• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 56(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
மருமகள்களுக்கு பதில் கூற முடியாமல் குற்றவாளியாய் கூனி குறுகி போனார் ரசியா. பிள்ளைகளின் கேள்விகள் அவரது உயிரை வாட்டியது.

மனதில் மிகுந்த ஆற்றாமையில் ஆளாளுக்கு காசிமை சாட, அவனோ உயிரோடு இறந்துக் கொண்டிருந்தான். கடைசி வரை பிறரை ஏய்த்தே வாழ்ந்து விடலாம் என்ற அவனது வாழ்க்கை பாடம் இன்று பொயுற்று போனது. வயதோடு அவன் செய்த பாவங்களெல்லாம் இப்போது வரிசை கட்டி நின்றது. ஏவுகணைகள் போல கேள்வி கணைகளும், வசவுகளும், அவனை தாக்க, தலைகுனிந்து நிற்பதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை அவனால். என்றுமே காசிமிடம் பிரச்சனையை நேருக்கு நேராக நின்று எதிர்கொள்ளும் வழக்கமில்லையே....

" நா அன்னைக்கே அஸ்மாகிட்ட தலைபாடா அடிச்சிக்கிட்டேன்.... இந்த பொறுக்கி வேணாம் னு.... கேட்டாளா.... என் புள்ளைக்கு வாப்பா வேணும் னு சொல்லி அவ தலையில அவளே மண்ணை வாரி போட்டுக்கிட்டா...." ரசியா மனம் ஆறாமல் பேச, இதென்ன புதுக்கதை என விழித்தான் மன்சூர்.

அவனை புரிந்து காசிம் அஸ்மாவை தலாக் சொல்ல போவதாக மிரட்டியதையும், ரசியா தலையிட்டு அதை சரி செய்ததையும், அஸ்மா கூறிய முடிவையும் சுருக்கமாக கூறினான் ரிஸ்வி. மன்சூருக்கு கேட்க கேட்க வெறியேறியது. தனக்காக இவனை ஏற்றிருக்கிறாரா நம் தாய்? என உணந்தவனால் தன் தாயிக்கு நடந்த அநீதிகளை பொறுக்கவே முடியவில்லை.

' இவனை யா..... இந்த ஈன பிறவியையா.... தான் இத்தனை காலமும் தந்தை என தலையில் தூக்கி வைத்து ஆடினோம்? இவன் பேச்சை கேட்டு குடும்பத்தில் எத்தனை எத்தனை குழப்பங்களை செய்திருக்கிறோம்? தன் தாயை இவன் இழிவுபடுத்தியதே போல தானே நானும் மற்ற பெண்களை இழிவுபடுத்தினேன்?' அவனது தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.அவனின் ஆண் என்ற ஆவணம் அந்த நொடி அழிந்தே போனது. உடல் இறுக அப்படியே அமர்ந்திருந்தான்.

ரிஸ்விக்கு அவனை பார்க்க பாவமாக தான் இருந்தது. மன்சூரின் மனநிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. முதலில் அவன் மன்சூருக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம் என்று தான் நினைத்தான். ஆனால் மன்சூரும் காசிமை போலவே ஆகிவிட கூடாது என்பதற்காகவும், இனிமேலும் காசிம் மகனை தவறாக பயன்படுத்தி விட கூடாது என்பதற்காகவும் தான் இன்று மன்சூரையும் அழைத்து வந்திருந்தான்.

மன்சூரின் தோளை தட்டிக் கொடுத்தான் ரிஸ்வி. அந்நேரத்தில் அவனுக்கு அது பெரும் ஆறுதலை கொடுத்தது. எத்தனையோ முறை ரிஸ்வியை வெளிபடையாகவும், மறைமுகமாகவும் மன்சூர் எதிர்த்திருக்கிறான். அவனுக்கு எதிராக சதி செய்திருக்கிறான் ஆனால் தான் துவண்ட இன்று அவனை அரவணைத்து நிற்கும் ரிஸ்வியை பார்க்கும் போது அவனுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது.

" காகா.... என்னால தாங்க முடியல..." என குரல் கரகரத்தான் மன்சூர். இப்போது அவனுக்கு காசிமை நிமிர்ந்து பார்க்க கூட பிடிக்கவில்லை. காசிமை அடிப்பதாலோ, கேள்வி கேட்பதாலோ நடந்ததை எதையும் மாற்ற முடியாதே என ஆயாசமாய் கண் மூடினான். அவனை பார்க்க அங்குள்ளவர்களுக்கு பாவமாக இருந்தது. அந்த கோபமும் காசிம் மீது தான் திரும்பியது.

" படுபாவி மனுஷன்.... என் குடும்பத்தையே சீரழிச்சிடீரே.... உமக்கு பொண்ணையும் கொடுத்து, வாழ வசதியையும் செய்து கொடுத்து, நீரு செய்ற அட்டூழியத்தையும் பொறுத்து கிட்டு வாழ்ந்தோமே..... அதுக்கு நல்ல பரிசை எங்களுக்கு கொடுத்துட்டீரு.... யா அல்லாஹ்... என் புள்ளைங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருக்குங்க...... நா இருந்தும் எதுவும் செய்ய முடியலயே..." என அரற்றினார் கமர். அந்த குடும்பத்தின் ஆலமரம் அடித்த புயலில் விழவில்லை என்றாலும் ஆடி தான் போனது.

" ஏன் மச்சி.... போயும் போயும் இந்த நாயிக்கு பயந்தா இத்தனை காலமும் ஒதுங்கியிருந்தீங்க?" ரசியா மனம் பொறுக்காமல் சபூராவை பார்த்து கேட்டார்.

"பின்ன... அவ எப்படி வருவா? சொல்லு ரசியா.... எப்படி வருவா? தேள் கொடுக்கு மாதிரி வார்த்தையாலயே அவ மனச கொட்டி கொன்னுருக்கியே? அவ எப்படி நம்மள தேடி வருவா? அவளுக்கு அவுசாரி பட்டம் கொடுத்துட்டு போயிருக்கிறியே.... அவ நம்ம படி வாசல மிதிப்பாளா?" கமர் கோபமாக கத்தினார்.

ரசியா விக்கித்து பார்க்க," சபூரா நம்ம வீட்டுல காலெடுத்து வச்ச நாளையிலிருந்து ஒரு தடவை ஒரே ஒரு தடவை அவள பற்றி நல்லதனமா பேசியிருப்பியா? எப்பவும் அவள கரிச்சி தானே கொட்டுவே? கொஞ்சம் நீ பொறுமையா இருந்திருந்தா.... அவள நம்பியிருந்தா.... அவளுக்கு இவ்வளவு பெரிய கொடுமை நடந்திருக்குமா? என் பேத்திங்க சொந்தம் பந்தம் தெரியாமலே வளர்ந்திருக்குமா?" சபூராவின் மனதில் கனன்று கொண்டிருக்கும் கேள்விகள் யாவும் கமரிடமிருந்து வந்து விழுந்தன.

தான் செய்த தவறு புரிந்து தலை கவிழ்ந்து நின்றார் ரசியா. தாயின் ஒவ்வொரு சொல்லும் மனதை ரணமாய் கிழித்தது.சிறுவயது முதலே வசதி, அந்தஸ்து, குடும்ப பாரம்பரியம் என மிடுக்காக நடக்காதே, கோபத்தில் வார்த்தைகளை கொட்டாதே, யாரையும் இழிவாக பேசாதே என கமர் அதட்டிய போதெல்லாம் அதை அலட்சியமாக கடந்தவரால் இப்போது அப்படி செய்ய முடியவில்லை. அவரது ஆவணவமும், கர்வமும், செருக்கும் சபூராவின் பொறுமையிலும், தியாகத்திலும் அடிபணிந்தது.

ரசியாவின் ஓய்ந்த தோற்றம் மனதை பிசைந்தாலும் அவரை ஆசாத்தும், ரிஸ்வியும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். யோசிக்காமல் கொட்டிய வார்த்தைகளுக்கும், செய்த செயலுக்கும் எதிர்வினை உண்டல்லவா?

" என் மருமக பத்தர மாத்து தங்கம் னு நா எப்பவும் சொல்றது உண்மை ஆயிடுச்சு பார்த்தியா ரசியா? அவ உனக்கு வசதி குறைஞ்ச மாப்பிள்ளைய பார்த்திட்டாள் னு தானே அவ மேல இவ்ளோ வன்மம்? பாரு.... அவ தேர்ந்தெடுத்த என் மூத்த மருமகன்.... உன் மாப்பிள்ளை எப்படி தலை நிமிர்ந்து நிற்கிறாங்க? ஊருலயே பெரிய குடும்பம், வசதியான மாப்பிள்ளை னு நீ உன் தங்கச்சிக்கு தேர்தெடுத்த இவரு எப்படி தலைகுனிந்து நிற்குறாரு? எந்த விதை முளைக்கும்.... எந்த விதை முளைக்காது னு உன்ன மாதிரி வசதியா பொறந்து, சொகுசா வளர்ந்தவளுக்கு தெரியாது. சபூரா மாதிரி கஷ்டத்திலயே பொறந்து, வறுமைல வளர்ந்து வாழ்க்கையோட போராடுனவங்களுக்கு தான் அந்த சூட்சுமம் புரியும். ஏழைகள கேவலமா நினைக்காத ரசியா..... சொர்கத்துல ஏழைகள் தான் அதிகம் இருப்பாங்க னு நம்ம நபியே சொல்லிருக்காங்க.‌" அத்தனை கால ஆற்றாமையை கொட்டி தீர்த்தவர் அயர்ந்து அமர்ந்தார்.

ரசியா கைகளால் முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழுதார். காசிம் இத்தனை பெரிய சதி திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறான் என்றால் அதற்கு மிக முக்கிய புள்ளி நானல்லவா? என்னுடைய முன் கோபமும், சபூரா மீதான இழிவான எண்ணமும் தானே காரணம்? என நினைத்து மருகினார். காசிம் செய்த குற்றத்திற்கு நிகரான குற்றம் தானும் செய்திருக்கிறோம் என வருந்தினார். அவரவர் அவரவர்களின் உணர்வுகளோடு உழன்று கொண்டிருக்க, கதறியழும் மனைவியை ஆறுதலாக தோளணைத்துக் கொண்டார் ஆசாத். ரிஸ்வியும் அன்னையின் கரத்தை ஆதரவாக பற்றிக் கொண்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவர், "ரிஸ்வி..... நா மச்சிய சந்தேகப்பட்டதென்னவோ உண்மை தான். ஆனா சீக்கிரமே என் மனச நா மாத்திக்கிட்டேன் பா...." என்றவருக்கு உணர்ச்சி பெருக்கால் அதற்கு மேல் பேச முடியவில்லை. மனைவியின் தோளை ஆதரவாக தட்டி கொடுத்தார் ஆசாத்.

அங்கு அழுகையில் விசும்பும் சப்தங்கள் மட்டுமே கேட்டது.யாரும் யாருக்கும் ஆறுதல் கூறும் நிலையில் இல்லை. இது மகிழ்வான தருணமா துக்கமான தருணமா என்று கூட புரியவில்லை. பல வருடங்களாக தேக்கி வைத்த வேதனையாதலால் மெல்ல மெல்ல தான் அவர்களின் மனங்கள் சமன்படும். நடந்து விட்ட கொடுமையை யாராலும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. அதை ஏற்றுக் கடந்து தான் வர வேண்டும்.

காசிமுக்கு முள் மேல் நிற்பது போல இருந்தது. வாயை திறக்கவே அத்தனை பயம். 'உன் சங்காத்தமே வேண்டாம் என அலறி ஒதுங்கிய அண்ணன்களை போல், ' தீடீர்னு இப்படி காசை கொடுத்து போக சொன்னா நா எங்க போவேன்? உன்ன கை விடமாட்டேன் னு சொல்லி தானே அழைச்சிட்டு வந்தீங்க' என நியாயம் கேட்டு அடி வாங்கி சென்ற கள்ளகாதலியை போல் 'இப்படியே இருந்திடலாம்னு கனவு காணாத காசிம்.... ஒரு நாள் இதே நிலைமை உனக்கு வரும்' என சபதமிட்டு சென்ற சபூராவும் திரும்பி வரமாட்டாள் என்றே நினைத்திருந்தான். ஆனால் நிலைமை இப்படி தலைகீழ் ஆகும் என எண்ணவில்லையே....

மாமியார் வீட்டில் இருப்பதற்காக காசிம் எத்தனையோ சூழ்ச்சிகளை செய்தான். ஆனால் இன்று அனைத்தும் பொய்த்து போனது. முகத்திரை கிழிந்து கேவலபட்டு நிற்கும் இந்த தருணத்தில் எங்கேயாவது போய்விடலாமா? இவர்கள் மத்தியில் வாழ முடியாது என மனம் தடதடக்கிறது. ஆனால் இப்போது மாமியார் வீட்டை தவிர வேறு போக்கிடமில்லையே..... உற்றார் உறவினர்கள், சொத்து சுகம் எதுவும் இல்லையே.... கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளையும் கூட பகை பாராட்டுவார்களே.... முதுமை தொட்டு விட்ட காலகட்டத்தில் வாழ்க்கையை தனியே ஓட்டிட முடியுமா? இனி என்ன செய்வேன்? முதன்முறையாக கலக்கம் கொண்டான் காசிம். உழைக்கும் வயதை உல்லாசமாக கழித்தவனுக்கு ஓயும் வயது பூதாகரமாக தெரிந்தது.

" எ...எ... என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க...." மிக நைந்த குரலில் கூறினான் காசிம். உணர்ந்து சொன்னானா பயந்து சொன்னானா அவனுக்கே தெரியாது.

அவன் பேசவும் கையை உயர்த்தி தடுத்த கமர், " வேணாம்.... நீங்க எந்த மன்னிப்பும் கேட்க வேணாம்... உங்கள மன்னிக்கிற மனசு இங்க யாருக்கும் இல்ல..." என்றார் வெறுப்பாக.

" இல்ல மாமி... அது வந்து..."

" ப்ச்... நீங்க மன்னிப்பு கேட்கனும்னா சபூரா கிட்ட கேளுங்க.' என்றுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.

காசிம் சபூராவை கலக்கமாக ஏறிட, சபூராவோ நிமிர்ந்து அவனை நேருக்கு நேராக பார்த்தார்.

- மழை வரும்...
தங்கள் கருத்துக்களை எதிர்நோக்கும்

- பர்வீன்‌மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top