• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 54(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
கா.அ.க - 54(2)

அவர்கள் வீட்டு ரகசியம் ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்லவே.... உறவுகளின் மேலிருந்த நம்பிக்கையில் இந்நாள் வரை ஆராயாமல் இருந்தனர். மைசரா வீட்டிற்கு சென்று வந்த மறுநாளே ரிஸ்வி தன் பெற்றோரை பெங்களூருக்கு அனுப்பி வைத்தான். உண்மையை கண்டுபிடித்த பின் ரிஸ்வி அதனை எப்படி எடுத்துக்கொள்வான், மைசரா என்ன ஆவாள் என மனதிற்குள் மருகி கொண்டிருந்தார் ரசியா.

அவர்கள் சென்ற பின் திருச்சி சென்றான் ரிஸ்வி. அமீரின் அறையிலிருந்த பழைய கணக்கு புத்தகங்களை ஆராய்ந்தான். தெள்ள தெளிவாக கையாடல் செய்யப்பட்டது தெரிந்தது. சபூரா வீட்டை விட்டு சென்ற பின் ஆராய்ந்த கணக்குகளை தெளிவாக எழுதி வைத்திருந்தார் அமீர். அப்படி சபூரா பணத்தை எடுத்திருந்தால் அந்த பணம் எங்கே? அவர் ஒன்றும் பணக்காரராக வாழ்க்கை நடத்தவில்லையே.... தனக்கு உரிமையான பணத்தை கூட இங்கே தானே விட்டு விட்டு சென்றார்.... நாணயம்யற்றவராக இருந்தால் மெஹரிடம் இத்தனை உறுதி இருக்குமா? சபூரா மேலிருந்த அதீத நம்பிக்கையால் வேறு வழியில் யோசித்தான் ரிஸ்வி.

சபூரா கடை பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாள் முதலான கணக்களை ஆராய்ந்தான். எந்த இடத்திலும் எவ்வித திருத்தமுமின்றி மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருந்தது கணக்கு. சின்ன சின்ன செலவுகளுக்கு கூட குறிப்பு எழுதி வைத்திருந்தார் சபூரா. அத்தனை நேர்த்தியான கணக்கில் குளறுபடிகள் நடந்திருந்தது சபூரா வீட்டை விட்டு போன அந்த மாதத்தில் மட்டும் தான். என்னவாக இருக்கும் என மூளையை போட்டு கசக்கினான் ரிஸ்வி.

பேரனுக்கு தேநீர் கொண்டு வந்தார் கமர். " உன்னை மண்ட காய விட்டுட்டாளா என் பேத்தி" என சிரித்தவரின் மடியில் சலுகையாய் தலை வைத்தான் ரிஸ்வி.

" செம.... டென்ஷனாகுது கன்மா.... எல்லாம் சபூரா மாமிக்கு எதிரா தான் இருக்கு. ஆனா மனசு அடிச்சி சொல்லுது அவங்க எடுத்திருக்க மாட்டாங்க னு...."

" இதையே தான் அமீரும் சொல்லுவான். எத்தனை முறை இந்த கணக்கு புஸ்தகத்தை பார்த்துட்டு புலம்புவான் தெரியுமா?" என பெருமூச்சு விட்டவர்," ஆனா ரிஸ்வி.... எனக்கு என்னவோ பிரச்சனை இந்த கணக்குல இல்லையோ னு தோணுது." என்றார் கமர்.

" ஆனா பிரச்சனையோட ஆரம்ப புள்ளி இது தானே? நாம இங்கிருந்து தானே தொடங்கணும் கன்மா..."

" என்னவோ போ... ரிஸ்வி நம்ம குடும்பத்தை புடிச்ச பீடை எப்போ தான் ஒழியுமோ" என்பதற்கும் தில்லு உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

" காசிம் காகா வந்திருக்காங்க...." என்றாளவள்.

" காசிம் மருமகனா? ரெண்டு வருஷம் வீட்டு பக்கம் வராத மனுஷன் இப்போ எதுக்கு வந்திருக்காங்க னு தெரியலயே.... எதுவாயிருந்தாலும் என் மவள தானே கொம்பு சீவி அனுப்புவாரு....." என கமர் அங்கலாய்க்க,

" போய் பேசுனா தானே தெரியும் கன்மா. போங்க" மடியிலிருந்து எழுந்த படி கூறினான் ரிஸ்வி.

" நீயும் வாயேன் ரிஸ்வி. எனக்கு படபட னு வருது"

" அய்யோ.... வேற வினைய வேணாம். நீங்க போய் பேசுங்க கன்மா. நா உள்ளே இருக்கேன் னு காட்டிக்காதீங்க. அப்புறம் அவன் வந்து வாங்க னு கேட்கல.... என்னை மதிக்கல னு பாட ஆரம்பிச்சிருவாரு" என ரிஸ்வி சிரிக்க, கமரும் சிரித்த படி டீயை அவன் கையில் எடுத்து கொடுத்து விட்டு வெளியே சென்றார்.

" வாங்க மருமவனே.... வராதவங்க வந்திருக்கீங்க.... ஆச்சரியமா இருக்கு" என வரவேற்றார் கமர்.

" என்ன மாமி.... வீட்டுக்கு வரலனா ஒரேயடியா மறந்திடுவீங்களோ...." ஆரம்பமே காரசாரமாக இருந்தது.

" அப்படியெல்லாம் இல்லயே மருமவனே.... என்னாச்சு?" என்றவரின் பார்வை மகளை தேடியது.

" அவ வரல மாமி.... நா தான் நாலு வார்த்தை கேட்டுட்டு போலாம் னு வந்தேன்" என்றவரை கேள்வியாக பார்த்தார் கமர்.

" என்ன மாமி நடக்குது நம்ம வீட்ல.... ரிஸ்விக்கும் அந்த மைசராக்கும் கல்யாணமாம்..." காசிம் கேட்ட விதத்தில்
' நமக்கு கல்யாணம்னா இவருக்கு என்ன வந்தது?' என ரிஸ்வி நெற்றியை சுருக்கினான்.

" ஆமா மருமவனே.... நேத்து அஸ்மா கிட்ட சொன்னனே...." மகளிடம் மஹரை பற்றி மட்டும் கமர் கூறவில்லை. காசிம் சபூராவிற்கு எதிராக கொடி பிடிப்பவர் என்பதால் கூறவில்லை. ஆனால் கல்யாணம் என்றதுக்கே இப்படி வந்து வம்பு வளர்ப்பார் என கமர் நினைக்கவில்லை.

"அதெப்படி மாமி..... இத்தனை வருஷமா வெட்டுவேன் குத்துவேன் னு ரசியா மச்சி குதிச்சிட்டு இருந்தாங்க இப்போ அந்த சபூரா கூடவே சம்பந்தம் வைக்குறாங்க..."

"அது வந்து மருமவனே.... சின்னஞ்சிறுசுங்க விருப்பப்பட்டுச்சிங்க..."

" அதுக்கு? என்னவோ நா ஒருத்தன் தான் உலகத்துலயே தப்பு பண்ண மாதிரி இன்னைக்கு வரைக்கும் எல்லாரும் முறைச்சிட்டு திரியுறீங்க.... இப்போ சின்னதுங்க விரும்பிட்டா பணத்தை எடுத்துட்டு ஓடுனத எல்லாம் மறந்திடுவீங்க. அப்படி தானே?"

" என் மருமக அப்படியெல்லாம் செய்திருக்கமாட்டா மருமவனே.." அவசரமாய் மறுத்தார் கமர்.

" இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி சொல்லிட்டிருப்பீங்க? என்னை எப்படி விலக்கி வைச்சிருக்கீங்களோ அதே போல அவங்களையும் விலக்கி தான் வைக்கணும்."

" அவ இத்தனை காலமா ஒதுங்கி தானே இருக்கா மருமவனே.... இன்னும் அவ கஷ்டபடனுமா?"

" அப்போ நா மட்டும் ஏன் ஒதுங்கி இருக்கணும். கடை பொறுப்பை எனக்கு தர சொல்லுங்க. முன்னே மாதிரி வீட்டு நிர்வாகத்தையும் நான் பார்த்துக்குறேன்." காசிம் நயமாய் காய் நகட்டினார். இத்தனை நேரம் சம்பந்தமில்லாமல் காசிம் ஏன் மூக்கை நுழைக்கிறார் னு என யோசித்துக் கொண்டிருந்த ரிஸ்விக்கு இப்போது காரணம் புரிந்தது.

" அதான் ரிஸ்வி பொறுப்பா எல்லாம் பார்த்துக்குறானே...."

" அவரு பார்த்து கிழிச்சது போதும் மீதிய சென்னையில கிழிக்க சொல்லுங்க மாமி...." காசிம் இளப்பமாய் கூற,

" இனிமே நீங்க கிழிக்க போறீங்களா சாச்சா?" என்றபடி ரிஸ்வி வெளியே வந்தான். காசிம் அவனை இங்கு எதிர்பார்க்கவில்லை போலும். விதர்விதிர்த்து போனார். மருமகனின் முகம் போன போக்கில் கமர் இவருக்கு இவன் தான் சரி என வாயை மூடிக்கொண்டார்.

" என்ன சாச்சா.... பதிலையே காணோம். இவ்வளவு நேரம் சத்தம் காதை கிழிச்சது?" சோபாவில் சாய்ந்து அமர்ந்த படி நக்கலாய் கேட்டான் ரிஸ்வி.

" என்ன ரிஸ்வி... பெரியவங்க னு ஒரு மட்டு மரியாதை இல்லயா"

" அதெல்லாம் பெரியவங்க பெரியவங்க மாதிரி நடத்துக்கும் போது கண்டிப்பாக கொடுப்பேன் சாச்சா.‌.." அமர்த்தலாக கூறினான் அவன்.

" உன்னை மாதிரி பொடி பயலுக்கு எல்லாம் பொறுப்பு கொடுத்தா இப்படி தான் இருக்கும். இங்க பாரு ரிஸ்வி.... இது ஒன்னும் உன் கடையில்ல சொந்தம் கொண்டாட.... அதான் கடையிலேருந்து சுரண்டி சுரண்டி நீ தனியா ஒரு கடை வைச்சிட்டியே.... அப்புறம் என்ன?" என காசிம் நக்கலாய் கூற,

" யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்றீங்க சாச்சா? உங்கள மாதிரி திருட்டு கணக்கு எழுதி பொழைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை....கடையை சுரண்டி நஷ்டமாக்குனது யாரு னு இந்த ஊருக்கே தெரியும்...." கோபமாய் கர்ஜித்தவனின் மூளைக்குள் ஏதோ நெருடியது.

இனிமேலும் இவனிடம் வாய் கொடுத்தால் வாங்கி கட்டி கொள்ள கூடும் என நினைத்தவர் கமரிடம் திரும்பி," இங்க பாருங்க மாமி..... தப்பு பண்ண சபூரா இந்த வீட்டுக்குள்ள வரணும் னா கடை பொறுப்பும், வீட்டு பொறுப்பும் என்கிட்ட வரணும். நா இந்த வீட்டுக்குள்ள வர கூடாதுனா சபூராவும் வர கூடாது.... யோசிச்சி முடிவெடுங்க...." என கிட்டத்தட்ட மிரட்டி விட்டு போனார் காசிம்.

அவர் போனதும்," சை.... இந்த மனுஷன் என்னைக்கு இந்த வீட்டுல காலெடுத்து வச்சாரோ அன்னைக்கு போச்சு இந்த வீட்டு நிம்மதி. நாளைக்கு பாரு... அஸ்மா வந்து மல்லுக்கு நிற்பா..." என புலம்பினார் கமர்.

" என்னைக்கு காலெடுத்து வச்சாரு....." ஏதோ யோசனையிலிருந்த ரிஸ்வி கேட்டான்.

" என்ன கேட்குற ரிஸ்வி...."

" இல்ல.... காசிம் சாச்சா எப்போ இங்க வந்தாரு னு கேட்டேன் கன்மா"

" அது கல்யாணம் முடிஞ்ச ஒரு ஆரெழு மாசத்துலயே வந்துட்டாரே.... வந்த நாளிலிருந்து நம்ம கடை மேல தான் கண்ணு."
" சபூரா மாமிக்கும் இவங்களுக்கும் ஏதாவது பிரச்சனை நடந்திச்சா?"

" அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கலயே ரிஸ்வி.... ஆனா சபூரா போன நாளிலிருந்து இவரும் அவள கரிச்சி தான் கொட்டுறார். கணக்குல குளறுபடி நடந்தத இவரு தானே கண்டுபுடிச்சாரு..." கமர் நொடித்து கொண்டார்.

" கன்மா.... கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க.... சபூரா மாமி வீட்டை விட்டு போகுறதுக்கு ஒரு மாசம் முன்னாடி சாச்சா இங்க வந்துட்டாங்க.... கரெக்ட்டா?" ரிஸ்வி கேட்கவும் நெற்றி சுருக்கி யோசித்தவர்," ஆமா ரிஸ்வி.... நீ சொல்றது சரி தான்." என ஆமோதிக்க, அதற்கு பின் உண்மையை கண்டிபிடிப்பது ரிஸ்விக்கு அத்தனை கடினமாய் இல்லை .

அன்று ஞாயிற்றுக்கிழமை....

மைசரா தன் விருப்பத்தை வெளியிட்டு எட்டு நாட்கள் ஆகியிருந்தது. சபூரா பரிதவிப்பதை கண்டும் காணாமல் நடமாடிக் கொண்டிருந்தாள் சரா. அவளுக்கும் மனதில் ஒரு ஓரத்தில் இனம் புரியாத பயம் இருக்க தான் செய்தது. அன்னையும் மகளும் இறைவனிடமே தஞ்சம் புகுந்திருந்தனர். ரிதா இருவருக்கும் ஆறுதல் கூறிய படி இருந்தாள். அவள் இருப்பதால் மட்டுமே சற்று உயிர்ப்புடன் இருந்தது வீடு.

காலையில் கமர் போன் செய்து மாலை மொத்த குடும்பமும் வர போவதாக கூற பரபரப்பு தொற்றி கொண்டது சபூராவிடம். ரிஸ்வி எதை கண்டுபிடித்திருப்பான். கண்க்கை பற்றி கேட்டாலே பதில் கூற முடியாது. ஒருவேளை அவன் நம் வீட்டில் நடந்ததை கண்டுபிடித்திருந்தால்.....

யோசனையோடு அவர் நடமாட, விவரமறிந்த சிறியவர்கள் தான் பம்பரமாய் சுழன்றுக் கொண்டிருந்தார்கள். மதியமே யாஸ்மின்னும் வந்துவிட்டாள். மனதில் கனமிருந்தாலும் விருந்தினரை உபசரிக்க சிற்றுண்டிகள் தயாராகி கொண்டிருந்தது.

மாலை மொத்த குடும்பமும் வந்திறங்கியது. ரிஸ்வி, காசிம் குடும்பம் தவிர....

வந்தவர்களை உபசரித்து கொண்டிருக்க, ரிஸ்வி மெல்ல கதவை தட்டினான். அனைவரும் பேச்சு சுவாரசியத்தில் இருக்க, நொடிக்கு நொடி அவனை எதிர்பார்த்திருக்கும் மெஹருக்கு மட்டும் அது கேட்டதோ? விரைந்து வெளியே வந்து பார்த்தாள் மெஹர்.

திருச்சியில் பாத்தியா அன்று அணிந்திருந்த ரோஜா நிற அனார்கலி சுடிதாரை அணிந்திருந்தாள் அவனது மெஹர். அன்று அவளை விழுங்குவதை போல பார்த்தது மன்சூர் என்றால், அணுஅணுவாக ரசித்தது ரிஸ்வியின் ஒரு ஜோடி கண்கள். அவனை பார்த்ததும் அன்றில்லாத பரவசம் அவள் முகத்தில்.

" வாங்க...." என மென்குரலில் வரவேற்ற, கையிலிருந்த பையை நீட்டினான் ரிஸ்வி. அன்று காரில் வைத்து தனது காதலின் அச்சாரமாய் அவன் நீட்டிய பை. கண்ணெல்லாம் கலங்கி விட்டது அவளுக்கு. இத்தனை நாள் மறுத்த காதலை ஆசையாய் வாங்கி கொண்டாள்.

படியில் யாரோ பேசியபடி வரும் அரவம் உணர்ந்து பார்வையை திரும்பியவளின் உடல் விரைத்தது வந்த நின்ற நபரை பார்த்து. மன்சூர் தான் வந்திருந்தான். தன் கண்ணியத்தை குலைத்தவனை எரிப்பதை போல் முறைத்தாள் மைசரா. மன்சூருக்கோ எச்சில் கூட தொண்டையில் இறங்கவில்லை. யாரோ எவரோ என அவன் செய்த காரியம் குடும்பத்தின் முன் அவனை கேவலப்படுத்தியதை மறக்க முடியுமா என்ன? பின்னேயே காசிம் வர, சம்பிரதாயமாக வரவேற்று விட்டு உள்ளே சென்று விட்டாள் மைசரா.

ரிஸ்வி காசிம், மன்சூரோடு நுழைவதை கண்டு ஆச்சரியமாகினர் வீட்டு மக்கள்.
" வாங்க மருமவனே.... நா கூப்பிட்டப்போ வர மாட்டேன் னு சொன்னீங்களே" என்றார் கமர்.

" ரிஸ்வி... இவரை எதற்கு இங்க கூட்டிட்டு வந்தே?" என்றார் ரசியா. சபூராவோ காசிமை வெறிக்க, மரியாதை இல்லாத இந்த இடத்திற்கு ஏன் தான் வந்தோமோ என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் மன்சூர்.

" பிரச்சனையோட ஆணிவேரே இவர் தானே மா?" அப்போ அவர தான் கூட்டிட்டு வர முடியும்." என்றபடி ரிஸ்வி அமர, சபூரா தவிர அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டு விழித்தனர். தன் முந்தானையால் வாய் பொத்தி அழுதார் சபூரா‌.

மன்சூருக்கோ கோப கோபமாய் வந்தது. " வாப்பா எதுவும் செய்யல. தப்பெல்லாம் என்னோடது தான் கன்மா. ரிஸ்வி காகாவும், மைசரா மச்சியும் இருந்த போட்டோவ ரசியா பெரியம்மாக்கும், சபூரா மாமிக்கும் அனுப்பினது நான் தான். மன்னிச்சிடுங்க. மச்சி யாரு னு தெரியாம இப்படி செய்திட்டேன்." போட்டோ விஷயத்தை விசாரிக்க தான் தங்களை ரிஸ்வி கூட்டி வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்ட மன்சூர் தந்தையை விட்டு கொடுக்காமல் படபடத்தான்.

" அப்போ யாரோ தெரியாத பொண்ணுக்கு இதையெல்லாம் செய்வியா மன்சூர்" என அதட்டினார் ரியாஸ். மன்சூரோ தலை கவிழ்ந்து நின்றான்.

" மன்சூர்.... நீ செய்ததெல்லாம் ஜூஜூபி.... உன் வாப்பா செய்தது தான் மாஸ் மேட்டர்... என்ன சாச்சா?" என எள்ளலாக ரிஸ்வி கேட்க, ஏற்கனவே தலைகுனிந்து அமர்ந்திருந்த காசிம் கூனிக்குறுகி போனார்.

" சொல்லுங்க சாச்சா... என்ன தான் சபூரா மாமிக்கு நடந்த உண்மையெல்லாம் தெரிந்திருந்தாலும் உங்க வாயால விலாவாரியா சொன்னா தான் எல்லாரும் நம்புவாங்க...."

ரசியா ஏதோ பேச வர," மாம்.... காசிம் சாச்சா வந்து எல்லாத்தையும் சொல்லணும னு நா நினைச்சதே உங்களுக்காக தான். வெயிட் பண்ணுங்க..." என கையுயர்த்தி அமர்த்தினான்.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமை 👌👌👌, ரிஸ்வி சூப்பர் 👌👌👌, தப்பு செய்தது யார் என்று தெரிந்து கொண்டு அவரைய் கையோடு உண்மையை கூற தன் தாய், மாமி முன் நிறுத்தி விட்டானே கரிம் என்ன சொல்ல போகிறாரோ 🤭🤭🤭🌺🌺🌺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top