• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 37(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 37

அத்தியாயம் 38

ஹாய் தோழிஸ்.....

ரமீஸ் – மிஸ்பா திருமணத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இஸ்லாமிய வழக்கங்களை முடிந்த வரை விளக்கியிருக்கிறேன். ஆனால் காட்சிகள் சுவாரசியமாக இருந்ததா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

உங்கள் மேலான பின்னூட்டத்தை எதிர்பார்த்து நான்.....

அத்தியாயம் 38

மைசராவின் எதிர்பாராத கோபத்தில் வாயடைத்து போனான் ரிஸ்வி.

அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் செவியில் புகுந்தாலும், அவள் கூறிய “ பிடிச்சவங்க கொடுத்தாங்க.... போட்டிருக்கேன்...” என்ற வார்த்தைகள் தான் முதலில் மூளையை சென்றடைந்தது.

தன்னிடம் மன்சூர் மீது எந்த விதமான ஆர்வமும் இல்லை என கூறிவிட்டு இப்போது அவன் கொடுத்த உடையை உடுத்ததுமல்லாமல் தன் முன்னே நிமிர்ந்து நின்று கேள்வி கேட்பவள் மீது மேலும் மேலும் சினம் துளிர்த்தது.

இதோ இதே நிமிர்வோடு நான் மன்சூரை காதலிக்கிறேன் என கூறியிந்தால் கூட அவனுக்கு இத்தனை கோபம் வந்திருக்காது போலும். ஆனால் நயவஞ்சமாய் தனக்கு போக்கு காட்டி விட்டு காதலிப்பது தான் அவனை அவமானபடுத்தியதை போல உணர்ந்தான்.

ஒரு முழு நிமிடமும் அவளை உறுத்து விழித்தவாறு நின்றிருந்தவனை லேசான கலக்கத்தோடு ஏற்றிட்டாள் மைசரா. இவனுக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது என அவளுக்கு புரியவில்லை.

அறைக்குள் பேச்சு சத்தம் கேட்டு பொழிந்து கொண்டிருந்த பாசமழையை நிறுத்தி விட்டு உள்ளே வந்தான் ரமீஸ்.

“ என்னாச்சு?” ரிஸ்வி நின்ற தோரணையை சற்று கலக்கத்தோடு பார்த்தவன் மைசராவிடம் கேட்டான்.

“ ஒன்னுமில்ல காகா.... சும்மா தான் பேசிட்டு இருந்தோம்...” என்றவளின் பார்வை அவனை தொட்டு மீண்டது.

“ ம்.... சராவோட மதர் விஷ் பண்றதுக்காக பேசுனாங்க” ரிஸ்வியிடம் கூறியவாறு அலைபேசியை சராவிடம் கொடுக்க, ரிஸ்வியின் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. அவள் அலைபேசியை வாங்கி கொண்டு விறுவிறுவென சென்றுவிட்டாள்.

காலை 10.47 மணி....

முதல் நாள் சீர்வரிசையில் வைக்கப்பட்டிருந்த மிளகாய் பழ சிவப்பில் பொன் சரிகை புடவை முழுதும் இழையோட, பொன் கரையிட்ட பட்டு புடவையில், நேர்த்தியான அலங்காரத்தில், பிங்க் நிற மலர் மாலை சூடி, பொன்னிற மெல்லிய துப்பட்டா அவளது அழகை அளவாக மூடியிருக்க, அசையும் மெழுகு சிலையென வந்தாள் மிஸ்பா பேகம்..... இன்னும் சற்று நேரத்தில் மிஸ்பா ரமீஸ் ஆக போகிறவள்.

பெண்களுக்கான தளத்தில் அமைத்திருந்த மணமேடையில் அமர வைக்கப்பட்டாள். முழங்கை வரை பூத்திருந்த மருதாணி பூக்கள் கரங்களையும், நாணமும், உவகையும் அவள் முகத்தையும் சிவக்க செய்திருந்தன. அவள் அமர்ந்ததுமே ரிதாவும், சராவும் அவளிடம் சென்று வாழ்த்தை கூறினர்.

அதே போல் ஆலிவ் பச்சை செர்வாணியில் சிரித்த முகத்தோடும், கம்பீர நடையோடும், மலர் மாலை அணிந்து ஆண்களுக்கான தளத்தில் அமைத்திருந்த மணமேடையில் ரமீஸ் அமர்ந்திருந்தான். சுற்றமும் பந்தமும் தங்கள் இன்சொல்லால் மலர்ந்திருந்த மணமக்களின் மனதை கனிய வைத்துக் கொண்டிருந்தனர்.

ஜமாஅத் ஆட்கள் வந்ததும் திருமணத்தின் முக்கிய நிகழ்வுகள் துவங்கின. ஜமாஅத் என்றால் ஒரு ஊரிலோ அல்லது ஒரு பகுதியிலோ வாழும் முஸ்லிம் மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்தி கொள்ளும் ஒரு அமைப்பு. இதை பற்றிய விளக்கம் முன்னரே கொடுத்திருக்கிறேன்.

ஜமாஅத்தார்கள் வந்ததும், பேசுவது அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக ஒலிவாங்கி அமைக்கப்பட்டது. மணமகள் மேடையில் ஒரு ஒலிபெருக்கி அமைத்திருக்க, இங்கே பேசப்படும் விஷயங்கள் பெண்களுக்கு கேட்கும்.

ஏற்கனவே திருமணம் குறித்த விவரங்கள் கொடுத்திருந்தபடியால், அவர்கள் நிக்காஹ் புத்தகத்தை அதாவது திருமண பதிவு புத்தகத்தை தயாராக வைத்திருந்தனர். முதலில் இறைவனை துதித்துவிட்டு பின் மணமகனிடம் பேச ஆரம்பித்தார் ஜமாஅத் நிர்வாகி.

“ திருச்சியை சேர்ந்த ஜனாப் (திரு). ஹூசைன் அவர்களின் புதல்வி மிஸ்பா பேகமை 12 பவுன் நகையை மஹராக ( மணகொடையாக) அளித்து உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு பரிபூரண சம்மதமா?” என வினவினார் நிர்வாகி.

“ சம்மதம்...” என தன் மனதை கூறினான் ரமீஸ். பிறகு தன் சம்மதத்தை நிக்காஹ் புத்தகத்தில் கையொப்பமிட்டு பதிவு செய்தான். அருகிலிருந்த ரிஸ்வி, அயான், மன்சூர் மற்ற இளைஞர்கள் எல்லாம் சந்தோஷ ஆராவாரம் புரிந்தனர்.

பின் நிக்காஹ் புத்தகத்தை எடுத்து கொண்டு ஜமாஅத்தை சேர்ந்த இருவர், மணமகன் சார்பாக ரியாஸ், மணமகள் சார்பாக ஹூசைன், சாட்சியாக ஆசாத், காசிம், ஹூசைனின் சகோதரர் ஆகியோர் மணமகள் மேடைக்கு வந்தனர். அவர்களோடு அயானும் ஒட்டிக் கொண்டான்.

ஆண்கள் வருகையை கண்டதும் பெண்கள் ஒதுங்கி கொள்ள, சில வயதான பெண்மணிகள் நிறைந்த முக்காடோடு மணப்பெண் அருகில் இருந்து கொண்டனர்.

ரமீஸிடம் கேட்டது போலவே,” திருச்சியை சேர்ந்த மர்ஹூம்( காலஞ்சென்ற) ஜனாப் (திரு).அமீர் அவர்களின் புதல்வன் ரமீஸ் ஹம்ஸாவை 12 பவுன் நகையை மஹராக பெற்றுக் கொண்டு உங்களது கணவனாக ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு பரிபூரண சம்மதமா?” என வினவினார். இந்த தருணத்தில் மணமகனோ/ மகளோ மறுத்துவிட்டால் அவர்களை கட்டாயபடுத்த யாருக்குமே உரிமையில்லை.

அனைவரின் பார்வையும் மிஸ்பாவின் மேலிருக்க, அயானின் பார்வை மட்டும் தன்னவளை ரகசியமாக தேடியது.

“ ஏய் ரிதா.... அவங்க உன்னை தான் தேடுறாங்க னு நினைக்கிறேன்.” என சரா திரும்பி பார்க்க, ரிதா அவள் பின்னால் மறைந்து நின்று தன்னவனுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தாள்.

“ அய்யோ.... ஏன்லா என் மச்சான தவிக்க விடுற.... முன்னாடி வா பக்கி....”

“ ஏய்.... என் ரிஸ்வி மச்சான மச்சான் னு கூப்பிட மாட்டே... இவங்கள மட்டும் மச்சான் கூப்பிடுவியா” அவள் கண்ணை உருட்டி முறைக்க,

“ இப்போ இது ரொம்ப முக்கியம்.... முதல்ல மச்சானுக்கு உன் திரு முகத்தை காட்டு லா....” என அவளை இழுத்து தனக்கு முன்னே நிறுத்தினாள்.

ஆடவனின் பார்வை தேடல் சட்டென நிற்க, கருமணிகளுக்குள் தன் தேவதையை மொத்தமாய் சுருட்டிக் கொண்டான். நிமிர்ந்தும் குனிந்தும் அவள் பார்வை கபடியாட, நிலைத்த அவனது பார்வை நேசத்தை மானாவாரியாய் கொட்டியது.

இவர்கள் இப்படி தான் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். நாம் மணமேடையை சற்று கவனிப்போம்.

இங்கே “ சம்மதம்...” என மிஸ்பா கூறியதும் பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கோருவர் தெரிவித்து கொண்டனர். தன் பேரனின் தனிமை வாழ்வில் இனிமை சேர்ந்துவிட்டதில் கமர் ஆனந்த கண்ணீரோடு மனம் நிறைந்தார். பின்னர் மிஸ்பாவும் நிக்காஹ் புத்தகத்தில் கையொப்பமிட, திருமணம் இனிதே பதியப்பட்டது.

இஸ்லாத்தில் தாலி கட்டும் முறையில்லை எனினும் சிலர் தங்கசங்கிலியில் கருமணிகளை கோர்த்து தாலியாக கட்டுகிறார்கள். இத்தாலியை சுமங்கலியான, ஆண், பெண் என இருபாலரையும் பெற்ற வயதான பெண்மணி ஒருவர் மணமகளுக்கு அணிவித்தார். அதை தொடர்ந்து மஹராக கூறபட்ட நகைகளை ரசியாவும் சனோபரும் மிஸ்பாவிற்கு அணிவித்தனர்.

வாழ்வின் புதிய பரிமாண மாற்றத்தால் உணர்ச்சிகள் மிகுந்த இந்த தருணத்தில் அவளையுமறியாமல் கண்ணீர் உகுந்தாள் மிஸ்பா. பெண் வீட்டார் நிம்மதி மூச்சொறிய, “ என் பேரன் உன்னை நல்லா வைச்சிப்பான். ஆண்டவன் கிருபையால நீங்க நல்லா வாழுவீங்க ” என ஆனந்த கண்ணீர் வழிய, தன் புதிய பேத்தியை நெற்றியில் முத்தமிட்டு ஆசிர்வதித்தார் கமர்.

நிக்காஹ் புத்தகத்தை வாங்கி கொண்டு வந்தவர்கள் திரும்ப, அயான் ஒரு சின்னதாக தலையசைக்க, அதை விட மெலிதாக தலை இசைத்து விடை கொடுத்தாள் ரிதா. அழகான கவிதையை படிப்பதை போல் ரசித்துக் கொண்டிருந்தாள் மைசரா. அவளுக்கு அயானை மிகவும் பிடித்திருந்தது. ரிதாவிற்கு அவள் எத்தகைய துணையை எதிர்பார்த்தாலோ அதற்கு சற்றும் குறையாமல் இருந்தான் அயான் சித்திக்.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
இனிமையான தருணம் அழகாக, ரமீஸ் ♥மிஸ்பா திருமண இனிதே நிறையவேறியது அருமை ???♥♥♥???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top