• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கிடைத்தது பாதி, எரிந்தது பாதி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
||சஹாதேவனின் ஜோதிடம் -
கிடைத்தது பாதி, எரிந்தது பாதி||

மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12 வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.

உறவையும், நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜதூதனாக அனுப்ப விரும்பினான்.

அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத் தகுதியுடையவர்களாகப் படவில்லை.

எனவே, ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான்.

''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.

எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன்.

துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல்.

நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள்.

பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள்.

அதுவும் இல்லை யென்றால், ஐந்து ஊர்களைக் கேள்.

அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள்.

எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.

''யுதிஷ்டிரா, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன்.
உங்களுக்காகத் தூது போய், நீ கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன்.

எதற்கும் தம்பிகளிடமும் த்ரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி, பீமார்ஜுனர்களைக் காணப் புறப்பட்டான் கண்ணன்.

பீமன், ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை.

சூதாட்ட மண்டபத்தில் தான் செய்த சபதம் நிறைவேற, போர் வந்தே ஆக வேண்டும் என அவன் கர்ஜித்தான்.

அதே கருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன்.

அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.

'அண்ணா, நீ தூது போவது தர்மமா?

அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே!

அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது?

உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி.

நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.

''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள்.

அதை நிறைவேற்றுவதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம்.

அவை நிச்சயம் நிறைவேறும்.

எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே!

காலம் வரும் வரை நம்பிக்கையோடு பொறுத்திரு.

நான் ஸஹாதேவனைக் கண்டுவிட்டு,

நாளை ஹஸ்தினாபுரம் புறப்படுகிறேன்.'' எனக் கூறி, ஸஹாதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன்.

அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஸஹாதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து, வரவேற்றான்.

''ஸஹாதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன்.

அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன்.

நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன்.

போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ண பிரான்.

ஸஹதேவன் சிரித்தான். ''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன்.

செய்ய முடியுமா, பார்?'' என்று ஆரம்பித்தான் ஸஹாதேவன்.

தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது.

அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.

''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் உரக்கச் சிரித்தான். ''என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?'' என்றான்.

''ஏன் முடியாது?'' என்று எதிர் சவால் விட்டான் ஸஹதேவன்.

அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன்.

பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?

ஸஹதேவன் கலங்கவில்லை.

பத்மாசனத்தில் அமர்ந்தான்.

கண்களை மூடினான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான்.

பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது.

அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.

'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’

என்பதே அந்த மந்திரம்.

ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.

''ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள்.

பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள்.

நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய். பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய்.

போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!'' என்று கூறினான் கண்ணன்.

இப்போது ஸஹதேவன் பேரம் பேசினான். ''கட்டுக்களை அவிழ்த்து விடுவதானால், எனக்கு ஒரு வரம் கொடு'' என்றான்.

''கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.

''பாரதப் போரில் குந்தி புத்திரர்களான எங்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக வரம் கொடு'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் மீண்டும் உரக்கச் சிரித்தான். ''ஸஹ தேவா! சற்று அவகாசம் தருகிறேன்.

ஏதாவது விட்டுப் போயிருந்தால், அதையும் வரத்தில் சேர்த்துக் கொண்டு வாசகங்களைச் சரியாக அமைத்து வரத்தை மீண்டும் கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.

இல்லை கிருஷ்ணா! நீ என்னைக் குழப்பப் பார்க்கிறாய்.

நான் கேட்டது கேட்டதுதான்.

பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் எங்கள் ஐவரையும் எப்படியாவது காப்பாற்றிவிடு!'' என்றான்.

''நல்லது ஸஹாதேவா.

வரம் மட்டுமல்ல. வாக்கும் அளிக்கிறேன்.

பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் உங்கள் ஐவரையும் காப்பாற்றுகிறேன்.

என்னைக் கட்டவிழ்த்து விடு'' என்றான் கண்ணன்.

ஸஹாதேவன் தியான நிலையைக் கலைத்து கண்ணனைக் கட்டவிழ்த்தான்.

கர்ணனோடு சேர்ந்து குந்திக்கு ஆறு புதல்வர்கள் என்பதை அறியாமல், 'குந்தி புத்திரர்கள் ஐவரை மட்டும் காப்பாற்று’ என வரம் கேட்டுவிட்டானே ஸஹாதேவன்.

பாவம், கர்ணனைக் காப்பாற்ற இவனும் தவறிவிட்டானே! விதி யாரை விட்டது!'' என்று எண்ணிக் கொண்டே கண்ணன் ஹஸ்தினாபுரப் பயணத்தை தொடங்கினான்.

கண்ணன் சங்கல்பப்படி, குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது.

போரின் கடைசி நாட்களில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது.

அப்போது அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி யுத்த பூமியில் வந்து, தன் மகன் கர்ணனை மடி மீது கிடத்தி, ''மகனே'' என்று கதறி அழுதாள் குந்தி.

அப்போதுதான் பாண்டவர்களுக்கு, கர்ணன் தங்கள் சகோதரன் என்பது தெரிந்தது.

அனைவரும் கதறினர்.

ஸஹாதேவனின் நினைவலைகள் பின்னே சுழன்றன.

கட்டுண்ட கண்ணனிடம் தான் கேட்ட வரமும், அப்போது அவன் தந்த வாய்ப்பும், தன் அறியாமையால் அந்த வாய்ப்பை இழந்து, ஐவரை மட்டுமே காப்பாற்ற தான் கேட்ட வரமும், அவன் நினைவுக்கு வந்தன.

தான் கற்ற சாஸ்திர அறிவு தன்னைக் காப்பாற்றவில்லை என்பதை ஒரு கணம் உணர்ந்தான்.

''ஊருக்கெல்லாம் ஜோசியமும் ஆருடமும் சொல்ல உதவிய சாஸ்திரம், எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இன்னொருவன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையே?

இதனை நான் கணிக்கத் தவறிவிட்டேனே...
இது மாயை.

கண்ணன் காட்டும் வழி ஒன்றே மெய். அதுவே உயர்ந்த சாஸ்திரம். இனி எந்த சாஸ்திரமும் வேண்டாம்'' என்று கோபத்தில் தன் ஜோதிடச் சுவடிகளை எல்லாம் கிழித்தெறிந்தான்.

அவற்றில் பல, போர்க்களத் தீயில் விழுந்து அழிந்தன.

எஞ்சியவற்றை ஸஹதேவனின் சீடர்கள் எடுத்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, விட்டுப் போன பல விஷயங்களை யூகத்தால் சேர்த்து, ஸஹதேவனின் ஜோதிட சாஸ்திரத்துக்கு மறு உயிர் தந்தார்கள்.

மறைந்தவை மறைந்தே போயின.

அதனால்தான் இன்றும் ஆரூட ஜோஸ்ய சாஸ்திரத்தில் 'ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்!

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

பகிர்வு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top