட வம்பிழுக்கலனா உனக்கு பொழுது விடியாதே. முதல்ல டீயை குடிங்க” என்றபடி வந்தமர்ந்தார் கமர். அவருக்கு விரிந்த புன்னகையை பதிலாக கொடுத்தவர் டீயை எடுத்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வருவதாக கூறிவிட்டு தன்னறைக்கு சென்று விட்டார் சனோபர்.

“ சாச்சி நல்லா பேசுறாங்க ஆச்சா” என்றாள் சரா சிரித்தபடி.

“ அவ அப்படி தான் மா. எப்பவும் கலகலப்பா பேசுவா. தங்கமான பிள்ளை.” என மருமகளுக்கு சான்றிதழ் வழங்கினார் கமர்.

“ ஆமா சரா.... லாத்தா ரொம்ப நல்லவங்க. எல்லார்கிட்டயும் சகஜமா பேசுவாங்க. என்னை ஒரு நாள் கூட வேலைகாரி மாதிரி நடத்தியதில்ல..... அவங்க மட்டுமல்ல இந்த வீட்டுல எல்லாருமே தான்” என்றாள் தில்லு அக மகிழ்ந்து.

அவளுக்கு அடுப்படியில் வேலை சொல்லி அனுப்பியவர், “ எனக்கு கிடைச்ச மூன்று மருமகள்களுமே தங்கமானவங்க மைசரா. ஆனா எனக்கு தான் அவங்க கூட சேர்ந்து வாழ கொடுத்து வைக்கல. ஏதோ..... சனோபர் ஒருத்தி தான் கூட இருக்கா. அமீரும் ஜமீலாவும் இருந்த வரைக்கும் சனோபர் ரியாஸ் கூட திருநெல்வேலில தான் இருந்தா. அவங்க இறந்ததுக்கு அப்புறம் தான் நான் தனியா இருக்கேன் னு இங்க வந்துட்டா. என் மவன் தான் இங்கைக்கும் அங்கைக்கும் அலைஞ்சி கிட்டே கிடக்குறான் “ தன் மன கவலைகளை எல்லாம் பேத்தியிடம் கொட்டினார்.

சபூரா வாழாத இந்த வீட்டை வெகுவாக வெறுத்தாள் மைசரா. அவளின் மனதை புரிந்த ரிதாவும் இங்குள்ள விஷயங்களை அதிகம் பேச மாட்டாள். சிற்சில விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்வாள்.

“ ஆச்சா.....பேசாம நீங்களும் திருநெல்வேலிக்கே போயிடலாம் இல்லை. ஏன் தனியா இருக்கணும்?”

“ நான் இந்த வீட்டை விட்டு எங்கையும் போக மாட்டேன் ராசாத்தி..... என் ஆயுசு இருக்குற வரைக்கும் இங்க தான் கிடப்பேன்” என்றார் வலி மிகுந்த குரலில்.

“ சரி ஆச்சா.... அஸ்மா மாமி இங்கே பக்கத்துல தான் இருக்குறதா ரிதா ஒரு தடவை சொல்லியிருக்கா. அவங்கள இங்க வர வைச்சிட்டு சாச்சிய திருநெல்வேலிக்கே அனுப்பிடலாமில்ல..... சாச்சாக்கும் அலைச்சல் இல்லை....”

“ சரியா போச்சு போ.... எனக்கு மருமகளுங்க அமைஞ்ச மாதிரி மகளுங்களும் அமையல.... மருமகனும் அமையல. என் பெரிய மருமவன் அதான் ரிஸ்வி வாப்பா அவரு தங்கமானவரு.... சின்ன மருமவன் தான் அதான் மன்சூர் வாப்பா அந்த அளவுக்கு சொல்லிக்கிற மாதிரி இல்லை. அவங்கள நம்பியெல்லாம் காலத்த ஓட்ட முடியாது” பெருமூச்சு விட்டபடி எழுந்தவர் ,” நீ வேணுமுன்னா செத்த நேரம் ஓய்வா படுடேன் மைசரா. எனக்கு அடுப்படில கொஞ்ச வேலை கிடக்கு” என்றவர் உள்ளே சென்றாள்.
ரிஸ்வியை பற்றி பேசியதும் சற்றே மறந்திருந்த விஷயங்கள் எல்லாம் நினைவு வர, அவற்றை முயன்று ஒதுக்கினாள். நேற்று உடன் பயணித்த இருவரும் தன் முறைபையன்கள் என்பதை சலிப்பாக உணர்ந்தாள். இஞ்சியும் ஏலமும் தட்டி போட்ட சூடான டீயை குடித்தபடி ஹாலின் ஜன்னலருகே சென்றாள் மைசரா. பெரும்பாலான தமிழ் பேசும் முஸ்லிம்களின் வீட்டில் எப்போதும் இஞ்சி டீ தான். அவ்வபோது அதில் ஏலக்காயும் சேர்பர். லேசான காரமும், மணம் கொண்ட இந்த டீ செரிமானத்திற்கும், புத்துணர்ச்சிக்கும் 100% கியாரண்டி.

டீயை குடித்தபடியே வெளியே பார்த்தவள், அப்போது தான் வீட்டிற்கு முன் அமைந்திருந்த அழகிய தோட்டத்தை கவனித்தாள். கொஞ்ச கொஞ்சமாக விடிந்து கொண்டிருந்த அந்த வேளையில் மிக அழகாக காட்சியளித்தது அந்த தோட்டம். குடித்த குவளையை டீபாய் வைத்து விட்டு வெளியே வந்தாள்.

குளு குளு வென வீசிய குளிர் காற்று அவளது மேனியை தழுவ, தன் துப்பட்டாவால் நன்று போர்த்தி கொண்டாள். பசுமையான புல்வெளியினூடே நடந்தவள் அவற்றின் ஓரத்தில் ‘ப’ வடிவில் அமைத்திருந்த மலர் செடிகளின் அருகில் சென்றாள்.வெள்ளை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு என விதவிதமாக நிறங்களில் பூக்கள் பூத்து காற்றோடு அசைந்து கொண்டிருந்தது. அதன் அருகே இருந்த ஒற்றை கல் திண்ணையில் அமர்ந்தவள் காற்றில் கலந்து வந்த மலர்களின் மணத்தை முகர்ந்து ரசித்தாள்.

எத்தனை முயன்றும் விடியலில் நடந்ததை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தன்னை மறந்து மருகியபடி அமர்ந்தவளின் நீர் நிறைந்த கண்களை இரு கரங்கள் வந்து மூடின.

- மழை வரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top