• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கைகேயியின் தாய்மை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
பகுதி −37

அயோத்திக்குள் நுழைய மறுத்த பரதன், நந்திகிராமத்தை அடைந்ததும், குலகுரு வசிஷ்டரின் அனுமதியோடு, தான் அங்கேயே தங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினான்.

வசிஷ்டரும், ராஜாங்கக் கார்யங்களில், பரதனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தானும் அந்த கிராமத்திலேயே தங்கிவிடுவதென்று முடிவெடுத்தார்..
இதைத் தவிரவும் சில முக்கியஸ்தர்களை, பரதன் தனது உதவிக்காக, உடன் வைத்துக்கொள்வதென்று தீர்மானமாயிற்று.

பரதனது குடிலில், ராமனது பாதுகைகளின் ப்ரதிஷ்டைக்காக, ஒரு சிம்மாசனம் உண்டாக்கப்பட்டது. பட்டுத்துணியால் அலங்கரிக்கப்பட்ட அந்த சிம்மாசனத்தில், ராமனின் பாதுகைகள் வைக்கப்பட்டு, குலகுரு வசிஷ்டரின் மேற்பார்வையில், அதற்குப் பட்டாபிஷேகமும் நடந்தேறியது.

ராமனின் பாதுகைகளைத் தனது தலைவனாக ஏற்ற பரதன், அதன் ப்ரதிநிதியாகத் தான் இருந்துகொண்டு, ராஜாங்கக் கார்யங்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.

ஒரு தொண்டனாக, தனது பயணத்தைத் தொடங்கிய பரதன், அரண்மனை வாழ்க்கையின் ஆடம்பரங்களைத் தவிர்த்தான்.
ராமனைப் போலவே தானும் மரவுரி தரித்தான்.

இந்த பதினான்கு வருடங்களும், தவ வாழ்க்கை மேற்கொள்ள முடிவெடுத்தவன், அனைத்து போகங்களையும், அறவே துறந்தான்.

தனது மனைவி மாண்டவியையும், தனது தாய்மார்களுடன் அயோத்திக்கே அனுப்பி வைத்து, தனது தவவாழ்க்கைக்கு எந்தவிதமான பங்கமும் நேராமல் பார்த்துக் கொண்டான்..

அயோத்தியை அடைந்த கைகேயியோ, தனக்கென ஒதுக்கப்பட்ட அந்தப்புரத்துள், மீண்டும் நுழையவே இல்லை!
அந்தபுரத்தை ஒட்டியிருந்த நந்தவனத்தில், தான் தங்குவதற்காக, ஒரு சிறிய குடிலை அமைத்துக்கொண்டாள்.

அயோத்தியின் பட்டமஹிஷியாய் இருந்ததற்கான தனது அடையாளங்கள் அனைத்தையும், துப்புரவாக விலக்கினாள்.
உடலில் ஒற்றை வஸ்திரம்... வெற்றுத்தரையில் படுக்கை...
வெறும் நீராகாரமே உணவு... வேலை ஆட்களையும் நிராகரித்தாள்.

வெளிஉலகிலிருந்து முழுவதுமாய் தன்னை ஒதுக்கியும் கொண்டாள்.

"கைகேயி" என்று ஒருத்தி இருப்பதையே அனைவரும் மறந்துபோகும்படி, தன்னை மொத்தமாய்த் தனிமைப்படுத்திக் கொண்டாள்.

சதா ராமஸ்மரணை...

"ராம" நாம ஜபமே வாழ்க்கையாய், நாளும் பொழுதும், பகலும் இரவும், மாறிமாறிப் போய் கொண்டிருந்தது..
"நாம" பலம் துணையிருந்ததால், அவளால் எல்லாவற்றையும் வெகு எளிதாக உதற முடிந்தது.

தனது நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு, ராமன் அயோத்தி திரும்பும் அந்த நந்நாளுக்காக, கணம்கணமாய் காத்திருக்க ஆரம்பித்தாள்.

இங்கே... ராமனது வனவாசம் சிற்சில சந்தோஷங்களுடனும், சிலபல சிரமங்களுடனும் நகர்ந்து கொண்டிருந்தது.
அவ்வப்போது கைகேயியின் ஞாபகம் வந்து, மனம் வருந்துகின்ற ராமனை, பக்குவமாகப் பேசி, சகஜ நிலைக்குக் கொண்டுவருவதை, சீதை ஆத்மார்த்தமாய் செய்துவந்தாள்.

சுமித்திரைக்கு அளித்த வாக்கின்படியே, அணுக்கத் தொண்டனாய் இருந்துகொண்டு, சீதைக்கும் ராமனுக்கும் பார்த்துப் பார்த்து கைங்கர்யங்களைச் செய்வதை, லக்ஷ்மணன், தனது கடமையாய் அறிந்திருந்தான்.

எத்தனை எத்தனையோ நிகழ்வுகளைத் தாண்டி, வனவாசம் இறுதிநிலையை எட்டிற்று. தன் நோக்கம் நிறைவேறுவதற்கான சமயம், நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ராமன் புரிந்து கொண்டான்.
வகுத்தபடியே, ராவணன், ஒருநாள் சீதையைக் கவர்ந்து சென்று, இலங்கையில் சிறை வைத்தான்.

தன் மனைவியை மீட்பதற்காக, பலப்பல இன்னல்களைக் கடந்து, ராவணனுடன் போர்புரிய, ராமன் இலங்கை வந்தடைந்தான்.




பகுதி − 38

ராவணணுக்குத் தன் பலம் குறித்த கர்வம் இருந்தது...
தன் படைபலத்தின் மேல் அசாத்ய நம்பிக்கையும் இருந்தது..
அதனால், "என்னை, யாரென்ன செய்துவிட முடியும்?" என்ற இறுமாப்பு மிகமிக அதிகமாய் இருந்தது.

ராமன் முதலில் ராவணனது படைகளைச் சிதறடித்தான்.
ராவணனுக்குத், "தன்னை சீண்டிப் பார்க்கவும் ஒருவனா?" என்ற படபடப்பு வந்தது.

அடுத்ததாக, அவனது வீரர்களை, ஒவ்வொருவராக வீழ்த்தினான் ராமன். இப்பொழுது, கொஞ்சம் பதைபதைத்தான் தசமுகன்.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தனது மகன் இந்த்ரஜித்தை, போர்களத்திற்கு அனுப்பி வைத்தான். எப்படியும், அவனைத் தாண்டி, தன்னை எவரும் நெருங்க முடியாது என்ற கணிப்போடு காத்திருந்தான்.

ஆனால், அவனது கணிப்பை பொய்யாக்கும் வகையில், இந்த்ரஜித், இலக்குவனால் கொல்லப்பட்டான் என்ற சேதி இடியாய் வந்திறங்கியது.

இந்தப் பேரிழப்பை ஜீரணித்துக் கொள்ளவியலாத ராவணன், ஆக்ரோஷம் மேலிட, உறங்கிக் கொண்டிருந்த தன் சகோதரன் கும்பகர்ணனை எழுப்பி, போர்களத்திற்கு அனுப்பி வைத்தான்.

உறக்கம் கலைந்து வந்தவனை, ராமன் கருணை பொங்க, மீளா உறக்கத்திற்கே அனுப்பி வைத்தான். இப்படியாக, ராவணன், முதலில் தன் படைகளை இழந்தான்...

அடுத்ததாக, தன் தனயனை இழந்தான்... கடைசியாக, தன் சகோதரனையும் இழந்தான்...

இனி தானே, ராமனை ஒரு கை பார்த்து விடுவது என்று கோபத்தோடு கூடிய தீர்மானத்துடன், தேர் ஏறி வந்தான்...
முதலில் தேரோட்டி ராம பாணத்துக்கு, இறையானான்.

அதன்பின், ராவணன் ஆயுதங்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக, தனது பாணங்களால் சிதற அடித்தான் ராமன்.


அடுத்ததாக, "இவன் ராவணேஸ்வரன்" என்று பறைசாற்றிக் கொண்டிருந்த அவனது கிரீடத்தையும் அசகாயமாகக் கொய்து எறிந்தான்.

கடைசியாக, அவன் நின்றிருந்த தேரையும் அழித்தான்..
இப்பொழுது, நிராயுதபாணியாக, ராமன் எதிரே நின்றான் இராவணன்.

இப்படி நிற்கின்ற ஒருவனைக் கொல்வது தகாத காரியம் என்று போர் நெறிமுறைகள் சொல்வதை நன்கறிந்த ராமன், ராவணனைப் பார்த்து,

"இன்று போய், நாளை வா..." என்று ஒற்றை வரியில் உயிர்பிச்சை அளித்து அனுப்பிவைத்தான்.

ராமன், தன் கூடாரத்துக்கு வந்து சேர்ந்தான்... அந்தி சாய்ந்து, மெல்ல இருள் கவியத் தொடங்கி இருந்தது. ராமனது சிந்தை முழுதும் ராவணனே நிறைந்திருந்தான்..

வாஸ்தவத்தில், இந்தக் கால அவகாசம், ராவணனுக்கு மட்டும் தேவைப்படவில்லை. அது ராமனுக்குமே தேவைப்பட்டது.

எவ்வளவு துஷ்டனாய் இருந்தாலும், அவனைக் கொல்வதற்கு, ராமனுக்கு மனம் வரவில்லை..
"எத்தனை பெரிய சிவபக்தன்!. எவ்வளவு பாண்டித்யம் பெற்றவன்! எப்பேர்ப்பட்ட வீரன்! அநியாயமாய் பெண்ணாசையால் அழிகிறானே..." பச்சாதாபப்பட்டான்.

ஒரு சொல்... ஒரேயொரு சொல்... "மன்னித்துவிடு" என்று ராவணன் வாயிலிருந்து வந்தால், அத்தனையையும் நிறுத்திவிடலாமே என்ற நப்பாசை, அவன் உள்ளத்தை அலைக்கழித்தது.

"எந்த முடிவு சரியாக இருக்கும்?" என்று தனக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தான்.
கொஞ்சம், தனிமையில் யோசனை செய்ய வேண்டியிருந்தது.

"வாயுபுத்ரா... கொஞ்சநாழி என்ன தனியா இருக்க விடு.."
ராமனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, மாருதி அங்கிருந்து அகன்றான்.

ராமனது எண்ணங்கள் பின்னோக்கிச் சுழன்றன.

"இந்த நாளுக்காகத் தானே, நான் புவி இறங்கியது..."

"இந்த அசுரனின் வதத்திற்காகத் தானே, அனைவருமே காத்திருக்கின்றனர்..."

"நான் இந்த இலக்கை அடைவதற்காகத்தானே, என் கைகேயி மாதா, அத்தனை பழிபாவங்களையும் வலிய ஏற்றாள்?"

"இதோ... இந்தக்கணம் வரை, அனைத்தும் இழந்த பிறகும், அந்த ராவணன் தனது ஆணவத்தை மட்டும் இழக்காமல், இன்னமும் என்முன் நின்று கொண்டுதானே இருக்கிறான்!

"தனது தவற்றுக்காக, அவன் வருந்துவதாகவும் தெரியவில்லையே... நான், அவனுக்காக இரங்க வேண்டிய அவசியம் என்ன?" மனம் தெளிந்தவன், மறுநாள் விடியலுக்காகக் காத்திருந்தான்.



பகுதி − 39

அடுத்த நாள் உதயம், பூபாரத்தைக் குறைத்து, நல்விடியலைத் தருவதாக அமைந்தது.

தன் எதிரே போர்புரிய வந்து நின்ற ராவணன் மீது, சக்ரவர்த்தித் திருமகன், ப்ரம்மாவினால் அளிக்கப்பட்ட அஸ்திரத்தை, மந்திர உச்சாடனம் செய்து பிரயோகித்தான்.
அது ராவணனின் உயிரைக் குடித்து, தனது கடமையை நிறைவேற்றியது.

தேவர்கள் பூமாரிப் பொழிந்தார்கள். கந்தர்வ கின்னரர்களின் ஆரவாரமும், கரகோஷமும் விண்ணை எட்டியது. வானரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து, ஆடிப்பாடினர்.

ராமனைச் சுற்றி நின்றிருந்த ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

இந்த சந்தோஷமான தருணத்தில், ராமனை ஆசீர்வதிக்க, தசரத மகாராஜாவும் விண்ணுலகினின்று எழுந்தருளினார்.

தந்தையைக் கண்ட ராமன், பரவசத்தால் உடல் சிலிர்த்தான்.

மன்னரோ, ராமனின் வெற்றியால் வந்த பெருமிதத்தில் பூரித்திருந்தார்...

"செய்ய முடியாத காரியத்த செஞ்சுட்ட ராமா... ஒன்ன மகனா அடஞ்சது என்னோட பாக்யம்..." நெகிழ்ந்தார் தசரதர்.

"தந்தையே, ஒங்க ஆசியாலதானே என்னால இத சாதிக்க முடிஞ்சது!"

அடக்கமாகச் சொன்னான் ராமன்...

"ராமா... இந்த சாதிக்க முடியாத காரியத்த நீ செஞ்சு காட்டியிருக்கே... அதுக்குப் பரிசா, நான் ஒனக்கு ஏதாது தரணும்னு ஆசப்படறேன்... ஒனக்கு என்ன வேணுமோ கேளு..."

தசரதர் சொல்லச் சொல்ல, ராமன் மலர்ந்தான்.

"தந்தையே... எனக்கு ஒரே ஒரு ஆசதான் இருக்கு... அத நீங்க பூர்த்தி செய்வேளா?"

ராமன் வினவியதும், தசரதர் பெருமகிழ்வு கொண்டார்..

"நிச்சயமா பண்றேன் ராமா... ஒன் விருப்பம் எதுவானாலும், அத நிச்சயம் நெறவேத்துவேன்..."

"எனில், நீங்க, என்னோட கைகேயி மாதாவ, மனசார மன்னிக்கணும்... மாதா எந்தத் தப்பும் பண்ணல..."

இதைச் சற்றும் எதிர்பார்க்காத தசரதர், சிறிதுநேரம், வாய்மூடி மௌனமாயிருந்தார்.

அவராகப் பேசட்டும் என்று ராமனும் காத்திருந்தான்.

பிறகு, மெல்ல தசரதரே வாய்திறந்தார்.

"வாஸ்தவத்தில், கைகேயிதான் என்ன மன்னிக்கணும் ராமா... நான்தான் அவள சரியா புரிஞ்சுக்காம, அவ மனசு நோகும்படி, ரொம்பத் தப்பா பேசிட்டேன்... அத நெனச்சு, இப்போ ரொம்ப வருத்தப்படறேன்..."

"பாக்கப்போனா, அவ மட்டும் அன்னிக்கு ஒன்ன காட்டுக்கு அனுப்பாம இருந்திருந்தா, இந்த ராவணவதம் நடந்திருக்க வாய்ப்பே இல்ல..."

"எவ்ளோ தீர்க்கதரிசி அவ! எத்தனையோ தடவை, நீ ஸாக்ஷாத் ஈஸ்வர அவதாரம்னு என்கிட்ட சொல்லி இருக்கா... ஆனா, நான் அத என்னிக்குமே நம்பினதில்ல ராமா.. ஒன் மேல வெச்சிருக்கற கண்மூடித்தனமான பாசத்திலேதான், அவ அப்படி பேசறாள்னு நெனச்சேன்..."

"நான் என்னிக்குமே ஒன்ன என்னோட பிள்ளையாதான் பாத்தேன் ராமா... ஆனா அவ, நீ ஈஸ்வர அவதாரம்னு தெரிஞ்சுண்டு, ஒன் நோக்கம் நெறவேறணும்னு, ஒனக்கு அனுகூலமா எல்லாத்தையும் பண்ணியிருக்கா..."

"பாவம்... என்கிட்ட மட்டும் இல்ல ராமா... எல்லார் கிட்டயுமே, அவளுக்குக் கெட்டபேர்தான் கெடச்சிருக்கும்னு நெனக்கறேன்... இப்டி தன்னயே த்யாகம் செஞ்சுண்டு, ஒன் நல்லதுக்காகப் பாடுபட்டிருக்கா..."

துக்கம் தொண்டையை அடைக்க, தசரத மன்னரின் கண்கள் நீரைச் சொரிந்தன...

"இப்போ சொல்றேன் கேட்டுக்கோ ராமா... இந்த பூலோகத்தில, இனி எந்த காலத்திலேயும், என்கைகேயி மாதிரி இன்னொரு பொண்ணு பொறக்கறதுக்கு வாய்ப்பே இல்ல... அதனால, அவளோட அந்தப் புனிதமான பேர வெச்சுக்கற தகுதியும் எந்தப் பொண்ணுக்கும் இனிமே கெடையாது.

"கைகேயி"ன்னு சொன்னா, இந்த லோகத்திலேயே, அது என்னோட பத்னி கைகேயியா மட்டும்தான் இருக்கும்..."

தசரதர் பேசப்பேச, ராமனின் விழிகளிலிருந்து ஆனந்தபாஷ்பம் பெருகியது...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
பகுதி − 40

"இது போறும் தந்தையே... எனக்கு இது போறும்!" உணர்ச்சிவசப்பட்டான் ராமன்..

"பரதனுக்கும் என்னோட மனப்பூர்வமான ஆசிகளத் தெரியப்படுத்து ராமா... அவனுக்கும் என்மேல வருத்தம் இருக்கும்..."

தசரதர் குற்ற உணர்ச்சியோடு கூறினார்.

"ஆகட்டும் தந்தையே... அவசியம், பரதன்கிட்ட சொல்றேன்..."

ராமனின் மறுமொழியில் சற்றுச் சமாதானமானார், தசரதர்.

கைகேயி மாதாவுக்குத் தானளித்த வாக்கை நிறைவேற்றிவிட்ட த்ருப்தி ராமனின் முகத்தில், அப்பட்டமாய்த் தெரிந்தது.

ஆயிற்று... விபீஷண பட்டாபிஷேகமும் முடிந்தது.

ராமன் பரபரத்தான். பதினான்கு வருட வனவாசம் முடிய, இன்னமும் ஒரு நாளே மீதமிருந்தது.

இன்றே புறப்பட்டால்தான், நாளை மறுநாள் சூரியோதயத்தில், நந்திகிராமத்தில் பரதனைச் சந்திக்க இயலும். சற்றுத் தாமதித்தாலும், பரதன் விபரீத முடிவு எடுத்துவிடுவான்.

அவசர அவசரமாய், வானரர்கள் புடைசூழ ராமன் சீதையோடும், இலக்குவனோடும், புஷ்பக விமானம் ஏறி, நந்திகிராமத்திற்குப் புறப்பட்டான்.

வழியில் பரத்வாஜ மகரிஷி ஆஸ்ரமத்தைப் பார்த்ததும்தான், தான் அவருக்கு, அயோத்தி திரும்பும் போது ஒருநாள் அங்கு தங்கி விருந்துண்டுச் செல்வதாக வாக்களித்தது ஞாபகம் வந்தது.

"ஐயோ... இப்பொழுது என்ன செய்வது? மகரிஷிக்குக் கொடுத்த வாக்கை மீற முடியாதே..." தடுமாறினாலும், தடம் மாறாமல், ராமன், பரத்வாஜ ஆஸ்ரமத்தில் இறங்கினான்.

மிகுந்த சந்தோஷத்துடன் அனைவரையும் வரவேற்ற மகரிஷி, அவர்கள் இளைப்பாறவும், விருந்துண்ணவும் தேவையான முயற்சிகளில் இறங்கினார்.

பரதனை எண்ணி, மிகவும் சிந்தனை வயப்பட்டிருந்தான் ராமன்.
"என்ன செய்தால், பரதனைக் காப்பாற்ற முடியும்?.."
இந்த ஒரே கேள்வி, அவன் மனதை வாட்டிக் கொண்டிருந்தது.

கவலை தோய்ந்த முகத்துடன் ராமனைக் கண்ட அனுமன், "ஏதோ சரியில்லை" என்பதை உடனே ஊகித்தான். காரணத்தையும் கேட்டறிந்தான்.

"இதுக்கா ப்ரபு இவ்ளோ கவலப்படறேள்? இதோ, இப்பவே நான் புறப்பட்டு, நந்திகிராமத்துக்குப் போய், நீங்க வர தகவல, ஒங்க சகோதரர் பரதன் கிட்ட சொல்லிடறேன். நீங்க மகரிஷியோட இருந்துட்டு, பொறுமையா வாங்கோ..."

அனுமன் கூறியதும், ராமன் முகம் ப்ரசன்னவதனமாகியது..

"அன்னிக்கு என்னோட கணையாழிய, சீதைக்கிட்ட காமிச்சு, அவளோட உயிர காப்பாத்தினே..."

"அடுத்ததா, அவளோட சூடாமணிய, என்கிட்ட காட்டி, என்னோட உயிர மீட்டெடுத்தே..."

"மூணாவதா, சஞ்சீவி மலய கொண்டுவந்து, சரியான சமயத்தில, லக்ஷ்மணன் உயிர காப்பாத்திக் கொடுத்தே..."

"இப்போ, நாலாவதா, என்னோட பரதனக் காப்பாத்தற முயற்சியில இறங்கியிருக்கே... ஒனக்கு எல்லா மங்களமும் உண்டாகட்டும் ஆஞ்சனேயா..."

ஆரத்தழுவி, அனுமனுக்கு விடையளித்தான் ராமன்.

இரவு முழுவதும், உறக்கம் பிடிக்காமல் தவித்துக் கொண்டிருந்தான் பரதன்.
.
"இன்னியோட, ராமன் காட்டுக்குப்போய், பதினாலு வருஷம் முடியறது. நாளைக்கு, சூரியோதய நேரத்தில, ராமன் வந்துடுவானா?"

சந்தேகமாகவே இருந்தது அவனுக்கு!

இந்தப் பதினான்கு வருஷங்களில், ராமனைப் பற்றிய ஒரு சேதியும், அவன் செவிகளில் விழவேயில்லை! ராமன் எங்கேயிருக்கிறான், எப்படி இருக்கிறான், என்பதொன்றும் தெரியாமலேயே, இத்தனைக் காலமும் ஓடியிருந்தது..

"நாளை அவன் வந்துவிடுவானா?" இதே கேள்வியை, ஓராயிரம் முறையாவது, தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

"அப்படி ஒரு வேளை, நாளை உதயத்தில், ராமன் வரத்தவறினால், முன்பு சொன்னபடியே, அக்னிப்ரவேசம் செய்துவிட வேண்டியதுதான்!"

தனக்குள் தீர்மானித்துக் கொண்டான்..

சூரியனின் கிரணங்கள், புதிய விடியலுக்கான கட்டியம் கூறின...

புள்ளினங்கள் சிலம்பும் சப்தம்...

மகரந்தமொழுகும் மலர்களின் வசீகரிக்கும் நறுமணம்...

குளிர்ச்சியோடு கூடிய இளங்காலைக் காற்று...

எந்த எழிலும், பரதனை ஈர்க்கவில்லை...

அவனைப் பொறுத்தவரையில், ராமனில்லாது இன்றைய பொழுதுக்கான விடியல் இல்லை!

அக்னிப்ரவேசம் செய்வதற்கான ஆயத்தங்களில் மும்முரமானான்.
கட்டைகள் அடுக்கப்பட்டன... தீயும் வளர்க்கப்பட்டு, கொழுந்து விட்டெரியத் தொடங்கியது..

முன்னரே, குலகுருவிடம், தன்னைத் தடுத்து நிறுத்தக் கூடாதென விண்ணப்பித்திருந்தான்...

பரதனின் அணுக்கத் தொண்டர்கள், எத்தனையோ மன்றாடியும், அவன் தன் முடிவில் தீர்மானமாய் இருந்தான்.

இதோ... அக்னியை இருமுறை வலம் வந்தாயிற்று...
மூன்றாவது வலத்திற்குப் பிறகு, பரதன் தீக்கிரையாகிவிடுவான்...

குலகுருவின் கண்கள் நீரைப் பெருக்கின.

இந்தப் பதினான்கு வருடமாய், பரதனின் கடுந்தவத்தை அருகிலிருந்து பார்த்தவர் என்ற முறையில், அவரால் பரதனின் இந்தப் பரிதாபமான முடிவை அங்கீகரிக்க இயலவில்லை.

இதோ அந்தத் தருணம்!

"ஜெய் ஶ்ரீராம்!" என்று சொல்லிக்கொண்டே, பரதன் தீக்கங்குகளின் இடையே குதிக்கலானான்.

அதே நேரம்...

"ஜெய் ஶ்ரீராம்!" என்று சொல்லிக் கொண்டே, அஞ்சனை மைந்தன், பாய்ந்து சென்று, பரதனைத் தடுத்து, வெளிக்கொணர்ந்தான்...





பகுதி − 41

ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை பரதனுக்கு...

"ராமனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே, என்னை அழித்துக்கொள்ள முற்பட்டால், அதே ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டு, என்னை ஒருவர் காப்பாற்றுகிறாரே... யார் இவர்?"

பரதனின் எண்ண ஓட்டத்தைப் படித்தாற் போல், அனுமன் வாய்திறந்தான்.

"என் பெயர் ஆஞ்சநேயன்... நான் ஶ்ரீராமனின் தூதன்..."

சந்தோஷத்தில், பரதனின் கண்கள் பனித்தன...

"என்ன? எங்க ராமனோட தூதனா?" ஆச்சரியத்தில், விழிகள் அகல விரிந்தன.

"ஆம்" என்று தலையசைத்தான் ஆஞ்சனேயன்.

"...எனில், என் அண்ணா எங்கே?"

"இன்னிக்குப் பொழுது சாயறதுக்குள்ள வந்துடுவார். அவர் வரதுக்குக் கொஞ்சம் தாமசம் ஆகும்கிற விஷயத்தைச் சொல்றதுக்காகத்தான், நான் முன்னாடி வந்தேன்... இது ஒங்க அண்ணாவோட ஆணை..."

பரதனை சந்தோஷம் தொற்றிக் கொண்டது. குலகுரு வசிஷ்டர் முதற்கொண்டு, அங்கிருந்த அனைவருமே, ஆனந்தத்தில் மூழ்கினர்.

அனுமனை ஆரத்தழுவி, பரதன், தனது மனதின் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினான்.

ஒருவாறு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபின், பரதன் பேச ஆரம்பித்தான்.

"ஆஞ்சநேயரே... ஒங்களப்பாத்தா, ரொம்ப தூரத்திலேந்து வந்திருக்கற மாதிரி தோணறது. ஒங்க மொகமே, நீங்க ரொம்ப களைப்பா இருக்கேள்னு சொல்றது... கொஞ்சம் ச்ரமபரிகாரம் பண்ணிக்கோங்கோ... நான் அதுக்குள்ள ஒங்களுக்கு ஆகாரம் ஏற்பாடு பண்றேன்..."

பரதனின் உபசார வார்த்தைகளில், அனுமன் அகமகிழ்ந்து போனான்.

வந்த களைப்பும், வாட்டிய பசியும் நீங்கியதும், பரதன் அனுமனுடன் மெல்லப் பேசத் தொடங்கினான்...

"நீங்க ராமதூதன்னு ஒங்கள சொல்லிக்கறளே.. அண்ணா, சீதாமாதா, லக்ஷ்மணன் எல்லாரும் இப்போ எப்டி இருக்கான்னு கொஞ்சம் சொல்லுங்கோ...

இந்த வனவாசம், அவாளுக்குக் கஷ்டம் இல்லாம இருந்ததா? நீங்க எப்டி, அண்ணாவோட தூதனா ஆனேள்? எல்லாம் வெவரமா சொல்லுங்களேன்..."

பரதனின் ஆவலை உணர்ந்துகொண்ட அனுமன், நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் கோர்வையாக பரதனுக்குச் சொல்லலானான்.

வனவாசத்தின் போது, ராமனின் மனையாளை, ராவணன் அபகரித்ததில் தொடங்கி, தான் ராமனைச் சந்தித்தது, ராமன் வாலியை வதம்செய்தது, சுக்ரீவனின் பட்டாபிஷேகம், ராவணனின் சிறையிலிருந்த சீதாமாதாவின் இருப்பிடத்தை ஒருவழியாகத் தேடிக் கண்டுபிடித்தது, விபீஷணன் சரணாகதி செய்தது, சேதுபந்தனம், கடைசியாக ராவண வதம் வரையிலுமான அத்தனை சேதிகளையும் ஒன்றுவிடாமல் எடுத்துரைத்தான்.

ராமன் அனுபவித்த கஷ்டங்களைக் கேட்ட பரதனின் கண்களிலிருந்து, கண்ணீர் மழையாகப் பெருகியது.

"எங்க அண்ணாவோட அத்தன கஷ்டத்துக்கும் காரணம், அந்த க்ராதகி கைகேயிதான்..."

பரதனின் வார்த்தையைக் கேட்டதும் பதைபதைத்துப் போனான் அனுமன்...

"என்ன... எங்க கைகேயி மாதாவையா, இவ்ளோ தரக்கொறவா பேசறேள்? ராமனோட ப்ராதா வாயிலேந்து, இப்டி எல்லாம் வரலாமா? ஒங்களோட இந்தப் பேச்சு எங்க ஶ்ரீராமப்ரபுவை, எவ்ளோ சங்கடப்படுத்தும்னு தெரியுமா? அவர், கைகேயி மாதா மேல ப்ராணனையே வெச்சுருக்காரே... அவர் காதுல நீங்க பேசின பேச்சு விழாம பாத்துக்கோங்கோ..."

அனுமன், ஆற்றாமையோடு, அடுக்கிக் கொண்டே போனான்.

"ஹனுமான்.. .ஒங்களுக்கு, அந்த கைகேயியைப் பத்தி ஒன்னும் தெரியாது. எங்க அண்ணாவோ, அவமேல கண்மூடித்தனமா பாசம் வெச்சுருக்கார்... அவ ஒரு வேஷக்காரிங்கறது, அண்ணா இன்னும் உணறல... அவளோட சுயரூபத்த, அண்ணா இதுவரைக்கும் தெரிஞ்சுக்கலையேன்னு நெனச்சா, எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு..."

கைகேயி மாதாவைப் பற்றி, பரதனின் இந்தத் தகாத வார்த்தைகளைக் கேட்ட ஆஞ்சனேயனுக்கு, மனது மிகவும் வலித்தது.

ராமனோடு, அணுக்கமாய் இருந்த காரணத்தினால், பல சந்தர்ப்பங்களிலும், ராமன் வாயிலாக, கைகேயி மாதாவைப் பற்றி, நிறைய விஷயங்களை, அனுமன் அறிந்து வைத்திருந்தான்.

இப்படித் தன்னைப் பெற்றெடுத்த தாயை, சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருக்கின்ற பரதனுக்கு, கைகேயி மாதாவின் உண்மையான முகத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டிய கடமை தனக்கிருக்கிறது என்பதை உணர்ந்தான் ராமதூதன்!

"சொல்லின் செல்வன்" ஆகையால், தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு, கைகேயியின் தியாகங்கள் அனைத்தையும், பரதனிடம், ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்று விடாமல் பட்டியலிட்டான் அனுமன்.

சாக்ஷாத் ஈஸ்வர அவதாரமே ராமன் என்பதையும், ராவண வதத்திற்காகவே ராமன் பூமியில் அவதரிக்க நேர்ந்தது என்பதையும், ராமனது இலக்கை நோக்கிய பயணத்தில், கைகேயி தன்னையும் அழித்துக் கொண்டு, தன் பங்கைச் செய்திருக்கிறாள் என்பதையும், வெகு நேர்த்தியாக எடுத்துரைத்தான்..

முத்தாய்ப்பாக, யுத்தம் முடிந்ததும், தசரத மன்னர் ராமனுக்குக் காட்சி தந்ததையும், ராமன் தனது தந்தையிடம் கைகேயி விஷயமாய் ப்ராத்தித்ததையும், அதற்கு மன்னர் அளித்த மறுஉரையையும் ஒளிவு மறைவின்றிச் சொல்லி முடித்தான் அஞ்சனை மைந்தன்..

திகைத்து நின்றான் பரதன்!

"ராமனது வனவாசத்திற்குப் பின்னால் இத்தனை ரகசியங்களா?
கைகேயி மாதா, இவ்வளவு தியாகம் செய்திருக்கிறாளா?
அடடா... எப்பேர்ப்பட்ட மகத்தான புண்யவதி! இவளையா, நாவில் நரம்பின்றி நான் பேசினேன்?

அதனால்தான் ராமண்ணா, அன்று என்னைக் கோபித்துக் கொண்டாரா?
ஐயோ... எவ்வளவு பாவம் செய்துவிட்டேன்!. எனக்கு மன்னிப்பும் உண்டா?"

சிந்திக்கச் சிந்திக்க, பரதனின் கண்ணீர், ஆறென ஓடியது..

அப்பொழுதே, கைகேயி மாதாவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது.

பகுதி −42
மெல்ல, அந்தி சாய்ந்து கொண்டிருந்தது.

அனைவரது விழிகளும், ராமன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தன.

அந்த அழகான மாலை வேளையில், ரகு குல சூரியனைச் சுமந்து கொண்டுவந்த புஷ்பகவிமானம், நந்தி க்ராமத்தில் தரையிறங்கியது.

இலக்குவனும், சீதையும் பின்தொடர, ஶ்ரீராமன் உதயமானான்.

பசியோடு இத்தனை வருஷங்களாய்க் காத்திருந்த பரதனின் கண்கள், விருந்தையும் மருந்தையும் ஒருசேரக் கண்டாற்போல, ரகுநந்தனை, உச்சி முதல் பாதம்வரைத் தீண்டிக் குளிர்ந்தன.

உணர்ச்சி மேலீட்டில், சகோதரர்கள் இருவரும், விழிநீர் துளிர்க்க, விரித்த கரங்களுடன், ஒருவரை நோக்கி ஒருவர், ஓடி வந்தனர்...

"ரா...ம..ண்...ணா..." தாய்ப்பசுவிடம் அடங்க விழைந்தது கன்று...

"ப..ர..தா.." வாரி அணைக்கத் துள்ளி வந்தது தாய்ப்பசு...

சிறிது நேரத்திற்கு, அங்கே, வாய்ச்சொற்களுக்கு வேலை இல்லாமல் போனது.

இருவரது உணர்ச்சிப்பெருக்கும் கட்டுக்குள் வந்த பின்தான், இருவரும் மற்றவர்களின் இருப்பையே உணர்ந்தனர்.

இலக்குவனை ஆலிங்கனம் செய்து கொண்ட பரதன், சீதையின் கால்களில் விழுந்து, ஆசிகளைப் பெற்றுக் கொண்டான்.

ராமன், குலகுரு வசிஷ்டரை நமஸ்கரித்து, அவரது ஆசிகளைப் பெற்றான்.

பரஸ்பர நலவிசாரிப்புக்களும், நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வதுமாய், பொழுது நகர்ந்து கொண்டிருந்தது.

இரவு விருந்துக்குப் பிறகும், ஒருவருக்கும் உறக்கம் பிடிக்கவில்லை.

சென்ற நாட்களின் இழப்பை எல்லாம், இந்த ஒரேநாளுக்குள் மீட்டுவிட வேணும் என்கிற தாகமும், வேகமும் அனைவரிடமும் இருந்தது.

சூரியன், தன் கிரணங்களைப் பரப்பிக் கொண்டு மெல்ல வெளிவந்ததும்தான், பொழுது புலர்ந்ததையே, அத்தனைபேரும் உணர்ந்தார்கள்.

வசிஷ்டரின் அறிவுரையி்ன் பேரில், உடனே அயோத்தி செல்ல வேண்டுமெனத் தீர்மானமாயிற்று.

எத்தனையோ காத தூரங்களைக் கடந்துவந்த ரகுநந்தனுக்கு, நந்திகிராமத்திற்கும், அயோத்திக்கும் இடையிலான இந்தக் குறைந்த தூரம், நீண்டுகொண்டே போவதைப் போன்ற ப்ரமையை ஏற்படுத்தியது..

அயோத்தியின் மதில்சுவர்கள், ஒரு குறிப்பிட்ட தொலைவில், கண்களுக்கு எட்டியபோதே, மூன்று சகோதரர்களுக்கும் உடல் சிலிர்த்தது..
இன்னதென்று சொல்லவியலாத உணர்ச்சிகளின் கலவை, அவர்களை ஆட்கொண்டது..

இதோ... அயோத்தியை சமீபித்து விட்டார்கள்.

ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. வண்ணவண்ணத் தோரணங்களும், மலர் அலங்காரங்களும், ஆங்காங்கே காற்றில் அசைந்தசைந்து ஆடிக் கொண்டிருந்த அயோத்தியின் கொடிகளும், கீழே பட்டுப்பாய் விரித்தாற் போன்று செய்திருந்த ஜோடனைகளும், அயோத்தி ப்ரஜைகள் ஒவ்வொருவருடைய மனநிலையையும் ப்ரதிபலிப்பதாய் இருந்தது.

தரை இறங்குவதற்கு முன்னரே, ஜெயகோஷம் விண்ணைப் பிளந்தது. புஷ்பக விமானத்தில் இருந்து கொண்டே, ராமன் கையசைக்கவும், ப்ரஜைகளின் சந்தோஷம் பன்மடங்காயிற்று.

அரண்மனையின் ப்ரதான வாயிலருகே, புஷ்பக விமானம் தரை இறங்கியது.

ராமன், சீதை, இலக்குவன், பரதன் என்று ஒருவர் பின் ஒருவராக இறங்கி வந்தனர்.

சுமங்கலிப் பெண்டிரின் கோஷ்டி, ஆரத்தி தட்டுக்களுடன் முன்வந்தது..

ராமன் அவர்களை கையமர்த்தினான்.

"எங்கே, என்மாதா? அவர்கள் இந்த ஆரத்தியை எடுக்கட்டும்..."

சுற்றியிருந்தவர்கள் ஸ்தம்பித்து நின்றனர்...

"அவர்...க..ள்.. எப்..ப..டி?" குரல்கள் தயங்கின...

"என் கைகேயி மாதா, என்னை வரவேற்பதையே நான் விரும்புகிறேன்..."

தீர்மானமாய்ச் சொன்னான் ஶ்ரீராமன்.

காத்திருந்தது போல, அடுத்தக்கணமே, ஆரத்தி தட்டுடன், அங்கே கைகேயி தோன்றினாள்.

"என் கைகேயி மாதாவா இவள்?" ராமனே சந்தேகிக்கும்படி, இந்தப் பதினான்கு வருட காலத்தில், அவள் உருமாறி இருந்தாள்.

ஆனால், அவள் கண்களில் தெரிந்த ராமன் மீதான அந்த அதீத ப்ரேமை, ராமனுக்கு அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது..

"மா...தே..."
கதறியழுது கொண்டு, ஓடிச்சென்று அவளைக் கட்டி அணைத்துக் கொண்டவன், சட்டென்று சிறுகுழந்தைபோல அவளைக் கையிலேந்திக்கொண்டு, தட்டாமாலைச் சுற்றினான்.

கைகேயியின் கைகளிலிருந்த ஆரத்தித் தட்டிலிருந்த செந்நீர் அவர்களைச் சுற்றி ஒரு வட்டவடிவில் தரையை நனைத்தது.

"இது எங்கள் இருவரின் அன்பு வட்டம்... இதை உடைக்க இந்த உலகின் எந்த சக்தியாலும் இயலாது..." என்று சொல்வதைப் போல இருந்தது அது!

மெல்ல, தன்னைச் சுதாரித்துக் கொண்டு, மாதாவை நமஸ்கரித்து எழுந்தான்.

கைகேயி, தன்னிடம் "அந்த" சேதியை எதிர்பார்க்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டான்..

"இதுவே தருணம்" என்று அந்த நற்செய்தியால், கைகேயியை மகிழ்வித்தான் தனயன்.

"மாதே... மன்னர் ஒங்கள மனப்பூர்வமா மன்னிச்சுட்டார்... ஒங்களப் பத்தி ரொம்ப ஸ்லாக்யமா பேசினார்... ஒங்களப் பத்னியா அடைஞ்சது, அவரோட பாக்யம்னு சொன்னார்..."

கைகேயியின் கண்களிலிருந்து பெருகிய நீர், ராமனை நன்றியால் குளிப்பாட்டியது.

பலவருடங்களுக்குப் பிறகு, கன்னத்தை, நனைத்த அந்த ஆனந்தக் கண்ணீர் ஊடே, இப்பொழுது, அவள் ஜானகியையும், லக்ஷ்மணனையும் ஏறிட்டாள்..

அவர்கள் இருவரும், கைகேயியை அன்போடு நமஸ்கரித்து அவளது ஆசிகளைப் பெற்றனர்.

பிறகு மூவரும் மற்ற இருமாதாக்களையும் நமஸ்கரித்து, அவர்களது ஆசிகளையும் பெற்றுக்கொண்டனர்...

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, இத்தனை நேரமும், கண்களில் நீர்வழிய பரதன் ஒருமூலையில் நின்று கொண்டிருந்தான்.

"கைகேயி மாதா, என்னை மன்னிப்பாளா?" இந்த ஒரே கேள்வி, அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

மெல்லத் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான்... கைகேயி மாதாவும், தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அவள் கண்களில் தெரிந்தது கருணையா, பாசமா, இல்லை இரண்டுமா? பரதனுக்குப் புரியவில்லை..

ஆனால், அனிச்சையாக, தன்னை அறியாமல், கதறிக்கொண்டு, அவள் காலடியில் வீழ்ந்திருந்தான்.

"மா...தே... என்ன மன்னிச்சிடுங்கோ மாதே... நான் பெரிய பாவி... ஒங்களத் தாறுமாறா பேசிட்டேன்... என்ன மன்னி..."
தன் காலடியில் கிடந்த பரதனை, தூக்கி நிறுத்தியவள், அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல், வாயைப் பொத்தினாள்.

"நீ ஒரு தப்பும் பண்ணல பரதா... ஒன் மனசு எனக்குத் தெரியும்..."
நிறைந்த மனதுடன் தீர்மானமாகச் சொன்னாள் கைகேயி.

உற்ற கணவன், அவளைப் புரிந்து கொண்டான்...

பெற்ற தனயன், அவளைப் புரிந்து கொண்டான்...

இனி, மற்றவர்கள் அவளைப் புரிந்து கொள்ளும் காலமும், வெகு தொலைவில் இல்லை...

(மனம்) நிறைந்தாள்!​
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top