• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 34(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
அதன் பிறகு தஸ்தகீரின் சிநேகிதரை தேடி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாதன்குளம் என்ற கிராமத்தை தேடி சென்றனர். வெறும் மூன்று தெருக்களே கொண்ட அந்த கிராமத்தில் நூர்தீனை தேடுவது ஒன்றும் சிரமமாக இல்லை. அவ்வூரில் நன்மதிப்போடு இருக்கும் அவரை தெரியாதவரும் யாருமில்லை.

மாநிறத்திற்கு சற்று கூடுதலான நிறத்தில், உயரமாக, சிநேக சிரிப்போடும், கருணை நிறைந்த பார்வையோடும், படித்த களை முகத்தில் தெரிய வந்தவரை பார்க்கையில் கமருக்கு ஏனோ மனதில் நம்பிக்கை உதித்தது.

அமீர் விஷயங்களை விளக்க, “ தஸ்தகீர் என் சிநேகிதன் தான் ஆனா அவன் இங்க வரலையே” என நூர்தீன் கையை விரித்தாலும் அவரது முகபாவனை ஏதோ சொன்னது.

“ என் மருமகள பற்றி ஏதாவது தெரிஞ்சா தயவுசெய்து சொல்லுங்க தம்பி” என கமர் மன்றாட, சபூரா அங்கே தான் வந்தார் என ஒப்புக்கொண்டார். தாய்க்கும் மகனுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.

கண்களில் நிறைந்த நீரோடு “ அவ இப்போ எங்க இருக்கா?” என ஆவலோடு கேட்க,” அத யாரு கிட்டயும் சொல்ல கூடாது னு சத்தியம் வாங்கிட்டாமா” என்றார் வருத்தமாக. அதிர்ச்சியில் பேசற்று போயினர் இருவரும்.

“ அவங்க ரொம்ப மன பாரத்தோட தான் இங்க வந்தாங்க மா. என்ன நடந்ததுன்னும் சொல்லல. அடைக்கலமா வந்த பொண்ணுகிட்ட வற்புறுத்தி கேட்க பிடிக்கல. அவளோட ஒற்றை பார்வையில அவ குடும்பமும் வாயே திறக்கல. நான் எவ்வளவோ சமாதானம் சொன்னேன். ஆனா அந்த பொண்ணு கேட்கவேயில்ல.... எனக்கு ஒரு வேலை வேணும் னு மன்றாடி கேட்டா. என் நண்பர் ஒருத்தர் கிட்ட அனுப்பினேன். போகும் போது என் கிட்ட சத்தியம் வாங்கிட்டா. சபூராவோட அனுமதியில்லாம என்னால எந்த தகவலும் சொல்ல முடியாது. மன்னிச்சிடுங்க மா..... நான் வாக்கு கொடுத்திட்டேன்.” எனவும், சற்று முன் பரவிய இதம் மொத்தமும் வடிந்து போனது இருவருக்கும்.

“ கவலைபடாதீங்க மா. உங்க மருமக பாதுகாப்பான இடத்தில தான் இருக்கா. கொஞ்சம் நாள் போகட்டும் அவளோட கோபமோ வருத்தமோ ஆறட்டும். அப்புறம் அவ கிட்ட நானே பேசுறேன்.” என நம்பிக்கை அளிக்க வேறுவழியின்றி தலையாட்டிவிட்டு வந்தனர்.

“ நோ..... என் உம்மா அப்படி எல்லாம் திருடியிருக்க மாட்டாங்க ஆச்சா. அநியாயமா அவங்கள வீட்டை விட்டு தூரத்திட்டாங்க” கமர் மடியில் கிடந்த மைசரா தேம்பி தேம்பி அழுதாள்.

“ எனக்கு தெரியும் சரா.... என் மருமக அப்படி செய்ய மாட்டா. எங்களுக்கு தான் அவ போன இடம் தெரியாது ஆனா அவளுக்கு நாங்க இருக்குற இடம் தெரியுமில்ல. அவ ஏன் என்னை தேடி வரல ன்னு தான் எனக்கு ரொம்ப வருத்தம்.” கண்ணீர் கோடுகளை துடைக்க மறந்து பேசிக் கொண்டிருந்தார் கமர்.

“ அதனால தான் என் உம்மாவ அதுக்கப்புறம் தேடவேயில்லையா?” விசும்பலாய் கேட்டாள்.

“ ம்ஹூம்.... ஆண்டவன் இத அனுபவிக்கணும் நினைச்சிட்டா மனுஷங்க என்ன செய்ய முடியும்? எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்பின நூர்தீன் தம்பி அடுத்த மாசத்திலேயே இறந்துட்டார். அவரோட சேர்ந்து எங்களுக்கு வேண்டிய உண்மையும் இறந்திடுச்சி....” என்றார் வெறுமை குரலில்.

அழுதே கரையும் பேத்தியை வருடியவர்,” நாங்க எவ்வளவு தேடியும் உங்கள எங்க கண்ணுல காட்டாத அதே இறைவன் தான் தேடாமலே உன்னை என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியிருக்கான். அவனே மிச்சமிருக்கும் உண்மைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவான்.” என பேத்தியை தேற்றினார்.

சபூரா உண்மையிலேயே பணத்தை திருடினாரா?

இத்தனை வருடமாய் தன் குடும்பத்தை தேடி வராதது ஏன்?

வருட கணக்காய் தேங்கி நிற்கும் கேள்விக்கு விடை கண்டுபிடிப்பாளா மைசரா....
பொறுத்திருந்து பார்ப்போம்.....


- மழை வரும்
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்


பர்வீன்.மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top