• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 57 (2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
" ஸாரி மன்சூர்.... நீ என் கிட்ட மன்னிப்பு கேட்குற நேரத்தில இப்படி பேசலாமா னு தெரியல... ஆனா என் மனசுல பட்டதை நான் சொல்லிட்டேன்" என்றாள்.

" பரவாயில்லை மச்சி.... இனி நாம நல்ல நண்பர்களா இருப்போம்" என்று விட்டு எல்லாரிடமும் சொல்லி கொண்டு ரிஸ்வியை மனமார அணைத்து வாழ்த்தி விட்டு கிளம்பினான்.

சற்று நேரம் அமைதி நிலவ," நடந்தது நடந்து போச்சு.... நடந்தது எல்லோருக்குமே வேதனையான விஷயம் தான். ஆனா அதையே நினைச்சிட்டு இருந்தா மனசுல நிம்மதி இருக்காது. இனி வர்ற காலமாவது சந்தோஷமான காலமா இருக்கட்டும். அதுக்கு முதல் படியா நம்ம ரிஸ்வி மைசராவோட கல்யாணம் நடக்கட்டும். பெரியவங்க பிரச்சனையால சின்ன பிள்ளைங்க மருகுனது போதும். நாம கல்யாண விஷயத்த பேசி முடிப்போமே" என சூழ்நிலையை இதமாக்கினார் சனோபர்.

" ஆமா.... இனிமேயும் என் பிள்ளைங்கள பிரிச்சி வைக்க முடியாது" என்ற ரசியா உளமாற சராவை அணைத்து உச்சி முகர்ந்தார்.

" இந்த மாமி மேல இன்னுமும் கோவமா இருக்கியா செல்லம்?" கெஞ்சலாக வினவினார்.

" என் உம்மாவ நீங்க தரக்குறைவா பேசும் போது உங்க மேல கோபம் வந்தது தான். ஆனா நடந்தை எல்லாம் கேட்டப்ப உங்க கோவத்திலயும் நியாயம் இருக்கறதா தான் எனக்கு தோணிச்சி மாமி. ஆனா நீங்க கொஞ்சம் நிதானமா யோசிச்சி இருந்தா நிறைய அநியாயங்கள தவிர்த்திருக்கலாம் னு தோணுது மாமி...." என தன் மனதிலுள்ளதை மறைக்காமல் கூறி தான் ரசியாவின் மருமகள் என்பதை நிரூபித்தாள் மைசரா.

" உண்மை தான் டா.... இந்த சின்ன வயசுல உனக்கிருக்குற பொறுமையும் பக்குவமும் எனக்கில்லயே ராஜாத்தி.... வருஷகணக்கா பிரிஞ்சி கிடந்த குடும்பத்த அழகா ஒன்னு சேர்த்திட்டியே..." என பாராட்ட

" ம்.... மண்டைய குடைஞ்சி உண்மையை கண்டு பிடித்தது நானு.... பாராட்டு அங்கேயா..." என பெருமூச்சு விட்டான் ரிஸ்வி.

" நீ சொல்றது சரி தான் சரா. ஆனா ரசியா சபூரா வீட்டில கோபமா பேசிட்டு வந்த பிறகு நிதானமா தான் யோசிச்சிருக்கா...

காசிம் ஊர் உறவுக்கு முன்னாடி சபூரா லாத்தாவோட மானத்தை வாங்கணும்.... அப்படி லாத்தாவோட நல்ல பேரை கெடுத்திட்டா.... ஒருவேளை லாத்தா திருச்சி வந்து உண்மைகள சொன்னாலும் யாரும் நம்பமாட்டாங்க னு யோசிச்சிருக்கான். அதை அவன் சொல்றத விட ரசியா மூலமா சொல்ல வைச்சா எல்லாரும் நம்பிடுவாங்க.... ஏற்கனவே சபூரா லாத்தா மேல கோபமா இருக்குற ரசியா.... லாத்தாவை வீட்டுக்குள்ள வரமாட்டாங்க னு ஒன்னு ஒன்னையும் அவன் யோசிச்சி தான் செய்திருக்கான்....

ஆனா அவன் நினைச்ச மாதிரி சபூரா லாத்தாவ சந்தேகப்பட்ட ரசியா, அவன் நினைச்ச மாதிரி ஊருக்குள்ள இத பத்தி பேசல.... ஏன் வீட்டுக்குள்ள கூட பேசல." என்ற ஆசாத் அன்றைய நாளில் ரசியாவின் மனநிலையை விவரித்தார். அப்போது தான் ரசியா இன்று வரை சபூரா வீட்டில் நடந்ததை யாரிடமும் கூறவில்லை என்பதை அனைவரும் உணர்ந்தனர். பெற்ற தாயிடமும், கட்டிய கணவரிடமும் கூட பகிர்ந்திடாத மாண்பை கண்டு அதிசயித்தனர்.

இன்னைக்கில்ல ரிஸ்விக்கு மைசராவை கல்யாணம் பண்ணி வைச்சி சராவ அவளோடவே வைச்சிக்கணும் னு அவ அன்னைக்கே முடிவு பண்ணிட்டா..." என்றதும் காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசத்தோடு பார்த்துக் கொண்டனர்.

" இத்தனை வருஷம் கழிச்சி குடும்பத்தோடு சேர்ந்தும் சபூரா லாத்தா அன்னைக்கு நடந்ததுக்கு விளக்கம் சொல்லாம ஒதுங்கியிருந்தது தான் ரசியாவ ரொம்பவே கோவபடுத்திடுச்சு. லாத்தாவோட மௌனம் நடந்தது எல்லாம்ன்றது போல அவளுக்கு தோண, அதை அவளால ஏத்துக்க முடியல. அதே சமயம் இத்தனை வருஷமா காப்பாத்திட்டு வந்த உண்மையையும் சொல்ல முடியல... அந்த மன அழுத்தத்தில தான் ரசியா வாயிக்கு வந்த படி எல்லாம் பேசிட்டா" என மனைவியின் மனதை படித்து காட்டினார்.

" தப்பு தான் ரசியா. நா மறுபடியும் மாமிய பார்த்த பிறகு உண்மைகள சொல்லியிருக்கணும். ஆனா என் பிள்ளைகள வைச்சி கிட்டு என்னால எதையும் சொல்ல முடியல. மாமி பேசுறதுலேருந்து மாமிக்கு நடந்தது எதுவும் தெரியல ன்னும் புரிஞ்சிச்சி... நீ நடந்ததை சொல்லலையா? காசிம் என்ன மனநிலைல இருக்கான் னு ஒன்னும் புரியல. அதுவுமில்லாம மறுநாள் ரிதாவ பார்க்க காசிமும் அஸ்மாவும் வந்தாங்க. மனமொத்த தம்பதிகள போல அன்யோன்யமா பேசிட்டு வந்தவங்க பார்த்தேன். இப்போ நடந்ததை எல்லாம் சொல்லி அவங்கள பிரிக்க விரும்பல. அதுவுமில்லாம அப்போ நம்ம வீட்டு பொறுப்பும் அவன் கிட்ட தான் இருக்கு னு தெரிஞ்சிச்சி. நா மறுபடியும் உள்ள வந்து.... அவன் மறுபடியும் நம்ம வீட்டை ஏதாவது கஷ்டபடுத்திடுவானோ னு தான் நா ஒதுங்கி இருந்தேன்" என்றார்.

" மச்சி.... நீங்க எங்களுக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு நல்ல விஷயமும் பண்ணியிருக்கீங்க... ஆனா நான் உங்களுக்கு கெடுதல் மட்டும் தான் பண்ணியிருக்கேன்...." என அழுதார் ரசியா.

இப்போது சபூரா ரசியாவை அணைத்துக் கொண்டார்.." ரசியா.... எத்தனையோ தடவை நம்ம வீட்டுக்கு வரலாமா னு யோசிச்சிருக்கேன். ஆனா நீ என்ன சொல்லுவியோ.... ஊர் என்ன பேசுமோ.... என் பிள்ளைகள் அதே எப்படி எடுத்துப்பாங்களோ னு ரொம்ப தயங்குவேன்.ஆனா நீ இன்னைக்கு வரைக்கும் என் மரியாதைய கட்டிக் காப்பாத்தியிருக்க னு நினைக்கும் போது எனக்கு வியப்பா இருக்கு." என ஆனந்த கண்ணீர் வடித்தார்‌

" போதும்.... போதும்.... போதும்.... 17 வருஷ கதைய இப்படி ஒரே நாளிலேயா பேசுறது? எனக்கு பசிக்குது கன்மா?" என்றாள் ரிதா அழுது விடும் முகத்தோடு.

" ஒரு அரைமணி நேரம் பொறுத்துக்கோ ரிதா மா.... சாச்சி சாப்பாடு ரெடி பண்ணிடுறேன். யாஸ்மின், சரா வாங்க" என சபூரா பரபரக்க,

" வேணாம் மாமி.... நா சாப்பாடு ஆர்டர் பண்ணிடுறேன்" என்றான் ரிஸ்வி கைபேசியை எடுத்தபடி.

சபூரா மறுக்க, சரா தடுக்க, ரிஸ்வியின் செயலே முடிவானது. ரிஸ்வி சாப்பாட்டை ஏற்பாடு செய்து விட்டாலும் வெகு நாளுக்கு பிறகான சந்தோஷ தருணத்தை கொண்டாடும் பொருட்டு நல்லதொரு இனிப்பை செய்ய போவதாக கூறி விட்டு சபூரா நகர, பின்னேயே மகள்களும் விரைந்துவிட்டனர்.

அவ்வளவு தான் ரிஸ்விக்கு அதன் பிறகு தன்னவளின் தரிசனமே கிடைக்கவில்லை. இனிப்பு தயாராகவும், உணவு வரவும் சரியாக இருந்தது.

பல வருடங்களுக்கு பின்னர் குடும்பம் முழுதும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சிரிப்பும் கலகலப்புமாக நகர்ந்தது அவர்களின் உணவு வேளை. அந்த சிறிய வீட்டில் உறவுகளோடு நெருக்கி பிடித்து அமர்ந்து சாப்பிடுவது‌ ரிஸ்விக்கு அலாதி அனுபவமாக இருந்தது. தன்னவள் தன்னருகே வந்தமர்வாளா என ரிஸ்வி ஏங்க, அவளோ ரசியாவின் அருகே அமர்ந்து செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள் பப்ளிமாஸாக.

புஸு.... புஸு... என காதில் புகை வந்தது அவனுக்கு.

" மச்சான்.... என்ன தான் மைசராவ அதிபுத்திசாலி னு எல்லாரும் பாராட்டினாலும்.... உங்க விஷயத்துல அவ டியூப் லைட் தான்" என சீண்டிய ரிதா," அவளை கூட்டிட்டு மொட்டை மாடி வரட்டுமா?" என பொறுப்பான காதல் தூதுவளாக கேட்டாள்.

" வேணா.... வேணா.‌.. பார்ப்போம்.... மேடம்க்கு எப்போ தான் என் கிட்ட பேச தோணுது னு...." என்றவன் உணவில் கவனமானான். சுட சுட பிரியாணியும் கிரில் சிக்கனும் சுகமாக அவர்களின் வயிற்றை நிரப்பியது.

ஒவ்வொருவராக சொல்லி கொண்டு கிளம்ப, எல்லையில்லா நிம்மதியை உணர்ந்தார் சபூரா. மகள் நெற்றியில் ஆனந்த கண்ணீரோடு முத்தமிட, தாயை ஆறுதலாய் அணைத்து கொண்டாள் மைசரா.

வானம் விடியலை எட்டும் வேளையில் தான் கமர் குடும்பம் திருச்சி சென்றடைந்தது. விடியும்வரை காத்திருந்த கமர் தன் பயண களைப்பை கூட பொருட்படுத்தாது தன் இளைய மகளின் வீட்டிற்கு விரைந்தார். மன்சூரின் மடியில் தலை வைத்து படுத்திருந்தார் அஸ்மா. இரவெல்லாம் அழுததிற்கான சாட்சியாய் முகம் வீங்கியிருந்தது. காசிம் அங்கில்லை. மகளின் ஓய்ந்த தோற்றத்தில் பதறிய கமரின் நெஞ்சில் சாய்ந்து கதறினார். ரசியாவும் பின்னேயே வந்துவிட்டார்.

முதலில் ரசியாவிடம் இப்படி ஒரு அயோக்கியனை தேர்ந்தெடுத்தற்காக சண்டை போட்டவர். பின் அவரிடமே ," நீ அன்னைக்கே அந்த பாவிகிட்டயிருந்து குலா வாங்கிடு னு சொன்னே.... நான் தான் புள்ளைய நினைச்சி அந்த நச்சு பாம்பை வீட்டுக்குள்ள விட்டேன்" என புலம்பி தீர்த்தார். இயன்ற வரை அஸ்மாவுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறிவிட்டு காசிமை பற்றி மன்சூரிடம் விசாரித்தனர்.

" தெரியல பெரும்மா( பெரியம்மா).... நா நைட் வரும்போதே அந்தாளு இங்க இல்ல. எங்கே போனாரோ தெரியல."

அஸ்மாவிடம் கணவர் குறித்து என்ன முடிவு செய்திருக்கிறாய் என கேட்கும் திண்ணம் யாருக்குமில்லை. இறைவனும், தாயை தோளணைத்து நின்ற மன்சூரும் தான் அவர்களுக்கு ஒரே தைரியம்.

தன் துயரங்களை கூறி அழுது தீர்த்த அஸ்மா பின் சபூராவை பற்றி விசாரித்தார். மன்சூர் கிளம்பிய பின் நடந்தவற்றை சுருக்கமாக விவரிக்க, தன் துயரத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு மனமார மணமக்களை வாழ்த்தினார்.

" கல்யாண வேலை எல்லாம் என் பொறுப்பு கன்மா" என குஷியானான் மன்சூர்.

" சிறப்பா செய் ராசா" என கமர் அவனை தட்டிக் கொடுத்தார்.

அதன் பின் இரண்டொரு நாட்களில் மீண்டும் அனைவரும் திருமண நாள் நிச்சயிக்க சபூரா வீட்டிற்கு சென்றனர். இம்முறை அஸ்மாவும் மன்சூரும் சந்தோஷமாய் உடன் சென்றிருந்தனர். சபூராவிடம் தன் மன்னிப்பை யாசித்தார் அஸ்மா.

மழை வரும்....
தங்கள் கருத்துக்களை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top