காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 11

Deva

Author
Author
#1
சொல்லி நிறுத்திட்டு சக்தி வச்சிருந்த சிகரெட் பாக்கெட்ல இருந்து ஒண்ணப் பத்திக்கிட்டு அவன் தொடர்ந்தான்..

"உனக்கு ஆரம்பத்துல இருந்து சொன்னாத் தான் புரியும்..சித்ரா மாலா என் சித்தி பொண்ணு..என்ன விட ரெண்டு வயசு எளையவ..அவளுக்கு மூணு வயசு இருக்கைலயே அவ அப்பா நைட்ல தோட்டத்துக்குத் தண்ணி கட்டப் போனப்ப பாம்பு கடிச்சு இறந்துட்டார்.. வசதிக்குக் குறையில்ல..தோட்டம் போக சென்டர் டவுன்ல வீடும் அதச் சுத்தி பத்துக் கடைகளுமிருக்க பொருளாதாரம் பத்தின கவலையில்ல.. எங்க பேமிலி சித்திக்கு புல் சப்போர்ட்டா இருந்தது..லீவு விட்டா சித்ர மாலா இங்க தான் இருப்பா..

அப்ப பிளஸ் டூ படிச்சுக்கிட்டிருந்தா.. இவங்க கடைல ஒண்ண வாடகைக்கு டெய்லர் ஒருத்தன் புடிச்சான்.. ஆளு பாக்க சினிமா ஆக்டர் மாதிரி அம்சமா இருப்பான்.. நடத்தையோ படு மோசம்..எப்படியோ எழவு அவன இவ லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா..ரெண்டு பேரும் மாத்தி மாத்தி லவ் லெட்டரா எழுதித் தள்ள அவனோட அப்பன் கைல அதுல ரெண்டு கெடைச்சிருச்சு..அவங்க மதமே வேற..அதோட அவனுக்குப் பொண்ணுப் பாத்து கல்யாணம் நிச்சயமும் பண்ணிட்டாங்களாம்..

அவன் அப்பன் அந்த லெட்டர எடுத்துட்டு வந்து சித்தி வீட்டு முன்னால நின்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண அவங்களுக்கு பெரிய கேவலமாயிடுச்சு..இத்தனை நடந்தும் அவன் வருவான்னு இவ எதிர் பார்த்து காத்திருக்க..அவனோ கூலா வீட்ல பாத்து வச்ச பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமனார் ஊருக்கே குடி போயிட்டான்..சித்தியோ இதுக்கு மேல வயசுப் பொண்ண வெச்சுக் காப்பத்தறது கஷ்டம்னு படிப்பப் பாதிலயே நிறுத்தி அவசர அவசரமா மாப்ள தேட ஆரம்பிச்சுட்டாங்க..

இங்கியோ இவ டெய்லருக்கு லவ் லெட்டர் குடுத்து அது பெரிய ரகளையாயி ஊரே கேளு நாடே கேளுன்னு நாறிப் போயிக் கெடக்குது..உனக்கு நம்மாளுங்களப் பத்தித் தான் தெரியுமே?ஒண்ணுன்னா ஒம்பது, ஊருதுன்னா பறக்குதுன்னு கதை கட்டுவாங்களே?அது எந்த அளவுக்குப் பறந்துச்சுன்னா இவ அவனோட படுத்து மூணு தடவ ரகசியமா அபார்சன் பண்ணிக்கிட்டாங்கற அளவுக்குப் பரவிடுச்சு.. ரெண்டு வருசம் சரியான மாப்ள கெடைக்கல.. ஒண்ணு ரெண்டு வந்தவங்களையும் ஊருப் புரளி ஓட வெச்சிருச்சு..

அந்த நேரத்துல தான் இந்த மாப்ள ஜாதகம் வந்திருக்கு.. படிப்பு பத்தாவதுன்னாலும் வசதி எக்கச் சக்கம்.. காசு ஒண்ணு மட்டுமிருந்தா எல்லாக் குறைகளையும் மூடி மறைச்சுடுமில்லையா?ஜாதகம் பொருந்தி வர தகுந்த ஆளுங்கள விட்டு சித்தி அவனப் பத்தி விசாரிச்சுப் பாக்க பையனுக்கு குடிப் பழக்கம் உண்டுன்னு கேள்விப் பட்டிருக்காங்க..சித்தி அதப் பெருசா எடுத்துக்கல.. அதுக்கு ரெண்டு காரணங்கள்..ஒண்ணு இன்னிக்குக் குடிக்காத ஆம்பளைங்கறது அபூர்வமாயிடுச்சு.. ரெண்டாவது சித்ர மாலாவுக்கு இருந்த கெட்ட பேரு..

நல்லா விசாரிக்காம அவசர அவசரமா நாள் குறிச்சு கல்யாணமும் முடிவாகி நிச்சயம் பண்ணி உப்புச் சக்கரை வாங்கி மண்டபத்துக்குப் பணம் கட்டி தாலிக் கொடிக்கு ஆர்டர் குடுத்து பத்திரிக்கை அடிச்சு ஊருக்கும்,உறவுக்கும் குடுத்திட்டிருக்கற போது அந்தத் தகவல் வருது..அந்தப் பையனுக்கு ஏதோ இதயத்துல கோளாறுன்னு..சித்தி பதறிப் போயி இந்தச் சம்பந்தத்தக் கொண்டு வந்த புரோக்கரக் கூப்பிட்டு விசாரிச்சிருக்கறாங்க..

அந்தாளு தெரிஞ்சவரு,நம்பிக்கையானவரு தான்.. ஆனா,மாப்ள வீட்டுக் காரங்க மூடி மறைச்சுச் சொன்னத அவரும் நம்பி இங்க சொல்லிட்டார்..பையனுக்கு லேசா நெஞ்சு வலி ரெண்டு தடவ வந்ததும் அதுக்கு ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட்க்கு அப்புறம் சரியாயிட்டதாவும் சொல்லி கூடவே உங்க பொண்ணப் பத்தியும் தான் நாங்க பலதும் கேள்விப் பட்டோம்.. பொறாமைக் காரங்க பலதும் சொல்வாங்க..நாம அதக் கண்டுக்கக் கூடாதுன்னு எவ்வளவு பெருந் தன்மையா நடந்துக்கிட்டோம்..உங்களுக்கு அது இல்லாம போச்ச..? உங்களுக்கு துளி சந்தேகம்னாலும் இப்பவே எல்லாத்தையும் நிறுத்திடலாம்னு பதில் வர சித்தி ஆடிப் போயி சரண்டராயிட்டாங்க..

அப்புறம் ஒவ்வொண்ணா டெய்லியும் ஒரு தகவல் மாப்ளைய பத்தி வர சித்தி எதையுமே காதுல போட்டுக்கல..கல்யாண ஏற்பாடுகள இன்னும் மும்மூரமா செஞ்சாங்க..இவளோ எது நடந்தாலும் சரின்னு விரக்தியோட உச்சிக்கே போயிட்டா... ரெண்டாவதா இவ கிட்ட யாருமே அபிப்ராயம் கேக்கவே இல்லேங்கறதே உண்மை..கல்யாணம் முடிவானதே அடுத்தவங்க சொல்லித் தான் தெரிஞ்சுக்கிட்டான்னா பாத்துக்கோ..சித்தி ஏறக்குறைய இவ கூடப் பேசறதையே நிறுத்திட்டாங்க..

..
 

Deva

Author
Author
#2
இவளுக்கு காதலும் வேண்டாம்..கல்யாணமும் வேண்டாம்..எல்லாத்தையும் தொடைச்சு எறிஞ்சுட்டு மேல படிக்க ஆசைப் பட்டிருக்கா..மெல்ல தைரியத்த
வரவழைச்சுக்கிட்டு சித்தி கிட்டச் சொல்ல இந்தக் கல்யாணம் நடக்கலேன்னா நான் செத்துடுவேன்னு கயித்த எடுத்துட்டுப் போயி தூக்கு மாட்டப் போயிட்டாங்க..இவ பயந்து நடுங்கி நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்னு காலப் புடிச்சுக் கதறியழவும் தான் சித்தி கயித்தக் கீழ போட்டிருக்காங்க..

அப்ப நான் காலேஜ்ல படிச்சுக்கிட்டிருந்தேன்.. இந்தக் காதல் ரகளையெல்லாம் எங் காதுக்கே வரல.. கல்யாணத்தன்னிக்குத் தான் ஊருக்கே வந்தேன்.. அவ கிட்டப் பேசவோ,அவ மனசத் தெரிஞ்சுக்கவோ முடியல..ஆக்சுவலா அந்தாளுக்கு பைபாஸ் சர்ஜரி பண்ண வேண்டிய அளவுக்கு ஹாராட்ல பிராப்ளம் இருந்திருக்கு..இவங்க நல்ல ஆஸ்பிடலுக்குப் போகாம ஜோசியக் காரனத் தேடிப் போயிருக்காங்க..அந்த அரை வேக்காட்டு ஜோசியன் பையனுக்கு குரு குலம் கூடி வந்திருக்கறதால கல்யாணம் பண்ணினா எல்லாம் சரியாப் போயிடும்..இல்லைன்னாலும் கல்யாணத்துக்கப்புறம் ஆபரேசன் பண்ணிக்கலாம்னு சொல்லி இருக்கான்..

இவங்களும் பையனுக்கு ஹார்ட் பிராப்ளம்னு பரவுனா பொண்ணு கெடைக்காதுன்னு ஆபரேசன் பண்ணிக்காம அவசரமா பொண்ணு தேட அந்த வெனை இவ தலைல வந்து விடிஞ்சிருக்கு.. சித்தியும் இவள வீட்ட விட்டு அனுப்புனாப் போதும்னு சரியா விசாரிக்காமையோ..இல்ல..இவளுக்கு வேற மாப்ள கெடைக்காதுன்னு பயந்தோ வந்த சில தகவல்களையும் அலட்சியப் படுத்திட்டாங்க..யோசிச்சுப் பாத்தா ஆண்டவன்ல இருந்து அம்மா,ஜோசியன்,அந்த டெய்வர்னு எல்லாருமே இவ வாழ்க்கைல தாறுமாறா பூந்து வெளையாடிட்டாங்க..

கல்யாணம் முடிஞ்சு பர்ஸ்ட் நைட்.. உள்ள என்ன நடந்ததுன்னு இன்னிக்கு வரைக்கும் யாருக்கும் தெரியாது..டாக்டர் கிட்டக் கூட இவ வாயத் திறக்கல.. இவ அந்த ரூமுக்குள்ள போன கொஞ்ச நேரத்துல இவளோட அலறல் சத்தம் கேட்டு எல்லாரும் பதறி வந்து கதவத் தட்டினா தொடர்ந்து அதே அலறல் சத்தம் மட்டுமே வந்ததால வேற வழியில்லாம கதவ கடப்பாரையால இடிச்சு ஒடைச்சு உள்ள போனோம்.."

ரவி பேச்ச நிறுத்தி மறுபடியும் இன்னொரு சிகரெட்டப் பத்த வச்சுக்கிட்டுத் தொடர்ந்தான்..

"எனக்கு சித்ரா மேல ரொம்பப் பாசம்ங்கறத விட அவளுக்கு நான்னா உசுருன்னு சொல்லலாம்.. கதவ ஒடைச்சு மொதல்ல உள்ள போனது நாந் தான்.. அப்ப நான் கண்ட காட்சியை இப்ப நெனைச்சாலும் என் ஒடம்பு பதறுது..ஒரு அண்ணன் தன் தங்கச்சிய எந்தக் கோலத்துல பாக்கக் கூடாதோ அந்தக் கோலத்துல பாத்தேன் நண்பா.. இவ அரை நிர்வாணமா கிடக்க அவன் ஒட்டுத் துணியில்லாம அவ மேல காது மூக்கெல்லாம் ரத்தம் வர பொணமா கெடக்கறான்.. இவ தன் நினைவே இல்லாம தொடர்ச்சியா அலறிக்கிட்டே இருக்கா..

எனக்கு இருந்த பதட்டத்துல துளியும் யோசிக்காம அவன ஒதைச்சுக் கீழ தள்ளி இவ மேல ஒரு போர்வைய எடுத்துப் போர்த்தினேன்..இவ வெறி புடிச்சவளா அந்தப் போர்வையத் தூக்கி வீசி அலறிக்கிட்டே இருக்கா.. இவளோட நைட்டி பல எடங்கள்ல கிழிஞ்சிருக்கு.. முகம்,கழுத்தெல்லாம் நகக் கீறல்கள்..அந்த நாய் இவள போர்ஸ் பண்ணி ஆக்ரமிச்ச போது செத்திருக்கணும்.. நான் மனசக் கல்லாக்கிட்டு இழுத்து விட்டேன் ஒரு அறை அவள..அப்புறம் தான் அவ அலறல் நின்னது.. அப்புறம் நான் குடுத்த போர்வையப் போத்திட்டுச் சொன்ன வார்த்தைங்க இவ்வளவு தான்..'அண்ணா.. என்ன உன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடு.. இல்லேன்னா உங் கையால என்னக் கொன்னுடு'

அவ்வளவு தான்..அதுக்கு மேல ஒரு வார்த்தை பேசல.. துணிய மாத்திக்கல.. போர்வைய இழுத்துப் போத்திக்கிட்டு செத்துக் கிடந்த புருசன் மேல அவன் கட்டின தாலிய கழட்டி வீசிட்டு எங்க சித்தியப் பாத்தாளே ஒரு பார்வை..அந்தப் பார்வையத் தாங்க முடியாம அப்படியே கூனிக் குறுகிட்டாங்க அவங்க..அப்புறம் வெளிய போயி திண்ணைல கண்ண மூடி உக்காந்தவ உக்காந்தவ தான்..ஒரு யோகி தவம் பண்றவ மாதிரி அசையாம உக்காந்துட்டா.. செத்தவனோட அம்மா பொலம்பி அழுத போது தான் எனக்கு என்ன நடந்ததுன்னே புரிய ஆரம்பிச்சுது..
 

Deva

Author
Author
#3
எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்ல.. செத்துக் கிடந்தவன அரிவாள எடுத்து கண்ட துண்டமா வெட்ட காட்டுத் தனமா கத்திட்டு ஓடறேன்..எல்லாரும் திகைச்சும்,பயந்தும் நிக்கறப்ப இவ எந்திரிச்சு போட்டா பாரு ஒரு அதட்டல் 'அண்ணா'ன்னு..எப்படி நின்னேன், அருவா எங்கைல இருந்து எப்படி நழுவுச்சுன்னு இந்த நிமிசம் வரைக்கும் எனக்குப் புரியல.. அசரீரின்னு சொல்லுவாங்களே?ஒடம்புல ஒவ்வொரு அணுவுலயும் பூந்து நம்மச் செயலிழக்க வைக்கற மந்திரச் சொல் மாதிரி..மரமா நின்னவனப் பாத்துச் சொன்னா..'இனிப் பிரயோசனமில்ல..வா,போகலாம்'னா.. நாங்க கெளம்பி வந்துட்டோம்..

இங்க வந்து பூஜை ரூம்ல உக்காந்தவ தான்.. யார் கூடவும் பேச்சில்ல..எப்பத் தூங்கறா,சாப்பிடறாங்கறது தெரியாது.. ஒரே நாள்ல நாலு தடவ குளிப்பா..அடுத்த நாலு நாளைக்குக் குளிக்கவே மாட்டா.. சாப்பாடும் விசித்திரம் தான்..இன்ன நேரம்னு இல்ல.. அவளா எந்திரிச்சு சாப்பிட ஆரம்பிச்சா மூணு ஆளுச் சோறிருந்தாலும் தின்னுடுவா..அப்புறம் ஒரு வாரத்துக்கு பச்சத் தண்ணி மட்டும் தான்..எப்பவாவது எங்கிட்ட மட்டும் ஒண்ணு,ரெண்டு வார்த்தை பேசுவா.. அதும் கோவிலுக்குப் போகணும்னு தோணினா மட்டும்..

அவளுக்கு இஷ்ட தெய்வம் மேட்டுப் பாளையம் வன பத்ரகாளி அம்மன்..'அண்ணா.. கோயிலுக்குப் போகணும்'னு சொல்லிட்டா இருக்கற வேலைங்கள போட்டுட்டு கார எடுத்துடுவேன்..எனக்கு அது உத்தரவு மாதிரி ! போயிட்டு வந்துட்டா மாசக் கணக்குல பேச மாட்டா..எப்பவாவது பேசுனாலும் எங்களுக்கது அருள் வாக்குத் தான்..ஒரு தடவ தறி ஓட்டற ஒருத்தன பாம்பு கடிச்சிட அவன் மயக்கமே போட்டுட்டான்..நான் அவசரமா அவனத் தூக்கச் சொல்லிட்டு கார எடுக்கப் போக இவ சைகைல என்னத் தடுத்து நிறுத்திட்டு வேப்பங் குச்சிய தளிரோட ஒடிச்சிட்டுப் போயி அவன் தலைல இருந்து கால் வரைக்கும் மூணு தடவ தடவி கண்ண மூடி ஏதோ முணு முணுத்துட்டு சடீர்னு அவன அதாலயே அடிச்சு 'ம்.. எந்திரி'ன்னு அந்த மந்திரக் குரல்ல சொன்னா பாரு..

அவன் சடார்னு எந்திரிச்சுக் உக்காந்துட்டான்.. பூஜை ரூமுக்குப் போயி திருநீறும் தீர்த்தமும் கொண்டு வந்து அவனுக்குக் குடுத்து "காரணத்தோடவே எல்லாம் நடக்குது..கோயில் கட்டிக் கும்பிடாட்டியும் பெத்த தாயையும்,கட்டின பொண்டாட்டியையும் அடிச்சு இம்சை பண்ணாத..அடுத்த தடவ ஆத்தா கை,கால் வெளங்காம பண்ணிடுவா'ன்னு சொல்ல அவன் நெடுஞ் சாண் கெடையா இவ கால்ல உளுந்துட்டான்..அது வரைக்கும் சுத்தி உள்ளவங்களுக்கு பித்தச்சியாத் தெரிஞ்சவ அந்த நொடில இருந்து சாமியாயிட்டா..

அன்னைல இருந்து இந்த ஊருல கொழந்தைங்க நலுங்குச்சுன்னா இவ கிட்டத் தான் பாடம் போட்டு மந்திரிச்சுக்க வருவாங்க.. இப்ப என்னடான்னா வெளியூர்ல இருந்தும் வர ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்களுக்கு மட்டுமில்ல..எனக்கும் அவ தான் குல தெய்வம்..சில பேரு அவளுக்குப் பைத்தியம்னு சொல்லி நல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க.. எனக்கு அதுல சம்மதமில்லாம அவ கிட்டயே அதச் சொல்லி அபிப்ராயம் கேட்டேன்..'ஒண்ணு இந்த உலகத்துல சிரிச்சு ஆர்ப்பாட்டம் பண்றவளா இருக்கணும்..இல்லாட்டி அழுது பொலம்பறவளா இருக்கணும்..ரெண்டுமே இல்லாம சுக,துக்கத்தச் சமமாப் பாவிச்சு அமைதியா இருந்தா யாராலயும் சகிச்சுக்க முடியாது..பைத்தியகாரப் பசங்க..அவங்கள விடு..உனக்கிஷ்டம்னா நான் எந்த பரிசோதனைக்கும் தயார்'னு சொன்னா..இதுக்கப்புறமும் அவள டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போக நான் பைத்தியமா என்ன?

நம்பிக்கை இல்லாதவனுக்கு அது அப் நார்மல் தான்.. ஆனா,நம்பறவனுக்கு அதுவே காவல் தெய்வம்.. ஒரு காரியமா போறேன்னா காலைல எந்திரிச்சதும் அவ கிட்டப் போயி இன்ன காரியமாப் போறேன்னு சொல்லுவேன்..சிரிச்சுத் தலையாட்டிட்டுப் போனா எனக்கு அந்தக் காரியம் சாதகமா முடியும்.. காதுலயே வாங்காத மாதிரி போனாள்னா அது உருப் பட்ட மாதிரி தான்..அவ சொல்லித் தான் பி.எல் படிச்சேன்.. அவளக் கேட்டுத் தான் இப்ப இருக்கறவர் கிட்ட ஜூனியராச் சேர்ந்தேன்....எனக்கு அவ குல தெய்வம்.. அவளால உனக்கு வந்த சங்கடத்துக்கு நான் மனசார மன்னிப்புக் கேட்டுக்கறேன்..சரி..உன் முடிவென்ன நண்பா? இருக்கறயா, கெளம்பறயா?"

துளியும் தயங்காம உறுதியா வந்தது சக்தியின் பதில்...

"இருக்கேன்......"

விதி புன் முறுவல் பூத்தது..

(தொடரும்....
 

Latest Episodes

Sponsored Links

Top