• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் - 24

அத்தியாயம் – 25

ரிஸ்வி கூறியதில் கோபமடைந்த அஸ்மா “ பார்த்தியா மா உன் பேரனை. சாச்சி னு ஒரு மட்டு மரியாதை வேணாம். என்னா தெனவட்டா பதில் சொல்றான். நீயும் பார்த்துட்டு சும்மா இருக்கே. தெரியுது மா... நாங்க காசு பணம் இல்லாம இருக்கோம் அது தானே உங்களுக்கெல்லாம் இளக்காரமா போயிட்டோம்” என அழ தொடங்கினார்.

“ அப்படியெல்லாம் இல்ல மச்சி.... அழாதீங்க” என அருகே வந்தார் சனோபர்.

“ அஸ்மா.... உன்னை இங்கே யாரும் அப்படி நினைக்கல மா. சும்மா கண்டதையும் போட்டு உளப்பாத.... மன்சூர் தப்பு பண்ணதுக்கு ரிஸ்வி கண்டிச்சிருக்கான். தெரியாம பெரிய காயமா பட்டுடுச்சு போல. தப்பா நினைக்காதலா..... உம்மாகாக மன்னிச்சிடு மா” என வேண்ட அஸ்மாவிற்கும் அதற்கு மேல் என்ன பேச என தெரியவில்லை.

“ உம்மா..... போதும் மா. இந்த பிரச்சனைய இப்படியே விட்டுடு. நான் தான் கேட்க வேண்டாம் னு அப்பவே சொன்னேன்ல.வா போலாம்...” என்றான் மன்சூர் கோபத்தை உள்ளடக்கியபடி.

ரிஸ்வி அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் கிளம்பி விட, மைசராவுக்கு பாவமாக இருந்தது.

“ இவன் பெரிய பிஸ்தா, பாதாம் , முந்திரி..... ரொம்ப ஒழுங்கு மாதிரி அவன கண்டிக்கிறானாம்.... பிராடு பய.... ச்சே அவங்கள என்னம்மா அவமான படுத்திட்டான்” என்றது வேறென்ன சராவின் மைண்ட் வாய்ஸே தான்.

“ தில்லு.... ரிஸ்விக்கு வண்டலப்பம் கொண்டு வா” என்றதும் தில்லு ஒரு கிண்ணத்தில் வண்டலப்பத்தை போட்டு அந்த துளை வழியே கொடுத்தாள்.

வண்டலப்பம் என்பது தேங்காய் பால், முட்டை, சர்க்கரை சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகை. இது தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே மிக பிரபலமானது. ரம்ஜான் பண்ரடிகையின் போது தவறாமல் இடம்பிடிக்கும் இந்த வண்டலப்பம், மற்ற நாட்களில் முக்கியமான விருந்தாளிகளுக்காகவும் செய்யப்படும்.

“ தில்லு.... அஸ்மா வீட்டுக்கு சாப்பாடு கட்டு. நா ஒரு எட்டு போய் பார்த்து சமாதானபடுத்திட்டு வாரேன்” என்றார் கமர்.

“ நீ சாப்பிடு ரிஸ்வி” என்று விட்டு எழுந்து தயாராக உள்ளே சென்றார்.

“ எப்ப பாரு ஏதாவது சண்டை இழுத்துட்டு வர்றதே உனக்கு வேலை” என அருகில் கிடந்த கை துண்டால் செல்லமாக அவன் முதுகில் அடித்து விட்டு சென்றார் சனோபர்

வண்டலப்பத்தை ரசித்து.... ருசித்து... சாப்பிட்டு கொண்டிருந்த ரிஸ்வியின் முன் சென்று அமர்ந்தாள் ரிதா. மைசரா சமையலறையை விட்டு வர மாட்டேன் என்றுவிட்டாள்.

“ பாவம் மச்சான் மன்சூர்.... பார்த்து பதுமானமா அடிக்க கூடாது.... இப்படி மண்டைய உடைச்சி வைச்சிருக்கீங்களே” என்றாள் சின்ன சிரிப்போடு.

“ சும்மா ஒரு தட்டு தட்டினேன் ரிதா. கொஞ்சம் பலமா பட்டுடுச்சி போல. ஆனாலும் காயம் சிறுசா தான் இருக்கும் இவன் பெருசா கட்டு போட்டு வைச்சிருப்பான். இதெல்லாம் நீ கண்டுக்காத விடு....” என்றவன் சாப்பிட்டு முடித்து விடைபெற்று சென்றான்.

“ இது தான் ஒரு தட்டு தட்டுனதா? மண்டைய உடைச்சிட்டு எவ்ளோ கூலா பேசிட்டு போறாரு உன் மச்சான்.... பாவம் அவங்க” என்றபடி வந்தமர்ந்தாள் மைசரா.

“ அதான் சமாதானபடுத்த ஆச்சா பின்னாடியே போறாங்களே.... அப்புறம் என்ன”

“ நல்லாயிருக்கே கதை.... இவரு மண்டைய உடைப்பாராம். .. ஆச்சா போய் சமாதானபடுத்தணுமா? என்ன லாஜிக் இது....” என படபடத்தவள், அப்போது தான் ரிதாவின் அழுத்தமான பார்வை தன் மேல் விழுவதை உணர்ந்தாள். ஏதோ பேசிக் கொண்டிருந்தவள் கப்பென வாயை மூடிக்கொண்டாள்.

“ இப்போ உனக்கு என்ன பிரச்சனை?” தனக்கும் அவளுக்கும் சாப்பிட தட்டுகளை எடுத்து வைத்தபடி கேட்டாள்.

“ எனக்கா? எனக்கென்ன பிரச்சனை?” என கேள்வியை திருப்பிவிட்டாள் சரா.

“ உனக்கு தான். உனக்கு தான் ஏதோ பிரச்சனை இருக்கு...”

“ ச்சீ...போ உளறாத”

“ நான் ஒன்னும் உளறல சரா. உனக்கு தான் ரிஸ்வி மச்சானை பார்த்தாலே பிடிக்கல. பயங்கர டென்ஷன் ஆகுற..... வந்த முதல் நாள்லயே இவ்ளோ வெறுப்பு காட்டுற அளவுக்கு என்ன நடந்தது?” என நேரடியாக கேட்டுவிட்டாள் ரிதா.

அவள் கேள்வியில் தடுமாறியவள்,” சே... சே.... அப்படியெல்லாம் ஒ... ஒன்னுமில்லயே...” என சமாளித்தாள்.

“ எனக்கு புரியுது சரா.... ரிஸ்வி மச்சானை நீ ரசியா மாமி மகனாக தான் பார்க்குற... அதான் உனக்கு இவ்வளவு கோபம் வெறுப்பு எல்லாம் வருது.”

“ அப்படியே பார்த்துட்டு போறேனே என்ன இப்போ” என முணுமுணுத்து கொண்டாள்.

“ அவங்கள நீ ஜிஷான் ரிஸ்வியா தெரிஞ்சிக்கணும் னு நான் ஆசைபடுறேன் சரா.” என்றவள் ரிஸ்வியை பற்றி சொல்ல தொடங்கினாள்.


அமீரும் ஜமீலாவும் இறந்த பிறகு தடுமாறியது குடும்பம் மட்டுமல்ல அவர்களுடைய அடையாளமான ‘ ஹம்ஸா டெக்ஸ்டைல்ஸ்’ம் தான். மருத்துவ படிப்பிற்காக ரமீஸ் சென்னையில் இருக்க, புதிய கடையை விட்டு வர முடியாமல் ரியாஸ் தவிக்க, வேறுவழியின்றி நிர்வாகம் கடையில் சிறு பொறுப்பிலிருந்த கடைசி மருமகனான காசிம் கைகளில் சென்றது கூடவே குடும்பமும்.

“ ம்.... ஞாபகம் இருக்கு ரிதா. நீ ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது காகா ஒரு முறை சொன்னாங்க”

ஆனால் காசிமின் மெத்தன போக்காலும், பொறுப்பின்மையாலும் ஒரே வருடத்தில் கடை நசிந்து போனது.

“ அச்சச்சோ.....”

“ ஆச்சா கேட்ட எந்த கேள்விக்கும் காசிம் மாமா ஒழுங்கா பதில் சொல்லலைலாம். அஸ்மா மாமியும் என் புருஷன கேட்க கூடாது னு சண்டை போட்டாங்களாம்”

“ அதெப்படி ரிதா.... பொறுப்பு அவங்க கிட்ட இருக்கும் போது அவங்கள தானே கேட்பாங்க....”

“ ஆமா. ஆனா அவங்க கடை ஏற்கனவே நஷ்டத்தில தான் ஓடிச்சி னு இறந்த போன என் வாப்பாவ கை காட்டிட்டு முடிச்சிட்டாங்க” என்றாள் விரத்தியாக. மைசராவிற்கு இப்போது மன்சூரின் குடும்பம் மீது கோப கோபமாக வந்தது.

“ அப்புறம் இதை எப்படி சமாளிச்சீங்க?”

“அப்போ தான் ரிஸ்வி மச்சான் மேல் படிப்ப முடிச்சிட்டு பெங்களூர்ல அவங்க கடையில புதுசா ஒரு பிரிவு ஆரம்பிக்க வேலை பார்த்துட்டு இருந்தாங்க. நம்ம அப்பா( தாத்தா) காலத்துல இருந்து ஓடிட்டு இருந்த கடைய மூட மனசில்லாம ரமீஸ் காகா மச்சானோட சூழ்நிலை தெரிஞ்சும் திருச்சிக்கு வந்து நம்ம கடைய பார்த்துக்க முடியுமா? னு கேட்டாங்க...
நம்ம ரமீஸ் காகா கேட்டதும் அவங்க தொடங்கவிருந்த புது செக்ஷன் ஐடியாவ அப்படியே ட்ராப் பண்ணிட்டு நஷ்டத்தில ஓடிட்டிருந்த நம்ம கடைய பொறுப்பேத்துக்கிட்டாங்க மச்சான். இரண்டு வருஷமா அவங்க குடும்பத்த விட்டுட்டு திருச்சில தான் இருக்காங்க சரா. நஷ்டத்தில ஓடுன கடைய இன்னைக்கு லாபம் கொடுக்குற கடையா மாத்தி புதுசா ஒரு ப்ரான்ச்சை வேற ஆரம்பித்து அதையும் சக்ஸஸ்புல்லா நடத்திட்டு வராங்க மச்சான்.” என ரிஸ்வி புராணத்தை பாடினாள்.

“ வாவ் ... நிஜமாகவே அவங்க செய்தது பெரிய விஷயம் தான் ரிதா. மாஷா அல்லாஹ்( புகழ் அனைத்தும் இறைவனுக்கே)....” எவ்வளவுமுயன்றும் மைசராவால் தன் ஆச்சரியத்தை வெளிகாட்டாமல் இருக்க முடியவில்லை.

“ இப்போவாவது ரிஸ்வி மச்சானை பற்றி புரிஞ்சிகிட்டியா.”

“ ம்.... ஆனா நீ இதையெல்லாம் ஏன் என் கிட்ட சொல்லல?”

“ எப்படி சொல்றது சரா. ரசியா மாமி பேர் சொன்னாலே நீ பயங்கர காண்டாய்டுவா... இந்த மாதிரி உன் கிட்ட சொல்லாத விஷயங்கள் நிறைய இருக்கு சரா” என்றாள் பூடகமாய்.

அவள் பேச்சை கவனித்தாலும் சரா எதுவும் கேட்கவில்லை. அவளுக்கு தான் அந்த பூடகம் தெரியுமே.....

“ இப்போ என் மச்சான் அவங்க பெங்களூர்ல ஆரம்பிக்க ஆசைப்பட்ட கடைய சென்னையில திறக்க போறாங்க தெரியுமா?”

“ அப்போ திருச்சி கடை?”

“ அதையும் மச்சானே கவனிச்சிப்பாங்க” இலகுவாக கூறினாள் ரிதா.

மைசராவிற்கும் ஆச்சரியம் தான் ரமீஸ் காகா கேட்துக்காக தன் ஆசையை எல்லாம் ஒதுக்கி விட்டு வந்திருக்கிறான் என்றால் அவன் ரமீஸ் மீதும் ரிதா மீதும் எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்கிறான். அதிலும் சென்னை, திருச்சி என இரண்டு ஊர்களில் உள்ள கடைகளையும் கவனித்து கொள்ளலாம் என்ற அவனது தன்னம்பிக்கையை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் அந்த குடிப்பழக்கம்? அதை ஏற்றுக்கொள்ள முடியாதே.... அவன் விடியலில் முத்தமிட வந்தது? அதை மன்னிக்கவே முடியாதே....

“ என்னலா அமைதியாகிட்டே?”

“ ஓ.கே.... ஓ.கே உன் மச்சான் சூப்பர் ஹீரோ தான். ஒத்துக்குறேன். இனிமே அவர பத்தி எதுவும் பேச மாட்டேன். போதுமா....” என எழுந்தவளை கரம் பிடித்து நிறுத்தியவள்,” நம்ம மச்சான் னு சொல்லு சரா” என்றாள் குறும்பு சிரிப்போடு.

“ போடி.... அது மட்டும் சொல்ல மாட்டேன்” என முறுக்கி கொண்டாள் மைசரா.

கமரோடு தில்லுவை துணைக்கு அனுப்பிவிட்டு வந்தார் சனோபர்.

“ ரெண்டு பேரும் சாப்பிடாம உட்கார்ந்து என்ன பேசிட்டு இருக்கீங்க” என்றவர் அவர்களுக்கு பரிமாற தொடங்கினார்.

“ ஒன்னுமில்ல சாச்சி... நம்ம ரிஸ்வி மச்சானை பற்றி சரா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்”

“ போச்சா.... சரா காதுல இரத்தம் வந்திருக்குமே... “ என கிண்டலாக கேட்க அதை ஆமோதிப்பதை போல் தலையாட்டினாள் மைசரா.

“ அடிங்க.... என் கூட உட்கார்ந்து நல்ல கதை கேட்டுட்டு இப்போ போர் அடிச்சேன் னா சொல்றே...” என அடிக்க பொருள் தேட,

“ ஆஹா....ஏன் என் ரிதா பேபி ரவுடி பேபியா மாறி நிக்குது” என்றபடி வந்தான் ரமீஸ்.

“ வாடாப்பா.... ஒரு அரைமணி நேரத்திற்கு முன்னாடி வந்திருக்க கூடாது....?” என அலுத்து கொண்டார் சனோபர்.

“ என்னாச்சு சாச்சி....” என்றவனுக்கு நடந்ததை கூறினார் சனோ.

“ம்ப்ச்... இவனுங்களுக்கு வேற வேலையில்ல... வாங்க சாப்பிடுவோம்” என ரமீஸ் கூற, தோசை ஊற்ற சனோ நகர, என்ன இருந்தாலும் மன்சூருக்கு அடிபட்டதை யாரும் பெரிதாக எடுக்காதது மைசராவிற்கு வருத்தமாக இருந்தது.

- மழை வரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

- பர்வீன்.மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top