• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 52(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் - 53(1)

அத்தியாயம் 54

சபூராவின் நடத்தை பற்றி வெளியே தெரிந்தால் குடும்ப‌ கவுரவத்துக்கும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் இழுக்கு ஏற்படும் என்று நினைத்த ரசியா, சபூராவிற்கு திருமணம் செய்து வைத்து அவரை குடும்பத்திலிருந்து பாதகமில்லாமல் விலகி வைக்க எண்ணினார்‌.

“ அவளும் சிறுவயசுகாரி தானே? அதனால தானே தடம் புரண்டுட்டா? அவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வைச்சிட்டா அவளும் கவுரவமா வாழுவா. நம்ம குடும்பமும் நிம்மதியா வாழுமே....”

“ சிறுவயசுகாரி தான் ஆனா ரெண்டு பிள்ளய வைச்சிகிட்டு எப்படி கல்யாணம் பண்றது?” அவருக்குள்ளேயே விவாதம் நடந்தது.

“ இல்ல அவளுக்கு கண்டிப்பா ஒரு துணை வேணும். இதுக்கு மேலயும் எந்த அசிங்கமும் நடக்க கூடாதுனா கண்டிப்பா கல்யாணம் பண்ணியே ஆகணும். பிள்ளைகள வேணும்னா நாமளே வச்சிக்கலாம். ஒழுக்கமில்லாத அவ கிட்ட வளர்றத விட பிள்ளைகள் இங்கேயே வளரட்டும். அப்போ ஊரும் தூற்றாது. அவளும் இங்க வாழ மாட்டா....”

“ ஆனா சபூரா இதுக்கெல்லாம் ஒத்துப்பாளா? ஒத்துக்க வைக்கணும்.... அதான் அம்மா கடை கணக்குலயும் கைய வெச்சிருக்காளே.... அதை வைச்சி மிரட்டி வழிக்கு கொண்டு வர வேண்டியது தான். ஆமா.... இது தான் சரியான வழி.... அவ எனக்கு ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுத்த மாதிரி நானும் அவளுக்கு பொருத்தமான ஒரு துணையை பார்க்கிறேன்.... அவ நல்லபடியா வாழ்ந்தா நமக்கும் நிம்மதி தானே.... இத நாம முன்னாடியே பண்ணியிருக்கணும். நாமளும் அவள கவனிக்காம விட்டுட்டோம். அவளும் வயசு வேகத்துல தப்பு பண்ணிட்டா.... இனியாவது அவ வாழ்க்கை நல்லாயிருக்கட்டும்...” இப்போது தான் ரசியாவின் மனதில் ஒரு தெளிவு வந்தது. எவ்வளவுக்கு எவ்ளோ ரசியா கோபக்காரரோ அவ்வளவுக்கு அவ்ளோ நல்லவரும் கூட. அவரது முடிவுகள் அதிரடியாக இருந்தாலும் எண்ணம் நல்லதாகவே இருக்கும்.

அப்போது தூங்கி கொண்டிருந்த ரிஸ்வி சிணுங்கி அன்னையின் மடியில் வந்து படுத்து கொண்டான். அவனது முகத்தில் மைசரா தான் தெரிந்தாள்.பிள்ளைகளின் நிலையை எண்ணி மனம் கலங்கி போனவர் மகனை மைசராவாக நினைத்து அணைத்து கொண்டார்.

“ குழந்தைங்கள நல்லபடியா ஒரு குறை இல்லாம வளர்க்கணும்.... உம்மாவும், ஜமீலா மச்சியும் தங்கமா பார்த்துப்பாங்க.... நாமளும்
அப்பப்போ வந்து பார்த்துப்போம். நல்ல படிக்க வைச்சி, நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கணும்.”

அப்போது ரிஸ்வி, “ மம்மி.... பப்ளிமாஸ் வந்துட்டாளா?” துயில் கலைந்து கேட்க, அவனை ஆழ்ந்து பார்த்தவரின் மனதில் அடுத்த கணக்கு.

“ வீட்டிலேயே மாப்பிள்ளைய வைச்சி கிட்டு பிள்ளைகள ஏன் வெளியே கொடுக்கணும்? யாஸ்மின்ன ரமீஸுக்கு கட்டி வைச்சிடுவோம். யாஸ்மினுக்கு ரமீஸ் சகோதரன் முறை வந்தாலும் திருமணம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டு. ஆனால் சொந்த அண்ணன் மற்றும் தாய்மாமனை திருமணம் செய்ய அனுமதி இல்லை. நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்கும் என்று ஒரு கருத்து இருக்கிறது. அது இந்த இரண்டு உறவு முறைகளில் திருமணம் செய்தால் தான் வாய்ப்புகள் உண்டு என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சராவ?” என எண்ணியவர் ரிஸ்வியின் முகம் பார்க்க,“ ஆனா இவனுக்கு ரிதா குட்டிய தானே எடுக்கணும் னு நினைச்சிருக்கோம்” என தயங்கினார்.

“ மம்மி.... எனக்கு பப்ளிமாஸு வேணும்...” குழந்தையான ரிஸ்வி கேட்க, என்ன நினைத்தாரோ ரசியா,” சரிடா ராஜா.... பப்ளிமாஸை உனக்கே கொடுத்துடுறேன்.” எனவும் ரிஸ்வி குஷியாக அன்னையை இன்னும் இறுக்கி படுத்து கொண்டான்.

“ அதான் நா ஒன்னுக்கு ரெண்டு சிங்க குட்டிங்கள பெத்து வைச்சிருக்கனே. ரிதா குட்டிய அயானுக்கு எடுத்துட்டா போச்சு.....” மன நிறைவாய் உணர்ந்தார் ரசியா. ரிஸ்வி பிறந்த வீட்டில் பிறக்காத சராவை மகனுக்கு எடுக்க மாட்டேன் என சண்டை போட்டதெல்லாம் மறந்தே போனது. இதை தான் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்வார்களோ? மைசராவை தன் மூத்த மருமகளாக அன்றே ஏற்றுக் கொண்டார் ரசியா.

காலையில் ஆடிட்டர் வந்து கணக்களை காண்பிக்க ஒப்புக்கு கேட்டுக் கொண்டார். இதை முதலில் குடும்பத்தினரிடம் சொல்லி சபூராவை குற்றவாளி கூண்டில் ஏற்றினால் தான் தன் அடுத்தடுத்த திட்டங்கள் நிறைவேறும் என கணக்கிட்டு கொண்டார்.

ஆனால் நடந்ததோ வேறு. ரசியா ஆதாரத்தோடு நிரூபித்தும் சபூரா பணத்தை கையாடல் பண்ணியிருக்கார் என வீட்டினர் யாரும் நம்பவில்லை. அப்போதும் கமர் மருமகளுக்காக தான் பரிந்து பேசினார். தாயிடம் உண்மையையும் கூறவும் முடியாமல் அதை மறைக்கவும் முடியாமல் திண்டாடி போனார் ரசியா. அந்த கோபத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார்.

கமர் சபூராவை அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றபோது சபூராவின் வருகைகாக ஆவலோடே காத்திருந்தார் ரசியா. சபூராவிடம் எப்படியாவது பேசியோ, எடுத்து சொல்லியோ, இல்லை மிரட்டியோ திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார். கமர் சபூரா வீட்டிற்கு சென்று வந்து சபூரா குடும்பத்தோடு எங்கோ சென்று விட்டார் என பேரிடியை போட்டார். ரசியா விக்கித்து போனார். மனதின் ஏதோவொரு மூலையில் சபூரா தவறு செய்திருக்க மாட்டாள், உண்மையை நிரூபிக்க வருவாள் என்ற நம்பிக்கை மொத்தமாய் தகர்ந்தது. போதாதிற்கு கமர் வேறு சபூரா சென்றதிற்கு ரசியா தான் காரணம் என சாட, மிச்சமேயில்லாமல் நொறுங்கி போனார் ரசியா. ஆதாரம் இருக்கும் குற்றத்தையே யாரும் நம்பாத போது, தான் ஒருத்தி மட்டுமே சாட்சியாய் இருக்கும் குற்றத்தை யார் நம்ப போகிறார்கள்? இல்லை உணர்ச்சி வேகத்தில் இதை சொல்லி விட்டால் பிள்ளைகளின் நிலை? சபூராவின் மறுமணம்? சபூரா இப்படி வருட கணக்கில் காண போவார் என அவருக்கு என்ன தெரியும்? உண்மையை உள்ளுக்குள்ளேயே புதைத்துவிட்டார் ரசியா. ஆனால் அவரது மனதில் கனன்று கொண்டிருக்கும் கோபமும், அவமானமும் அவரை அமைதியாக இருக்க விடவில்லை. சபூராவை கண்ட படி ஏசினார். ஆனால் மறந்தும் சபூரா வீட்டில் நடந்ததை யாரிடமும் கூறவில்லை. போலீஸ் உதவியை நாடலாம் என அமீர் கூறியபோது கூட எங்கே விசாரணையில் சபூராவின் நடத்தை வெளியே தெரிந்து விடுமோ என அதற்கும் எதிர்ப்பு கொடி ஏந்தினார். கட்டிய கணவனிடம் கூட சபூராவின் நடத்தையை பகிரவில்லை. ரசியாவின் அழுத்தம் மிக அழுத்தமாகவே உண்மையை மறைத்தது.

கணவரிடம் தன் ஆழ்மன ரகசியத்தை எல்லாம் கொட்டிவிட்ட ரசியா வேதனையில் கேவல் ஒன்றை வெளியிட, மனைவியை இறுக அணைத்துக் கொண்டார் ஆசாத்.

" போதும் ரசியா..... இத்தனை காலம் மனசுக்குள்ளயே அழுதுட்டு இருந்தது போதாதா? ஆழாதடி என் தங்கமே..... இவ்ளோ வேதனையை மனசுல வைச்சி எப்படிமா தாங்குனே? இந்த ஊரே தூற்றிச்சே? உன்னை என்னன்னவோ சொல்லி பழிச்சிச்சே? ஒரு வார்த்தை நடந்ததை சொல்லலியே.... நா உன் இடத்துலே இருந்திருந்தா கூட இந்தளவுக்கு யோசிச்சியிருப்பனா னு தெரியல ரசியா. " என மனைவியின் கண்ணீரை தாங்க முடியாமல் அரற்றினார். இப்போது புரிந்தது ரசியாவின் கோபத்திற்கும், சபூராவின் மௌனத்திற்குமான காரணம். ஆசாத்தின் மனதில் கேள்விக்குறியோடு குற்றவாளி கூண்டில் ஏறினார் சபூரா.

ரசியா அழுகையில் கரைய, நடந்ததை எல்லாம் ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருந்தார் ஆசாத். சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டதும் இருவரும் விலகி அமர்ந்தனர்.

" போய் முகத்தை கழுவிட்டு வா ரசியா" என்று விட்டு கதவை திறந்தார் சமையல் செய்யும் அபு தான் நின்றிருந்தான். மதிய உணவு தயாராகிவிட்டதாக சொல்லி சென்றான்.

உணவை மறுத்த மனைவியை வற்புறுத்தி சாப்பிட வைத்தார். மகளின் அழுது களைத்த முகத்தை பார்த்து கமர் பதறி போனார். இதுவரை எத்தனையோ முறை சபூராவிற்காக மகளிடம் சண்டை போட்டிருக்கிறார். அப்போதெல்லாம் ரசியா சரிக்கு சரியாய் சண்டை போடுவாரே தவிர இப்படி கலங்கி போக மாட்டார். மகளின் முகம் அந்த தாயின் மனதை பிசைந்தது.

"ர... ரசியா..... என் மேல கோபமாமா? உம்மா கடுமையா பேசியிருந்தா மன்னிச்சிடுமா இல்ல திட்டினாலும் கேட்டுக்குறேன்." என்றார் கமர் தவிப்பாக.

ரசியா மௌனமாகவே இருந்தார். இது இன்று நேற்றா நடக்கிறது? ஆசாத்திற்கு தான் மனம் தாங்கவில்லை. கமர் கொஞ்சம் தன்மையாக பேசியிருந்தால் மனைவி மனம் திறந்திருப்பாளே. இத்தனை பெரிய பழி பாவத்திற்கு ஆளாகியிருக்க மாட்டாளே என தோன்றியது.

" மருமகளுக்காக பரிந்து பேசுறது தப்பில்லை தான் மாமி ஆனா மகளையும் கொஞ்சம் யோசிக்கலாம்ல" என ஆசாத் கூறவும் கமர் முகம் வாடிவிட்டது.

" ம்ப்ச்.... விடுங்க..." என்றதோடு ரசியா எழுந்து சென்றுவிட்டார்.இயல்புக்கு மாறான மகளின் செயலை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தார் கமர்.

" மருமகளுக்கும் மகளுக்கும் நா என்னைக்குமே வித்தியாசம் பார்த்ததில்லை மருமகனே.... ரசியா கிட்ட மட்டுமில்ல சபூரா கிட்டயும் இதே கோவத்த தான் காட்டுறேன். ரெண்டு பேரும் என்னத்தையோ மனசுல போட்டு மறைக்கிறாளுங்க. என்னன்னு உடைச்சி பேசுனா தானே தெரியும்? சரி.... இவளுங்க சண்ட இவளுங்களோட போனாலும் பரவாயில்லை. ஆனா ஆசை பட்ட சின்னஞ்சிறுசுகளும்ல பிரிஞ்சி கிடக்குது. அதுங்க முகத்துக்காகவாவது எறங்கி வரலாம்ல...." தன் ஆதங்கத்தை மருமகனிடம் வெளியிட்டார் கமர்.

இத்தனை நாளும் இப்படியான சூழ்நிலையில் மாமியாருக்கு ஆறுதலாக பேசுவார் ஆசாத். ஆனால் இன்று நடந்ததை தெரிந்து கொண்ட பின்பு ஒன்றும் பேச முடியவில்லை அவரால். இருவரது நியாயமான வேதனையும் அவருக்கு புரிய தான் செய்தது.

" இதுக்கு காலம் தான் பதில் சொல்லணும் மாமி." என பொதுவாக கூறியவர்," ரிஸ்வி சாப்பிட்டானா?" என்றார் பேச்சை மாற்றும் விதமாக.

மருமகனிடம் மாற்றம் தெரிந்தாலும் அதை கேளாமல்," போன் பண்ணேன்.... வரேன் னு சொன்னான்" என்றார்.

" ம்.... சரி மாமி...." என்று விட்டு அறைக்குள் சென்றார்.ரசியா கலங்கிய முகத்தோடு அமர்ந்திருந்த விதத்திலேயே கமர் பேசியதை கேட்டிருக்கிறார் என புரிந்தது.

" மாமி பேசுனத நினைச்சி வருத்தபடுறியா ரசியா" அருகில் அமர்ந்த படி கேட்டார்.
" இல்லங்க. உம்மாக்கு உண்மை எதுவும் தெரியாதே. அப்போ அவங்களோட கோவம் இப்படி தான் இருக்கும். அத நா எப்போதுமே பெருசா எடுத்துக்குறதில்ல"

" உண்மையிலேயே உன்ன பார்த்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கு ரசியா. உன்னோட இந்த பக்குவமும், பெரிய மனசும் யாருக்கும் வராது மா." என்றார் மனமார. வெற்று முறுவல் மட்டுமே ரசியாவிடம்.

" ரசியா நா ஒன்னு சொல்வேன் நீ கோவப்படாம கேட்கணும்"
" சொல்லுங்க"

" நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நம்புறேன் ரசியா. ஆனா மனசுல ஒரு ஓரத்துல சபூரா தப்பு பண்ணியிருக்க மாட்டாளோ னு தோன்றத தடுக்க முடியல மா" மனைவி என்ன சொல்வாளோ என தடுமாறினாலும் மனதில் தோன்றியதை கூறிவிட்டார்.

" உண்மை தாங்க. எனக்கும் கூட அப்படி ஒரு எண்ணம் இருந்தது. அந்த நம்பிக்கை மனசுல இருந்ததுனால தான் இத்தனை வருஷம் என்னால உண்மையை மறைக்க முடிந்தது. ஆனா.... சபூரா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே உம்மா கண்ணுல பட்டுட்டாங்க. அப்புறம் ஏன்ங்க அவ நம்ம முன்னாடி வரல? இத்தனைக்கும் அவள பற்றின உண்மையை நா யார்கிட்டேயும் சொல்லல னு அவளுக்கு தெரிஞ்சிருக்கும் தானே? அன்னைக்கு வேணும்னா பயத்துலயோ, அவமானத்துலயோ ஓடிப் போயிருக்கலாம். இப்போவாவது என்னை தேடி வந்து பேசியிருக்கலாம் தானே? ஒரு விளக்கமோ, சமாதானாமோ, மன்னிப்போ ஏதாவது ஒன்னு சொல்லியிருக்கலாமே? ஒன்னுமே செய்யலயேங்க. எல்லாத்துக்கும் மேல சராவ சொந்த வீட்டுக்கு ப்ரெண்டா அனுப்புனாளே? எதுக்குங்க இந்த திருட்டுதனம்? எதுக்கு இந்த தலைமறைவு வாழ்க்கை?" மனதில் போட்டு மருகியதை எல்லாம் கணவரிடம் பகிர்ந்தார் ரசியா.

ஆசாத் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார் . ரசியா கேட்டது அத்தனையும் நியாயமான கேள்விகள்.
" உன்னோட கேள்விகளுக்கு சபூரா தான் பதில் சொல்லணும். ஆனா ஏன் இப்படி மௌனமா இருக்காளோ தெரியல." மனைவியின் வேதனையை கண்டு சபூரா மீதான மரியாதை ஒருமைக்கு மாறியிருந்தது. மனைவியின் சோர்ந்த முகம் ஆசாத்தை வாட்ட, ஆறுதலாய் பேசி சற்று நேரம் தூங்க செய்தார்.

இருவருமே சிறிது நேரம் தூங்கி எழுந்த‌தில் தெளிவாக இருந்தனர். ரசியாவிடம் அவருக்கே உரித்தான கம்பீரம் திரும்பியிருந்தது. அபு கொண்டு வந்த டீயை பருகியபடி பால்கனியில் நின்றிருந்தனர்.

' The Divine Range' பெயர் பலகை சிகப்பு மற்றும் நீல நிறத்தில் மாறி மாறி ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. தன் மகனின் அசாத்திய உழைப்பில் வளர்ந்து நிற்கும் ஸ்தாபனத்தை கண்டு பெருமிதம் கொண்டனர் பெற்றவர்கள்.

" நம்ம ரிஸ்வியோட கனவில்லையாங்க இது" ஒளிர்ந்து கொண்டிருக்கும் பெயர் பலகையில் பார்வையை பதித்தபடி கேட்டார் ரசியா.

" ஆமா ரசியா."

" இந்த கடை திறந்ததும் கல்யாணம் பண்ணிக்கிறேன் னு சொன்னான்ல" என்றதும் கேள்வியாக பார்த்தார் ஆசாத்.

" நாம நாளைக்கு பெங்களூர் கிளம்பலாமாங்க?"
" நாளைக்கே ஏன் ரசியா?"

" ரிஸ்விக்கு சீக்கிரமே நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணனும்ங்க."

" உன் மகன் ஒத்துப்பான்னு நினைக்கிறியா ரசியா?" என்றார் மனைவியை ஆழ்ந்து பார்த்து.

" வேற வழியில்லங்க. எப்படியாவது அவனுக்கு சொல்லி புரிய வைக்கணும்"

" அது முடியாது ரசியா."

" அப்போ ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீங்களா? அது என்னால முடியாதுங்க. சபூரா பண்ணத என்னால மறைக்க வேணா முடியும் ஆனா மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. அவள பார்க்கும் போதெல்லாம் என் மனசு எரிமலையா குமுறுதுங்க. கண் மண் தெரியாத கோவம் வருது. நா என்னைக்காவது ஒரு நாள் நிதானம் இழந்து உண்மைய சொல்லிட்டனா அப்புறம் எல்லாரோட நிம்மதியும் போயிடும். யாஸ்மின் மைசராவால தாங்க முடியுமா சொல்லுங்க....."

மனைவியின் வேதனையும் புரிந்தது. மகனின் காதலும் புரிந்தது. இருவருமே பிடிவாதகாரர்கள் தங்கள் பிடியிலிருந்து இறங்கி வர மாட்டார்கள். இருவருக்கும் இடையில் நின்று நடுநிலையான முடிவை எடுக்க முடியாமல் திண்டாடி போனார் ஆசாத்.

கண்ணெல்லாம் கலங்கி விட்டது ரசியாவுக்கு." சரா குட்டிய ரிஸ்விக்கு கட்டி வைக்கணும் னு நா எவ்ளோ ஆசைப்பட்டேன் தெரியுமாங்க. என் புள்ள விவரம் தெரியாத வயசுல பப்ளிமாஸு வேணும் னு கேட்டப்பவே நா தாரேன் னு சொல்லிட்டேன். இப்போ என் புள்ள விவரம் தெரிஞ்சி கேட்குறான் என்னால தர முடியலையே. என் புள்ள ஆசைய நிறைவேற்ற முடியலையே னு நா நொந்து போய் கிடக்குறேன். இந்த சரா என் முன்னாடியே வந்து உங்க மகன் வேணாம் னு சொல்லிட்டு போறா...." என்றார் ஆற்றாமையாக. காலையில் சரா சென்றதும் ரசியா கோபப்பட்டது நினைவு வந்தது. மனைவி தன் மென்மையான மனதை கோபம் என்ற திரையை கொண்டு மறைத்து கொள்கிறாள் என கலங்கி போனார் ஆசாத்.

" ரசியா..... நாம வேணும்னா சபூரா கிட்ட பேசி பார்ப்போம். என்ன நடந்தது ஏது நடந்தது னு" அவர் முடிக்கவில்லை...

" ச்சீ.... அத விட கேவலம் வேறயில்லை. தப்பு செய்தவ அவ. ஊரை விட்டு ஒடி போனது அவ. ஆனா கெட்ட பேர சுமக்குறது நான். நா போய் அவ கிட்ட பேசணுமா. அவளுக்கு அவ மக பெருசுனா அவ என்னை தேடி வரட்டும்" என்றார் கோபமாக.

" அவ பேசணும் னு நினைச்சிருந்தா என்னைக்கோ பேசியிருக்கலாம். ஆனா அவ அப்படி செய்யலயே. மைசராவையும் சேர்த்தில்ல கஷ்டப்படுத்துறா? இன்னைக்கு உங்க மகன் வேண்டாம் னு சொல்லும் போது அவ முகத்த பார்த்தல்ல... அந்த புள்ளையோட அன்புல பொய் இருக்கும் னு நினைக்கிறியா ரசியா? அவ ரிஸ்விய வைச்சு இந்த குடும்பத்திக்குள்ள நுழையணும் னு நினைச்சிருந்தா இப்படி பேசுவாளா?"

" ச்சே...சே.... மைசரா பத்தர மாத்து தங்கம்ங்க. அவளும் ரிஸ்வியும் ஒன்றாயிருந்த போட்டோவ பார்த்ததும் நான் அவள தப்பா நினைச்சி தான் சென்னைக்கு வந்தேன். அப்போ அவ யாரு னு எனக்கு தெரியாது. விவரம் தெரிஞ்சதும் கூட கோபம் தான் சொந்த வீட்டுக்கே ப்ரெண்ட்டா வந்திருக்காளே, ரிஸ்வி யாரு னு தெரியாமளா பழகியிருப்பான்னு.... ஏற்கனவே சபூரா கிட்ட பிள்ளைங்க வளர கூடாது னு நினைச்சேன். சபூராவ பார்த்த அதே மாதிரி சூழ்நிலைல சராவ பார்க்கவும் கொதிச்சி போயிட்டேன். அவ மாதிரியே பிள்ளைகளயும் மோசமா வளர்த்திட்டாளோ னு பதறி போனேன். ஆனா அன்னைக்கு நான் திட்டுனதும் சிலுத்துக்கிட்டு சண்டைக்கு வந்தாளே அங்க தெரிஞ்சது என் மருமகளோட நேர்மை. அத்தன பேரு முன்னாடி ரிஸ்விய லெப்ட் அண்ட் ரைட் வாங்குனாலே அங்க தெரிஞ்சது அவளோட தூய்மை. அன்னைக்கு தலைகுனிஞ்சி நின்றது தப்பு செய்த ரிஸ்வி தானே தவிர மைசரா இல்லைங்க..."மைசரா பற்றிய மனைவியின் மதிப்பீட்டில் வாயை பிளந்தார் ஆசாத். இவளை எந்த வகையில் சேர்ப்பது?

" ஆனா அந்த கோபமும் ஆத்திரமும் சபூராவுக்கு வரலயே.... கோழை மாதிரி ஓடி போயிட்டாளே..." என்றார் கோபமும் வேதனையும் கலந்த குரலில்.
" உன்னை என்னால சில சமயம் புரிஞ்சிக்கவே முடியல ரசியா. "
".............."
"உன் வேதனை எனக்கு புரியுது மா அதே சமயம் ரிஸ்விய பற்றியும் உனக்கு தெரியும் தானே ரசியா. அவன் அமைதியா இருப்பான் நினைக்கிறியா"

" மைசரா சம்மதிக்காம அவனால ஒன்றும் பண்ண முடியாதுங்க" எனவும்,

"மாம்...." தன்னால் என்ன பண்ண முடியும் என நிரூபிக்க வந்து நின்றான் அவர்களது தவப்புதல்வன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top