• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 53(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் - 53(1)

அத்தியாயம் 54

" உன் மனசுல நீ என்னம்மா நினைச்சிட்டு இருக்குற? சராவ பற்றி கொஞ்சமாவது யோசிச்சியா? அந்த ரசியா என்ன பெரிய இவளா? அவளுக்கு பயந்து கிட்டு நம்ம புள்ளய போட்டு வதைக்குற? " என உச்சஸ்தாதியில் கத்திக் கொண்டிருந்தாள் யாஸ்மின். ரிதா தான் போன் போட்டு நடந்தை எல்லாம் விளக்கியிருந்தாள். மகளின் முன் தலைகுனிந்து அமர்ந்திருந்தார் சபூரா. வழக்கம்போல் கண்களில் கண்ணீர் வழிந்த படி இருந்தது.

அன்னையின் நிலையை காண சகியாத சரா," உம்மாவ திட்டாத யாஸு.... அவங்க மனசு எவ்ளோ கஷ்டப்படும்" என்றாள்.

" அப்போ உன் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்குதா?" எனவும் வாயை மூடி நின்றாள் மைசரா.

" இப்போ என்ன நடந்துச்சு னு சித்திக்கா ஆன்ட்டி கிட்ட சரா க்கு மாப்பிள்ளை பார்க்கணும் னு சொல்லியிருக்கே?" என்றதும் மைசரா திகைத்து தாயை பார்த்தாள். இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தீயை மிதித்ததை போல் துடித்து போனாள்.

" ரிஸ்வியை தள்ளி வைக்க சொன்னீங்க... வைச்சிட்டேன். ஆனா அந்த இடத்துல வேற ஒருத்தர வைக்க முடியாது மா..." மனம் ஊமையாய் அழுதது.

" ரிதா நீ ஆச்சாக்கு போன் போடு நான் பேசுறேன். அந்த ரசியா என்ன செய்றா னு நானும் பார்க்கிறேன்." என யாஸ்மின் கூறினாள்.

" சரி லாத்தா...." என ரிதா போனை தூக்க, அதை பிடுங்கி வைத்தாள் மைசரா.

" யாஸு இப்போ எதுக்கு நீ தேவையில்லாத பிரச்சனை ய கிளப்புற?"

" இல்ல நான் தெரியாம தான் கேட்குறேன்.... நீயும் ரசியா சொல்ற மாதிரி நம்ம உம்மா அந்த அஞ்சு லட்சத்த எடுத்திருப்பாங்க னு நினைக்கிறியா சரா. " எனவும் பதறி போனாள் மைசரா.

" அய்யய்யோ.... ஏன் யாஸு இப்படி எல்லாம் பேசுற"

" பின்ன எதுக்கு நீயும் இப்படி பயந்து சாகுற?" என்றதும் அவள் தாயை ஏறிட்டாள்.

" உம்மா தயவுசெய்து வாயை திறந்து பேசுமா... நீ ஏதாவது சொன்னா தானே அடுத்து என்ன செய்யலாம் னு யோசிக்க முடியும்? "சபூரா நிலைகுலைந்து போயிருந்தார். மகள்களின் அபரிதமான நம்பிக்கை பார்த்து மனம் மகிழ்ந்தாலும், வயதுக்கு வந்த பிள்ளைகளிடம் எப்படி விளக்குவது? சில உண்மைகளை காலம் கடந்து கூறினால் நம்புவார்களா?

" ப்ச்..." அன்னையின் மௌனத்தில் சலிப்படைந்தவள், " ஏன் சரா? உம்மா தான் க்விட் பண்ண சொன்னாங்கன்னா நீயும் அப்படியே போய் பண்ணிட்டு வருவியா. அடுத்து உனக்கு கல்யாணம் பண்ணும் னு சொல்வாங்க. அப்போ அதுக்கும் ஒத்துப்பியா?" எனவும் மைசராவும் தலைகுனிந்து அழுதபடி நின்றாள்.

" நீயாவது வாயை திறந்து பேசி தொலை லா. நீ ரிஸ்விய விரும்புறியா?" யாஸ்மின் நேருக்கு நேராக கேட்டு விட, பதில் சொல்ல முடியாமல் சரா தாயை பார்க்க, இத்தனை நேரம் தரையை வெறித்துக் கொண்டிருந்த சபூராவும் நிமிர்ந்து மகளை பார்த்தார்‌. அந்த பார்வையில் என்ன உணர்ந்தாளோ....

" எ... எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை யாஸு.... இந்த விஷயத்த இப்படியே விட்டுடுவோம் ப்ளீஸ்..‌. இனிமே என்னை பற்றியோ என் உம்மாவை பற்றியோ ஒரு வார்த்தை பேச கூடாது னு ஸ்ரிக்ட்டா சொல்லிட்டு வந்துட்டேன். அவங்களும் இனி பேச மாட்டாங்க யாஸு..."

" ஏன் இப்படி எல்லாம் பேசுற சரா? மச்சான் உன் மேல எவ்ளோ லவ் வைச்சிருக்காங்க தெரியுமா? அவங்க மனசை மறுபடியும் மறுபடியும் காயப்படுத்துற நீ?" ரிதா கூறவும்

" போதும் ரிதா உன் மச்சான் புராணம்.... நீ உன் மச்சான பற்றி மட்டும் தான் யோசிப்ப இல்ல? உன் சாச்சிய பற்றி எல்லாம் யோசிக்க மாட்டல" மனதில் பரவிய வலியில் சரா எரிந்து விழுந்தாள்.

" அவ மேல ஏன் பாய்ற சரா? அவ நம்ம உம்மா பற்றி யோசிக்காமலா உடம்பு சரியில்லாத நேரத்தில கூட திருச்சி க்கு போகாம இங்கேயே இருக்கா?"என ரிதாவுக்கு பரிந்து பேசியவள்,. " சை..... ஆளாளுக்கு ஒருத்தர ஒருத்தர் காயப்படுத்தி அந்த ரசியாவ ஜெயிக்க வைங்க" எரிச்சலோடு கூறினாள்.

" ஆனாலும் நீ இப்படி மௌனமா உட்கார கூடாதுமா... எனக்கு உன்னை பார்த்தா பயம்மாயிருக்கு...." எனவும்

" இப்போ என்னை என்ன செய்ய சொல்ற யாஸு? ஆமா.... அந்த அஞ்சு லட்சத்த நான் தான் எடுத்தேன். இன்னைக்கு இவள ரிஸ்விக்கு கட்டி வைச்சா என் மேல இருக்க கோபத்துல ரசியா காலம் பூரா சராவ குத்திக் காட்டி பேசுவா.... அந்த மாதிரி வாழ்க்கை என்னோட போகட்டும். என் மகளுக்கு வேண்டாம். எல்லாம் காலப்போக்குல சரியா போகும்." விரக்தி, வெறுப்பு, வேதனை, குற்றவுணர்வு என பலவித எண்ணங்களின் பிடியில் சிக்குண்டிருந்தவர் வாய்க்கு வந்ததை பேசி விட்டு தன்னறைக்கு சென்றார்.

அனுதினமும் ரசியாவின் சுடுசொற்களை கேட்டு வாழ்ந்த சபூராவுக்கு தன் மகளின் வாழ்வும் அப்படி ஆகிவிடுமோ என பயமாய் இருந்தது. ஏழை வீட்டு பெண் என்னும் போதே தன்னை ஏற்றுக்கொள்ளாத ரசியா ஒழுக்கம் தவறியவளாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தன் மகளை மதிப்புடன் நடத்துவளா?

அன்னை அறைக்குள் சென்ற உடனே பொங்கி வரும் அழுகையை அடக்க முடியாது சராவும் அவளறைக்கு சென்று விட்டாள்.

" பாரு ரிதா.... ரெண்டு பேரும் எப்படி பேசிட்டு போறாங்க ன்னு.... அவங்க அஞ்சு லட்சத்த எடுத்திருந்தா நாங்க ஏன் கஷ்டத்துல வளரணும்? இந்த சராவாவது மனசு விட்டு ஏதாவது சொன்னா தானே எதுவும் பண்ண முடியும்? உனக்கு நல்லா தெரியுமா ரிதா? அவ ரிஸ்விய லவ் பண்றாளா?" தங்கையின் உறுதியான மறுப்பில் யாஸ்மின்னுக்கு சந்தேகம் வந்திருந்தது.

" உண்மையிலேயே அவ மச்சான லவ் பண்றா லாத்தா.... நேற்று கூட என் கிட்ட சொன்னா.... ஆனா ரசியா மாமிக்கும், சபூரா சாச்சிக்கும் ரொம்ப பயப்படுறா...."

" ப்ச்.... சரி யோசிப்போம்" என்று விட்டு சோபாவில் சாய்ந்தாள். அதுவரை பொம்மைகளோடு விளையாடி கொண்டிருந்த யாஸ்மின்னின் மகன் சிணுங்கிய படி அன்னையிடம் வந்தான்.

அவனை தூக்கி கொண்ட ரிதா," நீங்க போய் பிள்ளைக்கு பால் காய்ச்சுங்க... நா இவன பார்த்துக்குறேன்" என்று விட்டு பிள்ளைக்கு விளையாட்டு காட்டினாள்.

சமையலறை சென்று பாலை அடுப்பில் வைத்த யாஸ்மின் அது பொங்கியதும் அணைத்த வேளை வாயிற் மணி ஒலித்தது. ரிதா தான் சென்று கதவை திறந்தாள்.

வெளியே நின்றிருக்கும் தன் உறவுகளை கண்டவளுக்கு விழிகள் தாமரையாய் விரிந்தது. " வாங்க ஆச்சா.... வாங்க மாமா... மாமி.." என ஒவ்வொருவரையும் வரவேற்றவள்," ஹை.... மச்சான்.." என ரிஸ்வியோடு கை கோர்த்து கொண்டாள்.

அவளை உடல்நிலையை விசாரித்தபடிய பிள்ளையை ரிஸ்வி வாங்கி கொண்டான். அரவம் கேட்டு யாஸ்மின் வெளியே வந்து அனைவரையும் வரவேற்றாள். ரசியா முகம் கடுகடுக்க, யாஸ்மின் அவரை கண்டுக்கொள்ளவில்லை.

சிணுங்கி கொண்டிருந்த பிள்ளை அழ தொடங்க, ரிஸ்வி வாசலிலேயே நின்று வேடிக்கை காட்டினான்.

" லாத்தா.... நீங்க முதல்ல பிள்ளைக்கு பால் ஊத்திட்டு வாங்க... நா போய் சாச்சி கிட்ட சொல்றேன்" என்றுவிட்டு ரிதா உள்ளே போனாள்.

" இது என்ன பெரிய மைசூர் பேலஸா நாம வந்தது ஒருத்தர் போய் சொல்லி தான் தெரியணுமா?" ரசியா கூற,

" ஆரம்பிச்சிட்டியா?" என்றார் கமர் ஆயாசமாக.

" ரசியா.... நீ எதுவும் பேச கூடாது. அமைதியா இரு. இல்லனா உன் மவன் இன்னும் முருங்கை மரம் ஏறிடுவான்." ஆசாத் எச்சரிக்கவும் ரசியா கப்சிப்.

" வாங்க மாமி.... வாங்க... வாங்க..." என எல்லாரையும் வரவேற்ற படி வந்த சபூராவின் முகத்தில் பதட்டம் அப்பட்டமாக தெரிந்தது. அதிலும் ரிஸ்வியை கண்டவருக்கு தொண்டை வற்றி போனது.

ஆனாலும் வரவேற்க வேண்டுமே! " ரிஸ்வி வாப்பா" என்றபடி வாசலுக்கு சென்றவர்," இந்த இன்டர்ன்ஷிப் பீரியட் முடிஞ்சதுக்கு அப்புறம் அவ பிடிக்கல னு சொல்லிட்டா சராவ தொந்தரவு பண்ண மாட்டேன் னு சொல்லியிருக்க ஞாபகம் இருக்கும் னு நினைக்கிறேன்" தாவி வரும் பேரனை வாங்கியபடி கேட்டார் சபூரா.

அவரது பதட்டத்தை பார்க்க சற்றே பாவமாக இருந்தாலும் அதை யோசித்தால் இப்போது காரியமாகாதே என நினைத்தவன்," மாமி ஸாரி டூ சே திஸ்..... இன்டர்ன்ஷிப் பீரியட் முடிய இன்னும் நா....லு நாள் இருக்கு மாமி.... ஒருவேளை மெஹர் நாலு நாள் கழிச்சி நோ சொல்லியிருந்தா நா டிஸ்டர்ப் பண்ணியிருக்கவே மாட்டேன். மாமி உங்களுக்கு ஞாபகம் இருக்கும் னு நினைக்கிறேன். சரா மேல நம்பிக்கை இருந்தா மட்டும் அனுப்புங்க. ஒருவேளை அவ என்னை விரும்பிடுவான்னு பயம் வந்தா அவள அனுப்பாதீங்க னு சொல்லியிருந்தேன். அவளுக்கு என் மேல விருப்பம் வந்துடுச்சா மாமி.... அதான் க்விட் பண்ண சொல்லிட்டீங்களா? எனக்கு புரிய வைச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மாமி...." என நையாண்டி குரலில் கூற, சபூராவுக்கு நாவு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

தான் ஒன்று நினைத்து செய்ய, அதுவே அவருக்கு எதிராக திரும்பி நிற்பதை கண்டு திகைத்து போனார்.
" ரி.‌...ரிஸ்வி அது வந்து....."
" இனிமே மெஹரை மிஸ் பண்ண மாட்டேன் மாமி" என்றான் அழுத்தமாக.

" அங்கன மாமியாருக்கும் மருமவனுக்கும் என்ன ரகசிய பேச்சு" கமர் சத்தம் கொடுக்க, அதிர்ந்து நிற்கும் சபூராவை பார்த்து ஒரு புன்னகையை சிந்தியவன் உள்ளே நுழைந்தான். அனைவரும் ரிதாவின் உடல்நிலையை பற்றி தான் விசாரித்து கொண்டிருந்தனர்.

" ரிதாக்குட்டி உன் ரிப்போர்ட்ஸ் எல்லாம் ரமீஸ் மச்சானுக்கு மெயில் பண்ணிட்டியா?" என்றபடி கமரின் அருகில் அமர்ந்தான் ரிஸ்வி.

" பண்ணிட்டேன் மச்சான். ஒன்னும் பிரச்சனை இல்லை னு சொல்லிட்டாங்க"
" குட்...."
" உங்களுக்கு பீவர் சரியாகிடுச்சா மச்சான்?" என அக்கறையாக வினவினாள்.
" இப்போ நல்லாயிருக்கேன் குட்டிமா" என்றவனின் உள்ளம் தன்னவளை தேடி தவிக்க அவனுக்கு எப்போதும் போல் கமர் உதவினார்.

" சபூரா எங்க என் பேத்திய காணல"
" அவ உ... உள்ள இருக்கா... இதோ வர சொல்றேன்" மாமியார் பேச்சை தட்டாத மருமகளாய் உள்ளுக்குள் மருகியபடி உள்ளே சென்றார்.

அங்கே சராவின் நிலையோ பரிதாபமாக இருந்தது. உறவுகளின் வருகையில் பீதியடைந்தவள் ரிஸ்வியில் குரலை கேட்டதும் நொறுங்கி போனாள். இன்னுமொரு முறை அவனது காதலை மறுக்க முடியுமா? பிறகு இந்த உடலில் உயிர் தங்குமா? இந்த கணமே இங்கிருந்து மறைந்து போனால் என்ன? என தோன்றியது..... மனதோடு போராடி கொண்டிருந்தவளை கலைத்தது அன்னையின் குரல்.

" சரா... ஆச்சா எல்லாம் வந்திருக்காங்க... வந்து வாங்க னு கேட்டுட்டு போ மா...." என்ற அன்னையை வலியோடு ஏறிட்டாள்.
" நா.... நா வரல மா...."
" வரலனா எப்படி மா? ஆச்சா கூப்பிடுறாங்க மா... வா" எனவும் மனமேயில்லாமல் எழுந்து வந்தாள்.

" அஸ்ஸலாமு அலைக்கும்" என வந்து நின்றவளை கண்டு ரிஸ்வியின் இதயம் ஒரு முறை நின்று துடித்தது. அழுதழுது முகம் வீங்கி, கண்கள் களைத்து, மூக்கு சிவந்து ஒரே நாளில் கருமேகம் சூழ்ந்த வானம் போல் கருத்து போயிருந்தாள் அவனது மெஹர். அவளை பார்த்த அனைவருக்குமே பாவமாக இருந்தது. யாரையும் ஏறிட்டு பாராமல் தலைகுனிந்து நின்றிருந்தாள் அவள். ரசியாவின் கண்கள் சபூராவை எரிப்பதை போல பார்க்க, அவரது கண்களுக்கு சபூரா அரக்கியாக தான் தெரிந்தார்.

" அய்யோ என் மெஹரை என்கிட்ட தந்துடுங்களேன்" என தவித்த ரிஸ்விக்கு இக்கணமே அவளை அணைத்து ஆறுதல்படுத்த மனம் பரபரத்தது. சாவி கொடுத்த பொம்மை போல் ஸாலம் சொல்லி விட்டு திரும்பியவளை நிறுத்தியது யாஸ்மின்னின் குரல்.

" சரா இந்த டீயை எல்லாருக்கும் கொடு" என்று விட்டு" உம்மா அவனை கொடு.அவன் அப்போவே பால் கேட்டான்" என்றாள். மைசரா உதவிக்காக ரிதாவை தேட, அவளோ அசையாது அமர்ந்திருந்தாள்.

" வாங்கி கொடு சரா...." என மீண்டும் யாஸ்மின் கூற வேறுவழியில்லாமல் வாங்கி கொண்டாள். நிமிர்ந்து பார்த்தால் எங்கே இதயம் எம்பி அவன் பால் சென்று விடுமோ என பயந்தவள் தரையில் மட்டும் பார்வையை பதித்து சென்றாள். ஒரு பாதத்தின் மேல் இன்னொரு பாதத்தை போட்டப்படி தெரிந்த அவனது வென்னிற பாதங்கள் கூட தன்னவனின் கம்பீரத்தை எடுத்து காட்ட, அதை ரசித்து உயிருக்குள் ஒளித்து வைத்தது அவளது காதல் மனம்.

கமருக்கு டீயை நீட்டியவள் அடுத்து ஆசாத், ரசியாவுக்கு தந்தாள். அடுத்து மன்னவனை நெருங்கிய மங்கையின் விழிகளிலோ நீர்த்துளிகள் கோர்த்தது. இப்போது அவனது கைகள் அவளது கண்களில்பட்டது. இறுக்கி மூடியிருந்த கரம் அவனது இறுக்கத்தை அளவிட்டு காட்டியது. தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் அழிச்சாட்டியம் செய்துக் கொண்டிருப்பவளை கண்டு பெரும் கோபம் கொண்டிருந்தான் அவன்.

டீ ட்ரேவை அவன் பால் குனிந்து நீட்டியவளின் நாசியை தீண்டிய அவனது அத்தர் வாசம் பெண்மையை சோதித்தது. அவனது மார்பில் புதைந்து அழ வேண்டும் என ஆவல் பொங்க, விளிம்பில் நின்றிருந்த விழிநீர் வழிந்து கப்பில் பட்டு தெறித்தது. டீயை எடுக்க போன அவன் கரம் ஒரு நொடி அப்படியே நிற்க, நிமிர்ந்து அவளை பார்த்தான். அவளோ இமை குடையை வெகுவாக தாழ்த்தி அவனது பார்வையை தவிர்த்தாள். ஆனாலும் அவனது ஊசி பார்வை அவள் உயிரை துளைக்க மெஹரின் கைகள் வெளிபடையாகவே நடுங்கியது. அவனது பார்வையின் அழுத்தம் அப்படி.....

சுற்றம் புரிந்து அவன் டீயை எடுத்துக்கொள்ள, " கொல்லாத மெஹர்...." பற்களை கடித்து அவன் மெல்லிய குரலில் சீற, ட்ரேவை ரிதாவின் கைகளில் திணித்து விட்டு உள்ளே ஓடி மறைந்தாள் நித்தம் நித்தம் அவனை தவிக்க விடும் அவனது மெஹர்.

கனத்த மனத்தோடு தொண்டையை செருமிய கமர்," சரி..... வந்த விஷயத்தை பேசுவோம்" என்றதும் சிலரின் முகத்தில் கலவரம் சிலரின் முகத்தில் ஆர்வம்.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமை 👌👌👌, ரிஸ்வியின் முகம் கோபத்தில் சராவை பார்த்து அவள் வேதனை முகத்தை கண்டு, கமர் என்ன பேச போகிறாரோ 🤭🤭🤭🌺🌺🌺🌺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top