• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 49(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 49(2)

படிகளில் இறங்கி, ரோட்டை கடந்து தெருமுனையில் நிறுத்தியிருந்த காரின் அருகில் சென்று ரிதாவை இறக்கி விட்டான். தளர்ந்திருந்த அவள் சோர்ந்து சராவின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளை மயக்க நிலைக்கு போகாத வண்ணம் சரா பேச்சு கொடுத்து கொண்டேயிருந்தாள். சர்ரென சீறி பாய்ந்த கார் இருபது நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தது. எந்த நேரத்தில் வலிப்பு வருமோ என பயந்து கொண்டிருந்தவர்களுக்கு அப்போது தான் ஆசுவாசமாக இருந்தது.

அதன் பின் ரிஸ்வி மளமளவென சிகிச்சைக்கான வேலைகளை பார்க்க, ரிதா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டாள். நோயாளியோடு ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என கூறிவிட சபூரா மட்டும் ரிதாவின் அருகில் இருந்து கொண்டார். ரிஸ்வியும் மைசராவும் வராந்தாவில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் சபூரா ஒரு மருந்து சீட்டோடு வர, ரிஸ்வி சென்று மருந்துகளை வாங்கி வந்து கொடுத்தான்.

பயப்படும் படியாக மருத்துவர் எதுவும் கூறவில்லை என்று விட்டு மருந்துகளை வாங்கி கொண்டு போனார் சபூரா. அதுவரை பயத்தில் இழுத்து வைத்த மூச்சை நிம்மதியாக வெளியிட்டனர். அந்த நடுநிசியில் அங்கு ஆள் நடமாட்டமேயில்லை. ரிஸ்வியும் சராவும் மட்டுமே தனித்திருந்தனர். இத்தனை நேரம் தன் காதலுக்கு வலுக்கட்டாயமாக முற்றுப்புள்ளி வைத்திருந்தவள் இப்போது முற்றிலுமாக அதை மறந்திருந்தாள். கண்களை மூடி இருக்கையில் சார்ந்திருந்தவனை அங்குலம் அங்குலமாக அளவெடுத்தது அவளது கோலிக்குண்டு விழிகள். கலைந்த கேசம், சோர்ந்த முகம், தளர்ந்த தோற்றம் அவளை வெகுவாய் பாதித்தது. தன்னுடைய விலகல் அவனை மிகவும் பாதித்திருக்கிறது என்று நினைத்தவளுக்கு மனம் புண்ணாய் வலித்தது. இமை கொட்டாமல் அவளையுமறியாமல் அவனை பார்த்துக் கொண்டிருக்க சட்டென அவன் கண் விழிப்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை. சிவந்த கண்களோடு அவளை எரிப்பதை போல முறைக்க வெலவெலத்து போனாள் அவள். சட்டென பார்வையை திருப்பிக் கொண்டவளுக்கு முத்து முத்தாக வியர்த்து போனது.

இந்த கண்களா அன்று உயிரை உரசும் பார்வையை பார்த்தது என வியந்து போனது அவளது மனம்.

“ லவ் பண்ண மட்டாளாம் சைட் மட்டும் அடிப்பாளாம்....” முணுமுணுத்துக் கொண்டான் அந்த முரடன்.அவன் முறைப்பது ஏனோ அவளுக்கு சுவாரசியமாக இருந்தது. எப்போதும் நேர்த்தியான உடையில் காண்பவனை இப்போது சாதாரண டி சர்ட், ட்ராக்ஸில் பார்ப்பது கூட அவளை கவர்ந்தது.

“ தேர்ட்டி பாயா இருக்கும் போது கூட அழகா தான் இருக்கான்” மறைமுகமாக அவனை ரசித்து கொண்ட மனம் ,” தப்பு.... தப்பு இப்படியெல்லாம் யோசிக்க கூடாது” என குட்டி கொண்டது.

ஆனால் சிறிது நேரம் தான் அவள் மனம் சொன்ன பேச்சை கேட்டது. பிறகு மீண்டும் அவனை பார் பார் என நச்சரிக்க தொடங்கிவிட்டது. மாலையில் மங்கை அவனை காயபடுத்தியதை எல்லாம் மறந்துவிட்டாள் போலும். எப்போதும் தன்னை சீண்டுபவன் இப்போது அமைதியாக இருப்பது அவளுக்கு பிடிக்கவேயில்லை. மெல்ல திரும்பி பார்க்க ரிஸ்வி இருக்கையிலேயே தூங்கி கொண்டிருந்தான்.

“ அடப்பாவி.... உன்னால நா இங்க தூக்கத்த தொலைச்சிட்டு உட்கார்ந்திருக்கேன். உனக்கு மட்டும் நிம்மதியா தூக்கம் வருதா” என வயிறெறிந்தது அவளுக்கு. சிறிது நேரத்தில் குளிர் தாங்காமல் கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டவன் அவ்வப்போது உள்ளங்கைகளை சூடு பறக்க தேய்த்து கொண்டான். அவனது செய்கையை கேள்வியாக பார்த்தவள் கேன்டீன் சென்று இரண்டு காபி வாங்கி வந்தாள்.

ஒரு குவளையை அவனிடம் நீட்ட அவனோ வாங்காமல் சண்டி தனம் செய்தான். “ ப்ச்.... வாங்கிக்கோங்க ரிஸ்வி. என் மேல தானே கோபம் நா வாங்கிட்டு வந்த காபி மேல இல்லையே...” என கூறி புன்னகைக்க, அதற்கும் முறைத்தவன் அமைதியாக வாங்கி கொண்டான். அவன் வன்கரம் மெல்ல நடுங்கியதை கவனித்த சரா பதறி போனாள்.

அவனது ஓய்ந்த தோற்றம் இப்போது சந்தேகம் தர,” உங்களுக்கு பீவரா ரிஸ்வி” என்றாள் பதட்டமாக.

“ இப்போ அத தெரிஞ்சிகிட்டு என்ன பண்ண போறே?”

“ ப்ளீஸ் சொல்லுங்க. பீவர் இருக்குற மாதிரி தெரியுது...”

அவன் பதில் கூறாமல் அமர்ந்திருக்க,” இப்போ சொல்ல போறீங்களா இல்ல அந்த சிஸ்டர கூப்பிட்டு உங்களுக்கு கொரோனா சிம்டம்ஸ் இருக்கு னு சொல்லட்டுமா?” என மிரட்டியவளை வெகுவாக முறைத்தாலும் உள்ளுக்குள் ரசித்தான்.

கொஞ்சினால் மிஞ்சிடும்..... மிஞ்சினால் கெஞ்சிடும்..... இந்த காதல் ஒரு சுகமான இம்சை.....

ரிதாவை பரிசோதித்து விட்டு வந்த மருத்துவர் சரியான நேரத்திற்கு அழைத்து வந்ததால் சிக்கல் எதுவுமில்லை, இன்று ஒரு நாள் கவனிப்பில் இருக்கட்டும் என்று விட்டு போக, நிம்மதி பெருமூச்சு விட்டார் சபூரா. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் தலையை வருடி கொண்டிருந்தவருக்கு இப்போது மகளின் ஞாபகம் வந்து பதட்டத்தை கொடுத்தது.

ரிதா உறங்குவதை உறுதி செய்து கொண்டு வெளியே சென்று பார்க்க அங்கே மைசரா ரிஸ்வியின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் ரிஸ்வியோ அவளை நிமிர்ந்தும் பராமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தான் தன் மகளிடம் பேசுவான் என எண்ணியிருக்க இங்கோ மைசரா தான் வலிய சென்று பேசிக் கொண்டிருந்தாள்.

சபூரா அருகில் வரவும் சற்று தடுமாறியவள்,” ம்மா.... இவங்களுக்கு ஜூரம் அடிக்குது மா. கேட்டா சொல்ல மாட்டேங்குறாங்க.... பாருங்க கையெல்லாம் நடுங்குது” எனவும் சபூரா ரிஸ்வியின் நெற்றியை தொட்டு பார்த்தார்.

“ என்னப்பா ரிஸ்வி.... உடம்பு இப்படி அனலா கொதிக்குது... உடம்பு சரியில்லை னு சொல்லியிருக்கலாம் ல” என்றார் அக்கறையாக.

“ ஆமா இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை. அன்பா பேசுவாங்களாம், அக்கறையா கவனிப்பாங்களாம் ஆனா பொண்ணு மட்டும் தர மாட்டாங்களாம்.” – இது ரிஸ்வியின் மைண்ட் வாய்ஸ்.

“ ரிஸ்வி....”

“ ஒன்னும் பிரச்சனையில்லை மாமி. லேசான காய்ச்சல் தான். நா மாத்திரை கூட எடுத்துட்டேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா போதும்”

“ அப்போ வீட்டுக்கு கிளம்பு பா. இங்க நா பார்த்துக்குறேன்.”

“ ரிதா கண்ணு முழிச்சதும் கிளம்புறேன் மாமி” என்றவன் பேசி முடித்ததை போல இருக்கையில் கண் மூடி சாய்ந்து கொண்டான். சபூராவும் சராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள் வேறு வழியில்லாமல் சற்று விலகி அமர்ந்தனர்.

சிறிது நேரத்தில் ரிதா கண் விழித்து விட்டதாக கூற, சபூராவும் சராவும் சென்று பார்த்து விட்டு வந்தனர். காய்ச்சல் இருந்ததால் ரிஸ்வியை பார்க்க சபூரா அனுமதிக்கவில்லை. ரிதாவை பற்றி விசாரித்து விட்டு சபூராவிடம் மட்டும் விடைபெற்று சென்றான். அவன் செல்வதை இயலாமையோடு பார்த்து கொண்டிருந்தாள் மைசரா.

மருத்துவமனையிலிருந்து வெளிவந்தவனுக்கு எப்படியடா காரை ஓட்ட போகிறோம் என மலைப்பாக இருந்தது. கிளம்பும் போது இருந்ததை விட இப்போது காய்ச்சல் வெகுவாக கூடியிருந்தது. தடுமாற்றத்தோடு பார்கிங் வந்தவன் அங்கே ஷமி நிற்பதை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டான்.

“ ஷமி.... நீ எப்படி இங்க? யாருக்காவது உடம்பு சரியில்லையா?” என அக்கறையாக வினவினான் ரிஸ்வி.

“ ஆமா சார். எங்க பாஸூக்கு தான் உடம்பு சரியில்லையாம். இந்த நிலைமையில கார் ஓட்ட கூடாதாம். அதான் நா பிக்கப் பண்ண வந்தேன். கிளம்பலாமா சார்” என்றான் கேலி தொனியில். ஆரம்பத்திலிருந்து அவனுக்கிருந்த சந்தேகம் ஊர்ஜிதமானதில் மிக மகிழ்ச்சி அவனுக்கு.

“ ஊமைச்சி.... எப்போ டி இவனுக்கு போன் பண்ணினே?” இனிமையாக அதிர்ந்தான் ரிஸ்வி. இப்போது காதல் அடைமழையில் நனைவது அவனது முறையாகிற்று. சாரலாகவும் தூறலாகவும் அவனை வருடாமல் எட்டி நின்று காதல் செய்தே அவனை ஸ்தம்பிக்க வைத்தாள் பாவை.

“ அவ சொன்னா உடனே நீயும் கிளம்பி வந்துடுவியா? உனக்கு பாஸ் நானா அவளா?” போலி கோபம் கொண்டு அவன் கேட்க,

“ அட நிச்சயம் நீங்க தான் சார் பாஸ் ஆனா அவங்க பாஸம்மா மாதிரி உத்தரவு போட்டுட்டாங்களே ....” என உதடு பிதுக்க, சிரித்தேவிட்டான் ரிஸ்வி.

“ போதும் டா டேய் காரை எடு....” என சிரித்து கொண்டே கூறியவன் நிம்மதியாக பின் இருக்கையில் சாய, காரை ஓட்ட துவங்கினான் ஷமி.

பரபரப்பு குறைந்ததும் கமருக்கு நடந்ததை கூறிய சபூரா, ரிஸ்வியின் உடல்நிலையையும் குறிப்பிட மறக்கவில்லை. அன்று மாலை பெங்களூரிலிருந்து ரசியா குடும்பமும் திருச்சியிலிருந்து கமர் மற்றும் ரியாஸ் தம்பதியும் வந்து பார்த்தனர். ஓரிரு நாட்கள் திருச்சிக்கு வருமாறு கமர் அழைத்தும் ரிதா போகவில்லை.

அவர்கள் வந்திருந்த நேரத்தில் சபூரா மகளோடு வெளியே சென்று விட்டார். ரிதாவை காண ரிஸ்வி வருவான் என எதிர்பார்த்த சராவுக்கு மிகவும் ஏமாற்றம். அவன் உடல்நிலை நன்றாக இருந்தால் கண்டிப்பாக வந்திருப்பான் என எண்ணியவளுக்கு கவலையாக இருந்தது. வந்தவர்கள் பார்வை நேரம் முடியும் வரை ரிதாவோடு பேசி விட்டு கிளம்பினர். அவர்கள் வெளியே சென்றதும் சபூரா உள்ளே செல்ல சரா ஏதோ ஒரு காரணத்தை கூறி விட்டு வெளியே ஓடினாள்.

பெரியவர்கள் முன்னே செல்ல அவர்கள் பின்னே சென்றுக் கொண்டிருந்த அயானை மெல்லிய குரலில் அழைத்தாள் மைசரா.

“ அஸ்ஸலாமு அலைக்கும் மச்சி. நீங்க இங்க தான் இருக்கீங்களா?” ஆச்சரியமாய் கேட்டான் அயான்.

“ வ அலைக்கும் அஸ்ஸலாம் அயான்.”

“ எங்கள பார்த்திட கூடாது னு ஒளிஞ்சிட்டு இருந்தீங்க போல?” என்றான் சிறு நக்கல் தொனிக்க.

சில நொடிகள் தலைகுனிந்து அமைதியாக இருந்தவள்,” அவங்க எப்படி இருக்காங்க அயான்” என்றாள்.

“ எவங்க?”

“ ப்ச்..... உங்க காகா....”

“ என் காகா எப்படி இருந்தா உங்களுக்கு என்ன மச்சி....” என்றான் அயான். சாதாரண குரலில் அவன் கேட்டாலும் அதில் மெல்லிய கோபம் ஒளிந்திருந்தது.

“ ப்ளீஸ்.....” அதற்கு மேல் அவளுக்கு வார்த்தை வரவில்லை அவளது மனதை கலங்கிய விழிகள் எடுத்து சொன்னது.

“ ஒரு மணி நேரமா மழையில நனைந்தா என்னாகுறது மச்சி? காகாக்கு நல்ல காய்ச்சல். பார்த்துக்க யாருமில்லாம தவிச்சி போயிட்டாங்க. மதியம் நாங்க வந்து தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனோம். உங்களுக்கு ரிதா மட்டும் தான் உறவு இல்ல மச்சி? நாங்கலாம் இல்ல தானே? பெரியவங்க சண்டை பெரியவங்களோட இருக்கணும். அத நம்ம தலையில ஏத்திகிட்டா அப்புறம் நாமலாம் படிச்சதே வேஸ்ட்.” ரிஸ்வியின் நிலையை பார்த்து வருந்தியிருந்தவனின் ஆதங்கம் குமுறலாய் வெளிவந்தது.

அவனுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவித்து போனாள் மைசரா. எப்போதும் சாதுவாக பேசும் அயான் இப்போது பொரிந்ததில் இன்னும் அவள் இதயம் ரிஸ்வியை நினைத்து துடித்தது.

“ நான் வரேன் மச்சி.” கலங்கி நிற்கும் அவளை வருத்தவும் முடியாமல் ஆறுதல்படுத்தவும் விரும்பாமல் கிளம்பிவிட்டான் அவன்.

அன்றிரவே ரிதா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டாள். அவளுக்கு தேவையான உதவிகளை சரா செய்ய முனைய ரிதா கோபமாக அவளை தடுத்தாள்.

“ என் வேலைகள எனக்கு பார்த்துக்க தெரியும். நீ உன் வேலைய பார்த்தா போதும்” நறுகென கூற,

“ ஏன் அப்படி சொல்ற ரிதா? நா இத செய்ய கூடாதா?” என்றாள் மைசரா ஆதங்கமாக.

“ லூசாடி நீ? மனசு புல்லா லவ்வ வைச்சிகிட்டு இப்படி உன்னையும் கஷ்டப்படுத்தி கிட்டு மச்சானையும் கஷ்டப்படுத்தி கிட்டு எதுக்குடி இந்த வேஷம்?”

மனதிலிருந்ததை நேருக்கு நேராக கேட்பவளிடமிருந்து மைசராவால் ஒளிய முடியவில்லை. “ என்னை என்ன பண்ண சொல்றே? ரசியா மாமிய பத்தி உனக்கு தெரியாதா? நா அவங்க மகனை லவ் பண்றேன் னு தெரிஞ்சா அவங்க எப்படி பேசுவாங்கனு தெரியாதா ரிதா?” என்றாள் வேதனையாக.

“ ரசியா மாமி மட்டும் இல்லை. ஊருல பாதி அம்மாங்க லவ் மேட்டர் தெரிஞ்சா அப்படி தான் குதிப்பாங்க..... நீ ரசியா மாமியவா லவ் பண்றே ரிஸ்வி மச்சான தானே லவ் பண்றே? அவங்கள மட்டும் யோசி போதும்....”

“ அதெப்படி முடியும் சரா? அவங்க என்னை எதிரியா நினைச்சா கூட பரவாயில்ல..... என் உம்மாவையில்ல பகையாளியா பார்க்குறாங்க.... வார்த்தைகளால வதைக்குறாங்க...... எல்லாதுக்கும் மேல.....” தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவள் தொண்டை அடைக்க நிறுத்தினாள்.

அவள் கரங்களை ஆதரவாக பற்றியவள் , எல்லாத்துக்கும் மேல?..” என அவளை உந்தினாள்.

“ எல்லாத்துக்கும் மேல...... அவங்கள பார்க்கும் போது உம்மா பயப்படுறாங்க ரிதா.” என்றவளின் விழிகளில் நீர் கோர்த்தது.

தலைகுனிந்து அமர்ந்திருந்தவளின் நாடி பற்றி முகத்தை நிமிர்த்தியவள்,” உன் உம்மா தப்பு பண்ணியிருப்பாங்கன்னு நீ நினைக்கிறியா சரா....” என்றாள் மென்மையாக.

“ நிச்சயமாயில்ல ரிதா..... ஆனா அவங்க கண்ணுல தெரியுற அந்த பயம்? அது என்னை ரொம்ப குழப்புது.... என்னோட சுயநலத்துக்காக அவங்கள காயப்படுத்திடுவனோ னு பயமாயிருக்கு.....” தன் மனதிலுள்ளதை எல்லாம் ரிதாவிடம் பகிர்ந்தவள் அவள் மடியிலேயே தலைசாய்த்து கொண்டாள்.

அன்னை பற்றிய கவலையில் உழன்று கொண்டிருப்பவளிடம் ரிஸ்வியை பற்றி பேச முடியாமல் நடப்பது நடக்கட்டும் என பெருமூச்சு சொறிந்தாள் ரிதா. அவளுக்குமே சபூராவின் மிரண்ட பார்வை குறித்து குழப்பம் தான்.

மறுநாள் காலையில் சபூரா கல்லூரிக்கு கிளம்பிவிட, ரிதாவிற்கு துணையாக சரா வீட்டிலேயை இருந்தாள். ஆனால் சபூரா சென்ற இரண்டு மணிநேரத்தில் வீடு திரும்பிவிட்டார்.

“ என்னம்மா இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க” மைசரா அவருக்கு தண்ணீரை நீட்டியபடி கேட்டாள்.

தண்ணீரை வாங்கி அருந்தியவர்,” கன்சென்ட் லெட்டர் வாங்க தான் போனேன் சரா. பிரின்ஸ்பல் கிட்ட சைன் வாங்கிட்டு லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்” என்றார் மகளின் முகம் பராமல்.மகளை பாதுகாப்பதாக எண்ணி ரிஸ்வியின் சேட்டைக்கு தூபம் போடுவது தெரியவில்லை அந்த தாயிக்கு.

மழை வரும்......
தங்கள் கருத்துகளை எதிர்நோக்கும்
பர்வீன்.மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top